கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 2/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...

வெஸ்ட்மின்ஸ்டர் 


கிரீன் பார்க்கும் பக்கிங்காம் அரண்மனையும் இருப்பது வெஸ்ட்மின்ஸ்டர் என்னுமிடத்தில். அங்குதான் இங்கிலாந்தின் பாராளுமன்றமும் பல தூதரகங்களும் கூட இருக்கின்றன. முதன்முறை டெல்லி சென்ற போது, பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை போன்ற தொலைக்காட்சியில் மட்டும் பார்த்திருந்த பல கட்டடங்களை நேரில் பார்த்த போது, ஒருவித சிலிர்ப்பு உண்டானது. அதைப் போன்ற ஓர் உணர்வு பக்கிங்காம் அரண்மனையைப் பார்க்கும் போதெல்லாம் உண்டானது. அந்தப் பகுதியில் நடமாடும் போது ஓர் அதீத பாதுகாப்பு உணர்வையும் உணர முடிந்தது. உலகிலேயே அதி பாதுகாப்பான ஓரீர் இடங்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். வெள்ளை மாளிகைக்கு அடுத்த படியாக அல்லது அதை விட மேலாக! யாருக்குத் தெரியும். இந்தியக் குடியரசுத் தலைவர் போல பொம்மைப் பதவி என்று ஒருபுறம் சொல்லப் பட்டாலும், இன்றைக்கும் அமெரிக்க அதிபருக்கு இணையான அல்லது அதை விடக் கூடுதல் அதிகாரம் கொண்டவராக இராணியாரைச் சிலர் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எது உண்மையென்று தெரியவில்லை. ஆனால், அரண்மனைக்கும் அங்கு உள்ளவர்களுக்கும் கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் வியப்பாகத்தான் இருக்கிறது. அதில் ஒன்று, அரண்மனையில் தினமும் நடக்கும் காவலர் மாற்ற நிகழ்ச்சி (CHANGE OF GUARD).

இந்தக் காவலர் மாற்ற நிகழ்ச்சி தினமும் காலை 11.30 மணிக்கு மிக விமரிசையாக நடைபெறுகிறது. அதற்கான செலவு மட்டும் கண்டிப்பாகப் பெரும் தொகையாக இருக்கும். நமக்குப் பெரிது. அவர்களுக்கு எப்படியோ. கடும் குளிர் அடிக்கும் - பனிப்பொழிவு இருக்கும் நாட்களில் மட்டும் இது நடைபெறுவதில்லையாம். எல்லா நாட்களுமே இதைப் பார்ப்பதற்குக் கூட்டம் அலை மோதுகிறது. நிகழ்ச்சியை ஒரு நாள்தான் பார்த்தேன். ஆனால் கூட்டத்தைப் பல நாட்கள் பார்த்தேன். இங்கே அரண்மனையில் காவலராகப் பணி புரிவோர் அதைப் பெரும் பெருமையாகக் கருதுகிறார்களாம். ஆங்கிலேயனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் இதை நேரில் பார்த்திருப்பார்களாம். பத்திரிகைகளில் கூட இராணி குடும்பத்துச் செய்திகளை - உப்புக்குப் பெறாதவற்றைக் கூட - மிகப் பெரிதாக எழுதுகிறார்கள். அரச குடும்பத்து விசயத்தில் காட்டப்படும் மித மிஞ்சிய தனி மனித வழிபாடு இந்தியர்களை விட மோசமாக இருக்கிறது. நம் வழிபாடு ஒரு சில வருடங்கள். அதிக பட்சம் ஓரிரு தலைமுறைகளுக்கு நீடிக்கும். அவர்கள் இதைத்தான் பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறார்கள். நடிகையின் பூனைக்குட்டி பற்றிச் சினிமாப் பத்திரிகைகளில் எழுதப்படுவது போல இராணி வீட்டு மேட்டர்களை நாட்டின் முக்கியப் பத்திரிகைகளிலேயே பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது இங்கிருக்கும் அரச குடும்பம் இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல பொம்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்த அரண்மனையின் மேல் காணப்படும் முக்கோணம் போன்ற முகட்டு வடிவம்தான் இந்தியாவில் இருக்கும் பல ஆங்கிலேயக் கட்டடங்களிலும் காணப் படுகிறது. அதிலும் சென்னை மற்றும் பெங்களூரில் இது போன்ற அமைப்புகள் நிறையவே இருக்கின்றன என நினைக்கிறேன். இவர்கள் மேய்ந்து விட்டு வந்ததற்கான அடையாளத்தை இந்தியாவில் என்னென்ன வடிவத்தில் எல்லாம் காணமுடிகிறது என்பதை இங்கு வந்த பின்பு இன்னும் நன்றாக உணர முடிகிறது. கட்டடம், கலாச்சாரம், மொழி, உணவு, உடை என்று எத்தனையோ விசயங்களில் அது தெரிகிறது.

இந்த நெரிசலான மாநகரப் போக்குவரத்துக்கு மத்தியிலும் அவ்வப்போது குதிரை வண்டி போவதைக் காண முடிகிறது. அதுவும் நம் வரலாற்றுப் பாடநூல்களில் பார்த்த மாதிரி, நீண்ட கிர்தாவும் மீசையுமாக இருக்கும் ஆங்கிலேயே வைஸ்ராய்கள் போன்ற முகம் கொண்ட கிழடுகள் தோரணையாக ஓட்டிச் செல்கிறார்கள். அந்த மிடுக்கான முகம் இவர்களுக்குப் பிறக்கும் போதே உடன் பிறந்ததா அல்லது அதற்கும் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுப்பார்களா அல்லது நம் அடிமைக் கண்களுக்குத்தான் அப்படியெல்லாம் தெரிகிறதா என்று தெரியவில்லை. இது வெஸ்ட்மின்ஸ்டரில் அல்லது மத்திய இலண்டனில் மட்டும் கிடைக்கும் காட்சியா அல்லது மொத்த இங்கிலாந்துக்குமானதா என்றும் தெரியவில்லை.

இடமாற்றம் 

மத்திய இலண்டன் வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கும் போதே பெட்டியைக் கட்டிக் கொண்டு மான்செஸ்டர் கிளம்பச் சொன்னார்கள். சரி, இலண்டனைத்தான் பார்த்து விட்டோமே. மிச்ச இங்கிலாந்தையும் பார்க்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கிளம்பினேன். "இங்கிலாந்து போனால், இலண்டனில் வாழ்வது வீண்; மற்ற ஊர்களில் எங்காவது வாழ்ந்தால்தான் இன்பமே!" என்றொரு நண்பன் வேறு சொல்லியிருக்கிறான். அந்தப் பேரின்பத்தையும் பார்த்து விடுவோம். ஆக, மார்க்ஸ் இருந்த இலண்டனில் இருந்து ஏங்கெல்ஸ் இருந்த மான்செஸ்டருக்குப் பயணம். உலகையே கட்டியாண்ட அதிகாரத்துக்கு அருகில் இருப்பது போலவே, உலகெங்கும் மேலோங்கிய அதிகாரத்தை உலுக்கியவர்களைப் பற்றிய சிந்தனையும் பெரும் சிலிர்ப்பைத் தரத்தான் செய்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இதுதான் கூடுதற் சிலிர்ப்பைக் கொடுக்கிறது.

இலண்டனில் இருந்து மான்செஸ்டர் பயணித்த தொடர்வண்டிப் பயணம் இனிமையானது. இவ்விரு ஊர்களுக்குமான தொலைவு சுமார் 160 மைல்கள். இங்கு எல்லாமே மைற் கணக்குதான். நம் கணக்கில் சுமார் 260 கிலோ மீட்டர்கள் வரும். இங்கிருக்கும் அதிவேகத் தொடர் வண்டிகளின் புண்ணியத்தில் இந்தத் தொலைவை இரண்டு மணி நேரத்தில் கடந்து விட முடிகிறது. கிட்டத்தட்ட மதுரைக்கும் சேலத்துக்குமான தொலைவை விடச் சிறிது கூடுதல். அதற்கு நம் வண்டிகள் எடுக்கும் நேரம் ஐந்து மணி நேரத்துக்கு அருகில் வருகிறது. "ஏதோ வெள்ளைக்காரன் வந்ததால் நாமும் இரயில் வண்டிகளைப் பார்க்கும்-பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இல்லாவிட்டால், நாம் இன்னும் பின் தங்கிப் போயிருப்போம்!" என்று சொல்கிறவர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டல் - இவர்கள் வந்து அங்கிருந்து அவ்வளவு கொள்ளையடித்து வந்திராவிட்டால், இவர்களுக்கு முன்பாகவே நாம் இது போன்ற அதிவேக வண்டிகளைப் பார்த்திருக்கலாமோ என்னவோ. இது ஓரிரு வரிகளில் பேச முடிகிற கதையல்ல. ஆனால், இதை வைத்துக் கொண்டு நன்றாக மண்டையைக் குழப்பி யோசித்தால் நிறையப் புரிபடும். இங்கிருக்கிற இந்திய-பாகிஸ்தானிய சகோதரர்கள் எல்லோருமே இது பற்றிச் சொல்கிறார்கள் - "நம்மிடம் அடித்து வந்த கொள்ளையில் கட்டியவைதான் இந்தக் கட்டடங்களும் கட்டமைப்புகளும்!" என்று.

இந்தப் பயணத்தின் போது இவர்களுடைய கிராமங்கள் இவர்களுடைய நகரங்களை விட அழகானவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நம் கிராமங்களை விடப் பல மடங்கு அழகானவை. முக்கியமாக ஒவ்வோர் ஊர் நுழைவிலும் சாலைக்கு இருபுறமும் அமர்ந்து யோகாசனம் (!) செய்கிற பழக்கம் இங்கில்லை என்பதால் இயல்பாகவே அழகு கூடி விடுகிறது. அதற்கும் அவர்கள் அடித்துச் சென்ற கொள்ளைதான் காரணமோ என்று எண்ணுகிற போது மீண்டும் மனம் கனக்கிறது. ஆனால் நம் கிராம வாழ்க்கையில் இருக்கும் பல சுகங்கள் இவர்களுக்கும் இருக்கும் என நினைக்கிறேன். எல்லோரையும் எல்லோர்க்கும் தெரிந்திருக்கும் வசதி, ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக வாழ்தல், நகர வாழ்க்கைக்குரிய மன உளைச்சல் இன்மை போன்ற சுகங்கள். பயண நேரமும் அதிகமில்லை என்பதால் நிறையப் பேர் தினமும் இது போன்ற கிராமங்களில் இருந்து இலண்டனுக்கு வேலைக்கு வந்து செல்கிறார்கள். சனி-ஞாயிறு தவிர்த்து வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நாட்கள். அதிலும் வெள்ளி மற்றும் திங்கட் கிழமைகளில் நிறையப் பேர் வீட்டில் இருந்தே வேலை செய்வதாகச் சொல்லி உட்கார்ந்து கொள்கிறார்கள். இத்தகைய வசதிகள் வரும் காலத்தில் நாமும் இது போல வாழ்ந்து கொள்ளலாம். அப்படி நாமும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கோ பெங்களூருக்கோ தினமும் வேலைக்குச் சென்று வருகிற சுகம் கிடைக்கப் போகும் எந்நாளோ!? அது நம் வாழ்நாளில் வருமோ!?

நம் ஊர்க் காடுகளில் ஆடு-மாடு மேய்வது போல், இவர்களுடைய காடுகளில் குதிரைகள் அதிகம் மேய்கின்றன. விளைநிலம் என்று ஒன்று இங்கு இருப்பது போலத் தெரியவே இல்லை. அரிசி, கோதுமை, பால், பயறு, காய்கறி என்று எல்லாமே இறக்குமதிதான். ஆனாலும் தட்பவெப்ப நிலை காரணமாக எங்கும் பசுமையாக இருக்கிறது. ஆண்டில் பாதி கடுங்குளிர். மீதிப் பாதி மிதக் குளிர். ஆண்டு முழுமைக்கும் எந்த நேரமும் மழை பெய்கிறது. மழை என்பது கடும் மழையாக இருப்பதில்லை எப்போதும். புனுப் புனுவென்று தூறிக் கொல்கிறது. இதுதான் இக் கண் குளிரும் பசுமைக்குக் காரணம்.

கிராமங்களிலும் இலண்டன் போலவே எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாகக் கட்டப் பட்டுள்ளன. ஒரு பாகிஸ்தானிய சகோதரர் அதைப் பற்றிச் சொல்லும் போது கூட, "இந்த அழகு வீடுகள் எல்லாம் 'நம்' நாட்டில் கொள்ளையடித்துக் கொண்டு வந்த பணத்தில் கட்டியதுதான்!" என்றார். இது ஒரு முக்கியமான விஷயம் - இங்கிருக்கும் மற்ற நாட்டவர்கள் எல்லோருமே ஆங்கிலேயர்களைக் கடுமையாக வெறுக்கிறார்கள். மற்ற நாட்டவர்கள் என்றால், இந்தியர் - பாகிஸ்தானியர் - ஆப்பிரிக்கர் என்று மட்டும் இல்லை. மற்ற ஐரோப்பியர்கள் கூட இதில் அடக்கம். கொஞ்சம் மனம் விட்டுப் பேசினால் நிறையக் கக்குகிறார்கள். குறிப்பாக டாக்சி ஓட்டுனர்கள் எல்லோரிடமுமே பேச்சைப் போட்டு இது போன்ற கதைகளைப் பேசினால் சுவாரசியமான நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன.

கட்டடங்களும் பூங்காக்களும் போலவே நிறைய இரயில் நிலையங்கள் இந்தியாவை நினைவு படுத்துகின்றன. குப்பைகளை மட்டும் நீக்கி விட்டுப் பார்த்தால் பல இரயில் நிலையங்கள் நம்ம ஊரில் இருக்கும் இரயில் நிலையங்கள் போலவே இருக்கின்றன. கூடுதலாக நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு ஏதேதோ செய்திருக்கிறார்கள். பழைய தொழில்நுட்பத்திலேயே இருக்கும் கழிப்பறைகளை இன்னும் கொஞ்சம் சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். வண்டிகள் பெரும்பாலும் நேரத்துக்கு வந்து விடுகின்றன. அவ்வப்போது ஓரிரு நிமிடங்கள் தப்புகின்றன. பெரும் தாமதங்கள் அவ்வளவு வழக்கமானவை அல்ல. ஆனால் அப்படி ஒன்றே இல்லாமலும் இல்லை. தட்ப வெப்பம், விபத்து, வேலை நிறுத்தம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நம்ம ஊரில் போலவே பெரும் தாமதங்களும் எப்போதாவது ஏற்படுகின்றன. அந்த 'எப்போதாவது'க்கே நமக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. அப்புறம் சிறிது நேரத்தில் அதற்கெல்லாம் நமக்குத் தகுதி இல்லை என்பதை உணர்ந்து அடங்கிக் கொள்கிறோம்.

விலைவாசி 

ஆச்சரியப்படும் விதத்தில் பல பொருட்கள் இந்திய விலைக்கு நெருங்கிய விலையிலும் கிடைக்கின்றன. இதெல்லாம் உலகமயமாக்கலின் விளைவாக இருக்க வேண்டும். சமீப காலத்தில் விண்ணைத் தொட்டு விட்ட இந்திய விலைவாசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இருந்திருக்காது என நினைக்கிறேன். அதே நேரத்தில் பெரும்பாலான பொருட்கள் நம் விலையை விடப் பல மடங்கு கூடுதலாகத்தான் இருக்கின்றன. வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்துச் செலவுகள்தாம் தாங்க முடியாத அளவு அதிகம்.

சென்னை-பெங்களூரில் இருபதாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடுகள் போன்றவை இங்கே இலண்டனில் ஆயிரம் பவுண்டுகளுக்குக் குறைவாகக் கிடைப்பதில்லை. மான்செஸ்டர் போன்ற மற்ற நகரங்களில் அவ்வளவு  ஆவதில்லை. ஐநூறு முதல் எழுநூறு பவுண்டுகளுக்குக் கிடைக்கலாம். ஒரு பவுண்டு என்பது தோராயமாக நூறு ரூபாய் என்று வைத்துக் கொண்டால் வீட்டு வாடகைக்கு மட்டும் ஒரு இலட்சம் என்பது சாதாரணமில்லை. எதையும் அப்படியே நேரடிக் கணக்கு போடக் கூடாது என்பதை நன்கறிவேன். ஆனால் அதுதான் எளிதில் ஒரு விசயத்தைப் புரியவைக்க உதவும் என்பதால் அப்படிச் செய்கிறேன். அடுத்தது போக்குவரத்துச் செலவு. இலண்டன் புறநகரில் வசிக்கும் ஒருவர் தினமும் மத்திய இலண்டன் சென்று வர வேண்டுமென்றால் வாரம் ஐம்பது பவுண்டுகள் செலவழிக்க வேண்டும். அதாவது ஐயாயிரம். இது தொடர்வண்டி மற்றும் பேருந்துப் பயணம் செய்ய. டாக்சியில் செல்ல வேண்டும் என்றால் முன்பே சொன்னது போல சொத்தையே எழுதி வைக்க வேண்டும். ஒரு முறைக்கே இருபது மைல்கள் தொலைவைக் கடக்க ஐம்பது முதல் நூறு பவுண்டுகள் ஆகும். அதாவது, ஐயாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய். இதனால்தான் நம்மவர்கள் இங்கு வந்தால் குப்பைத்தொட்டி போன்ற இடத்தில் கூட படுக்க மட்டும் ஒரு கட்டில் கிடைத்தால் போதும் என்று செட்டில் ஆகி விடுகிறார்கள்.

மற்ற செலவுகள் இவ்வளவு கொடூரம் இல்லை. உணவுப் பொருட்களின் விலை கூடுதல்தான் என்றாலும் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து போல நெஞ்சுவலி வர வைப்பவை அல்ல. பால்விலை கூட சிங்கப்பூரை விடப் பெரிதும் குறைவாகவே இருக்கிறது. தினக்கூலி வேலைக்கு யாரை அழைத்தாலும் பெரும் தொகையைப் பதம் பார்த்து விடுகிறார்கள். அதனால் பல வேலைகளைத் தாமே செய்து பழகிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். அதுவும் ஒரு வகையில் வளர்ச்சியின் அடையாளம்தானே. கல்வியும் மருத்துவமும் முற்றிலும் இலவசம். இதுதான் இதுதாண்டா நாடு என்று பாராட்ட வைக்கிறது. இவையிரண்டும் ஏழைக்கும் பணக்காரனுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதுதானே உண்மையான வளர்ச்சியின் அடையாளம். அது பற்றி அடுத்த பிரிவில் நீளமாகப் பேசுவோம்.

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி