இதழியள்
“ஐயோஓஓஓ! கடவுளேஏஏஏ! ஆஆஆ… என்னை விட்டுவிடு. ப்ளீஸ்ஸ்ஸ். நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். ப்ளீஸ்ஸ்ஸ். என்னை விட்டுவிடு.”
வெள்ளைச்சட்டைக்காரன் கையெடுத்துக் கும்பிடுகிறான். கதறுகிறான். கெஞ்சுகிறான். ஆசிய முகம் போல் இருக்கிறது. அதனால்தான் கும்பிடுகிறான்.
குத்துபவன் நிறுத்துவதாக இல்லை. திரும்பத் திரும்பச் சதக் சதக் என்று குத்துகிறான். சகிக்க முடியவில்லை. மிருகம் போலக் குத்துகிறான். மிருகத்தை எதற்குக் கேவலப்படுத்த வேண்டும்! எந்த மிருகம் இப்படித் தன் இனத்து மிருகத்தையே கத்தியால் குத்துகிறது! ஐயோ எனக்குத் தலை சுற்றுகிறதே! பளிச் என்று வெள்ளைச்சட்டை வேறு போட்டிருக்கிறான். பளிச் வெள்ளையில் பளிச் சிவப்பு… பார்க்கவே கொடுமையாக இருக்கிறதே! நல்ல வேளையாகப் பாதியிலேயே ஒலி அணைக்கப்பட்டது. காட்சி மட்டுமே.
மார்க் ஒரு சொடுக்குச் சொடுக்கி அந்தக் காணொளியை நிறுத்தினான். நான் வகுப்பறையில் இருக்கும் பெரிய திரைக்கு ஓரத்தில் நிற்கிறேன்.
“இதை அனுமதிக்கலாமா? கூடாதா?”
இப்படிக் காணொளிகளை நிறுத்துவதையும் அடுத்து திரைக்கு ஓரத்தில் நிற்பவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதையும் ஓர் இயந்திரம் போலப் பழகியிருக்கிறான். எத்தனை ஆண்டுகளாக அலுக்காமல் இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறானோ!
“கூடாது!”
“ஏன்?”
“ஏனென்றால், இது ஒரு கொலையைக் காணொளியாகக் காட்டும் பதிவு. நம் நிறுவனத்தின் சமூகத் தரநிலைகளின் படி, குறிப்பாகச் சொல்வதானால் 13-ஆம் பிரிவின் படி, நம் தளத்தில் இதற்கு இடமில்லை.”
“அருமை!”
மகிழ்ச்சி பீறிடப் பாராட்டியவன், உடனடியாக முகத்தை மாற்றி, “என்ன, ஒரு மாதிரியாக விழிக்கிறாய்? வேண்டுமானால் சில நிமிடங்கள் இடைவேளை எடுத்துக்கொள்” என்று பெருந்தன்மையாகவும் கடுமையாகவும் சொன்னான்.
“நன்றி!” என்று உயிரில்லாமல் சொல்லிவிட்டு அறைக்கு வெளியே வந்தேன்.
உடம்பெல்லாம் நடுங்குகிறது. கழிவறைக்குள் சென்று முகத்தைக் கழுவிவிட்டு வெளியேறினேன். எந்தக் கூச்சமும் இல்லாமல் பெண்கள் கழிவறைக்கு முன்பு வந்து நின்றுகொண்டிருந்தான். இதோ அருகில்தான் வருகிறான்.
முதுகில் தட்டி, தடவிக் கொடுத்தான். இதமாக இருக்கும் என்று நினைத்துத் தடவிக் கொடுக்கிறான் போல. கொஞ்சம் இதமாகத்தான் இருந்தது. கொஞ்சந்தான். எல்லையை மீறாமல் நிறுத்திவிட்டால் நன்றாக இருக்குமே என்று இருந்தது.
“என்ன, பயந்து விட்டாயா? மனம் உடைந்துவிட்டாயா? நீ பார்க்கும் எல்லாமே இது போலக் கொடூரமாக இராது. இது போலும் அவ்வப்போது வரும். எல்லாம் பழகிவிடும். நானும் உன்னைப் போலத்தான் இந்த வேலைக்கு வந்து முதற் சில வாரங்கள் மனநிலை தொலைத்தவன் போல அலைந்தேன். இப்போது பார். நானும் ஓர் அணித் தலைவனாக இருக்கிறேன். அடுத்த ஆண்டு இந்நேரம் நீ என் இடத்தில் இருந்தால் ஆச்சரியப்பட மாட்டேன். முதற் சில வாரங்கள்தாம் கொடுமையாக இருக்கும். அதைக் கடந்துவிட்டால் பின்னர் இந்த வேலை எளிதுதான். இந்த வேலையே பிடித்துவிடக் கூட வாய்ப்பிருக்கிறது.”
எவ்வளவு என் மண்டைக்குள் போகிறது என்ற கவலையே இல்லாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். இங்கே, அணித் தலைவர், மேலாளர், அதற்கும் மேலானவர் என்று சொல்லிக்கொண்டு திரியும் எல்லோருமே இப்படிப் பேசுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒரு வழிப் பாதையில் வண்டி ஓட்டுபவர்கள். அதுவும் அடைத்துக் கிடைக்கும் பாதை என்பதை அறியாமல் பெருமையாக ஓட்டுபவர்கள்.
“வா, ஒரு காஃபி எடுத்துக்கொண்டு மீண்டும் உள்ளே போவோம். இன்றைக்கு முடிக்க வேண்டிய பதிவுகள் நிறைய இருக்கின்றன. மிகவும் சிரமமாக இருந்தால் சொல். நாளை ஆலோசகரிடம் அனுப்பிவைக்கிறேன். அவரிடம் பேசினால் எல்லாம் மாயமாக மறைந்துவிடும். நானே பாதி ஆலோசகன் ஆகிவிட்டேன்தான். ஆனாலும் அவர்களிடம் பேசுவது போல வராது. நானும் ஒரு காலத்தில் உளவியல் படிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். கடைசியில் இந்த வேலையில் வந்து சாகிறேன். உனக்கு உளவியல் பிடிக்குமா?”
“எனக்குப் பிடித்தது இதழியல்!”
உள்ளே சென்று அன்றைய நாளில் பார்த்து முடிக்க வேண்டிய காணொளிகளையும் பதிவுகளையும் மீண்டும் பார்க்கத் தொடங்கினேன். பெண்ணைப் போதைப் பொருளாகக் காட்டும் புகைப்படங்கள், காணொளிகள், பெண்களுக்குத் தொடர்பேயில்லாத உரையாடல்களில் கூடப் பெண்களையே இழிவுபடுத்தும் சொற்கள் நிறைந்த பதிவுகள், கெட்ட வார்த்தைகள் கொட்டிக்கிடக்கும் அரசியல் பதிவுகள், கெட்ட வார்த்தைகள் இல்லாமல் நயமான சொற்களில் திட்டமிட்டுக் கட்டப்படும் பொய்கள், வெளிவந்த ஒரு மணி நேரத்துக்குள் மனிதர்களை மிருகமாக்கி ஒருத்தரையொருத்தர் அடித்துக்கொண்டு சாகும் நிலைக்குத் தள்ளக்கூடிய தகவல்கள் (பெரும்பாலும் பொய்யானவை), துடிக்கத் துடிக்க அடித்தே கொல்லப்படும் காட்சிகள், ஒரு சிறுவனைத் தீயில் கொளுத்தும் காணொளி, விதவிதமான தற்கொலை முயற்சிகள், தற்கொலைக்கு முந்தைய கதறல்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், மனிதன் விலங்கைப் புணரும் காட்சி, பணம் பிடுங்கச் செய்யப்படும் பித்தலாட்டங்கள், எதுவுமே சாதிக்க முடியாத - அப்படியான நோக்கமும் அற்ற குப்பைகள் என்று விதவிதமாக வந்து விழுந்தன.
இந்தக் குப்பைகளையெல்லாம் என்னைப் போன்ற - என்னைவிட இளைய - அழகு மனம் படைத்த கோடானு கோடி இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் சென்றடைய விடாமல் செய்யும் பொறுப்பு மிக்க இடத்தில் இருக்கிறோம் என்று நினைக்கும் போது சற்றுப் பெருமையாக இருந்தது. இன்னும் எவ்வளவு காலம் என்பதுதான் தெரியவில்லை.
“தேசத் துரோகி! நீயும் உன் குழுவும் பாகிஸ்தானிடம் எத்தனை கோடி வாங்கினீர்கள்? உன் மகளைத் தூக்கிச் சீரழிக்கிறோம், பார்!”
இந்தியாவின் கற்பழிப்புத் தலைநகரில் இருந்து ஒரு கொடூரன் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவனுக்கு விடுக்கும் மிரட்டல் இது.
அதை ஒரு சொடுக்குச் சொடுக்கி நிறுத்திவிட்டு, “இதை அனுமதிக்கலாமா?” என்று கேட்டான் மார்க். இப்போது திரைக்கு ஓரத்தில் நிற்பது வில்லியம்.
வில்லியம் அமெரிக்கன். “வில்லியம்!” என்று சொல்பவர்களிடம் எல்லாம், “பில் என்றே சொல்!” என்று அலுக்காமல் சொல்லுபவன். இந்த வேலையில் இருப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்களே. நான் ஒருத்திதான் இந்தியள். குறிப்பாகத் தமிழச்சி. ஒலிவியா எனப்படும் ஓவியா. அமெரிக்கர்களைப் போல ஆங்கிலம் பேசுவதால் அமெரிக்கப் பண்பாடும் எனக்கு நன்றாகப் புரியும் என்று நம்பி எடுத்துவிட்டார்கள். எனக்கு அமெரிக்கப் பண்பாடு நன்றாகப் புரியும்தான். ஆனால் இந்தியப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் தெரிந்த ஒரு பெண் என்ற முறையில் அவ்வப்போது என் அமெரிக்கப் பண்பாடு பற்றிய புரிதல்களுக்குச் சில இடையூறுகளும் வருவதுண்டு.
“அனுமதிக்கக் கூடாது!” என்றான் வில்லியம். நம்பிக்கையோடு. ‘இதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது!’ என்பது போன்ற வியப்பும் கூட அவன் முகத்தில் இருந்தது.
“தப்பு!” என்று கூறிவிட்டு, வகுப்பில் உள்ள எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான் மார்க்.
வில்லியமின் முகத்தில் இருந்த வியப்பின் நிறம் மாறியது.
“பில்! இது அமெரிக்கத் தராதரத்தின் படி பார்த்தால், நீ சொல்கிற படியே அனுமதிக்கப்படக் கூடாதது என்பது சரிதான். ஆனால் சொன்னவன், சொல்லப்பட்டவன் இருவருமே அமெரிக்கர்கள் அல்லர். அதனால் நம் தரங்கள் அவர்களுக்கு எடுபடாது. இது போன்ற பதிவுகள் நமக்கு அதிகம் வராது. அப்படி வரும் போது, நம் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு அவற்றை மதிப்பிடக் கூடாது. அவர்களின் கண்ணாடியைப் போட்டுக்கொண்டே பார்க்க வேண்டும்.”
“என்ன சொல்கிறாய், மார்க்! தன் நாட்டுக்காக ஆடும் விளையாட்டு வீரன் ஒருவனின் மகளைக் கற்பழிப்பேன் என்று ஒரு மிருகம் சொல்கிறது. அதை எந்த நாட்டுக் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தாலும் நியாயமாக இருக்க முடியாது! எனக்கு இது புரியவில்லை! எனக்கு அந்த விளையாட்டு வீரன் யார் என்று தெரியாது. ஆனால் விளையாட்டு வீரன் ஒருவனுக்கு 35 வயதுக்கு மேல் இருக்க முடியாது. அதிகபட்சம் அவனுடைய மகள் பள்ளி செல்லும் சிறுமியாக இருக்கலாம்!”
“ஆமாம். எனக்குத் தெரியும். அவன் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வீரன். அவன் மகளுக்குப் பள்ளி செல்லும் வயது கூட இல்லை!” நானே மூக்கை நுழைத்து என் கருத்தைச் சொன்னேன்.
“பார்!” என்று அதிர்ச்சி நிறைந்த முகத்தோடு வில்லியம் மார்க்கை நோக்கினான். நிறுத்தாமல் தலையை உலுக்கிய அவன் கண்களுக்குள் இருந்த கேள்வி மார்க்குக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை.
“பில்! தராதரங்களை நிர்ணயிக்கும் வேலை நம்முடையதல்ல. அந்த வேலையைச் செய்யக் கலிஃபோர்னியாவில் நிறையப் பேர் இருக்கிறார்கள். நாம் இருப்பது ஃபீனிக்சில். நம்முடைய வேலை, நிர்ணயிக்கப்பட்ட தராதரங்களைக் கடைபிடிப்பது மட்டுமே! நாம் நெறியாளர்கள்!” வெட்டினான் மார்க்.
வில்லியமின் கண்களுக்குள் இருந்த கேள்விகள் குட்டி போட்டன. மார்க் அதைக் கவனிக்கும் விருப்பமில்லாதவனாக அடுத்த பதிவுக்குச் சொடுக்கினான்.
*
சரியாக 5 மணிக்கு வகுப்பு முடிந்தது.
“மீண்டும் நினைவூட்டுகிறேன். அலுவலகத்தில் நடப்பதை அலுவலகத்திலேயே விட்டுச் சென்றுவிட வேண்டும். நம் பணி விவரங்கள் இராணுவ இரகசியங்களைப் போலக் காக்கப்பட வேண்டியவை. சொல்லப் போனால் இராணுவங்களுக்குத் தெரிந்த இரகசியங்களைவிட அதிகம் தெரிந்துவைத்திருக்கும் ஒரு நிறுவனத்தில் பணி புரிபவர்கள் நாம். நாளை பார்க்கலாம்.” விடை பெற்றான் மார்க்.
வகுப்பறையை விட்டு வெளியே வந்து அலைபேசியையும் பையையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். அலைபேசி மட்டுமில்லை, உள்ளே எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது.பேனா, காகிதம் போன்ற எழுதுபொருட்கள் கண்டிப்பாக உள்ளே செல்லக்கூடாது. பதிவர்களைப் பற்றிய குறிப்புகளை எடுத்துக்கொண்டு வந்து அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்திவிட வாய்ப்பு இருக்கிறது என்பதால் இப்படி ஒரு முன்னெச்சரிக்கை.
லோகன் காரில் காத்துக்கொண்டிருந்தான். ஏறி அமர்ந்தேன். ஒரு பெரும் பெருமூச்சு விட்டேன்.
“எப்படி இருந்தது முதல் நாள்?”
மீண்டும் ஒரு பெரும் பெருமூச்சு விட்டேன்.
புரிந்து கொண்டான். அதன் பிறகு ஒன்றும் பேசவில்லை. வீடு வந்து சேர்ந்தோம். கூடத்தில் கிடக்கும் நீளிருக்கையில் பொத்தென்று விழுந்து மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டேன்.
“ஓவியா! ஒன்னும் பிரச்சனையில்லையே?"
பெருமூச்சே பதில். “அலுவலகத்தில் நடப்பதை அலுவலகத்திலேயே விட்டுச் சென்றுவிட வேண்டும்.” மனதில் மார்க் வந்து மறைந்தான். மார்க் சொல்வது கிடக்கட்டும். என் பணிக்கு நான் உண்மையாக இருக்க வேண்டுமே!
“லோகன்! ஒரு காஃபி கிடைக்குமா?”
இருவருக்குமாகப் போட்டுக்கொண்டு வந்து அருகில் அமர்ந்தான். வலது கையை என்னிடம் நீட்டிவிட்டு, இடது பக்கம் அமர்ந்தான்.
தாக்குப்பிடிக்க முடியவில்லை. உடைந்து நொறுங்கி அழுதேன்.
"இதில் எவ்வளவு காலம் சமாளிக்க முடியும் என்று தெரியவில்லை" என்றேன்.
"ஐ லவ் யூ!” "லவ் யூ!" "லவ் யூ!" என்று சொல்லிக்கொண்டே தடவித் தடவிக் கொடுத்தான். இதமாக இருந்தது. ஆனால் மேலும் உடைந்து அழுகை கூடத்தான் செய்தது.
நான் இந்த வேலைக்கென்று பெறும் ஊதியத்தை விடப் பல மடங்கு அதிகம் சம்பாதிப்பவன் அவன்.
நான் அழும் அழுகையைப் பார்த்து, அவனுக்கு எதுவும் புரிந்த மாதிரித் தெரியவில்லை. வேறு ஏதோ பிரச்சனையாக இருக்குமோ என்று பயந்து போய் இருக்கிறான் போல இருந்தது.
“பெரிதாக ஒன்றும் பிரச்சனை இல்லையே?”
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இது அதற்கெல்லாம் மேல். வேறு மாதிரியான பிரச்சனை!”
அத்தோடு விட்டுவிட்டான்.
"ஏதாவது பகிர்ந்துகொள்ள விரும்பினால் தயங்க வேண்டாம். நான் இருக்கிறேன்."
“எனக்குத் தெரியும், லோகன்! ஐ லவ் யூ!”
*
எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும் என்று நினைத்தால், ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட மேலும் கலங்கித்தான் வீடு திரும்பினேன்.
அடுத்து இரண்டு மூன்று நாள்கள் ஓடின. முதல் வியாழக்கிழமையாக இருக்க வேண்டும். பெருந்திரையில் மீண்டும் ஒரு கொலைக்காட்சி ஓடுகிறது. இம்முறை முழுக்க ஒலியோடு சேர்த்து. உயிர்ப் பிச்சை கேட்டுக் கதறும் அந்த இளம்பெண்ணின் ஓலம் என்னைக் கிழித்து வீசியது. எந்த உணர்ச்சியும் இல்லாமல் வெறி கொண்டு குத்துகிறான் அரக்கப்பயல். காணொளி பாதி கூட ஓடவில்லை. என்னால் முடியவில்லை. முழுக்கவும் ஒலியோடு சேர்த்து என்பதாலா பெண் என்பதாலா சின்ன வயது என்பதாலா என்று தெரியவில்லை. அந்த இடத்திலிருந்து அகன்றுவிடலாம் என்று சுற்றிப் பார்த்தேன். அது சரியான நகர்வாகத் தெரியவில்லை. கண்ணை மட்டும் திரையை நோக்கி வைத்துக்கொண்டு மனதைப் பார்வையோடு சேர்ந்து பயணிக்க விடாமல் பார்த்துக்கொண்டேன். காணொளி முடிந்த நொடியே வெளியே ஓடினேன். கதறினேன். தண்ணீர் குடித்துவிட்டு அப்படியே சிறிது நேரம் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன்.
நான் விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கும் பணி இது. இந்தப் பணியில் இது போன்ற மனதைப் பிளக்கும் காட்சிகளை - செய்திகளை அன்றாடம் கடந்துதான் ஆக வேண்டும். மனதைச் சமாதானப்படுத்திக்கொள்வதற்காக எனக்கு நானே விளக்கம் கொடுத்துக்கொண்டேன். அவள் ஏதோ தவறு செய்திருக்க வேண்டும். அதனால்தான் இப்படித் துடிக்கத் துடிக்கக் கொல்கிறார்கள். ஒன்றுமே செய்யாத ஒரு பெண்ணை எதற்கு யாரும் கொல்லப்போகிறார்கள்! உடனடியாகவே, மனதுக்குள் அடுத்தடுத்த கேள்விகள் வந்து துளைத்தன. அவ்வளவு யோக்கியமானவர்களா இந்த மனிதர்கள்! அப்படியே தவறு செய்திருந்தாலும் இப்படிக் கொல்லும் அளவுக்கு என்ன செய்திருக்கப் போகிறாள்! எவனோ ஒருத்தன் என்னை இப்படிக் குத்தினால், அதைப் படம் பிடித்து வெளியிட்டால், அதைப் பார்ப்பவர்களும் இப்படி ஏதோ சொல்லித்தான் கடக்க முயல்வார்களா என்ற கேள்வி வந்த நிமிடம் உடம்பு நடுங்கியது. அதற்கு மேல் அன்று பணியைத் தொடர முடியும் என்று தோன்றவில்லை. அதற்குள் அடுத்த பதிவைப் பார்க்க மார்க்கின் அழைப்பு வந்தது.
“ஒலிவியா! உள்ளே வா. வகுப்பைத் தொடர வேண்டும்.”
சிதறிக் கிடந்த என்னைச் சேர்த்துப் பொருத்திக்கொண்டு எழுந்து சென்றேன். அடுத்த பதிவு அவ்வளவு கொடூரமாக இல்லை. இது எல்லாமே ஒரு முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டிருப்பது போலப் பட்டது. கொலை போன்று கொடுமையான காட்சிகளைக் காட்டினால், அதற்கடுத்த சிறிது நேரத்துக்கு லேசான மீம் ஏதாவது காட்ட வேண்டும் என்றும் வைத்திருப்பார்கள் போல. இதெல்லாம் முதல் வாரத்துக்கு மட்டுமாக இருக்கலாம். இரண்டாம் வாரத்திலும் மூன்றாம் வாரத்திலும் என்னென்னவெல்லாம் காட்டப்போகிறார்களோ!
அடுத்த இடைவேளையில், தேநீர் குடிப்பவர்களை விட்டுவிட்டு புகை பிடிக்கும் சார்லியுடன் வெளியே சென்றேன்.
ஒரு சிகரெட்டை நீட்டி, கண்ணிலேயே, “உனக்கு?” என்று கேட்டான்.
கண்ணையும் கையையும் நீட்டி வாங்கிப் பற்ற வைத்தேன். அவன் பற்ற வைத்தான். பற்றிக்கொள்வதற்கு நான் உதவினேன். அவ்வளவுதான்.
இரண்டு மூன்று இழுப்புகளுக்குப் பின், "இப்போது எப்படி உணர்கிறாய்?" என்றான்.
ஓரளவுக்குப் பரவாயில்லாமல் இருந்தது. இதற்கு முன்பும் புகை பிடித்திருக்கிறேன். ஆனால் எப்போதுமே எனக்கு அது மனதுக்குப் பிடித்ததாக இருக்கவில்லை. ஆனால் இப்போது அப்படி ஆகிவிடுமோ என்று தோன்றியது.
இரவு வீட்டுக்கு வந்ததும் மீண்டும் நீளிருக்கையில் விழுந்து அழுதேன். வீடு திரும்பிய பின்னும் அந்தக் கொலைக்காட்சி மீண்டும் மீண்டும் கண்ணுக்குள் வந்து மேலும் வதைத்தது. லோகன் வந்து அருகில் அமர்ந்து, எதுவும் கேட்காமல், எப்போதும் போலத் தடவிக் கொடுத்தான்.
"நான் இருக்கேன்" என்றான்.
‘உனக்கு ஏன் இந்தத் தேவையில்லாத வேலை!’ என்று மனதுக்குள் நினைத்திருக்கலாம். உடன்படாவிட்டாலும் உடனிருப்பவன் அவன்.
அதற்கு மேல் என்னால் சமாளிக்க முடியவில்லை. நன்றாக அழுது முடித்ததும் கொலைக்காட்சியை விவரித்தேன். கண்கள் விரியக் கேட்டுக்கொண்டான். பேயறைந்தது போல விழித்தான். அவன் மனத்துக்குள் என்ன ஓடியதோ தெரியவில்லை. கேட்கிற மனநிலையிலும் நான் இல்லை.
"அதுதான் முடிஞ்சிருச்சே! இனி என்ன செய்ய முடியும்!" என்றான்.
இதெல்லாம் ஒரு சமாதானமா!
"அந்த இடத்துல நானோ என் தங்கச்சியோ இருக்கிற மாதிரிக் கற்பனை பண்ணிப் பாக்குறேன். அதனாலதான் என்னால அதைத் தாங்கவே முடியல. எல்லாரும் அப்படிப் பண்ணுவாங்களான்னு தெரியல."
"அப்பிடிலாம் யோசிக்கவே கூடாது.”
"நான் என்ன தப்புப் பண்ணாலும் உன்னால என்னை இப்பிடிக் கொல்ல முடியுமா?"
"எதுக்கு இப்பிடிலாம் பேசுற? நீ இல்லை. யாரையுமே என்னால அப்பிடிப் பண்ண முடியாது. நான் மட்டுமில்ல, இலட்சத்துல ஒருத்தன் அது மாதிரி இருப்பான், எல்லாராலயும் இப்பிடிக் கொலையெல்லாம் பண்ண முடியாது."
*
ஒவ்வோர் இடைவேளையிலும் சார்லியோடு புகை பிடித்துக் கழிப்பதே நல்ல தணிப்பாக இருந்தது. அதன் பின்பு கொடுமையான காணொளிகளைக் கண்டு அடையும் உளைச்சல்கள் ஓரளவுக்கு மட்டுப்பட்டன. ஆனால் மனம் சிறிது சிறிதாக மரத்துப் போய்க்கொண்டிருப்பது போலப் பட்டது. இன்னும் எவ்வளவு காலம் இதைத் தாங்கிக்கொள்ள வேண்டுமோ தெரியவில்லையே!
இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின் ஓர் இரவு மாற்றில் (ஷிஃப்ட்) இடைவேளையில் வழக்கம் போல் சார்லியோடு புகை பிடிக்க வெளியேறினேன்.
“செட்டில் ஆகிவிட்டாயா, ஒலிவியா?”
“அப்படித்தான் நினைக்கிறேன். ஏன் திடீரென்று இந்தக் கேள்வி?”
“என்னால் முடியவில்லை. சரியாகத் தூங்க முடியவில்லை. வீட்டில் உள்ளவர்கள் திரும்பத் திரும்ப நான் நிறையவே மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். இங்கே நடப்பதை எல்லாம் அவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. அவர்களைவிட்டு வேகமாக விலகிக்கொண்டு - அந்நியப்பட்டு வருவது போல் உள்ளது. ஒரு மாதிரி வெறுப்பாக இருக்கிறது. வெளியில் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாததால் - இங்குள்ளவர்களிடம் மட்டுமே நம் பிரச்சனைகளைச் சொல்லிக்கொள்ள முடியும் என்கிற சூழ்நிலை உருவாகி, இங்குள்ளவர்களோடு நிறையவே நெருக்கமாகிவிட்டது போல் உணர்கிறேன். உன்னையே எடுத்துக்கொள்ளலாமே. இரண்டு மூன்று மாதங்களுக்குள் எவ்வளவு நெருக்கமாகி விட்டோம்!”
அந்த நிமிடம் என்னால் அவனைக் கட்டி அணைக்காமல் இருக்க முடியவில்லை.
“சார்லீ! என் சொற்களை நீ எடுத்துக்கொண்டது போல இருக்கிறது. நீ சொன்ன ஒவ்வொன்றும் அப்படியே எனக்குப் புரிகிறது. ஏனென்றால், நானும் அதே படகில்தானே பயணிக்கிறேன்! இதைத்தான் நம் ஆலோசகர் ‘விரக்திப் பிணைப்பு’ (trauma bonding) என்கிறார். போன வாரம் இரவு மாற்றில் பெண்கள் கழிவறையில் பிணைந்து கிடந்த மியாவுக்கும் பென்னுக்கும் இடையில் இருப்பது கூட இந்தப் பிணைப்புதானாமே!” என்று வானிலையை மாற்றிக் கண்ணைச் சிமிட்டினேன்.
“அவன் கிடக்கிறான் உதவாக்கரை. என்ன பிரச்சனையென்று போனாலும் அதற்கொரு பெயரைக் கொடுத்து, அதையும் மீறி வேலையில் கவனம் செலுத்துவது எப்படி என்று மட்டுந்தான் பேசுகிறானே ஒழிய, அதைவிட்டு வெளியே வர நமக்கு எந்த உதவியும் செய்வதில்லை. அவனைவிட இதோ இந்தக் ‘களை’ இருக்கிறதே இது சிறந்த ஆலோசகராக இருக்கிறது என்கிறார்கள் என் அணியிலுள்ளவர்கள்!” என்று சிரித்தான்.
“ஏய், இது எப்படிக் கிடைத்தது?” வியப்பிலும் ஆர்வத்திலும் கத்தினேன்.
இந்த இரவுக்காகத்தான் காத்திருந்தேன் என்பது போல வெளிப்பட்ட அந்த ஆர்வத்தை அவன் புரிந்துகொண்டது போலவே நடந்துகொண்டான்.
“இது என்ன அவ்வளவு பெரிய இதா? நம் அலுவலகத்தில் பாதிப்பேருக்கு மேல் இதைக்கொண்டுதான் இன்னும் உயிர் பிழைத்து இருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் போனால், இங்கிருப்பதில் பாதிப்பேர் இந்நேரம் இல்லாமல் போயிருப்பார்கள். நாமும் நீடித்து வாழ - அவ்வளவு கூட இல்லை, பிழைத்திருக்க - இது ஒன்றே வழி என்று புரிந்துகொண்டுதான் இன்று தொடக்க விழா கொண்டாட முடிவு செய்துவிட்டேன். இதெல்லாம் இல்லாமலே பிழைத்திருக்க முடியும் என்றால் பரவாயில்லை. இதை நீ தொட வேண்டாம். நீயும் எங்களைப் போல சராசரி என்றால் இந்தா… கூச்சப்படாமல் எடுத்துக்கொள்!” என்று நீட்டினான்.
அதுதான் எங்கள் இருவருக்குமே முதல் ‘களை இரவு’.
“முதல் முறை நிறையப் புகைக்கக் கூடாதாம். இரண்டு மூன்று முறைக்குப் பின்தான் சரியாகப் பிடிபடுமாம். அதனால் கொஞ்சமாக எடுத்துக்கொள்” என்று அக்கறையோடு கட்டுப்படுத்தினான்.
அவன் சொன்னது சரிதான். ஒவ்வொரு முயற்சிக்கும் இடையில் ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டுச் செய்த மூன்று முயற்சிகளுக்குப் பின்தான் ஓரளவுக்குப் பிடிபட்டது. அதன் பின்பு உளைச்சல் மிகுந்த நாட்களைக் கையாள்வது மேலும் கட்டுக்குள் வந்தது.
*
முதல் மாதம் பயிற்சியிலேயே போனது. இரண்டாம் மாதம் பகல் மாற்று (day shift) கிடைத்தது. மூன்றாம் மாதம் இரவு மாற்று. அடுத்த மாதம், ஊஞ்சல் மாற்று (swing shift). பிற்பகலில் தொடங்கி முன்னிரவில் முடியும் மாற்றுக்கு இந்தத் துறையில் இந்தப் பெயர்தான். மாற்று முடிந்து வெளியேறும் போது கோலாகலமாக இருந்தது. இந்த நேரத்தில் உள்ளே போயிருக்கிறேன். வெளியே வருவது வேறு விதமான அனுபவம். பகல் மாற்று முடியும் நேரம் ஒரு விதமான கோலாகலம் என்றால், ஊஞ்சல் மாற்று முடியும் நேரம் இன்னொரு விதமான கோலாகலம். முதலாவது பளிச் என்ற பகலில் முடிவதால் கலகலப்பாக இருக்கும். இரண்டாவது, பளிச் என்று விளக்குகள் போட்ட சிறிது நேரத்தில் என்பதால் இன்னொரு விதமான கலகலப்பாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
மொத்தமாக ஏழெட்டுப் பேர் புகை பிடிக்க ஒதுங்கினோம். பற்றவைத்துக்கொண்டே, “என்னய்யா, ஹிட்லர் கூட்டம் என்ன சொல்கிறார்கள்?” என்றான் ஆர்தர். ரோகனை நோக்கி. நக்கலான சிரிப்போடு.
ரோகன் எல்லோர் முகத்தையும் ஒரு முறை பார்த்தான். என் முகத்தையும் நிறுத்திப் பார்த்தான். யார் யார் அன்று புதிதாக இணைந்திருப்பவர்கள் என்று பார்ப்பது போல் தெரிந்தது. அப்படியே, ‘யாராக இருந்தால் எனக்கென்ன!’ என்கிற சிணுங்கலோடு தொடங்கினான்.
“ஹிட்லர் கூட்டம் என்றெல்லாம் ஒரு கூட்டம் கிடையாது. அவர்கள் வரலாறு தெரிந்த - உண்மை தெரிந்த கூட்டம். நாமெல்லாம் வரலாற்றுப் புத்தகத்தில் சொன்னதை மட்டும் உண்மையென்று நம்பிக்கொண்டிருக்கும் முட்டாள் கூட்டம். அவ்வளவுதான்!”
ஆகா! ஒரு மாதிரியான ஆளாக இருப்பான் போலயே என்று காதைத் தீட்டிக்கொண்டு - அப்போதைக்குக் கண்களை விலக்கி வைத்துக்கொள்வதே நல்லதென்று பட்டது - அவன் சொற்பொழிவைக் கேட்கத் தொடங்கினால் தலை சுற்றத் தொடங்கிவிட்டது.
“என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். இந்த வேலையில் நான் இழந்ததை விட அடைந்ததே அதிகம். சிலர் சிறைக்குச் சென்றால் ஞானம் வரும் என்பார்கள். சிலர் மருத்துவமனை சென்று செத்துப் பிழைத்து எழுந்து வந்தால் ஞானம் வரும் என்பார்கள். எனக்கு இந்த வேலைக்கு வந்தபின்தான் நிறைய ஞானம் கிட்டியிருக்கிறது. இல்லாவிட்டால் நானும் எல்லோரையும் போல காண்பதும் கேட்பதும் படிப்பதும் மட்டுமே உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கும் அடிமுட்டாளாக இருந்திருப்பேன். இரண்டாம் உலகப்போர் என்பதே பொய். அப்படி ஒன்று நடக்கவே இல்லை. ஹிட்லர் யூதர்களைக் கொன்றார் என்பது கற்பனை - வதந்தி. ஹிட்லரைப் போல் தன் நாட்டுக்கு உண்மையாக இருந்த ஒரு தலைவன் வரலாற்றில் அதற்கு முன்பும் கிடையாது - பின்பும் கிடையாது. அப்படியே ஒருத்தன் பிறந்தாலும் அவனை ஹிட்லரை அழித்தது போல் அழித்துவிடுவார்கள். இது பாவிகளின் உலகம்!”
சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் உண்மை இருப்பதாக நம்பும் முகபாவம்.
“என்ன, ஒலிவியா! இதற்கே ஆடிப் போய்விட்டாய் போலயே! இன்றுதானே முதல் நாள்! ரோகனிடம் பேசினால் இன்னும் நிறையக் கிடைக்கும். ரோகன்! ஒலிவியாவுக்காக ஒரு முறை - ஒரே ஒரு முறை - உலகம் உருண்டையா தட்டையா என்பதைச் சொல்லிவிடேன்” என்று ஏற்றிவிட்டான் ஆர்தர்.
பக்கவாட்டில் திரும்பி, “ஏய், சிரிக்காதே!” என்று - அவன் பெயர் தெரியவில்லை - அவனைப் பொய்யாக அதட்டினான். அவனும் அப்படியே அடங்கிப் போவது போல நடித்துக்கொண்டான்.
ரோகன் இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை என்பது மட்டும் தெரிந்தது. மீண்டும் ஒரு முறை என் முகத்தைப் பார்த்தான். உடனே தலையைக் கவிழ்ந்து கொண்டான். எனக்கு இன்னும் பதற்றம் கூடியது.
“ஒலிவியா! இந்தியனா?”
“ஆமாம்.”
“வடக்கா தெற்கா?”
“நான் இங்கேதான் பிறந்து வளர்ந்தேன். அப்பா-அம்மா தெற்கு!”
“வாட்சாப் பல்கலைக்கழகம் எங்கே இருக்கிறது? உங்கள் ஊரில்தானா? அல்லது வடக்கிலா?” நக்கலாகச் சிரித்தான்.
புன்னகைத்தேன். சரியாகச் சொல்வதென்றால், வழிந்தேன்.
ஆர்தர் திரும்பவும் வண்டியை அவன் பக்கம் இழுத்தான்.
“ஏய், ரோகன்! அதெல்லாம் நமக்கெதுக்கு? நம் குழுவில் யாரோ தினமும் துப்பாக்கி கொண்டு வருகிறார்களாமே! யாரது?”
“பெயரெல்லாம் சொல்ல மாட்டேன். தர உறுதி (quality assurance) ஆள். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.”
“இந்த மாதிரி ஏன் தேவையில்லாமல் வம்பை விலைக்கு வாங்குகிறான்!”
“அவன் பிரச்சனை அவனுக்கு. போன வாரம் தணிக்கையில் இரண்டு மூன்று கோளாறுகள் கண்டுபிடித்துச் சொன்னதற்கு, இரவு மாற்றில் வந்தவர்கள் இருவர் அவன் பணி முடிந்து திரும்பும் போது, காரை நிறுத்தி மிரட்டினார்களாம். அவர்களுக்கு அவர்கள் பிரச்சனை. இப்படியே தொடர்ந்தால் அவர்கள் வேலை போய்விடும். அதனால் பயந்து போய் பயமுறுத்தியிருக்கிறார்கள். அடுத்த நாள் முதல் இவன் தற்காப்புக்காகக் கொண்டுவரத் தொடங்கிவிட்டான்!”
ஆர்தர் விடுவதாக இல்லை. புதிதாகச் சிலர் இருப்பதால் ரோகனை அன்று கூடுதலாகவே நோண்டுவது போல் இருந்தது.
“ரோகன்! இந்த ஒபாமாவுக்கும் ஒசாமாவுக்கும்…” என்று தொடங்கி மற்றவர்களைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான்.
“எல்லாமே என்னைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். நானும் உங்களைப் போல ஒன்றும் தெரியாத கூமுட்டையாகத்தான் இங்கு வந்து சேர்ந்தேன். நீங்களும் நீங்கள் நெறிப்படுத்தும் பதிவுகளையும் காணொளிகளையும் திறந்த மனதோடு உள்வாங்கிக்கொள்ளுங்கள். மனதைத் திறந்து வைத்திருப்பவர்களுக்கு அள்ளிக்கொண்டு செல்ல இங்கே கொட்டிக்கிடக்கிறது. மற்றவர்களுக்கு உளவியல் ஆலோசகரின் அறைக்கதவு திறந்திருக்கிறது. போய்ச் சாகுங்கள்.”
ரோகன் தொடர்ந்தான். “இங்கே வருபவர்களுக்குப் பல வாயில்கள் இருக்கின்றன. ஆனால் வந்த வழியில் திரும்பிப் போவதற்கு மட்டும் வாய்ப்பே இல்லை. ஒன்று, ஞான வாயில். இந்த உலகத்திலுள்ள 99 விழுக்காட்டு மூடர்களுக்குத் தெரியாத - புரியாத உண்மையெல்லாம் புரிய வரும். இன்னொன்று உளவியல் ஆலோசகரின் அறை வாயில். பைத்தியத்தின் தொடக்க காலத்திலேயே நீயே கண்டுபிடித்துவிட்டால் அந்தக் கதவைத் தட்டலாம். அவர்களாகக் கண்டுபிடித்து உதவ மாட்டார்கள். மற்றொன்று, அதோ அந்த மாடி மேல் ஏறிக் குதித்துச் செத்துப் போவதற்கான வாயில். ஏற்கனவே ஒருத்தன் அதிலிருந்து குதித்துச் செத்திருக்கிறான். நாம் கண்ணை மூடிக்கொண்டு இருந்த போது உலகம் அழகாக இருந்தது என்று நம்பும் பைத்தியங்களுக்கான வாயில் அது. அடுத்தது, மணிக்கு நான்கைந்து டாலர்கள் குறைவாகக் கிடைத்தாலும் பரவாயில்லை என்று வால்மார்ட் - காஸ்ட்கோ போன்ற கடைகளுக்கு வேலைக்குப் போவது. அந்த உலகத்துக்குள் போய்விட்டால் பில் கேட்ஸ் ஆக முடியாதே! இது எதுவுமே இல்லாமல் அளவில்லாத ஆனந்தத்தோடு ஞானத்தையும் அடைய இருக்கவே இருக்கிறது - களை! அதுதான் நான் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை. குடித்துக் கெடுவதால் உடம்புக்கும் கேடு. களையோ உடலுக்கும் மனதுக்கும் மருந்து. ‘விரக்திப் பிணைப்பு’ என்று சொல்லிக்கொண்டு மாடிப்படிகளுக்குள்ளோ கழிவறைகளிலோ யோகா அறையிலோ கூடிக் கிடப்பது இன்னோர் ஆனந்த வாயில். ஆர்தர் இந்த வாயிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். ஹாஹாஹா!!!”
ஆர்தர் நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.
அலைபேசி அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தேன். ஆசிரியரிடமிருந்து குறுந்தகவல்.
“ஓவியா, உன் கட்டுரை திட்டமிட்டபடி அடுத்த இதழுக்குள் வந்துவிடுந்தானே?”
“நிச்சயம், ஆசிரியரே! அதுவரை என்னால் பொறுக்க முடியுமா என்று தெரியவில்லை. இதுதான் எனக்கிடப்பட்ட முதல் பணி. நான்கு பேரை நேர்காணல் செய்து எழுதிய கட்டுரையாக இல்லாமல் நானே நேரில் வந்து வாழ்ந்து பார்த்து எழுதிய கட்டுரை என்று சொல்லும் போதே புல்லரிக்கிறது. இதுதானே இதழியல்! நான் கொடுக்கப் போகும் ஒரு கட்டுரை இத்தனை ஆயிரம் பேரின் வாழ்வை ஒரு துளி மாற்றினாலும் அதற்காகப் பெரும் பெருமிதம் கொள்வேன். வாய்ப்புக்கு மிக்க நன்றி, ஆசிரியரே! விரைவில் நம் அலுவலகத்தில் சந்திப்போம்.”
கருத்துகள்
கருத்துரையிடுக