கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 9/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

அடுத்து என்ன என்று பார்த்தால் உடனடியாக நினைவுக்கு வந்தது - இலண்டன் ப்ரிட்ஜ். நியூ யார்க் என்றால் சுதந்திர தேவி சிலையையும் பாரிஸ் என்றாலே ஈபிள் டவரையும் சிங்கப்பூர் என்றாலே சிங்கத்தின் வாயிலிருந்து அடிக்கும் தண்ணீரையும் டெல்லி என்றாலே இந்தியா கேட்டையும் சென்னை என்றாலே சென்ட்ரல் ஸ்டேசனையும் காட்டுவது போல இலண்டன் என்றாலே காட்டப்படும் முதல் படம் இதுதான். இலண்டன் சென்ற எல்லோருமே புகைப்படம் பிடித்து முகநூலில் (FACEBOOK) போட்டுப் படம் காட்டுவதும் இதை வைத்துத்தான். சுதந்திர தேவி சிலை மற்றும் ஈபிள் டவரைப் போலவே பிரம்மாண்டமாகத் தெரிவது. சுதந்திர தேவி சிலை படங்களில் வருவதை விட நேரில் கூடுதல் பிரம்மாண்டமாக இருப்பதாகச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தியா கேட் படத்தில் பார்க்கும் போது ஒரு மாதிரியாக இருக்கும். அதற்கு உள்ளாக சாலை செல்வது போலத் தெரியும். ஆனால் நேரில் போய்ப் பார்த்தால் அப்படி இராது. கேட்டைச் சுற்றி வளையமாகச் செடி கொடிகளும் அதற்குள் மக்களோ வாகனங்களோ செல்ல முடியாத படியும் அமைக்கப் பட்டிருக்கும். அதைச் சுற்றி வட்டமடித்துத்தான் சாலை நீளும். இது போல படங்களில் பார்த்து நாம் கற்பனை செய்து வைக்கும் பல விஷயங்கள் நேரில் பார்க்கும் போது சற்றோ முற்றிலுமோ மாறுபட்டிருக்கும். இலண்டன் ப்ரிட்ஜிலும் அது போன்ற அனுபவங்கள் இருந்தன.

இலண்டன் கிளம்புவதற்கு முன்பே கண்டிப்பாகப் பார்த்து விட வேண்டும் என்று தீர்க்கமான திட்டத்தோடு வந்த ஒரே இடம் இதுதான். அதற்கு முக்கியமான காரணம் - மகள். "எங்கு சென்றாலும் ஏற்றுக் கொள்வேன்; ஆனால், இலண்டன் மட்டும் வரவே மாட்டேன்!" என்று என் நாலரை வயது மகள் அடம் பிடித்தது பற்றி முதல் பாகத்தில் எழுதியிருந்தேனே. அது ஏன் என்பதைப் பார்த்து விடுவோம். நம்ம காலத்தில் "நிலா நிலா ஓடி வா!" மாதிரி இந்தக் காலத்தில் RHYMES என்ற பெயரில் அவர்களுடைய பள்ளிகளில் பல பாடல்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதில் ஒன்று, "LONDON BRIDGE IS FALLING DOWN... LONDON BRIDGE IS FALLING DOWN..." என்ற ஒரு பாடாவதிப் பாடல். அதாவது, "இலண்டன் பாலம் உடைந்து விழுகிறது... இலண்டன் பாலம் உடைந்து விழுகிறது..." என்று பொருள் படும் பாடல். மாக்கு மண்டையர்கள் இது போல குழந்தைகளைப் பயமுறுத்துகிற மாதிரியேதான் நிறையப் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். இந்தப் பாடலைக் கேட்ட நாள் முதல் இலண்டன் உலகத்தின் பிடிக்காத இடங்களில் ஒன்றாகப் போய்விட்டது அவளுக்கு. அதனாலேயே அவளுக்கு அதைக் காட்டி விட வேண்டும் என்பது தீராத ஆசையாகி விட்டது எனக்கு.

மற்ற எல்லா இடங்களையும் விட இலண்டன் ப்ரிட்ஜ் அவளுக்குத் தெரிந்த இடம் என்கிற காரணம் ஒன்று. ஊர் திரும்பிய பின் பேசிப் பெருமைப் பட்டுக் கொள்ள வசதியாக, அவளுடைய நண்பர்களுக்கும் தெரிந்த இடமாக இருக்கும் என்கிற இன்னொரு காரணமும் இருந்தது. ஊர் திரும்பிக் கதை விடுவதிலும் பிறருக்கு ஏக்கம் வருகிற மாதிரிப் பீற்றித் திரிவதிலும் நமக்குப் பெரிதும் ஆர்வமில்லை. இருந்தாலும் அந்த நேரத்தில் ஒரு சராசரித் தகப்பனாக யோசிப்பதைத் தவிர்க்கவும் முடியவில்லை. இன்னொன்று - 'அப்படியெல்லாம் இலண்டன் ப்ரிட்ஜ் சடசடவென்று விழாது. அந்தப் பாடல் பாடிய போதெல்லாம் அப்படி விழுந்திருந்தால் எத்தனை முறை விழுந்திருக்க வேண்டும்!' என்று அவளுக்குப் புரிய வைத்து விட வேண்டும் என்கிற ஆசை.

இதில் இன்னொரு கொடுமை வேறு. அது இலண்டன் போய் இறங்கிய பின்தான் தெரிந்தது. நம்ம ஊரில் இலண்டன் ப்ரிட்ஜ் இலண்டன் ப்ரிட்ஜ் என்று காட்டிக் கொண்டிருக்கிறார்களே, அது இலண்டன் ப்ரிட்ஜே அல்ல. அதன் பெயர் டவர் ப்ரிட்ஜ். அதற்குக் கொஞ்ச தூரம் தள்ளி இன்னொரு சிறிய கறுப்புப் பாலம் இருக்கிறது. அதுதான் இலண்டன் ப்ரிட்ஜாம். இதுவும் ஒரு வகையில் மகளைச் சரிக் கட்ட உதவியது. "விழுந்தாலும் இலண்டன் ப்ரிட்ஜ்தான் விழும். டவர் ப்ரிட்ஜ் விழாது. நாம்தான் இலண்டன் ப்ரிட்ஜ் பார்க்கப் போக வில்லையே. டவர் ப்ரிட்ஜ்தானே பார்க்கப் போகிறோம்!" என்று ஒரு கதையைக் கட்டிக் கிளப்பி அழைத்துச் சென்றோம்.

மகளும் நானும்!
கிராய்டனில் இருந்து இலண்டன் ப்ரிட்ஜுக்கே இரயில் இருக்கிறது. விக்டோரியா போல, வெளியூரில்-புறநகரில் இருந்து வருவோருக்கு இலண்டன் ப்ரிட்ஜும் ஒரு முக்கியமான இரயில்வே சந்திப்பு. திட்டமிட்ட படியே இலண்டன் ப்ரிட்ஜ் இரயில் நிலையத்தில் போய் இறங்கினோம். இரயிலில் இருந்து இறங்கும் முன்பே பாலம் தெரிந்தது. "எங்கப்பா? எங்கப்பா?" என்று கண்ணில் பட்டு விடக் கூடாது என்கிற பீதியோடே மகள் திரும்பத் திரும்பக் கேட்டாள். "பொறு பொறு; வந்து விடும்!" என்று ஆசுவாசப் படுத்தி அழைத்துச் சென்றோம். இலண்டன் ப்ரிட்ஜுக்கு அருகிலேயே சில பிரம்மாண்டமான கட்டடங்கள் இருக்கின்றன. அனைத்தும் அலுவலகக் கட்டடங்கள். அவற்றின் ஊடாக நடந்து சென்றோம். குளிர் கொன்று தின்றது. முந்தைய நாளே நண்பர்கள் சொன்னார்கள் - "குளிர் கூடிக் கொண்டிருக்கிற நேரம். அதுவும் ஆற்றோரம் அதிகமாக இருக்கும். அடுத்த வாரம் அல்லது அதற்கடுத்த வாரம் திட்டமிடு!" என்று. நாம்தான் வாழ்க்கையின் நிலைப்புத் தன்மையில் நம்பிக்கை அற்றவர்கள் ஆயிற்றே. ஒருவேளை ஏதோ காரணத்தால் உடனடியாக ஊர் திரும்ப நேர்ந்து விட்டால்... அப்புறம் இலண்டன் வந்ததற்கு அத்தாட்சியே இல்லாமல் போய் விட்டால்... சாகிற வரை பாவி பட்டம் சுமக்க வேண்டியதாகி விடுமே!

இதுவரை பார்த்த எல்லா பிரம்மாண்டங்களையும் போலவே இலண்டன் ப்ரிட்ஜும் படங்களில் பார்த்த அளவுக்கு பிரம்மாண்டமாக நேரில் தெரியவில்லை. அதே கதைதான் - கிராமத்தில் இருந்து சென்னைக்கும் பெங்களூருக்கும் போகும் முன் போயிருந்தால் இதெல்லாம் பெரிதாகத் தெரிந்திருக்கலாம். வீட்டைச் சுற்றியே பிரம்மாண்டங்கள் வரத் தொடங்கி விட்ட காலமாதலால் வெளிநாடுகள் செல்லும் போது நம் எதிர்பார்ப்புகளும் மிகப் பெரிதாக இருக்கின்றன. அதுதான் முக்கியக் காரணம் என நினைக்கிறேன்.

சிறு வயதில் இருந்தே உலக நதிகளில் அதிகம் கேள்விப் பட்ட நதிகளுள் ஒன்று தேம்ஸ் நதி. நைல் நதி போன்று நதியின் தன்மைக்காகப் பெயர் பெற்ற நதிகள் ஒருபுறம் என்றால், நதியின் கரைகளில் வளர்ந்த நாகரிகங்களின் அடிப்படையில்... அதாவது அந்நதிக் கரைகளில் உருவான நகரங்களை வைத்துப் புகழ் பெற்ற நதிகள் ஒருபுறம். வைகை, தாமிரபரணி போன்றவை எல்லாம் அம்மாதிரியானவை. அது போன்றதே தேம்ஸ். ஒருவன் ஓவராக ஆங்கிலத்தில் சீன் போட்டாலே "இவர் பெரிய இவர். தேம்ஸ் நதியில் *இது* கழுவி வளர்ந்தவர் போலவே பேசுவார்!" என்றுதான் கிண்டல் பண்ணுவோம். வெள்ளைக்காரர்கள் இங்கு இருந்ததாலோ என்னவோ அந்நதி பற்றிய பேச்சுகளும் எழுத்துகளும் நம்மிடையில் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்திருக்கிறது. இலண்டன் ப்ரிட்ஜுக்கருகில் நடந்ததாக யார் எழுதினாலும் அதைப் படித்த போதெல்லாம் அந்த இடம் காவிரிக்குக் குறுக்கே திருச்சியில் இருக்கும் பாலம் போல, வைகைக்குக் குறுக்கே மதுரையில் இருக்கும் பாலம் போல ஏகப் பட்ட ஆள் நடமாட்டத்தோடு இருக்கும் என்றே கற்பனை செய்து கொண்டிருந்தேன். அங்கே போன போது அப்படியான அனுபவம் இருக்க வில்லை. பாலத்தின் ஒருபுறத்தில் (அதுதானே அழகழகாகப் புகைப் படங்கள் எடுக்க வசதியாக இருக்கும்!) நின்றுதான் நிறையப் பேர் பார்க்கிறார்கள். பாலத்தின் மேலேயே நடந்து தேம்ஸ் நதியின் அழகை ரசிப்பவர்களை அதிகம் பார்க்க முடியவில்லை. அதை மேலே ஏறிப் போயிருந்தால்தான் பார்த்திருக்க முடியும்.

நம்ம கவிஞர்கள் கூட இலண்டன் போய் வந்தால் தேம்ஸ் நதி பற்றி ஒரு வரியாவது எழுதாமல் விட மாட்டார்கள். காதல்க் கவிதை என்ற அகத்தியனின் திரைப்படத்தில் கூட இலண்டன் பற்றி நிறையப் பேசப்பட்டிருக்கும். அப்படத்தில் இலண்டனில் தமிழ்க் கவிதை பற்றியெல்லாம் பேசப் படுவது பார்த்துப் புல்லரித்திருக்கிறேன். அதுவும் தேம்ஸ் நதி பற்றிய ஆர்வத்தை அதிகப் படுத்திய ஒன்று. மற்றபடி, நதி அப்படியொன்றும் அகலமானதாக இல்லை. கரை என்று ஒன்றைக் காணவே முடியவில்லை. முழுக்க முழுக்கச் சுவர்கள் கட்டி நதியைச் செயற்கைப் படுத்தி விட்டார்கள். அழகழகாக ஓடங்கள் விட்டிருக்கிறார்கள். ஆழமும் அதிகம் இருக்கும் போலத் தெரிகிறது. ஆண்டின் பன்னிரு மாதங்களும் நீர் வரத்தும் இருந்து கொண்டே இருக்கும் போலத் தெரிகிறது. இலண்டன் பிரிட்ஜ் மட்டுமல்ல, தேம்ஸ் நதியின் குறுக்கே கட்டப் பட்டிருக்கும் இலண்டனின் அனைத்துப் பாலங்களுமே மிக அழகாக இருக்கின்றன. சிறிய சிறிய பாலங்களும் கூட சிறப்பாகப் பராமரிக்கப் படுகின்றன. இரவில் கிட்டத்தட்ட எல்லாப் பாலங்களுமே விளக்குகளில் மிளிர்கின்றன. நம்ம ஊர்ப் பாலங்களை விட இலண்டன் ப்ரிட்ஜ் கண்டிப்பாகப் பிரம்மாண்டம்தான். ஆனால் நாம் எதிர் பார்க்கிற பிரம்மாண்டம் - படங்களில் பார்க்கிற பிரம்மாண்டம் அங்கு இருக்கிறதா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

இலண்டன் ப்ரிட்ஜ் போனதற்கு அதைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் எவ்வளவு இருந்ததோ அவ்வளவு ஆர்வம் அதன் முன் நின்று புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் இருந்தது. அதைத்தானே முகநூலில் போட்டுப் பந்தா காட்ட வேண்டும். அதுதானே இலண்டன் வந்ததற்கான அடையாளம். பேருக்கு ஓரிரு படங்களை எடுத்துக் கொண்டு விடலாம் என்று பார்த்தால் வீட்டுக்காரி விட மாட்டேன் என்று முறைக்கிறாள். அதில் இன்னொரு பிரச்சனை. எங்கு சென்றாலும் மொத்தக் குடும்பமும் ஒன்றாக நின்று ஒரு படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு நியாயமான எதிர்பார்ப்பு அவளுக்கு. அது கூட முடியாது என்றால், அப்புறம் எதற்குக் குடும்பம்?! சரியான கேள்விதானே?! ஆனால், எனக்கென்ன பயம் என்றால், 'எங்கள் குடும்பத்தைப் படமெடுத்துக் கொடுப்பீர்களா?' என்று கேட்கப் போய் அது எங்கே ஆங்கிலேய கவுரவத்தை அசிங்கப் படுத்தி விடுமோ? அவர்களுடைய கலாச்சாரத்தில் அதெல்லாம் ஏற்றுக் கொள்ளப் படுமோ? பெரும் குற்றமாகி விடுமோ என்கிற பயம். ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டாலும் அந்தத் தாங்க முடியாத குளிரிலும் ஏகப்பட்ட படங்களை எடுத்துக் கொண்டு அடுத்த இலக்கை நோக்கிக் கிளம்பினோம்.

போக விட்டானா அவன்?! இல்லையே. யாரவன்?

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 4/6