கொரோனா: முடிவு தெரியாத போரின் தொடக்கம்

புதிய கொரோனா நோய்க்கிருமி சீனாவின் உஹான் நகரத்திலிருந்து புறப்பட்டு உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. அதைவிடப் பற்பல மடங்கு வேகமாக அது பற்றிய புரளிகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இது போன்ற கொள்ளை நோய்கள் என்று மட்டுமில்லை, பரபரப்பாக நடப்புச் செய்திகளில் எதுவெல்லாம் புழக்கத்தில் இருக்கிறதோ அது பற்றி அலசி ஆராயும் அந்தந்தத் துறையின் வல்லுனர்களும் அந்தந்தப் பருவத்திற்கு ஏற்ப வல்லுனராகிக் கொள்கிறவர்களும் ஈசல் போலப் புறப்பட்டு வருவது நாம் அன்றாடம் காண்பதுதான். இதெல்லாம் செய்தால் அல்லது செய்யாவிட்டால் நோய் வேகமாகப் பரவும், இதெல்லாம் செய்தால் அல்லது செய்யாவிட்டால் அப்படி வேகமாகப் பரவுவதைத் தடுக்கலாம் என்பது போன்ற மருத்துவக் குறிப்புகளும் நோய்த் தடுப்பு ஆலோசனைகளும் நோயைவிட வேகமாகப் பரவுவது நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லதுதான். அத்தோடு சேர்ந்து பல புரளிகளும் பரவுவதும் எவையெல்லாம் புரளிகள் என்று விளக்கங்கள் வலம் வருவதும் இயல்பானதுதான். அதுவே வாட்சாப் வந்த பிறகு ஒவ்வொரு மனிதனும் நூறு வாய்களும் இருநூறு காதுகளும் கொண்டவனாக மாறிவிட்டது போல் ஆகிவிட்டது.

இது ஒருபுறம் என்றால், இப்படியான நடப்புச் செய்தி ஒவ்வொன்றுக்குமே மூலக்காரணம் என்று இரண்டு எதிரெதிர் கருத்துக்களோ அல்லது இன்னும் கூடுதலாகக் குழப்பும் வகையில் பல்வேறு கருத்துக்களோ அரசியல் பிழைக்கும் வெவ்வேறு சாராரால் சுற்றில் விடப் படுவதும் கூடிக்கொண்டேதான் போகிறது. உண்மையும் அவற்றுள் ஒன்றாக இருக்கிறதா என்கிற கேள்வியும் இருக்கிறது. இந்தப் புதிய கொரோனா நோய்க்கிருமி எங்கிருந்து புறப்பட்டது என்பது பற்றியும் பல்வேறு கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. அதிகபட்சம் அவற்றில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். அப்படியானால் மற்ற கதைகளும் பெரிதளவிலான மக்கள் நம்பும்படியாக எப்படி இருக்கின்றன? அவற்றுள் பல அறியாமையால் நம்பப்படுபவை என்று வைத்துக்கொண்டாலும், ஓரிரு கதைகள் நம்ப மறுக்க முடியாத அளவுக்கு உண்மை போல் இருப்பது எதனால்? எதுவுமே சாத்தியமில்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு மனித இனம் முன்னேறி (!) இருப்பதனால்தானே!

திடீரென்று உலகம் அழிந்து போவதற்கு எத்தனையோ வழிவகைகள் இருக்கின்றன. சூரியன் வெடிப்பது, பூமி வெடிப்பது, வேறொரு கோள் வந்து பூமியில் மோதிச் சிதறடிப்பது, வேற்றுலகவாசிகள் வந்திறங்குவது, தீயால் அழிவது, நீரால் அழிவது போன்ற நம்பக் கடினமானவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், நாம் அதிகம் பயப்படுவது அணு ஆயுதப் போர்களுக்குத்தான். அதுவும் ஏதோவொரு பயங்கரவாத இயக்கம் வந்து தொடங்கிவைக்கப் போவதில்லை. அப்படி ஒன்று நடந்தால் அரசபயங்கரவாதம்தான் (அல்லது பயங்கரவாத அரசுகள்தாம்) அதற்குக் காரணமாக இருக்கும். அரசுகள் செய்வதோடு ஒப்பிட்டால் பயங்கரவாத இயக்கங்கள் செய்வதெல்லாம் வெறும் பூச்சாண்டி வேலை. பயங்கரவாத இயக்கங்களின் அதிகபட்சச் சாதனை என்றால் அது ஒரு சில நூறு உயிர்களைக் கொல்வதுதான். மாறாக, உலகத்தையே அழிக்கும் ஆற்றல் சில அரசுகளிடம்தான் இருக்கிறது. அந்த அரசுகள் யாவும் தம் மக்களின் பாதுகாப்புக்காக என்று சொல்லி அம்மக்களே ஏற்றுக்கொள்ளாத பல வேலைகளைப் பின்னணியில் செய்துகொண்டிருக்கின்றன.

அணு ஆயுதப் போரைவிடவும் பயங்கரமான வேறு சில ஆபத்துகளும் இருக்கின்றன என்பது நம்மைப் போன்ற எளிய மனிதர்களுக்குத் தெரியாதது. எதிர்பாராமல் இயற்கையாகவே வரக்கூடிய ஒரு கொள்ளை நோய் மனித இனத்தையே அழித்துப்போட்டுவிட வாய்ப்பிருக்கிறது. அறிவாளி மனிதர்கள் கூடி உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஒரு நாள் அவர்களின் கையை மீறிப் போய் அவர்களையே தம் அடிமையாக்கி அழித்துப் போடலாம். எங்கோ ஆள் நடமாட்டமில்லாத ஏதோவொரு பாலைவனத்தின் நடுவிலோ வேறு ஏதோவொன்றுக்குப் பெயர் போன ஏதோவொரு பெருநகரத்தின் மையத்திலோ இருக்கும் இரகசியச் சோதனைச் சாலை ஒன்றில் அணு ஆயுதங்களை விடவும் பயங்கரமான ஆயுதங்கள் உருவாகிக்கொண்டிருக்கலாம். செயற்கை நுண்ணறிவு போல், செயற்கைக் கொள்ளை நோய்கள் (Engineered Epidemic) உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கலாம். செயற்கை நுண்ணறிவும் செயற்கைக் கொள்ளை நோய்களும் போர்க்கருவிகளாகப் பயன்படுத்தப்படலாம். இதன் உச்சபட்ச அபாயம் என்னவென்றால், இவையெல்லாமே இப்போது மிகச் சில தனிமனிதர்களின் கைகளில் இருக்கின்றன. இத்தனை கோடி ஆண்டுகளாகப் பரிணமித்து உருவான மனித இனத்தின் இருப்பு இவ்வளவு குறைந்த எண்ணிக்கையிலான தனிமனிதர்களின் கைகளில் வந்து விழுந்திருப்பது இப்போதுதான். இப்படியான சூழ்நிலையில் இப்படியான சாத்தியக்கூறுகள் எல்லாம் இருக்கின்றன என்று தெரிந்துகொண்டிருக்க வேண்டியது இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமையும் ஆகிறது.

இப்போது களத்தில் இருக்கும் கொரோனா நோய்க்கிருமி இயற்கையானதா செயற்கையானதா என்பதே அதிகார மையங்களில் இருப்பவர்களின் பெரும் பேச்சு. எங்கே உருவானதோ அந்த நாட்டின் அரசாங்கம், வௌவால் கறி சாப்பிட்டதால் வந்தது என்றோ, பாம்புக் கறி சாப்பிட்டதால் வந்தது என்றோ, வௌவால் கறி சாப்பிட்ட பாம்பின் கறியைச் சாப்பிட்டதால் வந்தது என்றோ முதலில் விளக்கம் கொடுத்தது. “சீனாதான் அடுத்த வல்லரசு, கூடிய விரைவில் மேற்குலக நாடுகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடும்” என்றெல்லாம் அறிஞர்கள் கணித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென்று கிளம்பி வந்த இந்த பூதம் சீனாவை ஓர் ஆட்டு ஆட்டிவிட்டது. “இத்தோடு சீனாவின் கதை முடிந்துவிட்டது, இனி மீண்டும் உலகம் மேற்கு நாடுகளின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்” என்று எல்லோரும் சேர்ந்து கணித்துக்கொண்டிருந்த வேளையில், மொத்த உலகத்தையும் உலுக்கத் தொடங்கிவிட்டது.

இந்தக் கிருமியின் மூலம் பற்றி முதன்முதலில் இரண்டு கதைகள் வெளியில் விடப்பட்டன. சீனாவின் வளர்ச்சியைக் கண்டு வயிறெரிந்த மேற்குலகமோ அமெரிக்காவோதான் இந்த நோய்க்கிருமியை சீனாவுக்குள் விட்டிருக்க வேண்டும் என்று ரஷ்யாவில் இருந்து ஒரு கூட்டம் ஒரு பக்கம் கொளுத்திப் போட்டது. மேற்குலகத்தை அழிப்பதற்காக சீனா உருவாக்கிக்கொண்டிருந்த நோய்க்கிருமிகள், அவர்களின் சோதனைச்சாலைகளில் இருந்து கசிந்து இப்போது அவர்களின் மக்களையே காவு வாங்கிக்கொண்டிருக்கிறது என்று இஸ்ரேலில் இருந்து ஒருவர் சொன்னார். சீனாவுக்குப் பிடித்த மாதிரி ரஷ்யா பேசுவது போல, மேற்குலகத்துக்குப் பிடித்தது போல இஸ்ரேல்காரர் தொடங்கிவைத்தார்.

இரண்டுமே நம்பக் கூடியவையாகவும் நம்ப முடியாதவையாகவும் இருக்கின்றன நமக்கு. எந்த நாட்டுக்குள்ளும் புகுந்து எதையும் செய்ய முடிகிற நாடு அமெரிக்கா. எல்லா நாட்டுப் பிள்ளைகளையும் தமக்குள் உள்வாங்கிக்கொண்டு, அவர்களின் தாய் நாட்டையே உளவு பார்க்கும் அளவுக்கு - தம் ஒற்றர் படையில் இல்லாத நாட்டினரே - மொழியினரே இல்லை என்கிற அளவுக்கு - வானளாவிய வீச்சு கொண்ட நாடு அமெரிக்கா. அதனால் அமெரிக்கா பற்றிய எந்தப் புரளியையும் எளிதில் மறுதலித்துவிட முடியாது. இது சீனாவுடனான வணிகப் போரில் அவர்களை வீழ்த்த முடிவுசெய்த டிரம்பின் வேலை என்றும் தம் நல்வாழ்வுக்காக எவருக்கும் எந்தக் கேட்டையும் செய்யத் தயங்காத அமெரிக்க மருந்து நிறுவனங்களின் வேலை என்றும் அமெரிக்க உளவுப் படைகளின் வேலை என்றும் ரஷ்யா சொல்லிவருகிறது. இது எதுவுமே நம்பவே முடியாது என்று நம்மால் மறுக்க முடிந்தவை அல்ல.

இதுவே ஒபாமாவைச் சொல்லியிருந்தால் நம்பியிருப்போமா என்றால் தெரியவில்லை. ஆனால் டிரம்ப் என்றால், “அந்த ஆள் இதெல்லாம் செய்யக்கூடிய ஆள்தான்” என்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கிறது.

அமெரிக்க மருந்து நிறுவனங்கள் அவற்றின் தொழிலுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவை என்பது அமெரிக்கர்களே வைக்கும் குற்றச்சாட்டு. புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கே இவர்கள்தாம் காரணம் என்று ஒரு கதை ஓடிக்கொண்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் எதை ஆராய வேண்டும், எதை ஆராயக்கூடாது என்பதெல்லாம் இவர்களின் இலாப-நஷ்டக் கணக்குகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மருத்துவருக்கு எப்படித் தொழில் வாய்ப்போ, குற்றவாளிகளின் எண்ணிக்கை எப்படி ஒரு வழக்கறிஞருக்குத் தொழில் வாய்ப்போ, அது போல புதிய நோய் ஒன்று கண்டுபிடிக்கப்படும் போது அது இவர்களுக்குப் புதிய தொழில் வாய்ப்பு. ‘நோய் விற்பனை’ (Disease Mongering) என்கிற பழக்கம் பற்றிக் கடந்த சில பத்தாண்டுகளாக ஏற்கனவே எவ்வளவோ எழுதவும் பேசவும் பட்டுவிட்டது. ஒரு புதிய உணவுப் பொருள் அல்லது ஒப்பனைப் பொருள் சந்தைக்குள் வரும் போது, அதை எப்படியெல்லாம் கூடுதலான மக்களிடம் எடுத்துச் செல்லலாம் - அதன் சந்தையை எப்படியெல்லாம் விரிவுபடுத்தலாம் என்று திட்டம் தீட்டுவது போல, இருக்கும் மருந்துகளுக்கான சந்தையை எப்படி விரிவுபடுத்தலாம் - பிரச்சனையில்லாத அன்றாட அனுபவங்களைக் கூட எப்படி அது ஒரு மருத்துவப் பிரச்சனையாக நம்பவைக்கலாம் - அதன் மூலம் தம் மருந்துகளை வாங்கவைக்கலாம் என்பது போன்ற தந்திரங்களை வெளியுலகத்துக்கு அவ்வப்போது அறிவித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். நுகர்வோர் பொருட்களைப் போல மருந்து விற்பனைக்கும் இலக்கு நிர்ணயிப்பதை ஏற்றுக்கொண்டிருந்த நம் மனம், மருத்துவர்களுக்கு மாதத்துக்கு எத்தனை அறுவை சிகிச்சைகள் பரிந்துரைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டது. இன்னும் ஓரடி முன்னே போய்ச் சில நிறுவனங்கள் புதிய நோய்களையே அறிமுகப்படுத்துவதாகவும் மருத்துவத் துறைக்குள் இருந்தே ஏற்கனவே பல குரல்கள் வந்திருக்கின்றன. அப்படியெல்லாம் இருக்கையில் புதிய கொரோனா நோய்க்கிருமியும் அப்படியான ஒன்றாக இருக்க சாத்தியமில்லை என்று அதற்காக வாதாட எவ்வளவு பேர் வந்துவிடப் போகிறார்கள். அப்படிப் பார்க்கையில் இவை புரளிகளாகவே இருந்தாலும் நம்புகிற மாதிரியான புரளிகள்தானே!

இதெல்லாம் நம்புகிறபடியே இருந்தாலும், இவற்றைவிட அழுத்தமாக சீனாவைச் சந்தேகிக்க நமக்கிருக்கும் காரணம், இந்த நோயின் மூலநகரமாக இருக்கும் உஹான். அங்குதான் எபோலா, சார்ஸ் போன்ற, இதற்கு முன் உலகத்தை உலுக்கிவிட்டுப் போன நோய்கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் சோதனைச்சாலை இருக்கிறது. “எபோலா, சார்ஸ் எல்லாம் முடிந்து போன கதை. இப்போது அந்தச் சோதனைச்சாலை கொரோனா போன்ற புதிய நோய்க்கிருமிகளை உருவாக்கவும் ஊட்டி வளர்க்கவும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கும் வௌவ்வால்களில் இருந்து கசிந்து வெளியேறியதுதான் இந்தக் கொடிய புதிய கொரோனா நோய்க்கிருமி” என்கிறது மேற்குலகம். அதுவும் இவர்கள் செய்துகொண்டிருக்கும் ஆராய்ச்சி ஒன்றும் மருத்துவக் காரணங்களுக்கானது அல்ல, எதிர்காலத்தில் இந்த நோய்க்கிருமியை ஓர் உயிரியல் ஆயுதமாகப் (Biological Weapon) பயன்படுத்த இருக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக என்கிறார்கள். நம்பும்படிதான் இருக்கிறது. இப்படியான கோணத்தில் சிந்திப்பதற்கு இந்த உலகத்துக்கே விளக்கமாகச் சொல்லிக்கொடுத்த பெருமை அமெரிக்காவையே சேரும். ஏனென்றால், அவர்கள்தான் இதில் முன்னோடிகள். “அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை, அதெல்லாம் புரளி, சீனா சொல்கிற மாதிரி இது ஏதோவொரு விலங்கினத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்” என்று சொல்கிற மேற்கத்தியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

1995-இல் வெளிவந்த ‘அவுட்பிரேக்’ (Outbreak) என்கிற திரைப்படம் அப்போது பெரும் அபத்தம் போல் இருந்திருக்கலாம். இப்போது பார்த்தால், இப்போது நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களுக்கும் அதற்கும் பெரிதாக இடைவெளி இல்லை. எல்லாமே நம்பும்படியாகத்தான் இருக்கிறது. அல்லது அப்படியான படங்களைக் காட்டி நம்மை இவற்றையெல்லாம் நம்பப் பழக்கிவிட்டார்களா என்றும் தெரியவில்லை. ‘ஒரு மருத்துவப் பிரச்சனையில் இராணுவத்துக்கு என்ன வேலை?’, ‘அதெப்படி ஒரு கிருமியைப் போய் ஆயுதமாகப் பயன்படுத்த முடியும்?’, ‘ஏதேதோ ஆயுதங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அதென்ன உயிரியல் ஆயுதம்?’ என்றெல்லாம் அன்று நம்ப மருத்துவர்களை இன்று கொரோனா நிற்கவைத்துக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஆமாம், அதென்ன உயிரியல் ஆயுதம்? பேரழிவு ஆயுதங்கள் (Weapons of Mass Destruction) எனப்படுவதில் அணு ஆயுதம் (Nuclear), வேதியல் ஆயுதம் (Chemical), உயிரியல் ஆயுதம் (Biological) எனும் மூன்று வகையான ஆயுதங்கள் இருக்கின்றன. இராணுவ உலகில் இதை NBC என்கிறார்கள். நாம் இயற்பியல், வேதியல், உயிரியல் என்று படித்ததெல்லாம் எங்கு வந்து நிற்கிறது பாருங்கள்! இவை மூன்றில் உயிரியல் ஆயுதங்கள் மற்ற இரண்டையும் விடப் பல மடங்கு கூடுதலாக மனிதர்களைக் கொன்று குவிக்க வல்லவை - முக்கியமாக அப்பாவி மக்களை அழிப்பதில் மிகக் கொடுமையானவை. தாக்குதலைத் தொடங்கிவைத்துவிட்டால் யார் நினைத்தாலும் நிறுத்தவே முடியாது. அணு குண்டு போலவோ வேதிக் குண்டு போலவோ எண்ணிப் போட்டுவிட்டு எதிரி பயந்து வழிக்கு வந்ததும் நிறுத்திக்கொள்ள முடியாது. ஒரு நோய்க்கிருமியைக் கொண்டு போய் ஒரேயோர் ஊருக்குள் விட்டுவிட்டால் போதும். அது தரைவழி, வான்வழி, காற்றுவழி என்று நிற்காமல் பரவிக்கொண்டே இருக்கும். உயிர்களை அள்ளி அள்ளிக் குடித்துக்கொண்டே பயணித்துக்கொண்டே இருக்கும். இதைப் போரில்தான் பயன்படுத்த வேண்டுமென்றில்லை. எல்லாம் அமைதியாக இருக்கும் காலத்திலேயே பயன்படுத்தலாம். சத்தமில்லாமல் எங்கிருந்து புறப்பட்டது என்ற தடயமே இல்லாமல் இறக்கிவிட்டுவிடலாம். கட்டடங்களையும் பாலங்களையும் சாலைகளையும் அப்படியே விட்டுவிட்டு உயிர்களை மட்டும் காலிசெய்துவிடும். அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது என்றுதான் சதிக்கதையாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மற்ற ஆயுதங்களைப் போலன்றி, உயிரியல் ஆயுதங்களைப் பார்க்க முடியாது, உணர முடியாது, நுகர முடியாது. அதற்கெல்லாம் மேல், இதற்கான செலவு, அணு குண்டு மற்றும் இதர ஆயுதங்கள் தயாரிப்பதைவிட ஆயிரம் மடங்கு குறைவு. முதலில் ஒரு குறிப்பிட்ட விதமான கிருமியை உருவாக்குவதற்காகச் செய்யப்படும் ஆய்வுக்கான செலவுதான் பெரிய செலவு. வேண்டிய விதத்தில் கிருமியை உருவாக்கியபின், அதையே பெருமளவில் உற்பத்தி செய்வதற்கு ஆய்வுக்கூடம் எல்லாம் வேண்டியதில்லை. ஒரு கொட்டிலில் உட்கார்ந்துகொண்டு வேகவேகமாகத் தயாரித்து மிக எளிதாக வெளியிட்டுவிடலாம். இந்த எளிமைதான் இது அரசல்லாத பயங்கரவாத இயக்கங்களின் கைகளில் போய் விழுந்தால் அது எவ்வளவு பெரிய அபாயத்தை சாத்தியப்படுத்தும் வாய்ப்பிருக்கிறது என்று எல்லோரையும் பயமுறுத்துவது.

இதிலும் உலக நாடுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலையில் இருக்கின்றன. பழைய உடைந்து போன போர் விமானங்களையும் துப்பாக்கிகளையும் குறைந்த விலைக்கு (அதிலும் ஊழல் செய்து) வாங்கி ஓட்டிக்கொண்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளைப் போல ஏற்கனவே மருந்து கண்டுபிடிக்கப்பட்ட நோய்க்கிருமிகளை வைத்துக்கொண்டிருக்கும் நாடுகளும் இருக்கலாம். இன்னும் ஊருக்குள் வந்துவிடாத புத்தம்புதிய நோய்க்கிருமிகளை ஆராய்ச்சி செய்து வைத்திருக்கும் நாடுகளும் இருக்கலாம். அதிலும் தம்மை மட்டும் காத்துக்கொள்ளும் வகையில் மருந்து கண்டுபிடித்து வைத்துக்கொண்டுள்ள நாடுகளும் இருக்கலாம். ஏனென்றால், அசந்தால் ஏவியவர்களையே அழித்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. உயிரியல் ஆயுதங்களின் சிறப்பே அதுதான்.

இதைப் புரிந்துகொள்வதற்கு, ஒரு பேச்சுக்கு, ரஷ்யாவில் சிலர் சொல்வது போல, இது அமெரிக்கா சீனாவுக்குள் இறங்கிவிட்ட கிருமி என்ற கதையைக் கருதுகோளாக வைத்துக்கொண்டு எண்ணிப் பார்ப்போம். எவ்வளவு வேகமாக அது அமெரிக்காவுக்குள்ளேயே வந்துவிட்டது பாருங்கள். கொரோனாக்கிருமி விஷயத்தில் இது உண்மையே இல்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் நாளை எவர் எவர் மீது இது போன்ற ஒரு கிருமியை ஏவிவிட்டாலும் அது அதே வேகத்தில் ஏவிவிட்டவர்களையே திரும்பிவந்து தாக்க முடியும் என்பதைத்தான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். உலகம் அந்த அளவுக்கு இப்போது ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து ஒன்றாகி இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கும் பயங்கரவாத அரசுகள் யாவும் இதையெல்லாம் மனதில் வைத்துச் செயல்பட வேண்டும். செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உயிரணுக்களை மட்டும் அழிக்கும் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப் போய், ஒரு குறிப்பிட்ட மரபணு அமைப்பு கொண்டவர்களை மட்டும் தாக்கி அழிக்கும் வகையிலான கிருமிகளைத் தயாரிக்கும் ‘இன உயிரியல் ஆயுதம்’ (Ethnic Biological Weapon) எனும் தொழில்நுட்பம் கூடியவிரைவில் சாத்தியமாகிவிடும் என்கிறது பிரித்தானிய மருத்துவக் கழகம் (British Medical Association). உலக அரங்கில் பயங்கரவாத இயக்கங்களைவிட வேகமாகப் பயங்கரவாதமயமாகிவரும் சில பயங்கரவாத அரசுகள் போகிற போக்கைப் பார்த்தால், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக எந்த இழிநிலைக்கும் இறங்கத் தயங்காத கூட்டங்கள், குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் அழிக்கும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பதைத் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு அறுதிப் பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் காட்சிகளைக் காணப்போகும் காலம் கூட வெகுதொலைவில் இல்லை போலத் தெரிகிறது. “என் நாட்டின் அணுகுண்டுப் பொத்தான்கள் என் கைக்கருகில்தான் இருக்கின்றன!” என்று ஒரு பள்ளிச் சிறுவனைப் போலக் குதியாட்டம் போடும் ஒரு கோமாளித் தலைவன், இனவெறி பிடித்த அவனுடைய மக்களின் ஏகோபித்த ஆதரவோடு உலக வல்லரசுகளில் ஒன்றுக்குத் தலைவனானால் இந்த உலகம் எப்படியான ஓர் அபாயத்துக்குள் போய் சிக்கிக்கொள்ளும் என்று எண்ணிப் பாருங்கள்.

ஒரு மனிதனின் தலையிலிருந்து ஒரேயொரு முடியைப் பிடுங்கிக் கொடுத்தால் அவனை மட்டும் குறிவைத்துத் தாக்கும் செயற்கைக் கிருமிகளை உருவாக்கி ஏவமுடிகிற அளவுக்கு அறிவியல் ஆராய்ந்துகொண்டிருக்கிறது. கேட்பதற்கு நம்மூரில் செய்வினைக்கு மை வைக்கிற கதை போல இருக்கிறது. இது ஒரு குடிசைத் தொழில் போலப் பரவிவிடுகிற காலத்தை நினைத்துப் பாருங்கள். துப்பாக்கி விற்பதைப் பெட்டிக்கடை வணிகம் போல மாற்றிவிட்ட நாடுகள் இதையெல்லாம் செய்வதற்குத் தயங்கிவிடவா போகின்றன!

கொரோனா கிளப்பியிருக்கும் அரசியல் கேள்விகள் ஏராளம். சீனாவுக்குள்ளிருந்து புறப்பட்ட ஒரு கிருமி, அதற்குப் பக்கத்தில் இருக்கிற மங்கோலியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் மியான்மருக்கும் பரவியதைவிட வேகமாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் பரவியிருப்பது இன்னும் குழப்பத்தை உண்டுபண்ணுகிறது. சீனாவின் இன்றைய வணிக வீச்சை வைத்துப் பார்த்தால், அமெரிக்காவுக்கும் இதர பணக்கார நாடுகளுக்கும் பரவியதில் கூட வியப்பேதும் இல்லை. இந்தியாவோடு நீண்ட எல்லையைப் பகிர்ந்துகொண்டிருந்தாலும் அந்த அளவுக்கு வணிகத் தொடர்புகள் பெரிதாக இல்லை என்றும் வைத்துக்கொள்வோம். ரஷ்யாவோடு அப்படியில்லை. காலங்காலமாக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அங்கு இன்னும் நுழைந்த மாதிரியே தெரியவில்லையே. அடுத்து, சீனாவுக்கும் ஈரானுக்கும் அப்படி என்ன நெருக்கம்? இதுதான் ஈரானின் சந்தேகங்களுக்குத் தீனி போடுவதாக இருக்கிறது. இதெல்லாம் சற்றுத் தொடங்குவதற்கு முன்புதான் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பிரச்சனைகள் பெரிதாகப் புகைந்துகொண்டிருந்தன. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலும் போலவே. அதையெல்லாம் வைத்துப் பார்க்கையில், சீனாவுக்கு நண்பனுமற்ற எதிரியுமற்ற - ஆனால் அமெரிக்காவுக்கு எதிரியான ஈரான் எப்படி இந்தச் சமன்பாட்டுக்குள் வந்தது? சரி, ஈரான் அமெரிக்காவுக்கு எதிரி. இத்தாலி என்ன செய்தது? சென்ற ஆண்டுதான் மேற்குலகத்தின் மொத்த எதிர்ப்பையும் மீறி சீனாவை ஐரோப்பாவோடு இணைக்கும் தரைவழிப் பாதையான சீனாவின் புதிய பட்டுச் சாலை (New Silk Road) ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இதற்கெல்லாம் அமெரிக்கா கொடுக்கும் தண்டனைதான் இந்தக் கொள்ளை நோய் என்கிறது ரஷ்யாவிலிருந்து ஒரு கூட்டம். இத்தாலியைத் தங்களில் ஒருவர் போல ரஷ்யா பேசுவதும், இத்தாலிக்கு உதவ அமெரிக்காவைவிட வேகமாக சீனாவும் கியூபாவும் மருத்துவர்களை அனுப்புவதும் உலக அரசியலில் ஒரு புதிய அணிசேர்கை ஏற்பட்டுக்கொண்டிருப்பதை நமக்குத் தெளிவாக அறிவிக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் இத்தாலி அலறியடித்துக்கொண்டு, “ஆளை விடுங்கடா சாமி. பட்டுச் சாலையெல்லாம் வேண்டாம்!” என்று ஓடிவரலாம். அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக சீனாவும் கியூபாவும் இப்படிப் பாய்ந்து பாய்ந்து உதவலாம்.

ஏற்கனவே இருக்கும் பல கேள்விகளுக்கு நடுவில் புதிதாக வந்திருக்கும் கேள்வி - “தொடங்கிவைத்தது யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். அல்லது இயற்கையானதாகவே இருக்கட்டும். ஆனால் பரவத் தொடங்கியபின், மருந்து நிறுவனங்களின் வியாபாரிகளைப் போல இராணுவங்களும் உள்ளே புகுந்து அவர்களுக்கு வேண்டிய வேலைகளில் இறங்கிவிட்டார்களா?” என்பதுதான்.

போர் வீரர்கள் எதிரிப் படைகளை நேருக்கு நேர் மோதி அழிப்பது ஒரு புறம் நடந்துகொண்டிருக்கையில் எதிரி நாட்டுக் கிணற்றில் நச்சு கலந்து பொது மக்களையும் குழந்தைகளையும் அழிக்கும் புத்திதான் மனித குலத்தை இங்கு வந்து விட்டிருக்கிறது.

இவற்றையே அரசுகள் பயன்படுத்தினால் அதற்கு உயிரியல் போர் (Bio War) என்று பெயராம். அரசல்லாத அமைப்புகள் செய்தால் அதற்குப் பெயர் உயிரியல் பயங்கரவாதமாம் (Bio Terrorism). ஒரு போரில் உயிரியல் ஆயுதத்தைப் பயன்படுத்திவிட்டால் அது போர்க் குற்றம் (War Crime) ஆகிவிடும் என்றும் பல சர்வதேச ஒப்பந்தங்கள் கூறுகின்றன. இத்தகைய உயிரியல் ஆயுதங்களைத் தயாரிப்பது, சேகரித்துவைப்பது, பயன்படுத்துவது போன்ற வேலைகளை 1972 உயிரியல் ஆயுத வழக்காறு (Biological Weapons Convention - BWC) தடைசெய்கிறது. இதை 170 நாடுகள் ஏற்றுக்கொண்டும் உள்ளன. கொடுமை என்னவென்றால், இதில் கையெழுத்திட்ட நாடுகளில் பல தமக்கு எதிராக அப்படி ஏதேனும் உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அதில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக என்று சொல்லிக்கொண்டு அவற்றைக் கொண்டு ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருக்கின்றன. இதை அந்த வழக்காறு தடை செய்யவில்லை. தற்காப்புக்காகத் தயாராகிக்கொள்வதைப் பாராட்டத்தானே முடியும்! தடை எப்படிச் செய்ய முடியும்? ஆனால் தற்காப்புக்காகத் தயாராகிக் கொள்வதில் தற்காப்புக்காகத் தயாரிப்பதும் அடங்கியுள்ளதா, தயாரிப்பு மட்டும் செய்யாமல் (அதாவது உற்பத்தி செய்யாமல்) தேவைப்பட்டால் உடனடியாகத் தயாரித்துக்கொள்ளும் விதத்தில் தயாராகிக்கொள்வது அடங்கியுள்ளதா, பெரிய அளவில் போர் என்று மூண்டுவிட்டபின் யார் எதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்தும் அளவுக்குக் கட்டுப்பாட்டு முறைமைகள் இருக்கின்றனவா என்பதெல்லாம் தெளிவாகத் தெரியவில்லை.

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் ரஷ்யாவும் அமெரிக்காவும் போட்டி போட்டுக்கொண்டு ஜெர்மனியின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களைக் கவ்விக்கொண்டு சென்றன. ரஷ்யா ஒசாவாவியாக்கிம் நடவடிக்கை (Operation Osoaviakhim) என்ற பெயரிலும் அமெரிக்கா பேப்பர்கிளிப் நடவடிக்கை (Operation Paperclip) என்ற பெயரிலும் இந்த வேலையைச் செய்தன. ஜெர்மனியின் அறிவியல் மூளைகள் அனைத்தையும் கவ்விக்கொண்டு போய் இவர்கள் இருவரும் அடித்துக்கொண்டு சாவதற்குப் பயன்படுத்தினர். அதில் ஒரு குழுவினர் முழுக்க முழுக்க உயிரியல் ஆயுதங்கள் பற்றிய ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டனர். கொரியப் போரிலும் கியூபாவுக்கு எதிராகவும் அமெரிக்கா ஏற்கனவே உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தியிருப்பதாக அமெரிக்காவுக்கு உள்ளேயே பலர் வெளிப்படையாகச் சொல்கிறார்கள். அது மக்களாட்சி அவர்களுக்குக் கொடுத்திருக்கும் வசதி.

இப்படிப் பச்சையாக எதையும் சீனாவில் இருப்பவர்கள் பேச முடிவதில்லை. அதுவே இந்த நோய்க்கெதிரான போரில் சீனாவுக்கு உதவவும் செய்தது. தேவையற்ற புரளிகளைப் பரப்புவதில் நேரத்தை வீணடிக்காமல் மொத்த தேசமும் ஒரு நகரத்தைக் காக்க களத்தில் இறக்கிவிடப்பட்டன. நம்மூரில் இடைத்தேர்தலில் வேலை செய்வது போல, ஒவ்வொரு மாகாணமும் உஹானைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பகுதிக்கென்று பொறுப்பெடுத்து வேலை செய்து காப்பாற்றின. எண்ணற்ற மருத்துவப் பணியாளர்களும் தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு குடிமகனையும் சோதனை செய்து வேண்டிய வேலைகளைச் செய்தனர். பத்தே நாட்களில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஒரு புதிய மருத்துவமனையைக் கட்டி, பன்னிரண்டு நாட்களில் 1400 படுக்கைகள் கொண்ட இன்னொரு புதிய மருத்துவமனையைக் கட்டி, அமெரிக்காவின் வழிகாட்டுதல்களை மீறமுடியாத உலக சுகாதார அமைப்பிடமே நற்பெயர் வாங்கும் அளவுக்குத் துரிதமாகச் செயல்பட மக்களாட்சி எவ்வளவு உதவும் என்று தெரியவில்லை.

எதிரி மண்ணில் இருந்து ஏவப்படும் ஏவுகணை ஒன்றைக் கண்டறிந்து வீழ்த்தும் தொழில்நுட்பம் போல, உயிரியல் ஆயுதங்கள் ஏவப்படுவதை உடனடியாகக் கண்டறியும் தொழில்நுட்பம் இன்னும் உருவாகவில்லை. அதற்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கலாம். மனித குலத்துக்கு இது ஒரு பெரும் விடியலாக இருக்கலாம். அதே வேளையில், கணிப்பொறிக் கிருமிகளைப் போல புதிது புதிதாகக் கிருமிகள் கண்டுபிடிக்கப்படுவதும், அதே வேகத்தில் உடனடியாக அவற்றைக் கண்டறிந்து அழிக்கும் தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்படுவதும், அதைவிட வேகமாக உடனடியாக அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு உள்ளிறங்கி அழிக்கும் புதிய கிருமிகள் கண்டுபிடிக்கப்படுவதும் என்று இந்த விளையாட்டு முடிவில்லாமல் நீளலாம். வல்லரசுகளுக்கு இது ஒரு பெரும் வணிகம் ஆகலாம்.

துப்பாக்கி எங்கு நின்று சுட்டாலும் சுடும். அணுகுண்டு எங்கு போட்டாலும் வெடிக்கும். ஆனால் இயற்கையாக உருவான கிருமிகளை ஓரிடத்தில் இறங்கிவிட்டால் அவை அப்படியே இறங்கி வேலை செய்யும் என்ற உத்திரவாதம் கிடையாது. அது உயிரோடிருந்து வேலை செய்வதற்கென்று குறிப்பிட்ட தட்பவெப்பநிலை இருக்க வேண்டும். அதையும் மீறி எல்லாத் தட்பவெப்ப நிலையிலும் வேலை செய்கிற மாதிரியான கிருமிகள் உருவாக்குவதைத்தான் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்த ஆராய்ச்சியாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இன்னின்ன நோய்களை அறிவியல்தான் மருந்து கண்டுபிடித்து அழித்தது என்று புள்ளிவிவரம் சொல்பவர்கள், அதே அறிவியல் எந்த மனிதத்தன்மையும் இல்லாமல் சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள் உட்பட இந்த உலகத்தில் வாழும் அப்பாவி மனிதர்களை எல்லாம் அழித்துப்போடுவதற்காக என்னென்ன புதிய நோய்களைக் கண்டுபிடித்துக்கொண்டு இருக்கிறது சொல்வதில்லை. புதிய கொரோனா என்ற இந்தக் கிருமி இயற்கையாகவே நிகழ்ந்த ஏதோவொரு விபத்தில் புறப்பட்டதாகவே இருந்தாலும், கிருமிகள் விஷயத்தில் மனிதர்கள் என்னென்ன விஷப்பரீட்சைகள் எல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உலகளவில் பேச வைத்திருக்கிறது. இது பற்றிய முழுமையான விவரங்களை அதிகபட்ச மக்களின் மனச்சாட்சிக்கு முன் எடுத்துச்சென்று நிற்கவைத்து எல்லோரையும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய கடமை இந்த உலகத்தின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருக்கிறதுதானே!

* ஏப்ரல் 2020 கணையாழியில் வெளியானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்