உணர்ச்சிப் பெருநாள்!
என் வாழ்வில் முக்கியமானதொரு மைல்க்கல்லைக் கடக்கிறேன் இன்று. இப்போதுதான் என் மகளைப் பள்ளியில் சேர்த்து விட்டு வருகிறேன். இது ஒருவிதமான உணர்ச்சி மேலோங்கிய நாள். அவளை விட்டு விட்டு வெளியே வரும்போது அழுது விடுவேன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக, என் மனைவியைச் சிறிது நேரம் அங்கு இருந்து கொள்ளலாம் என்று அனுமதித்தார்கள். அது கொஞ்சம் கதையின் போக்கை மாற்றி விட்டது. அடுத்த மைல்க்கல்லைக் கடக்கும் போது சிந்திக் கொள்வதற்காகச் சிறிது கண்ணீரைச் சேமித்துக் கொண்டேன். இன்று காலை, என் மகள் முதல் நாளாக வீட்டை விட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிய போது, மணப்பெண்ணாக வீட்டை விட்டுக் கிளம்பப் போகும் அந்த நாள் பற்றிய நினைவு திரும்பத் திரும்ப வந்து சென்றது. அந்த நாளை எப்படிக் கையாளப் போகிறேன் என்று தெரிய வில்லை. இப்போதே அது பற்றிச் சிந்திக்க விரும்ப வில்லை. அதே வேளையில், அது பற்றிச் சிந்திக்காமலே இருக்கவும் விரும்ப வில்லை. அவளுக்கு மூன்று வயதே ஆகும் இந்தப் பொழுதில் அது பற்றி எல்லாம் சிந்திப்பது பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறது. ஆனால், அவள் பிறந்த நாளன்று இன்றைய தினம் பற்றிச் சிந்தித்தேன்....