இங்கு அரசியல் பேசாதீர்

“பழி தீத்துட்டாய்ங்கடா. குடிய இன்னைக்கு சங்கறுத்துட்டாய்ங்க!” என்றான் தமிழ்க்குடிமோனின் நெருங்கிய பணித் தோழர்களில் ஒருவனான மதுரை.

‘மதுரை’ என்பது அந்த நிறுவனத்தில் - அணியில் நீண்ட காலமாகப் பணிபுரியும் ஒரே மதுரைக்காரனான முத்துவின் பெயர். இடம், பொருள், ஏவல் பொருத்து அவர் ‘மதுரை’ எனவும் ‘முத்து’ எனவும் இருவேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுவார்.

தமிழ்க்குடிமோன்தான் ‘குடி’. நீளநீளமான பெயர்களை இரண்டு-மூன்று எழுத்துக்களுக்குள் சுருக்கிவைத்துக்கொள்வது அவனுடைய அலுவலகத்தில் மட்டுமல்ல, வெளிநாட்டுக்காரர்களோடு அதிகம் பணிபுரியும் அது போன்ற எல்லா நிறுவனங்களிலுமே இருக்கும் பழக்கம்தான்.

‘தமிழ்க்குடிமகன்’ என்பதுதான் ‘தமிழ்க்குடிமோன்’ என்று மருவி மாறியிருந்தது. மருவலுக்கான மாபெரும் காரணம் தலைவனின் மலையாள மோகம். மலையாள மோகம் என்பது அம்மொழியின் மீதானது என்பதைக் காட்டிலும் அம்மொழி பேசும் மக்கள் மீதானது. மக்களிலும் குறிப்பாகப் பெண்குட்டிகள் மீதானது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லைதானே! காலம்காலமாகவே தமிழ்க்குடிமகன்களுக்கு மலையாளக்குடியின் மோன்களைவிட மோள்கள் மீது படிந்து படர்ந்திருக்கும் பாசம் இயல்பானதுதானே! மோன்களைக் கண்டாலே கசக்கும் தமிழ்ப் பிள்ளைகளுக்கே கூட மோள்களைப் பிடித்துத்தான் போய்விடுகிறது.

‘தமிழ்க்குடிமகன்’ என்பதுமே கூட அவனது இயற்பெயர் இல்லை. அவனுடைய தமிழார்வம் காரணமாகவும் ஆங்கிலம் அவனுக்குச் சரியாக வராது என்பதாலும் அவனுடன் பணிபுரியும் தமிழ் நண்பர்கள் அவனுக்கு வைத்த பெயர் அது. அவனுடைய அலுவலகத்தில் தமிழர்கள்தான் அதிகம். பெங்களூரில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பலவிதமான நிறுவனங்கள் இருக்கின்றன. பெங்களூரைப் போலவே எல்லா மாநிலத்தவரும் கலந்து இருக்கும் நிறுவனங்களும் இருக்கின்றன, பெங்களூரில் உள்ள சில பகுதிகளைப் போல தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் - அதிகாரம் செய்யும் நிறுவனங்களும் இருக்கின்றன, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், வடக்கர்கள் என்று வேறு குழுவினர் நிறைந்திருக்கும் - அதிகாரம் செய்யும் நிறுவனங்களும் இருக்கின்றன.

‘தமிழ்க்குடிமோன்’ என்பது மற்ற மொழி பேசும் நண்பர்களுக்குச் சொல்வதற்கு அவ்வளவு எளிதாக இல்லாததால் ‘குடிமோன்’ என்று சுருக்கப்பட்டு, அதுவும் நீளமாக இருக்கிறது என்று ‘குடி’ என்று மேலும் சுருக்கப்பட்டது வரலாறு. அது நிலைத்து நிற்பதற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் அவர்கள் நிகழ்த்தும் கூடுகைகளில் அவன் குடிக்கும் அளவும் அழகும் மேலும் ஒரு காரணமாகிப் போனது. இப்படி ஒரு தனிமனிதனின் பெயருக்கே இவ்வளவு நீண்ட வரலாறு இருக்கிறது என்பது அந்த நிறுவனத்தையும் அங்கு பணிபுரிந்த தமிழர்களையும் பற்றி ஆராய்ச்சி செய்யப் போகும் நாளைய தலைமுறைத் தமிழர்களுக்கு எவ்வளவு பெரிய வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கப் போகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லைதானே!

கடந்த சில மாதங்களாக அவனுக்குக் கெட்ட நேரம் தொடங்கிவிட்டது என்று எல்லோருமே பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வேலையைவிட்டே தூக்கிவிடுவார்கள் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை.

அவனுடைய தாத்தா காலம் முழுக்க ஒரு வேலைதான் செய்தார். அவனுடைய அப்பாவும் ஒரே வேலைதான் செய்தார். அவன் வேலைக்குச் சேர்ந்து மூன்றாம் ஆண்டே முதல் வேலையைவிட்டு விலகி வேறொரு நிறுவனத்தில் சேர்ந்த போது குடும்பமே அதிர்ச்சிக்கும் வியப்புக்கும் உள்ளானது. அவனுடைய தாத்தா இருந்திருந்தால் அதைக் கடுமையாக எதிர்த்திருக்கவும் கூடும். அவனுடைய தந்தையும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் இருந்தார். இருந்தாலும் வெளி உலகில் கேள்விப்பட்டதை வைத்து இந்தத் தலைமுறையில் இது சாதாரணமாக நடப்பதுதான் என்ற முடிவுக்கு வந்திருந்தது மட்டுமல்லாமல், தன் மகனும் கூடிய விரைவில் ஒரு நாள் இந்தச் செய்தியோடு வந்து நிற்பான் என்று எதிர்பார்த்தும் இருக்கத்தான் செய்தார். தாத்தா, தந்தை மட்டுமில்லை. அவனுமே கூட அவ்வளவு விரைவில் அந்த நாள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் வேலைக்குச் சேர்ந்த நாள் முதலே வாராவாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் யாரோ புதிதாக வந்து பணியில் சேர்வதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாரோ சிலர் பணியைவிட்டுச் செல்வதுமாக இந்தப் புதிய பண்பாடு ஓரளவுக்குப் பழகித்தான் போயிருந்தது. திங்கட்கிழமைகளில் நமக்குப் புதிய நண்பர்கள் கிடைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் வெள்ளிக்கிழமைகளில் நம் நெருங்கிய நண்பர்கள் எவர் எவருக்குக் கடைசி நாள் என்று கணக்கிடுவதும் புதிய வாழ்க்கை முறையின் ஒரு பங்காகி இருந்தன. அப்படி வேலையைவிட்டுச் செல்வோரின் புண்ணியத்தில்தான் அந்த வெள்ளிக்கிழமைக் குடியும் கொண்டாட்டமும் நடந்து முடியும்.

படித்து முடித்து, மாவட்டத் தலைநகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போய் பதிந்து வைத்துவிட்டு, பல ஆண்டுகள் வேலையில்லாமல் ஊர் சுற்றித் திரிந்துவிட்டு, ஏதோவொரு வேலை கிடைத்தபின் அந்த நிறுவனத்துக்கும் முதலாளிக்கும் அல்லது அரசாங்கத்துக்குக் காலமெல்லாம் விசுவாசத்தோடு உழைத்துவிட்டு, பணி ஓய்வு பெறும் போது அதற்கொரு பாராட்டு விழாவெல்லாம் நடத்தி, ஊருக்கே சோறு போட்டுக் கொண்டாடி விடைபெறுகிற தலைமுறையின் பிள்ளைகள் எல்லோருக்குமே, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சினிமாக் கொட்டகையில் படம் மாற்றுவது போல வேலை மாற்றிக்கொண்டு போகும் வாழ்க்கை முறைக்குள் வந்தவுடன் உண்டான அதிர்ச்சி அவனுக்கும் இருக்கத்தான் செய்தது. பின்னர் அதுவே பழகிப் போய்விட்டது என்றாலும் முதல் முறை அப்படி அவனுடைய நாள் வந்த போது அவனுக்கு அது சிரமமாகத்தான் இருந்தது.

முதலாளி என்றாலே எந்த நேரமும் கடுகடுவென்று மூஞ்சியை வைத்துக்கொண்டு இருப்பார், மூச்சு கூட அவர் இல்லாத நேரத்தில்தான் விடமுடியும் என்று எண்ணிக்கொண்டிருந்த காலம் போய், தன் தந்தை வயதைவிட மூத்தவர் போலத் தெரிந்த தன் நிறுவன முதலாளியை அங்கிருக்கிற எல்லோருமே பெயர் சொல்லித்தான் பேச வேண்டும் என்று கேள்விப்பட்ட பொழுதின் அதிர்ச்சி பழையதாகிப் போனாலும் அதன் நினைவு அப்படியேதான் இருக்கிறது. அது மட்டுமில்லை, அவரை “முதலாளி” என்பதே தவறு என்றும் சிரித்துத் திருத்துவார்கள் எல்லோரும். அவரிடம் பேசும் போது அப்படி அழைக்க மாட்டான். ஆனால் அவர் பற்றிப் பிறரிடம் பேசும் போது அப்படிச் சொல்வான். அவ்வளவுதான். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் நடுவில் பல அடுக்குகள் இருப்பதும், அப்படியான ஒவ்வோர் அடுக்கிலும் உள்ள ஒவ்வொரு தொழிலாளியும் தனக்குக் கீழே இருக்கிற தொழிலாளிகளிடம் தானும் ஒரு முதலாளி போலவே நடந்துகொள்வதும், ஆனாலும் அவர்களை ஒரு நண்பன் போலப் பெயர் சொல்லி அழைக்க முடிவதும், முதலாளி தவிர்த்து எல்லோருமே தன்னைப் போலவே இளைஞர்களாக இருப்பதும், இதற்கெல்லாம் நடுவில் முதலாளியே தானும் ஒரு தொழிலாளி போல நடந்துகொள்வதும், முதலாளி உட்பட அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து மொட்டைமாடியில் போய் நின்று வானத்தைப் பார்த்துப் புகைப்பிடிக்க முடிவதும் அப்படி அதிர்ச்சியாக இருந்து வியப்பாக மாறி அப்படியே மெதுமெதுவாகப் பழகிப்போன பழக்கங்கள் ஆனவையே.

இப்படிப் புதிய புதிய பழக்கங்களையும் அதிர்ச்சிகளையும் அறிமுகப்படுத்திக்கொண்டேதான் இருந்தது புதிய வாழ்க்கை. அப்படித்தான் ஒரே நாளில் ஒருவரை வேலையைவிட்டுத் தூக்கிவீசிவிடும் பழக்கமும் அறிமுகமானது அவர்களுக்கு. முதன்முதலில் அப்படி ஒருவர் நீக்கப்பட்ட போது அங்கிருந்த எல்லோருக்குமே அது பேரதிர்ச்சியாக இருந்தது. கிராமத்துப் படங்களில் கொலை செய்துவிட்டுச் சிறை சென்று விடுதலையாகி வெளியே வரும் வில்லனைப் பற்றிப் பாமர மக்கள் குசுகுசுத்துக்கொள்வது போல, ஒவ்வொருத்தரும் அங்குமிங்கும் நடந்து போய் மற்றவர்களிடம் அது பற்றிக் குசுகுசுத்துக் கொண்டார்கள். பின்னர் அதுவும் பழகித்தான் போனது.

“ஆறு மாதங்கள் வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தவனுக்கு, இவ்வளவு நல்ல சம்பளத்தைக் கொடுத்து, நல்ல மரியாதையையும் கொடுத்து, அழகு பார்த்த இந்த நிறுவனத்தையே அதன் அருமை புரியாமல் ஏமாற்றப் பார்த்தானே, அவனுக்கு இதைவிட என்ன செய்துவிட முடியும்?” என்று தொடங்கி, “நாம் ஏதோ விசுவாசமாக இருப்பது போல நம் நிறுவனம் மட்டும் நம்மிடம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமே!” என்றாகி, “விசுவாசத்துக்கு இங்கே என்ன இருக்கிறது? உன்னால் அவர்களுக்குப் பயன் இருக்கும்வரை அவர்கள் உன்னை வைத்துக்கொள்ளப் போகிறார்கள். அவர்களால் உனக்குப் பயன் இருக்கும்வரை அவர்களோடு நீ இருக்கப் போகிறாய். இருவருக்குமே ஒருத்தொருக்கொருத்தர் பயன் உள்ளவர்களாக இருக்கும்வரைதான் இது தொடர்வதில் பொருள் இருக்கிறது. இது வியாபாரம். இங்கே உணர்ச்சிகளுக்கெல்லாம் இடம் இல்லை” என்று முடிந்தது. இது அவன் கண் முன்பே நடந்த மிகப்பெரும் பண்பாட்டு மாற்றம். அவன் நுழையும் போது அவனுடைய கிராமம் போல இருந்த நிறுவனம் மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு மாநகரம் போலாகி அப்படியே வேறொரு மேற்கத்திய நாடு போல் ஆகிவிட்டிருந்தது. இங்கிருந்து சிறிது சிறிதாக மனிதர்கள் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டுப் பயணப்பட்டுத் திரும்பத் திரும்ப இங்கே இருந்த பண்பாடு வேகவேகமாக மாறிக்கொண்டிருந்தது.

பின்பொரு காலத்தில், “உலகம் முழுக்கவே பொருளாதாரம் படுத்துவிட்டது, அதனால் வியாபாரம் சரியாக ஓடவில்லை, எனவே மொத்தமாக ஒரு பத்து விழுக்காடு தலைகளைத் துண்டிக்கப் போகிறார்கள்” என்று பேச்சு வந்தது. அதன்படியே நடக்கவும் செய்தது. இது எல்லா நிறுவனங்களிலுமே நடந்தது. அப்படித் துண்டிக்கப்பட்ட தலைகள் அனைத்துமே திறமை மற்றும் பணி சார்ந்த செயல்பாடுகளின் அடிப்படையிலேயே துண்டிக்கப்பட்டதாகச் சொன்னாலும், அதிலும் எத்தனையோ விதமான இழிவான அரசியல்கள் இருக்கத்தான் செய்தன. ஒரு வேலையும் ஒழுங்காகச் செய்யாவிட்டாலும் சிலரை எதற்காகவோ நிர்வாகத்துக்குப் பிடித்துவிடுகிறது. எவ்வளவுதான் திறமையாக இருந்தாலும் சிறப்பாகப் பணியாற்றினாலும் சிலரை நிர்வாகத்துக்குப் பிடித்தே தொலைவதில்லை. இதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அப்படி வேலையும் ஒழுங்காகச் செய்யாமல் நிர்வாகத்துக்கும் பிடிக்கிற மாதிரி நடந்துகொள்ளாமல் இருந்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும் வடிகட்டி வீசப்பட்டார்கள். அதிலும் ஏதோதோ உறவுகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தி வேலையைக் காப்பாற்றிக் கொண்டவர்களும் உண்டு.

அதன் பின்பு அடிக்கடி அது போலப் பணி நீக்கங்கள் நடைபெற்றன. அது ஒரு வழக்கமாகவே மாறியிருந்தது. “அமெரிக்காவில் எல்லாம் இது மிகச் சாதாரணம். வெள்ளிக்கிழமை நாலு மணிக்கு வந்து ஒரு பிங்க் ஸ்லிப்பில் இந்த நிமிடம் முதல் உன் சேவை எங்களுக்குத் தேவையில்லை என்று எழுதிக் கொடுப்பார்கள். அப்படியே கணிப்பொறியை இழுத்து மூடிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட வேண்டியதுதான். பேசுவதற்கே எதுவுமில்லை” என்றெல்லாம் கதை சொல்வார்கள். ஆனால் இங்கோ ஒரு வேலையும் இல்லாவிட்டாலும் சேரும் போது ஒப்புக்கொண்டபடி ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் முழுக்கவும் இருந்து உழைத்துக் கொட்டிவிட்டுதான் போக வேண்டும் என்கிறார்கள். அதுவும் அந்த இரண்டு மாதங்களில்தான் எவருக்கும் செய்யப் பிடிக்காத வேலைகளையெல்லாம் செய்யவைத்துத் துன்புறுத்துவார்கள். இங்கிருப்பவர்களுக்கு அங்கே மட்டும் எப்படி ஒரே நிமிடத்தில் எல்லாமே முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடிகிறது என்று வியப்பாகத்தான் இருக்கும். ஒரு வேளை அங்கே யாரும் வேலையே செய்ய மாட்டார்களோ என்னவோ! “கணிப்பொறியில் செய்தி மட்டும் வாசிப்பதற்காக வேலைக்கு வருகிறவன் அதை அப்படியே இழுத்து மூடிவிட்டுப் போனால் என்ன பெரிதாக ஆகிவிடப் போகிறது! வீட்டில் போய் மிச்சத்தைப் படித்துக்கொள்ளப் போகிறான்!!” என்றும் வேடிக்கையாகப் பேசிக்கொள்வார்கள் இங்கே இருப்பவர்கள்.

அப்படியான பல கண்டங்களைத் தாண்டி வந்தவன்தான் அவன். ஒவ்வோர் ஆண்டும் சம்பள உயர்வும் பதவி உயர்வும் பெற்று வந்திருக்கிறானே ஒழிய, ஒரு போதும் வேலையைவிட்டுத் தூக்கப்படும் இடத்தில் இருந்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் அது போன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதும் அப்படியே தன்னைத் தூக்குவதாக இருந்தால் கூட கடைசியாகத் தூக்கப்படப் போகும் ஆட்களில் ஒருவனாகத்தான் தான் இருப்பேன் என்றுதான் அவன் எண்ணுவான். அதற்குக் காரணம், அவன் கடும் உழைப்பாளி. மாடு போல உழைப்பான். ஒருவரை வாடிக்கையாளருக்குப் பிடித்துவிட்டால் அதன் பின்பு நிறுவனத்தில் பேச்சுக்கே இடமில்லை. அப்படியானவர்கள் இயல்பாகவே இங்கும் செல்லப்பிள்ளை ஆகிவிடுவார்கள். அப்படியான ஒருவன்தான் நம் குடி.

தமிழ்வழி தவிர வேறு எந்த வழியிலும் படிக்க வாய்ப்பில்லாத ஓர் ஊரில் வாழும் தமிழாசிரியரின் மகன் என்பதால், பள்ளிக்கல்வி முழுக்கத் தமிழ் வழியிலேயே படித்தான். “வாத்தியார் பிள்ளை மக்கு” என்று சொல்லிக்கொண்டிருந்த ஊரில் அதைத் தவறென்று நிரூபித்த நாலாவது வாத்தியார் மகனாக பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று, “தரம் என்றாலே தனியார்தான்” என்று சொல்லிக்கொண்டு பொறியியல் கல்லூரி என்றால் மட்டும் அது தலைகீழாகி விடும் நாட்டில், ஆசைப்பட்டபடியே அரசுப் பொறியியல் கல்லூரியில் இடம் பிடித்து, கணிப்பொறிக்குத் தொடர்பே இல்லாத கட்டுமானத் துறையில் படித்து, முதல் இரண்டு ஆண்டுகள் ஆங்கிலம் வராமல் சிரமப்பட்டு, ஆயினும் நன்றாகப் படித்து முடித்து வெளியேறி, அப்போதைய நிலவரப்படி தன் நண்பர்கள் எல்லோரையும் போலவே அவனும் கணிப்பொறித் துறைக்குள்ளேயே நுழைந்தான். படிப்பில் போலவே வேலையிலும் ஆங்கிலம் பாடாய்ப் படுத்தியது. ஒரு வேளை தன்னையும் வேலையைவிட்டுத் தூக்கும் நிலை என்று ஒன்று வந்தால் அதற்கு இருக்கப் போகும் ஒரே காரணம், தான் பேசும் - அல்லது தன்னால் ஒழுங்காகப் பேச முடியாத - ஆங்கிலமாகத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொள்வான். தன் தமிழாசிரியத் தந்தையையும் அவர் வழிபடும் அரசியல் தலைவர்களையும் சபித்துக்கொள்வான். பின்னர் ஆங்கிலவழியில் படித்துவிட்டு வந்து தன் அளவுக்குக் கூடப் பேச முடியாமல் தடுமாறும் வெளிமாநிலத்து நண்பர்கள் சிலரைப் பார்த்து, ‘இவர்கள் யாரைப் போய்ச் சபிக்க முடியும்!’ என்று எண்ணித் தேற்றிக்கொள்வான்.

இத்தோடு நான்கு நிறுவனங்களில் பணி புரிந்துவிட்டான். அதிலும் கடைசியாகப் பணிபுரிந்த நிறுவனம் ஒரு நிறுவனத்துக்குள்ளேயே பல நிறுவனங்கள் இருக்கிற மாதிரிப் படுகிற அளவு பெரிய நிறுவனம். இதுவரை பல விதமான குழுக்களில் பணி புரிந்திருக்கிறான். பல நூறு மனிதர்களுடன் பணி புரிந்திருக்கிறான். மொழிவாரியான குழு அரசியல் செய்பவர்கள், சாதி அடிப்படையில் குழு அரசியல் செய்பவர்கள், பொறுக்கித்தனம் செய்வதற்காகவே படித்துப் பட்டம் விட்டுத் தினமும் பணிக்கு வந்து கொண்டிருப்பவர்கள் என்று விதவிதமான மனிதர்கள். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் வேலையைவிட்டுத் தூக்கப்படும் அளவுக்கு பலவீனமான நிலையில் இருந்ததாக உணர்ந்ததே இல்லை. ஆனால் இன்று அவனுக்கே அது நிகழ்ந்திருக்கிறது.

பிற்காலத்தில் வெளிநாட்டில் போய் வேலை பார்க்கும் காலம் வந்தால், அப்போது வெள்ளிக்கிழமை மாலை நாலு மணிக்கு பிங்க் ஸ்லிப் பெறும் நிலை வந்தால் கூட அதற்கெல்லாம் உடைந்துவிடக் கூடாது என்று அதற்கும் மனதைத் தயார்படுத்தி வைத்திருந்தான் என்றாலும், இவ்வளவு சீக்கிரமாக இந்தியாவிலேயே அது நடக்கும் என்று நேற்றுவரை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை அவன். அதற்கான எந்த அறிகுறியும் அவனுக்கு இருக்கவில்லை. அதற்கான அறிகுறிகளை அவன் கவனிக்கவில்லை என்றும் சொல்லலாம். இன்று நடந்துவிட்டது.

அகரன் அவன் பெயர். இதுதான் இயற்பெயர். கோவில் நுழைவே சாத்தியமில்லாத காலத்தில் - சமூகத்தில் பிறந்த பிள்ளை என்பதால், அதை ஓர் அநீதியாகப் பார்க்கும் அளவுக்குப் படிப்பறிவு இருந்ததால், அவன் தாத்தா கடவுள் நம்பிக்கையற்றவராக இருந்தார். அந்தத் தாத்தாவின் பிள்ளை தமிழாசிரியர். தன் தந்தை கடவுள் நம்பிக்கையற்றவர் என்பதாலும், தான் தமிழ் படித்ததாலும், பின்னர் ஆசிரியர் ஆனதாலும், இவருக்கு ஒரு குறிப்பிட்ட அரசியற் கட்சி மீது அதீத ஈடுபாடு உண்டு. ஆசிரியர் - அரசு ஊழியர்களின் நலம் பேணும் கட்சி என்று அவரும் அவரின் தோழர்கள் அனைவரும் நம்பும் கட்சியில் உறுப்பினர் ஆகாமலேயே அதை உறுப்பினர்களைவிடத் தீவிரமாக ஆதரிப்பவர். “வாத்திமாருக்குப் பைப்பிருக்கு பம்பில்லை” என்று சொன்னதாலும், அவரையே நிறையப் பேர் “வாத்தியார்” என்று சொல்வதாலும் வாத்தியாரான இவருக்கு ‘வாத்தியாரைச்’ சுத்தமாகப் பிடிக்காது. அந்த வழியில் வந்த அகரனுக்கும் அதே கொள்கைகள் என்று சொல்லிவிட முடியாது. அவனுடைய உலகத்தில் அவன் கேள்விப்பட்ட கதைகள் அவனுடைய தந்தை சொல்லிக்கொடுத்தவற்றுக்கு மாறுபட்டிருந்தன. தமிழ்க்குடிமோன் என்று பெயர் பெற்ற பின்பும் கூட, ‘தேசியக் கட்சிகள் திராவிடக் கட்சிகளைவிட நேர்மையானவை’, ‘எப்போதும் இந்தியாவோடு ஒட்டாமலேயே இருக்கும் தமிழ் நாடு என்பது, தமிழர்களின் நலனுக்கு நல்லதில்லை’, ‘ஊழல்தான் இந்த நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை’, ‘கொள்கையெல்லாம் வெற்று முழக்கம்’, ‘வளர்ச்சி முக்கியம்’ என்பது போன்று இவனுக்கென்று பல நியாயங்கள் வைத்திருந்தான்.

“வாத்தியார் கட்சியில் இருப்பவனெல்லாம் முட்டாப்பயகள்”, “தேசியக் கட்சிகளெல்லாம் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானவை” என்பன போன்று சிறுவயதில் இருந்தே அவனுடைய தந்தை சொல்லி வளர்த்த பல கருத்துக்களில் ஒன்று ஆரிய மாயை என்பது. அதிலும் அவனுக்குப் பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை. அதற்கொரு காரணம், அவனுடைய ஊரில் இருந்த ஐயமார் தெருவில் இருந்த ஆட்கள் அவ்வளவு கொடுமையானவர்கள் இல்லை. அவன் தந்தையுடன் பணிபுரிவோர் பாதிப்பேர் அந்தத் தெரு ஆட்களே. அவர்கள் எல்லோருமே இவனை நன்றாகவே நடத்துவார்கள். அவரையும் நல்ல மரியாதையுடனேயே நடத்துவார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் நிறையப் பேர் இவனுக்கு நல்ல நண்பர்கள். சின்ன வயதில் அவர்கள் தெருவில் ஒரு தனி கிரிக்கெட் அணி அமைக்கும் அளவுக்கு ஆட்கள் இல்லாததால் அந்தத் தெருப் பையன்கள் எல்லோரும் இவன் மூலமாக இவனுடைய தெரு அணியிலேயே சேர்ந்துகொண்டார்கள். இவனுக்கும் மற்ற தெருப் பையன்களைவிட ஐயமார் தெருப் பையன்களை அதிகம் பிடிக்கும். கிரிக்கெட் விளையாடுவது ஒருபுறம் இருந்தாலும், ‘படிக்க வேண்டும், முன்னுக்கு வர வேண்டும், உருப்பட வேண்டும் என்ற சிந்தனைகள் உள்ளவர்கள் அவர்களோடு சேர்ந்ததால்தான் இம்புட்டாவது உருப்பட்டிருக்கிறேன்’ என்றும் எண்ணிக்கொள்வான்.

கல்லூரியில் படித்த காலத்தில் ஏகப்பட்ட அரசியல் பேசுவதுண்டு. இப்போதும் ஊருக்குச் செல்லும் போதும் பழைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேசும் போதும் நிறைய அரசியல் பேசுவதுண்டு. அரசியல் ஆர்வம் என்பது எப்படியோ அவனுக்கு இரத்தத்திலேயே வந்தது போல ஒட்டிக்கொண்டு விட்டது. அரசியல் பற்றிய பேச்சு என்றால் எங்கும் ஆர்வத்தோடு இறங்கிவிடுவான். பல நேரங்களில் பொது இடங்களில் துளியும் முன்பின் தெரியாத அந்நியர்களிடம் கூட அரசியல் பேசியதுண்டு. ஆனால் அவன் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரிடம் எப்போதும் அரசியல் பேசுவதே இல்லை. பேசிய கொஞ்சநஞ்சமும் வெள்ளி மாலைக் கூடுகைகளில்தான். அதிலும் பெரும்பாலும் கவனத்தோடு தன் சார்புகள் வெளிப்பட்டுவிடாதபடிக் கவனமாகப் பேசித் தப்பிவிடுவான். அதுதான் அவன் குடிப்பதில் உள்ள அழகு. எவ்வளவு குடித்தாலும் தன்னினைவு இல்லாத நிலைக்கு அவன் சென்றதே இல்லை. தன்னினைவு தப்பாமல் குடிக்க வேண்டும் என்று அவன் தன்னைக் குடிக்கும் போது கட்டுப்படுத்திக்கொள்வதும் இல்லை.

பெரிதாக வாழ்க்கையில் கொள்கைகள் எதுவும் வைத்துக்கொள்ளாத அவன் இந்த அலுவலகத்தில் அரசியல் பேசும் விஷயத்தில் பிடிவாதமான கொள்கை வைத்துக்கொண்டதற்கான முக்கியமான காரணம், அவன் முதன்முதலில் பணிக்குச் சேர்ந்த நிறுவனத்தில் ஒரு பயிற்சியின் போது சொன்னார்கள் - “பணியிடத்தில் எவருடனும் அரசியலோ மதம் பற்றியோ பேசாதீர்கள். முக்கியமாக வாடிக்கையாளரிடம் பேசும் போது இதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை முழுக்கவும் தொழில் உலகில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்று இது. இதை மீறுவது, உங்கள் எதிர்காலத்துக்கே உலை வைக்கலாம்.” இது அவனுக்கு அவன் இளமைக்காலத்தை நினைவுபடுத்தியது. அவன் சிறுவனாக இருந்த போது, காலையில் அடிக்கடி அவனுடைய தந்தைக்குக் காப்பி வாங்கிவருவதற்காக அவனுடைய ஊரில் இருந்த புளியமரத்துக் கடைக்குப் போவான். அவன் அங்கு செல்லும் போதெல்லாம் வழக்கமாகக் கண்ட காட்சி ஒன்று உலகத்தில் உள்ள எந்தக் காப்பிக் கடைக்குப் போனாலும் அவனுக்கு வந்து செல்வது. அந்த ஏழெட்டு ஆண்டுகளில், சொல்லிவைத்த மாதிரி நான்கைந்து பேர் - அவ்வப்போது தற்காலிகமாக அதில் மாற்றங்கள் இருக்கலாம் - அவை தவிர்த்து அதே நான்கைந்து பேர்தான் - எப்போதும் அமர்ந்து அரசியல் பேசிக்கொண்டிருப்பார்கள். தேர்தல் காலங்களில் சூடு கூடுதலாகப் பறக்கும். மற்ற நேரங்களிலும் கதைகளுக்குப் பஞ்சமிராது. அரை மணி நேரம் முன் பின் சென்ற போதும் அவர்களைப் பார்த்திருக்கிறான். மாலை நேரங்களில் சென்ற போதும் அரசியல் பேச்சுகள் நடப்பதைப் பார்த்திருக்கிறான். காலையில் பார்த்த நான்கைந்து பேரில் ஓரிருவர் இருப்பர். மாலை புதிதாக ஒரு சிலரும் இருப்பர். காலை அளவு மாலை இராது. காலை செய்தித் தாட்கள் வந்தவுடன் சுடச்சுட ஆராயப்படுவது போல, மாலை வானொலிச் செய்திகளின் அடிப்படையில் செய்யப்படும் அலசல்கள் இருந்ததில்லை எனலாம். பின்னர் ஒரு காலத்தில் - எப்போதும் அவனுக்குக் காப்பி போட்டுக் கொடுத்த புளியமரத்துக் கடையின் மூத்த மகன் திருமணமாகி, தனிக்குடித்தனம் சென்று, தனிக்கடை போட்டு, அடுத்த மகனும் அவர்க்கடுத்த மகனும் காப்பி போடத் தொடங்கியிருந்த காலத்தில் - வானொலியின் இடத்தில் தொலைக்காட்சி வந்து இறங்கியிருந்தது. ஒருவகையில் இவர்கள்தான் இன்றும் அவனுக்கிருக்கும் இந்த அரசியல் ஆர்வத்துக்குக் காரணமோ என்று தோன்றும். ஒரு நாளும் காலையும் மாலையும் அங்கு கூடி அரசியல் பேசியவர்கள் பேச்சு முற்றி அடித்துக்கொண்டது கிடையாது. அவர்களுக்குள் சிறிய பகை கூட எழுந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் அவனுடைய ஊருக்கு ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற அவனுடைய மாமா ஊருக்குப் போகும் போது முற்றிலும் வேறுபட்ட ஒரு காட்சி பார்த்திருக்கிறான். அங்குள்ள காப்பிக் கடைகள் அனைத்திலுமே சொல்லி வைத்தாற் போல், பிழைகளை மட்டும் மன்னித்துவிட்டுப் பார்த்தால், ‘இங்கு அரசியல் பேசக்கூடாது’ என்றுதான் ஓர் எழுத்துக்கூடப் பிசகாமல் எழுதிப் போட்டிருப்பார்கள். ஒரேயொரு கடையில் - அந்த ஊரிலேயே பெரிய கடையில் - அதையும் அச்சடித்த தகடு ஒன்றில் - அருகில் ஓர் ஆண்மகன் வாயில் சுட்டுவிரலை வைத்து, “ஷ்… பேசாதே...” என்று தடுக்கிற மாதிரியான அழகான படத்துடன் “இங்கு அரசியல் பேசாதீர்” என்று அச்சிட்டிருக்கும் - ஆணியிலேயே அடித்திருப்பார்கள். அப்படியானால் இன்னும் பெரிய ஊருக்குப் போனால் இதைப் போல ஆணியடித்து ஒட்டியிருக்கும் அச்சுத் தகடுகளை நிறையவே பார்க்க முடியும் போல என்று தோன்றியது அவனுக்கு. அதைப் பார்த்துவிட்டு மாமாவிடம் விசாரித்த போதுதான் அந்த ஊரில் காப்பிக் கடையில் அரசியல் பேசி நிகழ்ந்துள்ள வன்முறைகள் பற்றி விளக்கினார்.

“இங்கயும் இப்படி எழுதிப் போடாத கடை ஒன்னு இருக்கு. ஆனா அங்கெல்லாம் நம்மள மாதிரி ஆளுக போக முடியாது. கெழக்க உள்ள ஊர்க்காரன். அவனே பெரிய சல்லிப்பய. அவந்தான் ஒரு தடவ கடைக்கு வந்த வாடிக்கையாள் ஒருத்தர அரசியல் பேசி, பேச்சு முத்தி, அடிச்சுப் போட்டான்னு சொல்வாக. அவனுக்குப் பிடிச்ச மாதிரிப் பேசுறவுக மட்டும் பேசிக்கிறலாம் போல!” என்று அவனைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தவராகப் பேசி முடித்தார்.

இதற்குப் பின்புதான் அரசியல் எவ்வளவு கொடூரமான எல்லைகளுக்கெல்லாம் செல்லக்கூடியது என்று ஓரளவுக்குப் புரிந்தது அவனுக்கு. முதல் நிறுவனத்தில் நடந்த பயிற்சியில் அன்று அவர்கள் “இங்கு அரசியல் பேசாதீர்” என்று சொன்ன போது, அவனுக்குத் தன் சொந்த ஊரில் உள்ள புளியமரத்துக் கடையும் அவனுடைய மாமா ஊரில் இருந்த காப்பிக் கடைகளும் நினைவுக்கு வந்தன. ‘அப்படியானால் உலகம் நம் மாமா ஊர் போலத்தான் உள்ளது. நம்மூர் போல இல்லை’ என்று எண்ணிக்கொண்டான். அந்த ஓரிரு நாட்களில் இது பற்றி ஆழமாக நிறையச் சிந்தித்தான். ‘என் ஊரும் நானும் வெளி உலகத்தைவிட முற்றிலும் மாறுபட்டவர்கள்; இந்த உலகத்தில் வெற்றிபெற என்னுள் இருக்கும் என்னையும் என் ஊரையும் கழற்றிப் போட்டுத்தான் ஆக வேண்டும் போல’ என்று ஒருவிதமான அடையாள நெருக்கடிக்குள் எல்லாம் சென்று வெளியேறினான்.

அவனுக்கு இந்த வேலை முக்கியமானது. இதில் தொடர்ந்து வளர வேண்டியதும் இந்த வேலையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியமானது. தன் தாத்தா கொடுத்த வாழ்க்கையைத் தமிழாசிரியராக அதற்கடுத்த இடத்துக்கு எடுத்துச் சென்ற தன் தந்தை தனக்களித்திருக்கும் இந்தப் பெங்களூர் வாழ்க்கையை இதற்கடுத்த இடத்துக்கு எடுத்துச் சென்று தன் பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டியது தன் கடமை என்று நம்புபவன் அவன். பல பகல்-இரவுகளாக இது பற்றிச் சிந்தித்து இந்த முடிவுக்கு வந்து சில ஆண்டுகள் முன்புவரை இதைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தவன் திடீரென்று ஒரு பொழுதில் அதைக் கைவிட்டான்.

சின்ன வயது ஐயமார் தெரு நண்பர்கள் முதல் இன்றுவரை, வாழ்க்கை முழுக்கவும் அவன் புத்திசாலி என்று எண்ணிய எல்லோருமே “எனக்கு அரசியல் பிடிக்காது” என்று சொல்பவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். ‘இவர்களுக்கெல்லாம் பிடிக்காத மாதிரித்தானே நம் அரசியல் இருக்கிறது! இதெல்லாம் என்று மாறுமோ! அன்றாவது இவர்களோடு அமர்ந்து அரசியல் பேசும் வாய்ப்பு கிட்டுமே!’ என்றெல்லாம் கனவு கண்டிருக்கிறான். அப்படியான ஒரு காலம் வந்தது. அது எப்படி இருந்தது? அரசியலை அவ்வளவு பிடிக்காமல் இருந்த இவர்களுக்கெல்லாம் திடீரென்று ஒரு நாள் எது இப்படியான புத்தார்வத்தைக் கொண்டுவந்தது? இன்று இவ்வளவு மூர்க்கமாக அரசியல் பேசும் இவர்களுக்கு முதலில் அது பிடிக்காமல் இருந்ததற்கு அவர்கள் கொண்டிருந்த காரணம் என்ன?

ஒரு தேர்தல்தான் எல்லாத்தையுமே புரட்டிப் போட்டது போலத் தெரிகிறது. அதற்குப் பிறகு படித்தவர்கள் நிறையப் பேர் அரசியல் பேசத் தொடங்கியிருந்தது நன்றாகக் புலப்பட்டது. அந்த மாற்றம் இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. நாடும் அதன் அரசியலும் தான் எதிர்பார்த்த திசையில் செல்வது போல உணர்ந்தான். அவனைச் சுற்றியிருந்தவர்களும் அவன் வாசித்தவையும், “உலக அரங்கில் தன் அகன்ற நெஞ்சை விரித்து நிமிர்ந்து நடமாட வேண்டிய இந்தியாவின் காலம் வந்தே விட்டது, இனி எதனாலும் அதன் வளர்ச்சியைத் தடுக்கவே முடியாது, இனி வருவது வளர்ச்சியின் காலம், இனியும் இங்கே படித்தவர்கள் பங்குபெறாத அரசியல் நடக்கப்போவதில்லை” என்று கூறினார்கள். இவனும் பணியிடத்தில் அரசியல் பேசுவதில்லை என்கிற தன் கொள்கையைத் தளர்த்திக்கொண்டு பெரும் ஈடுபாட்டோடு நிறைய அரசியல் பேசினான். அலுவலகத்தில் உள்ள நண்பர்களும், ‘இவன் நாம் நினைத்தது போலக் குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ்க்குடிமோன் அல்ல, பரந்த மனம் கொண்ட சுத்த இந்தியன்’ என்று எண்ணி இவனோடு நிறைய அரசியல் பேசினார்கள். முதல் ஓரீர் ஆண்டுகள் நன்றாகத்தான் சென்றன. பல வாட்சாப் குழுக்களில் இவனையும் சேர்த்துக்கொண்டார்கள். இந்தியா வேகவேகமாக வளர்ந்தது. வளர்ச்சிக் கதைகளை முதன்முதலில் கேள்விப்படும் வட்டத்துக்குள் அவனும் இருந்தான் என்ற பெருமையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்!

இப்படியே போன கதையில் அவன்தான் முதலில் சில ஓட்டைகளைப் போட்டான். எப்போதும் அரசியல் பேசும் பழைய பழக்கங்கள் சில உயிர்தெழுந்தன. அவன் தன் தமிழாசிரியத் தந்தையிடமே இந்த வேலையை அவ்வப்போது காட்டியிருக்கிறான். யாராவது ஏதாவதொரு கொள்கையில் அல்லது இயக்கத்தில் மிகவும் பிடிப்போடு இருந்தால் அவர்களிடமே சென்று அவர்கள் சார்ந்துள்ள கொள்கையில் - இயக்கத்தில் உள்ள கோளாறுகளைப் பற்றிப் பேசிக் கேள்வியெழுப்புவான். இது ஒருவிதமான ஈன இன்பத்தைக் கொடுப்பது ஒருபுறம் என்றாலும், இப்படியான உரையாடல்களில் அவன் கற்றுக்கொண்டது ஏராளம். இவற்றின் மூலம்தான் பல நேரங்களில் பல மாற்றுக் கோணங்களை இவனால் புரிந்துகொள்ளவே முடிந்திருக்கிறது. ஏற்கனவே தான் தெளிவாக இருக்கும் விஷயங்களில் அல்லது காது கொடுத்துக் கேட்கக்கூட அவசியமில்லை எனும் அளவுக்குத் தன் கருத்துக்களில் பிடிவாதம் வந்துவிட்ட விஷயங்களில் எதிராளியின் சப்பைக்கட்டுகளையும் அவர்களின் சார்புகளையும் புரிந்துகொள்ளவும் பயன்பட்டிருக்கின்றன என்பான். அப்படியான வேலையை இந்த வாட்சாப் குழுக்களிலும் செய்யத் தொடங்கினான். வேறெந்தக் குடிமோனாகவும் இல்லாமல், தமிழ்க்குடிமோனாக இருந்து தொலைந்துவிட்டதால், அவன் வாட்சாப் குழுக்களில் கேள்விப்பட்டதற்கு நேர் எதிரான கதைகளைச் சொல்லும் நண்பர்களும் உறவினர்களும் தந்தையும் வாய்த்துப் போனதுதான் இவனின் பெரும் அவப்பேறு. அவர்களோடு வாதாடிவிட்டு அதே கேள்விகளை அப்படியே வந்து வாட்சாப் குழுக்களில் கொட்டுவான். குழுக்கள் முதலில் ஒருவித சிறு அதிர்ச்சியை உணர்ந்தன. “இப்படியெல்லாம் கேள்வி கேட்க முடிகிறதே, அதுதான் புதிய இந்தியா!” என்று தொடங்கி நீளநீளமான விளக்கங்கள் கொடுத்தார்கள். ‘பழைய இந்தியா ஒன்றும் அவ்வளவு கொடுமையானதாக இருக்கவில்லையே!’ என்று தோன்றும். தனிப்பட்ட முறையில் சில இதழ்களையம் அவற்றில் வரும் சில கட்டுரைகளையும் வாசிக்கச் சொல்லி இணைப்புகள் அனுப்புவார்கள். அவை அனைத்தும் அவன் அதுவரை படித்த வரலாற்றையும் நம்பிக்கைகளையும் முற்றிலும் சிதைப்பவையாகவும் ஏதோவொரு வகையில் இவனை அவர்களிடமிருந்து வேகவேகமாகத் தனிமைப்படுத்துவதாகவும் உணரத் தொடங்கினான்.

வாட்சாப் கதைகள் ஒருபுறம் என்றால், ஃபேஸ்புக் கதைகள் இன்னொரு புறம். எதையாவது பிடித்திருக்கிறது என்று ‘விருப்பம்’ இட்டு, தன் கருத்தையும் சேர்த்து எல்லோரும் பார்க்கும் வகையில் பகிர்வான். இதில் வாட்சாப் குழுக்களில் இல்லாத புதுவிதமான பிரச்சனை வேறு. அரசியலில் இரண்டு துருவங்களிலும் இருக்கும் நண்பர்களையும் உறவினர்களையும் ஒருசேரக் கொண்ட பேறு பெற்றவன் என்பதால், அவர்கள் வேறு உள்ளே புகுந்து அடித்துப் புரள்வார்கள். திடீர் திடீரென்று தன் வீட்டுக்குள் புகுந்து தன் நண்பர்களும் உறவினர்களும் அடித்துக்கொண்டு சாவதைக் காண யாருக்குத்தான் இன்பமாக இருக்கும்! இருக்கலாம். அப்படியானவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். யாருக்குத் தெரியும்!

இது ஒருபுறம் என்றால், ‘ஓ, இவன் இந்தக் கொள்கையுடையவனா!’ என்று அவர்களாகவே ஏதாவதொரு முடிவு செய்து இவனிடம் பேசும் முறையே மாறிவிடும். சிலர் தனிப்பட்ட முறையில் தாக்குவார்கள். சிலர் தனியாகச் செய்தி அனுப்பி வாக்குவாதம் செய்வார்கள். திட்டுவார்கள். ஒவ்வொரு பகிர்வுக்கும் ஒரு நாலு பேர் வந்து ஆதாரம் கேட்பார்கள். பொய்ச் செய்தி என்று நிரூபிப்பார்கள். ‘இதென்னடா கொடுமையாப் போச்சு! சமூகத்தின் மீதான அக்கறையில் நாலு நல்ல செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று பார்த்தால், இப்படிப் போட்டுக் கொல்லுறாய்ங்களே!’ என்று வெறுப்படிக்கும். சிலருக்கு மண்டை வெடிக்கிற மாதிரி இருக்குமோ என்னவோ, உடனடியாக அலைபேசியிலேயே அழைத்துச் சண்டைக்கிழுப்பார்கள். விளக்கம் கேட்பார்கள். முதலில் எல்லாம் இன்பமாகத்தான் இருந்தது. பின்னர் சிறிது சிறிதாக அலுப்புத் தட்டத் தொடங்கியது. பின்னர் ஒரு கட்டத்தில், ‘ஒரு பைசாப் பயனில்லாத இதற்காக எதற்குப் போட்டு இத்தனை பேரைப் பகைத்து கொள்ள வேண்டும்!’ என்று ஞானோதயம் பெற்று, எந்த அரசியல் பதிவையும் பகிர்வதை முழுக்கவும் நிறுத்தியே விட்டான். ஆனால் பிடித்த மாதிரியான பதிவுகளைப் பார்க்கும் போது கமுக்கமாக ‘விருப்பம்’ இடுவதை மட்டும் தொடர்ந்தான். அதையும் ஓரிருவர் நுணுக்கமாகக் கவனித்து, அலுவலகத்தில் வந்து விளக்கம் கேட்டார்கள். ஆனாலும் எம்புட்டுத்தான் ஒரு மனிதன் தன் ஆசைகளை எல்லாம் அடக்கிக்கொள்ள முடியும்!

வாட்சாப் பக்கம் வந்தால், ‘இவர்களுக்கெல்லாம் அரசியல் பிடிக்காமல் இருந்த காலமே நன்றாக இருந்ததே! புலி வாலைப் பிடித்த கதையாகி விட்டதே! இவர்களின் பொய் புரட்டுகளை - நியாயங்களைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. அவற்றைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கவும் முடியவில்லை. கேள்வி கேட்பதிலும் ஒரு பயனும் இல்லை. உறவுகள்தான் கெடப்போகின்றன. இந்தப் பரப்புரைக் குழுக்களில் இருந்து வெளியேறினாலும் தப்பாகிவிடுமே!’ என்று பெரும் மன உளைச்சலிலேயே சில மாதங்கள் ஓடின. கேள்வி கேட்பதை மட்டும் சிறிது சிறிதாகக் குறைத்துக்கொள்ள முயன்றான். இதற்கிடையில் “புதிய இந்தியாவைக் கேள்வி கேட்க விரும்பும் / கேள்வி கேட்கத் துணிந்துவிட்ட குடி போன்றவர்களுக்காக…”, “எந்த நாட்டின் மீதோ இருக்கும் அக்கறையில் சொந்த நாட்டையே காட்டிக் கொடுக்கத் துணிந்து விட்டவர்களுக்காக…” என்பன போன்ற தொடக்கத்தோடு செய்திகள் நிறைய வரத்தொடங்கின. இவற்றையெல்லாம் படித்தும் பிடிக்காதது போல இருந்துகொள்ள முயன்றான். இருந்தாலும் மறுநாள் வந்து அது பற்றியே கேள்வி கேட்பார்கள்.

இப்படியே வளர்ந்து “இதை ஏற்றுக்கொள்பவன் இந்தியன். ஏற்க மறுப்பவன் இந்தியாவிலிருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டிய துரோகி. குடி, நீ ஏற்றுக்கொள்கிறாயா அல்லது மறுக்கிறாயா?” என்றொரு செய்தியில் வந்து நின்றது. இதில் பெருங்கொடுமை என்னவென்றால், “இதை ஏற்றுக்கொள்பவன் தமிழன். ஏற்க மறுப்பவன் தமிழ் மண்ணுக்குத் துரோகி” என்று அதற்கு அப்படியே நேர் எதிரான கருத்தைச் சொல்கிற குழுக்களிலும் இருப்பவன் அல்லவா நம் தமிழ்க்குடிமோன்!

அது ஒரு வெள்ளிக்கிழமை இரவு. எனவே, குடி குடித்திருந்தான். குடித்துக்கொண்டிருந்த போது பேசப்படாத அரசியல், இப்போது வீடு திரும்பியபின், வாட்சாப்பில், உடன் குடித்தவர்களில் ஒருவனால் தொடங்கிவைக்கப் படுகிறது. இதற்கு முன்பு எத்தனையோ வெள்ளி இரவுகளில் இதைவிட மூர்க்கமான அரசியல் விவாதங்கள் நேரிலும் வாட்சாப் குழுக்களிலும் நடந்த போதிலெல்லாம் கண்ணியம் காத்தவன்தான். நூறாவது டிகிரியில் கொதிக்கும் நீர் போலக் கொதித்துப் போன மனநிலையில், இப்படி அடித்தான், அதுவும் எல்லா மொழியினரும் இருக்கும் குழுவில், தமிழில் - “ங்கோ… இந்த மண் என்னுடையது. என் பாட்டன் - முப்பாட்டனுடையது. இதை எனக்கு என் தந்தை சொல்லியிருக்கிறார். உன் பாட்டனும் முப்பாட்டனும் எங்கிருந்து வந்தவர்கள் என்று உன் தந்தை சொல்லியிருக்கிறாரா?”

அடித்த நிமிடத்தில் வியர்த்துக் கொட்டியது. நெஞ்சு படபடவென்று அடித்தது. உடனடியாக மாற்றி மாற்றி அழைப்புகள். எல்லாமே தமிழ்ப் பையன்களிடமிருந்துதான். இவர்கள் எல்லோருமே இவனைப் போலவே புதிய இந்தியா பற்றி மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள்தாம். ஆனால் துளியும் வெளியில் காட்டிக்கொள்ளாதவர்கள். எல்லோருமே திட்டு திட்டென்று திட்டினார்கள். இவர்களில் ஒரு சிலர், “இதெல்லாம் தேவையில்லாத வேலை” என்று முன்பே இவனைக் கண்டித்திருக்கிறார்கள். “எல்லோருமே பார்த்திருப்பார்கள். ஆனாலும் உடனடியாக அழித்துவிடு” என்றார்கள். இந்த நேரத்தில் இன்னொருத்தன் அழைத்து வெகுவாகப் பாராட்டினான். “நீதாண்டா மாப்ள சுத்தத் தமிழன்!” என்றான். எதுவுமே ஆத்திரத்தை அடக்கவில்லை. ஆனால் புதிதாக பயம் ஒன்று எழுந்தது. அந்தச் செய்தியை அனுப்பிக் கேள்வி கேட்டவன் இவனைப் போல முப்பது சொச்ச வயதுக்காரன் ஒருவன்தான். இவன் வயதைவிடக் குறைவாகக் கூட இருக்கலாம். அந்த தைரியத்தில்தான் இவன் அடித்ததும். ஆனால் குழுவில் பெரியவர்களும் இருக்கிறார்கள். இவன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் உடையவர்கள். இந்தக் கேள்வி அவர்களையும் ஆட்டக்கூடியது. மீண்டும் வாட்சாப்பைத் திறந்து பார்த்தான். ஒரு பதிலும் இல்லை. யார் யார் பார்த்திருக்கிறார்கள் என்று போய்ப் பார்த்தான். கிட்டத்தட்ட பார்க்கக் கூடாத எல்லோருமே பார்த்துவிட்டது போலத் தெரிகிறது. ஆனால் ஒருத்தர் கூடப் பதில் சொல்லவில்லை.

‘ஒருவேளை அவர்களும் அவர்களுக்குள் இதை எப்படிக் கையாள்வது என்று பேசிக்கொண்டிருக்கக் கூடும்’.

இவன் ஒரு பயந்தாங்கொள்ளி. இது சில நிமிடங்களுக்கு முன்பு இவனை அழைத்த இவனுடைய நண்பர்களுக்குத் தெரியும். பத்து நாள் வேலையை மனச்சாட்சியே இல்லாமல் இரண்டு நாட்களில் முடிக்க வேண்டும் என்று சொன்னாலும், அவனுக்கே அது தெரிந்தாலும், எதுவுமே சொல்லாமல் இரண்டு நாட்கள் இரவும் பகலும் முயன்றுவிட்டு மூன்றாம் நாள் காலையில் இன்னும் ஒரு நாள் என்று கேட்பானே ஒழிய, ஒரு நாளும் முடியாது என்று கூடச் சொல்லத் தைரியம் இல்லாதவன். ஆனால் எல்லோரும் அவனைப் பற்றி அப்படியோர் எண்ணம் கொண்டவர்கள் அல்லர். ‘வேலையில்தான் இவன் இப்படி. வெளியில் - ஊரில் பெரும் முரட்டுப் பயலாக இருப்பான்’ என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள் என்பது, அவர்கள் இவனைத் ‘தமிழ்க்குடிமோன்’ - ‘குடி’ என்று சொல்லும் தொனியிலேயே தெரியும். ஆளும் பார்க்கச் சற்று அப்படி இருப்பான். அதனால்தான் ஒருவேளை இன்னும் யாரும் பதில் அடிக்கவில்லையோ என்று எண்ணிக்கொண்டே, இதை அழித்துவிட்டு, “வேறொரு குழுவில் போடுவதற்குப் பதிலாக இங்கு போட்டுவிட்டேன்” என்று சொல்லிவிடலாமோ எனவும் முரட்டுப் பையன் பிம்பத்தையே அப்படியே காப்பாற்றிவிடலாம் - அதுதான் தனக்கு நல்லது என்றும் மாற்றி மாற்றி யோசித்தான்.

மெனக்கெட்டு ஒருவன் அழைத்து, “நீதாண்டா மாப்ள சுத்தத் தமிழன்” என்று வேறு சொல்லியிருக்கிறான். ‘அவனுக்கென்ன ஆயிரம் சொல்வான். அவனே காட்ட முயலவில்லை, அவன் எவ்வளவு சுத்தம் என்று. இந்த அழகில் அவன் பேச்சுக்குப் பயந்து வாழ்க்கையை அழித்துக்கொள்ள நாம் எவ்வளவு பெரிய முட்டாளாக இருக்க வேண்டும்!’ என்று வேறு தோன்றியது.

இரண்டுக்கும் இடையில் ஒரு கோட்டைப் பிடிப்போம் என்று நினைத்து, “கேள்வி உனக்கு மட்டும்தான். மற்ற நண்பர்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் எல்லோரையும் எவ்வளவு மதிப்பவன் என்று எல்லோருக்கும் தெரியும்” என்று இன்னொரு செய்தி ஆங்கிலத்தில் அடித்து அனுப்பினான். மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்டது மாதிரியும் இருக்கும். நேரடியாகக் கேட்காதது மாதிரியும் இருக்கும். எதிரிகளின் எண்ணிக்கையை மூன்றிலக்கத்திலிருந்து ஒற்றை இலக்கத்துக்கு - அதுவும் ஒரே ஒருத்தன் என்று சுருக்கிவிட்ட நிம்மதி முழுமையாகக் கிடைத்த மாதிரியும் தெரியவில்லை. முந்தைய செய்தியில் இவன் என்ன சொன்னான் என்று அறிந்துகொள்ள முயன்றிராத தமிழரல்லாதோர் மேலும் சிலரும் இப்போது அது என்ன என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தைக் கிளர்த்திவிட்டுவிட்டோமோ என்றொரு பயம் வேறு வந்தது. ஆத்திரம் சிறிது சிறிதாகத் தொடங்கி பயம் சிறிது சிறிதாக மேலெழுந்தது. இந்தக் கேள்வியால் அதிர்ந்து போயிருக்கப் போகிறவர்களில் முக்கியமானவர் ஒருவர் இருக்கிறார். இதற்கு முந்தைய நிறுவனத்தில் இவனுக்கு மேலாளராக இருந்து, இந்த நிறுவனத்தில் சேர்ந்ததும் இவனையும் இங்கே இழுத்து வந்தவர். தஞ்சாவூர்க்காரர். இவனுக்கு அவர் எப்போதுமே பெரும் பாதுகாப்பு என்று இவனும் மற்றவர்களும் நம்பிக்கொண்டிருந்தார்கள். அதுவும் மாறப்போகிறது இவ்விரவில். ஒரே நிம்மதி அன்று இரவு வெள்ளிக்கிழமை என்பது மட்டுமே. சனி - ஞாயிறு விடுமுறை. ஆனால் திங்கட்கிழமை மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டுமே. ‘சரி, அதற்குள் எவ்வளவோ நடக்கலாம். திங்கட்கிழமை வரும் போது பார்த்துக்கொள்ளலாம். இப்போது நிம்மதியாகத் தூங்கலாம்’ என்று தலையணையைச் சற்று இறக்கிச் சாய்ந்தான். வாட்சாப் குழுவில் செய்திகள் வருவதை அணைத்து வைத்திருந்தான். எப்படியும் பதில் அறிக்கை வரும். அப்படி வராமல் போனாலும் அந்தந்த நிமிடம் வரை அது ஒரு நிம்மதியாக இருக்கும். அதுவே ஒரு அநிம்மதியாகவும் இருக்கும். இதையெல்லாம் கணக்கில் கொண்டு முதல் முறையாக அந்தக் குழுவில் செய்திகள் வந்தால் அறிவிப்புகள் வரும் விதத்தில் ஏற்கனவே செய்திருந்த அணைப்பை நீக்கினான். ஆனாலும் ஓரிரு மணி நேரம் ஓடியும் வாட்சாப் குழுவில் செய்திகள் எதுவும் இல்லை. அதுவரை இவன் தூங்கிய பாடும் இல்லை.

இப்போது ஒரு ‘டிங்’ அடித்தது. பதற்றத்தோடு எடுத்து அறிவிப்பிலேயே பெயரைப் பார்த்தால், அவன் ஒரு வடநாட்டான். அலுவலகத்தில் பெரிய ஆள். எல்லோருமே சிறிது பயப்படுகிற மாதிரியான ஆள். இவனிடம் மிகவும் நயமாகத்தான் பேசுவான். மாடு மாதிரி வேலை பார்ப்பவர்களை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் அந்த மாடு புதிய இந்தியா பற்றி நிறையக் கேள்விகள் கேட்கத் தொடங்கியதும்தான் சிறிது சிறிதாக எல்லோருக்குமே முகம் மாறத் தொடங்கியது. ஆங்கிலத்தில் ஏதோ திட்டியிருக்கிறான். என்ன திட்டியிருக்கிறான்? “என்ன அபத்தத்தை அனுப்பியிருக்கிறாய்?” என்று கேட்டு அனுப்பியிருக்கிறான். எதை அபத்தம் என்கிறான்? உள்ளே போய்ப் பார்த்தால்தான் புரியும். பதற்றம் குறையாமல் உள்ளே போனான். முதலில் தமிழில் அனுப்பிய கேள்விக்குத்தான் பதில் கேள்வி கேட்டிருக்கிறான்.

பொதுவாக இது போன்று எல்லோரும் இருக்கும் குழுக்களில் ஆங்கிலம் அல்லாத செய்திகள் அனுப்புவதில் முதலிடம் வகிப்பது வடநாட்டவர்கள். இந்தி என்பது தேசிய மொழி என்று தென்னாட்டவர்களே பலர் நம்புவதால் அதைக் கேள்வி கேட்க முடிந்ததில்லை. பின்னாளில் அதையெல்லாம் கேள்வி கேட்க வாய்ப்பிருந்த ஒரு தலைவன்தான் ஏற்கனவே ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு மண்டை காய்ந்து போய்க் கிடக்கிறான் இப்போது. அடுத்ததாகத் தமிழர்கள்தான் எல்லோரும் இருக்கும் குழுக்களில் கூச்சநாச்சமில்லாமல் தமிழ்ச் செய்திகள் அனுப்புவது. பெங்களூரில் பல குழுக்களில் இதனால் பிரச்சனைகள் வரும். எத்தனை முறை சொன்னாலும் திரும்பத் திரும்ப அதையே செய்வோரும் இருக்கிறார்கள். ‘முடிந்தவர்கள் படித்துவிட்டுப் போகட்டும், முடியாதவர்கள் அப்படியே அடுத்த செய்திக்குப் போகலாமே!’ என்று விட்டுவிட முடியாத மனம் இந்திய மனம். அதெல்லாம் கடந்து வந்துவிட்டது இந்தக் குழு. இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே. அதுவும் புதிய இந்தியாவில் இந்தி எல்லாவற்றுக்கும் மேலானது என்பதால் கேள்விக்கு இடமில்லாமல் இருக்கிறது. புதிய இந்தியாவுக்கு முன்பு இந்தியை வெறித்தனமாக வெறுத்த தமிழர்கள் கூட இப்போது ஆதரிக்கத் தொடங்கியிருக்கிறார்களே என்று அதற்காகவும் கொதித்துக்கொண்டுதான் இருந்தான் குடி. அவனுடைய ஒற்றை எதிரியாக இன்று உருவெடுத்திருப்பவன் கூட அப்படியானவனே. ஒரு காலத்தில் இந்தியையும் இந்திக்காரர்களையும் கண்டாலே பிடிக்காது என்று இருந்தவன், இப்போது ஏனோ அவர்களோடு கூடுதலாக நெருக்கத்தை உணரத் தொடங்கியிருக்கிறான்.

ஆக வடநாட்டுப் பெரியவனின் கேள்வியும் கோபமும் தமிழில் அனுப்பியதற்கு மட்டுமே என்று நிம்மதிப் படலாமா அல்லது எல்லோருமாகப் பேசி முடித்துத் தாக்குதலை இப்படித் தொடங்கியிருக்கிறார்களா என்று தெரியவில்லை இவனுக்கு. இன்று தூங்கிய மாதிரித்தான். பதட்டமாகவே இருந்தது. நெஞ்சு படபடத்துக்கொண்டே இருந்தது.

பெரிதாக எதுவும் யோசிக்கும் முன்பே, அலுவலகப் பழக்கத்தில் சடசடவென அடித்து முடித்தான் - “சாரி, தவறாக அனுப்பிவிட்டேன். அழித்துவிடுகிறேன்.”

சொன்னபடியே சுத்தத் தமிழன் அழித்தும் விட்டான்.

புரண்டு புரண்டு படுத்து நீண்ட நேர விழிப்புக்குப் பின் எப்போதென்று தெரியாமல் தூங்கியும் போனான். வழக்கத்துக்கு மாறாக, தூக்கத்தில் இடையிடையில் விழிப்புத் தட்டியது. அப்போதெல்லாம் அலைபேசியை மட்டும் எட்டி எட்டிப் பார்த்துவிட்டு அப்படியே படுத்துத் தூங்க முயன்று தூங்க முயன்று அன்றைய இரவை ஓட்டி முடித்தான். விடிந்தது. இப்போது வரை அந்தக் குழுவில் ஒரு செய்தி கூட வரவில்லை. அதுதான் இன்னும் பயமுறுத்தியது. எந்தச் சனிக்கிழமையும் இல்லாத மாதிரி விடிந்ததும் கண் விழித்து, விழிப்பிலேயே புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான். எழவும் முடியவில்லை. தூங்கவும் முடியவில்லை. வெயில் சுள்ளென்று அடிக்கத் தொடங்கியதும் முந்தைய இரவு இவனை அழைத்த நலம் விரும்பிகளை இப்போது இவன் அழைத்துப் பேசினான். உசுப்பேற்றியவனை மட்டும் அழைக்க விருப்பமில்லை. அவன் எப்படியும் நல்ல வழி சொல்ல மாட்டான் என்று தெரியும். மற்றவர்களும் நம்பிக்கையளிக்கிற மாதிரி எதுவும் சொல்லவில்லை. “பேசாமல் இருந்திருக்கலாமே!” என்பதுதான் வெவ்வேறு சொற்களில் அவர்கள் எல்லோருமே சொன்னது.

இப்போது தன் முன் இருப்பவை இரண்டே இரண்டு பாதைகள்தாம். அப்படி அவன் நினைத்துக்கொள்கிறான். ஒன்று, சனி-ஞாயிறு இரண்டு நாட்களிலேயே தனக்கு வேண்டிய எல்லோரிடமும் பேசி வேறொரு வேலையை வாங்கிவிடுவது. கூடுதலாக இரண்டு நாட்கள் ஆனாலும் பரவாயில்லை. விடுப்பு எடுத்துக்கொண்டு இதில் கவனம் செலுத்த வேண்டும். இது ஒன்றும் முன்பு போல அவ்வளவு எளிதில்லை. அனுபவம் கூடக் கூட இந்தத் துறையில் மரியாதை குறைவு. எளிதாக வேலை மாற முடியாது. அப்படி அழைத்துப் பேசும் எவரிடமும் இந்தக் கதையையும் சொல்ல முடியாது. எவர் மூலமும் இப்படிப் பேசியது வெளியே சென்றுவிடக் கூடாது என்பதும் மிகவும் முக்கியம். இரண்டாவது பாதை - தனக்கோ தன் தந்தைக்கோ வேண்டிய வேறு யாரோ ஒருவருக்கோ உடல்நிலை சரியில்லை என்று சொல்லி உடனடியாக வேலையை விட்டுவிட்டு அப்படியே கையில் வேலையில்லாமலே இன்னொரு வேலை தேடுவது. சென்னைக்குக் கூட ஓடிவிடலாம். ஆயிரம் இருந்தாலும் நம்மூர் என்று ஆகிவிடும். அது என்ன அவ்வளவு பாதுகாப்பா! அங்கேயும் இவர்களின் உறவினர்கள்தாம் இருப்பர்! மேலும், கையில் வேலை இல்லாமல் வேலை தேடுவது பெரும் ஆபத்து. வாழ்நாள் முழுக்க வேலை கிடைக்காமலே போய்விடவும் வாய்ப்புள்ளது. இவ்வளவு பெரிய சம்பளத்தை விட்டுவிட்டு எவ்வளவு நாட்கள் ஓட்ட முடியும்? வீட்டுக்குப் பணம் எப்படி அனுப்புவது? அப்பாவுக்கு என்ன சொல்வது? நல்ல வேளை, எல்லோரையும் போல காலாகாலத்தில் திருமணம் ஆகவில்லை!

அவனைப் பொருத்தமட்டில் திங்கட்கிழமை வழக்கம் போல புறப்பட்டு வேலைக்குச் செல்லலாம் என்றொரு மூன்றாம் பாதை இல்லவே இல்லை. ‘இனியும் இந்த நிறுவனத்தில் எவர் முகத்திலும் விழிக்க முடியாது. அப்படியே போனாலும் அணு அணுவாகச் சித்திரவதை செய்து கொன்றுவிடுவார்கள். எத்தனை பேரை அப்படிக் கொன்றிருக்கிறார்கள். அதான் பாத்திருக்கோமே!’ என்று தீர்க்கமாக எண்ணினான்.

சனி-ஞாயிறு முழுக்க தனக்குத் தெரிந்த முக்கியமான ஆட்கள் எல்லோருக்கும் அழைத்துப் பேசினான். எல்லோருக்குமே ‘அதெப்படி இரண்டே நாட்களில் ஒரு வேலை வாங்கிவிட முடியும்!’ என்ற கேள்விதான். அத்தோடு, ‘அப்படியென்ன அவசரம்?’ என்ற கேள்வியும். சொல்லவா முடியும்! “வேலையில் சூழல் சரியில்லை” என்று மட்டும் பொதுவாகச் சொல்லிமுடிக்கப் பார்த்தான். அதுவும் வேலையைவிட்டுத் தூக்கும் அளவுக்குப் போகிற ஆள் இல்லையே இவன் என்கிற வியப்பு வேறு எல்லோருக்கும். ‘எல்லாவிதமான ஆட்களையுந்தான் வேலையைவிட்டுத் தூக்குகிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கிய ஆப்பிளிலேயே அவரை வேலையைவிட்டுத் தூக்கினார்கள். இவன் என்ன பெரிய்ய…’ என்பது முதல், “மாங்கு மாங்குன்னு வேலை மட்டும் பாத்தாப் பத்தாதுன்னு ஒனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!”, “அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கு ஆங்கிலமே இவன் பிரச்சனை. எத்தனை தடவை சொன்னாலும் கேட்டாத்தானே!” என்பது வரை டிசைன் டிசைனாக ஒவ்வொருத்தரும் நினைத்தார்கள் - பேசினார்கள். இரண்டே நாட்களில் உள்ளிருந்த ஆற்றலை எல்லாம் உறிஞ்சி எடுத்துப் பிழிந்து போட்ட சக்கை போல உணர்ந்தான்.

திங்கட்கிழமை காலை வந்தது. எழ விருப்பமில்லாமல் படுத்தே கிடந்தான். உடன் இருப்பவர்கள் எழுந்து பணிக்குச் சென்றுவிட்டார்கள். மெதுவாக எழுந்து வெளியில் போய் சாப்பிட்டுவிட்டு வந்தான். விடுப்பு சொல்லவில்லை. அப்படியே இருந்துவிடுவது மேலும் தன்னைப் பலவீனப் படுத்தும் என்று அறிந்தும் எதுவும் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தான். இங்கே தொடர்ந்து வேலை செய்ய விரும்பினால்தானே அதெல்லாம்! யாரும் அழைக்கவும் இல்லை. மதிய உணவுக்குச் சற்று முன்பு நலம் விரும்பி நண்பர்கள் அழைத்தார்கள். மனம் நொந்து போயிருப்பதையும் வேலைக்கு வரவே விருப்பம் இல்லாமல் இருப்பதையும் சொன்னான். எல்லோருமே, “இதென்னடா பைத்தியகாரத்தனமா இருக்கு!” என்றுதான் சொன்னார்களே ஒழிய, எவருக்குமே இவன் மனதில் ஓடுகிற மாதிரியான எண்ணங்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை போலத் தோன்றியது அவனுக்கு.

“அதுக்கென்ன செத்தா போக முடியும்! பேசாமக் கெளம்பி வாடா வெண்ணே. காலைல தலைவலின்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு உன் வேலையைப் பாரு. எல்லாம் மெதுவா மறந்துருவாய்ங்க. இனிமே கொஞ்ச காலம் அரசியல் மசுரு பேசாமக் கெடப்பாய்ங்க. அதுவும் நல்லதுதான்” என்றான் மதுரை.

‘என்னடா இவ்வளவு சாதாரணமாச் சொல்றான் இவன்! அவ்வளவு சாதாரண விஷயமா இது! இல்ல, அவந்தான் தைரியமானவனா இருக்கானா! இல்ல, நாந்தான் பயந்தாங்கொள்ளியா இருக்கனா!’ என்று குழப்பான குழப்பம் இவனுக்கு. எப்படியிருந்தாலும் வேலைக்கெல்லாம் போகப் போவதில்லை என்று மட்டும் தெளிவாக இருந்தான்.

மாலை எல்லோரும் வீடு திரும்பும் நேரத்தில் மதுரை மீண்டும் அழைத்தான்.

“என்னடா? அப்படியே செத்துப் போயிறலாம்னு முடிவு பண்ணிட்டியா?” என்றான்.

“இல்ல, மாப்ள. எனக்கு மத்த எல்லாரையும்விட தஞ்சாவூர்க்கார் மூஞ்சில முழிக்கிறதுதான் இருக்கிறதுலயே பெருங்கஷ்டமா இருக்கு” என்றான்.

‘தஞ்சாவூர்க்கார்’ என்பது இவன் அவரை அழைக்கும் பெயரல்ல. மதுரை அவரை அழைக்கும் பெயர். எல்லோரையுமே ஊர்ப்பெயர் சொல்லியே அழைத்துத் தன் ஊர்ப்பெயரில் தன் பெயரை அமைத்துக்கொண்டவன் அவன்.

அப்படி இப்படி இழுத்து, இவனுக்காக அவரிடம் போய் மதுரையை ஒரு வார்த்தை பேசச் சொன்னான்.

“அவரு ஒன் ஆளு. நீ அவரு ஆளு. ஒங்க ரெண்டு பேருக்கும் நான் தூதா?” என்றான் அவன்.

“இல்ல, மாப்ள. நீதான் பயங்கர தைரியசாலியா இருக்க” என்றான்.

“அது சரி!” என்று அவனும் ஏற்றுக்கொண்டு, வேலையில் மும்முரமாக இருந்த தஞ்சாவூர்க்காரரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று நாலு வார்த்தை பேசினான்.

“கொஞ்ச நாளாவே அவன் ஆள் சரியில்லப்பா. ஏன் அவனே நேர்ல என்ட்டப் பேச மாட்டானாமா! நைட்டு அவன்ட்டப் பேசுறேன்னு சொல்லு” என்று அவர் முடித்துக்கொண்டார்.

அடுத்த பத்து நிமிடங்களில் மதுரையின் அழைப்பும் அதற்கடுத்த ஒரு மணி நேரத்திலோ என்னவோ தஞ்சாவூர்க்காரரின் அழைப்பும் வந்தன. நாளை வேலைக்குச் செல்லும் அளவுக்கு என்ன பேச வேண்டுமோ அவ்வளவு பேசினார். ஆனால் நல்ல கோபத்தில் இருப்பது போலத் தெரிந்தது.

மறுநாள் முதல் வழக்கம் போல் வேலைக்குச் செல்லத் தொடங்கினான். முதல் நாள் உள்ளே நுழைந்த போது எவர் முகத்திலும் விழித்துவிடாதபடிப் பார்வையை அங்கும் இங்கும் திருப்பிச் சமாளித்துத் தன் இடத்தைச் சென்றடைந்தான். அன்று முதல் வழக்கமான கூட்டத்துடன் மதிய உணவுக்குச் செல்வதை நிறுத்தி, வேறொரு குழுவோடு செல்லத் தொடங்கினான். வேகவேகமாக எல்லாமே மாறியது. அவனிடம் வந்து பேசத் துணிந்தவர்களிடம் மட்டும் பேசினான். சட்டையைப் பிடிப்பார்கள் என்று நினைத்த பலர் நன்றாகச் சிரித்துப் பேசினர். பலர் பேசவேயில்லை. ஆனால் அடுத்தடுத்துப் பணியில் எப்போதும் இல்லாத மாதிரியான பல சிக்கல்களுக்குள் போய் விழுந்தான். பாதி விழுத்தடிக்கப்பட்டான். மீதி இவனே போய் பயத்தில் விழுந்தான். யாரோ ஒருவர் சட்டையைப் பிடிக்கப் போகிறார்கள், ஆனால் அது மட்டும் நடந்துவிடாமல் தன் இந்தப் பிறவி கழிந்துவிட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அவன் வணங்கும் அய்யனாரை வேண்டினான். ஆனாலும் ஒருத்தர் அதைச் செய்தார்.

தஞ்சாவூர்க்காரர் ஒரு நாள் வந்து பின்னாலிருந்து இவன் தோளைத் தட்டினார். நடுக்கத்தோடே திரும்பிப் பார்த்தான். அவரேதான். “வா, ஒரு தம் போட்டு வரலாம்” என்று அழைத்துச் சென்றார்.

வழக்கம் போல, அவருக்கே உரிய அழகோடு பற்றவைத்துவிட்டுக் கேட்டார் - “நாம் எவ்வளவு காலமாகப் பழகிக் கொண்டிருக்கிறோம்! என்றைக்காவது என்னிடம் அந்த மாதிரி ஏதாவது பார்த்திருக்கிறாயா?”

எந்த மாதிரி?

அதான் புரியுதுல்ல, அப்புறம் என்ன!

இவனுக்குத் தலை சுற்றியது. எங்கே மயங்கி விழுந்து விடுவோமோ என்ற பயத்தோடே உளறத் தொடங்கினான் - “இல்ல சார், அது மப்புல உளறிட்டேன். மன்னிச்சுருங்க. அதுக்குப் பெறகு எனக்கு மனசே சரியில்ல. என்ன இருந்தாலும் அப்பிடிப் பேசியிருக்கக் கூடாது.”

“இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. என்னைக்காவது நான் அந்த மாதிரி நடந்துட்ருக்கனா? இருந்தா ஒனக்கு இவ்வளவு உதவி செஞ்சிருப்பானா? ஆனா இப்பத் தோணுதுடா. நானும் மத்தவங்க மாதிரி இருந்திருக்கணும்னு. நீங்க ஏண்டா எல்லாருமே இப்பிடி இவ்வளவு வெறுப்ப வச்சிக்கிட்டு இருக்கிங்க!”

‘என்னது, நாங்க வெறுப்ப வச்சிக்கிட்டு இருக்கமா?’

நினைத்தான். கேட்கவில்லை. ஒற்றை மேற்கோள்தான். இரட்டை அல்ல.

ஏதோ திருடி மாட்டிக்கொண்டவனைப் போல மூஞ்சியை வைத்துக்கொண்டான். வேறெதுவும் பேசவில்லை. அவர் மட்டும் ஏதோ பேசியது போல் இருந்தது. எதுவும் காதுக்குள் செல்லவில்லை. அப்படியே இருவரும் அவரவர் இருக்கைக்குத் திரும்பினர்.

அதுதான் அந்தச் சூழலில் அவன் நிகழ்த்திய கடைசி உரையாடலாக - அவனது பக்கத்தை விளக்கிச் சொல்ல அவனுக்குக் கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பாக இருக்க வேண்டும். அத்தோடு கசப்புணர்வு கலையப்பட்டுவிட்டது என்று நம்பி அன்று முதல் அவன் தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான். அதன் பின்பு அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கவே இல்லை.

அதற்கடுத்து வந்த எட்டாவது வெள்ளிக்கிழமையில் இன்று வேலையைவிட்டுத் தூக்கிவீசப்பட்டிருக்கிறான். அதுவும் வேறொரு நிறுவனத்தில் இன்னொரு வேலை வாங்குவது கூடச் சிரமம் என்கிற அளவுக்கு, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பொறி ஒன்றை வைத்துச் சிக்கவைத்துக் கழுத்தைப் பிடித்துக் கடித்துவிட்டார்கள்.

அங்குள்ளவர்கள் எல்லோரும் அடிக்கடிச் சொல்வார்கள் - “அவரால் எவரையும் காக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.”

மதுரை இவன் இருக்கைக்கு அருகில் வந்து அதை நினைவுபடுத்திவிட்டுச் சென்றான். வாய்ப்பே இல்லை. தன்னை அப்படிச் செய்ய மாட்டார். அதுவும் இப்படியோர் அற்பக் காரணத்துக்காகவா இப்படிச் செய்துவிடப் போகிறார் என்றுதான் அவன் நினைக்கிறான்.

அவன் வணங்கும் அய்யனார் பார்த்துக்கொள்வார். பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்