பத்திரிகாதர்மம் = பத்திரிகை + (அ)தர்மம்?!

முன் குறிப்பு: சில ஆங்கில ஊடகப் பெருங்கைகள் திரைக்குப் பின் செய்கிற வேலைகள் பற்றிய சமீபத்திய சர்ச்சைகளுக்கு முன் எழுதிய கட்டுரை இது. எனவே, காலத்தில் ஒரு வருடம் பின்னால் சென்று, அங்கேயே அமர்ந்திருந்து இதைப் படியுங்கள். ஓரளவு சரிதான் எனப்படலாம்.

நம்மைப் போன்ற சாமானியர்கள் ஊடகங்கள் ஒருவரைப் பற்றி என்ன சொல்கின்றனவோ அதை நம்புவதுதான் இயற்கை. ஒவ்வொரு செய்தியையும் அவை உருவாகும் ஒவ்வொரு இடத்துக்கும் நேரடியாகச் சென்று சேகரிக்க முடியாது நம்மால். பிராந்திய மொழி ஊடகங்களை விட ஆங்கில ஊடகங்களின் தரமும் முதிர்ச்சியும் பல மடங்கு பரவாயில்லாமல் இருக்கின்றன. எனவே, அவர்களை நாம் நம்புவது அதனினும் இயற்கையானதே. அரசியல்க் கட்சிகளும் தலைவர்களும் ஊடக வட்டாரத்தில் எப்படியெல்லாம் காக்கா பிடிக்கும் வேலைகள் செய்கிறார்கள் என்பது பற்றி நமக்குத் தெரிய வருவதே இல்லை. எல்லோருடைய காக்கா பிடித்தல் பற்றியும் எழுதும் அவர்களிடம் செய்யப்படும் காக்கா பிடித்தல்கள் பற்றி யார் எழுதுவது?

ஊடக வட்டாரத்துக்கு நெருங்கிய என் நண்பர்களிடமிருந்து நான் அடிக்கடிக் கேள்விப் படும் ஒரு செய்தி அவர்கள் காசுக்கு எழுதுவது பற்றி. காசுக்கு எழுதுதல் பற்றி ராஜ்தீப் சர்தேசாய்கூட கொஞ்ச நாட்கள் முன்பு எழுதியிருந்தார். முதல் முறை அது பற்றிக் கேள்விப் பட்டபோது அதிர்ந்து போனேன். ஆனால், இப்போது பழக்கப் பட்டு விட்டது. சாமானியர்களாகிய நாம் இது பற்றியெல்லாம் ஒருபோதும் சிந்திக்க வாய்ப்பில்லை. காசு வாங்கிக் கொண்டு ஆடுகிறார்கள் போல்த் தெரிகிறது என்று என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் பேசியபோது, அதை நான் சட்டை செய்ததே இல்லை. ஆனால், அன்வர் 195 அடித்த சென்னை ஆட்டத்தில் நம்ம ஆள் ஒருத்தன் அவுட் ஆன விதத்தைப் பார்த்த போது உறுதியான சந்தேகம் வந்தது. அப்படியே விக்கெட்டைத் தூக்கிக் கொடுத்தான். உள்ளே நுழைந்த உடன் ஸ்கொயர் லெக்கில் எளிதாக அள்ளிக் கொள்கிற மாதிரித் தூக்கிக் கொடுத்தான். அங்கே நின்று கொண்டிருந்த அவங்க ஆள் அதையும் விட்டு விட்டான். திரும்பக் கொடுப்பான் என்ற நம்பிக்கையோ என்னவோ. திரும்பவும், அதே ஓவரில் அடுத்த பந்திலேயே, அதே ஆளுக்கு அலேக்காகத் தூக்கிக் கொடுத்தான். அதை எந்தத் தப்பும் செய்யாமல் அப்படியே கவ்விப் பிடித்துக் கொண்டான் அதே ஆள்.

அதேபோல, நம் ஊடகங்கள் (குறிப்பாக ஆங்கில ஊடகங்கள்) சில அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசுவதைப் பார்த்தால் அவர்கள் மீது எனக்குச் சில சந்தேகங்கள் வர ஆரம்பித்து இருக்கின்றன. சில அரசியல்வாதிகளால் செய்யப்படும் மிகச் சிறிய செயல்பாடுகள் கூட மிகப் பெரிய அளவில் மிகைப் படுத்திப் பேசப்படுகின்றன. ஆனால், வேறு சிலரோ என்னதான் செய்தாலும் காமெடியனாகவும் வில்லனாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு கட்சி மீதும் அவர்கள் கொண்டிருக்கும் சொந்த அபிப்பிராயத்தைப் பொருத்த இயல்பான பாரபட்சம் ஒரு காரணமாக இருக்கலாம். அது இயல்பானது என்பதாலும் இயல்பான பாரபட்சம் என்று அழைக்கப் படுவதாலும் அதை ஏற்றுக் கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, கொள்கை ரீதியாக இடது புறமோ வலது புறமோ சாய்வது அத்தகைய பாரபட்சத்தால் ஏற்படுவது. ஒரு பக்கத்தின் கதையை மட்டும் தெரிந்து கொள்ள அவர்கள் இரு சாராரையும் கவனமாகப் பின் தொடர வேண்டும். இருவரின் பார்வையையும் என்னவென்று கேட்டுக் கொண்டு உண்மையைப் பொய்யிலிருந்து ஒதுக்கிக் காண நம் சொந்த மூளையைப் பயன் படுத்த வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள மட்டும் கூடாது. அப்படிச் செய்தால் அதில் நாம்தான் இழப்பவராக இருப்போம்.

நல்ல இலக்கியம் தீர்ப்புகள் சொல்லாமல் வாசகனைச் சொந்தமாகச் சிந்திக்கத் தூண்ட வேண்டும் என்பார்களே. அது நம் பத்திரிகைகளுக்கும் பொருந்தும். அவர்கள் எப்படியிருந்தாலும் தீர்ப்புகள் சொல்லத்தான் செய்வார்கள். அவர்கள் சொல்வதைக் கொண்டு நம் மூளையைத் தூண்ட, நாம்தான் நம்முடைய விருப்பு-வெறுப்புகள் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். நம் சிந்தனை வேள்விக்கு அவர்களுடைய தீர்ப்புகளை உள்ளீடாக எடுத்துக் கொள்ள வேண்டும். பார்வையாளராக அல்லது வாசகராக நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வசதி என்னவென்றால், இருசாராரும் செய்யும் தவறுகள் பற்றி எளிதில் தெரிய வரும். கவனத்தோடு ஒரு தலை பட்சமாக இருக்க முடிவு எடுத்து விட்டால் ஒழிய, நம் கவனத்தில் இருந்து எதுவும் தப்ப முடியாது.

பல மாநிலங்களில் அரசியல்க் கட்சித் தலைவர்களால் நடத்தப் படும் சேனல்கள் அநியாயத்துக்குக் கோமாளித்தனம் பண்ணுகின்றன. ஒன்று எங்கு பார்த்தாலும் இரத்த ஆறு ஓடுவது போலவும் மற்றொன்று திரும்பிய திசையெலாம் தேனாறும் பாலாறும் ஓடுவது போலவும் காட்டுகின்றன. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து அவற்றைப் பார்க்கிற - புத்தியுள்ள எந்த மனிதனும் ஒன்று பைத்தியமாவான் அல்லது அவர்களுடைய சேனல்களைப் பார்ப்பதையே மறுநாள் முதல் நிறுத்தி விடுவான். அவர்களுடைய இவருடைய செய்திகளையுமே விரும்பிப் பார்க்கும் என் நண்பன் ஒருவன் அவற்றைக் "காமெடி டைம்" என்றே அழைப்பான். எனவே, அவற்றைப் பற்றி அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை. அதுவே நமக்கு நல்லது. அவர்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பதை அவர்களே தெளிவாகச் சொல்லி விடுவதாலும் அத்தகைய பிரச்சார நெடியைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நம்மிடம் அடிப்படை அறிவு உள்ளதாலும் அது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. அவர்களுடைய கருத்துப் பரிமாற்றப் பாணியில் இருக்கும் கோளாறைப் புரிந்து கொண்டு கூடிய விரைவில் அவர்களே அதைச் சரி செய்து கொள்வதே அவர்கள் நம்முடைய மரியாதையை வென்றெடுக்க வழி வகுக்கும். மாறாக, அவர்களுடைய கருத்துப் பரிமாற்றப் பாணியில் எந்தக் குறையுமில்லை என்கிற அல்லது அவற்றாலேயே ஈர்க்கப் பட்ட - அவர்களைத் தொடர்ந்து கண்டு களிக்கும் நேயர்களை விட அறிவாளிகள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நம்மைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்பதாக இருந்தால் அதற்கொன்றும் செய்ய முடியாது.

எது நம்மைச் சஞ்சலப் படுத்துகிறது என்றால், நடுநிலையாளர் துண்டு போட்டுக் கொண்டு சாமானியர் நம்மால் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ இலைமறை காயாகச் செய்யப் படும் பிரச்சாரம்தான். பெரும்பாலான விஷயங்களில் (அடுத்த சில பத்திகளில் பேசப்போகும் கேள்விக்குரிய சில விஷயங்கள் தவிர்த்து) அவர்களுடைய பார்வை பாரபட்சம் இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கென்று ஒரு நற்பெயர் இருக்கிறது. நாம் மேலே பேசிய சிரிப்புச் சேனல்கள் நடுத்துவோரை விட இவர்கள் புத்திசாலிகள். எனவே, அவர்களிடம் ஒரு பிரச்சார நெடியில்லாத தொனி இருக்கிறது (பிறப்பிலேயே வந்தது அல்லது முயன்று வளர்த்துக் கொண்டது). அதுவே அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வைப்பது. வேலியின் எந்தப் புறம் இருந்தாலும் அவர்கள் சொல்ல வருவதை ஏற்றுக் கொள்கிற மாதிரிச் சொல்லக் கூடிய அளவு அவர்களிடம் புள்ளி விபரங்கள் - தகவல்கள் உள்ளன.

கொஞ்ச காலம் முன்பு, தேசிய நாளிதழ் ஒன்றின் அது போன்ற உள்ளூர்ப் பதிப்பாசிரியர் ஒருவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் கூறும் ஒவ்வொரு கூற்றும் எனக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்கும். என்னுடைய சில விருப்பு வெறுப்புகளையே (அல்லது இயல்பான பாரபட்சங்களை) ஆதரிப்பதற்கான பல நல்ல காரணங்களை அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார். அவர் ஒரு பதிப்பாசிரியர் என்று எனக்குத் தெரியாது அப்போது. ஒரு பத்தியாளர் என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு பதிப்பாசிரியர் என்றும் தம்மைப் பற்றி நன்றாக எழுதவும் அல்லது மோசமாக எழுதாமல் இருக்கவும் தேசியக் கட்சி ஒன்று அவருக்கு அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருந்தது என்றும் ஊடக நண்பர் ஒருவர் மூலம் கேள்விப்பட்ட போது ஆடிப் போனேன். அது உண்மையா என்று உறுதியாகத் தெரியவில்லை. அது பொய்யாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால், பணத்துக்கு இரையாவதில் அல்லது அத்தகைய குற்றச் சாட்டுகளுக்கு இடம் கொடுப்பதில் அவர்களும் விதி விலக்குகள் அல்ல என்பதே. இப்படித்தான் எழுத வேண்டுமென்று சொல்லிக் காசு கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால், முதலில் ஆதரித்து எழுதும் அவருடைய பாணிக்காகக் கொடுக்கப் பட்டிருப்பார். அதுவே பின்னர் மோசமாகியிருக்கும். எப்படியிருந்தாலும், கதை சொல்லும் பாடம் என்னவென்றால், முகத்தைப் பார்த்து யாரையும் நம்ப வேண்டாம். சின்ன வயதில் சொல்லிக் கொடுக்கப் பட்ட மிக அடிப்படையான பாடம் போல்த் தெரிகிறதல்லவா?!

ஒவ்வொரு பிரச்சனையையும் ஒரு குறிப்பிட்ட கோணத்திலேயே பார்க்கும் நண்பர் ஒருவரிடமிருந்து இன்னொரு கதை. நமக்குப் பழக்கமில்லாத ஒரு வேறுபட்ட கோணம் அது! அந்தக் கோணத்தில் எனக்கு மிகவும் வசதியாக இல்லை. அதே வேளையில், கதவை அடித்துச் சாத்தவும் விரும்பவில்லை. அவர் சொல்வது சரியாக இருக்கலாம். கூட்டுச்சதித் தேற்றங்கள் (CONSPIRACY THEORIES) நிறைய வைத்திருப்பவர். நான் நீரின் சுவை பற்றிப் பேசும்போது அது எவ்வளவு கேட்டுப் போயிருக்கிறது என்பது பற்றிப் பேசுபவர். மென்மையான தென்றல் என்று நான் சொல்வதை எவ்வளவு மாசுபட்டிருக்கிறது என்று சொல்பவர். ஒரு சாமானை வாங்கி அதில் என்னவெல்லாம் கலந்திருக்கிறார்கள் என்பதை அதன் அட்டையில் நான் படிக்கும் போது, அதன் பட்டியல் முழுமையானதல்ல - அதில் இல்லாத பல தீங்கு விளைவிக்கும் பொருட்களும் கலந்திருக்கிறார்கள் என்று சொல்பவர். வெறும் கண்ணில் பார்த்தால் பல விஷயங்கள் தெரியாது என்பவர். அதன்படி, நாம் எப்போதும் பார்ப்பதை விட மேலும் நுணுக்கமாக எல்லாவற்றையுமே ஒரு சந்தேகக் கண்ணோடே பார்க்க வேண்டும். 

அப்படிப் பார்க்கையில் வருவது இதுதான். 'குறிப்பிட்ட பின்னணியில் இருந்து வரும் தலைவர்கள் கேலிப்பொருள் ஆகிறார்கள், கிண்டல் செய்யப் படுகிறார்கள், அவர்களுடைய சாதனைகள் அசாதாரணமான முறையில் சிறுமைப் படுத்தப் படுகின்றன; ஆனால், வேறொரு குறிப்பிட்ட பின்னணியில் இருந்து வருகிறவர்களுக்கு அதெல்லாம் நிகழ்வதில்லை'. இதுவும் எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. அது பொய்யாக இருக்க வேண்டுமென்றே ஆசைப் படுகிறேன். என் வெறும் கண்களுக்கு, அவர்கள் எந்தப் பின்னணியில் இருந்து வருவோராக இருந்தாலும், ஆங்கில ஊடகங்கள் சித்தரிப்பது போலவே கேலிப்பொருளாகவும் கிண்டல் செய்யப் பட வேண்டியவர்களாகவும் எதுவும் சாதிக்காதவர்களாகவுமே தெரிகிறார்கள். அவர்களைப் பார்த்தால் இதைவிடச் சிறப்பாகச் சித்தரிக்கப் பட வேண்டியவர்களாக எனக்குப் படவில்லை. ஆனால், அது உண்மையா பொய்யா என்று தெரியும் வரை என் வெறும் கண்களை மூடிக்கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. 

இந்தக் கருதுகோளை (HYPOTHESIS) நிரூபிக்க அல்லது பொய்ப்பிக்க உதவும் உங்கள் தகவல்கள் பெரிதும் போற்றப் படும்!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்