கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 7/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...

மொழி
இங்கிலாந்து வந்ததில் எனக்கு நேர்ந்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று - மொழி சார்ந்த பார்வை. பார்வை மாறியது என்று சொல்ல முடியாது. தெளிவடைந்தது எனலாம். சிறு வயது  முதலே, நாம் பெரிதாக மதிக்கும் அறிஞர்கள் அனைவருமே தாய்மொழி வழிக் கல்வி பற்றிப் பெரிதாகப் பேசுவார்கள். மற்ற எல்லா விசயங்களிலும் அவர்களோடு ஒத்துப்போகும். ஆனால் இந்த விசயத்தில் மட்டும் ஏதோ இடிக்கிற மாதிரியே இருக்கும். அது பிற்போக்குவாதமோ என்று கூடத் தோன்றும். மொழியை வைத்துப் பிழைப்பு நடத்துகிற அரசியல்வாதிகளையோ - மொழி என்றாலே உணர்ச்சி பொங்க உறுமுகிற ஆட்களையோ சொல்லவில்லை. அறிவுபூர்வமாகப் பேசுகிற நாகரீகமான பல அறிஞர்களே கூட அப்படித்தான் சொல்வார்கள். பின்னொரு காலத்தில், எல்லாமே சரியாகப் பேசுகிறவர்கள் இதில் மட்டும் தவறாகப் பேச வாய்ப்பிராது என்று எண்ணித் தேற்றிக் கொண்டு விட்டு விட்டேன். தேற்றிக் கொண்டுதான் விட்டேனே ஒழிய, அதற்கான சரியான - அழுத்தமான காரணங்களைச் சரியாக - அழுத்தமாக உணர முடிந்ததில்லை. அது இங்கிலாந்தில் வந்து வாழ நேர்ந்த இந்தக் காலத்தில் நன்றாகப் புரிபட்டுவிட்டது.



உலகம் செம்மொழி என்று சொன்ன எதையும் ஏற்றுக் கொள்ளாமல், உலகத்திலேயே அதிகமானோர் பேசுகிற மொழி என்று எதையும் கற்றுக் கொள்ள முயலாமல், தன் தாய்மொழியை மட்டும் தெரிந்து கொண்டு, எல்லாத்தையும் தம் மொழிக்கு வரவழைத்து, உலகமே தம் அடிமை என்கிற அவர்களும் தம்மை வல்லரசென்கின்றனர். தம் தாய்மொழி மட்டும் தெரிந்தால் எழுத்தறிவு உடையவராகக் கூட ஏற்றுக் கொள்ளப் பட மாட்டோம் என்ற பயத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக அவர்களுடைய சொற்களைச் செருகிப் பேசும் தன்மானச் சிங்கங்கள் நாமும் நம்மை வல்லரசென்கிறோம். இதில் எது உண்மை? நீங்களே யோசித்துச் சொல்லுங்கள்.

உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு யோசித்தாலும் கூட இதில் ஏதோ சிக்கல் இருக்கிறது. தன்மானம் என்பது ஓர் உணர்ச்சிதான் என்றாலும் அறிவுபூர்வமாகப் பேசுவோர் கூட யாரும் தன்மானத்தை இழப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வெற்றி பெற்றவன் எழுதுவதுதான் வரலாறு என்பது போல, வென்றவனின் மொழிதான் உயர்ந்தது என்றும் ஆகிவிட்டது. ஆங்கிலம் பேசுவோர் வென்று விட்ட காலத்தில் வாழ்வதால் ஆங்கிலம் உயர்ந்தது என்று எண்ணிக் கொள்கிறோம். அவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்ததால் அவர்களுடைய வளர்ச்சியில் நாமும் பங்கெடுத்துக் கொண்டு நம்மையும் வெற்றியாளர்களாகக் காட்டிக் கொள்கிறோம். அது மாறலாம். அப்படி மாறும் போது அவர்களோடு சேர்ந்து நாமும் மூழ்க முடியாது. ஒட்டு மொத்தமும் அடுத்த எந்த மொழி வெல்கிறதோ அதன் பின்னால் ஓட முடியாது. பல மொழிகளைப் படிப்பது என்பது மொழியியலாளர்களுக்கும் பிழைப்புவாதிகளுக்கும் எளிதாக வரலாம். எளிய மக்களுக்கு அது எளிதல்ல. அவரவர் மொழியில் பேச முடிதலும் படிக்க முடிதலும் தொழில் செய்ய முடிதலும் ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படை உரிமை. அதை மறுத்தல் அடிப்படை உரிமைக்கான தாக்குதல். இதை இங்கிலாந்து மக்களே நன்றாகப் புரிந்திருக்கிறார்கள்; ஏற்றுக் கொள்கிறார்கள். நாம்தாம் அவர்களிடமே போய் அவர்களை விடவும் அவர்கள் மொழியில் நமக்கிருக்கும் வித்தைகளையும் விசுவாசத்தையும் காட்ட முயல்கிறோம். இந்த ஞானோதயம் மான்செஸ்டரில் டாக்சியில் போய்க் கொண்டிருந்த போது அந்த டாக்சி ஓட்டுனருடன் உரையாடிய ஒரு மணித்துளியில் எனக்குக் கிடைத்தது. அவர் இராணுவத்தில் நல்ல பொறுப்பில் பணியாற்றியவர். உலகம் சுற்றிப் பார்த்தவர். தெளிவாகப் பேசினார்.

"எங்களைவிடவும் இந்தியர் நீங்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள். இது எனக்குப் பெரும் வியப்பாகவே இருக்கிறது. எங்களவர் உங்கள் மண்ணை விட்டு வெளியேறி வந்து இவ்வளவு காலம் ஆனபின்பும் அது எப்படி உங்களால் முடிகிறது?" என்று ஒரு கொக்கியைப் போட்டார்.

"இப்போதும் நாங்கள் உங்கள் மொழியை ஒரு பாடமாகப் படிக்கிறோம். இப்போதும் எங்கள் நாட்டில் எங்கள் மொழியைப் பேசுவோரைவிட உங்கள் மொழியைப் பேச முடிந்தோருக்குத்தான் பொது இடங்களில் மரியாதை - பணியிடத்தில் முன்னேற்றம் - அதிகம் சம்பாதிக்க வாய்ப்பு - எல்லாம் இருக்கிறது" என்றேன்.

"வியப்பாக இருக்கிறது. ஏன் அப்படி? உங்கள் மொழிகளைக் காக்க வேண்டியது உங்கள் கடமைதானே! உங்கள் மொழிகளில் படிப்பதுதானே உங்களுக்கு எளிதாக இருக்க வேண்டும்?!" என்றார். "இந்தியாவுக்கும் பல முறை சென்றிருக்கிறேன். இந்தியர்கள் ஏன் இங்கிலாந்து வந்து குடியேறுவதை இன்னமும் பெரிதாக நினைக்கிறார்கள்?" என்றும் கேட்டார்.

நம் அறிவுக்கெட்டிய அளவுக்கு என்ன சொல்ல முடியுமோ அதைச் சொன்னேன். ஆனால் இந்த உரையாடல் இன்றுவரை மனதுக்குள் சுழன்று கொண்டேதான் இருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் பிழைப்புக்காக மட்டும் தமிழ் தமிழ் என்று கூப்பாடு போடுகிற மனிதர்களின் மீதான வெறுப்பை நாம் தமிழின் மீது காட்டப் பழகிவிட்டோம். அவர்களைப் பிடிக்காதவர்கள் அவர்களை வெறுக்கச் சொல்லிக் கொடுக்காமல் அவர்கள் தமக்குப் பிடித்தது போல் காட்டிக் கொள்கிற தமிழை வெறுக்கச் சொல்லிக் கொடுக்கிறார்கள். தாய்மொழியை மட்டுமே படிப்பேன் என்பது குறுகிய மனப்பான்மை என்பது நியாயமாகத்தான் படுகிறது. ஆனால் அதைத்தான் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுமே சொல்கின்றன. இந்தியாவில் மட்டும் ஏன் அது குறுகிய மனப்பான்மையாகப் பார்க்கப் படுகிறது?! தாய்மொழியை மட்டுமே படித்தால் முன்னுக்கு வரமுடியாது என்பது சரியே. அது இந்தியாவில் மட்டுமே சரி. அதற்கான காரணங்கள் பல. ஏனென்றால் நாம் மட்டுமே நம் பொருளாதாரத்தை ஆங்கிலம் பேசுகிற நாடுகளை நம்பிக் கட்டிக் கொண்டிருக்கிறோம். நாம் மட்டுமே நம் மொழிகளைச் சாக அனுமதித்துக் கொண்டு இருக்கிறோம். இன்றைய சூழ்நிலையில் வேற்று மொழிகளைக் கற்றல் முக்கியம் என்பது பரந்த சிந்தனை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது போலவே, அகன்ற சிந்தனை எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு ஆழ்ந்த சிந்தனையும் முக்கியம், அதே அளவுக்குத் தொலை நோக்குச் சிந்தனையும் முக்கியம் என்பதையும் உணர வேண்டும். நாம் நமக்கான அடையாளம் எதுவோ அதைப் பற்றிக் கொண்டுதான் நம் திட்டங்களை வகுக்க வேண்டும். நம்மால் முடியாத காலத்தில், சார்ந்து வாழ்தல் - ஒட்டி வாழ்தல் எல்லாம் சரிதான். அது எல்லாக் காலத்திலும் சரிப்பட்டு வராது. அதைக் கணக்கில் கொண்டு நம் மொழிக் கொள்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் யோசித்துத்தான் அறிஞர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கிறார்கள். அது ஒட்டு மொத்தச் சமூகத்தையும் அதன் எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு சொல்வது. முழுக்க முழுக்கத் தற்சிந்தனை நிறைந்த பிழைப்புவாதிகள் நமக்குப் புரிபடச் சிரமந்தான்!

அடுத்த வியப்பு - இந்தியாவில் பல இடங்களில் ஆங்கிலம் தெரியாதவர்களைக் கேவலமாகப் பார்க்கும் நிலை உள்ளது. ஆனால் இங்கோ அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை. பல சூழ்நிலைகளில் இதைப் பார்த்திருக்கிறேன். 'எனக்கென்ன அவர்களுடைய மொழி தெரிந்தா இருக்கிறது. அப்புறம் ஏன் அவர்களுக்கு என் மொழி தெரியாததற்கு மட்டும் நான் கோபப்பட வேண்டும்?!' என்பது போல நடந்து கொள்வார்கள். முக்கியமாக கிழக்கு இலண்டனில் ஆங்கிலமே பேசத் தெரியாத மத்தியக் கிழக்கர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். அப்போதுதான் வந்து இறங்கியிருப்பார்கள் போலும். ஒருமுறை கடையில் வேலை செய்கிற பையன் ஒருத்தன் ஒரு சொல் கூட ஆங்கிலத்தில் பேச முடியாமல் திணறினான். வந்தவர்கள் அதை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். 'என் ஊரில் என் பணத்தைப் பங்கு போட வந்திருக்கிறாய்! நீதானே என் மொழியைப் படிக்க வேண்டும்?!' என்கிற கோபம் துளியும் தெரியவில்லை. எல்லோருமே அப்படி நடந்து கொள்வார்களா என்று தெரியவில்லை. ஓரிருவர் கூட அப்படி நடந்து கொள்வது வியப்புதானே!

அது போல அவர்களுடைய மொழியை என்ன பாடு படுத்தினாலும் அதைச் சீரணித்துக் கொள்கிற பக்குவமும் அவர்களிடம் இருக்கிறது. உலகம் முழுக்க இருக்கிற எல்லோரும் பேசுவது என்றால் சும்மாவா? அதெல்லாம் இருக்கத்தானே செய்யும்?! உடன் பணிபுரிகிறவரில் ஆங்கிலேயர் ஒருத்தர், ஒருமுறை கணிப்பொறியில் மின்னஞ்சல் அனுப்பும் போது ஒரு சொல்லை வேறு விதமாகச் சுளுக்கி எழுதினார். அதில் தவறு இருப்பதாகச் சிவப்புக் கோடு போட்டுக் காட்டியது. உடனே, "என்ன பைத்தியக்காரத்தனம்! என் மொழி வாழும் மொழி!" என்று கூறி அந்தத் தவறையே தவறாக்கினார். இந்தியாவில் இருக்கும் போது நிறையப் பேர் இது போலச் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அவர்களில் ஒருவரே சொல்லி, ஒரு சொல்லுக்கு இன்னொரு புதிய உருவம் கொடுத்ததை நேரில் பார்க்கும் போது அது ஒரு வேறுபட்ட அனுபவமாக இருந்தது. விதிமுறைகளைப் பிடிவாதமாகக் கடைப்பிடிப்பதிலும் நல்லது இருக்கிறது; வளைந்து கொடுத்துப் போவதிலும் நல்லது இருக்கிறது. வளர்கின்ற மொழி எப்படி வளைந்தாலும் பிரச்சனையில்லை; அழிகின்ற மொழி அதிகம் வளைந்து கொடுத்தல் நல்லதில்லை என்று கொள்வதா அல்லது வளைந்து கொடுக்கும் மொழிதான் வளரும்; அடம் பிடிக்கும் மொழி அழியும் என்று கொள்வதா என்று புரியவில்லை.

தமிழ்நாட்டில் தஷ், புஷ் என்று வடமொழிப் பெயராக வைப்பதில் ஒரு மோகம் இருப்பது போல், இந்தியாவில் இருந்து வந்து இங்கேயே குடியேறிவிடுகிறவர்களிடம் தம் பெயரை ஆங்கிலப் படுத்திக் கொள்வதில் ஒரு ஆர்வம் இருக்கிறது. தமிழ் நாட்டில் பிறக்கும் கிருஷ்ணமூர்த்தி வெளியில் வரும்போது கிருஷ்ணா ஆகிறார். அவரே இந்தியாவை விட்டு வெளியேறும்போது க்ரிஷ் ஆகி விடுகிறார். பாலகிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன் கூட க்ரிஷ்தான் ஆகிறார்கள். அது போல இந்தியப் பெயர்கள் ஆங்கிலமானால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்கிற மாதிரி நிறையப் பெயர்கள் இருக்கின்றன. பத்மநாபன் பாடி/பேடி ஆகவோ, மாதவன் மாடி/மேடி ஆகவோ, ஆனந்தக்குமார் ஆண்டி/ஏண்டி ஆகவோ, கார்த்திகாயினி காத்தி/கேத்தி ஆகவோ மாறிவிடுகிறார்கள்.

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்