குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி (3/3)

மலர்ச்சி...

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய இந்த நூலிலேயே நா.பா. அரசியல் பற்றிக் கேவலமாக எழுதியிருப்பதையும் காறித் துப்பியிருப்பதையும் படிக்கும் போது பல பழைய தலைவர்களையும் கட்சிகளையும் பற்றிக் கேள்விப் பட்டதெல்லாம் உண்மைதான் போலும் என்று எண்ண நேர்கிறது. நாம் நினைப்பது போல திடீரெனச் சேற்றில் குதித்த இனமல்ல நம்முடையது. மெல்லத்தான் தமிழ் மனச்சாட்சி செத்திருக்கிறது. விடுதலை பெற்றேடுத்தோர் வாழ்ந்து முடிந்த பின்பு வீழ்ந்ததல்ல நம் அரசியல்; அவர்கள் வாழும் போதே வீழ்ந்திருக்கிறது அல்லது அவர்களில் சிலரே கூட வீழ்த்தியிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இன்றைக்கு இருப்பவர்களுக்குச் சற்றும் சளைக்காதவராக இருக்கிறார் பர்மாக்காரர். வெளியில் கும்பிடு போட்டு விட்டுப் பின்னணியில் பேய் வேலைகள் பார்ப்பது அப்போதே அரசியலின் அடிப்படைத் தேவையாக இருந்திருக்கிறது.

அதே கால கட்டத்தில்தான் காமராஜர், கக்கன் போன்ற மாமனிதர்களும் அதே மதுரை வட்டாரத்தில் அரசியல் செய்திருக்கிறார்கள். ஒருவேளை, அந்தக் காலம், கதையில் வருவது போல, நன்மைக்கும் தீமைக்குமான போர்க் காலமாக இருந்து, அதற்குப் பிந்தைய காலம், முழுமையாகத் தீமைக்கும் தீமைக்குமான போர்க்காலமாக மாறியிருக்கலாம். நம் அடுத்த சந்ததி இப்படித்தான் நம் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் என்றெண்ணுகிறேன்.

கதை முழுக்க பர்மாக்காரர், புது மண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் என்று மொள்ளமாரிகளுக்கும் 'ர்' போட்டு மரியாதையோடு பேசியிருப்பது அரவிந்தனின் கோளாறா நா.பா.வின் கோளாறா என்று தெரியவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிற பெரும் பெரும் நடிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் கூட மரியாதை இல்லாமல் 'அவன்', 'இவன்' என்று பேசும் நாட்டில் இப்படிப் பட்ட திருடர்களுக்கு எப்படி மரியாதை கொடுத்துப் பேச வேண்டும் என்கிற கண்ணியம் காக்கப் பட்டு வருகிறது என்பது எனக்குப் புரிபடாத ஒரு லாஜிக். தமிழ் கூறும் நல்லுலகம் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. ஒருவேளை, நடிகரோ விளையாட்டு வீரரோ வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப மாட்டார் என்கிற தைரியமாக இருக்குமோ! :)

பர்மாக்காரர் வயதான காலத்தில் அங்கிருந்து அழகி ஒருத்தியை அள்ளிக் (சரியாகக் கவனிக்கவும்... 'தள்ளி' அல்ல... 'அள்ளி'!) கொண்டு வந்திருப்பதையும் அவர்கள் பெற்ற பிள்ளை அதனினும் அழகாக இருப்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார் நா.பா. பர்மாவில் இருந்து கொள்ளையடித்துக் கொண்டு வந்த தன் மனைவியைப் பற்றிப் பேசும் போது பர்மாக்காரர் காட்டும் காதலுணர்ச்சி அருமை. வயதான காலத்தில் இளம்பெண் ஒருத்தியை இழுத்துக் கொண்டு வர வேண்டும் என்றால், அதெல்லாம் இல்லாமலா முடியும்? இப்படியொரு மனிதரை நேரில் பார்க்காமல் அவ்வளவு சிறப்பாகச் சித்தரித்திருக்க முடியாது என்பது என் எண்ணம். ஆக, அந்தக் காலத்திலேயே அரசியலில் இருக்கும் கிழவர்களுக்கு இந்தப் பலவீனமும் இருந்திருக்கிறது. :)

புதினத்தில் எனக்கென்று தனிப்பட்ட முறையில் பல சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. பர்மாக்காரர் கிழக்கே இராமநாதபுரம் பகுதிக்காரர். அரவிந்தனும் கூட அந்தப் பகுதிக்காரனே. இராமநாதபுரம் பகுதிக்கு மிக நெருங்கியவன் என்ற முறையில் இது போன்ற பல விஷயங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. அந்தக் காலத்தில் கீழ்த்திசையில் கடல் கடந்து பயணித்ததில் கடலோர மாவட்டத்தினரே அதிகம். அப்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தினரே பர்மாப் பக்கம் நிறையப் போனது. சிங்கப்பூரில் கூடப் பழைய இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தினரே அதிகம் இருக்கிறார்கள். பர்மாவில் இருந்து தப்பி வந்த கூட்டத்தில் எனக்கு வேண்டியவர்களும் உண்டு. அவர்கள் மதுரையில் நிறைந்திருப்பதும் நிறையப் பேருக்குத் தெரியாத ஒன்று. இவையெல்லாம் வரலாற்று உண்மைகள். அவற்றைப் பதிவு செய்த விதம் பாராட்டத் தக்கது. இலக்கியத்தின் மிகப் பெரும் பயன்பாடே அதுதானே. நாம் உலகை வென்றதையும் சொல்ல வேண்டும். பஞ்சம் பிழைக்கப் போனதையும் சொல்ல வேண்டும். அதுதான் நேர்மையான வரலாறு.

இதில் இன்னொரு உண்மையும் சொல்லாமல் சொல்லப் பட்டிருக்கிறது. பர்மாக்காரரும் அரவிந்தனும் கிழக்கே இராமநாதபுரம் சீமையில் இருந்து வந்தவர்கள். அரவிந்தனின் முதலாளி அச்சக உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் மேற்கே சோழவந்தான் பக்கம் இருந்து வந்தவர். மதுரை என்பதே இப்படிக் கிழக்கிலும் மேற்கிலும் இருந்து வந்து குடியேறியவர்களால் பெரிதான ஊர். மீனாட்சி அம்மன் கோயிலும் அதைச் சுற்றிய நான்கைந்து தெருக்களும் அக்கால வரையறைகளின் படி வேண்டுமானால் உலக மகா நகரமாக இருக்கலாம். இன்று திருமங்கலம் முதல் வாடிப்பட்டி வரை பரந்து விரிந்து கிடக்கும் மதுரை இப்படி வந்தேறியவர்களால் வளர்ச்சியுற்றதே. மதுரைக்காரர்களிடம் கேட்டால் இதையெல்லாம் கதை கதையாகச் சொல்வார்கள். இதற்கெல்லாம் மேல், உருது பேசும் முகமதியர்கள், தெலுங்கு பேசும் நாயக்கர்கள், சௌராஷ்டிரம் பேசும் சௌராஷ்டிரர்கள் என்று எல்லோரும் கலந்து உருக்கொண்ட நகரம்தான் சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த மதுரை. அவர்களை மறுத்து maமதுரை முழுமையாகி விட முடியாது.

வட மதுரை மற்றும் தென் மதுரை பற்றிப் பேசியிருக்கும் வரிகள் மிகவும் நன்றாக இருந்தன. ஒவ்வொரு ஊரிலும் இப்படி இரு பகுதிகள் இருக்கின்றன. பெரும்பாலும் எல்லா ஊரிலும் வட பகுதி வளர்ச்சியுற்றதாகவும் தென் பகுதி தேய்ச்சியுற்றதாகவும் இருக்கும் (அண்ணாவின் பேச்சில் ஈர்க்கப் பட்டு வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்று இன்றும் நம்பிக் கொண்டிருப்பவன்!). அதன்படியே மதுரையிலும் பாலத்துக்கு இந்தப் பக்கம் வறியோரின் பக்கமாகவும் அந்தப் பக்கம் வலியோரின் பக்கமாகவும் இருந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது என்றெண்ணுகிறேன். மாட்டுத்தாவணி வேறு வந்து இந்த ஏற்றத்தாழ்வை இன்னும் அதிகமாக்கி விட்டது. நதிகளைச் சுற்றி வளர்ந்த நகரங்களில் இந்த ஏற்றத் தாழ்வைக் காப்பது எளிது. இக்கரை-அக்கரை என்பதை விடப் பெரிய வேறுபாடு வேண்டுமா என்ன, நம்ம ஆட்களைப் பிரிக்க?! திருநெல்வேலிக்கும் பாளையங்கோட்டைக்கும் இடையிலான இடைவெளியும் அப்படியானதே. அங்கே மேற்கு கீழே; கிழக்கு மேலே! அப்படியானால், சென்னையில் எப்படி என்று யோசிக்கிறீர்களா?அது கொஞ்சம் தலை கீழ். வடக்குதான் வயிற்றுப் போக்கு ஆனது போல் இருக்கிறது; தெற்கு தெம்பாக இருக்கிறது.

மங்களேசுவரி அம்மாள் மற்றும் பர்மாக்காரர் மூலம் மட்டுமில்லை. இன்னோர் இடத்திலும் மற்ற நாடுகளுடனான தமிழகத்தின் உறவு பற்றி எழுதியிருக்கிறார் ஆசிரியர். பூரணி யாழ்ப்பாணம் மற்றும் மலேயா போன்ற இடங்களுக்கும் சொற்பொழிவு ஆற்றப் போவதாகச் சொல்லியிருப்பது அந்தக் காலத்திலேயே இந்தப் பரிமாற்றங்கள் நடந்திருப்பது பற்றி எடுத்துரைக்கிறது. இதெல்லாம் அதற்கு முன்பிருந்தே இருந்து வருவது நாம் கேள்விப் பட்ட ஒன்றுதான் என்றாலும் இது போலக் கால வாரியாகப் படித்துக் கொண்டே வரும்போது இது போன்ற உண்மைகள் இன்னும் நன்றாகப் புரிபடுகின்றன. இதில் குறிப்பாக யாழ்ப்பாணப் பயணம் மிகச் சிறப்பாக விளக்கப் பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தவர்கள் மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும் கொண்டவர்கள் என்று சொல்லியிருக்கிறார். நாடு என்பதை இலங்கை என்று பார்த்தால் இந்தக் கருத்து சரியாகப் புரிபடாது. ஈழம் என்று மாற்றிப் பாருங்கள். அது மட்டுமில்லை. அவர்கள் இலக்கியத்திலும் கலையிலும் தமிழகத்தில் இருந்து அவற்றைக் கொண்டு வருவோரையும் பெரிதும் மதிப்பதையும் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போலன்றி நல்ல மனிதத்தன்மையும் பண்பாடும் கொண்டவர்களாகவும் அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை இந்நூல் எடுத்துச் சொல்கிறது.

தொலைக்காட்சித் தொடரில் வருவது போல அரவிந்தன் அடி வாங்கிய காட்சி புதினத்தில் வரவில்லை. தர்ம அடி வாங்கப் போகும் சூழல் ஒன்று உருவாகி அதிலிருந்து தப்பும் காட்சி ஒன்று வருகிறது. அதைத்தான் மசாலாவின் முக்கியத்துவம் கருதி தொலைக்காட்சித் தொடரில் அடி வாங்குவதாகவே காட்டியிருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே மேலும் படித்த போது தேர்தல் பணிகளின் போது அரவிந்தனைக் கடத்திச் சென்று விடுகிற காட்சி ஒன்றும் வருகிறது. அதில்தான் அடி பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். தேர்தலில் நிற்கப் போகிறேன் என்று யார் கிளம்பினாலும் அவர்களை சாம தான பேத தண்டங்கள் அனைத்தையும் பயன்படுத்தி வழிக்குக் கொண்டு வர முயற்சிக்கும் வேலைகள் அப்போதே நடந்திருக்கின்றன. பூரணி அரசியற் சாக்கடைக்கு வருவதை முதலில் சற்றும் விரும்பாத அரவிந்தன் பின்னர் அந்தச் சுழலுக்குள் இழுத்து வரப்படுவது கதை நன்றாக நகர வழி செய்கிறது. அதெல்லாம் அதன் பின்பு நல்லபடி முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி ஆக வில்லையே!

தேர்தல் வருகிறது. எதிரணியின் கேவலமான உத்திகள் அவர்களைக் கவிழ்த்தி, நேர்மையையும் நியாயத்தையும் பூரணியையும் வெல்ல வைக்கின்றன. இதற்கிடையில் சுதந்திரம் கிடைத்த நாளில் கல்கத்தா நகர வீதிகளில் ஏதோ செய்து கொண்டிருந்த காந்தி போல, தேர்தல் முடிவுகள் வரும் முன் விஷக் காய்ச்சல் வந்து வாட்டிக் கொண்டிருக்கிற ஒரு கிராமத்துக்கு விரைகிறான் அரவிந்தன். வெற்றிச் செய்தி வருகிறது. ஊரே மாலையோடு திரண்டு வருகிறது - பூரணியை வாழ்த்த! நடப்பதென்ன? அந்த மாலைகள் அனைத்தும் விஷக் காய்ச்சலால் உயிரிழக்கும் அரவிந்தனுக்கு வந்து விழுகின்றன. இதில் விமர்சனத்துக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. விமர்சனம் என்றால் நா.பா.வின் எழுத்தில் இல்லை, புதினத்தையே ஒரு வாழ்க்கையாகப் பார்த்தால் வருகிற விமர்சனங்கள்.

ஒன்று, இந்த அளவுக்குத் தன்னை முற்றிலும் தியாகம் செய்து மக்களுக்காக அழித்துக் கொள்கிற ஆட்கள் என்பது உண்மைக்குப் புறம்பானதாக இருக்கிறது. ஒருவேளை அறுபது ஆண்டுகள் கழித்து இன்று உட்கார்ந்து பேசுகையில் அப்படி இருக்கிறதோ என்னவோ. அன்றைய காலத்தில் அப்படி நிறையப் பேர் இருந்திருக்கக் கூடும். அல்லது கொஞ்சமாவது சிலர் இருந்திருக்கக் கூடும். அல்லது இலக்கியம் என்பதே பிரச்சார நெடி அதிகம் கொண்டதாக இருந்த காலமாக இருந்திருக்கலாம் அது. தமிழ்த் திருநாடு முழுக்கவும் ஏகப் பட்ட அரவிந்தன்களும் பூரணிகளும் பிறக்க வேண்டும் என்று ஆசிரியரே கூறியிருக்கிறார். அந்தப் பெயர்களில் நிறையப் பேர் பிறந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். அதே பண்புகளோடு எவ்வளவு பேர் பிறந்தார்கள் என்று தெரியவில்லை. குறிப்பாக பிழைக்கத் தெரியாமல் உயிரை அழித்துக் கொண்ட அரவிந்தன் போல் தன் பிள்ளை வரவேண்டும் என்று எத்தனை பெற்றோர் எண்ணுவார்கள்! இராசியில்லாத பெயர் என்று கூட நிறையப் பேர் அப்பெயரைத் தவிர்த்திருக்கக் கூடும். மற்றபடி, ஒரு படைப்பாளன் என்ற முறையில் நா.பா.வின் நல்லெண்ணம் பாராட்டப் பட வேண்டியதே. இன்றைக்கும் நல்லவனாக இருக்கிற நிறையப்பேர் சினிமாப் பார்த்துத்தான் அப்படி இருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் நிதர்சனத்துக்கு நெருங்கி வருகிற மாதிரிச் செய்கிற பிரச்சாரம்தான் எடுபடும். முழுக்க முழுக்க நல்லவன் மாதிரியே காட்டுகிற உத்திகள் எல்லாம் இப்போது சுத்தமாக எடுபடாது.

இரண்டு, நல்லவர்களை விட வல்லவர்களே நிறையச் சாதிக்க முடியும். அன்றைய காலம் அப்படியல்லவா அல்லது இன்றைய காலம்தான் அப்படியா அல்லது எல்லாக் காலமுமே அப்படித்தானா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், நல்லதே நினைத்தல் மட்டுமே உலகப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைத்து விட முடியாது. கொஞ்சமாவது சூது வாது அறிந்திருக்க வேண்டும். உயிரா கொள்கையா என்று வருகையில் கொள்கைதான் என்று முடிவெடுப்பது சில நேரங்களில் ஈத்தரத்தனம் ஆகிவிடும். ஏனென்றால் உயிரோடு சேர்ந்து கொள்கையும் செத்துப் போய்விட வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து தன்னைக் காத்துக் கொள்ளும் உத்திகளை முதலில் வளர்த்துக் கொண்டுதான் பின்னர் ஊரைக் காக்கும் வேலைகளுக்கே வரவேண்டும். அதை விடுத்து அப்படியெல்லாம் ஏமாளிப் பயலாக இருப்பது மாபெரும் பாவம். அதுவே சமூகத்துக்கு இழைக்கும் இன்னோர் அநீதி.

கடைசியில் அரவிந்தனின் மரணத்தால் உடைந்து போகும் பூரணி வந்த பதவியையும் வேண்டாமென்று திரும்பக் கொடுத்து விடுவது அதை விடக் கொடுமையாக இருக்கிறது. அது அவளைப் போல ஒருத்தியை நம்பி வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி. அந்தப் பதவியில் இருந்து சாதித்துக் காட்டியிருந்தால் நல்ல முடிவாக இருந்திருக்கும். சாக்கடைக்குள் குதித்தவளை அரவிந்தன் செத்துக் காப்பாற்றினான் என்றும் சொல்லிக் கொள்ளலாம். தாங்க முடியாத சோகத்தைப் பிழிவது கதையை மேலும் பிரபலமாக்கும் என்ற உத்தியை நா.பா.வும் கடைப் பிடித்தாரோ என்னவோ! அப்படியில்லாமல், வெறும் நல்லவனாகவே மட்டும் இருந்தால் கடைசியில் கதை இப்படித்தான் முடியும் என்று சொல்ல முயன்றிருந்தால் (அப்படித் தெரியவில்லை!) கண்டிப்பாக இது சூப்பர்ப் புதினம்தான்.

மலர்ந்து உதிர்ந்து விட்டது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்