தின் தியானி காதலி (Eat Pray Love)

மணவாழ்க்கை முறிவுக்குப் பின் அதன் கொடிய நினைவுகளிலிருந்து விடுபடுவதற்காக உலகம் சுற்றப் புறப்பட்ட ஒரு பெண்ணின் சொந்தக் கதைதான் 'Eat Pray Love'. நூலில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு பெயரைத் தவிர மற்ற எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டவை என்று சொல்கிறார் இதன் ஆசிரியர் எலிசபெத் கில்பெர்ட். எனவே இது புனைவல்ல. அபுனைவு வகையிலேயே சேரும். ஆனாலும் ஒரு புனைவுக்கு உரிய சுவாரசியம் இருக்கிறது. எனவே அது எங்கு போய் முடியுமோ அங்கு முடியவும் செய்தது. ஆம், பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. எலிசபெத் கில்பெர்ட் இந்த நூலை எழுதுவதற்கு முன்பே எழுத்தாளர்தான். ஆனால் இந்த நூல்தான் அவரை மிகவும் பிரபலமாக்கியது.

இத்தாலி, இந்தியா, இந்தோனேசியா என்று 'இ'யில் தொடங்கும் பெயர் கொண்ட மூன்று வெவ்வேறு நாடுகளுக்குச் செல்கிறார். ஒவ்வொரு நாட்டிலும் என்ன செய்தார் என்பதே இந்த மூன்று சொற்களைத் தலைப்பாகக் கொண்ட நூலின் உள்ளடக்கம். இத்தாலியில் தின்று தின்று தூங்குகிறார். இந்தியாவில் வந்து ஓர் ஆசிரமத்தில் தன்னைத் தேடுகிறார். அடுத்து இந்தோனேசியா போய் ஒரு வயது மூத்த பெரியவரோடு வெறிகொண்டு காதல் செய்கிறார். சிற்றின்பம்-பேரின்பம்-சிற்றின்பம்... அவ்வளவுதான்.

இத்தாலி பற்றிச் சொல்லும் போது, "ஒவ்வோர் ஊருக்கும் ஒரு சொல் இருக்கும், அந்த ஊரில் வாழ்கிற எல்லோருக்கும் எந்த நேரமும் அந்தச் சொல்தான் அவர்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும், ரோம் நகரத்தின் அப்படியான சொல் 'செக்ஸ்'" என்று அந்த ஊர்க்காரர் ஒருவரே சொல்வதாகச் சொல்கிறார். "வாடிகனின் சொல் 'கடவுளோ' 'மதமோ' அல்ல, 'அதிகாரம்'" என்றும் அவர் சொன்னதாகச் சொல்கிறார். அதைக் கேட்டவுடன் நம் ஊரின் சொல் எது என்ற கேள்விதான் நமக்கு வரும். பெங்களூருக்கு என்ன சொல்? சென்னைக்கு என்ன சொல்? பெங்களூருக்கு 'சாஃப்ட்வேர்' என்று தோன்றியது. சென்னைக்கு என்ன சொல்? மதுரைக்கு என்ன சொல்? ரோமின் சொல் 'செக்ஸ்' என்றாலும் இவர் என்னவோ அங்கு இருக்கும் காலம் முழுக்கவும் தின்று தின்று உடல் எடையைத்தான் கூட்டிக்கொள்கிறார். அந்த 'ஊருக்குரிய வேலை'களில் அதிகம் ஈடுபட்டது போல் தெரியவில்லை. ஒருவேளை அதை அளவோடு செய்துவிட்டு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லாததால் சொல்லாமல் விட்டிருக்கலாம்.

இத்தாலிய மொழியின் மீதான அவரின் பிரமிப்பு பற்றி அவர் சொல்வது நமக்கும் அம்மொழியின் மீது ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. உலக மொழிகளிலேயே இனிமையான மொழி அதுதான் என்கிறார். அப்படி அவரைச் சுற்றி நிறையப் பேர் எண்ணியதாகவும் வியந்து பேசிக்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். அதற்கொரு காரணமும் இருக்கிறது என்கிறார். மற்ற மொழிகளைப் போல் மக்கள் பேசிப் பேசி உருப்பெற்ற மொழியல்ல அது, மாறாக மொழியியல் வல்லுநர்கள் ஒன்று கூடி உட்கார்ந்து, லத்தீன் உட்படப் பல மொழிகளிலும் இருந்து ஒவ்வொரு சொல்லுக்கும் எந்த மொழியின் சொல் அழகாக இருக்கும் என்று விவாதித்து உள்ளடக்கிச் செதுக்கி எடுத்த மொழி என்கிறார். கேட்கவே சுவாரசியமான கதையாக இருந்தது. இதற்கு முன்பு எங்கும் கேள்விப்பட்டிராத கதை இது. கூடுதல் ஆய்வுக்கும் உரியது.

அடுத்து வந்திறங்கும் இந்தியாவில் ஒரே ஆன்மீகத் தேடல் நடக்கிறது. மும்பைக்கு அருகில் ஒரு கிராமத்தில் இருக்கும் ஆசிரமத்தில் சில மாதங்கள் தங்கியிருந்து அந்த வேலையைச் செய்கிறார். வெளியார்களின் பார்வையில் நம் நாடும் பண்பாடும் எப்படிப் பார்க்கப்படுகிறது என்று தெரிந்துகொள்வது சுவாரசியமாக இருப்பது இயல்பானதுதானே!

இந்தியாவிலிருந்து புறப்பட்டு இந்தோனேசியாவின் பாலி தீவுக்குச் செல்கிறார். பாலி இந்தோனேசியாவில் இருந்தாலும் அது ஓர் இந்திய நகரம் போலவே இருக்கும் என்பது நாம் கேள்விப்பட்டதுதான். அதற்குக் காரணம், இந்தோனேசியா முஸ்லீம் பெரும்பான்மை நாடு. பாலியோ முழுக்க முழுக்க இந்துக்கள் நிறைந்த ஊர். அங்குள்ள மனிதர்கள் மற்றும் அவர்களுடைய பண்பாடுகள் பற்றிய கதைகள் அனைத்தும் சுவாரசியமாக இருக்கின்றன. பேரின்பம் தேடிப்போன இந்தியாவைவிட சிற்றன்பம் சிக்கிய பாலி வாழ்க்கைதான் படிக்கச் சுவையாக இருக்கிறது. அவருக்குமே அதுதான் மனநிறைவாக இருந்திருக்கும் போல் படுகிறது.

நூலில் மூன்றில் ஒரு பகுதி இந்தியா பற்றியும் இன்னொரு பகுதி இந்தியா போலவே இருக்கும் பாலி பற்றியும் இருப்பதால் நமக்கு எளிதில் மிகவும் பிடித்துப் போய்விடுகிறது.

திருமணம் என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அவருடைய மணமுறிவுகள் பற்றிய கதைகளை நம்மால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆணோ பெண்ணோ மணமுறிவு என்பது எப்போதுமே ஒரு கொடுமைக்காரருக்கும் இன்னோர் அப்பாவிக்கும் இடையில் ஏற்படும் முடிவாக இருக்க வேண்டியதில்லைதானே! உலகத்திலேயே மிக நல்லவனான ஓர் ஆணையும் உலகத்திலேயே மிக நல்லவளான ஒரு பெண்ணையும் சேர்த்து வாழவைத்தால் கூட அது அவர்களுக்கு ஒத்துவராமல் போகவும் மணமுறிவில் முடியவும் வாய்ப்புள்ளதுதானே! உலகத்துக்கே நல்லவர்களாக இருக்க முடிகிற அவர்கள் இருவரும் அவர்கள் இருவருக்குள் மட்டும் ஒருவருக்கொருவர் தன் படு கேவலமான முகத்தைக் காட்டியிருக்கலாம், அல்லவா? அப்படிக் கூட இவர்களுக்குள் நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்தக் கதையும் அதில் தொடர்புடைய ஒருவர் மட்டும் சொல்வதை வைத்து முழுதாக நம்ப முடிவதா என்ன?

அவர் இந்தியாவில் ஆசிரமத்தில் இருக்கும் போது, அங்கே ஓர் அமெரிக்க ஆணும் இருக்கிறார். அவர் ஒரு முறை இவரிடம் சொல்கிறார் - "உனக்கொரு பிரச்சனை இருக்கிறது. எல்லாம் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற பிரச்சனை. அதை மட்டும் விட்டுவிடு. உன் வாழ்க்கை அழகாகிவிடும்" என்கிறார். இதைக் கேட்ட போது தனக்கு எப்படி மண்டை முட்டிக்கொண்டு வந்தது என்றும் அப்படிக் கோபம் வந்ததற்கு அது உண்மை என்று தான் உணர்ந்திருந்ததுதான் காரணமோ என்றும் நேர்மையாகப் பேசுகிறார். அந்த நேர்மை அவருடைய மணமுறிவுக்கு அவரே எவ்வளவு தூரம் காரணமாக இருந்திருப்பார் என்ற கேள்வியையும் நம்மிடம் விட்டுச்செல்கிறது.

மேற்கத்தியர்களால் இந்திய மரபின் பேரின்பத்தை அவ்வளவு எளிதாக எட்டி விட முடியுமா என்பதற்கு விடையாகவும் இந்த நூல் இருக்கிறது. அவர்களுக்கு இயல்பாகவே எளிதாக வருவது சிற்றின்பம்தான். சிற்றின்பங்களைப் பேரின்பம் போல் கொண்டாடுவதும் உலகையே அந்த வாழ்க்கை முறைக்குள் இழுத்துச் சென்றதுமே அவர்களின் சாதனை. எனவே பேரின்பத்தையும் ஒரு சிற்றின்பம் போலத் தற்காலிகமாக அனுபவித்து மறப்பதுதான் அவர்களின் இயல்பாக இருக்க முடியும். அதிக பட்சம், நானும் இந்தியாவில் போய் ஞானப் பழம் தின்று துறவறத்தின் உச்சத்தைப் பார்த்துவிட்ட ஆள்தான் என்று சாகும் வரை தன்னைச் சுற்றியிருப்போரிடம் கதை விட்டுக்கொள்ளலாம். அத்தனைக்கும் ஆசைப்பட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அனுபவித்து மடிந்துவிட வேண்டும் என்கிற மேற்கத்திய வாழ்க்கை முறையைப் பொறுத்தமட்டில் இதுவும் ஓர் அனுபவம். அவ்வளவுதான். அவர்களிடம் போய் இதெல்லாம் கற்றுக் கொடுக்கிறேன் என்று நம் ஆட்கள் செய்து கொண்டிருப்பது வெறும் வியாபாரம். இங்கே தயாரித்த பண்டம் இங்கைவிட அங்கே நன்றாக விற்கிறது என்றால் அதை அங்கே சென்று விற்பதுதானே நல்ல வியாபாரியின் உத்தியாக இருக்க முடியும்.

ஆன்மீகத் தேடல் முடிந்தபின் அப்படியே புறப்பட்டு பாலி போய் இறங்குகிறார். பாலி போய் இறங்கும் வரைக்கும் அங்கே எங்கு போய் தங்கப் போகிறோம் என்ன செய்யப் போகிறோம் என்கிற எந்தத் தெளிவும் இல்லாமலே போய் இறங்குகிறார். முன்பொரு காலத்தில் ஒரு வைத்தியரைச் சந்தித்திருக்கிறார். அந்த ஊரில் இவருக்குத் தெரிந்த ஒரே ஆள் அந்தப் பெரியவர் மட்டுமே. மற்றபடி அவர் வீடு எங்கிருக்கிறது, இன்னும் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது கூடத் தெரியாமல்தான் போய் இறங்குகிறார். பாலி போன்ற ஒரு சிறிய தீவில் அப்படியான ஒருவரைத் தேடிப் பிடிப்பது ஒன்றும் பெரும் சிரமமாக இராது என்ற நம்பிக்கையோடு போய் இறங்குகிறார். நம்பியபடியே போய் இறங்கியதுமே வெற்றிகரமாகக் கண்டுபிடித்தும் விடுகிறார். நம்மூரில் பார்ப்பது போல நிறைய விசித்திரங்கள் காணக் கிடைக்கிறது அவருக்கு. நமக்கு அவை வியப்பூட்டுவனவாக இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு அவை எவ்வளவு வியப்பூட்டுபவையாக இருக்க முடியும் என்பதைக் கண்டு வியக்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, பெரியவருக்குத் தன் வயது என்னவென்று தெரியவில்லை. அவர் சொல்கிற கதைகளை வைத்துப் பார்த்தால் அவர் 60-க்கும் 100-க்கும் எந்த வயதுடையவராகவும் இருக்கலாம் என்கிறார்.

பின்னர் பிரேசிலில் இருந்து வந்து பாலியில் குடியேறிவிட்ட பெரியவர் ஒருவரைச் சந்திக்கிறார். அவரோடு வெறிகொண்டு காதல் செய்கிறார். சிறுநீர்ப் பாதையில் தொற்று வரும் அளவுக்கு ஒரு நாளைக்குப் பல முறை என வெறிகொண்டு காதல் செய்கிறார். அவரும் மனைவியைப் பிரிந்து பெண் துணைக்கு ஏங்கிப் போய்க் கிடப்பவர். இவரும் கணவனை இழந்து, இந்தியாவில் போய் முக்தி அடைந்து, ஆண் துணைக்கு ஏங்கிக் கிடப்பதை அடக்கி வைத்துக்கொண்டிருப்பவர். எப்படி இருக்க முடியும்? இதை அவர் ரசித்து ரசித்து எழுதியிருப்பதுதான் திரைப்படமாக விற்பதற்குப் பெரிதும் பயன்பட்டிருக்கும். இதைப் படித்துவிட்டு அமெரிக்காவிலிருந்து எத்தனை இளம்பெண்கள் ஆன்மீகத் தேடலில் இறங்கினார்களோ தெரியவில்லை.

இதற்கிடையில் அங்குள்ள மருத்துவச்சி (பாரம்பரிய மருத்துவம் செய்யும் பெண் என்பதால் இப்படிச் சொல்வதே சரியாகப் படுகிறது; மற்றபடி உள்நோக்கம் எதுவும் இல்லை) ஒருவருடன் பழக்கம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் ஏகப்பட்ட பணத்தையும் பறித்து பல நாட்கள் கதறவிட்டிருக்க வேண்டிய சிறுநீர்ப் பாதை ஒற்றுப் பிரச்சனையை ஏதோவொரு கசாயத்தைக் கொடுத்து இந்தப் பெண் சில மணி நேரங்களில் சரி செய்துவிடுகிறார். இந்தக் கதை சொல்லப்படும் போது, சித்தா முதலான நம் மண்ணின் மருத்துவ முறைகள் பற்றிய சிந்தனை சில நிமிடங்கள் நம்மை ஆட்கொள்கிறது. இந்த இடத்தில், அவை சிலர் சொல்வது போல முழுக்கவும் தெய்வீகத்தன்மை கொண்டவையும் அல்ல, நவீன மருத்துவத்தின் ஆதரவாளர்கள் செய்வது போல முற்றிலும் புறந்தள்ளப்படும் அளவுக்கு அர்த்தமற்றவையும் அல்ல என்கிற நம் நம்பிக்கையை ஒரு வெள்ளைக்காரி மூலம் உறுதி செய்துகொள்கிறோம். ஒரு வாரத்து வலியையும் வேதனையையும் ஒரு மணி நேரத்தில் சரி செய்ய முடிகிறதா என்று வியப்பதைவிட ஒரு மணி நேரத்தில் சரி செய்ய முடிவதை ஒரு வாரத்துக்கு இழுத்தடிக்கும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கியது எது என்று நின்று நிதானமாகப் பேசிவிட்டு நகர்வது நல்லதுதான். இது நவீன அறிவியலின் தோல்வியா? அதைக் கையில் வைத்திருக்கும் உலகப் பெரும் வியாபாரிகளின் பேராசையா? பாரம்பரிய மருத்துவம் தொடர் ஆராய்ச்சிகளின் மூலமும் கண்டுபிடிப்புகளின் மூலமும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள இயலாமையின் தோல்வியா? அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டியவர்கள் யார்? அரசாங்கமா? மக்களா? இவர்களுக்கும் சில பெரும் வியாபாரிகள் புரவலர்களாகக் கிடைத்தால் நிலைமை மாறுமா? பேசித் தெளிய எவ்வளவோ இருக்கிறது.

அந்த மருத்துவச்சி பற்றிய மற்ற சில குறிப்புகளும் சுவாரசியமானவை. குழந்தை இல்லாத பெண்களுக்குக் குழந்தை பிறக்க வைப்பதிலும் இவர் கெட்டிக்காரராம். கோளாறு ஆணிடம் என்றால் மிக எளிதாகச் சரி செய்துவிடுவாராம். பெண்ணை சிகிச்சைக்கு அழைத்து அவளை வேறோர் ஆணோடு உறவுகொள்ள வைத்துக் குழந்தை பெற்றுக் கொடுத்துவிடுவாராம். எந்த ஆணோடு? அதற்கென்று ஓட்டுநர் வேலை பார்க்கும் பையன்கள் நிறையப் பேர் இருக்கிறார்களாம். அவர்களும் இந்தச் சேவையை மகிழ்ச்சியோடு செய்துகொடுத்து விடுவார்களாம். அவர்களுடைய சமூக அமைப்பில் குழந்தை இல்லாமல் இருப்பதில் இருக்கிற பிரச்சனையின் வலியைவிட இது ஒன்றும் பெரிதில்லை என்பதால் பெண்கள் இதைப் பெரிதுபடுத்திக்கொள்வதில்லை என்கிறார். இது அந்தப் பெண்களின் கணவனுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வது மட்டுமே இவருடைய பாரம்பரியக் கடமை. இது எப்படி இவ்வளவு காலமாக அங்கே சிக்கல் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏதோ பாலியாக இருப்பதால் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவே நம்மூராக இருந்தால் நானும் ஓட்டுநராகப் போகிறேன் என்று மொத்த நாடும் அங்கே போய்க் குவிந்து இதை எப்போதோ ஒழித்துக்கட்டியிருப்பார்கள்.

இப்பேர்ப்பட்ட மருத்துவச்சி வறுமையில் வாடுகிறார். அதைப் பார்த்துச் சகிக்க முடியாமல் அவருக்கு உதவும் விதத்தில் இவர் தன் அமெரிக்க நண்பர்கள் மத்தியில் பணம் திரட்டத் தொடங்குகிறார். அங்கிருந்து கொண்டேதான். கண்ணை மூடி முழிப்பதற்குள் இவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பணம் குவிந்துவிடுகிறது. மருத்துவச்சிக்குச் சொந்தமாக இருக்க ஒரு வீடும் சிறிது இடமும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்பது இவரது எண்ணம். பணம் கொட்டியதைப் பார்த்தபின் மருத்துவச்சி வேலையைக் காட்டத் தொடங்கிவிடுகிறார். இவரைப் பயன்படுத்தித் தன் ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, இன்னும் இன்னும் இன்னும் என்று தன் ஆசையைப் பெரிதாக்கி, மேலும் பணம் பிடுங்கப் பார்க்கிறார். பணத்தை வங்கிக் கணக்கில் வைத்துக்கொண்டு நிலம் வாங்குவதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறார். பிற்காலத்தில் ஓட்டல் கட்டிக்கொள்ளும் அளவுக்குப் பெரிய இடமாக வேண்டும் என்கிறார். ஒரு மாதம் முன்பு தனக்கென்று காணி நிலம் கிடைத்தால் அதுவே பிறவிப் பெரும்பயன் என்று துள்ளிக் குதித்திருக்கக் கூடியவர் இன்று ஊரான் காசில் ஓட்டல் கட்டி வாழ வேண்டும் என்று ஆசைப்படும் அளவுக்கு மாறியதற்கு என்ன காரணம் என்று இவர் தன் பிரேசிலியக் காதலரோடு உரையாடும் பகுதி நன்றாக இருக்கிறது. சில ஆண்டுகள் அங்கேயே தங்கி பாலியை ஓரளவு புரிந்துகொண்டு விட்டவர் என்ற முறையில் ஒரு மேற்கத்தியரின் பார்வையில் அவர் பாலி பற்றியும் பாலியர்கள் பற்றியும் சொல்வது அழகாக இருக்கிறது. பணம் பற்றிய அவர்களின் பார்வை பற்றியும், அவர்களின் சமூக அமைப்பு பற்றியும், நம்பிக்கைகள் பற்றியும் அழகாகச் சொல்கிறார். கேமராவை அப்படியே திருப்பி, இதற்கு மருத்துவச்சி என்னவெல்லாம் சொல்கிறார் என்று பார்த்தால், அவர் சொல்லும் காரணங்கள் எல்லாம் நமக்கு அன்றாடம் பழக்கப்பட்டவை. வெள்ளைக்காரிக்குத்தான் புரிந்துகொள்ளச் சிரமமாக இருந்திருக்கும். நல்ல நேரம், கெட்ட நேரம், நல்ல இடம், கெட்ட இடம், சாமிக் குத்தம், ஆவி நடமாட்டம் என்று அம்புட்டும் நம்மூர்த் தில்லாலங்கடி வேலைகள். "ஆடி போய் ஆவணி வந்தா..." கதைகள். இந்த நூலைப் படித்த பின்பு நான் எடுத்திருக்கும் முடிவு, நம்ம ஜியிடம் சொல்லி எப்படியாவது இந்த பாலியை இந்தியாவோடு இணைத்துவிட வேண்டும்! அவர்கள் நம்மவர்கள்!

நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நேரம் நெருங்க நெருங்க இந்தப் பணப் பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டிய அழுத்தமும் கூடுகிறது. நம்பிப் பணம் கொடுத்தவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமே. மிரட்டி உருட்டி அதைச் சாதித்தும் விடுகிறார். முதலில் திட்டமிட்ட இடங்களில் ஒன்றை வாங்கி வீடு கட்டும் வேலையையும் தொடங்கிவைத்து விடுகிறார்.

இப்போது இத்தனையும் நூலாக வந்திருக்கிறது. மொத்தப் பாலியிலும் ஒருத்தர் கூட ஆங்கில நூல்கள் படிப்பவராக இருக்க மாட்டாரா என்று தெரியவில்லை. அப்படிப் படிப்பவர்கள் நிறைய இருந்தால் இந்த நூல் அவர்கள் மத்தியில் என்ன மாதிரியான உரையாடலை உசுப்பிவிட்டிருக்கும் என்று தெரியவில்லை.

பொதுவாக இந்த நூலைப் பற்றிச் சொல்லப்படும் கருத்துக்களில் ஒன்று, பெண்களுக்கு இது மிகவும் பிடித்துப் போகும் என்பது. இணையத்தில் இந்த நூல் பற்றிய மதிப்புரைகளைத் தேடிப் படிக்கும் போது, இதைப் பல பெண் வாசகர்களே தூக்கிப் போட்டு மிதித்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிந்தது.

ஒருவர் இப்படிச் சொல்லியிருந்தார்: "இந்த நூல் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லி என் தோழி ஒருத்தி வாங்கிக் கொடுத்தாள். என் மகிழ்ச்சி என் ஆணைச் சார்ந்தது என்று நம்பும் பெண்களுக்கு வேண்டுமானால் இது பிடித்துப் போகலாம். என் மகிழ்ச்சிக்கு நானே பொறுப்பு என்பதை உணராத பெண்களே, இதைப் புரிந்து கொள்ளுங்கள் - பெண்ணியம் எங்கோ போய்விட்டது. இன்னும் உங்கள் கோளாறுகளுக்கு உங்கள் ஆண்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தால், அதுதான் பெண்ணியம் என்று நம்பிக்கொண்டிருந்தால், நீங்கள் உருப்படவே போவதில்லை. என் வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிக்கும் நானே பொறுப்பு என்று நிமிர்ந்து உட்காருங்கள். அதுதான் உண்மையான பெண்ணியம்."

கொடுமை என்னவென்றால், நூலைவிட இந்த மதிப்புரை எனக்குப் பிடித்துப் போய்விட்டது!

ஏ, கொழுப்பெடுத்த ஆணினமே! தெரியாதா உன்னைப் பற்றி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்