கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 1/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் ஆரம்பம்... மீண்டும்...

பழங்கதை 

சென்ற ஆண்டு இலண்டனில் ஒரு மாத வேலைக்குக் குடும்பத்தோடு பெட்டி படுக்கைகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு வந்திறங்கினேன். ஒருவேளை நீண்ட காலம் இருக்க நேர்ந்தால் அப்படியே இருந்து கொள்ளலாம் அல்லது சொந்தச் செலவில் குடும்பத்துக்கும் ஒரு சுற்றுலா அனுபவம் கிடைத்த மாதிரி இருந்து விட்டுப் போகட்டும் என்று அப்படிச் செய்தோம். வயிற்றில் ஒரு குழந்தையோடு இருந்த மனைவியோடு குளிர் காலத்தில் வந்திறங்கியதால் அதிகம் சுற்றியும் பார்க்க முடியவில்லை. அந்தப் பழம் புளித்து ஊர் திரும்பி விட்டோம். அது பற்றி நீள நீளமாகக் கட்டுரைகள் எழுதி விட்டு, அப்படியே குடும்பத்தோடு சிங்கப்பூர் சென்று விட்டோம். அங்கு ஓர் ஓராண்டு காலம் ஓடியது. இரண்டாவது குழந்தை அங்குதான் பிறந்தது. பெங்களூரில் உருவாகி இலண்டனில் பிறக்கப் போகும் குழந்தை என்றெண்ணியதைத் தவறாக்கிச் சிங்கப்பூரில் பிறந்தான். அதுவே இலண்டனாக இருந்திருந்தால் மேலும் பல மடங்கு சிரமமாகப் போயிருக்கும். சிங்கப்பூர் பெயருக்குத்தான் வெளிநாடு என்றாலும் பல வகைகளில் நம் நாட்டை விட நமக்கு வசதி மிக்க நாடு.

முதன்முறை தனியாகச் சிங்கப்பூர் சென்ற போது மீண்டும் வருவேன் என்று சொல்லி விட்டுத்தான் வண்டியேறினேன். அதன் படியே குடும்பத்தோடு போய் ஓராண்டு காலம் வாழ்ந்து விட்டும் வந்து விட்டோம். ஆனால் இலண்டனில் இருந்து சென்ற போது மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருப்பது போல் ஏதும் தோன்றவில்லை. ஆனால் இன்று மீண்டும் அதே ஊரை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். சென்ற முறை மனைவியோடும் மகளோடும் பயணப் பட்டவன் இந்த முறை தனிக் கட்டையாய்ப் பறந்து கொண்டிருக்கிறேன். இப்போது கூடுதலாக ஓர் உறுப்பினர் கொண்டிருக்கிற குடும்பத்தைப் பிரிந்து எங்கு செல்லவும் விருப்பமில்லை. இதுவே குடும்பத்தோடு என்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நாம் நினைக்கிற படியெல்லாம் நடப்பதற்கு இதென்ன நாடகமா? வாழ்க்கை! திரைக்கதை முழுதையும் நாமே தீர்மானிக்க முடியாத கேவலப்பட்ட வாழ்க்கை!

சென்ற முறை ஊர் திரும்பியதும் என்ன கருமம் அந்த ஊர் எந்த நேரம் பார்த்தாலும் இருட்டிக் கிடக்கிறது என்று புலம்பிய போது அடுத்த மாதம் இலண்டன் சென்ற நண்பர் ஒருவர் அழைத்து, "என்னய்யா இந்த ஊரில் எட்டரை மணிவரை இருட்டவே மாட்டேன் என்கிறது?!" என்றார். இந்த முறை குளிர் காலம் முடிந்ததும் வந்திறங்குவதால் பளிச் என்றிருக்கும் பகற் பொழுதுகளை முழுமையாக அனுபவித்துக் கொள்ளப் போகிறேன்.

தரையிறங்கல்

அதிகாலையில் வந்திறங்குவதால் விமானம் இறங்கும் நேரத்தில் மேகத்துக்கு மேல் பயணித்த போது கிடைத்த காட்சி மிக அருமையாக இருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கே பகல் போலப் பளிச் என்று இருந்தது. மேகங்களை ஊடுருவிக் கடந்த பின்தான் அதிகாலைப் பொழுதின் மந்தத்தை உணர முடிந்தது. கீழே இருக்கும் போது மேகம் வானத்தில் இருக்கிறது என்றே எண்ணுகிறோம். தரைக்குச் சற்று மேலே இருக்கிற எல்லாமே வானம்தான் நமக்கு. ஆனால் வானில் பறக்கும் போது மேகம் மிகத் தொலைவில் இருக்கிறது. அது பூமிக்குத்தான் நெருக்கமாக இருப்பது போலத் தெரிகிறது. மேகத்தைப் பார்த்தால் பாவமாகத்தான் இருந்தது. கீழே இருப்பவர்கள் வானத்து மேகம் என்றும் வானமோ பூமிக்கு நெருக்கமானது என்றும் எண்ணுகிற மாதிரி யாருக்குமற்றவராக இருக்கிறதே என்று. அதிகாலைப் பொழுதில் மேகங்களின் மேற்பகுதி ஒருவித ஊதா நிறத்தில் சொலித்தது. அதற்கும் அறிவியலில் படித்த ஓசோன் மண்டலத்தின் புற ஊதாக் கதிர்களுக்கும் எதுவும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.

மத்திய இலண்டன்

சென்ற முறை மாலைப் பொழுதில் வந்து இறங்கினோம். குடும்பத்தோடு க்ராய்டன் போய்த் தங்கினோம். மொத்த ஒரு மாதத்தில் ஒரு நாள்தான் மத்திய இலண்டன் பக்கம் போனோம். இம்முறை தங்கப் போவதே மத்திய இலண்டன்தான். மத்திய இலண்டனிலும் மிக முக்கியமான இடம் - வெஸ்ட்மின்ஸ்டர். கிரீன் பார்க் எனப்படும் பெரிய பூங்காவுக்கு அருகில்தான் தங்குமிடம். பூங்காவுக்கு அந்தப் பக்கம் இங்கிலாந்து இராணியார் இருக்கும் பக்கிங்காம் அரண்மனை. இந்தப் பக்கம் நான் தங்குமிடம். அதிகாரத்துக்கு மிக அருகில் வந்து விட்டேன்! அதுவும் தங்கள் வல்லரசில் சூரியன் மறையவே மறையாது என்று எண்ணிய - தம்மைத் தவிர உலகின் பெரும்பகுதி மானிட இனத்தை விலங்குகளைப் போல் கருதிய - அவர்களைக் கட்டுக்கோப்போடு கட்டியாண்ட அதிகாரத்தின் மையப்புள்ளிக்கு அருகில்!!

எந்த ஊருமே, யாரோடு போகிறோம் - எங்கெங்கு போகிறோம் என்பதைப் பொருத்து முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களைக் கொடுக்க முடியும். இதை எங்கள் கிராமத்துக்கு ஒரு வெளியூர் நண்பனை அழைத்துப் போகும் போது கூட உணர்ந்திருக்கிறேன். அதே போல, ஒரு நண்பனோடு போகும் போது ஒரு மாதிரி இருக்கிற ஓர் ஊர், வேறொரு நண்பனோடோ ஓர் உறவினர் வீட்டுக்கோ செல்லும் போது - அவர்கள் அந்த ஊரைச் சுற்றிக் காட்டும் போது, முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, சென்னை இது போலப் பல மாதிரியான பரிமாணங்களைக் காட்டியிருக்கிறது எனக்கு. அந்த வகையில், இம்முறை மத்திய இலண்டனில் தங்கப் போவதால் இலண்டன் பற்றிய பார்வையே முழுமையாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. அதற்கான அறிகுறி விமான நிலையத்திலிருந்து தங்குமிடத்துக்குப் பயணிக்கும் முதற் பயணத்திலேயே நன்றாகத் தெரிந்தது.

மத்திய இலண்டன்தான் முழுமையாக மண்ணின் மைந்தர்களுடையது. அதுதான் அவர்களுக்காகவே ஆரம்பத்திலேயே கட்டியெழுப்பப் பட்டது. மற்றவையெல்லாம் பிழைக்க வந்த மற்றவர்களால் அவர்களுக்காகப் பிற்காலத்தில் கட்டப்பட்டுக் கொண்டவையாக இருக்கும். இங்கிருக்கும் கட்டடங்கள் யாவும் நானூறு-ஐநூறு ஆண்டு காலப் பழமையானவையாக இருக்க வேண்டும். இன்றைய வானளாவிய கட்டடங்களைப் பார்த்த பின்பு அவை சாதாரணமாகத் தெரியலாம் நமக்கு. ஆனால் நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே இவ்வளவு அழகான கட்டடங்களைக் கட்டியவர்கள் இப்போது அவற்றை இடித்துக் கட்டுவதற்கான தேவை ஏதும் இல்லை. அப்படிச் செய்வது ஒரு பலனையும் தரப் போவது இல்லை. அவையாவும் தற்காலக் கட்டடங்களை விடவும் பலமானவையாகவும் தெரிகின்றன. அது மட்டுமில்லை, அவர்கள் பழமையைப் பெரிதும் போற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். எனக்கும் வானளாவிய கட்டடங்களைப் பெரிதாகப் பிடிப்பதில்லை. கட்டடங்களின் உயரம் கூடக் கூட மனிதன் இயற்கையை விட்டு அப்பால் போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஓரிரு கட்டடங்கள் தவிர்த்து இலண்டன் முழுக்கவே அத்தகைய வான்முட்டும் கட்டடங்களை அதிகம் பார்க்க முடியாது.

சீருந்துகள் (CABS)

பொதுவாகவே ஊரெங்கும் போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருப்பதால் வாடகைக்கு வண்டி பிடிக்கும் பழக்கம் அவ்வளவாக இல்லை. அப்படிப் பிடிக்க நினைப்பவர்களுக்கு இரண்டு ஆப்சன்கள் இருக்கின்றன. ஒன்று, நம்ம ஊர் அம்பாசடர் வண்டிகளைப் போல, பழமையான தோற்றமுடைய கருப்பு வண்டிகள். அவைதான் நினைத்த இடத்தில் கையைக் காட்டி அழைக்கத்தக்க வசதியோடு ஊரெங்கும் ஓடிக் கொண்டிருப்பவை. ஆனால் கட்டணம் மிக அதிகம். நம் போன்றோர், தினமும் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு இவ்வண்டிகளில் சென்று வர வேண்டுமென்றால், மொத்தச் சம்பளமும் பற்றாது. அதனால் நம்மைப் போன்ற சராசரி மக்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துவதில்லை. குறிப்பிட்ட எண்ணுக்குத் தொலைபேசியில் அழைத்து வரச் சொல்லும் வாடகை வண்டிகள் புதுமையான நம் காலத்து வண்டிகள் போல இருந்தாலும் பாதிக் கட்டணம்தான் வசூலிக்கிறார்கள். அதனால் பெரும்பாலானவர்கள் இந்த வண்டிகளைத்தான் அழைக்கிறார்கள். சென்ற முறை வந்திருந்த போதே இவற்றையெல்லாம் அறிந்திருந்ததால், சென்ற முறை விமான நிலையத்தில் இறக்கி விட்ட வாடகை வண்டிக்காரரையே விமான நிலையத்தில் வந்து அழைத்துச் செல்லுமாறு ஏற்பாடு செய்து கொண்டேன்.

கிரீன் பார்க் 

கிரீன் பார்க் ஊரின் மையத்தில் பெரிதாக விரிந்து கிடக்கிறது. பெங்களூர் கப்பன் பார்க் போல் லால்பாக் போல் இருக்கிறது. இதைக் கட்டியவர்கள்தாமே அவற்றையும்  கட்டியிருக்க வேண்டும். அது போல இலண்டனில் பல இடங்கள் இந்தியாவில் ஏதோவோர் இடத்தை நினைவு படுத்துவதாக இருக்கின்றன. ஏதோவோர் இடம் டெல்லி செங்கோட்டை போல் இருந்தது. விக்டோரியா இரயில் நிலையம் சென்னை சென்ட்ரல் போல் இருந்தது. இதையெல்லாம் பார்க்கும் போது வெள்ளையருக்கு முந்தைய இந்தியா எப்படித்தான் இருந்திருக்கும் என்ற கேள்வி வருகிறது. வெள்ளையர் வந்திராவிட்டால் இந்தியா எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வியும்தான்.

பூங்கா என்றால், சதுரமாகவோ வட்டமாகவோ இருக்க வேண்டும் என்கிற என் ஆசைக்கிணங்க இல்லை இப்பூங்கா. முக்கோணம் போன்ற நாற்கோணமாக இருக்கிறது. அதற்குள் சில நினைவுத் தூண்களும் சுவர்களும் எழுப்பப் பட்டிருக்கின்றன. அந்த நாட்டைப் பிடித்தோம், இந்த நாட்டைப் பிடித்தோம், நம் போர் வீரர்களை வணங்குவோம் என்கிற மாதிரியான உணர்வுமயமான நினைவூட்டல்கள். மனிதர்க்கெதிராய் மனிதரைப் பயன்படுத்தும் - சேவற் சண்டையை விடக் கேவலமான இந்தக் கொடூரம் இவர்கள் உலகமயமாக்கியதுதானே!

எந்நேரமும் சிலர் நடமாடிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருக்கிறார்கள். நானும் அந்தப் பகுதியில் இருந்த இரண்டு வாரங்களும் தினமும் கிரீன் பார்க் சென்று ஓடிக் கொண்டும் உடற்பயிற்சி செய்து கொண்டும் இருந்தேன். புதுப் பணக்காரன் போல, புதுப் பயிற்சியாளன்! நான் போகும் நேரமெல்லாம் எழுபது வயது மதிக்கத் தக்க பெரியவர் ஒருவரும் தினமும் வியர்க்க வியர்க்க ஓடிக் கொண்டிருந்தார். கண்டிப்பாக என்னை விட இரு மடங்கு வயதும் தெம்பும் கொண்டவராக இருக்க வேண்டும். அப்படி ஒரு காட்சியைப் பார்த்த பின்பும் என்னால் அடங்கியிருக்க முடியவில்லை. பொதுவாகவே மேற்கர்கள் நம்மவர்களை விட உடலுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே. நம்ம ஊரில்தான் அவ்வளவு வயதானவர்கள் வேகமாக நடந்தாலே கீழே விழுந்து செத்துப் போவார்கள் என்பது போல ஒரு பயம் பரவியிருக்கிறது. இந்த ஊர்ப் பெருசுகள் எல்லாத்திலுமே நம்ம ஊர்ப் பெருசுகளை விடப் பெருசுகள்தாம்.

ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் பிராணிகள் வளர்ப்பதில் ஈடுபாடு மிகுந்தவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது உண்மைதான் என்று உறுதிப் படுத்தும் விதமாக எல்லாப் பூங்காக்களிலுமே ஒரு நாயைப் பிடித்துக் கொண்டு நான்கு பேர் நடமாடிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு க்ரீன் பார்க் விதி விலக்கல்ல. சிலர் சரியாகக் கயிறு வைத்துக் கட்டாமலேயே வலம் வந்து கொண்டு நமக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். இங்கிருக்கும் குழந்தைகள் கூட அவற்றுக்குப் பயப்படுவது இல்லை. உற்சாகமாகப் போய் அவற்றோடு விளையாடத்தான் செய்கிறார்கள். ஆனாலும் நமக்கு முடியாதப்பா. இந்த நாய் வளர்க்கும் பழக்கத்தில் கூட இங்கிருந்து காப்பியடித்து நம்மவர்கள் நிறையக் கொண்டு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். சரியான காப்பிக் கடையர்கள்! எங்கள் கிராமத்திலும் நாய் வளர்க்கிறார்கள். ஆனால் அங்கே வேறு  மாதிரியான நாய்களும் வேறு மாதிரியான வளர்ப்புமாக இருக்கிறது.

ஒருபுறம் சக மனிதனை நாயைப் போல் நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில், நாயைக் கூட மனிதனைப் போல் மதிக்கிற மாண்பு பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் நாயில் கூட, அழகாகக் கொழுகொழுவென்று இருக்கும் நாய்க்குக் கொடுக்கப் படும் மரியாதையில் பாதி கூடத் தெருவில் திரியும் சொறி நாய்க்குக் கொடுக்கப் படுவதில்லையே என்பதை நினைக்கும் போது அவைகளுக்குள்ளும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் வேலையை நாம்தான் ஆரம்பித்து வைக்கிறோமோ என்ற கவலை வருகிறது! :)

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

  1. வர்ணனைகள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஐயா. நீண்ட நாட்கள் கழித்து தங்கள் கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி