கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 4/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...


பருவங்கள்

குடும்பமும் வந்து விட்டது. குளிரும் ஆரம்பித்து விட்டது. கோடை காலத்தில் காலை நாலரை மணி முதல் இரவு பத்தரை மணி வரை வெளிச்சம் அடித்தது. உச்சகட்டக் குளிரின் போது காலை பதினொரு மணிக்குக் கூட இருட்டியது போலிருக்கும். மாலை நான்கு மணிக்கெல்லாம் மங்கி விடும் மீண்டும். இருளின் தாக்குதலைச் சமாளிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

நம்ம ஊரில் ஆறு பருவ காலங்கள் இருப்பது போல, இங்கே நான்கு பருவங்கள் இருக்கின்றன. குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம், கூதிர் காலம் ஆகிய நான்கும்தான் அவை. அனைத்து மேற்கு நாடுகளிலும் இதே நான்கு பருவங்கள்தாம். மொத்த ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் வட துருவத்துக்கு அருகில் இருப்பதால் அந்த வசதி. ஆப்பிரிக்காவும் தென் அமெரிக்காவும் நமக்கு மேற்கே இருந்த போதிலும் அவற்றை ஒருபோதும் நாம் மேற்கு நாடுகள் என்று அழைப்பதில்லை. என்ன கொடுமைடா சாமி இது - ஒரு திசையின் பெயரைக் கூட அதிகாரம் அதிகம் கொண்டவர்கள்தாம் அதிகம் உரிமை கொண்டாட முடிகிறது.

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் குளிர் காலம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு இந்தக் காலத்தில்தான் வருகிறது. மழையில்லாத தீபாவளியா என்று நாம் ஆச்சரியப்படுவது போல, பனிப்பொழிவு இல்லாத கிறிஸ்துமஸ் இவர்களுக்குப் பெரிய ஆச்சரியமாம். மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாமல் இங்கிலாந்தில் முன்பெல்லாம் பனிப்பொழிவு குறைவாகத்தான் இருந்ததாம். கடந்த சில ஆண்டுகளாகத்தான் நேரங்கெட்ட நேரத்திலெல்லாம் பனி பெய்து வதைக்கிறதாம். சென்ற முறை வந்திருந்த போது இருந்த இரண்டு மாதங்களில் இரண்டு பனிப்பொழிவுகள் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த முறை எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

மார்ச் முதல் மே வரையிலானது வசந்த காலம். இந்தப் பருவத்தில் எல்லா மரங்களும் அழகழகாகப் பூத்துக் குலுங்குகின்றன. அடுத்து கோடை. வசந்தம் பிறந்ததுமே கோடை பிறந்து விட்டது என்று கொண்டாடத் தொடங்கி விடுகிறார்கள். கொஞ்சம் நன்றாகச் சூரிய ஒளி தெரிந்து விட்டால் போதும், ஊர் முழுக்க அது பற்றித்தான் பேச்சு. தெருவெல்லாம் ஆட்கள் நடமாட்டம் கூடி விடுகிறது. பூங்காக்களில் அரைகுறை ஆடைகளோடு படுத்து உருண்டு விளையாடுகிறார்கள். கூச்சலும் கூப்பாடும் தாங்க முடிவதில்லை. பாவம்! ஆண்டின் பன்னிரண்டு மாதங்களும் இப்படியே இருக்கும் நாடுகளில் இருந்து வரும் நம் போன்றவர்களுக்கு இதைப் பார்த்தால் பாவமாகத்தானே இருக்கும். இதனால்தான் இந்தியாவை மேய்ந்து கொண்டிருந்த காலத்தில் குளிர் காலம் வந்து விட்டாலே எல்லோரும் கிளம்பி வந்து பட்டறையை அங்கு போட்டு விடுவார்களாம். பின்னர் வசந்த காலம் மற்றும் கோடை காலம் தொடங்கியதும் அங்கிருக்கிற வெயில் தாங்க முடியாமல் இங்கே ஓடி வந்து விடுவார்களாம். இந்தியாவுக்கு விடுதலை கொடுத்த பின்பு இந்தப் பெரும் சுகத்தை இழக்க நேரிட்டது பாவம். எவ்வளவு அசௌகரியங்களைத் தாங்கிக் கொண்டு விடுதலை கொடுத்திருக்கிறார்கள். ரொம்போ நல்லவங்கடா நீங்க!

ஊரில் இருக்கும் போது வெயில் தாங்க முடியாமல் வழியில் கொஞ்சம் நிழல் சிக்கினால் கூட அதை அனுபவிக்கத் துடித்து ஒதுங்குவோம். அது இங்கே வந்த பின் அப்படியே தலைகீழாக மாறி விடுகிறது. நடக்கும் போது கூட வெயில் பட்டுக் கொண்டே நடக்க முடிந்தால் அதை மிகவும் விரும்பிச் செய்கிறோம். வெயிலே கண்ணில் காண முடியாத பொழுதுகளில் சின்னதாய் ஒரு வெயிற் கற்றை சிக்கினால் கூட அதை விடாமல் நெருங்கிச் சென்று அனுபவித்துக் கொள்கிறோம். குளிரில்தான் தெரிகிறது வெயிலின் அருமை.

அதீதக் குளிரும் குளிர் காலத்தின் கும்மிருட்டும் அடிக்கடிப் பெய்து கெடுக்கும் தூறலும் இங்குள்ள மக்களின் மனநிலையையும் அன்றாட வேலைகளின் வெற்றி-தோல்வியையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றன. வாழ்வின் பல முக்கியமான இன்ப-துன்பங்களைத் தீர்மானிக்கிற ஆற்றல் கொண்டதாக இருப்பதால்தான் தட்பவெப்ப நிலை பற்றிய பேச்சு ஒரு பெரும் பொழுதுபோக்காக இருக்கிறது இங்கே. நம்ம ஊரில் அரசியல்-சினிமா-கிரிக்கெட் பற்றிப் பேசுவது போல இங்கே தட்பவெப்ப நிலை பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். அலுவலக சகாக்கள் அனைவரும் அது பற்றிப் பேசுவார்கள். கிளம்பி வெளியே வந்து டாக்சியில் ஏறினால் டாக்சி ஓட்டுனர் அது பற்றி ஏதாவது பேச்சைப் போடுவார். ஊர்ப் பக்கம் உள்ள பெரியவர்கள், வெளியூரில் இருந்து யார் வந்தாலும் மழை பற்றிக் கேட்பார்கள். அது போல.

இப்படிப் பேசப்படும் ஒன்னொரு விஷயம் - காற்பந்து.

காற்பந்து 

நம்ம ஊரில் கிரிக்கெட் பேசுவதற்கும் இங்கே காற்பந்து பற்றிப் பேசுவதற்கும் இருக்கும் ஒரு பெரிய வேறுபாடு - அங்கே நாம் சர்வதேசப் போட்டிகள் பற்றிப் பேசுவோம். எல்லோருமே இந்தியா வெல்ல வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடே பார்ப்பதும் - பேசுவதும் - பதட்டப்படுவதும் - எல்லாமும். இங்கே அப்படியில்லை. இங்கே காற்பந்தில் இங்க்லீஷ் பிரீமியர் லீக் (EPL) ஒன்று இருக்கிறது. நம்ம ஊரில் கிரிக்கெட்டில் இப்போது வந்திருக்கிற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போல. இதைப் பார்த்துக் காப்பியடித்திருப்பதுதான் அது. இது இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருப்பது. இதன் வருகைக்கும் இங்கிலாந்தில் கிரிக்கெட் அழிவு ஆரம்பம் ஆனதற்கும் தொடர்பு இருப்பது போலவே படுகிறது. நான் இங்கு வந்து பல மாதங்கள் ஆகி விட்டன. இன்னும் ஒரு இடத்தில் கூட நம்ம ஊரில் போல இளைஞர்கள் கூடி கிரிக்கெட் ஆடுவதைப் பார்க்க முடியவில்லை. ஆனால் பல இடங்களில் காற்பந்து ஆடும் கூட்டங்களைப் பார்த்து விட்டேன். மான்செஸ்டரில் இருந்த போது நிறையவே பார்த்தேன். குறிப்பாக மான்செஸ்டர் காற்பந்துக்குப் பெயர் போன இடம். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலான போட்டிகளில் மான்செஸ்டர் அணிதான் பாதிக்கும் மேலான கோப்பைகளை வென்றுள்ளது.

இங்கிலாந்து என்கிற நாட்டுக்குள் மாநிலங்கள் என்ற பிரிவுகள் கிடையாது. அதனால் ஊர்வாரியாகப் பிரிக்கப்பட்ட அணிகளே. கிரிக்கெட்டில் கவுண்டி அணிகள் போல இதில் க்ளப் அணிகள். ஒவ்வொரு க்ளப்பும் பல சர்வதேச வீரர்களோடு ஒப்பந்தம் கொண்டிருக்கும். அது போக உள்ளூர் வீரர்களும் இருப்பர். கிட்டத்தட்ட இங்கிலாந்தில் இருக்கும் எல்லோருமே தனக்கென விருப்பமான அணி என்று ஒன்றை வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன். எல்லாச் சந்திப்புகளிலுமே இது பற்றிய பேச்சு கண்டிப்பாக இருக்கும். மிக முக்கியமான அலுவல் சார்ந்த சந்திப்புகளில் கூட இது பற்றி மேலோட்டமாகப் பேசிக் கொள்வார்கள். அதற்கு மேல் ஆழமாகப் போவது நாகரிகமில்லை என்றொரு நிலைப்படும் கடைப்பிடிக்கப் படுகிறது. ஒருவருக்குப் பிடித்த ஒன்றைப் பற்றித் தவறாக ஏதும் பேசி அது தேவையில்லாத சிக்கல்களுக்கு வழி வகுத்து விடக் கூடும் என்ற அச்சமே காரணம்.

இந்தியாவிலேயே இதை மிக நெருக்கமாகப் பார்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அப்படி அங்கிருக்கும் போது பார்க்காதவர்கள் கூட இங்கே வந்து பார்த்துப் பழகிக் கொள்கிறார்கள். இங்கே இருப்பவர்களைப் போலவே, நம்மவர்களும் தனக்குப் பிடித்தது என்று ஓர் அணியையும் பிடித்துக் கொள்கிறார்கள். இப்படியெல்லாம் தம்மை மாற்றிக் கொள்ளாவிட்டால் பல இடங்களில் வேற்றுக் கிரகவாசி போல உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் நானும் எப்படியும் இந்த உலகத்துக்குள் கூடிய சீக்கிரம் நுழைந்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறேன். எவ்வளவு நாட்களுக்குத்தான், "எனக்கு இதெல்லாம் புரியாது!" என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்?! அதுவும் அசடு வழியாமல்?! அந்த அளவுக்குத் தன்னம்பிக்கையோடு பேச நாம் என்ன இவர்களை வாழ்விக்கவா வந்திருக்கிறோம் படையெடுத்து?! வல்லரசுக் கனவில் இருக்கிற ஒரு வளரும் நாட்டில் இருந்து வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்திருக்கிறோம். ஒழுங்காக அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பழகிக் கொள்வதுதானே நல்லது!

விலைவாசி

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகில், விலைவாசி இந்தியாவில் போல் எந்த நாட்டிலும் இவ்வளவு கொடூரமாக ஏறியிராது என்றே எண்ணுகிறேன். நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய தெருக்களும் கட்டடங்களும் அப்படியே இருப்பது போலவே அன்றாடத் தேவைப் பொருட்களின் விலையும் கூட அப்படியேதான் இருந்து வருகிறது என்று தோன்றுகிறது. வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து வசதிகளுக்குக்கான விலைவாசியில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். மற்றவை அப்படியேதான் இருந்திருக்க வேண்டும். பால் விலை பரவாயில்லை. சிங்கப்பூரில் இருந்த போது பாலுக்கே ஏகப்பட்ட பணம் காலியாவது போல இருக்கும். அதற்குக் காரணம் அங்கே பால் வெகு தொலைவில் இருந்து வரும். அங்கே ஆஸ்திரேலியாவில் இருந்து வருவதாகச் சொல்வார்கள். ஆனால் இங்கோ மொத்த நாட்டுக்கான பாலும் உள்நாட்டிலேயே கிடைத்து விடுவது போற் தெரிகிறது. பாலிலும் பல வகைப் பால்கள் இருக்கின்றன - முற்றிலும் கொழுப்பு நீக்கப்பட்ட பால், சற்று மட்டும் கொழுப்பு நீக்கப்பட்ட பால், முழுமையான பால் என்று!

ஒரு காலத்தில் நீரை விட பீர் விலை குறைவாக இருந்ததாம். அதனால்தானோ என்னவோ குடி இங்கே மிகவும் அதிகம். நம்ம ஊரில் தெருவுக்கு ஒரு டீக்கடை இருப்பது போல், இங்கே தெருவுக்கு ஒரு பப் இருக்கிறது. வேலைக்குச் சென்று திரும்பும் போது நேராக பப்புக்கு வந்து குவிந்து விடுவார்கள் போற் தெரிகிறது. டீக்கடை போலவே தினமும் கூடிக் கதை பேசிப் பிரியும் இடம் போல இருக்கிறது. சுதந்திரம் அதிகமான சில வேலைகளில் இருப்போர், வேலைக்கு நடுநடுவேயும் பப்புக்குள் வந்து ஊற்றி விட்டுச் செல்வார்களா என்று தெரியவில்லை. பகல் நேரங்களிலும் ஆட்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வேலையே எதுவும் இல்லாதவர்களாகவும் இருக்கக் கூடும். புண்ணியவான்கள்!

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி