கண்ணுக்குத் தெரியாத வேற்றுலகவாசிகள் (Invisible Aliens)

வேற்றுலகவாசிகள் (aliens) பற்றி இந்த உலகத்தில் எவ்வளவோ பேசவும் எழுதவும் பட்டுவிட்டது. நிறைய ஆங்கிலப் படங்களும் வந்திருக்கின்றன. மனிதர்களைப் போலவோ மனிதர்களைவிடவும் ஆற்றல் மிக்கவர்களோ இம்மாம் பெரிய அண்டத்தில் இருந்தே தீர வேண்டும் என்றுதான் நிறைய அறிஞர்கள் சொல்கிறார்கள். அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. பேரண்டத்தில் நம் பூமி எவ்வளவு சிறியது என்பதை வைத்துப் பார்த்தால், உயிர்கள் வாழும் கோள்கள் சூரிய மண்டலத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் பால் வழியில் இருக்கும் மற்ற சூரிய மண்டலங்களிலோ பேரண்டத்தின் வேறு விண்மீன் மண்டலங்களிலோ நிச்சயமாக உயிரினங்கள் இருக்கத்தான் வேண்டும். அவை மனிதர்களைப் போலவே அல்லது மனிதர்களைவிட ஆற்றல் மிக்கவையா என்பதுதான் தெரியவில்லை. உயிர்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற கணக்கின் படியே மனிதர்களை விடவும் ஆற்றல் மிக்க உயிர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லலாம்.

மனிதர்களை விடவும் ஆற்றல் மிக்க உயிர்கள் மனிதர்கள் அடையும் தொலைவில் இல்லை என்று ஓரளவு நம்பிக்கையோடு சொல்லலாம். ஏனென்றால், மனிதர்களை விடவும் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் இந்நேரம் அவர்கள் நம்மை அடைந்திருப்பார்கள். மனிதர்களை விட ஆற்றல் மிக்க உயிர்கள் இந்தப் பேரண்டத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள்தாம் நமக்கு முன்பாக நம்மை அடைவார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. அப்படி அவர்கள் நம்மை அடையும் போது அவர்களுக்கு நம் கறி பிடித்து நம்மை வேட்டையாடத் தொடங்கிவிடக் கூடாது என்று மட்டும் இப்போதைக்கு நாம் வேண்டிக்கொள்ள வேண்டியதுதான்.

இதற்கு மாற்றாகத்தான் கண்ணுக்குத் தெரியாத வேற்றுலகவாசிகள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அப்படி நம்மை விட ஆற்றல் மிக்கவர்கள் நம் கண்ணிலேயே படாமல் இருக்கும் ஆற்றலும் பெற்றவர்களாக இருக்க முடியுந்தானே! அப்படி இருந்து, அவர்கள் ஏற்கனவே நம்மை அடைந்துவிட்டார்கள் என்று சொன்னால் அதை உங்களால் மறுக்க முடியுமா?

நாம் கடவுள் என்பதோ பேய் என்பதோ விதி என்பதோ ஏன் அவர்களாக இருக்கக் கூடாது? கோழிகளையும் நாய்களையும் குத்துச்சண்டை வீரர்களையும் வைத்துச் சண்டை போடவிட்டு வேடிக்கை பார்க்கும் - இன்பம் காணும் நம்மைப் போலவே நம்மை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் நம்மைவிட மேலான ஒரு கூட்டம் இருக்க முடியாதா என்ன? நாம் அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் அவர்களை மகிழ்விக்கவும் அவர்களின் பொழுதுபோக்குக்காகவும் இருக்கக் கூடாதா என்ன? இது போன்ற கேள்விகளைத்தான் கண்ணுக்குத் தெரியாத வேற்றுலகவாசிகள் பற்றிய சிந்தனைகள் நமக்குத் தருகின்றன.

ஒரு பேச்சுக்கு அப்படி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் நம் கண்களுக்கு மட்டும் தெரியாதவர்களா அல்லது பூமியில் இருக்கும் எந்த உயிர்களின் கண்களுக்கும் தெரியாதவர்களா? அவர்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் கண்டுகொள்ள முடியுமா அல்லது அதுவும் முடியாதா? நாம் சமூக ஊடகங்களில் வைத்துக்கொள்வது போல, தெரியும் நிலை, தெரியாத நிலை என்று இரு வேறு நிலைகள் வைத்துக்கொள்வார்களா? குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தெரிகிற மாதிரி நிலை வைத்துக்கொள்வார்களா? அவர்களுக்கென்று குறிப்பிட்ட உருவம் இருக்குமா? அல்லது எப்படி வேண்டுமானாலும் உரு மாற்றிக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களா? அவர்களின் உருவளவு எவ்வளவு பெரிதாக இருக்கும்? பெரும் மலைகள் போல நம்மைச் சுற்றிலும் நடமாடிக்கொண்டிருக்கிறார்களா? அல்லது யானைகள் அளவுக்கு இருப்பார்களா? அல்லது நம்மைப் போல இருப்பார்களா? அல்லது பூனைகள் போல இருப்பார்களா? அல்லது ஈக்களைப் போல இருப்பார்களா? இவர்கள் எல்லோரும் நம் வீட்டுக்குள்ளும் படுக்கையறையிலும் கழிப்பறையிலும் நம் கண்ணுக்குப் புலப்படாமல் நடமாடிக்கொண்டும் வட்டமடித்துக்கொண்டும் நம்மை நோட்டம் விட்டுக்கொண்டும் அவ்வப்போது நமக்கு ஏதேனும் சிக்கலை உண்டு பண்ணிக்கொண்டும் இருக்கிறார்களா? அல்லது நுண்ணியிரிகள் போல இருந்துகொண்டு நம்மை ஆட்டிவைத்துக்கொண்டு இருக்கிறார்களா? ஒரு வேளை, கொரோனாக் கிருமி கூட இது போன்ற ஒரு கண்ணுக்குத் தெரியாத வேற்றுலகவாசியாக இருக்குமோ!

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் மனிதனைவிட ஆற்றல் மிக்க உயிரினம் மனிதனைப் போலவே உருவோ உருவளவோ கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதையும் நாம் உணர வேண்டும் என்பதற்காகத்தான். நாம் கற்பனை செய்து பார்க்கும் பெரும்பாலான விஷயங்கள் இதுவரை நாம் பார்த்த - படித்த - கேள்விப்பட்ட அனுபவங்களிலிருந்தே உருவாகுபவையே. ஆனால் ஒட்டுமொத்த மனித குலமுமே கண்டிருப்பது - கற்றிருப்பது கைமண் அளவுதான். எனவே நம் கற்பனைக்கென்று சில எல்லைகள் இருக்கின்றன. ஆனால் உண்மை என்பது நம் கற்பனைக்கு உட்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அந்த வகையில் பார்க்கும் போது, அறிவியல் என்பது சான்றுகளை வைத்து மட்டுமே கண்டுபிடிக்கப்படுவது மட்டுமில்லை; அதற்கு வெளியேயும் சென்று தேடுவதும் அறிவியலில் அடக்கம். அதையும் உலகெங்கும் பல அறிஞர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

மனிதன் என்பவன் ஆக்சிஜன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகியவற்றின் கூட்டுருவாக்கம். நாம் பேசும் வேற்றுலகவாசிகள் வேறு தனிமங்களால் படைக்கப்பட்டவர்களாக இருந்தால், நம்மால் காண முடியாதவர்களாக இருக்கலாம். வேற்றுலகவாசிகளை விடுங்கள். இவ்வுலகவாசிகளே இது போலக் கண்ணுக்குப் புலப்படாத நிறைய இருக்கலாம். அது சாத்தியம் என்றால் வேற்றுலகவாசிகளிலும் அது போன்ற உயிரினங்கள் சாத்தியந்தானே!

வேற்றுலகவாசிகள் கண்ணுக்குத் தெரியாதவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் வேறு ஏதோவொரு கோளில் இருந்து இங்கு வந்து இறங்கியிருக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் பயன்படுத்திய வாகனமும் அவர்களைப் போலவே கண்ணுக்குத் தெரியாததாகவே இருக்க வேண்டுமா என்ன? அப்படியான தொழில்நுட்பம் சாத்தியமா? அப்படி ஏன் இருக்கக் கூடாது அல்லது இருக்க முடியாது?

இப்போதிருக்கும் ஆய்வுக் கருவிகள் இதற்கு வசதியானவையாக இல்லாமல் இருக்கலாம். அவற்றில் புதிய கண்டுபிடிப்புகள் வரும் போது இவர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம்.

இப்படியெல்லாமா இருக்கப் போகிறது என்று வியப்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படியும் இருக்கலாம் என்று தோன்றியிருப்பதே மனித மூளையின் வெற்றிதானே! இப்படித்தானே பெயர் தெரியாத எத்தனை பிரச்சனைகளுக்கு மனிதகுலம் இன்று வரை தீர்வு கண்டிருக்கிறது! இனியும் அப்படித்தான் நடக்கப் போகிறது. இது முடிவற்ற பயணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி