4-7-8

ஏதோவொரு வகையில் நம் வாழ்க்கையை மாற்றுகிற பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதுதானே கல்விகளில் எல்லாம் தலையாயது. அப்படியான ஒரு பழக்கத்தைச் சமீபத்தில் படித்து விட்டு, சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சியில் திரிகிறேன் கடந்த சில வாரங்களாக. அது யாது? படுக்கையில் படுத்ததும் தூக்கம் வராமல், பல மணி நேரம் புரண்டு புரண்டு படுப்பவரா நீங்கள்? அதற்குப் பெரும் காரணம், முடிந்து போன அன்றைய நாளின் சிந்தனைகள் முழுமையடையாமல் எச்சங்களாய்த் தொக்கி நிற்பதே. தொக்கி நிற்கும் எது பற்றியும் கவலைப் படாமல், ஆஃப் பட்டனை அழுத்தியதும் தூங்கி விடும் நம் அழகுக் கணிப்பொறியைப் போல நாமும் தூங்கி விழுந்து விடுவதற்கு எளிய வழி ஒன்றை முனைவர். வெய்ல் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார் (இதெல்லாம் நம் முப்பாட்டன் கண்டுபிடித்ததுதான் என்று ஆவணம் வைத்திருப்பவர்கள், வெள்ளைக்காரருக்கு மரியாதை செய்து விட்டமைக்கு மன்னித்தருள்க). எனக்குப் பெரும் உதவியாக இருந்த இந்தப் பழக்கம் என் போன்ற பலருக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்ற நம்பிக்கையிலேயே அது பற்றிப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒன்றுமில்லை. இது ஓர் எளிய மூச்சுப் பயிற்சி. நான்கே நான்கு முறை இதைச் செய்தால், அடுத்த ரீலை ஓட்டத் தொடங்கும் முன்பே உறக்க தேவதை தழுவிச் சாய்த்து விடுகிறாள். பயிற்சியானது... மிக மிக எளிது. அதன் பெயர் 4-7-8 என்று இட்டிருக்கிறார். அதாகப்பட்டது... நான்கு வினாடிகள் மூச்சை அமைதியாக உள்ளிழுத்து, ஏழு வினாடிகள் மூச்சடக்கி, எட்டு வினாடிகள் சத்தமாக வெளியிட வேண்டும். இதை நான்கே நான்கு முறை செய்தால் போதும். நான்காம் முறை செய்யும் முன்பே ஒரு அருமையான கொட்டாவி வரும். அந்த முதல் கொட்டாவி வரும் போது, முனைவர் வெய்லுக்கும் எனக்கும் ஒரு நன்றி சொல்வீர்கள் பாருங்கள். அதற்காகவே வாழலாம் ஆயிரம் ஆண்டுகள். இது எனக்கு மெய்யாலுமே வேலை செய்தது. உங்களுக்கும் செய்யும் - செய்ய வேண்டும். அப்படிச் செய்யா விட்டாலும், பயப்பட வேண்டாம். பழகப் பழகப் பலருக்கும் தூக்கம் வரும் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு மேலும் புரண்டு புரண்டே படுத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், உங்களுக்காக எம் ஆழ்ந்த இரங்கல்கள். இதை முயன்று பார்த்துவிட்டு, நாளை காலை எழுந்ததும் என்னைப் போலவே மகிழ்ச்சியில் தங்கு தங்கென்று குதிக்கத் தோன்றினால், இந்தத் தகவலுக்குக் கீழே வந்து ஒரு கருத்து மட்டும் போட்டு விட்டுப் போங்கள். இந்த உலகத்தில் நாமும் நாலு பேர் வாழ்க்கையை மாற்றி விட்டோம் என்ற நிம்மதியில் நாளையும் நல்ல தூக்கம் கிட்டும். அதுவே 4-7-8-இன் உதவியில்லாமலே நடந்து விட்டால் நல்லதுதானே!

யாருக்குய்யா வேணும் அப்பிடி ஒரு குறுக்கு வழித் தூக்கம் என்போர் மன்னித்தருள்க. கூடிய விரைவில் உங்களுக்குப் பிடித்த மாதிரி வேறு ஏதாவது கிடைத்தால் வந்து சொல்கிறேன்!

http://www.drweil.com/drw/u/VDR00160/Dr-Weils-Breathing-Exercises-4-7-8-Breath.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்