கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 4/12


கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடர்ச்சி...

ஒவ்வொரு அறையிலும் ஹீட்டர் இருந்தது. ஆனாலும் குளிர் குத்திக் கிழித்தது. மகளுக்குப் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. படுத்துத் தூங்கி விட்டாள். மனைவி குளிரில் துடித்தாள். 'அய்யய்யோ, எல்லோரும் சொன்னது போல தப்புப் பண்ணி விட்டோமோ?!' என்று கிறுகிறுக்க ஆரம்பித்தது. யாருமே கிளம்பும் போதே குடும்பத்தோடு கிளம்புவதில்லை. போய் செட்டில் ஆகி மூச்சு விட முடிந்த பின்தான் குடும்பத்தை அழைத்துச் செல்வார்கள். நாங்களோ ஒரு மாத வேலை மட்டுமே உறுதியாகி இருந்த வேளையில், 'எந்தச் சிரமமாக இருந்தாலும் சேர்ந்து அனுபவித்து விட்டுப் போவோம்!' என்று எண்ணிக் கிளம்பி விட்டோம். அனுபவித்துத்தானே ஆக வேண்டும். திடு திப்பெனக் கிளம்ப நேர்ந்ததால் முந்தைய இரவும் தூக்கமில்லை. வந்து சேர்ந்த முதல் நாள் என்பதால் அந்தைய இரவும் தூக்கமில்லை. தாமதமாகத் தூங்கி சீக்கிரமாக எழுந்தேன்.

காலை எழுந்ததும் ஒரு பிரச்சனை தீர்ந்திருந்தது. குளிர் சற்றும் இல்லை. சிறிது நேரம் ஆன பின் ஹீட்டர் அதன் வேலையைச் சிறப்பாகச் செய்திருந்தது. சில நாட்களாக இயங்காமலே இருந்ததால் ஏற்பட்டிருந்த இடைவெளியால் குளிர் கூடுதலாகத் தெரிந்திருக்கிறது. தொழில்நுட்பம் முன்னுக்கு வந்து விட்ட மேற்குலகில், குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையைக் குறிப்பிட்டு குளிரையும் சூட்டையும் சமநிலைப் படுத்தும் ஏசி இருக்கும் என்று எண்ணிப் போனதால், தோராயமாக சூட்டின் அளவைச் சரிசெய்யும் விதத்தில் பெட்டியாக பெட்டியாக இருந்த ஹீட்டர்களைக் கண்ட போது ஓர் ஏமாற்றம். சுருக்கமாகச் சொன்னால், வெளிநாடு என்றாலே அது நம் நாட்டை விட 'எல்லா' விதத்திலும் வசதிகள் மிக்கதாக இருக்கும் என்ற தவறான எதிர்பார்ப்போடு போனதுதான் தவறு. அது பெருமளவு உண்மைதான் என்றாலும், அங்கே இருக்கிற 'எல்லாமே' இங்கே இருக்கிற 'எல்லாத்தையுமே' விட நன்றாக இருப்பதில்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

காலை ஏழு மணிக்குக் கூட விடிந்த மாதிரித் தெரியவில்லை. வெளியில் எட்டிப் பார்த்தால் ஆட்கள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை. எப்போதாவது ஒருவர் சாலையில் செல்வதைக் காண முடிந்தது. ஆனால் வெளிநாடுகளுக்கு உரிய சுத்தமும் ஒழுங்கும் அங்கும் இருப்பதைக் காண முடிந்தது. இன்னொரு சன்னல்ப் பக்கம் வந்து மரம் செடி கொடிகளைப் பார்த்தோம். அதில் ஒரு கொழுத்த அணில் ஏறிக் கொண்டிருந்தது. அணில் மட்டுமில்லை, ஆட்கள் மட்டுமில்லை, எல்லாமே அங்கே கொஞ்சம் கொழுத்த மாதிரித்தான் இருந்தன / இருந்தார்கள். காய்கறிகளும் கூட கொழுத்துத்தான் இருந்தன. நம்ம ஊரில் கிடைக்கும் காய்கறிகள் எல்லாமே அங்கும் கிடைத்தன. ஆனால் அவை இங்கிருப்பதை விடப் பார்ப்பதற்கு அழகாகக் கொழுகொழுவென்றிருந்தன. முள்ளங்கி முழங்கை அளவுக்கு இருந்தது. பீர்க்கங்காய் அதை விடப் பெரிதாக இருந்தது. பாகற்காயும் பெரிது பெரிதாக இருந்தது. தக்காளி ஆப்பிள் போல இருந்தது. ஒரே உருளைக் கிழங்கில் ஒரு வேளைச் சாப்பாட்டை முடித்து விடலாம் போல இருந்தது. கத்தரிக்காய் அழகோ அழகு. அனைத்தும் கலப்பின (HYBRID) வகைகளாக இருக்க வேண்டும். இயற்கைதான் அழகு என்கிறார்கள் எல்லோரும். இயற்கையையும் அழகு படுத்துவது செயற்கையாகத்தான் இருக்கிறது.

தயாராகி அலுவலகம் செல்லக் கதவைத் திறந்ததும் 'குப்'பென்று அடித்தது குளிர் காற்று. குடும்பம் 'டப்'பென்று கதவைச் சாத்திக் கொண்டது பயத்தில். அலுவலகம் செல்லும் முன் செய்ய வேண்டிய முக்கியமான வேலையொன்று நிலுவையில் இருந்தது. தொலைதூரத்தில் வந்து முதல் நாள் வேலைக்குச் செல்லும் போது வீட்டில் இருக்கிற குடும்பத்தைத் தொடர்பு கொள்ள தொலைபேசி கூட இல்லையென்றால் ஆடவன் எப்படி நிம்மதியாக வேலை பார்க்க முடியும் (அதுதானேப்பா முழுமையான நிம்மதி என்று சிலர் முணுமுணுப்பது கேட்கிறது!)? இறங்கி ஒரு சுற்று நடந்தேன். ஒரு சிறிய கடை இருந்தது. தமிழ் முகம் கொண்ட பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தன் கணவரோடு பேசிக் கொண்டதைக் கண்டபோது ஈழத்தமிழர் போலத் தெரிந்தது. அந்தப் பகுதியில் இருந்த பெரும்பாலான கடைகள் ஈழத் தமிழர்களுடையதாகவே இருந்தன. முதன்முதலில் பெங்களூர் வந்தபோது சுற்றிலும் கேட்ட தமிழ் பேச்சுக்கள் எவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்தனவோ அவ்வளவு ஆனந்தம் கிடைத்தது இம்முறையும். நல்ல இடத்தில்தான் வந்து இறங்கி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சி மேலிட்டது. இரண்டு சிம் கார்டுகளை வாங்கிக் கொண்டு வந்து ஒன்றை வீட்டில் கொடுத்து விட்டு, அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.

அலுவலகம் வீட்டில் இருந்து நடக்கும் தொலைவில்தான் இருந்தது. அந்தக் காலத்தில் வெளிநாடு சென்றவர்களுக்கு இருந்த பல சிக்கல்கள் நம் தலைமுறைக்கு இல்லை. ஆளே தட்டுப் படாத ஊரில் முகவரி கேட்டு ஆட்களை விரட்டி அலைய வேண்டியதில்லை. எல்லாத்துக்குமே GOOGLE MAPS இருக்கிறது. வீட்டிலிருந்தே பாதையை நன்றாகப் பார்த்துக் கொண்டு கிளம்பினேன். ஆனாலும் தலையும் புரியவில்லை; வாலும் புரியவில்லை. என்னதான் தொழில்நுட்பம் உதவினாலும் புது இடத்தில் திசை தெரியாமல் போவது இயற்கைதானே. செல்போனிலேயே GPS வைத்துக் கொண்டிருந்தால் வசதியாக இருந்திருக்கும். தேவைப்பட்டால் போய் வாங்கிக் கொள்ளலாம் என்றெண்ணி விட்டு விட்டேன். அப்படியே வாங்கிச் சென்றிருந்தாலும் முதல் நாளே... அதுவும் சிம் கார்டு வாங்கியவுடனே... எப்படி உதவ முடியும்? அவுக (தொழில்நுட்பத்தின்) கஷ்டத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

இறங்கி நடந்தேன். 'இலண்டன் வீதிகளில் நடந்து கொண்டிருக்கிறேன்!' என்ற உணர்வோடு. அதுவொன்றும் ஓரளவுக்கு மேல் பெரிதாக எந்த உணர்வையும் கொடுக்க வில்லை. வந்திறங்கும் முன் இருந்த அளவுக்கு வந்திறங்கியபின் எதுவும் தோன்றவில்லை. எல்லாமே அப்படித்தானே. எல்லா ஊரும் இப்படித் தோன்ற வேண்டும் என்பதற்காகவே நிறையச் சுற்ற வேண்டும் என்றுதானே எண்ணினேன். நம்ம ஊரை விட எல்லாமே சுத்தமாகவும் ஒழுங்காகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கின்றன. அவ்வளவுதான். கொஞ்சம் கொஞ்சமாக இங்கும் அதெல்லாம் வந்து விடும் வாய்ப்பு இருக்கிறது (பிரம்மாண்டம் கண்டிப்பாக வந்து விடும். சுத்தமும் ஒழுங்கும் அவ்வளவு சீக்கிரம் வந்து விடுமா என்று தெரியவில்லை!). சிறிது நேரத்தில் குளிரில் கை விறைத்தது. முகம் இறுகியது. என்னைத் தவிர எல்லோருமே குளிருக்கேற்ற மாதிரி கோட் அணிந்திருந்தார்கள். நான் ப்ளேசர் அணிந்திருந்ததால் அதெல்லாம் தேவைப் படாது என்று எண்ணியிருந்தேன். அது தவறு என்று கொஞ்ச நேரத்திலேயே புரிந்து விட்டது.

கோட் மட்டுமில்லை. காதையும் சேர்த்தடைத்து தலையில் குல்லா அணிந்திருந்தார்கள். கழுத்தைச் சுற்றித் துண்டு போல ஒன்று போட்டிருந்தார்கள். கைகளில் உறை அணிந்திருந்தார்கள். பெரும்பாலும் கைகளைக் கோட்டின் பைக்குள்ளோ பேண்ட் பைக்குள்ளோ வைத்துக் கொண்டேதான் நடந்தார்கள் (இது மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று. இதுதான் பின்னாளில் நம்ம ஊரில் ஸ்டைலாகி இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் செய்த எல்லாமே நமக்கு ஸ்டைல்தானே!). இது அத்தனையும் (காலை மறைத்துப் போடும் காலணியையும் சேர்த்து) அந்த ஊருக்கு அருமையாகப் பொருந்தின. இவற்றில் பல நம்ம ஊரிலும் ஆச்சாரமாகக் கடைப் பிடிக்கப் படுகின்றன. அவை பற்றி எனக்குள் நீண்டதோர் உள்ளுரையாடல். இவையெல்லாம் குளிருக்கென்றால் நம்ம ஊரில் நம்முடைய வெயிலுக்கேற்ற மாதிரித்தானே நம் உடைகள் வடிவமைக்கப் பட்டிருந்தன. காலுக்குச் செருப்பும், இடுப்புக்குக் கீழ் வேட்டியும், அதற்கேற்ற மாதிரி அரைஞான் கயிறும், வெறும் பருத்திச் சட்டையும், வியர்வையைத் துடைக்கத் துண்டும் போட்டுக் கொள்வதுதானே முறை. பின் ஏன் நாமும் வியர்க்க வைக்கும் காலணிகளும், பேண்ட்டும், பெல்ட்டும், சட்டைக்கு மேல் கோட்டும், கழுத்தைச் சுற்றி டையும் (இதுவும் குளிர்ப் பிரதேசங்களுக்கே உரிய ஓர் ஐட்டம்!) அணிந்து கொண்டு அநியாயம் செய்கிறோம். விரும்பினாலும் விரும்பா விட்டாலும் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம். அதுவே பின் பலர் விரும்பிச் செய்யும் ஒன்றாகி விட்டது.

ஓட்டு வேண்டும் அரசியல்வாதி வேட்டி கட்டியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் போல, துட்டு வேண்டும் வேலையாட்கள் இதெல்லாம் செய்தே ஆக வேண்டும். யாரை நம்பிப் பிழைப்பு நடத்துகிறோமோ அவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதுதானே எழுதப் படாத சட்டம் (இப்போதெல்லாம் எழுதப் பட்ட சட்டமாகவே ஆகி விட்டது பல கம்பெனிகளில்!). அவர்களுக்குரிய ஆடைகளையே அணிவது அதில் ஒரு முக்கிய அம்சம். சொல்லாமலேயே நம்மில் பலர் வேட்டியை விடப் பேண்ட் அதிகமாக அணிய ஆரம்பித்து விட்டோம். கைலியை விட சார்ட்ஸ் அதிகம் அணிய ஆரம்பித்து விட்டோம். வேட்டி வீட்டுக்காரி போல; பேண்ட் வெளிநாட்டுக்காரி போல என்றெல்லாம் கவிதைகள் வாசிப்போர் கூட பேண்ட் போட்டுத்தான் வாசிக்க வருகிறார்கள். கைலிக்கும் சார்ட்சுக்கும் கூட அதே உவமைகள் ஓகேதான். இம்மாற்றங்களுக்கான முக்கிய காரணம் - இவ்வுடைகளில் இருக்கும் கூடுதல் வசதி. பிற பண்பாட்டவருடைய நல்ல பழக்கங்களை எடுத்துக் கொள்வது எந்த வகையிலும் தவறில்லை. கண்மூடித் தனமாகக் காப்பியடிப்பதுதான் சரியாகப் படவில்லை.

இப்போதெல்லாம் மத்தியக் கிழக்கு நாடுகளில் மண்டையைப் பிளக்கும் சூட்டில் கோட்டும் சூட்டும் அணிந்து செல்லும் காமெடிகளை சில கம்பெனிகளில் கண்டிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று கூடச் சமீபத்தில் கேள்விப் பட்டேன். நல்ல மாற்றம். பண்பாட்டைக் காக்க வேண்டும் என்பதற்காகப் பிடிவாதமாக ஏதும் செய்ய வேண்டியதில்லை. எது வசதியோ அதைச் செய்து கொண்டு போவதுதானே புத்திசாலித்தனம். நானும் ஒரு காலத்தில் வம்படியாக வெள்ளை வேட்டிகளைக் கட்டிக் கொண்டு (வீட்டுக்காரி போல என்ற சிந்தனையால் ஈர்க்கப்பட்டுத்தான்!) படாத பாடு பட்டுச் சீரழிந்தேன். ஓசியாகக் கொடுத்தால் கூட சார்ட்ஸ் போட மாட்டேன் என்றும் கைலிதான் எங்கள் தேசிய உடை என்றும் பிடிவாதம் பிடித்துக் கொண்டு தொங்கியிருக்கிறேன். இப்போது இது பழகியதும் அதைப் பெரிதாக மிஸ் பண்ணுகிற மாதிரி உணரவில்லை. ஆனால், கொல்லும் வெயிலில் காலைப் புழுங்க வைக்கும் காலணிகளும் கழுத்தை இறுக்கிக் கட்டும் டைகளும் பனியனுக்கும் சட்டைக்கும் மேல் போடும் கோட்டுகளும் பிடிப்பதேயில்லை. அதுவும் பழகி விட்டால் பிடித்து விடும் என்று சொல்வதற்கில்லை. வழியில்லாமல் போட்டுக் கொள்கிறோமே ஒழிய வசதி என்று வாதிடவெல்லாம் முடியாது.

சரி, அலுவலகம் செல்ல வேண்டுமே. முகவரி விசாரிக்கலாம். சுற்றிலும் முழுக்க முழுக்க வெள்ளையர்கள். ஆங்காங்கே ஓரிரு நம்மவர்கள் (நம்மவர்கள் என்றால் எல்லோரும் அடக்கம்!). வெள்ளையர்களின் பூமியில் நடமாடுகிறோம் என்ற சிந்தனை அவ்வப்போது வந்து சென்றது. எல்லோருமே வாயிலிருந்து புகை விட்டுக் கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள். முன்பே சொன்ன மாதிரி பாதி இந்தப் புகை; பாதி அந்தப் புகை. நான் செல்ல வேண்டிய தெரு அங்குதான் இருந்தது. ஆனாலும் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. இந்தப் பிரச்சனையைச் சென்னையிலும் பெங்களூரிலும் கூட அனுபவித்திருக்கிறேன். ஆகா, அது ஒன்றும் கலாச்சார வியப்பில்லை. உலகப் பிரச்சனைதான். கொடுமை என்னவென்றால் எந்தத் தெருவில் இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளலாம் என்று கடைகளில் வைக்கப் பட்டிருக்கும் பெயர்ப் பலகைகளில் முகவரி தேடினால் ஒரு கடையிலும் அது மட்டும் இல்லை. நம்ம ஊரில் சொல்லி வைத்த மாதிரி எல்லாக் கடைகளிலும் அஞ்சல் எண் உட்பட முழு முகவரியையும் எழுதி வைத்திருக்கும் பழக்கம் ஒரு காலத்தில் ஆச்சரியமாக இருந்ததுண்டு. அதுவும் எங்கள் ஊர்ப் பக்கம் சில கடைகளில் வட்டம், மாவட்டம் என்றெல்லாம் விளக்கவுரை எழுதியிருப்பார்கள். 'கடந்து போகிற எல்லாரும் கடிதமா போடப் போகிறார்கள்? ரெம்பத்தான் பண்ணுகிறீர்கள்!' என்று தோன்றும். இப்போது அது பழகிப் போய் விட்டதால் அது இல்லாமல் சிரமமாக இருக்கிறது.

சில நிமிட நடைப் பயணத்தில் ஓரிரு ட்ராம்களையும் காண முடிந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு கல்கத்தாவில் பார்த்த போது உலக அதிசயங்களில் ஒன்று போல இருந்தது. ட்ராம் (TRAM) என்பது... சாலைகளின் நடுவில் தண்டவாளம்; அதில் இரண்டு-மூன்று பேருந்துகள் சேர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு வண்டி போகும். ரயிலும் பேருந்தும் கலந்த கலவை. அதுதான் ட்ராம். அப்போதே "வெள்ளைக்காரன் கல்கத்தாவில் மட்டும் கட்டி விட்டுச் சென்ற நல்லவற்றில் ஒன்று!" என்று அறிமுகம் செய்து வைத்தார்கள். அதை அவர்களுடைய இடத்திலேயே வந்து பார்த்த மகிழ்ச்சி. ஒரு சிறிய வேறுபாடு - கல்கத்தாவில் கரேர் என்று மெதுவாக ஊர்ந்து சென்றது; இலண்டனில் அழகான பச்சை நிறத்தில் பாய்ந்து சென்றது (கருப்பு மட்டும் கரேர்... பச்சை அழகா? என்ற பட்டிமன்றத்துக்கு மட்டும் அழைக்காதீர்கள். தெம்பில்லை!). சாலையின் இடது ஓரம் முழுக்கவும் (நடைமேடைக்கு அடுத்து) நான்கைந்து அடிகள் கோடு போட்டு சைக்கிள்களுக்காகவே என்று விட்டிருக்கிறார்கள். இலண்டன் முழுக்கவும் இந்த சைக்கிள் பாதையைக் காண முடிந்தது. எல்லோருக்கும் ஈக்குவல் மரியாதை! நல்லதுதானே.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டும் அளவில்லாத வெட்டிச் சிந்தனைகளோடும் இங்குமங்கும் இரண்டு மூன்று முறைகள் அலைந்தேன். இறுதியாக நீண்ட சிரமத்துக்குப் பின் இந்திய முகம் கொண்ட ஒருவரைப் பிடித்தேன். நம்மைப் போலவே பேசுவார் என்று காதைத் தீட்டிக் கொண்டு கவனித்தால் வாயைத் திறந்ததும் வெள்ளைக்காரர்கள் போலவே கொட்டினார். அங்கேயே பிறந்து வளர்ந்தவராக இருக்க வேண்டும். தன்னுடைய போனைத் தட்டி GPS புண்ணியத்தில் "நீ எந்தத் தெருவைத் தேடிக் கொண்டிருக்கிறாயோ அதே தெருவில்தான் இருக்கிறாய். விட்டு விடாதே!" என்று சொல்லி விட்டுப் போனார். கம்பெனி இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து ஒப்படைத்து விட்டுத்தான் போவார் போல என்று ஆச்சரியப் படும் அளவுக்கு உதவி மனப்பான்மையோடு நடந்து கொண்டார். நான்தான் நன்றி சொல்லி வழியனுப்பி வைத்தேன். அவருக்கு எத்தனை வேலைகளோ பாவம் என்று. சில நிமிடங்களில் தேடிய இடம் கண்ணில் சிக்கியது. அங்கும் நிறையக் கலாச்சாரக் கவனிப்புகள் இருக்கின்றன. பொறுத்திருங்கள். அவை பற்றியும் பேசுவோம்.

தொடரும்...

கருத்துகள்

  1. @வலைஞன், வணக்கம் வலையுறவே. அங்ஙனமே செய்து விட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. @பழனி.கந்தசாமி, மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. Enjoyed this very much. Things certainly don't seem all that different there, but when we interact with the people, the differences come through. I am sure the next part will be about the people :)

    பதிலளிநீக்கு
  4. @Zephyr, Thanks so much. Yes. People are much different. Yes. Will talk about people more in the next few posts. I think, I have already talked about them to some extent. :)

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப நல்லா எழுதி இருக்கேங்க...ரசிச்சு படிச்சேன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்