உயர் தனிச் செம்மொழி?!

பிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது? தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்கள்.

எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ஆனால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு உரு மாறியதே ஒழிய அதன் பெயரே மாறும் அளவுக்கு மாற்றம் ஏதும் நடைபெறவில்லை. சொற்கள் மட்டும்தான் திணிக்கப் பட்டன. வந்தவர்கள் புகுத்திய எழுத்துக்கள் கூட இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. மற்ற எல்லோரிடமும் பெருமளவில் கலப்படம் நிகழ்ந்தது. மொழியின் பெயரே மாறியது. புதிய எழுத்துக்கள், உச்சரிப்புக்கள், பெயர் மாற்றம் எல்லாம் நுழைந்தன. நம்மிடம் மட்டும் தொல்காப்பியத்தில் உள்ள அந்த எழுத்துக்கள் மட்டும்தான் இப்பவும் உள்ளன. அதே உச்சரிப்புதான் இப்பவும் இருக்கிறது. இப்பவும் தொல் காப்பியன் என்ற பெயர் வைக்கிற ஆட்கள் இருக்கிறார்கள். புதிதாக வந்த எழுத்துக்கள் இன்னமும் வடமொழி எழுத்துக்கள் என்ற பெயரோடு திண்ணையில்தான் படுக்க வைக்கப் பட்டிருக்கின்றன. தமிழ் எழுத்துக்களின் அட்டவணையில் அவற்றுக்கு இடமில்லை. வடமொழியிடம் வாங்கிய வார்த்தைகளில் மட்டும்தான் அவர்களுடைய உச்சரிப்பைப் பயன்படுத்துகிறோம். வடமொழியில் வேதம் ஓதும் ஐயர் முதலாக எல்லோருமே வீட்டில் தமிழைப் பெருமையோடுதான் பேசுகிறார்கள்.

நம்ம ஆட்கள் உலகெலாம் சுற்றி உழைக்கிறார்கள். அங்கே பல்வேறு மொழிகள் கற்றுப் பேசுகிறார்கள். பல இடங்களில் நம் பேச்சில் இருக்கிற குறைபாடுகள் சுட்டிக்காட்டப் பட்டுக் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகிறோம். இப்படியிருக்கையில், அந்தக் குறைபாடுகள் பற்றி ஓரளவு அறிந்து வைத்துக் கொள்வது அத்தகைய சிற்சில – சிறிய அவமானங்களில் இருந்து தப்பிக் கொள்ள உதவும் என நினைக்கிறேன். அதன் வெளிப்பாடே இவ்விடுகை.

உண்மையிலேயே நம் மொழியில் குறைபாடுகள் உள்ளனவா? ஆம். அப்படியானால், நாம் நினைக்கிற அளவுக்கு நம் மொழி ஒன்றும் ஓங்கி உயர்ந்த செம்மொழி இல்லையா? அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஏனென்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிற தனிப்பட்ட பண்புகளைப் போல, ஒவ்வொரு மொழிக்கும் பல தனிப்பட்ட பண்புகள் இருக்கின்றன. எல்லா மொழிகளிலும் இருக்கிற எல்லா எழுத்துகளுக்கும் உச்சரிப்புகளுக்கும் இணையான எழுத்துக்களும் உச்சரிப்புகளும் கொண்ட ஒரே ஒரு மொழி எது என்றால், அப்படி ஒரு மொழி உலகத்தில் எங்கும் இல்லை. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் நம் ‘ழ’கரத்துக்கு இணையான எழுத்து இல்லை. இன்னும் சொல்லப்போனால், மலையாளம் தவிர மற்ற எந்த இந்திய மொழியிலும் அது இல்லை. அது மட்டுமில்லை. ஆங்கிலத்தில் இன்னும் என்னென்னவோ இல்லை. அது போல, மலையாளம் உட்பட எந்த இந்திய மொழியிலும் ஆங்கில ‘Z’ க்கு இணையான எழுத்து இல்லை. ஏன் மலையாளம் உட்பட என்றேன் என்றால், மலையாளம்தான் தமிழையும் வடமொழியையும் பூரணமாகக் கலந்து உருவான மொழி.

வங்காள மற்றும் ஒரிய மொழிகளில் ‘வ’ வரிசையே இல்லை. ஆங்கிலத்தில் ‘V’ என்று எழுதினால் அதையும் ‘B’ என்றுதான் வாசிக்கிறார்கள். முன்னொரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த வங்காள நண்பன் ஒருவனை ‘VB’, ‘BV’, ‘VV’, ‘BB’ ஆகிய நான்கையும் வெண்பலகையில் எழுதிப் போட்டு வாசிக்கச் சொன்னேன். மிகச் சிரமப் பட்டு வித விதமாக வாயை வளைத்து அத்தனையையும் ‘BB’, ‘BB’, ‘BB’, ‘BB’ என்று வாசித்து எல்லோரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தான். அதன் பொருள், வங்க மொழி லேசுப் பட்டதென்பதில்லை. இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியர் (ஆங்கிலத்தில் எழுதும் பாதி இந்தியர் நைபாலை இங்கே சேர்க்க வேண்டியதில்லை) வங்க மொழியில் எழுதித் தள்ளியவர். எனவே இத்தகைய குறைபாடுகள் ஒரு மொழியை உயர்ந்ததாக அல்லது தாழ்ந்ததாக எடை போட உதவாது. இது போல கோளாறுகள் நம் மொழியிலும் உள்ளன. அவற்றை மட்டும் குறிப்பாக இவ்விடுகையில் பார்ப்போம். அக்குறைபாடுகளை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றியும் பார்க்கலாம்.

இந்திய மொழிகள் அனைத்துமே உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் மட்டுமே கணக்கிலிட்டுச் சொல்பவை. எனவே அவர்களிடம் “உங்கள் மொழியில் எத்தனை எழுத்துக்கள்?” என்று கேட்டால், ஐம்பது அல்லது அறுபதுக்குள் ஒரு எண்ணைச் சொல்வார்கள். நாமோ உயிர், மெய், உயிர் மெய், ஆய்தம் ஆகிய நான்கு வகைகளைக் கொண்டு கணக்குப் போடுபவர்கள். எனவே நாம் 247 என்றதும், “உள்ள எழுத்துக்களையே ஒழுங்காக உச்சரிக்க முடியாதவர்களிடம் இவ்வளவு எழுத்துக்களா?” என்று கலகலவெனச் சிரிப்பார்கள். முதலில் மேலே கண்ட விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். அதன் பின்பும் ஏகப்பட்ட விளக்கங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.

உள்ள எழுத்துக்களையே ஒழுங்காக உச்சரிக்க முடியாதவர்களா? ஆம். அதனால்தான் நம்மவர்களால் மற்றவர்களைப் போலப் பிற மொழிகளை எளிதில் கற்க முடிவதில்லை. நாம் ஒரே ஒரு ‘க’ வரிசையை வைத்துக் கொண்டு ஓட்டுகிற பிழைப்பை மற்ற மொழிகளில் எல்லாம் KA, KHA, GA, GHA, HA என்கிற மாதிரி உச்சரிப்பு வருகிற ஐந்து ‘க’க்கள் வைத்துக் கொண்டு ஓட்டுகிறார்கள். கந்தன், கலீல் (க்ஹலில் என்று உச்சரிக்க வேண்டும் அதை), கணேசன், மேகம், மோகன் ஆகிய ஐந்து சொற்களிலும் வருகிற ‘க’ வெவ்வேறு விதமாக உச்சரிக்கப் பட வேண்டும். நாம் அது பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. எல்லாமே ஒரே ‘க’ தான். அங்குதான் நாம் கேலிக்குள்ளாகி விடுகிறோம். நம்மில் பலருக்கு உச்சரிப்பு வேறுபாடு தெரியும். ஆனால், ஏன் நான்கு தனித்தனி எழுத்துக்கள் இல்லை என்பதற்கான விளக்கம் மட்டும் இராது. அது என்ன என்று இன்று பார்த்து விடுவோம். இதற்கிடையில் இன்னொரு விசயம். நான் மேலே சொன்ன நான்கு சொற்களில் கந்தன் என்ற ஒன்றுதான் தூய தமிழ். அந்தக் ‘க’ மட்டும்தான் நம் ‘க’. மற்ற ‘க’க்கள் எல்லாமே வடமொழிக் ‘க’க்கள். HA இடையில் வந்தால் ‘க’ வாகிறது. அதுவே முதலில் வந்தால் ‘அ’ வாகிவிடும். அரிச்சந்திரனில் வருவது போல. பல நேரங்களில் நம்மவர்கள் திண்ணையில் வைக்கப் பட்டிருக்கும் ‘ஹ’ வையும் பயன் படுத்துகிறார்கள்.

அதுபோலவே, CA, CHA, JA, JHA, SA, SHA, SSHA என்கிற மாதிரி உச்சரிப்பு வருகிற ஏழு எழுத்துக்களுக்கும் நம்மிடம் இருப்பது ஒரே ஒரு ‘ச’. சிரிக்கத்தானே செய்வார்கள்? ஏன் சிரிக்கக் கூடாது என்பது பற்றிக் கண்டிப்பாகப் பார்ப்போம். அதற்கு முன் மேலே சொன்ன எழுத்துக்களின் உச்சரிப்பு வேறுபாட்டைப் பார்த்து விடுவோம். CA மற்றும் CHA இடையிலான வேறுபாட்டை ஆங்கிலத்திலோ தமிழிலோ விளக்குவது கடினம். சந்திரனில் வருகிற ‘ச’ இது. JA ஜம்பு லிங்கத்தில் வருகிற ‘ச’. JHA வையும் ஆங்கிலத்திலோ தமிழிலோ விளக்குவது சிரமம். SA ஒன்றுதான் நம்முடைய பழந்தமிழ் ‘ச’. அதையும் திருநெல்வேலிப் பக்கம் போனால் எல்லாமே CHA மாதிரித்தான் உச்சரிப்பார்கள். மற்ற ஊர்களில் சாப்பாடு SAAPPAADU என்று அழைக்கப்படும்போது தெற்கே அது CHAAPPAADU என்று அழைக்கப்படுகிறது. SHA மற்றும் SSHA இடையிலான வேறுபாட்டையும் ஆங்கிலத்திலோ தமிழிலோ விளக்க முடியாது. இயக்குனர் ஷங்கர் பெயரில் வருகிற ‘ச’ அது. இதில் ஜ மற்றும் ஷ இன்னும் திண்ணையில் வைக்கப் பட்டிருப்பவை. இதெல்லாம் போக, KSHA வரிசை ஒன்று இருக்கிறது. லக்ஷ்மி மற்றும் க்ஷத்ரியர் போன்ற வடமொழிச் சொற்களில் பயன்படுத்தப்படும் எழுத்து. அதை நாம் மொட்டையாக லட்சுமி அல்லது சத்திரியர் என்று அடித்து விடுகிறோம்.

இது போலவே, நம் ஒரு ‘த’ வரிசைக்கு இணையாக நான்கு வரிசைகள் (THA, DHA, TTHA, DDHA என்று சொல்லலாம்), ‘ட’ வரிசைக்கு இணையாக நான்கு வரிசைகள் (TA, DA, TTA, DDA என்று சொல்லலாம்), ‘ப’ வரிசைக்கு இணையாக நான்கு வரிசைகள் (PA, PHA, BA, BHA) என அடுக்கித் தள்ளியிருக்கிறார்கள். இவை அனைத்திலும் இருக்கிற நான்கு வேறு உச்சரிப்புகளையும் புரிந்து கொள்ளாவிட்டாலும் இரண்டிரண்டாவது புரிந்து கொள்ள வேண்டும். THA வுக்கும் DHA வுக்குமான வேறுபாடு என்னவென்றால், தங்கம் மற்றும் தனம் ஆகிய சொற்களில் வருகிற ‘த’க்களுக்கிடையேயான வேறுபாடு. TA வுக்கும் DA வுக்குமான வேறுபாடு என்னவென்றால், முட்டம் மற்றும் முடம் ஆகிய சொற்களில் வருகிற ‘ட’க்களுக்கிடையேயான வேறுபாடு. PA வுக்கும் BA வுக்குமான வேறுபாடு என்னவென்றால், பண்பு மற்றும் பயம் ஆகிய சொற்களில் வருகிற ‘ப’க்களுக்கிடையேயான வேறுபாடு. PHA மற்றும் BHA வை ப்ஹா என்று முக்கிக் கொண்டு சொல்வார்கள். என் பெயரை பாரதிராஜா என்று சொன்னால் சிரித்து விட்டு, “ப்ஹாரத்திராஜா-வா?” என்பார்கள். “ஆமாம்” என்று அசடு வழிந்து கொள்வேன். வடமொழிப் பெயரை வைத்துக் கொண்டு அவர்களைப் போல உச்சரிக்கா விட்டால் சிக்கல்தானே!

இதெல்லாம் போக, கூட்டெழுத்துக்கள் என்று ஒரு க்ரூப் இருக்கிறது. தனியாகப் பெயரேதும் இல்லாவிட்டாலும் அது நம் மொழியில் வேறு விதமாகக் கையாளப் படுகிறது. எனவே அது இல்லாவிட்டாலும் பரவாயில்லை. க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ம்ம, ர்ர, ல்ல, ள்ள, ன்ன போன்றவை அனைத்தும் அந்தக் க்ரூப்பில் வருபவை. பல மொழிகளில் இவற்றைக் கீழே தொங்கிக் கொண்டிருக்கிற மாதிரி எழுதி மொழியைக் கடினமாக்கி விடுகிறார்கள். நல்ல வேளை, நம்மிடம் அதெல்லாம் இல்லை என்று தோன்றுகிறது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, ‘தமிழ்’ என்று பெயர் கொண்ட ஒரு மொழியைப் பேசுகிற முக்கால்வாசிப் பேருக்கு அந்தச் சொல்லில் வருகிற ‘ழ்’ என்ற எழுத்தைச் சரியாக உச்சரிக்க வருவதில்லையே! இது யார் குற்றம்? இதற்காக, மொழியின் பெயரை ‘தமில்’ என்று மாற்றவும் முடியாது; சரியான உச்சரிப்பைக் கொண்டு வருவதற்காகக் கோடிக் கணக்கில் திட்டங்கள் போடவும் முடியாது. நல்ல ஐடியா ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். பயன்படும்.

சரி, குறைபாட்டுக்கான காரணம் என்னவென்று இப்போது பார்த்து விடுவோம். சில குறைபாடுகள் இருப்பது உண்மைதான். ஆனால், எல்லாமே குறைபாடுகள் அல்ல. ‘க’ முதலில் வந்தால் KA போன்றும், நடுவில் வந்தால் HA அல்லது GA போன்றும் உச்சரிக்கப் பட வேண்டும் என்கிற மாதிரி நம் இலக்கணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இடையிலும் ‘க்’க்குப் பின் வந்தால் KA போன்றும் ‘ங்’க்குப் பின் வந்தால் GA போன்றும் உச்சரிக்கப்பட வேண்டும். எனவே, இதை எப்படி விளக்க வேண்டும் என்றால், “எங்கள் மொழியில் எழுத்துக்கள் இல்லை என்றில்லை; ஒரே எழுத்தை வெவ்வேறு விதமாக உச்சரிக்கும் விதத்தில் செறிவான இலக்கணம் இருப்பதால் பொது எழுத்துக்களைப் (Common Letters) பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்று சொல்ல வேண்டும். அதே போலத்தான் ச, ட, த, ப ஆகிய எல்லா எழுத்துக்களும் இடத்துக்கு ஏற்றபடி மாறிக்கொள்கின்றன. “அடப்பாவிகளா, உங்கள் எழுத்துக்களுமா சந்தர்ப்பவாதிகள்?!” என்று எவனாவது (அல்லது எவளாவது!) நக்கல் பண்ணினால் ‘பொளேர்’ என்று கன்னத்தில் ஒரு அரை விட்டு “இப்படியும் மாறுவோம்” என்று காட்டி விடுங்கள்.

“அது சரி, எல்லா இந்திய மொழிகளும் ஒரு முறையைக் கடைப் பிடிக்கும்போது ஏன் நீங்கள் மட்டும் பிடிவாதமாக வேறு விதி முறைகளைக் கடைப் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டால் என்ன சொல்வது? கேட்காவிட்டாலும் நாமே அந்தக் கேள்வியைக் கேட்டு விளக்கம் கொடுக்கவும் தயாராக இருந்து கொள்வோமே! நம் மொழியானது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மொழியாதலால் மற்றவர்கள் செய்தது போல நம்மவர்கள் அதற்குப் பின்னால் வந்த மொழிகளிடம் இருந்து எதையும் கடன் வாங்க விரும்ப வில்லை. நம் மொழியைவிட வடமொழி கண்டிப்பாக வசதியான மொழிதான். அதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. வம்புக்கு “என் மொழிதான் உலகத்திலேயே தலை சிறந்த மொழி” என்று வறட்டு வாதங்கள் செய்கிற ஆளில்லை நான். ஆனால், நல்லதை எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வோம் என்கிற திறந்த மனப்பான்மை இருந்திருந்தால் ஒருவேளை நாமும் மற்றவர்களைப் போல காப்பி அடித்து விட்டு, நம் பாரம்பரியப் பெருமையை மறந்திருப்போமோ என்னவோ? நமக்கென்று இருந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றைத் தொலைத்திருப்போமோ என்னவோ? “உலகின் முதன் மொழி தமிழ்” என்று பெங்களூரில் தார் வைத்து எழுதும் வேலையை விட்டுவிட்டு எல்லோரையும் போல், “வடமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட டமிலோ டுமீலோ எங்கள் தாய்மொழி” என்று பள்ளிகளில் ஏதோவொரு புது மொழியில் மனப்பாடம் செய்து கொண்டிருந்திருப்போமோ என்னவோ? அதனால்தானோ என்னவோ நம்மவர்கள் இப்பவும் புதிய எழுத்துக்களை நுழைத்து மொழியை வளமைப்படுத்தும் பணியைச் செய்ய முன் வருவதில்லை என நினைக்கிறேன். ஒருவேளை வெளி உலகோடு இன்றளவுக்கு உறவாடியதில்லையாதலால் அதைப்பற்றிச் சிந்திக்க இதுதான் சரியான தருணமோ என்னவோ? இது போன்று எத்தனையோ “என்னவோ”க்கள். காலம்தான் விடை சொல்ல வேண்டும்.

கருத்துகள்

  1. இது மிக நல்ல பதிவு.
    சில இடறல்கள் இருப்பினும்... நேற்றுதான் முகப்புத்தகத்தில் இருவர் தமிழில் 'பல இல்லை' என்று அழுது வடிந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பதிலாக இதையே போட்டுவிடலாம். முகப்புத்தகத்தில் இருந்தால் வாருங்கள்.
    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ரஃபெல் அவர்களே. முகப்புத்தகத்தில் (FACEBOOK) நான் இருக்கிறேன். மேலே இடது புறம் பாருங்கள். என் முகப்புத்தக முகவரி உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. மிகுந்த ஆர்வமுடன் கருத்துரை இடுகிறேன்...
    ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிற தனிப்பட்ட பண்புகளைப் போல, ஒவ்வொரு மொழிக்கும் பல தனிப்பட்ட பண்புகள் இருக்கின்றன-ஆமாம் ஜெர்மன் மொழியில் கூட V என எழுதும் இடங்களில் F என படிப்பார்கள்.பிறமொழி எனக்குத் தெரியாது எனக் கூறுவதை நான் சிறிது அவமானமாக கருதினேன் ஆரம்பத்தில்.ஆனால் வெள்ளைக்காரர்களிடமிருந்து அதையே பெருமையாக சொல்லும் தன்மையைக் கற்றுக் கொண்டேன்.தங்கள் மொழி ஆங்கிலத்திற்கு இணையாக இல்லை அல்லது ஆங்கிலம் முழுமையாக தங்களுக்குத் தெரியவில்லை என எந்த ஐரோப்பியரும் வெட்கப்படுவதில்லை.தெரியாது,புரியாது என சொல்வதில் கொள்ளும் பெருமையை நானும் ஏற்றுக் கொண்டேன்.அவர்கள் தங்கள் மொழியையே முதன்மையாக எப்போதும் எண்ணுபவர்கள்.தமிழர்களும் அப்படியே.

    நம் மொழி அமைந்த விதத்தில் யார் என்ன பிழை கூறினாலும்இது தான் எம்மொழி... இது தான் நாங்கள்... என பெருமிதத்துடன் இருக்க வேண்டுமென நான் எண்ணுகிறேன்.எந்த விஞ்ஞான உலகத்தில் நாம் வாழ்ந்தாலும்,வளர்ச்சிக்கான மாற்றங்களைச் சந்தித்தாலும் நம் மொழியின் தனித் தன்மையை காப்போம்...காதலிப்போம்...

    மிக அருமையான பதிவு,மனம் கனிந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. அருமையான கருத்துரை. உண்மையில், உரையாடலை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளீர்கள் இப்போது. மொழியில் மட்டுமல்ல. எதிலுமே, தெரியாததைத் தெரியாது என்று கூச்சப்படாமல் சொல்பவர்களைக் கண்டால் எனக்கு அந்த இடத்திலேயே ராணுவ சல்யூட் அடிக்கத் தோன்றும். அதை ஒரு கூச்ச உணர்வோடு சொல்லும் போதுதான் பல நேரங்களில் எதிராளி நம்மை மொக்கி விடுகிறான். நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  5. vada mozhi tamilai vida vasathi endru eppdi solgirirgal? vetru mozhi kararkalidam vivadham seiya adhu vasathiyai irukalam anal tamilil eluthuvadharku pesuvathurku ungaluku enna vasathi kuraivu irukiradhu.. tamil tamilai pol irukiradhu adhil vada mozhi pol eluthu illai enpadhu vasadhi kuraivu alla

    பதிலளிநீக்கு
  6. வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி வெற்றிவேல் அவர்களே. சரியாகச் சொன்னீர்கள். வேற்று மொழிக்காரர்களுடன் விவாதம் செய்வதற்கு வசதியாகத்தான் இதை எழுதினேன். நீங்கள் சொல்வது போல் எல்லோரும் யோசிக்க ஆரம்பித்து விட்டால் அது நம்மை முதிர்ச்சியின் அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதில் கண்டிப்பாக எனக்கும் ஐயமேதுமில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்