அதீத உற்றுநோக்கல்க் கோளாறு! (OBSESSIVE OBSERVATION DISORDER!)

கவனித்தல் அல்லது உற்றுநோக்கல் என்பது மனிதனாகப் பிறந்த நாம் எல்லோரும் தினம் தோறும் செய்யும் ஒன்று. மற்றவர்களை விட பிரச்சனைகளை முன் கூட்டியே கணிக்கத் தெரிந்ததாலும் மறைமுகச் செய்திகளைப் புரிந்து கொள்ள முடிவதாலும் அதை அதிகமாகச் செய்வோர் அறிவாளிகளாகக் கருதப் படுகிறார்கள் (அடுத்தவர்களால் என்பதை விடத் தாமே நினைத்துக் கொள்வதுதான் அதிகம்!). அதற்கு அறிவியல் மற்றும் தத்துவம் இரண்டிலுமே சிறந்ததோர் இடமிருக்கிறது.  இன்று நான் உங்களோடு உரையாட விரும்புவது அதன் பின்னால் இருக்கும் அறிவியல் பற்றியோ அது பற்றிய தத்துவம் பற்றியோ அல்லது அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றியோ அல்ல. அதை அளவுக்கு அதிகமாகச் செய்வதில் உள்ள பிரச்சனைகள் பற்றி. அதாவது அதீத கவனிப்பில் உள்ள பிரச்சனைகள் பற்றி. நானே இதன் பலியாகி இருக்கிறேன் பலமுறை. நான் உற்று நோக்கிய வரையில் (நான் செய்வது எல்லாமே உற்று நோக்கல் என்றுதான் சொல்லப் பட வேண்டும்; பார்த்ததாகவோ கேட்டதாகவோ சொல்லப் படக் கூடாது; ஏனென்றால் நல்ல உற்று நோக்கி என்று சொல்லப் படுவதைப் பெருமையாகவும் உயர்வாகவும் கருதுகிறேன்!) இதில் மூன்று பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன.

நான் உற்று நோக்கிய(!) முதல் பிரச்சனை என்னவென்றால், தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் பொருட்களையும் உற்று நோக்குவதில் நிறைய நேரம் செலவிடுவோர் எல்லோருமே அந்த உற்று நோக்கல் என்ற செயல்பாட்டுக்கு ஒரு வித அடிமை ஆகி விடுகிறார்கள். இது மற்ற அடிமைமைகள் ('அடிமைத்தனங்கள்' என்பதற்குச் சுருக்கம்!) போலவே ஒரு அடிமைமை. ஒரு அளவுக்கு மேல் போகும்போது அது மிக அதிகமாகி விடுகிறது - அதுவே வாழ்வின் ஒரே நோக்கமாகி விடுகிறது. எங்கு சென்றாலும் உற்று நோக்க ஆரம்பித்து விடுவேன். 'உற்று நோக்கு... உற்று நோக்கு... உற்று நோக்கு... வேறு எதுவும் செய்யாதே' என்பதே வாழ்க்கையின் தத்துவம் ஆகி விடுகிறது. என்னைச் சுற்றி இயங்குகிற இயங்காத எல்லாவற்றையும் நான் உற்று நோக்குகிறேன். சாதாரண மனிதக் கண்களுக்குப் படாத பல மிக நுணுக்கமான மற்றும் மறை பொருட்களை எல்லாம் உற்று நோக்குகிறேன். உற்று நோக்குவதில் அளவுக்கு அதிகமான நேரம் செலவிட்டுச் செலவிட்டு உருப்படியான எந்த வேலையும் செய்ய நேரமில்லாமல் போய் விடுகிறது. அதீத ஆராய்ச்சிகள் செய்கிறேன் - ஏகப் பட்ட முடிவுகளுக்கு வருகிறேன். இரண்டுமே சிறிது நேரத்துக்குப் பின் எனக்கு எந்தப் பயனும் அளிக்கா. சந்திப்புகள், கூட்டங்கள், பயிற்சிகளுக்குச் செல்லும் போது, அங்குள்ள ஆட்களையும் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் உற்று நோக்குவதில் போகிற கவனம்,  முக்கியக் கருத்துக்களைத் தவற விடச் செய்கிறது. கடைசியில் கருத்துக்கள்தானே தோற்றங்களை விட முக்கியம். ஏதாவது விளையாடும் போது அவ்வளவு உற்று நோக்கத் தேவையில்லாத விஷயங்களை உற்று நோக்குகிறேன்; ஆனால் ஆட்டத்தில் தோற்று விடுகிறேன். வண்டி ஓட்டும் போது, சுற்றியிருக்கும் அழகுகளை (நீங்கள் நினைக்கும் அழகு மட்டுமில்லை!) நோக்குவது ஆயுட்காலப் பிரச்சனைகளில் கொண்டு சென்று விட்டு விடும்.

இரண்டாவது பிரச்சனையும் முதலாவதைப் போன்றே இருப்பது அல்லது அவையிரண்டும் ஒன்றுக்கொன்று ஈடு செய்து கொள்பவை. இங்கே என்ன நடக்கும் என்றால், உற்று நோக்குவதில் பல மணி நேரம் செலவிடுவோர் உலகில் எல்லாத்தையுமே வேடிக்கைக்குப் பார்க்க ஆரம்பித்து விடுவர். மற்றவர்களால் காண முடியாதவற்றைக் காணும் ஒரு சிறப்புக் கண் கிடைக்கிற எனக்கு, தவற விடக் கூடாத பல எளிய விஷயங்கள் தெரியாமல் போய் விடுகின்றன. எல்லோருமே வேடிக்கையாகத் தெரிகிறார்கள். எல்லாமே கோமாளித் தனமாகத் தெரிகிறது. சில நேரங்களில் தேவையின் போது பேசுவோர் கூட வேடிக்கைப் பொருளாகி விடுகிறார்கள். வாழ்க்கையில் எல்லாத்தையுமே விமர்சிப்பவனாகவும் எதிர் மறையாகப் பார்க்கிறவனாகவும் ஆகி விடுகிறேன். நாங்கள்தாம் அமைதியான சந்திப்புகளிலும் பொதுக் கூட்டங்களிலும் முணுமுணுக்கும் கும்பல். பொது இடங்களில் மூச்சு விடக் கூடக் கூச்சப் படுபவனாக ஆகி விடுகிறேன். எனக்கு சரியாகப் படுவதற்கும் எழுந்து நிற்பதில்லை; பிறருக்குச் சரியாகப் படுகிறவற்றுக்கும் எழுந்து நிற்பதில்லை. என்னால் செய்ய முடியாதவற்றைப் பிறர் செய்யும்போது அவர்களின் தன்னம்பிக்கைக்குத் தடையாகிறேன். நான் ஒரு விமர்சகன். அவ்வளவுதான். என்னைப் பொருத்த மட்டில், செய்வதை விட அதை உற்று நோக்குவதுதான் உயர்வான வேலை. தன்னுடைய சுற்று வரும்போது செய்யக் கூட அது பயன்படாதென்றால் அந்தக் கருமத்தைச் செய்துதான் என்ன பயன்? சில நேரங்களில் அதிகம் பேசுகிறேன்; பேசுவதற்கு நிறைய விஷயங்களை உற்று நோக்கியிருப்பதால். சில நேரங்களில் பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை; சுற்றியிருக்கும் எல்லா வேடிக்கைகளையும் உற்று நோக்கலில் மும்முரமாகி விடுவதால். எல்லாத்திலுமே ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் ஒன்றுமே செய்வதில்லை. நம்மால் செய்ய முடியாதவற்றில் நமக்கு எதுவும் கருத்து இருக்கக் கூடாது என்றில்லை (ஒன்றுமே செய்ய முடியா விட்டாலும் கூட முடிந்த அளவுக்கு எல்லா விஷயங்களிலும் ஒரு கருத்துக் கொண்டிருத்தல் நல்லதென்று என் முந்தைய இடுகை ஒன்றில் உறுதியாக வழக்காடியிருந்தேன்). ஆனால், எல்லாத்திலுமே கருத்து மட்டுமே கொண்டிருப்பேன்; என்னால் முடிகிற வேலைகளைக் கூடச் செய்ய முயல மாட்டேன் என்றாகி விடக் கூடாது.

மூன்றாவது அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று. எல்லா உற்று நோக்கல்களுமே பாரபட்சமானவை. உற்று நோக்குவோர் எல்லோருமே அவர்களுக்கு வேண்டிய பதிலைத்தான் தேடுகிறார்கள். சரியான பதில்களைத் தேடுவதில்லை; நல்ல பதில்களைத் தேடுவதில்லை; என் மனதில் ஏற்கனவே இருக்கும் பதில்களைத்தான் தேடுகிறேன். என் நம்பிக்கைகளை உறுதிப் படுத்திக் கொள்ளவும் வலிமைப் படுத்திக் கொள்ளவும் ஒரு கருவியாகவே என் உற்று நோக்கல்களைப் பயன் படுத்துகிறேன். அதை விடக் கூடுதலாகவும் இல்லை! குறைவாகவும் இல்லை! உற்று நோக்குதல் மூலம் கூடுதலாக எதையும் அடைய முயல்வதில்லை. என் நம்பிக்கைகளைச் சரி பார்த்துக் கொள்ளக் கூட அவற்றை நான் பயன் படுத்துவதில்லை. எதிர்க் கருத்துகளுக்கும் மாற்றுப் பாதைகளுக்கும் என் மனம் திறந்த நிலையில் இல்லை. இது என்னுடைய நம்பிக்கைகளுக்கு ஆதரவான வாதங்களுக்கு மட்டுமே திறந்த மனம் கொண்ட - மூடிய மனம் கொண்டவனாக்குகிறது. இது ஒருபோதும் என் அறிவின் பக்கவாட்டு வளர்ச்சிக்கு (LATERAL ENHANCEMENT) உதவுவதில்லை. என் நம்பிக்கைகளை மட்டுமே பலப் படுத்துகிறது. தேர்ந்தெடுத்த உற்று நோக்கல்களுக்குத்தான் (SELECTIVE OBSERVATIONS) ஏற்பாடு செய்கிறது; புதிய முடிவுகள் ஏதும் கொணர்வதில்லை. கால ஓட்டத்தில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால், அப்படிப் பட்டவர்கள் தம் உற்று நோக்கல்த் திறத்தை முழுமையாகப் பயன் படுத்த விரும்பினால், விழிப்புணர்வோடு தொடர்ந்து தம் நம்பிக்கைகளுக்குச் சவால் விட வேண்டும்; தம் உற்று நோக்கல்களின் மூலம் அவற்றைச் சுக்கு நூறாக்க வாய்ப்புகள் தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.

என் துறவுரையோடு (DISCLAIMER) முடிவுரைக்கு வருகிறேன். உற்று நோக்குதல் தவறில்லை. இதை எழுதுவதன் மூலம் "எதையும் உற்று நோக்கக் கூடாது" என்று சொல்ல முயலவில்லை. வீணான நேரங்களை உற்று நோக்கலில் செலவழிக்க முடிந்தவர்கள் பெருங் கொடுப்பினை கொண்டோர். மற்றவர்கள் சிந்திக்க முடியாதவர்கள் இல்லை. அவர்கள் ஏற்கனவே தன் மனதில் இருப்பவை பற்றி யோசிக்கிறார்கள் (அதாவது, சிந்தனைக்கு வெளியில் இருந்து உள்ளீடு தேடாமல் உள்ளுக்குள் சேமித்து வைத்திருக்கும் தகவல்களையே கொண்டு மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வோர்). நாமோ நம் நேரத்தை அந்த நேரத்தில் நாம் உற்று நோக்குவதன் மூலம் கிடைத்தவற்றைக் கொண்டு யோசிப்பதில் செலவிடுகிறோம். தம்மைச் சுற்றி நடப்பவற்றை உற்று நோக்குவதன் மூலம் - எப்போதும் நம் சுற்றுப்புறத்தை அறிந்து வைத்திருப்பதன் மூலம், பலருக்கு என்னவென்றே புரியாத பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். அதை அதிகப் படியாகச் செய்வதால் மூன்று பிரச்சனைகளே உள்ளன. அதைச் சரியாகச் செய்வதன் மூலம் பத்துப் பதினைந்து பயன்பாடுகள் இருக்கலாம். எனவே, சுற்றி நடக்கிற எல்லாத்தையுமே உற்று நோக்கி மகிழுங்கள். ஆனால், அதைச் செய்யும்போது அடிமைமை, எதிர்மறைமை மற்றும் பாரபட்சம் ஆகியவை தலை தூக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே அற்புதங்களை அள்ளித் தரலாம்!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்