ஏதோவொரு வகையில் நம் வாழ்க்கையை மாற்றுகிற பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதுதானே கல்விகளில் எல்லாம் தலையாயது. அப்படியான ஒரு பழக்கத்தைச் சமீபத்தில் படித்து விட்டு, சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சியில் திரிகிறேன் கடந்த சில வாரங்களாக. அது யாது? படுக்கையில் படுத்ததும் தூக்கம் வராமல், பல மணி நேரம் புரண்டு புரண்டு படுப்பவரா நீங்கள்? அதற்குப் பெரும் காரணம், முடிந்து போன அன்றைய நாளின் சிந்தனைகள் முழுமையடையாமல் எச்சங்களாய்த் தொக்கி நிற்பதே. தொக்கி நிற்கும் எது பற்றியும் கவலைப் படாமல், ஆஃ ப் பட்டனை அழுத்தியதும் தூங்கி விடும் நம் அழகுக் கணிப்பொறியைப் போல நாமும் தூங்கி விழுந்து விடுவதற்கு எளிய வழி ஒன்றை முனைவர். வெய்ல் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார் (இதெல்லாம் நம் முப்பாட்டன் கண்டுபிடித்ததுதான் என்று ஆவணம் வைத்திருப்பவர்கள், வெள்ளைக்காரருக்கு மரியாதை செய்து விட்டமைக்கு மன்னித்தருள்க). எனக்குப் பெரும் உதவியாக இருந்த இந்தப் பழக்கம் என் போன்ற பலருக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்ற நம்பிக்கையிலேயே அது பற்றிப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்றுமில்லை. இது ஓர் எளிய மூச்சுப் பயிற்சி. நான்க...