கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 2/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடர்ச்சி...

இருட்டி விட்டதால் வெளிச்சத்தில் இலண்டன் எப்படி இருக்கிறது என்று மேலிருந்தே காணும் வாய்ப்புக் கிடைத்தது. சிங்கப்பூரில் உணர்ந்தது போலவே இதிலும் பெரிதாக எதுவும் பிரமிப்படைய வைக்க வில்லை. இன்னும் சொல்லப் போனால், சிங்கப்பூரில் கூட சக்தி வாய்ந்த விளக்குகளின் வெளிச்சம் ஓரளவு மிரட்டியது. இலண்டனின் வெளிச்சம் அதை விட சிறிது குறைவாகத்தான் இருந்தது. ஆனால், இலண்டனுக்கென்று எவ்ளோ பெரிய வரலாறு இருக்கிறது. நம்மை வந்து கட்டிப் போட்டு ஆண்டவர்களின் தலைநகரம். ஆங்கிலத்தின் தலைநகரம் என்று சொல்லலாம். சென்று இறங்கிய பின் நம்மைச் சுற்றிலும் முழுக்க முழுக்க ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கையில் அது ஒரு வேறுபட்ட உணர்வாக இருந்தது. மாலை ஆறரை மணி இருக்கும். விமானம் தரை இறங்கியது. இலண்டனில் கால் வைக்கப் போகிறோம் என்கிற பெரும் பிரமிப்புணர்வோடு இறங்கிக் கால் வைத்தோம். எதிர் பார்த்த படியே சுற்றிலும் வெள்ளைக்காரர்கள். எல்லோரும் ஆங்கிலம் பேசினார்கள். நம்மவர்களுக்கும் குறையில்லை. சிங்கப்பூரில் இறங்கிய போதும் விமான நிலையத்துக்குள் பணி புரியும் இந்தியர்கள் நிறையப் பேரைப் பார்க்க முடிந்தது. அதே காட்சி இங்கும் கிடைத்தது.

விமானத்தில் பயணித்த நேரம் முழுக்க இலண்டன் பற்றிய என் கற்பனைகள் அனைத்தும் மனதில் ஓடின. இறங்கிய பொழுதுதான் அதன் உச்சம். இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்த வெள்ளையர்களை எதிர்த்துக் கலகம் செய்து கொண்டிருந்த என் தாத்தாவையும் அவர் போன்றவர்களையும் அடக்க இங்கிருந்துதானே ஆட்களை அனுப்பி வைத்தார்கள் என்கிற எண்ணம் ஒருபுறம். ஈழத்தின் இரண்டாவது தலைநகரம் போல இருந்த ஊர் என்கிற நினைப்பு ஒருபுறம். ஐந்தாறு வருடங்களுக்கு முன் இங்கு வந்து விட்டுத் திரும்பிய கோணங்கி அதன் பின்பு நவீனம் பற்றிய தன் நிலைப்பாட்டில் எவ்வளவு மாறி வந்தார் என்கிற சிந்தனை ஒருபுறம். சமீப காலங்களில் இலண்டன் வந்து திரும்பிய நண்பர்களின் விவரிப்புகள் ஒருபுறம். இங்கிலாந்தில் பெரிசுகள் கொஞ்சம் இனவெறி காண்பிப்பார்கள் என்று சென்ற ஆண்டில் சகா ஒருவர் சொன்னார். அதுவும் நினைவுக்கு வந்து சென்றது. அமெரிக்காவை விட இங்கிலாந்து போனால் 'முறையான ஆங்கிலம்' பழகிக் கொண்டு வரலாம் என்றோர் எண்ணம் வேறு இருந்ததுண்டு. இப்படி எல்லாம் ஓடியது மனதில். பெட்டிகளை இழுத்துக் கொண்டு நுழைவுச் சம்பிரதாயங்கள் (IMMIGRATION FORMALITIES) நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.

கொஞ்சம் கூட்டமாக இருந்தது. இப்படியொரு பிழைப்புத் தேவையா என்று பல பேருக்கு நினைவு படுத்தும் வரிசை. நமக்குத்தான் வரிசையில் நிற்பது பிறப்புக்கே இழுக்கே. ஓரிரு வரிசைகளைச் சமாளித்து விட்டால் அதன் பின்பு சொர்க்கம்தான் வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டு வரிசைகளைச் சகித்துக் கொள்வோர் நிறைய உண்டு. நாங்கள் சென்ற வரிசை, மத்திய கிழக்கு / பாகிஸ்தான் முகம் மற்றும் பெயர் கொண்ட ஒரு அதிகாரியிடம் இட்டுச் சென்றது (இலண்டனில் மத்திய கிழக்கு மற்றும் பாகிஸ்தான்காரர்கள் மிகப் பெரிய அளவில் இருக்கிறார்கள்!). நாற்பது வயதுக்குள்தான் இருக்கும். நல்ல மூக்கோடு(!) நிறமாக இலட்சணமாக இருந்தார். அமெரிக்கா போலன்றி இங்கிலாந்தில் இறங்கும் போது கேள்விகள் எல்லாம் அதிகம் கேட்க மாட்டார்கள் என்று நண்பர்கள் நிறையச் சொன்னதாக நினைவு. ஆனால், சகோதரர் இறுக்கமான முகத்தோடு நிறையவே துருவிக் கேள்விகள் கேட்டார். என்ன நினைத்தாரோ!

நம்ம ஊரிலேயே வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டால் யாரிடம் எந்தக் காரியத்துக்குப் போனாலும் முடிவில் ஒரு புன்னகை உதிர்க்கப் பழகி விட்டேன். அந்தப் புன்னகையை உதிர்த்து, வெள்ளைக்காரர்கள் விரும்பும் மாதிரி ஒரு நன்றியையும் சத்தமாகச் சொன்னேன். அவர் பதிலுக்குப் புன்னகைக்க வில்லை. அப்போதே மனதுக்குக் கொஞ்சம் நெருடியது. அப்போது, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஸ்பெயினில் இருந்து இந்தியா வந்திருந்த நண்பன் சொன்னது நினைவு வந்தது. ஐரோப்பியர்களை விட இந்தியர்கள் அதிகம் புன்னகைக்கிறார்கள் என்று அதிர்ச்சிப் படுத்தி விட்டுப் போனான் அப்போது. 'அது உங்களிடம் மட்டும்தான் சாமி!' என்று சொல்லிக் கொண்டேன். இப்போதும் நம்மை விட அவர்கள் மோசம் என்று சொல்வதற்கில்லை. பெரும்பாலானவர்கள் புன்னகைக்கும் ஊரில் ஆங்காங்கே அப்படிச் சிலர் இருப்பதுதான் நம் ஆச்சரியத்துக்கான காரணம் என்றெண்ணுகிறேன்.

அத்தோடு முடியவில்லை சம்பிரதாயங்கள். முதல் முறை செல்பவர்கள், ஊரில் இருந்தே உடல்நிலைத் தகுதிச் சான்றிதழ் எல்லாம் எடுத்துக் கொண்டு சென்று கொடுக்க வேண்டும் என்று ஒரு விதிமுறை இருக்கிறது. இதயத்தைப் படம் பிடித்து எக்ஸ்ரே ஒன்றும் எடுத்துச் செல்ல வேண்டும். இதயத்திலும் சிறுநீரகத்திலும் கோளாறு உள்ளவர்கள் வந்து நாட்டைச் சங்கடத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்று எண்ணுகிறார்கள் போலும். அது மட்டுமில்லை, உள்ளவர் - வந்தேறி என்றில்லாமல் எல்லோருக்குமே மருத்துவம் முழுக்க இலவசமாக அளிக்கப் படும் அபூர்வமான நாடுகளில் அதுவும் ஒன்று. அதனால் கூட இருக்கலாம். எல்லோரும் இலவச சிகிச்சைக்கு வந்து விட்டால் என்ன செய்வது? இலவசத்துக்கு முந்திக் கொண்டு வருகிற கூட்டம்தான் உலகத்தில் நிறைய இருக்கிறதே. நாங்கள் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் கொண்டு சென்றிருந்தோம். அதற்கான பகுதியில் மூன்று வெள்ளைக்காரப் பெண்மணிகள் இருந்தார்கள். அனைவருக்கும் வயது நாற்பதைத் தாண்டியிருக்கும். இருவர் கொஞ்சம் கடு கடுவென்று இருந்தார்கள். மூன்றாமவர் கொஞ்சம் சிரிக்கத் தெரிந்திருந்தார். நல்ல வேளையாக நாங்கள் அவரிடம் போகும் மாதிரி அமைந்தது. போய் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியேறினோம். நாங்கள் வெளியேறும் வேளையில் மத்திய கிழக்கு அல்லது பாகிஸ்தானில் இருந்து வந்திருந்த பெரிய குடும்பம் ஒன்று சரியான சான்றிதழ்கள் இல்லாமல் மாட்டிக் கொண்டிருந்தது. நல்ல வேளை, அவர்களை நாடு திரும்பச் சொல்ல மாட்டார்கள். அங்கேயே காசு வாங்கிக் கொண்டு சோதனைகளைச் செய்து விடுவார்கள். பாவம், பயணக் களைப்பில் இருந்த குடும்பம் அதன் பிறகு எவ்வளவு நேரம் காக்க வேண்டியிருந்ததோ.

என் குடும்பமும் முழுக்க முழுக்கத் திராணி இழந்திருந்தது. விமானத்தில் நீண்ட பயணம் என்பது பேருந்தில் பயணிப்பதை விட வலி மிக்கது. நம்ம ஊரில் நல்ல பேருந்தில் கூடுதலாகக் கொஞ்சம் காசு கொடுத்துச் சென்றால் பாதிப் படுத்துக் கொண்டு செல்லலாம். விமானத்தில் அப்படியல்ல. சிறிதுதான் சாய்ந்து கொள்ள முடியும். அதிக பட்சம் ஐந்தாறு மணி நேரம். அதற்கு மேல் சராசரி உடல்நிலை கொண்டவர்கள் தாங்க மாட்டார்கள். இதையெல்லாம் அனுபவித்து வந்து விட்டா பாவிகளா, ஊருக்குள் வந்து அத்தனை அலப்பறையைக் கொடுக்கிறீர்கள்?! எல்லாம் முடித்து வெளியேறிய போது மணி ஏழரையைத் தாண்டியிருக்க வேண்டும்.

"இலண்டனா? கவலைப் பட வேண்டாம். இறங்கியதும் ஏகப் பட்ட இந்தியர்களைக் காணலாம். டாக்சி ஓட்டுனர்கள் நிறையப் பேர் நம்மவர்கள்தாம். இந்தியர் அல்லது பாகிஸ்தானியர் (அவர்களும் நம்மவர்தானே!). இந்தியில் கூடப் பேசலாம்!" என்று சில நண்பர்கள் சென்ற ஆண்டே சொல்லியிருந்தார்கள். நமக்கு இந்தி கொஞ்சம் வராது என்றாலும் இந்தியர் வந்தால் நல்லது என்று எண்ணிக் கொண்டே மெதுவாக வெளியேறினோம். நம்ம ஊரில் போல "டாக்சியா? டாக்சியா?" என்று சுற்றி வளைத்துத் தூக்கிச் செல்ல ஆள் வர மாட்டார்கள் என்ற நிம்மதியோடு வெளியேறும் வேளையில் ஒரு பெரியவர், "டாக்சியா?" என்று கேட்டார். டை எல்லாம் அணிந்திருந்தார். வழிய வந்து கேட்பவர்கள்தாம் ஏமாற்றுக்காரர்கள் என்கிற பயம் சிறிது வந்தது. ஆனால் அது அந்த நாட்டுக்குப் பொருந்தாது என்று எண்ணிக் கொண்டு அவருடனேயே போனோம். அவரே பெட்டிகளைத் தள்ளிச் சென்று உதவினார். ஆள் ஆப்பிரிக்காவுக்கும் தமிழ் நாட்டுக்கும் நடுவிலான முகம் கொண்டிருந்தார். ஒருவேளை, தமிழராகக் கூட இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டே பின் சென்றோம்.

எதிர் பார்த்தது போலக் குளிர் கொஞ்சம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. ஆனால் அதை விடப் பயங்கரமான குளிரை எல்லாம் அடுத்த சில நாட்களில் கண்ட பின்பு அது பெரிதாகத் தோன்றவில்லை. 12 டிகிரி பல நேரங்களில் பெங்களூரிலேயே இரவில் வரும். ஆனால், இலண்டன் குளிரில் இருந்த கூடுதல் அம்சம் - வாயைத் திறந்தாலே புகை வந்தது. யாரைப் பார்த்தாலும் புகைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றும். அந்த அளவுக்கு நிறையப் பேர் புகை பிடிக்கவும் செய்கிறார்கள் என்பது வேறு கதை. பெண்களும் பெரிதளவில் புகை பிடிக்கிறார்கள். மீதிப் பேர் குளிரில் ஊதி ஊதியே அந்த ஆசையைத் தணித்துக் கொள்வார்கள் போல.

வாகனங்கள் நிறுத்துமிடம், நம்ம பெங்களூர் - சென்னையில் இருக்கும் இடத்தை விட நெரிசல் மிக்கதாக, ஐந்து முறை முன்னும் பின்னும் போய் வந்து திருப்புகிற மாதிரியாக இருந்தது. அதுவே அந்த ஊரில் கூட்டத்துக்குப் பஞ்சம் இராது என்று உணர்த்தியது. அது எந்த அளவுக்கு உண்மை என்பதைப் பின்னர் பேசுவோம்.

ஏறி அமர்ந்து இடத்தைச் சொன்னதும் வண்டியில் இருந்த GPS-இல் தட்டினார். தொலைவைச் சொன்னது (ஒரு ஆச்சரியம் - அங்கும் அமெரிக்காவில் போலவே மைல் கணக்குதான் சொல்கிறார்கள். நம்மைப் போல கிலோ மீட்டர்க் கணக்கு சொல்வார்கள் என்று எதிர் பார்த்துப் போன எனக்கு இது ஒரு சிறிய ஏமாற்றம்!). ஊரில் இருந்தபோது பார்த்த தொலைவு குறைவாக இருந்தது. ஏமாற்றுகிறாரோ என்றொரு சின்ன சந்தேகம் வந்து சென்றது. வாய்ப்பில்லை என்று உள்மனது சொல்லித் தேற்றியது. பின்னர் பல நாள் போராட்டத்துக்குப் பின் நான்தான் தவறாகப் பார்த்திருந்தேன் என்று புரிந்து கொண்டேன். அவரும் ஒரு பெரிய சுற்றுச் சுற்றித்தான் கொண்டு வந்தார். ஆனால் நெரிசலான நேரத்தில் அதுதான் சரியான பாதை என்றும் புரிந்து கொண்டேன். நீண்ட தூரம் செல்ல வேண்டும். பேசிக் கொண்டே வந்தோம். நன்றாகப் பேசினார். தமிழர் இல்லை என்று புரிந்து கொண்டேன். "எந்த ஊர்?" என்று கேட்பது கூட அந்த நாட்டில் தவறாக எடுத்துக் கொள்ளப் படுமோ என்று எண்ணி அந்தக் கேள்வியை மட்டும் தவிர்த்து விட்டேன். முழுக்க முழுக்க GPS உதவியோடே ஓட்டினார். ஒவ்வொரு இடத்திலும் இடது - வலது என்று நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. அருமையான தொழில்நுட்பம். சிங்கப்பூர் சென்றிருந்த போதே அந்தத் தொழில் நுட்பத்தின் மீது காதலில் விழுந்து GPS உள்ள மொபைல் ஃபோன் விரைவில் வாங்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இன்றுவரை நடந்த பாடில்லை. சிங்கப்பூரில் ஃபோனில்தான் எல்லோரும் வைத்திருந்தார்கள். காரில் பார்த்த நினைவில்லை. நம்ம ஊரிலும் வந்திருக்கிறது. முழுமையாகச் சென்றடையவில்லை இன்னும்.

சுற்றுப் பாதை (RING ROAD) என்பதால் முக்கால்வாசித் தொலைவுக்கும் மேல் எந்தவிதமான போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் ஒரே சீராக இருந்தது பயணம். நம்மூர் போலவே, சிங்கப்பூர் போலவே, இங்கும் நிறைய சின்னச் சின்னக் கார்கள் இருக்கின்றன. சிறிது நேரத்திலேயே நான் வைத்திருக்கும் வேகன்-ஆர் போலவே ஒரு வேகன்-ஆர் வண்டி எங்களைக் கடந்து சென்றது. 'அப்பாடா, அப்படின்னா இந்த ஊர் நம்மை விட முற்றிலும் மாறுபட்ட ஊரல்ல!' என்றொரு முடிவு கட்டிக் கொண்டோம். மகள் விழித்திருந்தால் "அப்பா, வேகன்-ஆர்!" என்று கத்தியிருப்பாள். களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தாள். சாலை நன்றாக இருந்தது. ஆனால் பிரம்மிப்பூட்டவில்லை. அதெல்லாம் அந்தக் காலத்தில் இருந்திருக்கும். இப்போது கிட்டத்தட்ட அது போன்ற சாலைகள் நம்மூரிலும் நிறைய வந்து விட்டன என்பதால் பெரிதாக இல்லை. எதிர் பார்த்தது போலவே ஓட்டுபவர்களிடம் ஒழுங்கு இருந்தது. அது மட்டும் இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆனாலும் நம்ம ஊரில் வருமா என்று தெரியவில்லை.

வழியில் பார்த்த பல ஊர்ப்பெயர்கள் நம்ம ஊரில் கேள்விப் பட்டது போல இருந்தன. ஏதோ பிராட்வே, ரிச்மாண்ட், ரெட் ஹில் என்று சென்னையிலும் பெங்களூரிலும் கேள்விப்பட்ட பெயர்கள். நாங்கள் அங்கிருந்த நான்கு வார காலமும் இந்த ஆண்டான்-அடிமை உறவை நினைவு படுத்தும் மாதிரியான நிறையப் பெயர்களைக் காண முடிந்தது. செயின்ட் மேரிஸ், செயின்ட் ஜேம்ஸ், செயின்ட் ஜோசப் என்கிற மாதிரியான பெயர்கள் நம்ம ஊரில் இருப்பது போலவே உணர்வை ஏற்படுத்தின. அதைத் திறந்து வைத்த அதே ஆட்களே நம்ம ஊரிலும் அப்பெயர் கொண்ட நிறுவனங்களைத் திறந்து வைத்திருந்தால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. எல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தவைதானே.

நீண்ட பயணத்துக்குப் பின் நம்பிக்கைக் கீற்று தட்டுப் பட்டது. கொஞ்சம் வீடுகள் தென் பட்டன. நாம் படங்களில் பார்த்துப் பழகிய பிரிட்டிஷ் வீடுகள். பார்ப்பதற்கு அழகோ அழகு. எல்லா வீடுகளும் நம் அந்தக் காலக் (அதாவது, வெள்ளைக்காரன் காலக்...) கட்டிடங்களில் போல முக்கோண முகடு கொண்டிருக்கின்றன. அதை நாம் மறந்து விட்டோம். அவர்கள் விடுவதாக இல்லை. அதுதானே அவர்களுடைய கட்டடக் கலையின் தனிச்சிறப்பு. எப்படி விடுவார்கள்?! அதுவே பேரழகு. அதற்கு அழகு சேர்க்கிற இன்னொன்று இருக்கிறது. அது, ஒரு பகுதியில் ஐம்பது வீடுகள் இருந்தால் ஐம்பதும் ஒரே மாதிரியான வீடாக இருக்கும். அது பெப்பேரழகு. இது எனக்கு ஒரு முக்கியமான கருத்தை உணர்த்துவதாக இருந்தது. அதாகப் பட்டது - ஒன்று, அவர்களுக்குத் தனிப்பட்ட விருப்பை விட குழுவாகச் சேர்ந்து ஒரே மாதிரி இருப்பது பிடித்திருக்கிறது என்பது, அல்லது, எல்லோருமே ஒரே மாதிரியான சுவை கொண்டிருக்கிறார்கள் என்பது. இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். தனக்கென்று சுவையற்றவர்கள் என்று சுருக்கமாகவும் சொல்லலாம். ஆனால், சேர்ந்திருக்கும் போது இருக்கும் அழகைப் பார்த்து விட்டு அப்படிச் சொல்ல மனம் வரவில்லை. அங்குள்ள பல கட்டடங்கள் பல நேரங்களில் எனக்குப் பெங்களூரையும் இங்குள்ள ஆங்கிலோ-இந்தியப் பகுதிகளையும் நினைவு படுத்தின. முக்கியமாக எம்.ஜி.ரோடு அடிக்கடி நினைவு படுத்தப் பட்டது.

கொடுமையைப் பாருங்கள் - இரண்டாம் பாகம் முடியப் போகிறது; இன்னும் வீடு போய்ச் சேரவேயில்லை. பார்க்கலாம். இப்பவே கண்ணைக் கட்டுதா? பொறுத்திருங்கள். புகுந்து விடுவோம்.

-தொடரும்...

கருத்துகள்

 1. ரசித்தேன்.

  இந்தியாவிலும் GPS போன்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. நானும் (!) ஒன்று வைத்திருக்கிறேன்.

  சிங்கப்பூரில் இதற்கென்று தனியாக ஒரு கருவி காரிலேயே மாட்டக்கூடிய வகையில் இருக்கிறது. என் நண்பரின் காரில் பார்த்தேன்.

  இவை மிகவும் உபயோகமானவை.

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஐயா.

  ஆம். என் நண்பர்கள் கூட சிலர் வைத்திருக்கிறார்கள். கூடிய விரைவில் ஒன்று வாங்கப் போகிறேன். :)

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு.
  அருமையான விவரிப்பு.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. பாரதி,
  //ஒரு பகுதியில் ஐம்பது வீடுகள் இருந்தால் ஐம்பதும் ஒரே மாதிரியான வீடாக இருக்கும்//

  இதற்கு வேறு காரணமும் உண்டு. ஒரு பகுதியில் ஒரு நிறுவனம் கட்டும் எல்லா வீடுகளும் (ஒரே நேரத்தில் கட்டப்படுவதால்) ஒரு மாதிரியே தோற்றமளிக்கும். இப்படி கட்டுவதால் செலவு குறைவு. ஒரு வீட்டுக்கு மட்டும் வேறு தோற்றம் கொடுக்க மிகுந்த செலவு பிடிக்கும். "சுயத்தை" (individuality) பெரிதும் பேணும் மேற்குலகில் பொது தன்மையை காண்பதரிது. :)
  ~நவன்

  பதிலளிநீக்கு
 5. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நவன் அவர்களே. உண்மைதான். நம்ம ஊர்ப்பக்கம் கூட சில பெரிய கொத்தனார்கள் இது போன்று எடுத்துச் செய்கிறார்கள் இப்போது. ஆனாலும் ஊர் முழுக்க அப்படியே இருப்பது அழகுதான்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்