சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!

வாசிப்பதை விட அதிகம் எழுதிக் கொண்டிருந்த ஆள் நான். எழுதும் அளவுக்கு வாசிப்பதில் ஆர்வமும் இருக்க வில்லை. இருக்க வில்லை என்றில்லை. எழுதும் அளவுக்கு இருக்க வில்லை. முதற் சிறுகதை எழுதி முடித்த போது, சில சிறுகதைகள் படித்திருந்தேனே ஒழிய, சிறுகதைத் தொகுப்பு என்று முழுதாய் ஒரு நூல் கூட முடித்ததில்லை. வார இதழ்களில் தொடர்கள் படிப்பது பிடிக்கவே பிடிக்காது. ஏனென்றால், அதற்கு வாராவாரம் இதழ் வாங்க வேண்டியிருக்கும். நாவல் என்ற படிவம் படைக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. முடியுமா என்ற நம்பிக்கை இல்லை. அவற்றைப் படிக்கவும் நிறையப் பொறுமை வேண்டியிருக்கும் என்றெண்ணி அவற்றின் பக்கமும் போவதே இல்லை. இப்படியாகப் போய்க் கொண்டிருக்கையில் எழுத்து வடிவங்களிலேயே மேலானது வரலாற்று நாவல்கள்தான் என்று சொல்லி அவற்றைப் படித்து முடித்திருந்த நண்பன் மணிகண்டன் வந்து கல்கியின் சில நாவல்களைப் படிக்கச் சொன்னான். படித்த முடித்த போது எனக்கும் கிட்டத்தட்ட அந்தக் கருத்தில் ஏற்பு ஏற்பட்டது. பார்த்திபன் கனவில் ஆரம்பித்து, பொன்னியின் செல்வன் படித்து, அதன் பின்பு படித்ததே சிவகாமியின் சபதம். பார்த்திபன் கனவு குறிப்பு எடுத்ததாக நினைவில்லை. பொன்னியின் செல்வன் குறிப்புகளுக்கு முன்பே சிவகாமியின் சபதம் குறிப்புகள் என்னுடைய நாட்குறிப்பு ஒன்றில் கிடைத்தது. இது ஒரு நூல் விமர்சனம் போல் இராது எனினும், அந்த நூலைப் படித்த போது என்னைக் கவர்ந்த வரிகளின் தொகுப்பு என்று வைத்துக் கொள்ளலாம். சுண்ணாம்பில் கலந்த தண்ணீராய்... இடையிடையில் என் வரிகளும்...

கல்கி அவர்கள் தன் ஆசிரிய உரையில், "'சிவகாமி சப்த'த்தில் கடைசிப் பாகம், கடைசி அத்தியாயம், கடைசி வரியை எழுதி 'முற்றும்' என்று கொட்டை எழுத்தில் போட்ட பிறகுதான் பன்னிரண்டு ஆண்டுகளாக நான் சுமந்து கொண்டிருந்த பாரம் என் அகத்திலிருந்து நீங்கியது." என்று சொல்லி ஆரம்பிக்கிறார்.

நீண்ட நாட்களாகவே எழுதுவது என்பது நினைவில் வருவதை எழுதி வைத்துப் பின்னர் கோர்ப்பது என்று மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தேன். கோணங்கியின் அளவிலாத அலைச்சல்களையும் தேடல்களையும் கண்டு, 'ஏன் இப்படிச் சுற்றித் திரிகிறார்?' என்று கூடத் தோன்றும். தோன்றுவதை மட்டும் எழுதுவது எழுத்தின் ஆரம்பப் பள்ளி; பல வருடத் தேடல்களையும் ஆய்வுகளையும் தொகுத்துப் பரிமாறுவதுதான் காலத்தை வென்று நிலைக்கத் தக்க எழுத்துகளின் பண்பு என்பது பின்னர்தான் புரிந்தது. தன் எழுத்துகளுக்கான எரிபொருளுக்காகத்தான் அப்படி ஓடித் திரிகிறார் என்பது கோணங்கியின் வாழ்க்கையாலும் இந்த வரியாலும் எனக்கு நன்றாகப் புரிந்தது. ஒரு சிறுகதையோ கட்டுரையோ கூட ஆரம்பித்து விட்டால், அது முடியும் வரை ஒருவித பார உணர்வு நம்மை எதுவுமே செய்ய விடுவதில்லை. அதைப் பன்னிரண்டு வருடங்கள் ஒருவர் சுமந்தார் என்றால், அப்பப்பா... நினைத்தே பார்க்க முடியவில்லை. அடுத்த கட்டுரை எழுதும் போது அதே உணர்வு வரும் போது இதைத்தான் நினைத்துக் கொள்ள வேண்டும். இலக்கியம் படைப்பது என்பது இருநூற்றி நாற்பத்தியேழு எழுத்துக்களையும் மாற்றி மாற்றிப் போடுவது மட்டுமல்ல; அதற்குள் இன்னும் என்னென்னவோ செலுத்த வேண்டும் போலத் தெரிகிறது. இல்லையா?

"குழந்தையை அடித்து அழச் செய்யலாம்; ஆனால் பாடச் செய்ய முடியாது. குழந்தையை அடி மேல் அடி அடித்து ஓடச் செய்யலாம். ஆனால் ஆடச் செய்ய முடியாது." என்கிறார். மிக அடிப்படையான ஒரு தத்துவம்தான். கலை என்பது அடித்துக் கற்றுக் கொடுக்க முடியாதது; அதுவாகவே வர வேண்டும் என்கிறார். ஒத்துக் கொள்கிறேன். எழுதுவதும் கூட அப்படித்தானே!

"தெற்கே பாண்டிய நாட்டின் எல்லையிலிருந்து வடக்கே கிருஷ்ணா நதி வரையில் பரந்திருந்த பல்லவ ராஜ்யத்தில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு மகேந்திர வர்ம சக்கரவர்த்தி சிறப்புடன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில், தமிழகமெங்கும் ஓர் அதிசயமான 'கலை மறுமலர்ச்சி' ஏற்பட்டிருந்தது." என்கிறார். கலை மறுமலர்ச்சி என்பது ஒரு சமூகத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று எனக்கு இப்போதும் தெளிவான சிந்தனை இல்லை. கலை மனிதனுக்குச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது. பல நேரங்களில் எளிதில் சென்றடைய முடியாத கருத்துக்களை எளிய மக்களுக்குக் கொண்டு செல்ல மிகச் சிறந்த வாகனமாக இருக்கிறது. அத்தகைய கலை மீது என்றுமே ஒருவித மரியாதை உண்டு. கலையை வளர்ப்பதற்காகவே அளவிலாத வளங்களை அளித்தல் ஒரு சமூகத்துக்கு எவ்வளவு நல்லது என்று தெரியவில்லை.

"செந்தமிழ் நாடெங்கும் மகா சிற்பிகளும் சித்திரக் கலைஞர்களும் தோன்றி சிற்ப, சித்திரக் கலைகளை அற்புதமாக வளர்த்து வந்தார்கள். குன்றுகளைக் குடைந்து கோயில்களாக்கும் கலையும் கற்பாறைகளிலேயே சிற்பங்களைச் செதுக்கும் கலையும் எங்கெங்கும் பரவி வந்தன." என்றும் சொல்கிறார். சிற்பிகளும் சித்திரக் கலைஞர்களும் வேறு ஏதாவது மக்களுக்குப் பயன்படும் வேலைகளைச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது. இன்னும் மாமல்லபுரம் போய்ப் பார்த்ததில்லை. ஒருவேளை இவையெல்லாம் மக்களின் விழிப்புணர்வை வளர்க்கப் பயன் பட்டனவோ என்பதை அப்போதைய நிலவரம் எப்படி இருந்தது என்பதை முழுமையாக அறிந்து கொண்டே சொல்ல முடியும். பெரும்பாலும் இந்த வேலைகளை அரசர்கள் தம் பெயரை நிலைத்து நிற்கச் செய்வதற்காகவே செய்தார்கள் என்றுதான் இப்போதைக்கு அறிகிறேன்.

"நிருத்யக் கலைதான் மற்ற எல்லாக் கலைகளுக்கும் அடிப்படை. சிவகாமி! அதனாலேதான் இதைத் தெய்வ மாக் கலையென்றும் பிரம்ம தேவர் பரத முனிவருக்கு அருளிய 'நாட்டிய வேதம்' என்றும் சொல்கிறார்கள். நிருத்யக் கலையிலிருந்துதான் சித்திரக்கலை உண்டாயிற்று. அதிலிருந்துதான் சிற்பக்கலை வளர்ந்தது. இசைக் கலைக்கும் நிருத்யக் கலைதான் ஆதாரம். பரத சாஸ்திரம் அறியாதவர்கள் சங்கீதத்தின் ஜீவத்துவத்தை அறிய முடியாது." என்று ஆயனர் சிவகாமியிடம் சொல்வதாக ஒரு பத்தி வருகிறது.

இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், தான் அறிந்த ஒன்றை அதுவே உலகக் கலைகளில் எல்லாம் சிறந்தது என்று சொல்லும் போக்கும் காலம் காலமாகவே இருந்து வருகிறது என நினைக்கிறேன். இதைப் படிப்போர் யாராவது நிருத்யக் கலை வல்லவராக இருந்தால், என்னுடைய இந்த வரி உங்களை வருத்தமளிக்கச் செய்தால், அதற்கு மன்னிக்கவும். ஏனென்றால், அது பற்றியும் அதன் அருமையும் அறியாமலேயே ஒரு கருத்தைச் சொல்வது சரியாகாது என்பதை நான் நன்கறிவேன். ஆனாலும், அதைப் படித்தபோது மனதில் தோன்றிய ஒன்றைச் சொல்லாமல் விடக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். பரதத்தை விட இழவு வீட்டில் ஆடும் ஆட்டம்தான் சிறந்தது என்று கூடச் சிலர் சொல்கிறார்கள். அதன் பொருளும் அதே. தனக்குத் தெரிந்ததை உலகிலேயே சிறந்ததாகச் சொல்வது. சிற்பமும் சித்திரமும் நிருத்யக் கலையால் உண்டானவையா என்று உறுதியாகத் தெரியவில்லை. இசைக்கு ஆதாரம் நிருத்யமா அல்லது மாற்றிச் சொல்கிறாரா என்றும் குழப்பம் வருகிறது.

சிவகாமி: "பரதம், சங்கீதம், சிற்பம், சித்திரம் - இவற்றினால் எல்லாம் உண்மையில் என்ன பிரயோஜனம்?"
ஆயனர்: ... "வசந்த காலத்தில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குவதனால் என்ன பிரயோஜனம்? பௌர்ணமி இரவில் பூர்ண சந்திரன் பால் நிலவைப் பொழிகிறதே, அதனால் என்ன உபயோகம்? மயில் ஆடுவதனாலும், குயில் பாடுவதனாலும் யாது பயன்? கலைகளின் பயனும் அவை போன்றதுதான். கலைகளைப் பயில்வதிலேயே ஆனந்தம் இருக்கிறது."

இதே கேள்விதான் எனக்கும். இப்போதும். ஆயனரின் பதில் முழுமையாக என்னை ஈர்க்க வில்லை. மற்றவையெல்லாம் இயற்கையாக நடப்பவை. கலை என்பது ஒரு மனிதன் தன் அன்றாட உற்பத்தி வேலைகளை விட்டு விட்டுப் போய்ச் செய்வது. அப்படியானால், அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டத் தக்கதாக அது இருக்க வேண்டும். அதே வேளையில், வேலையை மட்டுமே மனிதர்கள் செய்து கொண்டு இருக்க வேண்டும் என்றால், மனித இனமே என்றோ அழிந்து போயிருக்கும் என்பதுவும் சரிதான். கலைதான் அவனைச் சிரிக்க வைப்பது, சிந்திக்க வைப்பது, வாழ்வை மேலும் சுவாரசியமானதாக்குவது, திரும்பவும் கூடுதல் ஆற்றலோடு போய் வேலையைத் தொடர வழி செய்வது என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. கவலை மறந்து சிரிக்க வைக்கும் அல்லது ஓய்வெடுக்க வைக்கும் எதுவும் நமக்கு அவசியமே.

"கிராமாந்திரத்தில் பிறந்து வளர்ந்தவனும், இயற்கையில் சங்கோசமுடையவனும், தாயைத் தவிர வேறு பெண்களுடன் பழகி அறியாதவனுமான பரஞ்சோதியினால் சிவகாமியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை." என்று சூப்பராகச் சொல்லியிருக்கிறார் ஓரிடத்தில். அப்படிக் கிராமாந்திரத்தில் பிறந்து வளர்ந்தவன், இயற்கையில் சங்கோசமுடையவன், நீண்ட காலமாகத் தாயுடன் கூட ஒழுங்காகப் பழகி அறியாதவன் என்ற முறையில் பரஞ்சோதி பற்றிய வரிகள் எனக்கு மிகவும் பிடித்து விட்டன. அது எல்லாமே இப்போது அறிகுறி இல்லாமல் அழிந்து போய் விட்ட பண்புகள் என்பது வேறு கதை. :)

"நாகம் என்பது சர்ப்பத்துக்கும் யானைக்கும் பெயரானபடியால்..." என்கிறார் ஓரிடத்தில். யானையையும் நாகம் என்பார்கள் என்பது புதிய விஷயம். இனிமேல் குண்டாக இருக்கும் நாகராஜ்கள் பாடு திண்டாட்டம்தான். அவர்களுடைய பெயரை யானைராஜ் என்று மாற்றி விட்டு, சிவகாமியின் சபதம் படிக்கச் சொல்லலாம். :)

"ஆயனரே! சாதாரணமாக, இளம்பெண்கள் உயிரின் மேல் வெறுப்புக் கொண்டார்கள் என்றால், அதற்குக் காரணம் காம தேவனுடைய புஷ்ப பாணங்களாகத்தான் இருக்கும் என்பது உமக்குத் தெரியாதா?" என்று புத்த பிக்ஷு ஆயனரிடம் சொல்வதாக ஒரு வரி வருகிறது. இதில் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது. :)

"கடைசியாக, சமீப காலத்தில் இந்திய சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஐரோப்பியப் புலவர்கள், பல்லவர்களைத் தந்த பெருமையைத் தென்னிந்தியாவுக்கோ வட இந்தியாவுக்கோ தர விருப்பமில்லாதவர்களாய், இந்தியாவுக்கு வட மேற்கிலிருந்து வந்த அந்நியர்களாகிய சகர்தான் காஞ்சிபுரத்தைத் தேடி வந்த பல்லவர்கள் ஆனார்கள் என்று எழுதி, அதைப் புத்தகங்களிலும் அச்சுப் போட்டார்கள். நம் பழம் புலவர்களின் கதைகளையெல்லாம் கற்பனை செய்து தள்ளிய நம்மவர்களோ, மேற்படி நவீன ஐரோப்பியப் புலவர்களின் வாக்கை வேதவாக்காக ஒப்புக் கொண்டு, 'பல்லவர்கள் அந்நியர்களே' என்று சத்தியம் செய்தார்கள். தமிழகத்துக்குப் பல வகையிலும் பெருமை தந்த காஞ்சிப் பல்லவர்களை அன்னியர்கள் என்று சொல்லுவதைப் போன்ற கட்டுக் கதை உலக சரித்திரத்தில் வேறு கிடையாது என்றே சொல்லலாம்." என்று ஓரிடத்தில் ஆசிரியர் அடிக்குறிப்பாகக் குறிப்பிடுகிறார்.

இது இன்னமும் தெளிவாகாத ஒரு குழப்பம். பெரும்பாலான ஆய்வுகள் பல்லவர்கள் தமிழர்களே அல்ல என்றேதான் சொல்லிக் கொண்டிருக்கின்றன. நம்மவர்கள் பலரும் அவர்களை உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வன்னியர்களில் ஒரு பிரிவினரே தம்மை வர்மா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே பல்லவர்கள் என்கிறார்கள். தேவர்களோ தமிழகத்தின் அனைத்து அரச வம்சங்களுமே தம்மவர்கள்; தமிழகத்தின் ஒரே சத்திரிய இனம் தாமே என்கிறார்கள். சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் போலன்றி, பல்லவர்கள் வடமொழியில் தேர்ச்சி பெற்றிருந்ததால் அவர்கள் பார்ப்பனர்கள் என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். இதற்கு சரியான விளக்கம் யாரிடமாவது இருந்தால் கொஞ்சம் விளக்கிப் புரிய வையுங்கள். நிறைய நன்றிகள் சொல்வேன். இந்த இடத்தில் இது போன்ற இன்னொரு செய்தியைக் கூடுதலாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இராஜராஜ சோழனே இன்னும் எந்த சாதி என்ற முடிவுக்கு வரவில்லை நாம். இன்று வரை உச்ச நீதி மன்றத்தில் மொத்தம் எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். "அவர் எங்கள் சாதிதான் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்!" என்று.

"ஐயா! என்னுடைய வேலை என்ன என்பது பற்றி நீங்கள் ஒன்றும் கேட்காவிட்டால், நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்படாது!" என்று பரஞ்சோதி சொல்வதாக ஒரு வரி வரும். புத்திசாலித்தனத்தைப் பாருங்கள். இதுதானே இன்றைக்கு நம் அலுவலகங்களிலும் நடக்கிறது. நமக்குக் கீழே பணி புரியும் யாருமே விரும்பாத கேள்வி அல்லது நமக்கு மேலே இருப்போர் நம்மிடம் கேட்பதை நாம் விரும்புவதில்லை என்கிற கேள்வி இதுதான் - "என்ன செய்கிறாய்?". 'என்ன வேண்டும் என்பதைச் சொல். முடிந்தால் கொடுக்கிறேன். என்ன செய்கிறேன் என்பது பற்றியெல்லாம் ஏன் கேட்கிறாய்?' என்று எண்ணிக் கொண்டு ஏதோவொரு பொய்யைச் சொல்வோம். வேலை செய்யாமல் வெட்டிக் கதை படித்துக் கொண்டு இருப்பதை வெளியிலா சொல்ல முடியும்? 'உண்மை வேண்டுமானால் நீயே கண்டு பிடித்துக் கொள்; அதைச் சொல்வதல்ல என் வேலை!'.

இதில் வைஜெயந்திப் பட்டணம் என்றொரு நகரத்தின் பெயர் வருகிறது. அது விசாகப் பட்டணமாகத்தான் இருக்கும் என்பது என் நினைப்பு.

"புலிகேசியும் அவனுடைய படைத் தலைவர்களும் பேசிய பாஷையில் தமிழ்ச் சொற்களும் பிராகிருதச் சொற்களும் கலந்திருந்தன. (பிற்காலத்தில் இந்தக் கலப்பு மொழியே கன்னட பாஷையாயிற்று.)" என்றோர் இடத்தில் குறிப்பிடுகிறார்.

தென்னிந்திய மொழிகள் அனைத்துக்கும் தமிழே மூலம் என்கிற சேதியைச் சின்ன வயதிலேயே பள்ளிக் கூடத்தில் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனாலும் அதில் முழுமையாய் எனக்கு நம்பிக்கை வரவில்லை. இவர்கள்தாம் ஒவ்வோர் ஆட்சி மாற்றத்துக்கும் பின் அவர்களுக்கு ஏற்ற மாதிரிக் கதை சொல்பவர்களே. அதனால்தான். பெங்களூர் வந்த பின்பு, மற்ற மொழிக் காரர்களிடம் அதைச் சொன்னால், அவர்கள் ஏதோ அவர்கள் பிறப்பே தப்பு என்று சொன்னது போலக் கோபப் பட்டுக் கொண்டு வருவார்கள். அப்படிச் சொன்ன ஒரு பொழுதில், ஒரு கன்னட நண்பன், "இதையே வெளியில் போய்ச் சொல்லி விடாதே. கவனம்!" என்று எச்சரித்தான். அப்போது சேட்டா ஒருவர் வந்து ஆதரவுக் கரம் நீட்டினார். "எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் மலையாளம் என்றொரு மொழி கிடையாது. இன்றைய கேரளத்திலும் தமிழ்தான் பேசினார்கள். வாழும் மொழிகளிலேயே தமிழ்தான் முதன் மொழி. இதைக் கேரளத்தில் உள்ள பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்வார்கள்!" என்று ஒரு போடு போட்டார். அதன் பின்பு இந்தக் கருத்தைப் பேசுவது மிக எளிதாகி விட்டது எனக்கு.

ஆனால், தென்னிந்திய மொழிகளில் முதன் முதலாக நம்மை விட்டுப் பிரிந்தது கன்னடம். நம் மூத்த தம்பி. அதனால்தான் மொழி விஷயத்தில் நம்மிடம் கொஞ்சம் மொரண்டு அதிகம் பிடிப்பான். கன்னடத்துக்கும் முன்பே துளு பிரிந்து விட்டது என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். எது உண்மையோ தெரியவில்லை. அதிகமான வடமொழிச் சொற்கள் கொண்டு விலகிச் சென்றதால்தான் கன்னடத்தவர்கள் எளிதாக வடமொழி எழுத்துக்களை உச்சரிக்கிறார்கள். உச்சரிப்பு விஷயத்தில் அவர்கள் நம்மை விட ஒரு படி மேல். நாம்தான் தமிழ் என்ற நம் மொழியின் பெயரையே ஒழுங்காக உச்சரிக்க முடியாமல் தமில் என்று உச்சரிக்கிற மாதிரி வளர்ந்து விட்டோம். கன்னடத்தவர்கள் தமிழை தமிள் என்பார்கள். தமிலை விடத் தமிள் பரவாயில்லை அல்லவா? ல, ள வேறுபாடு சரியாகக் காட்டுவார்கள். அதையே நான் பெங்களூர் வந்துதான் ஓரளவு வேறுபடுத்தக் கற்றுக் கொண்டேன். அதனால்தான் பிரகாஷ் ராஜ் தமிழை அவ்வளவு சூப்பராக உச்சரிக்கிறார்.

இன்னொரு விஷயம் - கல்கியும் நிறைய வடமொழிக் கலப்பு மிக்க சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். அது அவரது பின்னணி காரணமாகவா அல்லது அவரது காலத்தில் தமிழைத் தூய்மைப் படுத்தும் வேலைகள் ஆரம்பிக்கப் பட்டிருக்க வில்லையா அல்லது கதை நடந்த காலத்தில் நம் மொழி அப்படித்தான் இருந்தது என்பதாலா என்று தெரியவில்லை. மூன்றுமே கூடக் காரணமாக இருக்கலாம்.



"தீபத்தை ஏற்றி நடுக்கூடத்தில் வைக்க வேண்டும். அப்படியின்றி மூலை முடுக்கிலே வைத்துத் துணியைப் போட்டு மூடினால், தீபம் அணைந்து போவதுடன், துணியும் அல்லவா எரிந்து போகும்?" என்று நாகநந்தி சிவகாமி பற்றி ஆயனரிடம் கேட்பதாக ஒரு கேள்வி வருகிறது. நல்ல கேள்வி. தீபத்தை மறைத்து வைப்பதே தவறு. அதுவும் துணியால் மூடினால் துணிக்குமல்லவா கேடு? எனவே, இனிமேல் தமிழர்களாகிய நாம் தீபத்தை அணைத்த பின்பு துணியால் மூட வேண்டும். அல்லது சும்மாவாவது கொண்டு போய் மூலையில் வைக்க வேண்டும். எரிகிற தீபத்தை மூலையில் வைத்துத் துணியால் மூடுகிற வேலையை மட்டும் செய்யக் கூடாது. அது போல, தீபத்தை வைக்கும் இடத்தில் தீப்பந்தத்தையும் வைக்கக் கூடாது. அது வீட்டையும் சேர்த்து எரித்து விடும். இல்லையா?

"காதலை நெருப்பு என்று கூறுவது முற்றிலும் பொருத்தமானது. சத்ருக்னா! நெருப்பு சொற்பமாயிருந்தால், காற்று அடித்ததும் அணைந்து விடுகிறது. பெருநெருப்பாயிருந்தால், காற்று அடிக்க அடிக்க நெருப்பின் ஜ்வாலை அதிகமாகிக் கொழுந்து விட்டு எரிகிறது. நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குப் பிரிவு என்று தோன்றுகிறது. பொய்க்காதலாயிருந்தால் பிரிவினால் அது அழிந்து விடுகிறது. உண்மைக் காதலாயிருந்தாலோ, பிரிவினால் அது நாளுக்கு நாள் வளர்ந்து பெரு நெருப்பாய் மூளுகிறது." என்று மகேந்திர வர்மர் சொல்வதாக ஒரு பத்தி வருகிறது. நல்ல உவமை அல்லவா? உங்களுடைய நெருப்பு எப்படி?

"நம் அன்புக்குரியவர்களைப் பற்றிச் சாதாரணமாக ஏதேனும் கெடுதலான விஷயத்தைக் கேள்விப்பட்டால் நம் உள்ளம் சுலபத்தில் நம்புவதில்லை. 'அப்படியெல்லாம் இராது' என்று மனதைத் திருப்தி செய்து கொள்கிறோம். அவதூறு சொல்கிறவர்களிடம் சண்டை பிடிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். ஆனால், எக்காரணத்தினாலாவது நமக்கு வேண்டியவர்களிடம் குற்றம் இருக்கிறதென்று நம்பும்படி நேர்ந்து விட்டால் உள்ளத்தில் கோபம் கொழுந்து விட்டெரியத் தொடங்குகிறது. வேண்டியவர்கள் மீது மட்டுமல்ல; உலகத்தின் மேலேயே கோபம் கொள்கிறோம். இந்த மனித இயற்கை காதலர்களின் விஷயத்தில் ஒன்றுக்கு நூறு மடங்கு ஆகிறது. காதலன் எவனும் தன்னுடைய காதலியைச் சாதாரண மானிடப் பெண்ணாகக் கருதுவதில்லை. தெய்வப்பிறவி என்றே கருதுகிறான். தேவலோகத்தில் அமிர்தபானம் செய்து கொண்டு, ஆனந்த அமர வாழ்க்கை நடத்த வேண்டியவள் தன் பேரில் கொண்ட அன்பினாலேயே இந்தப் பூலோகத்திலே வாழ்ந்து வருவதாகக் கருதுகிறான். காதலியோ, குழந்தைப் பிராயத்திலிருந்து தன் மனத்தில் தானே சிருஷ்டி செய்து கொண்டிருந்த இலட்சிய புருஷனுக்குரிய சகல உத்தம குணங்களையும் காதலன் மீது ஏற்றி அவனைக் குற்றங்கள் குறையல்லாத தெய்வீகப் புருஷனாகவே எண்ணிக் கொள்கிறாள். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தினால் அவர்களுடைய நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்படும்போது மகத்தான ஏமாற்றம் உண்டாகி விடுகிறது. மலையின் சிகரத்திலிருந்து திடீரென்று அதல பாதாளத்தில் விழுகிறவர்களைப் போல் ஆகி விடுகிறார்கள்." என்ற பத்திகள் காதலர்களின் கண்மூடித் தனம் பற்றி மிகச் சிறப்பாக விவரிக்கின்றன.

எத்தனையோ திரைப்படங்களில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு இதெல்லாம் இன்றைக்கு நமக்கு மிகச் சாதாரணமான விஷயங்களாகி விட்டன. அவர் எழுதிய காலத்தில் வேண்டுமானால் பெரும் தத்துவங்களாக இருந்திருக்கலாம். திருமணத்துக்கு முந்தைய காதல் போதை நம்மை எவ்வளவு கிறுக்குப் பிடிக்க வைக்கிறதோ அதே அளவு திருமணத்துக்குப் பிந்தைய பிரச்சனைகளும் நம்மைக் கிறுக்கப் பிடிக்க வைக்கின்றன. காதலிப்போரிடம் போய் இதையெல்லாம் சொல்லிப் பாருங்கள். பொளேர் என்று நம்மை ஓர் அறை அறைந்தாலும் அறைவார்களே ஒழிய இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 'ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்!' என்கிற கணக்கு திருமண நாளில் இருந்துதான் ஆரம்பிக்கும். காதல் மட்டும் செய்து கொண்டிருந்தால் அது பல ஆண்டுகளுக்குக் கூட ஓடும்.

"ஆம் சிவகாமி, ஆமாம்! அது மட்டுமல்ல, உலகத்தில் எல்லாம் அன்புமயமாய்ப் போய்விட்டால், வீரம் என்பதே இல்லாமற் போய்விடும். வீரம் இல்லாத உலகம் என்ன உலகம்? அப்புறம் கதை ஏது, கதைதான் ஏது?" என்றார் ஆயனர். கதையே வேண்டாம். வீரமற்ற உலகம் உயிர்கள் பயமின்றி வாழ உதவுமானால் யாருக்கு வேண்டும் கதைகள்.

"'விஹாரம்' என்பது புத்தபெருமானின் கோயிலும் பௌத்த பிக்ஷுக்கள் தங்கும் மடமும் சேர்ந்து அமைந்தது. 'சைத்யம்' என்பது புத்த பகவானின் தனிப்பட்ட ஆலயமாகும்." என்று அடிக்குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

"அந்தக் கடைக்கண் பாணமும் கள்ளப் புன்னகையும் என்னைக் கொன்றன." என்று மாமல்லர் சிவகாமியிடம் சொல்வதாக ஒரு வரி வருகிறது. மாற்றத்தைத் தவிர மாறாதது எதுவுமில்லை எனும் இவ்வுலகில் இது மட்டும் எத்தனை யுகங்கள் போனாலும் மாறாது போல்த் தெரிகிறது.

"அசாதாரண அழகு படைத்த ஸ்திரீகளைப் பிரம்ம தேவன் சிருஷ்டிக்கும்போது தன்னுடைய நாலிரு கண்களிலிருந்தும் சொட்டும் கண்ணீரையும் மண்ணுடனே கலந்து சிருஷ்டிப்பதாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட அசாதாரண சௌந்தரியவதிகளால் உலகத்திலே எத்தனையோ துன்பங்கள் உண்டாகுமென்று பிரம்மதேவனுக்குத் தெரிந்தபடியினாலேதான் அப்படி அவன் கண்ணீர் விட்டுக் கொண்டே அவர்களைப் படைப்பானாம்!" என்று மகேந்திர வர்மர் சிவகாமியிடம் சொல்வதாக ஒரு பத்தி வருகிறது.

இந்த வரிகளில் உள்ள வர்ணனைப் பூச்சுகளை எல்லாம் விட்டு விட்டுப் பார்த்தால் அவர் சொல்ல வருவது இதுதான் - அழகு ஆபத்து! யாருக்கு? அழகாக இருப்பவருக்கு... உடன் இருப்பவர்களுக்கு... சந்திக்க நேர்பவர்களுக்கு... பெரிய மனிதர்களுக்கு... அரசாங்கங்களுக்கு... உலகத்துக்கு... சாணக்கியர் கூட பெண்களைக் கொண்டு சாம்ராஜ்யங்களைச் சரிப்பது பற்றி நிறைய எழுதியிருக்கிறார். அழகான பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் பார்க்கிற எல்லோருமே பொறாமைப் படுகிறார்கள். பெண்கள் ஒருவிதத்தில் பொறாமைப் படுகிறார்கள். ஆண்கள் வேறொரு விதத்தில் பொறாமைப் படுகிறார்கள். எல்லோரும் எளிதில் சமம் என்று ஆகி விட முடியாமல் தடுக்கும் காரணிகளில் அழகும் ஒன்றுதானே. சின்ன வயதிலேயே ஓணானை விரட்டி விரட்டி அடிக்கிற - துன்புறுத்துகிற நமக்கு அணிலைப் பார்த்தால் பிடிக்கிறது. ஏன்? அழகுதானே காரணம்?! பார்க்க அழகாக இருக்கிற ஒருவர் கஷ்டப் படுவதைப் பார்த்துச் சகிப்பது சிரமமாக இருக்கிறது. அதே கஷ்டத்தை அதே வலியோடு அனுபவிக்கும் சராசரியான ஆளைப் பார்த்து அவ்வளவு மன உளைச்சல் அடைவதில்லை நாம். அழகாக இருப்பவர்கள் திருடினால் கூட நம்ப முடிவதில்லை. அதையே சுமாரான அழகுடைய ஒருவர் செய்தால் திருட்டுப் பட்டம் கட்டுவதோ சந்தேகப் படுவதோ மிக எளிதாகி விடுகிறது. உண்மையா இல்லையா?

மகேந்திரரின் சிவகாமியுடனான உரையாடலில் இன்னொரு வரி வருகிறது - "சாதாரண மனிதர்களுக்குத் தர்மம் வேறு; அரச குலத்தினருக்குத் தர்மம் வேறு." என்று. இதுவும் ஏற்றத் தாழ்வுகள் பற்றியதே. அவர்கள் சில தவறுகளைச் செய்து விட்டு எளிதில் தப்பிக் கொள்ளலாம் என்பது ஒன்று. அவர்கள் செய்து வெளிவரும் போது சிறிய தவறுகள் கூடப் பெரிதாகப் பேசப்படும் என்பது ஒன்று. நம்ம ஊரில் உள்ள கொள்ளைக் குடும்பங்களிடம் கேட்டால் இதற்கு இன்னும் தெளிவான விளக்கவுரைகள் கொடுப்பார்கள். பில் கிளிண்டனிடம் போய்க் கேட்டுப் பாருங்கள். அவரும் இதை நன்கு அனுபவித்து உணர்ந்தவர். இதுதான் இன்று வரை நம்ம ஊரில் பிரச்சனையாக இருப்பது. லோக் பால் மசோதாவில் கூட அதுதானே பிரச்சனை. ஆளுக்கொரு சட்டம் என்றாகி விட்டால் ஆள்வோருக்கு வாழ்க்கை எளிதாகி விடுமே.

அரச குடும்பத்தில் மாமியாரை 'அம்மா' என்று அழைப்பதாக வருகிறது. எங்கள் ஊர்ப் பக்கம் இதை ஒரு கொலைக் குற்றம் போலப் பேசுவார்கள். மாமியார் அம்மா என்றால், வீட்டுக்காரர் அண்ணனா? "ஐயோ கருமமே, அண்ணனோடு போய்..." என்பார்கள். அப்படியாவது தாய்க்கு இணையான மரியாதையும் கவனிப்பும் கிடைத்தால் நல்லது என்று அப்படிச் சொல்வதாக அப்படிச் சொல்வோர் சொல்கிறார்கள். பெரும்பாலும் ஐயர் வீடுகளில் மட்டுமே இந்தப் பழக்கம் இருக்கிறது என நினைக்கிறேன். பல்லவர்கள் பார்ப்பனர் என்று சொல்வோர் இதையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். இங்காவது மாமனார்-மாமியாரை மட்டுமே அப்பா-அம்மா என்கிறார்கள். கேரளத்தில் வீட்டுக்காரரையும் சேட்டா அல்லது ஏட்டாதான். ஒரு மலையாளப் படத்தில் படம் முடியப் போகிற நேரத்தில் கதாநாயகி போய் மாமனாரிடம் கேட்பாள், "உங்களை நான் அப்பாவென்று அழைக்கலாமா?". பதறிப் போனேன். பாதகத்தி, முடியப் போகிற நேரத்தில் இப்படி ஒரு குண்டைப் போடுகிறாளே என்று. அப்புறம்தான் புரிந்தது இதெல்லாம் அவர்கள் பண்பாடு என்று. 'எதெல்லாம்?' என்கிறீர்களா?! :)

"பல்லவ சாம்ராஜ்யத்தில் மந்திரி மண்டலம் என்றும் அமைச்சர் குழு என்றும் இரண்டு சபைகள் சக்கரவர்த்திக்கு இராஜ்ய நிர்வாகக் காரியங்களில் துணை செய்தன. மந்திரிகள் ஆலோசனை சொல்வதற்கு உரியவர்கள். அமைச்சர் அல்லது அமாத்தியர் காரிய நிர்வாகத் தலைவர்கள். சாம்ராஜ்யம் பற்பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு தலைவன் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கோட்டத் தலைவர்களும் மந்திராலோசனைக்கு அழைக்கப்படுவார்கள்." என்று பல்லவர்களின் அரசமைப்பு பற்றி ஆசிரியர் குறிப்பிடுகிறார். இவைதாம் வரலாற்று நாவல்களில் வரும் கற்பனையற்ற தகவல்கள். செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் சேகரிக்கும் குறிப்புகள். நம்மைப் பொருத்த மட்டில் மந்திரியும் அமைச்சரும் ஒன்றுதான். அது வடமொழிச் சொல். இது தூய தமிழ்ச் சொல். மற்றபடி, இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர்கள் காலத்தில் ஒருவேளை மந்திரிகளை மந்திரிகள் என்றும் அவர்களுக்குக் கீழே இருக்கும் இன்றைய ஆட்சிப் பணி அதிகாரிகள் போன்றோரை அமைச்சர்கள் என்றும் அழைத்திருக்கக் கூடும் என்றெண்ணுகிறேன். கோட்டத் தலைவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் போல இருக்கும்போல்த் தெரிகிறது. சரியாகக் குறித்துக் கொள்ளுங்கள் - மாவட்டச் செயலாளர் போல் அல்ல... மாவட்ட ஆட்சித் தலைவர் போல். :)

"சிநேகம் என்பது சமநிலையில் உள்ளவர்களுக்கிடையேதான் ஏற்பட முடியும். அறிவாளிகளுக்குள்ளேதான் அன்பு வளர முடியும். அறிவற்ற மூடர்களையும் அதிகப் பிரசங்கிகளையும் தண்டோபாயத்தைக் கைக் கொண்டே சீர்திருத்தியாக வேண்டும்." என்று மகேந்திர வர்மர் மனைவியிடம் சொல்வதாக ஒரு பத்தி வருகிறது. மூடர்களையும் அதிகப் பிரசங்கிகளையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கும் இந்தப் பார்வை எனக்குப் பிடித்திருந்தது. அதிகப் பிரசங்கிகள் மூடர்கள் இல்லை. அவர்களும் அறிவாளிகளே. ஆனால், அறிவைவிட அகந்தை அதிகம் கொண்டோர். அதாவது, அளவை விட அதிகம் பேசுவோர் - அதிகம் பிரசங்கம் செய்வோர். எல்லா இயக்கங்களும் உடைந்து செயலிழந்து போவதற்கு இவ்விரு சாராருமே சமமான அளவில் காரணமாக இருப்பார்கள். அறிவை வர வைப்பதும் அகந்தையைப் போக வைப்பதும் அவ்வளவு எளிதானவையா என்ன? அதிலேயே அறிவாளிகளின் நேரம் வீணாகி விடுவதால் சாதனைகள் சாதிக்க கால அவகாசம் காணாமல் போய்விடுகிறது.

"இராஜ குலத்தினருக்கு விவஸ்தை ஏது? இன்றைக்கு சிநேகிதர்களாயிருப்பார்கள்; நாளைக்குக் குத்திக் கொள்வார்கள். இன்றைக்குப் பெண் கொடுத்துச் சம்பந்தியாவார்கள்; நாளைக்குப் போர்க்களத்தில் சண்டை போடுவார்கள்!" என்று கமலி சொல்வதாக ஒரு பத்தி வருகிறது. அரசியல் சார்ந்த வாழ்க்கை என்பதே எல்லாக் காலத்திலும் விவஸ்தை இல்லாததாகவே இருக்கிறது போலும். இப்போதிருப்பதை விட இது பரவாயில்லை என்றுதான் படுகிறது.

"இராஜரீக சாஸ்திரத்தில் முதலாவது பாடம் என்னவென்பதை இன்னமும் நீ தெரிந்து கொள்ளவில்லையா? தோல்வியடைந்து விட்டதாக ஒரு நாளும் ஒப்புக் கொள்ளக் கூடாதென்பதுதான் அந்தப் பாடம்." என்று நாகநந்தி புலிகேசியிடம் சொல்வதாக ஒரு பத்தி வருகிறது. இது இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இராஜரீகத்தில் மட்டுமல்ல. இன்று பணியிடங்களில் கூட இந்தப் பண்பாடு தலை தூக்கி விட்டது. இப்போதுதான் எல்லோரும் இராஜாவாகி விட்டோமே. எல்லோருமே நேர்மை பற்றிப் பேசுவார்கள். ஆனால், ஒருவன் நேர்மையாகத் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டால் அத்தோடு முடிந்தது கதை. வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். "எதிலுமே என்னை வீழ்த்த முடியாது!" என்று தினம் தினம் வீழ்ந்து கொண்டிருக்கும் நிறையப் பேர் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தன்னையும் சுற்றியிருக்கும் பெரும்பாலானோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் புரியாத ஒன்று அல்லது அவர்கள் கவலைப் படாத ஒன்று - இந்தத் திருட்டுத் தனங்களையும் புரிந்து கொண்டு நிறையப் பேர் புரியாதது போலவும் பரிதாபமாகவும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது. விலங்குகளை வேட்டையாடி உணவு கொண்டு வந்த மனிதன் இன்று மனிதர்களையே தினம் தினம் வேட்டையாடி வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப் பட்டிருக்கிறான். இதன் முடிவுதான் என்ன என்று தெரியவில்லை.

"'சூரியன் மறைந்தால் என்ன? அதோடு உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா? இதோ நான் ஒருவன் இருக்கிறேனே' என்று பறையறைந்து கொண்டு கீழ்த்திசையில் பூரண சந்திரன் உதயமானான்." என்று இன்று சாதாரணமாகப் படுகிற ஒரு வாக்கியம் வருகிறது. 'ஒரு கதவு அடைத்தால் இன்னொரு கதவு திறக்கும்' என்கிற அதே தத்துவம்தான் வேறீர் உவமைகளோடு சொல்லப் பட்டிருக்கிறது. கதவு திறக்கா விட்டாலும் மூச்சடைத்துச் சாகாத அளவுக்குச் சன்னல்களாவது திறக்கும். அப்படிப் பட்ட நம்பிக்கையில்தான் அடைபட்டுச் சிக்கிக் கொண்ட நிறையப் பேர் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். எதுவுமே திறக்காமல் போய் விடுகிற வாழ்க்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அமாவாசை அன்று சூரியன் போனபின் பூரணச் சந்திரன் வரவா செய்கிறது?! அப்படி அமாவாசையாகப் போன வாழ்க்கைகளும் இருக்கத்தானே செய்கின்றன.

'சைனியம் தண்டு இறங்கியிருந்தது' என்றதொரு சொல்லாடல் 'சிவகாமியின் சபதம்' முழுக்க அடிக்கடி வருகிறது. அதன் பொருள் என்னவென்று புரிபட வில்லை. பழையவர்கள் யாராவது இருந்தால் புரிந்திட உதவுங்கள். பழமையையும் வென்ற புதியவர்களானாலும் சரி. :)

ஆசிரியர் காஞ்சியையும் வாதாபியையும் ஒப்பிட்டுப் பல பத்திகள் எழுதியுள்ளார். அதுவும் பண்பாட்டு ரீதியான வேறுபாடுகளைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இது போன்ற ஒப்பீடுகள் ஒருவரை உயர்வாகவும் இன்னொருவரைத் தாழ்வாகவும் காட்டி விடுவதால் ஒப்பீடுகள் என்றாலே ஒருவித ஒவ்வாமை வந்து விட்டது இப்போது. ஆனாலும் அப்பத்திகள் சுவாரசியமாக இருக்கின்றன.

"பழமையான காலத்திலிருந்து செல்வமும் பண்பாடும் சேர்ந்து வளர்ந்து வந்த நகரத்துக்கும் திடீரென்று செல்வம் படைத்துச் செழிப்படைந்த புதுப் பட்டணத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் அவளுக்கு நன்கு புலனாகி வந்தன. காஞ்சியில் செல்வத்திற் சிறந்த சீமான்களும் சீமாட்டிகளும் ஆடை ஆபரணங்கள் பூணுவதில் அடக்கம் காட்டுவார்கள். அவர்களுடைய அலங்காரங்களில் கலை உணர்ச்சியே பிரதானமாயிருக்கும். இந்த நகரிலோ எங்கு பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் படாடோபமும் பகட்டும் தாண்டவமாடின. காஞ்சி வீதிகளில் தெரிந்தவர்கள் சந்தித்தால் ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் முகமன் கூறிக் கொண்டார்கள். வாதாபியில் தெருக்களிலோ, தெரிந்தவர்கள் சந்திக்கும்போது இடிமுழக்க ஒலியில் சிரித்து ஆர்ப்பரித்தார்கள். காஞ்சியில் எஜமானர்கள் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடும்போது கூட அன்புடனும் ஆதரவுடனும் பேசினார்கள். வாதாபியில் எஜமானர்கள் வேலைக்காரர்களிடம் பேசும்போது கடுமையான மொழிகளையும் துர்வசனங்களையும் கையாண்டார்கள்." என்கிற வரிகள் இரு நகரங்களை மட்டுமல்ல இரு மனிதர்களை ஒப்பிடுவது போலவும் இருந்தது. 

எங்கள் ஊர்ப்பக்கம் புதுப் பணக்காரன் என்பார்கள். ஊருக்கு ஒருத்தர் அந்தப் பெயர் கொண்டிருப்பார். அதை அவர் பெருமையாக நினைத்தாலும் ஊர்காரர்கள் அதை ஒரு கேவலமான அடையாளமாகவே பயன் படுத்துவார்கள். 'அற்பனுக்கு வாழ்வு வந்தால்...' என்போமே அதுதான். எதையுமே புதிதாகப் பார்க்கிறவன் கொஞ்சம் கூடுதலாகக் குதியாளம் போடுவது இயற்கையான ஒன்றுதான். இதில் கொடுமை என்னவென்றால், இது புதுப் பணக்காரர்களுக்கு வந்திருக்கும் தன்னம்பிக்கையை உடைத்து வீசவும் பயன்படுத்தப் படும் உத்தி. திமிர் என்பது பரம்பரைப் பணக்காரனுக்கு இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப் படும்; புதியவனுக்கு இருந்தால் ஏற்றுக் கொள்ளப் படாது. காரணம்? அவன் காலம் முழுக்க அப்படியே இருப்பவன். இவன் வேறு மாதிரி இருந்து மாறுபவன். அதனால்தான். நமக்குத்தான் நம்மில் ஒருவன் - நம் மட்டத்தில் இருந்தவன், மேலே போனால் தாங்க முடியாதே. "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!" என்கிற வரியும் நினைவுக்கு வருகிறது இவ்விடத்தில். அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. சிலர் புற வாழ்க்கையில் எந்த நிலைக்குத் தாழ்ந்தாலும் பண்பில் தாழ்ந்து விடுவதில்லை. அதேவேளையில், சிலர் வெளி வாழ்க்கையில் எவ்வளவு வெற்றிகள் கண்டாலும் ஊரோடு போகும் வெள்ளத்திலும் நக்கித்தான் குடிக்கிறார்கள். இதுவும் கீழே இருப்பவன் மேலே செல்வதைக் கண்டு வயிற்றெரிச்சல் அடைந்தும் சொல்லப் படுவதுண்டு. அத்தகைய நேரங்களில் அதை நாம் ஏற்காமல் புறந்தள்ளி விட வேண்டும். அரசியலில் பரம்பரைப் பணக்காரர்கள் வந்தால் ஊழல் செய்ய மாட்டார்கள்; உயர் சாதியினர் மட்டுமே இருந்தால் நிறையத் தப்புகள் நடக்காது என்றெல்லாம் என்னைச் சுற்றி இருக்கும் நிறையப் பேர் அடிக்கடிப் பேசுகிறார்கள். காமராஜர் யார்? அதே கட்சியில் இன்று இருக்கும் உலக மகாக் கொள்ளையர்கள் யார்? இது விதிவிலக்கு என்று மட்டும் சொல்லிவிட்டுத் தப்பப் பார்க்காதீர்கள். காமராஜர் உடன் இருந்த கக்கன் யார்? ஓலைக் குடிசையில் உயிரை விட்ட ஜீவா யார்? கிடைத்த ஒரு கோடியையும் மக்களுக்குக் கொடுத்த நல்லகண்ணு யார்? எல்லாமே விதிவிலக்குகளா? இல்லையே! காலம் மாறி விட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம். அதுவும் கீழோர் மேல் வந்ததால் ஏற்பட்ட மாற்றம் என்று சொல்லி முடிக்கவும் செய்யலாம். அதற்கு மேல் அது பற்றிப் பேசி முடிவு காண முடியாது.

"காஞ்சி வீதிகளில் புத்த பிக்ஷுக்கள், திகம்பர சமணர்கள், வைதிக சந்நியாசிகள், ஆண்டிகள், கபாலிகர்கள், வெறும் பிச்சைக்காரர்கள் ஆகியவர்கள் மொய்த்துக்கொண்டு வீதியில் போவோர் வருவோரின் பிராணனை வாங்குவது வழக்கம். தர்ம புத்தியுள்ள தனவான்கள் அதிகம் உள்ள இடத்திலே யாசகர் கூட்டமும் அதிகமாகப் பெருகிவிடும் போலும்! வாதாபியின் வீதிகளில் அம்மாதிரி பிக்ஷுக்களும் யாசகர்களும் அதிகம் காணப்படவில்லை. தர்மம் கொடுப்பவர்கள் இல்லாதபடியால் யாசகர்களும் இல்லை போலும்!" என்றும் காஞ்சியின் பெருமையைத் தூக்கிப் பிடிக்கும் படியான சில வரிகள் வருகின்றன. இவையெல்லாம் உண்மைதானா என்ற கேள்வி ஒன்றும் வருகிறது. தமிழ் நாட்டில் மட்டும் விற்கப் போகும் கதை என்பதால் விடப்பட்ட கதைகளாகவும் இருக்கலாமல்லவா?! "கதைதானே அது; அதில் ஏன் இத்தனை சந்தேகங்கள் உனக்கு?!" என்கிறீர்களா?


"கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால், அவர் கருணாமூர்த்தி என்பதும் உண்மையானால், உலகத்தில் ஏன் இத்தனை துன்பங்களை வைத்திருக்கிறார்? மனித வர்க்கம் ஏன் இத்தனை கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது? இந்தக் கேள்விகள் ஆதிகாலந் தொட்டு கேட்கப்பட்டு வருகின்றன." என்கிறார் ஓரிடத்தில். அவற்றுக்கு ஒருபோதும் எல்லோரும் ஏற்கத்தக்க விடை கிடைக்கப் போவதில்லை. அப்படியெல்லாம் கேட்பதால் கோபப்பட்டு அவர் வந்து எல்லாப் பிரச்சனைகளையும் நமக்குத் தீர்த்துக் கொடுக்கவும் போவதில்லை. நம் பிரச்சனைகளை நாம்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். அவருக்கென்று ஆயிரம் வேலைகள் இருக்கும். இல்லையா?!

"சோக ரசமுள்ள கதைகள், காவியங்களைப் படிக்கிறோம், சோகமயமான நாடகங்களைப் பார்க்கிறோம்; சோகத்தை ஊட்டும் கீதங்களைப் பாடுகிறோம், கேட்கிறோம். இப்படியெல்லாம் துன்பத்தை நாமாகத்தானே தேடி அனுபவிக்கிறோம்... எதற்காக? அந்தத் துன்பங்களிலேயெல்லாம் உள்ளுக்குள்ளே இன்பம் பொதிந்திருப்பதனாலேதான். நமது வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறோம். அனுபவிக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. 'இது சகிக்க முடியாத கஷ்டம்' என்று தோன்றுகிறது. 'இந்த வாழ்க்கையே வேண்டாம்' என்று தீர்மானிக்கிறோம். எல்லாக் கஷ்டங்களையும் எப்படியோ சகித்துக் கொள்கிறோம். அப்படி நாம் அனுபவித்த சகிக்க முடியாத கஷ்டங்களைச் சில வருஷ காலம் கழித்து நினைத்துப் பார்க்கும்போது ஒருவகை அபூர்வ இன்பம் ஏற்படுகிறது. பழைய கஷ்டங்களை நினைத்துப் பார்ப்பதிலும் அவற்றைக் குறித்துப் பேசுவதிலும் சந்தோஷம் அடைகிறோம்." என்று சோகம் மற்றும் கஷ்டங்கள் பற்றி நீண்ட பத்திகள் எழுதியுள்ளார் கல்கியார். அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை அல்லவா? 

சாடிஸ்ட் அல்லது சேடிஸ்ட் (தமிழில் இரண்டுமே சரிதான். இதற்கொரு புதிய உயிரெழுத்து சேர்க்க வேண்டும் தமிழில். அதை யாராவது முதலமைச்சராக இருக்கிற ஆள் சொன்னால் ஏற்றுச் செய்வார்கள். நாம் சொன்னால் யார் கேட்பார்?) என்பவர் 'பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர்' என்றே இவ்வளவு நாளாக நினைத்து வந்தோம் இல்லையா?! இனிமேல் அவர்களை மொட்டையாக 'துன்பத்தில் இன்பம் காண்பவர்' என்றே வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால், தன்னையே துன்புறுத்திப் பார்த்துக் கொள்வோரும் இருக்கிறார்கள் அல்லவா? அல்லது, எல்லோருமே ஒவ்வொரு சூழ்நிலையில் தன்னையும் துன்புறுத்திப் பார்த்துக் கொள்வோரே என்றும் கூடச் சொல்லலாம். டவுசர் போடும் காலத்தில் காட்டுப் பக்கம் போய் காற்றுக்கு எதிராக நின்று கொண்டு இராமராஜனின் சோகப் பாடல்களைப் பாடிப் பாடி வம்படியாக சோகத்தை வரவழைத்துக் கொண்ட அனுபவங்கள் உங்களுக்கெல்லாம் உண்டா என்று தெரியவில்லை. இருந்தால் இந்த வரிகளை நிச்சயம் சிலாகிப்பீர்கள்.

"இந்த வராக நதியில் தலை கீழாக நின்றால் தண்ணீர் மூக்கு வரை வரும்." என்று பாண்டிய நாட்டுப் போர்வீரன் ஒருவன் நக்கலடிக்கிற வரி ஒன்று வருகிறது. பாண்டிய நாட்டில் உள்ள நதிகளில் தலை கீழாக நின்றாலும் கூட மூக்கில் இருந்துதான் தண்ணீர் வர வேண்டும். ஆற்றில் வராது. நக்கல் அடிப்பதில் கில்லாடிகள் அவர்கள். மீனாட்சி அம்மன் கோயிலைப் பார்க்கும்போதெல்லாம், 'இதை எப்படி எம் மூதாதையர் கட்டினார்கள்? இவ்வளவு பெரிய கோயிலை வாயிலேயே கட்டுவது அவ்வளவு எளிதில்லையே! ஒருவேளை அடுத்த நாட்டுப் போர்க் கைதிகளை வைத்துக் கட்டியிருப்பார்களோ?!' என்றெல்லாம் தோன்றும் எனக்கு. :)

"துயரத்தினாலும் கவலையினாலும் தூக்கம் கெடுவதைக் காட்டிலும், எதிர்பாராத சந்தோஷங்களாலும் உள்ளக் கிளர்ச்சியாலும் உறக்கம் அதிகமாகக் கெடும்..." என்று ஒரு வரியில் சொல்கிறார். முதன்முதலில் வேலை கிடைத்த சேதி கிடைத்த நாளில் எனக்கு அப்படித்தான் இருந்தது. உங்களுக்கும் அது போலப் பல தருணங்கள் இருக்கும் என நினைக்கிறேன்.

"இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வாதாபிப் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து பாண்டிய நாட்டை அடைந்தபோது நெல்வேலிப் போர்க்களத்தில் அவனைப் பாண்டியன் நெடுமாறன் முறியடித்துத் தமிழகத்தின் சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்றான்." என்றொரு தகவல் வருகிறது. இது என்னை ஈர்த்ததன் காரணங்கள் இரண்டு - ஒன்று, நெல்வேலி; மற்றொன்று, நெடுமாறன். நெல்வேலி என்பது கண்டிப்பாகத் திருநெல்வேலியாகத்தான் இருக்க வேண்டும். அன்று முதல் இன்றுவரை அது ஒரு போர்க்களமாக மட்டுமே இருக்கிறது. வேறு எதற்கும் லாயக்கில்லை. போர்க்களத்தில் ஊரைக் கட்டிய பாவத்தால் வந்த வினையென நினைக்கிறேன். அதுபோல, சிராப்பள்ளிதான் பின்னர் திருச்சிராப்பள்ளி ஆகியிருக்கிறது; ஆரூர்தான் பின்னர் திருவாரூர் ஆகியிருக்கிறது; அண்ணாமலைதான் திருவண்ணாமலை ஆகியிருக்க வேண்டும். பதிதான் திருப்பதி ஆனதா என்று தெரியவில்லை. நெடுமாறன் எனக்கு மிகவும் பிடித்த தமிழ்ப் பெயர். அந்தப் பெயர் கொண்டிருக்கும் தலைவரைக் கூட எனக்குக் கொஞ்சம் பிடிக்கும். அது ஒரு வீரமிகு பாண்டிய மன்னனின் பெயர் என்பதை அறியும்போது மரியாதை இன்னும் கூடுகிறது. கொலைகாரப் பாவி என்றும் சொல்லலாம். ஆனால் வேண்டாம். மண்ணைக் காக்க மண்டைகளை உருட்டுவது மகத்தான தேசப் பணி. அதைப் போய் அப்படியெல்லாம் சொல்லலாமா? மாறன் என்ற சொல் எதனோடு சேர்ந்தாலும் நல்ல தமிழ்ப் பெயராகவே ஆகிறது. அத்தகையத் தமிழ்ச் சொல் அது. சமீபத்திய தமிழ் கூறும் நல்லுலகின் கொள்ளை அரசியலுக்குப் பழக்கப் பட்டுப் போன இரு பெயர்கள் - நிதியும் மாறனும். மாறன் சுத்தத் தமிழ். நிதி தமிழே அல்ல. வடமொழித் தழுவல். அது தமிழைக் காக்க வேண்டும் என்று நம்பித்தான் ஏமாந்து போனோம். நிதி பெருக்குவதில் காட்டிய ஆர்வத்தைத் தமிழ் காப்பதில் காட்டவில்லையே என்ன செய்ய?

"வேங்கி அரசன் ஆதித்த வர்மன் மாமல்லருடைய தயாதி சகோதரன். அதாவது சிம்ம விஷ்ணு மகாராஜாவின் சகோதரன் வம்சத்தில் பிறந்தவன். இந்த வம்சத்தினர் வேங்கி சாம்ராஜ்யத்தின் வடபகுதியில் கோதாவரிக்கு அப்பாலுள்ள பிரதேசத்தைச் சுதந்திரச் சிற்றரசர்களாக ஆண்டு வந்தார்கள்." என்கிற வரிகள் மாமல்லர் அல்லது பல்லவர்களின் இன ஆராய்ச்சியில் இன்னும் குழப்பத்தை உண்டு பண்ணுபவை என நினைக்கிறேன். 

"குண்டோதரன் தன் மனத்திற்குள், 'ஆ! ஸ்திரீகளைத் திருப்தி செய்வது மிகவும் கடினமான காரியம். இப்படி திருப்தி செய்ய முடியாத ஸ்திரீகளுக்காகச் சிலர் இத்தனை சிரமம் எடுத்துக்கொண்டு இப்படி உயிரை விடுகிறார்களே? என்ன பைத்தியக்காரத்தனம்!' என்று எண்ணினான்." என்று ஒரு பத்தி வருகிறது. ஆக, அப்போதும் பைத்தியக்காரர்கள் இருந்திருக்கிறார்கள். தெளிந்த கட்டைகளும் இருந்திருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், அடுத்தவனுக்கு நிகழும்போது எல்லாம் தெளிவாக யோசிப்பவர்கள் தனக்கு வருகிற தலைவலி மட்டும் வலிக்கிறதென்று தலை கீழாக நின்று குதிப்பார்கள். அதுவும் இந்த ஸ்திரீகள் மேட்டர் அப்படியொரு தலைவலி நிறைந்த மேட்டர். இல்லையா? :)

"பழைய பாரத நாட்டில் இராஜங்கங்களும் இராஜ வம்சங்களும் மாறியபோது சமயங்களுடைய செல்வாக்கு மாறுவதும் சர்வ சாதாரணமாயிருந்தது. இந்த நாளில் போலவே அந்தக் காலத்திலும் விசால நோக்கமின்றிக் குறுகிய சமயப்பற்றும் துவேச புத்தியுங் கொண்ட மக்கள் இருக்கவே செய்தார்கள். சமரச புத்தியுடன் சகல மதங்களையும் ஒருங்கு நோக்கிக் கலைகளை வளர்த்து நாட்டிற்கே மேன்மையளித்த புரவலர்களும் அவ்வப்போது தோன்றினார்கள்." என்கிறார் ஆசிரியர். அந்தக் காலத்தில் இந்தக் காலத்தில் என்றில்லை. எந்தக் காலத்தில் இந்த உலகம் அழிய நேர்ந்தாலும் அதற்கு இந்த மத வெறி பிடித்த மண்டையர்கள்தான் காரணமாக இருப்பார்கள். இந்த மதம் அந்த மதம் என்றில்லை. எந்த மதமாக இருந்தாலும் பிடித்து விட்டால் அது பீடைதான். அவர்களுக்கு மட்டுமல்ல. அவர்கள் வாழும் ஊருக்கும் நாட்டுக்கும் மொத்த உலகுக்கும். என்ன சொல்கிறீர்கள்? பற்று என்கிற வரை ஓகே. பித்து என்றாகி விட்டால் தெளிய வைப்பது சிரமம்தான்.

"அண்ணா! ஒன்று நான் தெரிந்து கொண்டேன். இளம் பிராயத்திலிருந்தே பிரம்மசரியத்தையும் பிக்ஷு விரதத்தையும் மேற்கொள்வது ரொம்பத் தவறானது. இல்வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்து விட்டுத் தொலைத்த பிறகுதான் சந்நியாசம் மேற்கொள்ள வேண்டும். வாலிபத்திலேயே வாழ்க்கை வைராக்கியம் கொள்கிறவர்கள் உன்னைப்போல் தான் பிற்காலத்தில் யாராவது ஒரு மாயக்காரியின் மோக வலையில் விழுந்து பைத்தியமாகி விடுகிறார்கள்!" என்று புலிகேசி நாகநந்தியிடம் சொல்வதாக வருகிறது. இது முழுக்க முழுக்க உண்மை. அது அதை அந்தந்த வயதில் செய்யாதவர்கள் பின்னர் அவற்றைச் செய்யக் கூடாத வயதில் அதிகம் செய்வோராகவே வருவர். எனவே வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சி கூடச் சில நேரங்களில் நல்லதில்லை. எங்கள் ஊரில் என்னுடைய உறவினரே ஒருத்தர் இது போல் இருந்தார். கடைசிக் காலம் வரை சாமியார் போல வாழ்ந்து விட்டு வாழ்வில் பொழுது சாய்கிற நேரம் ஒரு சாமியார் வேடம் தரித்த பெண்ணோடு சேர்ந்து வாழ நேரிட்டது. எதிரெதிர் துருவங்கள் ஈர்த்தன என்பது ஒருபுறம் என்றாலும் வாழ்வின் வெறுமை சும்மா இருக்க விடாது. அதுபோலவே பள்ளிக் காலங்களில் அநியாயத்துக்கு ஒழுக்கமாக இருந்த சில நண்பர்களை இப்போது பார்க்கையில் "இவனா இப்படி?" என்று கேட்கிற அளவு மாறியிருப்பது கண்டும் இது சரிதான் என உறுதி செய்ய முடிகிறது. சில சாமியார்கள் பெண்கள் விஷயத்தில் பலவீனமாக இருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்க முடியும். இதற்காகவே சாமியார் ஆவோரை விட்டு விடுங்கள். நல்லபடியாகத் தொழிலை நடத்திக் கொண்டிருக்கும் சாமியார்கள் திடீரென இப்படியெல்லாம் மாறுவது இந்த விதியின் படிதான் என நினைக்கிறேன்.

"மனிதர்களுக்குள்ளே இருவகை சுபாவம் உள்ளவர்கள் உண்டு. ஒருவகையார் கொடூரமான காரியங்களையும் காட்சிகளையும் பார்க்கப் பார்க்க அவற்றைக் குறித்து அலட்சியமாக எண்ணத் தொடங்குகிறார்கள். அப்புறம் அத்தகைய கொடூரமான காரியங்களைச் செய்வது அவர்களுக்குச் சகஜமாகி விடுகிறது. ஆரம்பத்தில் பரிதாபம் அளிக்கும் சம்பவங்கள் நாளடைவில் அவர்களுடைய மனத்தில் எத்தகைய உணர்ச்சியையும் உண்டாக்குவதில்லை. இன்னொரு வகை சுபாவமுள்ளவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள். கொடூரமான காட்சிகளைப் பார்க்கப் பார்க்க அவர்களுடைய உள்ளம் உணரச்சியின்றித் தடித்துப் போவதற்குப் பதிலாக ஆத்திரம் அதிகமாகிறது. பரிதாப சம்பவங்களைப் பார்க்க பார்க்க அவர்களுடைய மனவேதனை மிகுதியாகிறது. அநீதிகளையும் அக்கிரமங்களையும் காணக் காண அவற்றை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமென்ற பிடிவாதம் அதிகமாக வளர்கிறது. பிந்திய சுபாவமுள்ள மாந்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர் சேனாதிபதி பரஞ்சோதி. இரத்தத்தைப் பார்க்கப் பார்க்க இரத்தவெறி அதிகமாகும் ராட்சஸ வர்க்கத்தை அவர் சேர்ந்தவரல்ல. வாதாபிப் பெரும்போரில் போர்க்களத்திலிருந்து ஓடிய இரத்த வெள்ளத்தையும் மலைமலையாகக் குவிந்து கிடந்த மனித உடல்களையும் பார்த்து, படுகாயமடைந்து உயிர் போகும் தறுவாயில் அலறிக் கொண்டிருந்தவர்களின் ஓலத்தையும் கேட்டபிறகு, பரஞ்சோதியின் உள்ளத்தில், 'இந்தப் பயங்கரமெல்லாம் என்னத்திற்கு? மனிதருக்கு மனிதர் கொடுமை இழைப்பதும் கொன்று கொண்டு சாவதும் எதற்காக?' என்ற கேள்விகள் எழுந்திருந்தன." என்ற நீண்ட பத்தி வன்முறை பற்றிய இரு வேறு சுபாவங்களை நன்றாகச் சொல்கின்றன.

இன்றைய சினிமாக்கள் அதைத்தான் செய்து கொண்டு வருகின்றன. என்றோ பார்க்க நேரும் இரத்தத்தை தினம் தினம் திரையில் பார்த்து அது மீதான பயமோ பரிதாபமோ சிறிதும் இல்லாமல் போய் விட்டது நமக்கு. இராணுவம் என்கிற அமைப்பே மனித இனத்துக்கு எதிரானதுதான். கொல்வதும் கொல்லப்படுவதும் தம் அன்றாடப் பணிகள் என்றாகி விட்டால் மனித உயிருக்கு மரியாதை எப்படி இருக்கும்? போர்களில் நடக்கும் அட்டூழியங்களைக் கண்டு மனநிலை தவறியவர்களும் உண்டு. அதுபோல நிறையக் கொடுமைகள் செய்ய ஏதுவாக அடிக்கடிப் போர்கள் நடக்காமல் இருக்கின்றனவே என்று மனநிலை தவறியவர்களும் உண்டு. ராகிங் எனப்படும் கொடூரம் இன்னமும் எதனால் நடக்கிறது? சேர்ந்த வருடம் அடி வாங்கிய ஒருவன் அடுத்த வருடம் அதே துன்பத்தைத் தனக்கு இளையவர்களிடம் செய்யக் கூடாது என்று நினைத்தால் அது முடிந்திருக்கும். அடித்தவனைத் திருப்பி அடித்திருந்தாலும் முடிந்திருக்கும். வலியவனிடம் வீழ்ந்து விட்டு வந்து தன்னை விட எளியவனை வீழ்த்துவதே இந்த உலகில் பிறந்த கையாலாகாத எல்லோருக்குமே பழக்கமாகிப் போய்விட்டது. தம் உணவுக்காகப் பிற உயிர்களைக் கொல்லும் விலங்குகளை விட பிற உயிர்களைத் துன்புறுத்தி இன்பம் காணும் விலங்குகள் கேவலமானவையல்லவா?

"நாட்டை ஆளும் மன்னர்கள் தங்களுடைய சொந்தக் கௌரவத்தையும் குல கௌரவத்தையும் நிலை நாட்டிக் கொள்வதற்காக ஒருவரையொருவர் பழி வாங்க முற்படுவதால், இரு தரப்பிலும் குற்றமற்ற ஜனங்கள் அல்லவா சொல்லமுடியாத எத்தனையோ அவதிகளுக்கு உள்ளாகிறார்கள்." என்று வருந்துகிறார். இந்த வருத்தத்துக்கு மனித குலம் அழிந்தொழியும் வரை முடிவே இல்லை என நினைக்கிறேன். ஹிட்லர் என்ற ஒரு மனிதனால் எத்தனை உயிர்கள்? ஒசாமா என்ற ஒரு மனிதனால் எத்தனை உயிர்கள்? புஷ் என்ற ஒரு மனிதனால் எத்தனை உயிர்கள்? கொடுமை என்னவென்றால் பெரும்பாலான நேரங்களில் வெல்லம் தின்பவன் விரல் சூம்புவதில்லை. அனைத்துக்கும் காரணமான எதிரிகள் கூட பகையை மறந்து விட்டுப் படுத்துத் தூங்கப் போய் விடுவார்கள். அவர்களின் எடுபிடிகளான பொதுமக்களும் படை வீரர்களும்தாம் பகையை அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டு சென்று தம்மை மாய்த்துக் கொள்வர்.

"ஆயத்தமில்லாமல் ஆரம்பித்துப் பத்து நாளில் செய்யக் கூடிய காரியத்தைத் தகுந்த ஆயத்தங்களுடன் ஆரம்பித்து ஒரே நாளின் செய்து விடலாம் என்னும் உண்மையைச் சேனாதிபதி பரஞ்சோதி தமது அனுபவத்தில் கண்டறிந்தார்." என்கிற வரிகள் அப்போதே திட்டமிடல் நுட்பங்கள் மற்றும் பணித்திட்ட மேலாண்மை (PLANNING TECHNIQUES AND PROJECT MANAGEMENT) போன்றவை முதிர்வடைந்திருந்தன என்பதற்குச் சான்று. எப்போது? பரஞ்சோதி காலமா கல்கி காலமா என்பது சரியாகத் தெரியவில்லை. :)

"பிரபு! குழந்தைகளுக்கும் ஸ்திரீகளுக்கும் எந்த விதத்திலும் துன்பமுண்டாகக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறேன். ஆண் மக்களில் எதிர்த்தவர்களையெல்லாம்  கொன்று விடும் படியும் பணிந்தவர்களையெல்லாம் சிறைப்பிடிக்கும்படியும் கட்டளையிட்டிருக்கிறேன். வாதாபி நகரில் ஒரு வீடு மிச்சமில்லாமல் எரிந்து சாம்பலாக வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறேன். தீயை அணைக்க முயல்வோரை எல்லாம் கொன்று விடும்படி சொல்லியிருக்கிறேன். நகரை விட்டு ஓட விரும்பும் பிரஜைகளைப் போக விடும்படியும், ஆனால் அவர்கள் எந்தவிதமான பொருளையும் கொண்டு போக விடக் கூடாது என்றும் ஆக்ஞையிட்டிருக்கிறேன். நம்முடைய வீரர்கள் வாதாபி நகரிலிருந்து அவரவர்களால் முடிந்தவரையில் பொருள்களைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்றும், ஒவ்வொருவரும் கொண்டு வருவதில் பாதிப் பொருள் அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறேன். இன்னும் ஏதேனும் கட்டளையிட்டிருந்தாள் தெரியப் படுத்த வேண்டும்." என்று பரஞ்சோதி சொல்வதாக ஒரு நீண்ட பத்தி வருகிறது. 

இந்தப் புத்தகத்தில் என்னை மிகவும் பாதித்த பத்தி இதுதான். இதைப் படிக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு மண்டை வெடிக்கிற மாதிரி இருந்தது. போர் என்பது எவ்வளவு கொடுமையானது என்பது மிக அருமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. ஒரேயோர் ஆறுதல் அந்தக் காலத்தில் போர் புரிந்தோர் குழந்தைகளையும் பெண்களையும் மதித்தார்கள்; இப்போது வந்திருக்கும் தீவிரவாத மிருகங்கள் அந்த விதிகளையும் உடைத்து வீசி விட்டன. 'எதிர்ப்போரைக் கொல்; பணிவோரைக் கைது செய்!' என்கிற பாணி பணிவுக்கு வாழ்நாள் அதிகம் என்கிற உண்மையை உணர்த்துகிறது. ஆனால், கைது செய்து கொண்டு வந்து என்னென்ன கொடுமைகள் செய்வார்களோ என நினைத்தால் அதுவும் தலை சுற்றத்தான் வைக்கிறது. கொள்ளையடித்தலும் ஊரைக் கொளுத்தலும் போரின் முக்கிய உட்பணிகள். கொள்ளையில் பங்கு என்பது கொள்ளையை நல்லபடி நடத்தி முடிக்க நல்லதொரு உத்தி. எல்லாக் காலத்திலும்.

"எதிரில் பாயும் புலியைக் காட்டிலும் காலடியில் நெளிந்து ஓடும் பாம்பு அதிக அபாயம் உள்ளதல்லவா?" என்று மாமல்லரிடம் பரஞ்சோதி சொல்வதாக ஒரு வரி வருகிறது. அபாயம் எதில் அதிகம் என்பதை சைஸை வைத்து முடிவு செய்யக் கூடாது அதன் அருகாமையை வைத்து முடிவு செய்ய வேண்டும் என்பதற்கான கல்கி காலத்து எடுத்துக்காட்டு இது.

"எத்தகைய ஆபத்திலிருந்தும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யும் இயற்கைச் சுபாவத்தை ஒவ்வொரு ஜீவனுக்கும் இறைவன் அளித்திருக்கிறான் அல்லவா?" என்று ஒரு கேள்வி கேட்கிறார். உண்மை. அந்த சுபாவம்தான் பின்னர் ஆபத்தே இல்லாத பொழுதுகளில் கூட தன் சுக போகங்களுக்காக மற்ற உயிர்களைக் கொன்று போட்டு விட்டுப் போகும் சுபாவமாக மாறியது.

"அவளுடைய அடி வயிற்றிலிருந்து ஏதோ கிளம்பி மேலே வந்து மார்பையும் தொண்டையையும் அடைத்துக் கொண்டு மூச்சு விட முடியாமலும் தேம்பி அழுவதற்கு முடியாமலும் செய்தது." என்றோர் இடத்தில் சொல்கிறார். இதைப் படித்தவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? ஆம். "வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி!" என்ற 'காதலன்' திரைப்படத்தில் வரும் வைர வரிதான் எனக்கும் நினைவுக்கு வந்தது. காப்பி அடித்தாரா அல்லது இவரும் அவரைப் போலவே சிந்தித்தாரா என்று தெரியவில்லை.

ம்ம்ம்... இத்தோடு நான் எழுதி வைத்திருந்த குறிப்புகள் முடிவுக்கு வருகின்றன.

* 2005 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்