கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 6/7
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!
தொடரும் வியப்புகள்...
இங்கே இருக்கும் 70% சீனர்கள் யாவரும் புத்த மதத்தவர் அல்லர். கிறித்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையானவர்கள் புத்த மதத்தினரே. எனவே, புத்த மதப் பழக்க வழக்கங்களையும் நேரில் இருந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. புத்த மதம் பல வகைகளில் இந்து மதப் பழக்கங்களைக் கொண்டுள்ளது. சீனர்களின் கடையில் காலையில் நம்மைப் போன்றே கடவுளுக்குப் படையல் இட்டு வணங்கிய பின்தான் தொழில் ஆரம்பிக்கிறார்கள். பூசைச் சாமான்கள் மட்டும் விற்கும் கடைகள் கூட இருக்கின்றன. காவியும் மஞ்சளுமாக அவையும் கூட இந்து மதத்துக்கு உரியவை போலவே இருக்கின்றன. நம்மைப் போலவே ஊது பத்தி கொளுத்துகிறார்கள். சிலர் இந்தியாவில் போலவே நம்மிடம் கும்பிடு கூடப் போடுகிறார்கள். அதை இந்தியர்களிடம் மட்டும் செய்வார்களா அல்லது அவர்களுக்குள்ளும் செய்து கொள்வார்களா என்று தெரியவில்லை. கடைகளில் பணி புரிவோர் சில்லறை அல்லது கடன் அட்டையைத் திரும்பக் கொடுக்கும் போதும் பில் கொடுக்கும் போதும், நம்ம ஊரில் கோயிலில் செய்வது போல, மிகப் பணிவோடு, இடக்கை வலக்கையைத் தொட, வலக்கை பொருளைக் கொடுக்கிற மாதிரி ஒரு ஸ்டைல் வைத்திருக்கிறார்கள். அது முழுக்க முழுக்க ஓர் இந்துப் பழக்கம் போல எண்ணிக் கொண்டிருந்தேன். நம்மை விடப் பல மடங்கு அதிகமாகவும் பணிவாகவும் எல்லா இடங்களிலும் இதைக் கடைப் பிடிக்கிறார்கள். புத்த மதம் இந்தியாவில் பிறந்து பயணித்ததை நினைவு படுத்துவதாக இருக்கிறது இவ்வொற்றுமைகள்.
பேய் விரட்டு மாதம் என்றொரு மாதம் இருக்கிறதாம். அந்த மாதத்தில் தெருவெங்கும் தீ மூட்டி ஏதோ காகிதங்களைப் போடுகிறார்கள். அம்மாதம் முழுக்க பக்தி அதிகமாகத் தென்படுகிறது. புத்த மதம் கடவுளைப் பெரிது படுத்தாத மதம் என்றோர் எண்ணம் இருந்தது. முதலில் அது பொய்த்தது. கடவுள் வந்து விட்டால் பேயும் வந்துதானே ஆக வேண்டும். பேய் பயத்தில் நம்மை விஞ்சி விடுவார்கள் போல. கடவுளை நம்பாதவர்களே பேய்க்குப் பயப்படுபவர்களாக இருப்பதும், கடவுளை நம்புபவர்கள் கடவுளை விடப் பேய்க்கு அதிகம் பயப்படுவதும் நமக்குப் புது விசயமா என்ன?!
சிங்கப்பூர் சிறிய ஊராக இருப்பதால், எங்கு சென்றாலும் திரும்பத் திரும்ப அதே ஆட்களைப் பார்க்கிற மாதிரியாக இருக்கிறது. சீன முகம் எல்லாம் ஒரே மாதிரியாகத் தெரியும் பிரச்சனையைச் சொல்ல வில்லை. இந்திய முகங்கள் பற்றித்தான் சொல்கிறேன். அலுவலகத்திலும் அதைச் சுற்றிலும் பார்க்கும் அதே முகங்கள்தாம் இரயிலிலும் கண்ணில் படுகின்றன. சனி-ஞாயிறு சாமான்கள் வாங்கச் செல்லும் போதும் திரும்பவும் அதே முகங்களே தென் படுகின்றன. ஐம்பது இலட்சம் பேர் வாழும் ஊரில் ஐந்து இலட்சம் பேர் கூட இந்தியரில்லை. அப்படியானால், இங்குள்ள தமிழரெல்லாம் சேர்ந்தால், திருநெல்வேலி அளவுக்கு ஓர் ஊர் உருவாக்கலாம். அவ்வளவுதான். திருநெல்வேலியில் ஒரு வருடம் இருந்தால் அதே ஆட்களைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது போலத்தானே இருக்கும். அதுதான் இங்கும்!
சின்ன வயதில் ஊரில் சுளீர் என்று அடிக்கும் வெயிலில் கூட நண்பர்களோடு சட்டையில்லாமல் உப்புப் படிந்த உடம்போடு சுற்றித் திரியும் போதெல்லாம் மாமா கடுமையாகக் கோபப் படுவார். சட்டையில்லாமல் திரிவது அநாகரிகம் என்பது அவருடைய கருத்து. அதன் பின்பு அவருக்கும் நாகரிக மனிதர்களின் பார்வைக்கும் பயந்து சட்டை போடப் பழகியபின் சட்டையில்லாமல் இருத்தல் என்பது மனித குலத்துக்கு எதிரான பெரும் குற்றமாகவே மனதில் பதிந்து விட்டது. அப்படிச் சட்டை போடாமல் உடன் சுற்றிய நண்பர்களும் அவர்களுடைய மாமா சொல்லாமலேயே சட்டை போடுவதைப் பார்த்த போது மாமா விபரமானவராகத்தான் தெரிந்தார். அதன் பின்பு சட்டை போடாமல் இருப்பதென்பது (அந்தப் பெரும் மானிட சுகம்!) தனிமையில் இருக்கும் போதும் வீட்டார் முன்பும் மட்டுமே என்றாகிப் போனது. வீட்டுக்கு யாராவது வந்தால் சட்டையில்லாமல் உடம்பைக் காட்டுவது கூட உடனிருப்போருக்கும் கூட அவமானகரமானதாக இருந்தது. தூங்கும் போதும் சட்டை (டி-சட்டை) போட்டே தூங்கும் நாகரிக மாந்தர்களின் மத்தியில் வாழ ஆரம்பித்த பின்பு, நாமும் அப்படியே வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிங்கப்பூரில் உச்சி வெயில் தாங்க முடியாமல் வெற்றுடம்போடு இருக்கும் (வீட்டில்தான்) மனிதர்களைப் பார்த்த போது அது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமில்லை போல என்று பட்டது. அவர்கள்தாம் வளர்ந்த நாட்டு வாரிசுகள் ஆச்சே. அதை நாம் செய்தால் தப்பில்லையே. ஆக, இதிலும் வசதிக்கேற்றபடி வாழ்ந்துவிட்டுப் போவதை விட வசதியானவர்களின் வசதிக்கேற்ப வாழ்ந்து விட்டுப் போவதுதான் சரியாகப் படுகிறது.
இந்தியாவுக்கு வெளியே தீபாவளிக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்பதில் ஆச்சரியப் படுவதற்கு ஏதுமில்லை. அதை எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்த்தால் கொஞ்சம் வியப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் மாதாமாதம் அல்லது ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை வருகிற திருநாட்களுக்கு வாழ்த்துவதற்காகவே எப்போதும் ஒரு பலகை இருக்கிறது. கிறித்தவர்களை கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு வாழ்த்துவது போல (அவைதான் இப்போது மொத்த உலகத்துக்குமான திருநாட்கள் ஆகி விட்டனவே!), மண்ணின் மைந்தர்களான மலேய-முகமதியச் சிறுபான்மையினரை ஹரி ராயாவுக்கு (ரம்ஜானை அப்படித்தான் சொல்கிறார்கள்; என்னடா இது ஹரி-சிவன் என்று இந்துப் பெயர்கள் போல இருக்கிறதே என்று வியந்து போனேன்; அதுவும் பண்டைய பண்டமாற்று-பண்டிகை மாற்று முறைகளின் விளைவாக நிகழ்ந்த பெயர்ப் புழக்கமோ என்னவோ!) வாழ்த்துவது போல, இந்திய-இந்துச் சிறுபான்மையினரை ஊரெங்கும் இருக்கும் பலகைகளில் தீபாவளி வாழ்த்துச் சொல்லி மகிழ்விக்கிறார்கள். இந்த வாழ்த்துக்களின் தொடர்ச்சியாக அந்த ஓரிரு வாரங்களும் ஊர் முழுக்க தீபாவளி விழாக் கொண்டாடுகிறார்கள்.
இந்த விழாக் கொண்டாடும் விதமே அலாதியானது. பெரும்பாலும் இந்திய-இந்து மக்களை அழைக்கிறார்கள். அதற்கு மிகக் குறைந்த விலையில் நுழைவுச் சீட்டு விற்கிறார்கள். மத எல்லைகளைக் கடந்து இந்திய முகமதியர்களும் கிறித்தவர்களும் கூட இதில் வந்து கலந்து கொண்டு தம் இந்தியச் சகோதரர்களோடு அளவளாவிக் கொள்கிறார்கள். குறிப்பாக, முன்பு சொன்னபடி, தமிழ் முகமதியர்கள் நிறையவே இங்கு இருக்கிறார்கள். அவர்களும் நிறையக் கலந்து கொள்கின்றனர். அது மட்டுமில்லாமல், அந்தந்தப் பகுதிகளில் இருக்கிற சமூக மையங்களில் (COMMUNITY CENTER) பொறுப்பில் இருக்கிற சீனர்களும் மலேயர்களும் கூட இதில் ஈடுபாட்டோடு கலந்து கொள்கின்றனர் (சமூகத்தில் நடக்கிற எல்லாத்திலும் ஈடுபாட்டோடு கலந்து கொள்கிறவர்கள்!). இந்தச் சமூக மையங்கள் சிங்கப்பூரில் முக்கியமான அமைப்பு. இவை அனைத்தையும் அரசே ஊக்குவித்து நடத்துகிறது. நாங்களும் போன புதிதில் இவற்றில் ஏதாவதொன்றில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் எண்ணித் திட்டமிட்டதெல்லாம் வெறுங்கனவாகிப் போனது. 'உள்ள வேலையைப் பார்க்கவே துப்பில்லை; இதில் ஊர் வேலை வேற!' என்று மெதுவாக அமைதியாகி விட்டோம். தீபாவளிக்குத் திரும்புவோம்.
விழாவில் பெரும்பாலும் இந்திய நிகழ்சிகள் இடம் பெறுகின்றன. அதிலும் பெரும்பாலும் தமிழ் நிகழ்ச்சிகளே இடம் பெறுகின்றன என்றாலும், மற்ற மொழி நிகழ்ச்சிகளுக்கும் வலிந்து முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பஞ்சாபில் இருந்து வந்த ஒரு குழு பாங்க்ரா நடனம் ஆடியது. அந்த மாதம் முழுக்க அவர்கள் சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் சென்று நடனம் ஆடிக் கொண்டிருந்ததைச் செய்தித்தாட்களில் பார்க்க முடிந்தது. அதிகம் கைத்தட்டல் வாங்கிய நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்று. நாட்டுக்குள் இருக்கும் போது வெவ்வேறு நாட்டவர்களைப் போல இருந்தாலும், வெளி மண்ணில் வைத்துப் பார்க்கும் போது அதற்கும் சேர்த்துக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளத்தான் செய்கிறோம். தமிழ்ப் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு என்பது போலக் காட்டிக் கொள்ளும் பல விசயங்களைப் பார்க்கும் போது சிறிதளவில் இருக்கும் மற்ற மாநிலத்தவர்க்கும் வட இந்தியர்களுக்கும் சகிக்கச் சிறிது சிரமமாகத்தான் இருக்கும் என்றாலும், நாம் நமக்கு ஒரு தொடர்பும் இல்லாத பாங்க்ராவுக்குக் கைத்தட்டியது போல அவர்களும் எதையாவது பார்த்து - நினைத்துப் பெருமைப் பட்டிருந்தால் நல்லது.
பயங்கரக் கைத்தட்டல் வாங்கிய இன்னொரு நிகழ்ச்சி, சீனர் ஒருவர் அழகாகத் தமிழ்ப் பாடல் பாடியது. அந்த நிமிடம் ஒரே ஒரு சிறிய சில்லறைக் கேள்வி எழுந்தது. 'தமிழைச் சீனருக்கும் கொண்டு சேர்த்த பெருமை யாருக்குச் சேரும்?'. கண்டிப்பாக எந்த வித்துவானுக்கும் கிடையாது. அது, வயிற்றுப் பிழைப்புக்காக, உழைப்பை மட்டுமே நம்பி, பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு - மக்களை விட்டு - நாளைய நாள் எப்படி விடியப் போகிறது என்று கூடத் தெரியாமல் கப்பலேறி வந்த பாட்டாளி மக்களுக்குத்தானே சேரும்! மலேயர்களின் நடனம் ஒன்றும் அத்தகைய கைத்தட்டல் வாங்கியது.
பார்வையாளர்களையும் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக விழாவின் போதே அவர்களுக்கும் சில போட்டிகள் நடத்திப் பரிசுகளும் கொடுக்கின்றனர். அந்தப் பரிசுகளை சமூக மையத்தில் தலைவர்-செயலாளர்-பொருளாளர் பொறுப்பில் இருக்கிற சீனரோ-மலேயரோ வழங்கும் போது, சிங்கப்பூரின் பன்முகத் தன்மை நன்கு சத்தமாகவே பறைசாற்றப் படுகிறது.
சிங்கப்பூரர்கள் தீபாவளியை பெரும்பான்மை இந்தியர்கள் சொல்வது போல ஆங்கிலத்தில் 'திவாளி' (DIWALI) என்று சொல்வதில்லை. பெரும்பான்மைத் தமிழர்கள் சொல்வது போல முழுமையாக அழுத்தம் திருத்தமாக 'தீபாவளி' (DEEPAVALI) என்று சொல்கிறார்கள்.
தீபாவளிக்குப் பல வாரங்கள் முன்பிருந்தே லிட்டில் இந்தியா பகுதி களை கட்டி விடுகிறது. புதிது புதிதாகக் கொட்டகை போட்டுத் தற்காலிகத் துணிக்கடைகள் முளைக்கின்றன. சேட்டுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து விதவிதமான இந்தியத் துணி மணிகளைக் குவிக்கிறார்கள். மக்களும் போய்க் குவிந்து அள்ளிக் கொண்டு வருகிறார்கள். உச்ச கட்டமாக தீபாவளி நாள் பிறக்கும் போது, சரியாகப் பன்னிரண்டு மணிக்கு முன்பாக, மேற்குவயப்பட்டுவிட்ட இளைய தலைமுறை வழக்கமாக ஆங்கிலப் புத்தாண்டுக்குச் சொல்லிக் குதூகலப் படுவது போல, "10, 9, 8..." என்று COUNTDOWN சொல்லி "2, 1, HAPPY DEEPAVALI" என்று அலறிக் காதைப் பிளக்க வைக்கிறார்கள். இந்தப் பழக்கம் என்னவோ தீபாவளிக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதது என்றபோதும், அங்கே இங்கே கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கிற போதும், ஒரு பற்பண்பாட்டுச் சூழலில், எது எதையோ கலந்தடித்தாவது அவர்களுடைய பாட்டனாரின் பண்பாட்டைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களே என்கிற ஒற்றை மகிழ்ச்சி அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விடுகிறது. அதற்கு அடுத்த படிக்குப் போய், தீபாவளியே தமிழன் பண்டிகை இல்லை என்பதெல்லாம் தமிழ்நாட்டில் மட்டும் பேசிக் கொள்ள வேண்டிய சங்கதி. அவர்களிடமும் சொல்லிக் குழப்பினால், "போங்கடா... நீங்களும் உங்க இதும்!" என்று சொல்லி விட்டு COUNTDOWN-ஐ ஆங்கிலப் புத்தாண்டுக்கு மட்டும் சொல்லப் போய் விடுவார்கள்.
ஒவ்வொரு முக்கிலும் ஓர் உடற்பயிற்சிக்கான இடம் இருக்கிறது. தனியார் ஜிம்மில் இருப்பது போல மின்-இயந்திரங்கள் இருப்பதில்லை. ஆனால் மின்-இணைப்பின்றி அது போலவே அமைக்கப் பட்ட இயந்திரங்கள் இருக்கின்றன. அதனால் காசு பணம் செலவழிக்காமல் எல்லோரும் அவற்றைப் பயன் படுத்திக் கொள்ள முடிகிறது. இரவு-பகல் என்றில்லாமல் எந்த நேரமும் யாராவது இளைக்க இளைக்க ஓடி உடற்பயிற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். அதையெல்லாம் பார்த்துச் சகியாமல், நானும் ஒரு நன்னாளில் தடாலடியாக ரோமில் ரோமனாக முடிவெடுத்து, சில மாதங்கள் கடுமையாக ஓடியும் உடற்பயிற்சி செய்தும் உடம்பையும் வயிற்றையும் நன்றாகக் குறைத்து விட்டேன். உடம்பைக் குறைத்த பின்தான் புரிகிறது - இப்படி இருக்க வேண்டிய உடம்பையா அவ்வளவு நாட்களாக அப்படி வைத்திருந்தோம் என்று. அந்த வகையில் உடல் பற்றிய தன்னுணர்வு வர வைத்தமைக்காக சிங்கப்பூருக்கும் அங்கே எந்த நேரமும் வியர்க்க வியர்க்க ஓடிக் கொண்டிருக்கும் உடலுணர்வாளர்களுக்கும் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.
இங்கும் கிரிக்கெட் கிளப் எல்லாம் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் ஊருக்குள் அவ்வளவாகக் கிரிக்கெட் ஆடும் காட்சிகள் காண முடிந்ததில்லை (அதற்குக் கிரிக்கெட் ஆடும் மைதானங்களின் பக்கம் போயிருக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் இருக்கிறது!). வீடுகள் இல்லாத மொட்டை வெளிப் பகுதிகளில் பயணித்த போது ஓரிரு முறை அந்தக் காட்சி கிட்டியது. அதுவும் முழுக்க முழுக்க இந்திய முகங்கள்தாம் ஆடிக் கொண்டிருந்தன. அப்போதும் சில்லறையாக ஒரு சிந்தனை வந்து தொலைத்தது - 'அடிமைத் தனத்தைத் தூக்கிப் பிடிப்பதில் நமக்கிருக்கிற போதையும் வெறியும் மற்றவர்களுக்கு இல்லையோ!'.
பகுதிக்கு ஒரு நீச்சட்குளம் இருக்கிறது. அதற்குள்ளேயே மூன்று நான்கு விதமான ஆழங்களில் வெவ்வேறு குளங்கள் இருக்கின்றன. குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என்று ஒவ்வொரு சாராருக்கும் ஒவ்வொன்று. மிகக் குறைந்த கட்டணத்துக்குச் சாமானியர்களும் சென்று அனுபவித்துக் கொள்ள முடிகிறது. மகளை அழைத்துக் கொண்டு போய் ஒரு சில வாரங்கள் அதையும் அனுபவித்து விட்டு வந்தேன். எதையும் தொடர்ச்சியாகச் செய்கிற கடமையுணர்வுதான் நமக்குச் சுத்தமாகப் பிடிக்காதே!
நம் ஊரில் காண முடியாத ஒரு வேறுபட்ட காட்சி - ஏனோ அடிக்கடி மனவளம் குன்றியவர்கள் நிறையப் பேரைப் பொது இடங்களில் காணமுடிகிறது. விசாரித்துப் பார்த்த போது, நம்ம ஊரில் போல அவர்களை அடைத்து வைக்கக் கூடாதாம் இங்கு. மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காதவர்கள் என்றால் அவர்களும் மற்ற மனிதர்களைப் போல சுதந்திரமாக நடமாட விடப்பட வேண்டுமாம். நல்ல விசயம்தான். அப்படி விட்டு விட்டாலே அப்படியானவர்கள் மீது உள்ள பயம் போய் விடும் (குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள் மற்றும் குழந்தையுள்ளம் கொண்ட என் போன்றவர்களுக்கு!). அவர்களும் மேலும் மேலும் மனதளவில் பாதிக்கப் பட மாட்டார்கள். நன்றாக இருப்பவனையே லூசு லூசென்று சொல்லிச் சொல்லியே லூசாக்கி விடும் பண்பாடுடைய நமக்கு அது சிறிது பழகச் சிரமம்தான். பழகினால் நல்லது.
வியப்புகள் தொடரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக