நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்
Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat
ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன். இந்தச் சிறப்பு அத்தியாயத்துக்காக மிக்க மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் உணர்கிறேன். ஏனென்றால், இன்று ஒரு சிறப்பு விருந்தினர் நம்முடன் இணைகிறார். அந்தச் சிறப்பு விருந்தினர் எனக்கு மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு நாயகன். துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இருவருமே சுயதனிமையில் இருக்கிறோம். இது ஒரு சிறப்புச் சந்தர்ப்பமும் கூட. அறிமுகத்தை இன்னும் நீட்டிக்காமல்... இதைப் பார்க்கும் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு நோம் சோம்ஸ்கி யாரென்று தெரியும். நோம் இன்று நம்மோடு இணைகிறார் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஹலோ நோம்! எங்கே இருக்கிறீர்கள்? ஏற்கனவே சுயதனிமையில் இருக்கிறீர்களா? எவ்வளவு காலம்? இதையெல்லாம் எங்களுக்குச் சொல்வீர்களா?
நோம் சோம்ஸ்கி: நன்று, நான் அரிசோனா மாநிலம் டுசாயன் நகரத்தில் சுயதனிமையில் இருக்கிறேன்.
ஸ்ரெச்கோ: சரி, நீங்கள் 1928-இல் பிறந்தீர்கள். எனக்குத் தெரிந்தவரை உங்கள் முதல் கட்டுரையை நீங்கள் பத்து வயதாக இருக்கும் போது எழுதினீர்கள். அது ஸ்பானிய உள்நாட்டுப் போர் பற்றிய கட்டுரை. அதாவது, பார்சிலோனா வீழ்ச்சிக்குப் பிறகு. அது 1938-இல். என் தலைமுறைக்கு இது மிகவும் தொலைவில் நடந்தது போல் தெரிகிறது. நீங்கள் இரண்டாம் உலகப்போரிலிருந்து தாக்குப்பிடித்திருக்கிறீர்கள். ஹிரோஷிமாவில் நடந்ததற்கான சாட்சியாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் பல மிகப்பெரும் முக்கிய அரசியல் - வரலாற்று நிகழ்வுகளுக்குச் சாட்சியாக இருந்திருக்கிறீர்கள். வியட்நாம் போரில் தொடங்கி, எண்ணெய் நெருக்கடி வரை, பெர்லின் சுவர் வீழ்ச்சி வரை… அதற்கு முன் செர்நோபில் நிகழ்வுக்குச் சாட்சியாக இருந்திருக்கிறீர்கள். அதன் பிறகு, 90-களில் உலகளாவிய நிகழ்வான 9/11-க்கு வழிவகுத்த வரலாற்று நிகழ்வுகளுக்கும், மிகச் சமீபத்தில்… ஒரு நீண்ட வரலாற்றை - உங்களைப் போன்ற ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கிச் சொல்ல முயல்கிறேன்… ஆனால் உங்களைப் போன்ற ஒருவருக்கு மிகச் சமீபத்திய நிகழ்வு என்றால் 2007-2008-இல் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சி. எனவே, அத்தகைய வளமான வாழ்க்கையை வாழ்ந்தவர் - இப்பெரும் வரலாற்று நிகழ்முறைகளில் ஒரு சாட்சியாகவும் பங்காளராகவும் இருந்தவர் என்ற இந்தப் பின்னணியில், தற்போதைய இந்தக் கொரோனாக்கிருமி நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்? இது ஒரு வரலாறு காணாத வரலாற்று நிகழ்வா? உங்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறதா? இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அதுவே என் கேள்வி.
நோம்: என்னைத் துரத்திக்கொண்டிருக்கும் என் ஆதி கால நினைவுகள் எவை என்றால் அவை 1930-களில் இருந்து எனலாம். நீங்கள் குறிப்பிட்ட பார்சிலோனா வீழ்ச்சி பற்றிய கட்டுரை, முக்கியமாக ஐரோப்பா முழுமைக்கும் இரக்கமில்லாமல் பரவிக்கொண்டிருந்த பாசிசக் கொள்ளைநோயின் பரவல் மற்றும் அது எப்போது முடியும் என்பது பற்றியது. போர் வருகிறது என்பதும் போருக்குப் பின் அமெரிக்க ஆதிக்கத்துக்கு உள்ளான வான்வெளி என்றும் ஜெர்மானிய ஆதிக்கத்துக்கு உள்ளான வான்வெளி என்றும் இரண்டாகப் பிரிந்துதான் போர் முடிவுக்கு வரும் என்றும் அந்நேரத்திலும் அதற்குப் பின் சில ஆண்டுகளும் அமெரிக்க அரசிலிருந்த ஆய்வாளர்கள் எதிர்பார்த்திருந்தார்கள் என்பது பிற்காலத்தில், அதுவும் நீண்ட காலம் கழித்து, உள் ஆவணங்கள் வெளிவந்த போதுதான் புரிந்தது. எனவே என் இளம் பருவ அச்சங்கள் அனைத்தும் முழுமையாகப் பிறழ்ந்துவிடவில்லை. அந்த நினைவுகள் இப்போது மீண்டும் வருகின்றன. நான் சிறு குழந்தையாக இருந்த போது ஹிட்லரின் நியூரம்பெர்க் பேரணி உரைகளை வானொலியில் கேட்ட அனுபவத்தை இப்போது நினைவுகூர முடிகிறது. சொற்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் மனநிலையையும் அச்சுறுத்தலையும் மற்றவற்றையும் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. இன்று டொனால்ட் ட்ரம்பின் பேரணிகளைக் கேட்கும் போது அது எதிரொலிக்கிறது என்பதை இப்போது சொல்ல வேண்டும். இவர் ஒரு பாசிசவாதி என்றில்லை. அந்த அளவுக்கெல்லாம் இவரிடம் சிந்தாந்தம் எதுவுமில்லை. இவர் ஒரு சமூகவிரோத மனநோயாளி (sociopath). அவ்வளவுதான். ஆனால் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் தனிமனிதன். ஆனால் இந்த மனநிலையும் அச்சமும் அப்போது பார்த்தது மாதிரியே இருக்கிறது. ஆனால் இந்த நாட்டின் மற்றும் உலகத்தின் தலைவிதி ஒரு சமூகவிரோத மனநோய்க் கோமாளியின் (sociopathic buffoon) கைகளில் இருக்கிறது என்கிற சிந்தனை அதிர்ச்சியூட்டுகிறது.
கொரோனாக்கிருமியே போதுமான அளவு தீவிரமானதுதான். ஆனால் இதைவிடப் பல மடங்கு பெரிய கோரம் ஒன்று நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் நினைவூட்டுவது பயனுள்ளதாக இருக்கும். மனிதகுல வரலாற்றிலேயே நடந்திருக்கும் எதைவிடவும் பல மடங்கு மோசமான ஒரு பேரழிவின் விளிம்பை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்தப் படுகுழி நோக்கிய ஓட்டத்தில் டொனால்ட் ட்ரம்பும் அவரது அடிப்பொடிகளும் முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், நாம் சந்தித்துக்கொண்டிருக்கிற பெரும் அச்சுறுத்தல்கள் இரண்டு இருக்கின்றன. ஒன்று, ஆயுதக் கட்டுப்பாட்டு ஆட்சியின் கைகளில் எஞ்சியிருந்தவற்றையும் கிழித்துப்போட்டதன் மூலம் மேலும் மோசமாகியிருக்கும் - வளர்ந்து வரும் அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல். இன்னொன்று, நிச்சயமாக, வளர்ந்து வரும் அச்சுறுத்தலான புவிசூடாதல். இரண்டு அச்சுறுத்தல்களையுமே சமாளிக்க முடியும். ஆனால் நேரம் நிறைய இல்லை. கொரோனாக்கிருமி கொடுமையான கொள்ளைநோய்தான். அதனால் திகிலூட்டும் விளைவுகள் இருக்கலாம். ஆனால் அதற்கு மீட்சி இருக்கும். ஆனால் மற்ற இரண்டுக்கும் மீட்சியே இராது. அத்தோடு முடிந்தது. அவ்வளவுதான். அவற்றை நாம் கையாளாவிட்டால், நம் கதை முடிந்தது. எனவே என் இளம் பருவத்து நினைவுகள் என்னைத் துரத்திக்கொண்டுதான் இருக்கின்றன, ஆனால் இப்போது வேறொரு பரிமாணத்தில் வருகின்றன. அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல்... ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும் தீர்ப்பு நாளுக்கான கடிகாரம் மாற்றியமைக்கப்படுகிறது, அதாவது முடிவு என்பது நள்ளிரவு என்று வைத்துக்கொண்டால் நிமிட முள் எங்கிருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது, அதன்படி ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும், அதாவது ஒவ்வொரு ஜனவரியிலும் அதைப் பார்த்து உலகம் உண்மையிலேயே எங்கே இருக்கிறது என்று ஓரளவு புரிந்துகொள்ள முடியும். ஆனால் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து நிமிட முள் இன்னும் இன்னும் நள்ளிரவுக்கு மிக அருகில் நகர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நள்ளிரவுக்கு இரண்டு நிமிடங்கள் இருந்தன. இதுவரை நாம் அடைந்ததிலேயே இதுதான் மிகப்பெரும் உச்சம். இந்த ஆண்டு, ஆய்வாளர்கள் நிமிடங்களைத் தூக்கிப்போட்டுவிட்டார்கள். இப்போது நொடிகளில் கணக்கிடத் தொடங்கிவிட்டார்கள். நள்ளிரவுக்கு 100 வினாடிகள் இருக்கின்றன. இதுதான் இதுவரை இருந்ததிலேயே நெருக்கமான தொலைவு. அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல், புவி சூடாதல் அச்சுறுத்தல், மக்களாட்சியின் சீரழிவு (மக்களாட்சி இந்த இடத்துக்குப் பொருத்தமானதில்லை என்றாலும் இந்த நெருக்கடியை முறியடித்து வெளியேற அது ஒன்றுதான் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை, ஏனென்றால் அது மக்கள் அவர்களின் தலைவிதியைத் தம் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கவிடும். இது நடக்காவிட்டால் நம் கதை முடிந்தது!) ஆகிய மூன்று விஷயங்களைப் பார்க்கும் போது… சமூகவிரோத மனநோய்க் கோமாளிகளிடம் நம் தலைவிதியை விட்டால் நாம் முடிந்தோம். அவ்வளவுதான். அம்முடிவு மிக நெருக்கமாக வந்துகொண்டிருக்கிறது. டிரம்ப்தான் ஆகப்படுமோசம். ஏனென்றால் அமெரிக்காவின் மூச்சுமுட்டும் அதிகாரம் அப்படி. அமெரிக்காவின் சரிவு பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். உலகத்தைப் பாருங்கள். மற்ற நாடுகள் மீது பொருளியல் தடைகளை, கொலைகாரத்தனமான - பேரழிவு விளைவிக்கும் பொருளியல் தடைகளைப் போட முடிகிற ஒரே நாடு அமெரிக்காதான். இவர்கள் சொல்வதை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். ஐரோப்பாவுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஈரான் மீதான நடவடிக்கைகளை ஐரோப்பா வெறுக்கிறது. ஆனாலும் கடைபிடித்துத்தான் ஆக வேண்டும். எஜமானன் சொல்வதை எல்லோரும் கடைபிடித்துத்தான் வேண்டும். இல்லாவிட்டால், சர்வதேச நிதி அமைப்பை விட்டுத் தூக்கிவீசப்படுவார்கள். இது இயற்கையின் சட்டம் அல்ல. வாஷிங்டனில் இருக்கும் எஜமானனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட முடிவு. மற்ற நாடுகளுக்கு அந்த வாய்ப்புக் கூடக் கிடையாது.
கொரோனாகிருமிக்கு வருவோம். இதில் அதிர்ச்சியளிக்கும் கடினமான கூறு என்னவென்றால், வலியைக் கூட்டுவதற்காகவே பொருளியல் தடைகளைப் பயன்படுத்துதல் - அதையும் முழு மனதோடு வேண்டுமென்றே செய்தல். ஈரான் பெரும் உள்நாட்டுப் பிரச்சனைகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் ஒரு மண்டலத்தில் இருக்கிறது. ஆனால் திட்டமிட்டு வெளிப்படையாகவே வடிவமைக்கப்பட்ட பொருளியல் தடைகள் மூலம் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு இறுக்கி அவர்களை இப்போது கசக்கக் கசக்கத் துன்பத்துக்குள்ளாக்குகிறது அமெரிக்கா. விடுதலை பெற்ற வேளையிலிருந்து க்யூபா இன்னும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதிலெல்லாம் இருந்து அவர்கள் தாக்குப்பிடித்தார்கள் என்பதும் மீள்திறனோடு நின்றார்கள் என்பதும் திகைக்கவைக்கிறது. இந்தக் கொரோனாக்கிருமி நெருக்கடியின் பெரும் வேடிக்கைகளில் ஒன்று என்னவென்றால், க்யூபா ஐரோப்பாவுக்கு உதவிக்கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இதை எப்படி விளக்குவதென்றே தெரியவில்லை. ஜெர்மனியால் கிரீஸுக்கு உதவ முடியாதாம். ஆனால் க்யூபா ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுமாம். அதற்கு என்ன அர்த்தம் என்று யோசித்துப் பார்க்க ஒரு கணம் நின்றால், சொற்கள் அனைத்தும் தோற்றுப்போய்விடுகின்றன. இது மத்தியத்தரைக்கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் சாவதையும் நூற்றாண்டுகளாகப் பேரழிவுக்குள்ளாகியிருக்கும் அப்பகுதியிலிருந்து மக்கள் தப்பி ஓடுவதையும் சாவதற்காகவே மத்தியத்தரைக்கடல் பகுதிக்கு ஆட்கள் அனுப்பிவைக்கப்படுவதையும் பார்க்கும் போது ஏற்படுவது போலவே, என்ன சொற்களைப் பயன்படுத்துவது என்றே தெரியவில்லை. இந்த நெருக்கடி, மேற்குலக நாகரிகத்தின் தற்போதைய இந்த நெருக்கடி, பெரும் நாசமாக இருக்கிறது. இவை பற்றி எண்ணும் போது இரையும் கூட்டங்களுக்கு முன் வானொலியில் ஹிட்லர் பிதற்றியவற்றைக் கேட்ட இளம் பருவ நினைவுகள் வரத்தான் செய்கின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது, ‘இந்த உயிரினம் சாத்தியம்தானா’ (‘if this species is viable’) என்கிற வியப்பு கூட வருகிறது.
ஸ்ரெச்கோ: மக்களாட்சியின் நெருக்கடி பற்றிக் குறிப்பிட்டீர்கள். இந்த நேரத்தில் வரலாறு காணாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம் என நினைக்கிறேன். அதாவது, இன்றுதான் இந்த எண்ணைக் கண்டறிந்தேன், கிட்டத்தட்ட 2 பில்லியன் (200 கோடி) மக்கள், தனிமைப்படுத்தப்பட்டு, சுய தனிமையில் அல்லது ஒதுக்கப்பட்டு என்று ஏதோவொரு வகையில் வீட்டுக்குள் அடைபட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 200 கோடிப்பேர் வீட்டில் இருக்கிறார்கள் - அதற்கு வீடு வைத்திருக்கும் அளவுக்கு நற்பேறு பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதே நேரம், ஐரோப்பாவும் மற்ற நாடுகளும் தம் எல்லைகளை - உள் எல்லைகளை மட்டுமன்றி வெளி எல்லைகளையும் - மூடியிருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம். நமக்குத் தெரிந்த எல்லா நாடுகளிலும் விதிவிலக்கு உடைமை (estate of exception) இருக்கிறது. அதாவது, பிரான்ஸ், செர்பியா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தெருக்களில் ராணுவம் இறங்கியிருக்கிறது. ஒரு மொழியியலாளர் என்ற வகையில் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். இப்போது சுற்றில் இருக்கும் மொழி, டொனால்ட் டிரம்ப் மட்டுமல்ல, மக்ரோன் மற்றும் வேறு சில ஐரோப்பிய அரசியல்வாதிகளும் கூடப் பேசுவதைக் கேட்டீர்கள் என்றால், அவர்கள் தொடர்ந்து போர் பற்றியே பேசுகிறார்கள் என்பதைக் கேட்பீர்கள். ஊடகங்களும் முதல் - ‘முன்வரிசையில்’ நின்று போர் புரியும் மருத்துவர்கள் பற்றிப் பேசுகின்றன. கிருமியை ‘எதிரி’ என்கிறார்கள். இது நிச்சயமாக எனக்கு உங்கள் இளம் பருவ காலத்தில் எழுதப்பட்ட, ‘மூன்றாம் ரெய்ச்’ எனப்படும் ஹிட்லரின் ஆட்சிக்கால மொழி பற்றியும் மொழியின் வழியாக அவர்களின் சித்தாந்தம் எப்படித் திணிக்கப்பட்டது என்பது பற்றியும் பேசும் விக்டர் க்ளெம்பெரரின் ‘லிங்குவா டெர்ட்டி இம்பெரி’ நூலை நினைவூட்டியது. எனவே, உங்கள் பார்வையில், போரைப் பற்றிய இந்த உரையாடல்கள் நமக்கு என்ன சொல்கின்றன? ஒரு கிருமையைப் போய் ஏன் அவர்கள் எதிரி என்று முன்வைக்கிறார்கள்? இந்தப் புதிய விதிவிலக்கான நிலைமையை முறைமையானதாக்குவதற்காகவா (legitimize) அல்லது இந்த உரையாடல்களுக்குள் இதற்கும் மேல் ஆழமான ஏதும் இருக்கிறதா?
நோம்: இது வெறும் வாய்ச்சவடால் என்று சொல்ல முடியாது. அது மிகைப்படுத்தப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன். அதற்கொரு முக்கியத்துவம் இருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், இந்த நெருக்கடியைக் கையாள வேண்டும் என்றால், போர்க்கால அணிதிரட்டல் போன்ற ஒன்றுக்கு நாம் நகர வேண்டும். அமெரிக்காவைப் போன்ற ஒரு வளமான நாட்டை எடுத்துக்கொண்டீர்கள் என்றால், உடனடிப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்து வெளியேற வேண்டிய வளங்கள் அனைத்தும் உள்ளன. இரண்டாம் உலகப் போருக்கான அணிதிரட்டல் இன்று நினைப்பதைவிடப் பல மடங்கு கடனுக்கு இட்டுச் சென்றது. ஆனால் அது ஒரு மிகவும் வெற்றிகரமான அணிதிரட்டல். அமெரிக்காவின் உற்பத்தியை நான்கு மடங்காக்கி, பொருளாதார மந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. நாட்டைப் பெரும் கடனில் விட்டுச்சென்றது. ஆனால் வளர்ச்சிக்கான திறனையும் கொடுத்தது. அந்த அளவுக்கு வேண்டியதில்லை. இப்போது நாம் ஒன்றும் உலகப்போரில் இல்லை. ஆனால் அது போன்றதோர் இயக்கத்திற்கான மனநிலை தேவைப்படுகிறது. இந்தக் கடுமையான குறுகிய கால நெருக்கடியைச் சமாளித்து வெளியேற அந்த மன வைராக்கியம் தேவைப்படுகிறது. இந்த இடத்தில், 2009-இல் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட பன்றிக்காய்ச்சல் கொள்ளை நோயை நினைவுகூரலாம். முதல் பார்வையில் சில நூறாயிரம் (சில லட்சம்) மக்கள் மிக மோசமான நிலையிலிருந்து மீண்டு வந்தார்கள். அப்போது அமெரிக்கா போன்ற ஒரு பணக்கார நாடு அதைச் சமாளிக்க வேண்டியிருந்தது. இப்போது 2 பில்லியன் (200 கோடி) மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். தனிமைப்படுத்தப்பட்டு பசியில் சாகப்போகும் கைக்கும் வாய்க்குமாக வாழும் ஏழை இந்தியர்களுக்கு என்ன ஆகும்? என்ன நடக்கப் போகிறது? ஒரு நாகரிக உலகில், பணக்கார நாடுகள் தேவையில் இருக்கும் நாடுகளுக்கு உதவி அளிக்கும். கழுத்தைப் பிடித்து நெறிக்கக் கூடாது. குறிப்பாக இந்தியாவிலும் உலகமெங்கிலும் அதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். இது போன்ற ஒரு நெருக்கடி, இந்தியா போன்ற நாட்டுக்குள்ளேயே அப்படியே இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மனதில் வைத்துக்கொள்ளுங்கள், இப்போதைய போக்கின் படியே போனால் சில பத்தாண்டுகளில் தெற்காசியா வாழ முடியாததாகிவிடும். இந்தக் கோடையில் ராஜஸ்தானில் வெப்பநிலை 50 டிகிரியைத் தொட்டுவிட்டது. அதுவும் கூடிக்கொண்டே இருக்கிறது. நீர்நிலைகள் இன்னும் மோசமாகலாம். குறைந்துபோய்விட்ட நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு அணு ஆயுத சக்திகள் சண்டையிட்டுக்கொள்ளப்போகிறார்கள்.
கொரோனாக்கிருமி மிகத் தீவிரமானதுதான். அதைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் பெரும் நெருக்கடியில் ஒரு துளிதான் இது என்பதை நினைவுகொள்ள வேண்டும். அவை இன்று கொரோனாக்கிருமி செய்திருப்பதைப் போல வாழ்க்கையை அப்படியே நிலைகுலையச் செய்யாமல் இருக்கலாம். ஆனால் அவை இந்த உயிரினத்தை உயிர் வாழ முடியாத அளவுக்குச் சீர்குலைத்துப் போடும் - அதுவும் மிகத் தொலைவில் உள்ள எதிர்காலத்தில் இல்லை. நாம் கையாள வேண்டிய நிறையப் பிரச்சனைகள் உள்ளன - சில உடனடியானவை. கொரோனாக்கிருமி தீவிரமானது - கையாளப்பட வேண்டியது. மிகப்பெரிய - மிக மிகப்பெரிய பிரச்சனைகள் எழும்பி வந்துகொண்டிருக்கின்றன. மனித நாகரிகத்தையே எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடி ஒன்று வருகிறது. அதன் காலத்தைக் கணிக்க வேண்டும். இந்தக் கொரோனாக்கிருமி வந்து ஒரு நல்லது செய்துவிட்டுப் போகலாம். நமக்கு என்ன மாதிரியான உலகம் வேண்டும் என்று மனிதர்களைச் சிந்திக்க வைக்கும் போலத் தெரிகிறது. இது போன்ற நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் உலகமா நமக்கு வேண்டும்? இந்த நெருக்கடியின் மூலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்தக் கொரோனாக்கிருமி நெருக்கடி ஏன் வந்தது? இது மாபெரும் சந்தைத் தோல்வி (colossal market failure). இது நேராகப் புதிய தாராளவாதிகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட சந்தைகளின் சாராம்சத்துக்கு - காட்டுமிராண்டித்தனமான புதிய தாராளவாதிகளால் உக்கிரமாக்கப்பட்ட ஆழ்ந்த சமூகப் பொருளியல் பிரச்சனைகளைப் பற்றிச் சிந்திக்கச் சொல்கிறது.
கொள்ளை நோய்கள் வர மிகவும் வாய்ப்பிருப்பதும், சார்ஸ் (SARS) கொள்ளை நோயிலிருந்து சிறிது மாறுபட்ட கொரோனாக்கிருமிக் கொள்ளை நோய் வர வாய்ப்பிருப்பதும் நன்றாகவே தெரிந்திருந்தது. மிக நன்றாகவே தெரிந்திருந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அது முறியடிக்கப்பட்டது. கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன, வரிசைப்படுத்தப்பட்டன, தடுப்பூசிகள் இருந்தன. அப்போதிருந்தே உலகெங்கும் இருக்கும் ஆய்வகங்கள் வரப்போகும் கொரோனாக்கிருமிக் கொள்ளை நோய்க்குப் பாதுகாப்புக் கண்டுபிடிக்கும் வேலையைத் தொடங்கியிருக்கலாம். அவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? சந்தையின் சமிக்கைகள் தவறாக இருந்தன. மருந்து நிறுவனங்கள்... நம் தலைவிதியை நாம் தனியார் கொடுங்கோன்மையிடம் ஒப்படைத்துள்ளோம். இதற்குப் யார் பொறுப்பு? பொதுமக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை இல்லாதவர்களாக இருக்கிற பெருநிறுவனங்களைத்தான் நாம் பிடிக்க வேண்டும். பெரிய மருந்து நிறுவனங்கள்... அவர்களுக்கு முழு அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பதைவிட புதிய உடல் க்ரீம்கள் தயாரிப்பதே கூடுதல் ஆதாயம். அரசாங்கத்தால் இதில் தலையிட முடியாது. போர்க்கால அணிதிரட்டல் பற்றிப் பேசினோமே, அப்போது அதுதான் நடந்தது. போலியோ, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அப்போது ஒரு பீதியூட்டும் அச்சுறுத்தலாக இருந்தது. ரூஸ்வெல்ட் நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட ஓர் அரசாங்க அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்ட சால்க் தடுப்பூசியின் மூலம் அது முடித்துவைக்கப்பட்டது. காப்புரிமை எல்லாம் இல்லை. எல்லோருக்கும் கிடைக்கும். இப்போது அதைச் செய்திருக்க முடியும். ஆனால் புதிய தாராளவாதக் கொள்ளை நோய் அதைத் தடுத்துவிட்டது. பெருநிறுவங்களிடமிருந்து வருகிற ஒரு சிந்தாந்தத்துக்கு அடியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பொருளியலாளர்களும் இதற்குப் பெரும் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். “அரசாங்கந்தான் பிரச்சனை, எனவே அரசாங்கத்தைத் தூக்கித் தூரப் போடுவோம்” என்று தன் பெருநிறுவன எஜமானர்கள் எழுதிக்கொடுத்த உரையைத் தன் பளபளக்கும் புன்னகையோடு வந்து வாசித்த ரொனால்ட் ரீகனால் மாதிரியாகக் காட்டப்பட்ட சிந்தாந்தம் இது. அதன் பொருள் என்ன? முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பொதுமக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கடமையில்லாத தனியார் கொடுங்கோன்மைகளிடம் ஒப்படைத்துவிடுவோம் என்பதே அதன் பொருள். அதே நேரம், அட்லாண்டிக்கின் அந்தப் பக்கம், “ஒரு சமுதாயம் இருக்கிறது. அதில் தனிமனிதர்கள் சந்தைக்குள் தூக்கிவீசப்படுவார்கள். அவர்களே தத்தளித்து எப்படியாவது அவர்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு வேறு மாற்று இல்லை!” என்று தாட்சர் நமக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். பல ஆண்டுகளாக இந்த உலகம் பணக்காரர்களின் கீழ் சிக்கித் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்போது, சால்க் தடுப்பூசி போல ஏதோ ஒன்றைக் கண்டுபிடிக்குமாறு தூண்டும் வகையில் அரசாங்கம் தலையிடலாம். அரசு என்பது, புதிய தாராளவாதக் கொள்ளை நோயிலிருந்து வரும் சித்தாந்தக் காரணங்களால், இது போன்ற முடிந்த சிலவற்றைக் கூட இனி செய்ய முடியாது என்கிற புள்ளியில் நிற்கிறோம்.
விஷயம் என்னவென்றால், இந்தக் கொரோனாக்கிருமிக் கொள்ளை நோய் தடுக்கப்பட்டிருக்க முடியும், படிப்பதற்குத் தகவல்கள் இருந்தன, இன்னும் சொல்லப் போனால் தீவிரப்பரவலுக்குச் சற்று முன்பு அக்டோபர் 2019-இல் நன்றாகவே தெரிந்திருந்தது. உலகில் இது போன்றதொரு கொள்ளை நோய் வந்தால் என்ன செய்வது என்று அமெரிக்காவில் ஒரு பெரிய அளவிலான பாவிப்பு (simulation) - பல்லடுக்குப் பாவிப்பு செய்துபார்க்கப்பட்டது. அதன்பின் எதுவுமே செய்யப்படவில்லை. அரசியல் அமைப்புகளின் துரோகத்தால் இப்போது இந்தப் பெரும் நெருக்கடி மேலும் மோசமாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தெரிந்திருந்த தகவல்களின் மேல் நாம் கவனம் செலுத்தவில்லை. டிசம்பர் 31 அன்று, தெரியாத மூலத்துடன் நிமோனியா போன்ற அறிகுறிகள் இருப்பது பற்றி உலக சுகாதார அமைப்பிடம் சீனா தெரிவித்தது. ஒரு வாரம் கழித்து, சீன அறிவியலாளர்கள் அது ஒரு கொரோனாக்கிருமி என்று கண்டுபிடித்தார்கள். மேலும் அதை வரிசைப்படுத்தி, உலகத்துக்கு அந்தத் தகவலையும் கொடுத்தார்கள். அந்நேரம், அவை கொரோனாக்கிருமி என்றும் அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்றும் கிருமியாளர்களும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையைப் படிக்கும் அக்கறை கொண்டவர்களும் அறிந்திருந்தார்கள். அவர்கள் ஏதேனும் செய்தார்களா? ம்ம்ம், ஆம், சிலர் செய்தார்கள். சீனா, தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் போன்ற அந்தப் பகுதியிலிருக்கும் நாடுகள் ஏதோ செய்யத் தொடங்கி, கிட்டத்தட்ட அதை - குறைந்தபட்சம் இந்த நெருக்கடியின் முதல் பரவலை - கட்டுப்படுத்தியும் விட்டார்கள் போலத்தான் தெரிகிறது. ஐரோப்பாவிலும் ஓரளவு அது நடந்துள்ளது. இவ்விஷயத்தில் சரியான நேரத்தில் நகரத் தொடங்காத ஜெர்மனி - மருத்துவமனை அமைப்புகளைத் தாராளமயத்தின் கீழ் வைத்திருக்கும் ஜெர்மனி, உபரியான அளவில் கண்டறியும் திறன் (diagnostic capacity) வைத்திருந்தது. அதன் துணையுடன் அவர்களால் பிறருக்கு உதவவில்லை என்றாலும் தமக்குத் தாமே உதவிக்கொள்ளும் வகையில் மிகவும் சுயநலமான முறையில் செயல்பட முடிந்தது. அதை வைத்து ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவும் முடிந்தது. மற்ற நாடுகள் அதைச் சட்டை செய்யவே இல்லை. அவர்களில் ஆகப் படுமோசம் என்றால் அது பிரிட்டன். ஒட்டுமொத்தமாக ஆகப் படுமோசம் என்றால் அது அமெரிக்கா. ஒருநாள் “எந்த நெருக்கடியும் இல்லை, இது வெறும் காய்ச்சல்தான்” என்றும், அடுத்த நாள் “இது கொடுமையான நெருக்கடி, இது பற்றி எனக்கு அப்போதே தெரியும்” என்றும், அதற்கடுத்த நாள் “வணிகங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், ஏனென்றால் நான் இந்தத் தேர்தலில் வெல்ல வேண்டும்” என்றும் பேசும் இந்தச் சமூகவிரோத மனநோயாளியால் வழிநடத்தப்படும் அமெரிக்கா. உலகம் இந்தக் கைகளில்தான் இருக்கிறது எனும் சிந்தனையே அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அங்குதான் தொடங்கியது. இது சமூகப் பொருளியல் ஒழுங்கில் உள்ள அடிப்படையான பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டும் ஒரு மாபெரும் சந்தைத் தோல்வி. புதிய தாராளவாதக் கொள்ளை நோயால் - அவற்றின் வேலையை அவை செய்திருந்தால் இந்த நெருக்கடியைக் கையாண்டிருக்க முடியும் என்கிற மாதிரியான நிறுவனக் கட்டமைப்புகளின் சரிவால் மேலும் மிக மோசமாக்கப்பட்டு அப்படியே தொடர்கிறது. இவைதான் நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய - மேலும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விஷயங்கள். நான் ஏற்கனவே சொன்னபடியே, எந்த மாதிரியான உலகத்தில் வாழ விரும்புகிறோம் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
இதை முறியடித்து வெளியேறியபின் நம் முன் வெவ்வேறு தெரிவுகள் இருக்கும். பெரிதும் சர்வாதிகாரத்தனமான - மிருகத்தனமான அரசுகளை நிறுவும் தெரிவில் தொடங்கி, மேலும் மனிதாபிமான அடிப்படையிலான - தனியார் ஆதாயம் சார்ந்ததாக இல்லாமல் மனிதத் தேவைகளைப் பற்றிக் கவலைப்படுகிற - சமூகத்தை அடியோடு மாற்றிப் புனரமைக்கும் தெரிவு வரை எல்லாவிதமான தெரிவுகளும் நம் முன் இருக்கும். பெரிதும் சர்வாதிகாரமான நச்சு அரசுகள் புதிய தாராளவாதத்தோடு மிகவும் இணக்கமானவை என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், மீசஸிலிருந்து (Mises) ஹாயக் (Hayek) வரையிலானவர்களும் புதிய தாராளவாதத்தின் மற்ற ஆதரவாளர்களும் ‘ஆரோக்கியமான பொருளாதாரம்’ என்று அவர்கள் சொன்னதற்கு ஆதரவாக இருக்கும்வரை அரசின் மாபெரும் வன்முறைகளை முழுமையான மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவர்களே. 1920-களின் வியன்னாவிலிருந்து - அங்கு மீசஸ் நடத்திய பயிலரங்குகளிலிருந்து - புதிய தாராளவாதத்தின் வேர் புறப்படுகிறது. மீசஸால் ஆஸ்திரிய அரசின் ஆதிப் பாசிசத்தைக் கண்டு உண்டான ஆனந்தத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொழிற்சங்கங்களையும் ஆஸ்திரிய சமூக மக்களாட்சியையும் விளாசித்தள்ளினார், தொடக்க கால ஆதிப் பாசிச ஆஸ்திரிய அரசில் பங்கெடுத்தார், அதைப் புகழ்ந்து தள்ளினார். ஆரோக்கியமான பொருளாதாரத்தைப் பாதுகாக்கிறது என்று சொல்லிப் பாசிசத்தைப் புகழ்ந்தார். பீனஷே (Pinochet) சிலியில் ஒரு கொலைகார - மிருகத்தன சர்வாதிகாரத்தை நிறுவிய போது அவர்கள் எல்லோரும் அதைக் கொண்டாடினார்கள். அதை அற்புத அதிசயங்கள் நிகழ்த்துவதாகவும் ஆரோக்கியமான பொருளாதாரத்தைக் கொண்டுவருவது என்றும், நிறைய இலாபம் கொட்டிக்கொடுக்கிறது என்றும் கொண்டாடினார்கள். எனவே, வலிமை மிக்க அரச வன்முறையின் உதவியோடு இந்தக் காட்டுமிராண்டித்தனமான புதிய தாராளவாத அமைப்பு, விடுதலைவாதி (libertarian) என்று சொல்லிக்கொண்டு வருபவர்களால் மீண்டும் நிறுவப்படலாம் என்று எண்ணுவது ஒன்றும் சம்பந்தமில்லாததில்லை. இது - இக்கொடுங்கனவு நடக்க வாய்ப்பிருக்கும் சாத்தியக்கூறுகளில் ஒன்று. அதுதான் நடக்க வேண்டும் என்றில்லை.
ஏற்கனவே நிறையப் பேர் செய்துகொண்டிருப்பது போல், மக்களே ஒருங்கிணைத்து, ஈடுபட்டு, இதைவிட மிகச் சிறப்பான ஓர் உலகமும் படைக்கலாம். நாம் இப்போது அடுத்தடுத்துச் சந்தித்துக்கொண்டிருக்கும் - முன்னெப்போதையும் விட மிக அருகில் வந்திருக்கும் அணு ஆயுதப் போர்ப் பிரச்சனை, அந்தக் கட்டத்துக்குப் போனபின் அதிலிருந்து மீளவே முடியாது என்கிற அளவுக்கு மோசமான நிலையில் இருக்கும், தீர்க்கமாகச் செயல்படாவிட்டால் அதுவும் வெகுதொலைவில் இல்லை என்கிற அளவுக்கு நெருங்கிவிட்ட சூழலியல் பிரச்சனைகள் போன்ற மாபெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் அது இருக்கலாம்.
எனவே, கொரோனாக்கிருமியால் மட்டுமல்ல, இது மனித வரலாற்றில் மிக முக்கியமான - நெருக்கடியான தருணம். ஆனால் கொரோனாக்கிருமி இந்த மொத்தச் சமூகப் பொருளாதார அமைப்பின் ஆழ்ந்த குறைபாடுகளை - ‘குறைபாடுகள்’ என்ற சொல்லே அவ்வளவு வலுவானதில்லை - ‘செயல்பாடற்ற பண்புகளை’ என்று வைத்துக்கொள்வோம், அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை நமக்குக் கொண்டுவரும் - கொண்டுவர வேண்டும். பிழைத்திருக்கத்தக்க எதிர்காலம் என்று ஒன்று இருக்குமானால் இது சரிசெய்யப்பட வேண்டும். இது ஓர் எச்சரிக்கை மணியாகவும் வெடித்துச் சிதறும் முன்பே தடுக்கப்பட வேண்டுமானால் இன்றே கையாளப்பட வேண்டிய பாடமாகவும் இருக்கலாம். ஆனால் அதன் வேரைப் பற்றியும் அந்த வேர்கள் எப்படி இதைவிட மோசமான மேலும் பல நெருக்கடிகளில் போய் விடப்போகின்றன என்பதையும் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
ஸ்ரெச்கோ: நமக்கு இன்னும் நேரம் நிறைய இல்லாததால், ஒரேயொரு கடைசிக் கேள்வி கேட்டுவிடுகிறேன். மக்கள் நிறையப்பேரும், பல பத்தாண்டுகளாக மக்களின் நேரடி நெருக்கத்தையும் சமூக நெருக்கத்தையும் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் சமூக இயக்கங்களிலும் அணிதிரட்டல்களிலும் இயங்கிக்கொண்டிருக்கும் எம் போன்றவர்களும், திடீரென்று இப்போது ‘சமூக விலகல்’ (social distancing) எனப்படும் ஒன்றுக்குப் பழக்கப்பட்டுக்கொண்டு வருகிறோம். எனவே, என் கேள்வி என்னவென்றால், இது போன்ற ‘சமூக விலகல்’ காலங்களில் ‘சமூக எதிர்ப்பு’ (social resistance) என்பதன் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று எண்ணுகிறீர்கள்? இது இன்னும் சில மாதங்கள் ஆனால், ஓரிரு ஆண்டுகள் கூட ஆகலாம் என்பதையும் மறப்பதற்கில்லை, நாம் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே சுயதனிமையில் இருக்கிறோம் என்பதால், உலகெங்கும் இருக்கும் முற்போக்காளர்களுக்கும் செயல்பாட்டாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உங்கள் அறிவுரை என்னவாக இருக்கும்? இந்தப் புதிய சூழலில் எப்படி ஒருங்கிணைப்பது? அப்படியே, இந்தத் திறந்த வரலாற்றுச் சூழல், உலகளாவிய சர்வாதிகாரத்துக்குள் போகாமல், பசுமையும் சமத்துவமும் நீதியும் கூட்டொருமையும் நிறைந்த உலகை அடியோடு புரட்டிப்போடும் மாற்றம் ஒன்றை நோக்கிப் போகலாம் என்று நீங்கள் நம்பிக்கையாக எதையும் பார்க்கிறீர்களா என்பதையும் சொல்ல முடியுமா?
நோம்: முதலில், கடந்த சில ஆண்டுகளில், மிகவும் சேதப்படுத்தக்கூடிய ஒருவிதமான சமூக விலகல் ஏற்கனவே இருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒரு மெக்டோனல்சுக்குள் போய் அங்கு மேசையைச் சுற்றி அமர்ந்துகொண்டு ஹாம்பர்கர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் இளைஞர்களைப் பாருங்கள். இரண்டு உரையாடல்கள் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். அங்கிருக்கும் அவர்களுக்குள் நடைபெறும் மேலோட்டமான உரையாடல் ஒன்று. ஒவ்வொருவரும் தத்தம் அலைபேசியில் வேறு எங்கோ இருக்கும் அவர்களுடைய நண்பரான வேறொரு தனிமனிதரிடம் செய்துகொண்டிருக்கும் உரையாடல் இன்னொன்று. இது மனிதர்களை மிகப் பெரிய அளவில் தனித்தனி அணுக்களாகப் பிரித்துத் தனிமைப்படுத்தியிருக்கிறது. மனிதர்களை - குறிப்பாக இளைஞர்களை மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட உயிரினங்களாக்கியிருக்கும் இந்தச் சமூக ஊடகங்கள் - தவறாகப் பயன்படுத்தப்பட்ட சமூக ஊடகங்கள், ‘சமூகம் என்று ஒன்றில்லை’ என்ற தாட்சரின் கோட்பாட்டைப் பெரிய இடத்துக்கு எடுத்துச் சென்றுள்ளன. அமெரிக்காவில் இப்போது நடைபாதையில் “மேலே பார்” என்று எழுதிப்போட்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஏனென்றால், நடந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பிள்ளையும் அந்தக் கருவிக்குள்ளேயே பசை போட்டு ஒட்டியது போல ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அப்படியான மிகத் தீய சுய சமூக விலகலில்தான் ஏற்கனவே இருக்கிறோம். அதிலிருந்து இப்போது உண்மையான சமூக விலகல் கடைபிடிக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம். எந்தெந்த வழிகளிலெல்லாம் சமூகப் பிணைப்புகளை மீட்டுருவாக்க முடியுமோ அவ்வழிகளிலெல்லாம் மீட்டுருவாக்கி, தேவையில் இருக்கும் மக்களுக்கு எப்படியெல்லாம் உதவ வேண்டுமோ அப்படியெல்லாம் உதவி, இதை முறியடித்து வெளியேற வேண்டும்.
அவர்களை முன்பு போலவே செயல்படவைக்கவும் இயங்கவைக்கவும், அவர்களைத் தொடர்பு கொள்வது, நிறுவனங்களை மேம்படுத்துவது, ஆய்வுகளை விரிவுபடுத்துவது போன்றவற்றைச் செய்ய வேண்டும். கலந்துரையாடவும் திட்டமிடவும் அவர்கள் சந்திக்கும் கேள்விகளுக்கான பதில்களைத் தேடியடையவும் அவற்றின் மீது பணியாற்றவும் எதிர்காலத்துக்கான திட்டங்களைத் தீட்ட வேண்டும் - இந்த இணையத் தொழில்நுட்பக் காலத்தில் எல்லோரையும் ஒன்று கூட்ட வேண்டும். இதெல்லாம் செய்ய முடியும். நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவது மனிதர்களுக்கு மிகவும் அடிப்படையான தேவை என்றில்லை. ஆனால் குறிப்பிட்ட காலத்துக்கு அது கிடைக்காது. அதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு செய்துகொண்டிருக்கும் பணிகளைத் தொடரவும் விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் வேறு வழிகள் பார்க்க வேண்டும். செய்ய முடியும். ஆனால் அவ்வளவு எளிதில்லை. மனிதகுலம் இதற்கு முன்பும் பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறது.
(நாய் குரைக்கிறது)
ஸ்ரெச்கோ: நாம் இருவருமே சுய தனிமையில் இருப்பதால் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், கேட்கவா?
நோம்: என் நாய் உரையாடல் செய்ய விரும்புகிறது.
ஸ்ரெச்கோ: இதற்கு முன்பு வந்ததே, அது என்ன? கிளியா? உங்களிடம் பறவை ஒன்றும் இருக்கிறதா? பறவையா? கிளியா? ஒரு கிளியின் சத்தம் கேட்டதே!
நோம்: அது ஓர் இருமொழிக் கிளி. அதால் போர்ச்சுக்கீசிய மொழியில் “மக்கள் எல்லோருக்கும் இறையாண்மை” என்று சொல்ல முடியும்.
ஸ்ரெச்கோ: மிக்க நன்றி, நோம். இந்த உரையாடலின் அழகான நிறைவு இது. விரைவில் பேசலாம் என்று நம்புகிறேன். நாம் எல்லோரும் வீட்டிலேயே இருப்போம். நாங்கள் எல்லோரும் எப்போது வீட்டைவிட்டு வெளியேறலாம் என்று நீங்களும் உங்கள் கிளியும் சொல்லும்வரை காத்திருப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக