பால்ய மணம்

எல்லாத் திருமணங்களையும் போலவே என் பெற்றோருடையதிலும் ஏகப்பட்ட ஓட்டைகள், சமரசங்கள், பிரச்சனைகள். என் தாத்தாவின் தரத்தைப் பார்த்து அவருடைய பையனின் தரத்தை எடை போட்டு, பெண்ணைக் கொடுத்து ஏமாந்தவர் என் தாய்வழித் தாத்தா. தரமில்லாத மாப்பிள்ளைக்குப் பெண்ணைக் கொடுத்து விட்ட ஒரே தவறுக்காக காலம் முழுக்க என் தந்தையாரையும் அவருடைய பிள்ளைகளையும் தாங்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கும் அவருடைய பையன்களுக்கும். நான்கும் ஆண் குழந்தைகளாகிப் போனதில் என் தாய்க்கு ஒரு வசதி. பிள்ளைகள் அனைத்துமே தாயையும் தாய் சார்ந்த உறவினர்களையும் சார்ந்து வாழப் பழகி விட்டன. விபரம் தெரிகிற வயதில் உயிரோடிருந்ததாலும், அள்ளிக் கொட்டிய பாசத்தாலும் தாத்தா-பாட்டி என்பதெல்லாம் தாய் வழியில் மட்டுமே மனதில் நின்றன. பெண்பிள்ளைகள்தாமே முதலில் பேரன் பேத்தி கொடுப்பவர்கள், எல்லாத் தாத்தா பாட்டிகளுக்கும்! சித்தப்பாமார்கள் அனைவரும் உதவுகிற நிலையில் இல்லாததாலும் மாமாமார்கள் அனைவரும் உதவ முடியாத நிலையில் இல்லாததாலும் நாங்கள் ஒரு பக்கம் சாய்ந்தது தவிர்க்க முடியாதது. தந்தை வழிச் சொந்த பந்தங்கள் அனைத்தும் இழவு வீடுகளில் மட்டுமே பார்க்க முடிந்தவையாக இருந்தன. எட்டுப் பேருடன் பிறந்தவர் தந்தை. ஆனாலும் அதிகமாய் வந்து போய் இருந்தது இருவர் மட்டுமே. ஒரு சித்தப்பாவும் ஓர் அத்தையும். அவ்வப்போது அவர்களின் குடும்பங்களும். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் உறவுகளின் போக்குவரத்து முக்கியம் என்று எண்ணுபவர்கள் இவர்கள் இருவரும். மற்ற அறுவருக்கும் போக்குவரத்துக்கே கஷ்டப்படும் நிலையில் வாழ்க்கை. அன்றாட வாழ்க்கையே போராட்டமாகிக் கிடக்கையில் உறவுகளும் போக்குவரத்தும் ஆடம்பரங்கள்தாமே!

ஆனாலும் அத்தனை பேர் வீட்டிலும் போய் உட்கார்ந்து, சாப்பிட்டு, கதையடித்து, வம்பளந்து விட்டு வருகிற வசதி என் தந்தைக்கிருந்தது. மாமனாரும் மச்சினன்மார்களும் வசதியாக இருந்ததால். இந்தச் சுற்றுப் பயணக் காலங்களில் கிடைக்கிற வரவேற்புக்காகவும் மரியாதைக்காகவும் சுவையான சாப்பாட்டுக் கவனிப்புக்காகவும் அல்லது அவற்றுக்கெல்லாம் கைமாறாக ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணியிருக்க வேண்டும் தந்தையார். அதனால் போகிற அத்தை வீடுகளில் எல்லாம், “நாலு பையன்கள் வைத்திருக்கிறேன். கவலைப்படாதீர்கள். உங்கள் வீட்டுப் பொட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைக்குப் பொறுப்பு நானாச்சு!” என்று வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு வருவது எங்களுக்கும் சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பித்தது. சித்தப்பாமார்களை விட அத்தைமார்களின் கவனிப்பு அதிகம் இருந்திருக்க வேண்டும். “பாசத்துக்குப் பொட்டப் பிள்ளைகதான். பாதுகாப்புக்குத்தான் ஆம்பளப் பிள்ளைக!” என்று அடிக்கடி அவர் பொரிந்து தள்ளும் தத்துவப் பேச்சுக்கு இரண்டு அர்த்தங்கள் இருந்திருக்கின்றன. தம்பிமாரை விடத் தங்கச்சிமார்தான் நன்றாகக் கவனிக்கிறார்கள் என்பது ஒன்று. தன் பிள்ளைகள் நால்வரும் தாய்வழிச் சாய்ந்து விட்டனர் என்கிற ஆதங்கம் ஒன்று. ஆம்பளைப் பிள்ளைகளை வைத்துத்தான் தனக்குக் கிடைக்கும் இந்தக் கவனிப்புகள் எல்லாம் என்று புரியாத கூமுட்டை ஒன்றுமில்லை அவர். இழவு வீடுகளில் மட்டுமே பார்க்க முடிந்த மற்ற அத்தைமார்கள் வந்து போக ஆரம்பித்ததில் இருந்து முடிச்சுகள் இறுகுவதை நன்றாக உணர ஆரம்பித்தோம்.

தந்தை சொல்லைத் தட்டாத தனையர்’ என்று எங்களைப் பற்றித் தவறாக எண்ணிக் கொண்டிருந்த அத்தைமாரைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடிந்தது. எத்தனையோ முறை எங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறோம் – “பெண்ணைப் பெற்ற ஒரே காரணத்துக்காக எவ்வளவு நெளிய வேண்டியிருக்கிறது வாழ்க்கையில்?! நல்ல வேளையாக நமக்கு அந்தப் பிரச்சனை இல்லை!” என்று. இது போன்று பேசும் போதெல்லாம் “பெண்ணைப் பெற்றதால்தானே எங்கள் அப்பாவும் அண்ணன்மாரும் உங்க அப்பனை இவ்வளவு தொங்குகிறார்கள்!” என்று தன் சொந்த மனப் புழுக்கங்களைச் சொல்லி அழ ஆரம்பித்து விடுவாள் அம்மா. இத்தனைக்கும் இடையில் எனக்கு மனசுக்குள் ஓர் அற்ப மகிழ்ச்சி. இருக்கிற பொட்டைப் பிள்ளைகளிலேயே அழகானவளை என்னோடு சம்பந்தப் படுத்திப் பேசத் தொடங்கினார்கள் என்பதால். காற்றை விட வேகமான கால ஓட்டத்தில் மீசை முளைக்கும் முன்பே ஆசை முளைத்திருந்ததை என்னால் உணர முடிந்தது ஒரு நேரத்தில். சுற்றம் பெரிதென்பதால் இழவுகளும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருந்தன. நாங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகளும் கூடிக்கொண்டே வந்தன. மூளை எது பற்றியும் யோசிக்கும் முன்பே அடிமன ஆழத்தில் துளிர் விட்டுப் பூத்து விட்டன ஒருத்தர் மீது ஒருத்தர் கொண்டிருந்த ஆசைகள். உபயம் – வீட்டிலும் இழவு வீடுகளிலும் நடைபெறும் பேச்சுவார்த்தைகள். பெரியவர்கள் விளையாட்டுத்தனமாகப் போடும் சில முடிச்சுகள். “நாந்தாம்ப்பா அந்தக் கலியாணத்தையே நடத்தி வச்சது!” என்று சாகிறவரை பேரப்பிள்ளைகளிடமும் அவர்களுடைய சேக்காளிகளிடமும் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்வதைத் தவிர வேறெந்த உள்நோக்கமும் இன்றிப் பேசுகிற பேச்சுக்கள் அவை. எங்கள் இருவருக்கும் இடையேயான பேச்சு, பார்வை, எதிர்பார்ப்புகள் எல்லாமே கணவன்-மனைவி போலத்தான் இருந்தன. இன்று காதல்–கீதல்னு பித்துப் பிடித்து அலைகிற இளவட்டப் பயல்களில் கால்வாசிப் பேர்தாம் சுயபித்துப் பிடித்தவர்கள்; முக்கால்வாசிப் பேர் சொல்பித்துப் பிடித்தவர்கள்தாம். அடுத்தவன் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து மசிகிற ஒரே மேட்டர் இதுதான். ஆக, கல்யாணம் ஆகவில்லை எனினும் - சேர்ந்து வாழவில்லை எனினும் மனதளவில் எங்களுடைய மணவாழ்க்கை மிகச் சிறு வயதிலேயே தொடங்கி விட்டது. நாங்கள் பேசுவதை நோட்டம் விடுபவர்கள், அதைக்கண்டு மகிழ்பவர்கள், அதைப் பற்றிப் பேசுபவர்கள் என்று உசுப்பேற்றி விடும் கூட்டம், காலங்காலமாகவே இந்தப் பணியைத் திறம் படச் செய்து வருகிற கூட்டம். பல நேரங்களில் பேச வேண்டும் என்கிற ஆசையை விட, இவர்கள் எல்லாம் ஏதாவது நினைப்பார்களோ – பேசுவார்களோ என்ற கூச்சத்தை விட, அவர்களை மகிழ்விக்கவும் பேச வைக்கவுமே பேசிக் கொண்டதுண்டு. ஆண்டுக்கு ஒருமுறையாவது நிகழ்கிற இந்தச் சந்திப்புகளில் நிகழ்பவை ஏராளம்.

பட்டாளத்தில் இருக்கிற பாண்டி அடிக்கடிச் சொல்வான் – “படையில் இருக்கிற காலங்களில் வெறி பிடித்தது போல் அலைவேன். அந்த நேரத்தில் எவளாவது சிக்கினால் குதறிப் போடுவோம். ஆனால் ஊருக்கு வந்து பொண்டாட்டியைப் பார்த்து விட்டுத் திரும்பினால் கொஞ்ச காலத்துக்கு அந்த மிருகம் அடங்கியே கிடக்கும். ஊரில் தனக்கொருத்தி இருக்கிறாள் என்ற நினைவு வந்து கொண்டேயிருக்கும்” என்று. அது போலவே கண்ணில் படுகிற பொட்டைப் பிள்ளைகளை எல்லாம் பார்த்துப் பார்த்துப் பைத்தியம் கொள்கிற மனசும் வயசும் அவளைப் பார்த்துவிட்டுப் பிரிகிற சில காலங்களுக்கு அடக்கியே வாசிக்கும். ‘நமக்காக ஒருத்தி இருக்கிறாள்’ என்ற உணர்வு உறுத்திக் கொண்டே இருக்கும். அந்த நினைவே ஏதோவொரு சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் வேறெந்தப் பெண் மீதும் ஆசை வராமல் பார்த்துக் கொண்டது. பின்னர் ஓர் இழவுக்காகச் சந்தித்த போது, அவள் பெரியவளாகி விட்டதாகக் கேள்விப் பட்டபின் அருகில் செல்லக் கூட பயமாக இருந்தது. அதன் பின் ஒரு நீண்ட இடைவெளி...

படிப்பு முடிந்தது. பொருளாதார ரீதியாக வாழ்க்கை மாறியது. புதிய உலகம், புதிய வாழ்க்கை, புதுப்புது மனிதர்கள் – பெண்களையெல்லாம் பார்த்த பின்பு, நான் மணக்கப் போகிற பெண் எப்படியிருக்க வேண்டும் என்ற இலக்கணம் முற்றிலும் மாறியிருந்ததை உணர முடிந்தது. அந்த இலக்கணத்தின்படி அவள் இல்லை என்பதும் வருத்தமாக இருந்தது. படிப்பை நிறுத்தி விட்டாள்; படிப்பு வரவில்லை என்பதைக் கேள்விப் பட்டபோது – உறவுப் பெண்ணை மணப்பது தவறென்பதும், நண்பர்களுக்குத் தெரிந்தால் கேவலமாக நினைப்பார்கள் என்றும் உணர்ந்த போது - அவளுடனான இடைவெளி மேலும் பெரிதாகி இருந்தது. ஆனாலும் குழப்பம் தொடர்ந்து கொண்டுதானிருந்தது.

நாற்பது வயதுக்கு மேலாகியும் திருமணம் ஆகாத மாமா ஒருத்தர் சொன்னார் – “இப்படியோர் இளமைக் காலக் குழப்பத்தில்தான் உன் அத்தையைக் கட்ட மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அன்று எல்லோரும் போட்ட சாபத்தில்தான் எனக்கு இன்றும் கல்யாணம் ஆகவில்லை”. இது கொஞ்சம் பயமுறுத்தியது.

அலுவலக நண்பர் ஒருத்தர் சொன்னார் – “என் மாமா மகளைக் கட்டியிருந்தால் வாழ்க்கை எவ்வளவோ நிம்மதியாக இருந்திருக்கும். பணத்துக்கும் பகட்டுக்கும் அடிமையாகி, அன்னியப் பெண்ணைக் கட்டியதால் நித்தம் நித்தம் கொடுமை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்”. அது ஒரு நீண்ட ஆணடிமைக் கதை. அது மேலும் அச்சுறுத்தியது.

கைம்மாறு செலுத்த விரும்பிய தந்தையார் இன்னமும் தன் தங்கையிடம் வாக்குறுதி கொடுத்துக் கொண்டுதானிருக்கிறாராம். குடும்பத்தில் அடையாளத்தையும் மரியாதையையும் இழந்து விட்டதால், தன் தங்கை மகள் வந்தால் ஏகப்பட்ட மரியாத கிடைக்கும் என்ற நப்பாசையும் சுயநலமும் அவருக்கு. பிள்ளைகளுக்காகத் தியாகம் செய்கிற அப்பாக்கள் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சுயநலத்துக்க்காகப் பிள்ளைகள் வாழ்க்கையை நாசப்படுத்திய மாபெரும் சாதனையாளன் எங்கள் தந்தையார். அவர் பேசுகிற பேச்சு – கொடுக்கும் ஆதரவு – நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் மூலாதாரமாக இருப்பது சுயநலந்தான். ஒவ்வொரு அசைவிலும் ஓர் அரசியற் கணக்கு பின்னணியில் இருக்கும். குழந்தைத் தொழிலாளர் இருக்கிற ஒரு தேசத்தில் முதியோர் இல்லங்கள் இருப்பது மட்டும் எப்படித் தப்பாகும்?

ஆரம்பத்தில் இருந்தே வந்து போகிற சித்தப்பா சொல்கிறார் – “நான் பார், சொந்த அத்தை மகளைக் கட்டிக் கொண்டு சீரழிகிறேன். மரியாதையே கிடைக்க மாட்டேன் என்கிறது. உன் சித்தியைப் பற்றி ஏதாவது வாயைத் திறந்தால் அவளுடைய அண்ணன்மார் எல்லாம் அரிவாளைத் தீட்டக் கிளம்பி விடுகிறார்கள். படக் படக் என்று சட்டையைப் பிடித்து அடிக்க வந்து விடுகிறார்கள். உங்கள் அப்பன் பார். அன்னியத்தில் பண்ணியதால் அன்றைக்கு இருந்த மரியாதை, அப்படியே இருக்கிறது. என்ன செய்தாலும், ஒண்ணுமே செய்யாமல் சும்மா இருந்தாலும், என்னதான் வாய்க்கொழுப்பாகப் பேசினாலும் உங்க அம்மாவும் அவங்க அண்ணன்-தம்பிகளும் எவ்வளவு மதிக்கிறார்கள். பிழைப்பு எவ்வளவு சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது உங்களுக்கு?”.

மொத்தத்தில் பெரிய மனிதர்கள் பேச்சைக் கேட்டால் நன்றாகக் குழம்பலாம் என்ற உண்மை மட்டும் புரிந்தது.

கடைசியாக நண்பர் ஒருத்தர் சொன்னது உரைத்தது - “ஒரு பெண்ணுடைய வாழ்க்கையைக் கெடுக்கிற கெட்ட சிந்தனை கொண்டவன் நீ. வேண்டியபோது ஆசையைத் தூண்டிவிட்டு விட்டு, வசதிகளை அனுபவிக்க ஆரம்பிக்கிற போது கழற்றி விடப் பார்க்கிறாய். உன்னையே நினைத்து வாழ்கிற ஒரு பெண்ணை ஏமாற்றினால் எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா? இது போன்ற ஏமாற்றங்களை அவர்களால் தாங்க முடியாது. பெண்பாவம் பொல்லாதது”. யோசித்துப் பார்த்ததில் அதுதான் சரியெனப் பட்டது.

‘இன்றைக்கு நகரங்களில் படிக்கிற பெண்களில் பலர் ஆரம்பப் படிப்பின் போதே தனக்குப் பிடித்த பையன்களுடன் சுற்ற ஆரம்பித்து விடுகிறார்கள். கலியாணத்தின் போது சுத்தமாக வந்து சேர்கிற பெண் கிடைப்பதென்பதே பெரும் அபூர்வம். வருகிற காலங்களில் அதெல்லாம் எதிர்பார்ப்பதே தவறு என்று பையன்களே பேச ஆரம்பித்து விட்டார்கள். அப்படியிருக்கையில் என்னையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருத்தி எவ்வளவு சுத்தமானவள்? அந்த ஒரு காரணத்துக்காகவாவது அவளைத்தான் மணக்க வேண்டும்!’ என்று தோன்றியது.

கிராமத்து இளைஞர்களுக்கு, அதுவும் கற்புநெறி தவறாத இளைஞர்களுக்கு, மற்ற எல்லாவற்றையும் விட, ‘கற்புடைய பெண் வேண்டும்’ என்பது மிக மிக அடிப்படையான ஓர் ஆசைதானே! ஏமாற்றிவிடக் கூடாது என்கிற பயமும் சுத்தமான பெண் வேண்டும் என்கிற ஏக்கமும் ஆசைகளைக் கட்டிப் போட்டு வைத்திருந்தன. ஆனாலும் இப்படியொரு பெண் இருப்பதால்தானே இவ்வளவு கட்டுப்பாட்டோடு வாழ வேண்டியுள்ளது என்றெண்ணுகிறபோது, அவள் இல்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு அருமையாக இருந்திருக்கும் என்ற மாற்றுச் சிந்தனை ஒருபுறம்.

திடீரென்று ஒருநாள், ஒரு கணத்தில், ‘அவளும் யாரையாவது கூட்டிக் கொண்டு ஓடிவிட்டால் நல்லதல்லவா?’ என்று புதியதோர் ஆசை வந்தது. அதன்படியே சில காலம் வேண்டுதல்கள் செய்தேன்.

திடீரென ஒருநாள், ஊரில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது - “உன் அத்தை மகள் எதிர் வீட்டில் இருந்த ஒரு பையனைக் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டாள்”.

“எதிர் வீட்டில் இருந்த ஒருத்தன் உன் அத்தை மகளைக் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான்” என்று சொல்லியிருக்கலாம் எதிர் முனையில் இருந்த பாவி மச்சான்காரன்.

இப்போதெல்லாம் பெண்குட்டிகள்தாம் பாவப்பட்ட பையன்களைக் கூட்டிக் கொண்டு ஓடுவது போலப் பேசத் தொடங்கி விட்டார்கள்.

தொடர்ந்து பேசினார், மரியாதைக்குரிய மச்சான் – “எவ்வளவு அருமையான வாழ்க்கை கிடைத்திருக்கும்! அவள் அழகுக்கும் பாக்கியத்துக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு பையனைக் கூட்டிட்டு ஓடிவிட்டாள். அவன் ஒரு சல்லிப் பயல். படிப்புக் கிடையாது. தொழிலும் எதுவும் இல்லை. ஊரைச் சுற்றிக் கொண்டு... தெருக்காட்டில் சண்டை போட்டுக் கொண்டு... அலைந்தவன். இப்படிப் பண்ணி விட்டாளே! இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கெல்லாம் இப்படி வெட்டியாக ஊரை அளக்கிற பயல்களைத்தான் பிடிக்கிறது” என்று அவருடைய சொந்த வாழ்க்கைத் தோல்வியையும் நினைவு படுத்துகிற மாதிரிப் பேசி நிறுத்தினார்.

எனக்கு இங்கே என்னென்னவோ ஆனது. பத்துப் பதினைந்து நிறங்களில் கயிறுகள் பின்னிப் பிணைந்தது போன்ற குழப்பம் நிறைந்த ஏதோவொரு பிம்பம் நெளிகிறது மூளைக்குள். அதற்கூடாக தெளிவான பச்சை நிறப் பாம்பு ஒன்று போவது போலத் தெரிகிறது. எதற்காகவோ ஓர் உற்சாகம். மீண்டும் நூடுல்ஸ் கிண்டியது போல் ஒரு குழப்பம். இடையிடையே ஏதோ பாரம் குறைந்து விட்டது போன்ற குதூகலம். குழப்பத்தையும் குதூகலத்தையும் ஒரே நேரத்தில் சேர்த்து அனுபவித்திருக்கிற பாக்கியசாலிகளில் நானும் ஒருவனானேன் அன்று. எதையும் நம்ப முடியவில்லை. அப்போதைக்கு அமைதியாக இருந்தேன்.

“என்னடா, இப்பிடிக் கப்சிப்புன்னு அடங்கிட்ட? அதப் பத்திக் கவலப் படாத. ஒனக்கு அதவிட சூப்பர்ப் பொண்ணு கெடைக்கும்!” என்று முடித்தார் மச்சான்.

‘இவளைப் போய் என்னையே நம்பி வாழ்ந்து கொண்டிருந்தவள் என்று நம்பிக் கொண்டிருந்தேனே!’ என்றொரு சுயவெறுப்பும் பரிதாபமும் மேலிட்டது. அப்படியே முழுமூச்சாக நம்பி வாழ்ந்திருந்தால் இன்றொரு கோமாளியாக அல்லவா ஆகியிருப்பேன்! “உன்னையே நம்பி வாழ்கிறவள்” என்ற அலுவலக நண்பனுக்கும் “உன் அத்தையைக் கெட்டாத பாவந்தான் என்னை இன்றும் வாட்டுகிறது” என்ற மாமாவுக்கும் உடனடியாகத் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவர்களுடைய கருத்து தவறு என்று புரியவைத்து விட்டதாக ஒரு சிறு பெருமிதம். குழப்பியதற்கான சன்மானம். ஒருவேளை நானொரு பெண்ணைக் காதலித்துக் கட்டியிருந்தால் இவர்களே என்னைத் தூற்றியிருப்பார்களே! நல்லுள்ளம் படைத்த பாவிகள்!

வேறொரு புறம் மனதுக்குள் சிறிய மகிழ்ச்சி. ஆசைப்பட்டபடி ஆகிவிட்டதே என்று. வேண்டுதல்களுக்கு ஆற்றல் உண்டு என்றொரு புதிய நம்பிக்கை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இனிமேல், கலியாணத்தன்று வந்து யாரும் மண்ணைவாரித் தூற்ற மாட்டார்களே என்ற நிம்மதி. யாரையும் நம்பிக் கெடுத்தவன் என்ற அவப்பெயர் இராது வரலாற்றில். இன்னும் மூன்று தலைமுறைகளுக்கல்லவா தூற்றியிருப்பார்கள்! மாமாவுக்கு நேர்ந்தது போல!

சில பாடங்கள் சொல்ல முடியாதவை – சொல்லிப் பிறருக்குப் புரிய வைக்க முடியாதவை. பிறருக்கும் பயன்படாமல் தனக்கும் இனிப் பயன்படாமல் போகப் போகிற பாடங்களில் ஒன்று இது. தப்போ சரியோ ஒரேயொரு முறை செய்து விட்டு வருவதை வாங்கிக் கொண்டு, முன் வைத்த காலைப் பின் வைக்க முடியாமல் போய்க் கொண்டேயிருக்க வேண்டும். “கட்ட மாட்டேன்” என்று சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார் மாமா இப்போது. “கட்டியே தீரவேண்டும்” என்று நினைத்திருந்தால், அவரைப் போலவே காலம் முழுக்க வருத்தப்பட வேண்டி இருந்திருக்கும் இந்தச் செய்தியைக் கேட்டபின். “உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிற பெண் என்று யாருமே இல்லை உலகத்தில்” என்று அடுத்த தலைமுறைக்கு அறிவுரை சொல்ல வேண்டிப் போயிருக்கும். சொன்னாலும் கேட்டு விடவா போகிறார்கள்?! ஏமாறுகிறவனைக் காப்பாற்றுகிற ஆற்றல் (அதுவும் காதலில்) இறைவனுக்கே இருக்கிறதா என்று தெரியவில்லை. குழப்படியிலேயே வாழ்ந்ததும் ஒருவகையில் நல்லதாய்ப் போனது. ‘தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போனது’ என்று விதியின் மீது பழியைப் போட்டுவிட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கினேன் நிம்மதியாக. ஆசையை வளர்த்திருந்தாலோ, மாட்டேன் என்று மண்டையை உலுக்கியிருந்தாலோ மனநோயாளி ஆகியிருப்பேன். திடீரென இடைவெளியை உருவாக்கிக் கொண்ட காலங்களில் அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?! ‘இவனை நம்பினால் வாழ்க்கை மண்ணாய்ப் போகும் என்ற வெறுப்பில்தான் இன்னொருத்தன் மேல் ஆசையை வளர்த்திருப்பாளோ?! ஒருவேளை, தெளிவாக, “உன்னைத்தான் கட்டுவேன்” என்று உறுதியாகச் சொல்லியிருந்தால் இப்படியெல்லாம் ஆகியிராதோ?! அல்லது கிடைக்கிறவனை வளைத்துப் போட்டுக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான் பெண்ணினத்தின் பிறவிக்குணம் என்று நண்பர்கள் சிலர் சொல்வது கூடச் சரியோ?! ஆணைச் சார்ந்து வாழ்கிற இப்படியொரு வாழ்க்கை முறையைப் பெற்று விட்டதால்தான் அவர்களுக்கு இப்படியொரு பண்போ?! என்று ஏகப்பட்ட குழப்பங்கள்.

நாளை, அவள் வாழ்க்கை நன்றாக அமைந்து விட்டால், இந்த நினைவுகள் ஓர் இளமைக்காலச் சுற்றுலாப் பயணம் போல் வடிந்து போய்விடும். ஒருவேளை அப்படியில்லாத பட்சத்தில் இன்னோர் இழவு வீட்டில் சந்திக்கிறபோது என் மனைவியையும் பிள்ளைகளையும் பார்த்து ஏங்குவாள். என் மீது மிதமிஞ்சிய வெறுப்போ விருப்போ வரலாம். எனக்கு வரப்போகிறவள், ஒத்து வராதவள் ஆகிற பட்சத்தில், அவளுடைய சல்லிப் புருசனைப் பார்த்து எனக்குக் கடுப்படிக்கலாம். அவளையும் என்னையும் சேர்த்து வைத்து மனதுக்குள்ளேயே வாழ்ந்து பார்க்கலாம். வீடு திரும்பி வந்து கொஞ்ச காலங்களுக்குக் குழம்பிக் கொண்டே அலையலாம். பழையபடி... சூழ்நிலையை நொந்து!


இதைச் சார்ந்து, அதைச் சார்ந்து, இது அதைச் சார்ந்து, அது இதைச் சார்ந்து, நான் அவளைச் சார்ந்து, அவள் என்னைச் சார்ந்து, நாங்கள் வேறு சிலரைச் சார்ந்து, வேறு சிலர் எங்களைச் சார்ந்து, எங்களுடைய வெற்றி-தோல்விகள் நிச்சயிக்கப்படப் போகின்றன... குழப்பத்தைத் தவிர வேறெதுவும் நிச்சயமில்லாத இந்த உலகில்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்