கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 7/7
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!
தொடரும் வியப்புகள்...
ஊரெங்கும் எல்லாச் சந்தைகளிலுமே டூரியன் (முள்நாறிப் பழம்) என்றொரு பழத்தைக் கூவிக் கூவி விற்கிறார்கள். அது குவித்துவைக்கப் பட்டிருக்கும் பக்கம் போனாலே நாற்றம் குமட்டுகிறது. ஆனால் அதைச் சிங்கப்பூரர்கள் பெரிதும் விரும்பி உண்பார்கள் போலத் தெரிகிறது. விற்பனை எப்போதும் பிய்த்து வாங்குகிறது. பார்ப்பதற்குப் பலாப் பழம் போல இருக்கிறது. ஒருமுறை வாங்கிச் சென்று விட்டு வீட்டில் யாருமே நெருங்கக் கூட மாட்டேன் என்று சபதம் எடுக்க, எல்லாத்தையும் நாமே தின்று தீர்க்க வேண்டிய கட்டாயம் ஆகி விட்டது. இப்படியெல்லாம் நம்மவர்கள் பயந்த போதும் உடம்புக்கு மிகவும் நல்லதாம் அந்தப் பழம். அதனால்தான் விற்பனை அப்படிப் பெரும் போடு போடுகிறது போலும். பொதுவாகவே சீன உணவுகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவை என்கிற ஒரு கருத்து இருக்கிறது பெரும்பாலானவர்களிடம். அதனால்தான் அவர்கள் உடம்பைக் கூட அப்படிக் கட்டாகப் பராமரிக்க முடிகிறது என்கிறார்கள். நம்முடைய உணவு முறை முற்றியும் சுவை சார்ந்ததாக இருக்கிறது. அல்லது அப்படி மாறி விட்டது என்றும் சொல்லலாம்.
CIRCLE LINE என்கிற MRT பாதையில் ஓடும் இரயில் வண்டிகள் ஓட்டுனரே இல்லாமல் முழுக்க முழுக்கத் தானியங்குபவை. தொழில்நுட்பத்தை எந்த அளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது.
இந்தியாவில் பிளாஸ்டிக்குக்கு எதிராகப் பெரும் விழிப்புணர்வு எழுந்து வருகிறது. அதையெல்லாம் பார்த்த போது அது ஓர் உலகமெல்லாம் எழுந்து வரும் விழிப்புணர்வாக இருக்கக் கூடும் என்று தோன்றியது. இந்தியாவில் இப்போது வருகிற எல்லாமே வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே வந்து விட்ட ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்கிற வழக்கமான நேர்கோட்டுச் சிந்தனையும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். ஆனால், இங்கு எல்லாக் கடைகளிலுமே எந்த மனச் சங்கடமும் இல்லாமல் பிளாஸ்டிக் பைகள் அள்ளி அள்ளி வழங்கப் படுகின்றன - பயன்படுத்தப் படுகின்றன. ஒருவேளை விளைநிலங்கள் இல்லாததால், மண் என்ன நாசமாகப் போனாலும் என்ன என்று விடுகிறார்களோ என்னவோ! இன்னொரு புறம் இந்தச் சுற்றுச் சூழல் சார்ந்த நெருக்கடிகள் அனைத்துமே வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் மீது மட்டுமே திணிக்க முயலும் நாட்டாண்மைத்தனம் என்கிற குற்றச்சாட்டும் சரியோ என்றும் தோன்றுகிறது.
வந்து சேர்ந்த சில மாதங்களில் வேலைக்குப் பணிப்பெண் வைத்துக் கொள்ள வேண்டி ஒரு நிறுவனத்தை நாடினோம். பெரும்பாலும் இந்தோனேசியப் பெண்களே சிங்கப்பூரில் பணிப்பெண்களாக இருக்கிறார்கள். அதற்கடுத்த படியாக பிலிப்பினோப் பெண்கள் இருக்கிறார்கள். எல்லோரையும் போல இந்தோனேசியப் பெண்ணை வைத்துக் கொள்ளாமல் நாங்கள் பிலிப்பினோப் பெண் ஒருவரைத் தேர்ந்தெடுத்தோம். அப்போதே அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆள் சொன்னார் - "தேவையில்லாமல் வெளியில் போக விடாதீர்கள். வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். கட்டட வேலை பார்க்க வந்திருக்கும் வங்காள நாட்டுப் பையன்கள் இவர்களைக் குறி வைத்தே சுற்றுவார்கள். இவர்களும் அவர்கள் பின்னால் போய் வில்லங்கத்தை விலைக்கு வாங்கி வருவார்கள்!" என்று. அது முதலில் புரியவில்லை. அதன் பின்பு ஞாயிற்றுக் கிழமை ஆகி விட்டால், வங்காள முகங்களும் பிலிப்பினோ முகங்களும் சேர்ந்து சேர்ந்து சுற்றித் திரிவதைப் பார்த்ததும் எதற்காக அப்படிச் சொன்னார்கள் என்று புரிந்து விட்டது. என்னவோர் உலகளாவியக் கூட்டணி! வேலை முடிந்து ஊருக்குத் திரும்புகையில் இதையெல்லாம் போய்ப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள் போல.
தமிழ் நாட்டில் இருந்து வேலைக்கு வந்திருக்கும் பையன்களும் இருக்கிறார்கள். அவர்களும் இது போன்ற வீரதீரச் செயல்களில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். ஆனால் அவ்வளவு மோசமில்லை. ஊருக்குப் பணம் அனுப்ப வேண்டும், காசு சேர்க்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வோ ஆசையோ கூடுதலாக இருக்கிறது. ஆனால் அவர்களோ (வங்கர்கள்) சம்பாதிக்கும் காசை முழுக்க முழுக்கக் குடியிலும் இந்தக் கும்மாளத்திலுமே தீர்த்து விடுவார்களாம் (குடி விசயத்தில் ஒருவேளை அவர்களை விட நம்மவர்கள் கூடுதலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது!). சேர்த்து வைப்பது - வீட்டுக்கு அனுப்புவது என்பது மிகச் சிறிய தொகையாகத்தான் இருக்குமாம்.
சிங்கப்பூரில் இருக்கும் சீனர்களைச் சீனாவில் இருக்கும் சீனர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை என்றும் ஒரு படி கீழாகத்தான் பார்ப்பர் என்றும் இங்கிருக்கும் சில இந்தியர்களும் மலேயர்களும் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அது போலவே சீனாவில் இருந்து வந்திறங்கும் சீனர்களை இவர்களும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்களா என்றும் தெரியவில்லை. இந்தியர்களைவிட அவர்களைக் கூடுதலாக ஏற்றுக் கொள்வதாக இருக்கலாம். ஆனால் தம்மில் ஒருவராக எளிதில் ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்று தெரியவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது சிங்கப்பூரில் இருந்த சீனர்கள் சீனாவுக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கும் படகேறி ஓடினார்களாம். இந்தியர்களை இந்தியா ஏற்றுக் கொண்ட மாதிரி சீனர்களைச் சீனா ஏற்றுக் கொள்ளவில்லையாம். அது முதல் இங்கிருக்கும் சீனர்களுக்குச் சீனா மீது வெறுப்பு வந்து விட்டதாம். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மயிலிறகு குட்டி போடுகிற மாதிரிக் கதைகளாகவும் இருக்கலாம் என்ற சந்தேகத்தோடே கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டேன்.
ஊர் திரும்பும் காலம் என்பதால், சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்கிற மாதிரிப் பல விசயங்களையும் சொல்லியாக வேண்டுமே. நிறையப் பேர் என்ன செய்தாவது இந்த ஊரிலேயே இருந்து விட வேண்டும் என்று போராடுகிறார்கள். எல்லாம் தோல்வியடைந்து ஊர் திரும்ப நேர்ந்து விட்டால், அதற்காக ஏதோ பெரும் மகிழ்ச்சி அடைவது போலக் காட்டிக் கொண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள். எனக்கும் அப்படியான ஓர் உணர்வு வருவதை ஓரளவு புரிய முடிந்தது. அதனால் அதையும் கொஞ்சம் பேசி விடுவோம்.
வந்தது முதலே ஒரு வளர்ந்த நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்கிற பெருமையும் மாதாமாதம் கையில் நிற்கிற மாதிரிக் கூடுதலாகக் கொஞ்சம் பணம் கிடைக்கிறது என்கிற மகிழ்ச்சியும் ஒருபுறம் இருக்கிறது என்றாலும், பெரிதும் மகிழ்ச்சிப் படுத்தாத நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதையும் மறைக்காமல் சொல்லி விட வேண்டும்தானே. எல்லாமே நன்றாக இயங்குகிற போதும் நம்ம ஊரில் உணர்கிற ஒரு சுதந்திர உணர்வை இங்கே உணரவே முடியவில்லை. ஆனால், அதற்கு நேர் மாறாக, சொந்த ஊரில் இருக்கும் போது கூடக் கிடைக்காத ஒரு பாதுகாப்புணர்வு இந்த ஊரில் கிடைக்கிறது. அதற்காகவே இந்த ஊரிலேயே காலமெலாம் இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
சுதந்திர உணர்வு பற்றிய சிந்தனை எப்படி எழுந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்தால், அது அங்கிருக்கும் சட்டதிட்டங்கள் மீதான அச்சம் காரணமாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. தெரியாமல் கொள்ளாமல் ஏதாவது செய்து விடுகிறவர்கள் கூட கம்பி என்ன வேண்டி வந்து விடுமோ - பிரம்படி வாங்க வேண்டி வந்து விடுமோ என்ற தெளிவற்ற சிந்தனைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் அவ்வளவு கடுமையான சட்டங்கள் இருக்கும் போது, நிரபராதி தண்டிக்கப் படாமல் இருக்கவும் திட்டமிட்டுச் செய்யும் குற்றங்களுக்கே கூடுதல் தண்டனை என்கிற மாதிரியான அமைப்பும் இருக்கத்தான் செய்யும். என்ன இருந்தாலும் வெளிநாடு இல்லையா?! அந்த பயம்தான்.
இது எல்லாவற்றுக்கும் மேல், ஆழ்ந்து பேசுகிற போதெல்லாம் நிறையப் பேர் சொல்கிற ஒன்று, தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்களுக்குத்தான் இந்த நாடு. அரசியல் கூட எல்லோருக்குமான விளையாட்டல்ல இங்கே. ஒரு சில வரம்புகளை உணர்ந்து இறங்குபவர்களுக்கு மட்டும்தான் இடம். பெரிய திட்டங்கள் எல்லாம் போட்டு அரசுக்கு எதிராகச் சத்தமெல்லாம் கொடுத்தால் ஆளை முடித்து விடுவார்கள். ஏற்கனவே அப்படியொரு தமிழர் கொஞ்சம் கூடுதலாகச் சத்தமெல்லாம் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட கதை பற்றியெல்லாம் கேள்விப் பட்டேன். ஊடகங்கள் கூட அரசாங்கத்த்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை. குண்டக்க மண்டக்க எதுவும் எழுத முடியாது. உள்ளதைக் கூட உள்ளபடி எல்லா நேரத்திலும் எழுத முடியாது என்றெல்லாம் கேள்விப் பட்ட போது கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. தறி கேட்டுப் போய் எதை வேண்டுமானாலும் எழுதுகிற - பேசுகிற, குறிப்பிட்ட கட்சிகளிடம் - மனிதர்களிடம் காசு வாங்கிக் கொண்டு ஊழியம் செய்கிற, நம் ஊடகங்களை விட அரசாங்கத்தால் கடிவாளம் போடப் பட்ட ஓர் ஊடகம் பல மடங்கு தேவலாம். ஆனால், அந்த அரசாங்கம் இன்று நன்றாக நடக்கிறது. இது பரவாயில்லை. நாளை அது தடம் மாறும் போது கூட அதை யாரும் சொல்ல முடியாது - அது பற்றிப் பேச முடியாது என்றாகி விட்டால், அப்புறம் என்ன சனநாயகம்?!
இதை விடக் கடுமையான ஒரு குற்றச்சாட்டு கூடச் சிலர் வைத்தார்கள். சிங்கப்பூர் வெளியில் பார்க்க சனநாயக நாடு போல இருந்தாலும் மொத்த நாடும் ஒரு குடும்பத்துக்குத்தான் சொந்தம். அவர்களுக்கு எதிராக இந்த நாடு ஒரு போதும் ஒன்றும் செய்ய முடியாது. நல்லது-கெட்டது எதுவாக இருந்தாலும் அது அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் நடந்தாக வேண்டும். அது ஒரு நல்ல குடும்பமாக இருப்பதால், இந்த நாட்டு மக்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட குடும்பமாக இருப்பதால், பிரச்சனையில்லை. ஆனால், முற்றிலும் முதிர்ந்த சனநாயகம் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. இந்தக் கட்டுப்பாடு கூட இந்த நாடு இவ்வளவு வளர்ந்ததற்கு ஒரு காரணம் என்றும் சொல்லலாம். நாம் சொல்கிற முற்றிலும் முதிர்ந்த சனநாயகமாக இருந்தால், அந்த இருபது-முப்பது கிலோ மீட்டரைக் கூட இரண்டாகப் பிரிக்க ஒருவன் பிறந்து வந்திருப்பானோ என்னவோ!
எவ்வளவோ சிக்கல்களோடு ரிஸ்க் எடுத்துக் குடும்பத்தோடு பயணம் மேற்கொண்ட போது எதிலுமே கோளாறு கண்டுபிடிக்கிற ஒரு சகா சொன்னான் - "நீ நினைக்கிற மாதிரி அது ஒன்றும் சொர்க்க பூமி இல்லை. அங்கு எல்லாமே பணம்தான். பெரும் பணம் பிடுங்கும் ஊர். யோசித்து முடிவு செய்!" என்று. அவனுடைய சொந்த அனுபவங்களும் அவனுக்குரிய சுபாவமும் அப்படிப் பேசச் செய்தன என்றே எடுத்துக் கொண்டேன். அவன் தமிழன் அல்லாதவன் என்பது கூட அவன் சிங்கப்பூரை அந்த அளவுக்கு நேசிக்க முடியாமல் போனதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் எண்ணிக் கொண்டேன். ஆனால், அந்தப் "பணம் பிடுங்கும் ஊர்" என்ற குற்றச்சாட்டு மட்டும் திரும்பிக் கிளம்பப் போகிற நேரத்தில் நிறையவே நினைவு படுத்தப் படுகிறது. உலகமே அப்படித்தான் ஆகி விட்டது என்பது ஒருபுறம். இந்தியாவைவிட எந்த விதத்திலும் பெரிய பணம் பிடுங்கியாக இருக்க முடியாது அவர்களால் என்பது இன்னொரு புறம். பணம் இல்லாத வாழ்க்கை அங்கே சாத்தியமே இல்லை என்பதால் அப்படித்தான் எல்லோரும் இருந்தாக வேண்டும் என்கிற நியாயம் ஒருபுறம். ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் வாடிக்கையாளனை வரவேற்கும் போது கொடுக்கிற மரியாதையைத் துளியேனும் குறைத்துத்தான் அவன் விலகிச் செல்லும் போது கொடுக்கிறார்கள். இந்தியாவில் அப்பட்டமாகப் பெரிதளவில் செய்யப்படும் அந்தக் கொடுமையை இங்கே துளியளவு அனுபவிக்க நேர்ந்த போது பெரும் மன உளைச்சல் நேர்ந்தது. வீடு காலி செய்யும் போது தரகப் பெண்மணி நடந்து கொண்ட விதம் எல்லாம் கிளம்பப் போகும் நேரத்தில் இப்படிச் செய்கிறார்களே என்று வலித்தது.
முடியப் போகிற நேரத்தில் கடைசியாகச் சொல்ல வேண்டிய முக்கியமான ஒன்று இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே பெங்களூரில் இருந்து வேலை செய்வதால் சென்னையின் பணிக் கலாச்சாரத்தைத் தொலைவில் இருந்து பார்த்துக் கொள்ளும் வாய்ப்புதான் கிடைத்ததே ஒழிய அதை முழுமையாகப் புரிந்து கொள்ள இயன்றதில்லை. சிங்கப்பூரில் இருந்த இந்த ஓராண்டில், இருப்பது வெளிநாடாக இருந்தாலும், அதற்கென்று ஒரு தனிப் பணிக் கலாச்சாரம் கொண்டிருக்கும் நாடாக இருந்தாலும், சென்னையில் இருந்திருந்தால் எப்படிப்பட்ட சூழலில் வேலை செய்திருப்போம் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளும் அரிய வாய்ப்பாக அமைந்தது. முழுமையாகத் தமிழர்களைப் படிக்கும் வாய்ப்பாக அதைச் சொல்ல முடியாது. அதைத்தான் நம் சொந்த ஊரில் பார்த்துப் புரிந்து கொள்ளலாமே. அது போக பெங்களூரிலும் நம்மவர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆனால், சென்னைத் தமிழனுக்கும் பெங்களூர்த் தமிழனுக்குமே ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு. பணியிடத்தில் அதுவும் நம்மவர்களே நிறைந்திருக்கும் ஓரிடத்தில் நம்மவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை இவ்வளவு தொலைவில் வந்து புரிந்து கொள்ள ஓர் வாய்ப்பை வழங்கியதற்காக சிங்கப்பூருக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.
சென்று வருகிறேன், சிங்கப்பூர். மீண்டும் வருவது பற்றி இப்போதைக்குத் தெரியவில்லை. வந்தாலும் முற்றிலும் வேறுபட்ட இன்னொரு சூழ்நிலையில்தான் வருவேன். அப்படி வருகிற போது என்னவெல்லாம் மாறியிருக்குமோ தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் - நான் முதலில் நினைத்தது போல தமிழர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கையைத் தொடங்கச் சரியான நாடு இதுதான். உலகம் சுற்றி முடித்து ஓரிடத்தில் அடங்க வேண்டும் என்று எண்ணுகிற போது அதற்கான சரியான இடமும் இதுதான். அப்படி அடங்க வந்தாலும் வரலாம். அப்படி வருகையில் இதை விட எளிதான - மகிழ்வான ஒரு வாழ்க்கை காத்திருக்கும் என்பது நிச்சயம். எல்லாவற்றுக்கும் மேலாக என் மகனின் பிறந்த ஊர் எப்போதும் இந்த ஊராகத்தான் இருக்கப் போகிறது. அதனால் அவன் ஒருவேளை இங்கு வருவதற்கு ஆர்வம் காட்டலாம். அப்படி அவன் மூலம் கூட வர நேரலாம். பார்க்கலாம், இந்த வாழ்க்கை என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று!
வியப்புகள் தொடரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக