தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 6/6

தொடர்ச்சி...

"பதிமூனில் ஒண்ணு" கதையில் பள்ளியில் இடம் வேண்டிக் காத்திருக்கும் மாணவர்கள் பற்றியும், நல்ல ரிசல்ட் காட்ட வேண்டும் என்று மாணவர்களைச் சல்லடை போட்டு வடிகட்டிக் கொடுமை செய்யும் பள்ளிகள் பற்றியும் பேசப்படுகிறது. எப்படியும் இடம் பெற்று விட வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி, காத்துக் கிடந்து, கடைசியில் சாதித்து விடும் ஒரு மாணவனின் கதை. அப்படி வந்து காத்திருக்கும் பதிமூனு மாணவர்களில் பனிரெண்டு பேர், வாழ்க்கையை வெறுத்து, நம்பிக்கை இழந்து, மறுநாள் வராததால், நம்ம நாயகனுக்கு இடம் கிடைத்து விடும். ஆனால், அந்த ஒருநாட் கூத்தை மட்டும் பேசுவதில்லை கதை. கிட்டத்தட்ட அவனுடைய பள்ளி வாழ்க்கையே அலசி ஆராயப்படுகிறது. அது அவனுடைய கதை மட்டுமல்ல. தமிழ் நாட்டில் உள்ள முக்கால்வாசிப் பள்ளிப் பையன்களின் கதை. ரிசல்ட் பைத்தியம் பிடித்த பள்ளிகளின் - அவற்றின் நிர்வாகத்தின் - தலைமையாசிரியர்களின் - ஆசிரியர்களின் - பெற்றோர்களின் கதை!

மற்ற எல்லாப் பாடங்களிலும் குட்டிக் கரணம் போட்டுத் தப்பி விடுபவன், சுட்டுப் போட்டாலும் கணக்கும் ஆங்கிலமும் வராது தவிப்பான் பாவம். இந்தக் காம்பினேசன் நிறையப் பேருக்குப் பிரச்சனை. அதற்குக் காரணம், தமிழில் வாசித்து மனப்பாடம் செய்ய முடியாதவை இவை இரண்டும். 'நம்ம சாமிகளைக் கும்பிட்டால் இங்கிலீஷ் எப்படி வரும்?' என்ற ஒரு விபரமான கேள்வியோடு சர்ச்சுக்குப் போய் இயேசுவைக் கும்பிட ஆரம்பித்து விடுவான். அங்கே வந்து ஓர் ஆள், "இயேசுவுக்கே இங்கிலீஷ் அல்ல தாய்மொழி!" என்று போட்டுக் குழப்பி விட்டுப் போவது சுவாரசியம். இங்கிலீஷ் நன்றாக வர வேண்டும் என்பதற்காக இயேசுவைப் பார்க்கப் போனால், அங்கும் ஆடு மேய்க்கும் கதைகள் சொல்லும் போது அவன் படும் பாடு அதனினும் சுவாரசியம். இதில், எப்படியோ நமக்கு ஒருத்தன் சிக்கிட்டான் என்று அவனை அரவணைக்கும் சர்ச் பற்றியும் மறைமுகக் குத்தல் இருக்கிறது.

ஒரு கம்யூனிஸ்ட்டு இந்து மதமல்லாத இன்னொரு மதத்தை மட்டும் கிண்டல் பண்ணி விட்டு விட்டால் பிரச்சனை என்றோ என்னவோ, கூடவே சுடலை மாடசாமியையும் கிண்டல் செய்திருக்கிறார். இரண்டுமே நியாயமான கிண்டல்கள்தான். "மதிப்பெண் அதிகம் வாங்குவதற்கு, சுடலைமாடசாமியிடம் வேண்டுவது எந்த வகையில் நியாயம்? சுடலைமாடசாமிக்கும் கல்வித் துறைக்கும் என்ன சம்பந்தம்?" என்று குழம்புவான் நம்ம ஆள். அத்தோடு டியூசன் வைக்கும் கணக்கு வாத்தியார் பற்றியும் ஒரு குத்தல் வருகிறது. தமிழ்ச் சமூகத்தில் நடக்கும் பெரும் பெரும் அநியாயங்களில் இதுவும் ஒன்று. தமிழ்ச்செல்வன், தன் அறிவொளி இயக்க காலத்தில் இது பற்றியெல்லாம் நிறையக் கேள்விப் பட்டும் சிந்தித்தும் இருக்க வேண்டும். அதுதான் இதில் வெளிப்பட்டிருக்கிறது. தான் நடத்தும் டியூசனுக்கு வராமல் வேறொரு தனியார் டியூசனுக்குப் போனதால் அந்த மாணவனைச் சந்தேகம் கேட்ட போது போட்டு வெளுத்தெடுத்த ஒரு ஆசிரியரின் வகுப்பில் நானும் படித்திருக்கிறேன். உச்சி முதல் உள்ளங்கால் வரை முழுக்க முழுக்க ஊழல் பீடித்திருக்கும் சமூகம் நம்முடையது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

பள்ளியில் இடம் பிடிப்பதற்காக வரிசையில் காத்திருந்து தவித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களைப் பார்த்து அங்கிருக்கும் மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு ஐடியா உதிக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தம் மீதும் ஓவர் கெடுபிடி காட்டும் தம் தலைமையாசிரியர் மீதான வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கிறார்கள்.  "இதைச் சாதிப் பிரச்சனை ஆக்கிரு" என்று வந்து ஒரு பையனுக்கு ஐடியா கொடுக்கிறார்கள். இது கொஞ்சம் இடிக்கிறது. தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் அப்படியான ஆட்களும் இருக்கிறார்கள் எனினும், சிலருக்கு அது தீண்டாமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் பற்றி நினைவூட்டுவதாகவும் சிலருக்கு அது வேறு மாதிரியாகவும் படக்கூடும். வேறு மாதிரி என்றால்? வேறு மாதிரி என்றால்... அப்படித் தவறாகப் பயன்படுத்துவதற்கும் மற்றவர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்பது போல! அப்படியான கதைகளும் எனக்குத் தெரியும். சட்டத்தின் போக்கில் போய் மடக்க முடியாத எத்தர்களைக் கடைசியாகச் சிக்க வைக்க வைத்திருக்கும் பொறியாகத்தான் காவற் துறை இதையும் சிலருக்குக் கற்றுக் கொடுக்கிறது.

அடிஸ்கேல் உடைகிற அளவுக்கு அடிக்கிற வெறி பிடித்த விலங்குகளிடம் நானும் படித்திருக்கிறேன். அடிஸ்கேல் என்ற பெயரே அடிப்பதற்குப் பயன்படுத்துவதால் வந்தது என்றுதான் நாங்கள் எல்லோருமே எண்ணிக் கொண்டிருந்தோம். அப்புறம்தான் உண்மை புரிந்தது - அது பல பொருட்கள் கொண்ட ஓர் "ஒருசொல் பன்மொழி" என்பது. அதுவும் "அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்!" என்கிற பழமொழி ஒன்று வேறு சொல்லிக் கொண்டே அடிப்பார்கள்.

"அவரவர் தரப்பு" என்ற கடைசிக் கதையில் கணவன்-மனைவி பிரச்சனைகள் ஆழமாகப் பேசப்பட்டிருக்கின்றன. தன் துணைவனோ துணைவியோ முழுக்க முழுக்கத் தன் ஆளுமைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று எண்ணுகிற உளவியல் பற்றி அழகாகச் சொல்லி இருக்கிறார். அதன் ஒரு வெளிப்பாடாகத்தான் தன் துணை தனக்குப் பிடித்த எதைச் செய்தாலும் வருகிற கோபம் இருக்கிறது. தன் கணவன் சிகரெட் பிடிப்பதைக் கூடப் பல பெண்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். அவனுடைய உடலுக்குக் கேடு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். 'ஒவ்வொரு முறையும் என்னிடம் அனுமதி வாங்கிக் கொண்டு போய்ச் செய்தால் அது போதும் எனக்கு!' என்கிற மாதிரியான பெண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அது போலவே ஆண்களும் பல விசயங்களில் தம் பெண்களைக் கட்டுப்படுத்த முயல்கிறார்கள்.

வண்டி சேரன்மாதேவி பேருந்து நிலையத்தில் நிற்கும் போது அவளை உட்கார வைத்து விட்டுத் தம் அடிக்கப் போகும் அவனைச் சட்டையைப் பிடித்து இழுத்துப் பொளேர் பொளேர் என வைக்கலாம் போல இருக்கும் நமக்கு. மனைவி-குழந்தை குட்டிகளைத் தவிக்க விட்டு விட்டு இது போலச் செய்கிற பல பரதேசிப் பயபிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன். இதெல்லாம் என்ன கருமம் பிடித்த குணங்களோ இந்த ஆம்பளைப் பிறவிகளிடம். இருப்புக் கொள்ளாத அளவுக்கு அப்படியென்ன கொழுப்பு?! மனைவி-பிள்ளைகளிடம் என்று மட்டுமில்லை. இடம் போட்டுவிட்டு வேறொருவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிப் விட்டுப் போவதும் அப்படித்தான். இவர் வெண்ணெய் மாதிரிப் போய் விடுவார். "இதென்ன அவுக அப்பன் வீட்டு இடமா?" என்று வேறொருவன் வந்து நம்மிடம் வம்பு வளர்ப்பான். ஐந்து நிமிடம் நிற்கப் போகிற வண்டியை விட்டு இறங்கிப் போகாமல் இருந்து விட்டால் இந்தப் பிரச்சனைகள் எதுவும் இராதே. ஒரு பேச்சுக்கு இது போலவே பொம்பளைகளும் இருப்புக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் ஒத்துக் கொள்வோமா?!

பொழுதெல்லாம் தன்னுடனேயே இருக்கும் மனைவி, மசக்கையானவுடன் எல்லோருக்கும் பொதுவாகி விடுவது பற்றிப் பேசியிருப்பது சுவாரசியமானது. அதன் பிறகு தனித்திருக்கும் நேரமே கிட்டாமல் போய்விடும் கணவன்-மனைவிக்கு. எல்லோருக்குமே அதில் இருந்துதான் இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாகக் கூடும். அதன் பிறகு குழந்தையும் பிறந்து விட்டால், குழந்தையைப் பார்க்கவே நேரம் இல்லாமல் போய்விடும் மனைவியர்க்கு. அப்புறம் எங்கிட்டுக் கணவனைக் கண்டு கொள்ள முடியும்?! குழந்தை தூங்கும் நேரத்தில்தான் குளித்தல், தூங்குதல், சமைத்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற பெண்களின் சிரமத்தைப் புரிந்து கொள்கிற ஆண்கள் மிகக் குறைவு. அதில் தமிழ்ச்செல்வனும் ஒருவர்.

'பெற்ற தாய் மீது பாசம் கொண்டிருத்தல் பெரிதில்லை; உன்னையே முழுமையாக நம்பி வந்திருக்கும் ஒரு பெண் மீது பாசமாக இருக்க வேண்டும்!' என்று மனைவிமார் வைக்கிற கோரிக்கை போலவே, ஆண்களிடமும் சில கணக்குகள் உண்டு. அதில் ஒன்று, 'நான் என்ன சொன்னாலும் என்னைத் தன் மகனில்லை என்று சொல்லி விலக்க மாட்டாள் என் தாய். அது போலவே - அம்மா போலவே, என்னை நானாகவே-அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒரு பெண்ணாக ஏன் மனைவி இருப்பதில்லை?!' என்பது. அது பற்றியும் பேசியிருக்கிறார்.

"வளைவுகளும் திருப்பங்களும் குண்டும் குழியுமான சாலையில் பஸ் போய்க் கொண்டே இருந்தது" என்று முடியும் கதை, அவர்களுடைய வாழ்க்கையில் மட்டுமல்ல, எல்லாக் கணவன்-மனைவியரின் வாழ்க்கையிலும் வளைவுகளும் திருப்பங்களும் குண்டும் குழியும் இன்னும் நீண்ட காலத்துக்கு இருந்து கொண்டே இருக்கும் என்று சொல்லாமல் சொல்லி முடிகிறது. இந்த அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டால் கூடப் போதும். பஸ் போய்க் கொண்டேயிருக்கும். அதையும் தாங்கிக் கொள்ளும் பொறுமை இல்லாமல் போகும் போதுதான் வண்டி படுத்துக் கொள்கிறது அல்லது குடை சாய்ந்து விடுகிறது.

சின்னச் சின்ன விஷயங்கள் என்று பார்த்தால், தமிழ்ச்செல்வனின் சிறுகதைகள் பெரும்பாலும் வள வளவென்று நீளாமல் சிறுகதைகளாகவே இருக்கின்றன. அதுவே பெரும் சிறப்பு. இடையில் ஓரிரு கதைகள் மீட்டும் கொஞ்சம் நீளம் அதிகமிருந்தன. அதுவும் 'ஓரிரு' என்பதால், விட்டு விடலாம். சுப்பையா, சுப்புத்தாய், செண்பகவல்லி, வேலுசாமி, நடராஜன், ஆதி லட்சுமி, குருசாமி என்று கதாபாத்திரங்களின் பெயர்கள் பெரும்பாலும் அவருடைய வீட்டுக்குள்ளும் உறவினர் வீடுகளில் இருந்துமே வந்திருக்கின்றன போலத் தெரிகிறது. கலை-இலக்கியங்களில் மதுரை மாவட்டமும் நெல்லை மாவட்டமும் பேசப்படும் அளவுக்கு அதற்கிடைப்பட்ட கரிசல் பூமியின் வாழ்க்கை அதிகம் பேசப்படவில்லை என்பது போலவே அடிக்கடித் தோன்றும். அந்தக் குறையை நிவர்த்தி செய்து வைக்கும் ஒருவராக-அவர்களுள் முன்னோடியாக தமிழ்ச்செல்வன் இருக்கிறார். இந்த வழியில் இன்னும் நிறையப் பேர் வரலாம். அந்தப் பெருங்கூட்டத்தில் ஒருவனாக இருந்து விட வேண்டும் என்பதுதான் என் தனிப்பட்ட ஆசையும். பார்க்கலாம். காலம் அதன் கல்லாப் பெட்டியில் என்ன வைத்திருக்கிறதென்று...

முற்றும்.

கருத்துகள்

  1. மிக்க நன்றி, மதுரைத் தமிழன் அவர்களே. உங்களுக்கும் அங்ஙனமே வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி