நேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ்

நேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ்

‘தட்பவெப்ப மாற்றப் புனைவுக்கென்று தனி வகைமை இருக்கும் போது, அது அன்றாட வாழ்க்கையின் தீவிரத்தோடு தொடர்பில்லாத தனியான ஒன்றாகிவிடுகிறது. ஆனால் அது நம் அன்றாட வாழ்க்கையோடு முற்றிலும் பின்னிப் பிணைந்துள்ள ஒன்று.’

அமிதவ் கோஷ், தன் புதிய கட்டுரைத் தொகுப்பு நூலான, த கிரேட் டிரேஞ்ஜ்மெண்டில் (The Great Derangement), இன்றைய தட்பவெப்ப நெருக்கடியின் வடிவத்தில் மனித குலத்தை அதன் இன்றைய இக்கட்டான நிலைக்கு இட்டு வந்துள்ள கதை சொல்லல், வரலாறு, அரசியல் ஆகியவற்றின் தோல்விகள் பற்றி ஆய்வு செய்கிறார்.

அந்த மெல்லிய தொகுதியின் வீச்செல்லை பரந்து விரிந்ததாக இருக்கிறது: மற்ற எத்தனையோ விஷயங்களுக்கு நடுவில், பொதுப்போக்குப் புதினங்களில் (mainstream novel) இயற்கையிலிருந்து தன்னை வேறாகப் பார்க்கும் நிலைக்கு மனிதகுலத்தைத் தள்ளிய கர்டீசிய இருமைவாதத்தின் விளைவுகள் பற்றி ஆராய்கிறார்; தட்பவெப்பப் பேரழிவைத் தன் குடும்பமே எப்படி எதிர்கொண்டது என்ற கதையைச் சொல்கிறார்; புயல் எழுச்சி ஏற்பட்டால் மும்பை போன்ற கடலோரப் பெருநகரத்துக்கு என்ன ஆகும் என்று கேள்வி எழுப்புகிறார்; முதலாளித்துவத்தின் அளவுக்கு தட்பவெப்ப நெருக்கடியின் உருவாக்கத்துக்கும் ‘பேரரசு’க்குப் பங்கிருக்கிறது என்று வாதிடுகிறார்.

த வயர் (The Wire) உடனான உரையாடலில், இந்த நூலை எழுதியதன் பின்னணியில் இருந்த மிக அவசரமான உளத்தூண்டல்கள் பற்றிய கேள்விகளுக்கும், கதை சொல்லல், அரசியல் ஆகிய இரண்டிலுமே தட்பவெப்ப மாற்றத்தை ஒரு தொலைதூர நிகழ்வு போலக் கட்டமைப்பது பற்றி எப்படி உணர்கிறார் என்பது பற்றியும் பதிலளிக்கிறார் கோஷ்.

தட்பவெப்ப மாற்றத்தைப் பற்றி உரையாடுவதில் தற்காலப் புதினங்களின், குறிப்பாக இலக்கியப் புனைவுகளின், தோல்வி பற்றி ஆராய்கிறீர்கள். தட்பவெப்ப மாற்றம் பற்றிய திட்டத்தில் புதினத்துக்கு அப்படியொரு நடுநாயகமான இடம் எப்போதும் இருந்ததா என்ன?
புதினத்தை வெறும் புதினமாக அன்றி அதற்கு மேலான பரந்த கற்பனைத்திறத்தின் தோல்வியின் அடையாளமாகப் பார்க்கிறேன். புதினம் என்பது எழுத்தின் ஒரு வடிவம் என்றாலும் இந்தத் தோல்வி இதழியல் உட்பட அனைத்து விதமான எழுத்துக்களுக்கும் சேர்த்தே பொருந்தும் என்று எண்ணுகிறேன். எத்தனையோ பத்திரிகையாளர்கள் [நேர்காணலுக்காக] என்னிடம் வருகின்றனர், அவர்களில் பலர் தட்பவெப்ப மாற்றம் நெடுந்தொலைவில் வேறெங்கோ நடந்துகொண்டிருக்கிற ஒன்று என்று கூறியுள்ளனர், இதெல்லாம் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.

பின்னர் அவர்களிடம் கேட்பேன் - சரி, கடந்த சில வாரங்களில் டெல்லியில் இருந்தீர்களா? அப்படியானால் இந்த நம்ப முடியாத வெப்ப அலையின் ஊடாக நீங்களும் வாழ வேண்டியதிருந்திருக்கும்தானே! அது பற்றி நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள்? உண்மையில் அவர்கள் யாருமே எதுவுமே எழுதியதில்லை. இது மனத்திலறைகிற ஒன்றாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அப்படியே அமைதியாக இருந்துவிட வேண்டும் என்று ஏன் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்ற கேள்வியை எனக்கு நானே கேட்காமல் இருக்க முடியவில்லை.

அதே வேளையில், கிட்டத்தட்ட தட்பவெப்ப மாற்றம் பற்றிய எல்லா எழுத்துக்களுமே அபுனைவுகளில்தான் (non-fiction) இருக்கின்றன. புதினம் என்ற வடிவில் மிகவும் ஈடுபாடு உடைய ஆள் நான். நீங்கள் பணிபுரியும் ஓர் ஊடகம் உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை அங்கீகரிக்க முடியாதது போல நடந்துகொள்ளும் போது, அது பல கேள்விகளை எழுப்புகிறது.

அதே வேளையில், ‘தீவிரப்’ புனைவு எனப்படுவதற்கும் வகைமைப் புனைவுக்கும் இடையில் உள்ள எல்லைக்கோடுகளை மங்கலாக்கிக்கொண்டு வருகிற - தம் படைப்புகளில் தட்பவெப்பம் பற்றியும் கையாள்கிற மார்கரெட் அட்வூட் அல்லது டேவிட் மிட்செல் போன்ற புதின எழுத்தாளர்களும் இன்று பணியாற்றிக்கொண்டுதானே இருக்கிறார்கள்.
நிச்சயமாக. அறிவியற் புனைவுகள் வாசிப்பதை எப்போதுமே பெரிதும் விரும்பியிருக்கிறேன். நான் அதை அப்படி நினைக்கவில்லை என்றாலும் கூட மற்றவர்கள் அறிவியற் புனைவு என்று கருதும் ஒரு நூல் கூட எழுதியிருக்கிறேன்.

ஆனாலும் எவரேனும் தட்பவெப்பம் பற்றி எழுதும் போது அதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், தானாகவே அது வேறொரு வகைமைக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுவிடுகிறது. ஆக அதில் என்ன சொல்லப்படுகிறது? ஒன்று, தட்பவெப்ப மாற்றம் அவ்வளவு முக்கியமானதில்லை என்று சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்லும் போது என்ன நடக்கிறது என்றால், முக்கியம் என்கிற கருத்தாக்கத்தையே அது கேள்விக்குள்ளாக்குகிறது. உங்கள் முக்கியம் என்பது மனிதழிவு (mortal) அச்சுறுத்தல்களையே புறந்தள்ளுவதாக இருந்தால், என்ன வகையான முக்கியம் அது?

எனவே தட்பவெப்ப மாற்றம் என்பது, செவ்வாய்க்கிரகவாசிகள், பிரபஞ்ச அழிவு போன்றவை எப்படி எடுத்துக்கொள்ளப்படுகின்றனவோ அது போல எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்கிற உண்மை இருக்கிறதே (சிரிக்கிறார்). அதுவே முக்கியம் என்பது பற்றிய நம் கருத்தாக்கத்தின் விபரீதமான இயல்பைப் பற்றிச் சொல்கிறது. எனவே முக்கியம் என்கிற இந்தக் கருத்தாக்கம் அப்போதே ஒரு மாபெரும் பிறழ்ச்சியின் (derangement) அங்கமாகிவிடுகிறது.

செவ்வாய்க்கிரகவாசிகள் பாவம், நீங்கள் உங்கள் நூலில் விவரித்துள்ள இரண்டு கருத்தாக்கங்களைக் கையாள்கிற ஒருவிதத் தற்கால வகைமைப் புனைவு இருக்கத்தான் செய்கிறது: தட்பவெப்ப மாற்றத்தை விவாதிக்க நீங்கள் பயன்படுத்தும் மனிதரல்லாதவற்றின் இயமீறிமை அல்லது இயற்கை மீறல் (uncanny) மற்றும் செயலாண்மை (agency) ஆகிய இரண்டையும் கையாள்கிறது. சைனா மீயைவில்லின் (China Miéville) படைப்பில், அது கடைசியில் என்ன மாதிரியான உயிரினங்கள் என்றே கண்டுபிடிக்க முடியாத மாதிரியான உயிரனங்களிடம் வாசகரை அறிமுகப்படுத்துகிற விதத்தைப் போல, வினோதமான புனைவு பற்றி எண்ணிப் பார்க்கிறேன். இது போன்ற புனைவுகள்தாம் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவையும்.
கண்டிப்பாக. டோரிஸ் லெஸ்ஸிங் விஷயத்தில் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் மிகவும் பரபரப்பான முறையில் மேடை வெளிச்சத்துக்கு வருகின்றன. மற்றவர்கள் அறிவியற் புனைவு என்று கருதுவதை எழுதுவதில்தான் அவர் வாழ்வின் கடைசி ஆண்டுகளைக் கழித்தார். அவர் அவற்றை அறிவியற் புனைவு என்று கருதவில்லை. அர்சுலா லெ குயின் செய்துள்ளது போலவே, இவரும் மீண்டும் மீண்டும் எப்போதும் இந்த வகைமைகளில் வேறுபாடு ஏதுமில்லை என்று வாதிட்டார். அந்த விஷயத்தில் அர்சுலா சொல்வது முற்றிலும் சரியென்று எண்ணுகிறேன். அந்த விஷயத்தில் டோரிஸ் லெஸ்ஸிங் சொல்வது சரியென்று எண்ணுகிறேன்.

மீயைவில்லின் படைப்புகளை மிகவும் சுவாரசியமானவையாகப் பார்க்கிறேன். இயமீறிமையை அவர் பல்வேறு வடிவங்களில் பேசத்தான் செய்கிறார். ஆனால் அதில் அறிவாவலுக்குரிய இன்னொன்றும் இருக்கிறது - இந்த விஷயங்களை அவர் தட்பவெப்பத்தோடு இணைப்பதில்லை. அதனால்தான் எனக்கு பார்பரா கிங்சால்வரின் நூல் (Flight Behaviour) குறிப்பாக ஆற்றல்மிக்கதாகப் படுகிறது. ஏனென்றால், அது முழுக்க முழுக்க யதார்த்த வரம்புச் சட்டகத்துக்குள்ளேயே - முழுக்கவும் நம் காலத்துக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளது. மார்கரெட் அட்வூட் மற்றும் சைனா மீயைவில்லின் ஊகப்பாடுகள் எதிர்காலத்திலோ மாற்றுப் பிரபஞ்சத்திலோ அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் படைப்பு நம் இன்றைய நாளைப் பற்றியதாக இருக்கிறது.

இந்த மாதிரியான புனைவுகள் பயனுள்ளவையாக இருக்க வேண்டுமானால், அவை இனங்காணத்தக்க பிரபஞ்சத்தில் அமைக்கப்பட வேண்டும் என்கிறீர்களா?
அதேதான். பாருங்கள், இதுதான் பிரச்சனை: தட்பவெப்ப மாற்றப் புனைவுக்கென்று தனியான வகைமை என்று வைத்துக்கொண்டால், அது அன்றாட வாழ்வின் தீவிரத்தோடு தொடர்பற்ற தனியான ஒன்றாக ஆகிவிடுகிறது. ஆனால் அது முற்றிலும் நம் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. அதனால்தான் பொதுப்போக்குப் புனைவு இதை ஏன் அங்கீகரிக்க முடியாமல் இருக்கிறது என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்க வேண்டியுள்ளது. ஏதோவொரு வகையில் பிழைத்திருத்தல் பற்றிய முற்றிலும் உண்மையான இந்தக் கேள்விகளைவிட உங்கள் உள்நிலை (inner state) முக்கியமானதென்று எண்ண வைக்கிற அளவுக்கு என்ன விதமான குருட்டுத்தனத்தை இது உருவாக்குகிறது.

எனக்கு இது அர்சுலா லெ குயின் சொன்ன ஒன்றை நினைவுபடுத்துகிறது. அதாவது, “நிகழ்காலத்தில் எழுதப்படும் செயல்செத்த நகர்ப்புற நடுத்தர வர்க்க மக்களைப் பற்றிய புனைவுகள்” படிக்கவே தனக்குப் பிடிக்கவில்லை என்றார்.
இதைவிட அழகாகச் சொல்ல முடியாது. ஆனால் இதுதான் நடந்திருக்கிறது. தீவிரப் புனைவு என்று கருதப்படுவதே இதுதான் - இதேதான்: அது படுக்கையறைக்குள் பின்வாங்கிவிட்டது, தனிமனித மனதுக்குள் பின்வாங்கிவிட்டது, உணர்வுகளின் நுட்பமான நிறக்கூறுகள் (shades) பற்றித்தான் எல்லாம். ஒரு காலத்தில் மிகச் சிறப்பாகச் சாதித்ததை, புனைவு இன்று இழந்துவிட்டது, எடுத்துக்காட்டாக ஹெர்மன் மெல்வில் அல்லது ஜார்ஜ் எலியட் போன்றோர். த மில் ஆன் த ஃபிளாஸ் (The Mill on the Floss), கிராமப்புற வாழ்க்கையைச் சாத்தியப்படுத்திய இயற்கையான உலகத்தைப் பற்றியும் அதன் சுற்றுச்சூழல் பற்றியும் எவ்வளவோ பேசுகிறது. அவை அனைத்தும் நம் உணர்வுநிலையின் மையத்திலிருந்து திடீரென்று மறைந்துபோய்விட்டனவே. நகரியத்தையும் நகர நாகரீகத்தையுமே குவிமையப்படுத்தி, புனைவு முழுக்கவுமே நகரமயமாக்கப்பட்டுவிட்டது. தன்னழிவை நோக்கிப் பாய்ந்திறங்கும் குடை இராட்டினப் பயணம் ஒன்றின் அங்கமாகிவிட்டது புனைவு.

மனிதரல்லாதவற்றின் இயமீறிமை மற்றும் செயலாண்மை ஆகிய கருத்தாக்கங்களுக்கே திரும்ப வருவோம். நூலில், பீதியூட்டும் - முன்நிகழ்ந்திரா சூறைப்புயல் ஒன்றின் மையத்தில் நீங்களே சிக்கிக்கொண்டது பற்றி விவரிக்கும் பகுதி ஒன்று இருக்கிறதே.
நம் சொற்கள் அனைத்துமே நம்மை மனிதமைய நோக்குநிலை ஒன்றுக்கு எவ்வளவோ ஒப்புவிக்கின்றன. செயலாண்மை என்று சொல்லும் போது, மனிதர்களுக்கு மட்டுமே செயலாண்மை இருக்கிறது என்கிற அகநிலை வாய்மைக் கோட்பாட்டு - காண்டிய (Kantian) நிலைப்பாட்டுக்கு நம்மை ஒப்புவித்துவிடுகிறோம்.

காடுகளில் வாழும் மனிதர்களோடு வாழ்ந்துள்ள எவருக்கும் தெரியும் - காட்டுவாசி மக்களைப் பொருத்தமட்டில் எல்லாவற்றுக்குமே செயலாண்மை இருக்கிறது. மற்ற எல்லாவற்றிலுமிருந்து நம்மை நாமே விலக்கி வணங்கிக்கொள்ளும் இந்த உலகப் பார்வைக்குள் நாம் எப்படி நுழைந்தோம் என்பதே ஒரு மிக வினோதமான விஷயம். அந்த சூறைப்புயல் நிச்சயமாக ஒரு விஷயத்துக்காக என் மனதைத் தட்டியெழுப்பிவிட்டது. அந்த வகையில் அதற்கு ஒரு செயலாண்மை இருந்தது. அதோடு ஓர் உரையாடலில் இருந்து வருகிறேன்.

ஒரு வகையில், அது என் இடையுரையாளர் (interlocutor) எனலாம்.

இயற்கையை மனிதகுலத்திலிருந்து தனிப்பட்ட ஒன்றாக நினைப்பதில்தான் உண்மையான பிரச்சனை இருப்பதாக நினைக்கிறேன். மேற்கத்திய இயற்கை எழுத்துக்களில் அதுதான் மரபாக இருந்திருக்கிறது. தட்பவெப்ப மாற்றம் நமக்கு மிகவும் பரபரப்பாகக் காட்டும் விஷயங்களில் ஒன்று என்னவென்றால், மனிதனுக்கும் இயற்கைக்கும் எந்த வேறுபாடும் இல்லை, நமக்கு இப்போது கண்ணில் படும் மாற்றங்கள் நாம் தொடங்கிவைத்தவைதான், அவைதான் பல்வேறு வடிவங்களில் தம்மைப் பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கின்றன.

நாமே உருவாக்கிவிட்ட - நம் கையால் செய்திட்ட இந்த சக்தியை நாம் இப்போது சரியாகக் கணக்குப் போட்டுக் கையாள வேண்டும். இது ஒரு நாற்காலியைப் போலத்தான், ஒரேயொரு வேறுபாடு என்னவென்றால் இதற்கென்று மனவிருப்பம் வைத்திருக்கிறது - அதுவும் நமக்குப் புரியாததாக இருக்கிறது.

மனிதகுலம் முழுமையையும் பாதிக்கும் மெய்ம்மைதான் புவி சூடாதல் என்றாலும், தட்பவெப்ப மாற்றத்துக்கு எதிரான தடுப்பின் முன்னணியில் இருப்பது மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்கள்தாம். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலும் நிலக்கரிச் சுரங்கர்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் எதிர்ப்புகள் பற்றியும் இது போன்றே சொல்லலாம். இந்தியாவில், எடுத்துக்காட்டுக்கு இரண்டு மட்டும் சொல்வதென்றால், ஒடிசாவில் நிலப் பறிப்புக்கு எதிராகப் போராடும் பழங்குடி மக்கள், அல்லது சர்தார் சரோவர் அணையால் இடம்பெயர்க்கப்பட்ட தலித் சமூகங்கள் பற்றி எண்ணுகிறேன்.
அதில் முற்றிலும் எந்த சந்தேகமும் இல்லை. இந்த சமூகங்கள்தாம் முழுக்க முழுக்க முன்னணியில் இருக்கிறார்கள். அவர்கள் பார்ப்பது என்னவென்றால், அவர்களின் மீண்டெழுகை (resilience) மற்றும் தகவமைவின் (adaptability) பாங்குகளே (patterns) அடிப்படையில் தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பாக்சைட் சுரங்கங்கள் இதற்கு மிகவும் கண்கூடான எடுத்துக்காட்டு எனலாம். அது நிரம்பவும் நீர்ச்செறிவான பணி. அது மொத்த மலையுச்சிகளையும் அழித்துக்கொண்டிருக்கிறது. காடுகளைத் தெளிவாக வெட்டி வீசுகிறார்கள். எனவே இவை எல்லாவற்றையும் அவர்கள் பார்க்கிறார்கள், பார்த்து அவர்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கையின் பாங்குகளும் பெருமளவில் அச்சுறுத்தப்படுவதை உணர்கிறார்கள், அதனால் எதிர்த்துப் போராட முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

அந்தப் போராட்டங்களுக்கு ஏதோ வகையில் நம் நாடாளுமன்ற ஆட்சி வடிவத்தினுள் இடங்கொடுக்கப்பட முடியுமா, இதுதான் உண்மையான கேள்வி. அந்த விஷயத்தில் மென்மேலும் மனச்சோர்வடைந்தவனாகிவிடுகிறேன். ஏனென்றால் ஊடகங்கள் முக்கியமானதோர் அரசியல் பாத்திரத்தை ஆட வந்துள்ளன. ஆனால் ஊடகங்களுக்கோ அவர்களை விட்டு அளவிட முடியாத அளவுக்குத் தொலைவில் இருக்கும் ஒரு பிரச்சனையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைவிட ஓர் ஆம் ஆத்மி கட்சியின் போராட்டம், அல்லது அரசியல்வாதியாகும் கிரிக்கெட்டர் ஒருவர் ஆகியவற்றின் மீதுதான் பல மடங்கு கூடுதல் ஆர்வம் உள்ளது.

அரசியற் படுத்தல் (politisation) கூடிவருகிறது என்றாலும் கூட, தட்பவெப்ப மாற்றத்தை நோக்கி அது திருப்பப்படவில்லை என்று ஒரு கருத்தை இந்த நூலில் சொல்கிறீர்கள். ஆனால் வர்க்க மற்றும் சாதிப் பிரிவுகளால்தான் தட்பவெப்ப மாற்றத்துக்கு எதிரான அரசியல் போராட்டம் திட்டமிட்டே கண்டுகொள்ளப்படவில்லை என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும்?
நான் அரசியற் படுத்தல் என்று சொன்னது, பெரும்பாலும் சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் பற்றி. இவை சிறப்பாகச் செயல்படுவது எதில் என்றால், எதற்கும் உடனடிப் பதில் கொடுப்பதில்தான். அதுதான் உண்மையான பிரச்சனை: தட்பவெப்ப மாற்றம் என்பது நிமிடத்துக்கு நிமிடம் பதிலளித்துக்கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு உடனடிப் பிரச்சனை அல்ல. அது ஒரு தொலைதூர - தொடுவானப் பிரச்சனை. இது போன்ற பிரச்சனைகள்தாம் நம் கற்பனையின் - நம் சிந்தனையின் - நம் பதிலளிப்பின் - நம் எல்லோரின் அரசியல் வட்டத்தின் எல்லைக்கு வெளியே இருப்பவை போலத் தெரிபவை. இங்கும் சரி, அமெரிக்காவிலும் சரி, நம் அரசியல் வட்டம் என்பது, அடுத்த நான்கைந்து ஆண்டுகளை மட்டும் கணக்கில் வைத்து இயங்குவது. எனவே மக்கள் அந்த வட்டத்துக்குள் மட்டும் நின்று சிந்திக்கிறார்கள். அந்தப் பெரிய வட்டம், இது போன்ற நீண்ட காலப் பிரச்சனைகளுக்குத் தேவைப்படுகிற மாதிரியான கவனம், ஓரத்தில் ஒதுங்கி விழுந்துவிடுகிறது.

நிச்சயமாக இங்கே வர்க்க மற்றும் சாதிப் பிரிவுகள் இருக்கின்றன, மக்கள் கண்டிப்பாகக் கண்டுகொள்ளப்படாமல்தான் இருக்கிறார்கள். இன்னோர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ஆறுகளையும் கடற்கரைகளையும் மாசுபடுத்த இந்தத் தொழிற்சாலைகள் அனுமதிக்கப்படுவதைப் பாருங்கள். பல நூறாயிரம் மக்கள் இந்தக் கடலோர நீர்களைப் பயன்படுத்துகிறார்கள். ஓர் ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டுள்ள - அடிப்படையில் ஒருவர் அல்லது இருவரை வளப்படுத்துகிற ஒரு தொழிற்சாலை, பல நூறாயிரம் மக்களின் பிழைப்பை அழிக்க அனுமதிக்கப்படுகிறது. இதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்க முடியாது: நாம் பார்க்கும் - உலகமெங்கும் வேகமெடுத்துக்கொண்டிருக்கிற - பலரின் அழிவில் சிலரை வளப்படுத்துவதையே எல்லாமாகக் கொண்ட இந்த மாதிரியான நவதாராளமயமாக்கலில் (neolibaralisation) - தனிச்சிறப்பான இடம் இந்தியாவுக்கு உண்டு. அதுதான் தட்பவெப்ப மாற்றத்துக்கு நடக்கிறது. தட்பவெப்ப மாற்றம் மென்மேலும் நவதாராளமயமாக்கப்பட்டுள்ளது, இது இன்னொரு வகையான வணிகமாக நடத்தப்படுகிறது.

ஆசியாவில் உங்களுக்கு ஓரளவு நம்பிக்கை கொடுக்கும் வகையில் தட்பவெப்பத்தை மையப்படுத்திய குறிப்பிட்ட இயக்கங்கள் எவற்றையேனும் பின்தொடர்கிறீர்களா?
ஆசியா எங்கும் பல இயக்கங்கள் நடந்துள்ளன, சீனாவுக்குள் கூட. இந்தியாவைவிடப் பல பயனுள்ள சூழலியல் இயக்கங்கள் சீனாவில் உள்ளன. உண்மையில், ப்ரசென்ஜித் துவாரா எனும் சீனா பற்றிய இந்திய ஆய்வாளரால் மிகச் சிறந்த நூல் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நூலின் பெயர் த க்ரைஸில் ஆஃப் மாடெர்னிட்டி இன் ஏஷியா (The Crisis of Modernity in Asia). அதில் அவர் பல்வேறு பிரச்சனைகள் பற்றி மிக நீண்ட ஆய்வுகள் செய்துள்ளார்.

இந்தியாவில், பல வலுவான, ஆற்றல்மிக்க சூழலியல் இயக்கங்கள் பார்த்துள்ளோம் - சிப்கோ, நர்மதா இயக்கம் - ஆனால் கேள்வி என்னவென்றால் அவற்றை எல்லாம் எப்படி தட்பவெப்ப மாற்றத்தையும் உள்ளடக்கும் வகையில் ஒன்று சேர்ப்பது என்பதே. ஏனென்றால் நாம்தான் உலகின் மிகவும் அச்சுறுத்தப்பட்ட பகுதியாக இருக்கிறோம். ஏற்கனவே ஆயிரமாயிரம் வாழ்வாதாரங்கள் காணாமல் போவதைப் பார்க்கிறோம். எனவே இவை எல்லாவற்றையும் ஒரு விரிந்த எல்லைக்குள் ஒன்று சேர்த்துக் கொண்டுவருவது எப்படி? இதுதான் செயல்பாட்டாளர்களின் முன் இருக்கும் உண்மையான சவால்.
சூழலியல் இயக்கத்துக்கும் தட்பவெப்ப மாற்றத்துக்கான இயக்கத்துக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. முந்தையது குறிப்பிட்ட சுற்றுச்சூழல்களை, குறிப்பிட்ட பிரச்சனைகளைக் குறிவைத்துச் செயல்படுவது. பெரும்பாலான நேரங்களில், மனிதச் செயல்பாடு மூலம் ஓர் உடனடி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற வகையில் அந்தப் பிரச்சனைகள் வடிவமைக்கப்படும். தட்பவெப்ப மாற்றம் பற்றி எண்ணும் போது, மிக மிகப் பெரிய ஒன்றைப் பற்றி எண்ணுகிறோம். அது எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒன்று. நம் எல்லாச் செயல்பாடுகளும் அதற்குள் நடைபெறும் பெரியதோர் உறை அது. மேலும், மனிதர்களாகிய நாம் அதைக் கட்டுப்படுத்த முடியுமா அல்லது அதில் நாம் என்ன தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்கிற கேள்வி இன்னும் விவாதத்துக்கு உரியது. எனவே இதுதான் அதைச் சுற்றி ஓர் இயக்கத்தை உருவாக்குவதை மிகவும் கடினமானதாக்குகிறது. ஆனால் அதுவேதான் தேவைப்படுவதும்.

மேலும், அரசுகள் தொடர்ச்சியாக இது போன்ற போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கு மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. மகாராஷ்டிராவில் அணு உலைக்கான இடம் தேர்வு செய்வதில், தமிழ் நாட்டில் ஓரிடத்தில் இதைப் பார்த்தோம். வரவிடாமல் செய்வதற்குச் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து பார்த்தார்கள் மக்கள். ஆனாலும் வலுக்கட்டாயமாகத் திணித்துவிட்டார்கள். இவற்றையெல்லாம் ஓரளவு தொழிற்துறை பேரங்கள் காரணமாகவும் ஓரளவு இதன் மூலம் சிலர் பணம் குவிப்பதாலுமே செய்து முடித்தார்கள் என்று எண்ணுகிறேன்.

இந்த நூலில் முக்கியப் பங்கு வகிக்கும் சுந்தரவன டெல்டா பற்றி விரிவாக எழுதியவர் என்ற முறையில், ராம்பால் மின் நிலையத்துக்கு உங்கள் எதிர்வினை என்ன?
அது ஒரு முழுப் பேரிடர். அத்தனை இடங்களையும் விட்டுவிட்டு, இந்த மின் உற்பத்தி நிலையத்தை இங்கு கொண்டுவந்து வைப்பதில், என்ன அர்த்தம் இருக்கிறது? சுந்தரவனம் முழுக்க கரி நிரப்பி ஓடப்போகும் இந்த இராட்சத ஓடங்கள், [எல்லாவற்றையும்] தகர்த்தெறிந்து… இது முழுப் பைத்தியக்காரத்தனம். பல மனுக்களில், ஆவணங்களில் கையெழுத்துப் போட்டுவிட்டேன். இப்போதெல்லாம் அதுதானே செய்ய முடியும். பார்ப்போம், என்னதான் அதில் சாதிக்க முடிகிறது என்று.

நூலின் இறுதியில், தட்பவெப்ப மாற்றம் பற்றிய போப் பிரான்சிஸின் ஆவணத்தை பாரிஸ் ஒப்பந்தத்தின் உரையோடு ஒப்பிட்டு, பிந்தையது குறைபாடு உடையதாகச் சொல்கிறீர்களே.
தட்பவெப்ப மாற்றம் பற்றி இதுவரை செய்யப்பட்ட அல்லது எழுதப்பட்ட எல்லாவற்றையும்விட போப்பின் சுற்றுக்கடிதம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் மனிதத்தன்மையில், அதன் விரிவில், மக்களைச் சென்றடையவும் தட்பவெப்ப மாற்றத்தைச் சுற்றியுள்ள பிரச்சனைகளை எளிமைப்படுத்தித் தெளிவேற்படுத்தவும் அந்த ஆவணம் அமைக்கப்பட்ட விதத்தில் என்று பல வகைகளில் அது ஓர் அற்புதமான ஆவணம் என நினைக்கிறேன். அதை தட்பவெப்ப மாற்றப் பணித்துறையோடு ஒப்பிட்டால், இவர்களின் முழு அணுகுமுறையும் எப்போதும் அதை மருட்சிக்குள்ளாக்குவதாகவும் தொழில்நுட்பப்படுத்துவதாகவும் வல்லுநர்கள் என்ற முறையில் அவர்களே ஆட்சி அதிகாரம் செலுத்திக்கொள்கிற வகையில் அவர்களுக்கென்று ஒரு குட்டிப் பேரரசை நிறுவிக்கொள்வதற்கானதாகவும் இருக்கிறது. எனவே போப் முயன்றிருப்பது இதற்கு அப்படியே எதிரானது.

துரதிஷ்டவசமாக, தொழில்நுட்பமயத்தில் (technicity) நாம் கொண்டிருக்கும் குருட்டு நம்பிக்கையே நாம் சிக்கியிருக்கும் இந்த இக்கட்டான நிலையில் நம்மைக் கொண்டு வந்து நிறுத்திய முக்கியமான இயக்கிகளில் (drivers) ஒன்று என்பதை இப்போது பார்க்கிறோம். போப்பின் ஆவணத்தில் மிகவும் கிளர்ச்சியான பகுதியே, நாம் நம் பாதையைத் தவறவிட்டுவிட்டோம், இந்தத் தொழில்நுட்பமயத்தால் இதிலிருந்து வெளியேற நமக்கு வழி காட்ட முடியாது என்ற ஒப்புகைதான். நாம் தொழில்நுட்பமயத்தோடு பணி புரியும் போது அதைக் கருவிகளாகக் கருதுவது தவறு, ஏனென்றால் அவை கருவிகள் அல்ல என்று நெடுங்காலம் முன்பே ஹைடெகர் வாதிட்டார். நாம் உருவாக்கியிருக்கும் இந்தத் தொழில்நுட்பக் கட்டமைப்பு, இதை நாம் இனியும் கட்டுப்படுத்தவில்லை. இதை அவர் நெடுங்காலம் முன்பே 30-களிலேயே சொன்னார்: அது நம்மைக் கட்டுப்படுத்துகிறது. அது இப்போது முழுமையாகத் தெளிவாகிவிட்டது. மனிதர்களிடம் செயலாண்மை உள்ளது என்றும் நாம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் தொழில்நுட்பமயத்தின் மீது நம்மிடம் கட்டுப்பாடு உள்ளது என்றும் எண்ணும் எவரும் தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.

ஷ்ரேயா இலா அனசுயா, டெல்லியில் வசிக்கிறார் - எழுதுகிறார். @shreyilaanasuya-வில் கீச்சுகிறார் (ட்வீட்டுகிறார்).

https://thewire.in/books/amitav-ghosh-interview-climate-change

* ஜூன் 2019 கணையாழி இதழில் வெளியிடப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி