கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 3/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...

நலப்பணி அரசு (WELFARE STATE)

இங்கே கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் இலவசம் என்று பார்த்தோம். பெரும் பணக்காரர்கள் தவிர்த்து மற்ற எல்லாப் பிள்ளைகளும் ஒரே மாதிரியான பள்ளிகளில்தாம் படிக்கிறார்கள். அப்படியொரு பேச்சைப் பேசவே, நம்ம ஊரில் பத்துத் தடவை யோசித்து, சுற்றி ஒருமுறை பார்த்து விட்டுத்தான் பேச முடிகிறது. "அதெப்படிய்யா பணக்காரன் பிள்ளையும் ஏழையின் பிள்ளையும் ஒரே படிப்பைப் படிக்க முடியும்?" என்பதைப் பதில் சொல்ல முடியாத அளவுக்குச் சுழற்றியடித்துக் கேட்டு விடுகிறார்கள். "நான் நாயாய் உழைத்துச் சம்பாதித்து என் பிள்ளையை நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறேன். அதே பள்ளிக்கூடத்தில் ஒரு பைசாக் கூடச் சேர்க்கத் துப்பில்லாத ஒரு சோம்பேறித் தகப்பனின் பிள்ளையும் சேர்ந்து விட்டால் உழைப்புக்கு என்னய்யா மரியாதை? வெண்ணெய் மாதிரிப் பேசுகிறாய்!" என்கிறார்கள். அதே மாதிரி ஆட்கள்தாம் அலுவலகத்தில் வேறு மாதிரிப் பேசுகிறார்கள். "என்னய்யா நான் நாயாய் உழைக்கிறேன். நீ சும்மா வாயை மட்டும் ஆட்டிக் கொண்டு வளர்கிறாய்!" என்றால், "நீ நாய். அதனால்தான் உழைக்கிறாய். நீ சாகும்வரை இப்படியே உழைத்துக் கொண்டேதான் இருப்பாய். நான் மண்டையெல்லாம் மூளை கொண்ட மனிதன். அதனால் அதைப் பயன்படுத்தி வளர்கிறேன்!" என்று பாடம் நடத்துகிறார்கள். சோம்பேறித் தகப்பனும் உழைப்பாளித் தகப்பனும் (அல்லது அறிவாளித் தகப்பனும்) ஒரே மாதிரிக் காரில் போக வேண்டும் என்று ஆசைப் பட்டால் அது தவறு. ஆனால், அவர்களுடைய பிள்ளைகள் இருவரும் ஒரே மாதிரிக் கல்வி வாய்ப்பு வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது தவறா என்று என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.

அது போலவேதான் மருத்துவம். வசதி படைத்தவன் கண் தெரியாவிட்டால் லேசர் சிகிச்சை செய்து கொள்ளட்டும். அதே நேரம் வசதி இல்லாதவன் இற்றுப் போன கண்ணாடியாவது போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டியது எல்லோருடைய கூட்டுக் கடமைதானே. புற்று நோய் யாருக்கு வந்தாலும் காப்பாற்றப் பட வேண்டும்தானே. உயிர் என்று வந்து விட்டால் ஒரே மாதிரியான மரியாதை கொடுப்பதுதான் உயர்ந்த பண்பாடாகப் படுகிறது. இதை இங்கு வந்து புகழ்கிற இந்தியர்கள் கூட இந்தியா திரும்பியதும் அங்கு அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விளக்கம் கொடுப்பார்கள் என நினைக்கிறேன். இதற்கு மேல் நிறையச் செய்கிறது இவர்களுடைய அரசாங்கம். அதனால்தான் இதை நலப்பணி அரசு என்கிறார்கள் (WELFARE STATE).

நலப்பணி அரசின் மிக முக்கியமான அம்சம் - எல்லோருக்கும் வீடு என்கிற உயரிய நோக்கம். இந்த நாட்டின் குடிமகனான எவரும் வீடு இல்லாமல் இருப்பதில்லை இங்கே. குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதற்கேற்ற அளவில் பெரியதாகவோ சிறியதாகவோ அவர்களுக்கு ஒரு வீட்டைக் கொடுத்து விடுகிறது அரசாங்கம். அது மட்டுமில்லாமல், கணவனை-மனைவியை இழந்திருக்கும் மற்றும் பிரிந்திருக்கும் தனிக்கட்டைகளுக்குப் பல கூடுதல் சலுகைகளும் வழங்கப் படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது இந்த அரசாங்கத்தின் மீதும் நாட்டின் மீதும் பெரும் மரியாதை உண்டாகிறது. ஏழ்மையை ஒழிப்பதை ஏழைகளின் கடமையாக விட்டு விடாமல் எல்லோருக்குமான கடமையாக ஏற்றுக் கொள்வதுதானே உண்மையான முதிர்ச்சி. ஒன்றுமே இல்லாத ஒருவனை அதற்கு அவனே காரணம் என்று அவன் மீதே பழியைச் சுமத்தி ஒதுக்கி விடுதல் பெரும் கொடுமை அல்லவா. அவனுக்குச் சரியாக வைத்துப் பராமரிக்கத் தெரியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, அவனிடம் இருக்க வேண்டிய எல்லாத்தையும் நாம் அல்லவா பறித்து வைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதைப் புரியவே ஓர் இறைமனம் வேண்டியிருக்கிறது. அப்புறம்தானே பகிர்ந்துண்ணும் பழக்கம் எல்லாம் வரமுடியும்.

அதே வேளையில் இது போன்ற நலப்பணி அரசு இம்மக்களை மென்மேலும் சோம்பேறியாக்கி இருக்கிறது என்பதையும் உணர முடிகிறது. பிறந்ததில் இருந்து ஒரு வேலைக்கும் செல்லாமலேயே வாழ்ந்து மடிந்து விடுகிற ஒரு பெருங்கூட்டம் இங்கே உருவாகி இருக்கிறது. முக்கியமாக கிழக்கு ஐரோப்பிய நாட்டினர் பலர் இந்த வசதிகளுக்காகவே இங்கு வந்து குடியேறிக் குந்தி விடுகிறார்கள் என்றொரு பெரும் வெறுப்புணர்வு இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளின் நிதிநிலை அறிக்கையின் போது இவற்றை ஒவ்வொன்றாகக் குறைக்க வேண்டும் என்கிற அழுத்தத்துக்கு உள்ளாகி வருகிறது இங்கேயிருக்கும் அரசாங்கம். சிலர் உழைப்பில் பலர் வாழ்கிறார்கள் என்கிற கோபம் கூடி வருகிறது. நம் சகோதரர் ஒருவர் கூட அதை உறுதிப் படுத்தும் விதமாகப் பேசினார். மகளின் பள்ளியில் சந்தித்த போது நம்மவர் என்று புளகாங்கிதம் அடைந்து வழக்கமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டோம். "என்ன வேலை செய்கிறீர்கள்?" என்று கேட்டபோதுதான் புரிந்தது அது ஒரு தவறான கேள்வி என்று. "வேலையெல்லாம் இல்லை. அரசாங்கம் வீடு கொடுத்திருக்கிறது. எப்போதாவது பகுதி நேர வேலை ஏதாவது செய்தாலே போதும்!" என்றார். வைகைப்புயல் வடிவேலு சொல்வது போல வேலைக்குப் போவதே விபரங்கெட்ட வெண்ணெய்களின் வேலை என்பது போலப் பேசினார். இப்படி ஓர் உட்சமூகம் உருவாகி விட்டால் - அது பெரிதாகிக் கொண்டே போனால், இவர்களுடைய பொருளியல் என்ன ஆகும் என்று யோசித்தேன். மண்டை ரெண்டாகி விட்டது. பொறாமை! இதற்காகத்தான் நம் நாட்டில் அதெல்லாம் கூடாது சொல்கிறோம் என்று சுருக்கமாக முடித்து விடுவார்கள் சிலர்.

வந்தவர்கள் மட்டுமல்ல. மண்ணின் மைந்தர்கள் அதை விடச் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். உள்ளவரைப் பார்த்துத்தான் வந்தவர் கெடுகிறார். அரசாங்கம் செய்து கொடுக்கும் வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களைக் கொன்று கொண்டு இருக்கிறது. வேலை செய்வதற்கெல்லாம் வெளிநாட்டு ஆள், ஓய்வு எடுப்பது மட்டுமே எங்கள் வேலை என்று இருக்க வேண்டும் என்றால், ஒன்று மண்ணுக்கடியில் நிறைய எண்ணெய் இருக்க வேண்டும் அல்லது அடிக்கடி நாடு பிடித்துக் கொள்ளையடிக்க வேண்டும். எண்ணெய் கண்டு பிடிக்கப் போகிறார்களா அல்லது நாடு பிடிக்கப் போகிறார்களா என்று தெரியவில்லை. எண்ணெய் நிறைந்த நாடாகக் கூடப் பிடிக்கலாம்.

பள்ளிகள் மற்றும் கல்வி முறை 

நம்ம ஊரில் இருப்பது போல, வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளிகள் ஒரு தரத்திலும் அரசுப் பள்ளிகள் ஒரு தரத்திலும் என்றில்லாமல், எல்லாப் பகுதிகளிலுமே எல்லா விதமான பள்ளிகளும் இருக்கின்றன. இங்கும் தரமான பள்ளிகள், தரம் குறைவான பள்ளிகள் என்று பிரித்துப் பார்க்கப் படுகின்றன. ஆனால், அதற்குப் பெரும்பாலும் அடிப்படையாக இருப்பது பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் தரமே ஒழிய, படிக்க வரும் பிள்ளைகளின் பெற்றோரின் வசதி அல்ல. ஆனால் இலண்டனுக்குள் இருக்கும் வெவ்வேறு பகுதிகளுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்கிறது. முன்பு சொன்னது போல, மத்திய இலண்டன் முழுக்க முழுக்க வசதியான மண்ணின் மைந்தர்கள் நிறைந்த பகுதி. கிழுக்கு இலண்டன் முழுக்க முழுக்க இந்தியத் துணைக்கண்டத்தின் மைந்தர்கள் நிறைந்த பகுதி. வசதியும் சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். இந்த வேறுபாடுகளை அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளின் தரத்திலும் காண முடியும். ஒரே பகுதியில் வெவ்வேறு தரத்திலும் பள்ளிகள் இருக்கின்றன. அந்தந்தப் பகுதிக்கேற்ற மாதிரி அங்கிருக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பின்னணியும் மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பெரும்பாலும் இந்தியப் பிள்ளைகளும் சில பள்ளிகளில் பெரும்பாலும் ஆப்பிரிக்கப் பிள்ளைகளும் சில பள்ளிகளில் மண்ணின் மைந்தர்களின் மைந்தர்களும் என்று  இருக்கிறார்கள்.

எல்லோருமே தம் பிள்ளைகளை வீட்டில் இருந்து இரண்டு மைல் தொலைவுக்கு உள்ளே இருக்கும் ஏதாவதொரு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று சட்டம். இதனால் நல்ல பள்ளிகள் எல்லாம் ஒரே பகுதியில் குவிந்து விடாமல் பார்த்துக் கொள்ளப் படுகிறது. நல்ல பள்ளிகளில் விரைவில் காலியிடங்கள் தீர்ந்து விடுகின்றன. முந்தியவர்க்கு முதலில் என்ற முறையில்தான் இடம் கிடைக்கிறது. வேறு எந்தக் கொடுமையும் கிடையாது. குழந்தைகளுக்குத் தேர்வு, பெற்றோருக்குத் தேர்வு, நன்கொடை, பிச்சை என்று எதுவும் கிடையாது. எல்லோருமே வீட்டிலிருந்து நடக்கும் தொலைவில் இருக்கும் பள்ளியில் சேர்த்து விடுவதால் பள்ளிகள் சார்பில் போக்குவரத்து ஏற்பாடுகள் ஏதும் கிடையாது. இதனால் காலையிலும் மாலையிலும் பள்ளி சென்று வருவது பெற்றோருக்கு ஒரு பெரும் வேலையாக இருக்கிறது. அதுவே இருவரும் முழுநேர வேலைக்குச் செல்வதற்குப் பெரும் தடையாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வேலைக்குச் செல்வதை முதன்மைப் படுத்தும் பழக்கம் இங்கில்லை. பிள்ளை வளர்ப்பு, பிராணி வளர்ப்பு, குடும்பம்... இவற்றுக்கெல்லாம் அடுத்த படியாகத்தான் வேலையை மதிக்கிறார்கள். அதனால் பிரச்சனையில்லை.

அது போலப் பள்ளியில் சேர்ந்த பின்பும் பிள்ளைகளுக்குப் படிப்பு ஒரு பெரும் இன்பமாக இருக்கிறது. விடுமுறை நாட்களை விடப் பள்ளி நாட்களை அதிகம் விரும்புகிற அளவுக்குப் பள்ளிக்கூடம் நடத்தப் படுகிறது. படிப்பை விளையாட்டோடு சேர்த்துத்தான் சொல்லித் தருகிறார்கள். கழுதைப் பொதி கட்டி அனுப்பி விடும் பழக்கமெல்லாம்  இல்லை. பெரும்பாலும் வெறும் கையை வீசிப் போகிற மாதிரித்தான் இருக்கிறது. வாரக்கடைசியில் கொடுக்கப் படும் வீட்டுப்பாடம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதுவும் எந்த வகையிலும் நம்ம ஊரில் நடத்தப் படும் கொடுமைக்கு அருகில் கூட வர முடியாது. இப்படியொரு சூழலில் படித்து வளரும் ஒரு குழந்தை ஊர் திரும்பியதும் எப்படிச் சமாளிக்கும் என்பதுதான் பெரும் கவலையாக இருக்கிறது. அமெரிக்காவில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் திரும்பிய போது தாய் நாட்டில் கிடைத்த கொடுமையான அனுபவங்கள் பற்றி நண்பர்கள் பலர் சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

அதற்கும் விளக்கம் இல்லாமல் இல்லை. "அப்படியெல்லாம் உன்னைக் கொடுமைப் படுத்தி வளர்த்ததால்தான், இன்றைக்கு சோம்பேறிகளின் மண்ணில் போய் அவர்களுடைய வேலையை - உணவைப் பறித்துக் கொண்டு வரும் வல்லமை உனக்குக் கிடைத்திருக்கிறது. அங்கு போல விளையாட்டுத் தனமாக இருக்க விட்டிருந்தால் நீயும் இலவச வீட்டுக்கு அலைந்து கொண்டிருப்பாய் இன்று!" என்கிறார்கள். "நீ மட்டும் எல்லாக் கொடுமைகளையும் அனுபவித்து விட்டு, உலகிலேயே திறமையான இனம் என்ற பெருமையை அனுபவிக்க வேண்டும். உன் குழந்தைகளும் அக்கொடுமைகளையும் பெருமையையும் அடைந்து இன்புற்றிருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் இல்லையா?" என்று கடுமையான கேள்விகளையெல்லாம் கேட்கிறார்கள்.  

முதல் விஷயம் - இன்றைக்கு நம் குழந்தைகள் அனுபவிக்கிற அளவுக்குக் கொடுமைகளை நாம் அனுபவிக்கவில்லை என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அதுவும் குறிப்பாக நான் அப்படி எந்தக் கொடுமையும் அனுபவிக்கவில்லை. இன்னொன்று - திரை கடலோடித் திரவியம் தேடியோ திருடியோ வர வேண்டிய கட்டாயம் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிந்தாலும், நம்மைச் சுற்றியிருக்கிற எல்லோரைவிடவும் கூடுதலான சில வசதிகளை அனுபவிக்கிற - அவற்றையெல்லாம் உடனுக்குடன் முகநூலில் வந்து எல்லோருக்கும் சொல்லி வயிற்றெரிச்சலைக் கிளப்புகிற ஒரு வாழ்க்கையை நம் பிள்ளைகள் வாழ வேண்டும் என்ற பேராசையில் அவர்களுடைய இளமையை அழிக்கும் உரிமை நமக்கு இருக்கிறதா என்கிற கேள்வியில்தான் மற்ற எல்லா நியாயங்களும் அடிபட்டுப் போகின்றன. கடைசியாக ஒன்று - உலகமெல்லாம் கொள்ளையடித்துச் சென்று தம் நாடுகளைக் கட்டியவர்கள் கூட, ஒவ்வொரு முறை உணவுக்கும் பல கோடி உயிர்களைக் கொல்கிற 'பின்தங்கிய' நாகரிகம் கொண்டவர்கள் கூட, அவர்களுடைய மக்களுக்குள் போட்டியும் பொறாமையும் வந்து விடாமல் சமாதானச் சம வாழ்வுக்குத்தான் முயல்கிறார்கள். சேவற் சண்டையைக் கூட முழுதாக ஏற்றுக் கொள்ளாத பண்பாட்டில் பிறந்த நாமோ, கடந்த இருபது-முப்பது ஆண்டுகளாக நம் பிள்ளைகள் அனைவரிடமும், "இது போட்டி உலகம்! போட்டி உலகம்!!" என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிச் சொல்லி மனிதர்க் கெதிராய் மனிதரைத் தூண்டும் பெரும் பாவத்தைச் செய்து வருகிறோம். 

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைக்கும் போதுதான் பயம் வருகிறது. "வலிமைதான் வாழும். எளிமை அழிந்துதான் ஆக வேண்டும்!" என்று வியாக்கியானம் பேசும் போதெல்லாம் உள்ளுக்குள் ஓர் அச்சம் உருவாகி மறையத்தான் செய்கிறது. வியாக்கியானம் சரிதான். வலிமை எப்போதும் எளிமையை வீழ்த்தித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எது வலிமை என்பதில்தான் பிரச்சனை. என்னிடம் அறிவு அதிகமாக இருக்கிறது என்றும் அதனால் அதுவே வலிமை என்றும் எண்ணி அப்படிப் பேசினால், அடுத்த நிமிடமே வேறொரு கேள்வியும் வருகிறது. கொள்ளையடிப்பவனும் கொலை செய்பவனும் கற்பழிப்பவனும் கூட அவனிடம் இருப்பதுதான் வலிமை; வலிமைதான் வாழும் என்று பேசினால் அதை எப்படிச் சமாளிப்பது? காலம் காலமாக அதிகாரத்துக்குச் சொரிந்து விடும் வேலையை மட்டும் செய்கிற அறிவு, தான் ஓர் எடுபிடி மட்டும்தான் என்பதைக் கூடப் புரிந்து கொள்ள அறிவில்லாமல் இறுமாப்பில் பேசினால், உலகம் முழுக்க இருக்கும் அறிவாளிகளைப் பணியிலமர்த்திச் செயல்படும் அதிகாரத்தின் வலிமைக்கு என்ன பெயர்? அது என்னை அழித்து விடாமல் இருக்க, அந்த அதிகாரத்தை நானோ என் பிள்ளைகளோ கைப்பற்ற, நம் கழுதைப் பொதிக் கல்வி முறை உண்மையிலேயே உதவுமா என்கிற கேள்விதான், கூடிய விரைவில் குடும்பத்தையும் அழைத்து வரப்போகும் இந்தப் பயணத்தின் பெரும் கேள்வியாக இருக்கிறது.

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 4/6