எர்னஸ்டோ சே குவேரா - ஐ. லாவ்ரெட்ஸ்கி
கிட்டத்தட்ட முப்பதாண்டு காலமாக மீண்டும் மீண்டும் கண்ணில் பட்டுக்கொண்டு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த ஐ. லாவ்ரெட்ஸ்கியின் ‘எர்னஸ்டோ சே குவேரா’ ஒருவழியாக முடிவுக்கு வருகிறது. சந்திரகாந்தன் என்பவரின் தமிழ் மொழிபெயர்ப்பு. இடையில் இரண்டு-மூன்று முறை படிக்கத் தொடங்கிப் பாதியிலும் விட நேர்ந்தது. அப்படிப் பாதியில் விட நேர்ந்ததற்கு முக்கியக் காரணம், நடையில் இருக்கும் மொழிபெயர்ப்பின் தாக்கம். இம்முறையும் அது படிப்பதற்குப் பெரும் இடையூறாகவே இருந்தது. அது மட்டுமில்லாமல் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள் வேறு. தொழில்நுட்பம் பெரிதும் வளராத அன்றைய காலத்தில், எந்தக் காலத்திலும் நிதி வசதி அதிகம் இல்லாத இடதுசாரிகளின் வெளியீட்டில் வரும் ஒரு நூலில் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். பின்னர் வெளிவந்த அடுத்தடுத்த பதிப்புகளில் இவை களையப்பட்டிருக்க வேண்டும் என்று நம்புவோம்.
சே குவேரா மீதான ஈர்ப்பின் காரணமாக அனைத்தையும் மீறி இம்முறை நூலை முடித்துவிட வேண்டும் என்று பிடிவாதமாக வாசித்து முடித்தேன். நூலெங்கும் வாசகனைத் தக்க வைத்துக்கொள்ளும் நடை இல்லாததை அடிக்கடி உணர முடிந்தது. இந்தப் பிரச்சனை கண்டிப்பாக ஆங்கிலப் பதிப்பில் இருந்திராது. நமக்குத் தொடர்பேயில்லாத ஏதோவொரு கண்டத்தில் நடந்த கதை என்பதால் நமக்குப் பழக்கப்பட்டிராத பெயர்ச்சொற்களும் நம் வாசிப்பைப் பெருமளவில் கடினமாக்குகின்றன. அதையும் மீறிப் பல முக்கியமான வரலாற்றுத் தகவல்களைப் படித்துக்கொள்ள முடிந்தது.
நம்மைப் போன்ற சராசரிக் குடிமக்களின் வாழ்க்கையையும் அவர்களின் நியாயங்களையும்விட இராணுவ வாழ்க்கை வாழ்வோரின் வாழ்க்கையும் நியாயங்களும் வேறுபட்டவை என்பதை இந்த நூலிலும் பல இடங்களில் உணர முடிந்தது. இராணுவ வாழ்க்கையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தப்பி ஓட முயன்ற ஒரு சக வீரனைச் சற்றும் யோசியாமல் சுட்டு வீழ்த்தி விடும் நிகழ்வு மனதை மிகவும் தைத்தது. மக்கள் நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் நல்லெண்ணத்தோடு புரட்சிக்காரர்களோடு கைகோக்கிற ஒருத்தர், பின்னர் தனக்கு அந்த வாழ்க்கை ஒத்துவராது என்று கழன்று கொள்ள விரும்பினால் அது தவறா என்ற கேள்வி தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கிறது. இதைவிட, தொடக்கத்தில் இருந்தே ‘நமக்கெதற்கு வம்பு?’ என்று ஒதுங்கி இருந்துவிடும் கூட்டம் மேலோ என்ற கேள்வியை எழுப்பும் கேள்வி. அதே வேளையில் அப்படி ஒருவர் கழன்று கொள்வதை அனுமதித்து விட்டால், அடுத்தடுத்து மொத்தப் படையும் குலைந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதைவிடப் பெரும் அபாயம், அப்படிக் கழன்று செல்லும் ஒருத்தர், எதிரியின் கைக்குள் சிக்கி, மொத்தப் புரட்சி இயக்கத்தையும் வீழ்த்த உதவிடவும் முடியும். அந்த நோக்கத்தில் பார்க்கிறபோது, அப்படித் தப்ப முயன்றவரைப் போட்டுத் தள்ளியதன் நியாயமும் ஓரளவு புரியத்தான் செய்கிறது.
அடுத்ததாக, உணவுக்குச் சிக்கல் வரும்போதெல்லாம் அவர்கள் குதிரையை அடித்துக் கொன்று சாப்பிட்டுவிடுகிறார்கள். அப்படிக் குதிரைக்கறி தின்பதுவும் நமக்கு ஏற்றுக்கொள்ளச் சிரமமாக இருக்கிற ஒன்று.
இதற்கெல்லாம் மேலாக, ஓர் அர்ஜெண்டைனாகப் பிறந்து, தனக்குச் சம்பந்தமே இல்லாத கியூப நாட்டின் புரட்சிக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்துப் போராடி, எத்தனையோ சோதனைகளைக் கடந்து, பலமுறை மறுபிறப்பு போல் எடுத்து, அந்த உன்னதமான குறிக்கோளையும் அடைந்து, உலகில் முதன்முறையாக பொதுவுடைமைக் கோட்பாட்டை நடைமுறைப் படுத்திய மிகச் சில நாடுகளில் ஒன்றான கியூப அரசில், தன் நண்பர்-தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில், ஒரு மரியாதைக்குரிய அமைச்சர் பொறுப்பில் பணியாற்றி, அதன்பின்பு பாதுகாப்பு மிக்க – கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ முடிந்திருந்த போதும், அதைத் தூக்கி எறிந்து விட்டு, கொடுங்கோல் ஆட்சியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த இன்னொரு பக்கத்து நாடான பொலிவியாவின் விடுதலைக்காக மீண்டும் தியாக வாழ்க்கை வாழப் புறப்பட்ட அவரின் நோக்கந்தான் என்னவென்று புரிவது எளியவர்கள் நமக்கு மிகவும் சிரமமே.
தன் பிறப்பே இது போன்று மக்கள் நல்வாழ்வுக்காகப் போராடிச் சாவதற்காகத்தான் என்று திண்ணமாக நம்பியிருக்கிறார். அதுதான் அவரைக் காவு வாங்கியதும். தொழிற்துறை, விவசாயத்துறை, வெளியுறவுத்துறை என்று அரச மரியாதையோடு நடமாடித் திரிந்து, வயதாகி இயற்கை மரணம் அடைந்து, அனைத்து அரச மரியாதைகளோடும் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டியவர், எதற்காகப் பல நாட்களாக உணவு கிடைக்காமல், நீர் கூடக் கிடைக்காமல், காடுகளுக்குள் அலைந்து சீரழிந்து, போராளி வாழ்க்கை வாழ்ந்து, எதிரியின் கையில் சிக்கிச் சின்னாபின்னப் பட்டு, காடெல்லாம் கயிற்றால்-சங்கிலியால் மிருகத்தைப் போலத் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு அழிந்தார்? இதுதான் அவரை இன்று இவ்வளவு பிரபலம் ஆக்கியிருக்கிறது.
சேவின் வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுக்கும் மற்றொரு பாடம், ஒருமுறை வெற்றி பெற்றுவிட்டால் அதே போன்று எல்லா முறையும் வெற்றி கிடைத்துவிடும் என்று நம்பி எதிலும் இறங்கிவிடக் கூடாது. கியூபப் புரட்சியும் தோல்விக்கு அருகில் பலமுறை சென்று வந்ததுதான். ஆனால், கியூபப் புரட்சியில் கிடைத்தது போல பொலிவியப் புரட்சியில் வெற்றி கிட்டாமல் போனதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒருவேளை பொலிவியப் புரட்சி வெற்றி பெற்றிருந்தால், அங்கிருந்து புறப்பட்டு வேறொரு பக்கத்து நாட்டில் புரட்சி நடத்தப் போயிருப்பார்; அங்கு போர்க்களத்தில் வீரமரணம் அடைந்திருப்பார்; கண்டிப்பாக எந்த நாட்டிலும் நிலைகொண்டு தங்கி, அரச மரியாதைகளை அனுபவித்து, இயற்கை மரணம் எய்தி, அரச மரியாதைகளோடு அடக்கம் செய்யப்படப் பிறந்த பிள்ளை இல்லை அவர். அப்படித்தான் அவரை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒன்று, கியூபப் புரட்சி பெருமளவில் கியூபர்களால் நடத்தப்பட்டது. சே போன்று பல வெளிநாட்டவரும் இருந்தனர் என்றாலும் கியூபர்களும் கியூபாவின் நிலப்பரப்பையும் மக்களையும் நன்கறிந்தவர்களும் நிறைய இருந்தனர். பொலிவியப் புரட்சியோ பெருமளவில் வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்டது. கியூபப் புரட்சி கியூபர் ஃபிடல் காஸ்ட்ரோவால் தலைமையேற்று நடத்தப்பட்டது. சே அவரின் தலைமையேற்று அவருக்குக் கீழே பணிபுரிந்தார். பொலிவியப் புரட்சியோ அர்ஜெண்டைன் சேவால் தலைமையேற்று நடத்தப்பட்டது. கியூபப் புரட்சியின் போது ஃபிடல் காஸ்ட்ரோவுடன் மிக நெருங்கிப் பணி புரிந்த அனுபவத்தை நம்பியும் அந்தத் தன்னம்பிக்கையோடும் சே பொலிவியப் புரட்சியில் இறங்கியிருக்கலாம்.
இந்த நூலில் நமக்குக் கிடைக்கும் மற்றொரு முக்கியத் தகவல் – ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் சேவுக்கும் இடையிலான நட்பு பற்றியது. இடதுசாரிகளைப் பொருத்தமட்டில், மார்க்ஸ்-ஏங்கல்ஸ் நட்புக்கு அடுத்தபடியாகப் பெரிதும் கொண்டாடப்பட்ட நட்பு ஃபிடல்-சே நட்பு எனலாம். ஃபிடல் வாழ்வின் மிகக் கடுமையான நினைவுகளில் ஒன்றாக சேவின் மரணம் இருந்திருக்க வேண்டும். சேவின் மரணத்தை அதிகாரபூர்வமாக உலகுக்கு அவர் அறிவிக்கும் தகவலும் நூலின் கடைசியில் வருகிறது. அதில் அவர் எதிரிகளின் கைகளில் சிக்கித் தன் நண்பர் என்னவெல்லாம் அனுபவித்தாரோ என்று வருந்திப் பேசியிருப்பது நமக்கும் பெரும் வருத்தத்தைக் கொடுக்கிறது. அவரைக் கொன்றும் ஆத்திரம் அடங்காமல் அவருடைய கைகளை வெட்டி எடுக்கிறார்கள் எதிரிகள். அந்தக் கைகளையும் பொலிவிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிற ஒரு முக்கிய நபரே க்யூபா வந்து சேரும் வகையில் தன் உயிரையும் பணயம் வைத்துச் செயல்பட்டிருக்கிறார். அந்தக் கைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பது பற்றியும் ஃபிடல் உரையாற்றுகிறார்.
இரண்டு, கியூபப் புரட்சிக்கு கியூப மக்களின் ஆதரவு நிறையக் கிடைத்தது. விவசாயிகள் அவர்களுக்கு நிறைய ஒத்துழைத்தார்கள். இதைப் புரட்சியின் மிகவும் முக்கியமான ஒரு கூறாகப் பார்த்தார் – பேசினார் ஃபிடல். பொலிவியப் புரட்சிக்கு பொலிவியர்கள் உதவ முன்வரவே இல்லை. முக்கியமாக விவசாயிகள் புரட்சியாளர்களை விட்டு விலகியே நின்றார்கள். யாருக்காகப் போராடுகிறோமோ அவர்களே நம்மை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது எவ்வளவு கொடூரமான உணர்வு. அதையும் மீறித்தான் புரட்சியாளர்கள் தம்மையும் தம் உயிரையும் அர்ப்பணித்தார்கள். பொலிவியப் புரட்சியாளர்களால் பொலிவிய மக்களைத் தம் பக்கம் கொண்டு வரவே முடியாமல் போனதற்கு முக்கியக் காரணம், நாம் மேலே பார்த்த முதற்காரணம் – பொலிவியர்களே குழுவில் குறைவாக இருந்தது அல்லது வெளிநாட்டவர்கள் நிறைய இருந்தது.
சேவின் உடல்நிலை ஒரு புரட்சியாளனுக்கு உரியதே அல்ல. சே ஒரு மருத்துவர். அதைவிடப் பெரிதாக அவர் ஒரு காசநோயாளி. அவர் போராளியாக மாறிய முதல் நாள் முதல் எதிரியின் கையில் சிக்கிச் சித்திரவதை பட்டுச் செத்த கடைசி நாள் வரை அவரைக் காசநோய் பாடாய்ப் படுத்தி இருக்கிறது. ஆனால் காசநோயின் காரணமாக அவர் எந்தச் சலுகையையும் பெறுவதை விரும்பவில்லை. அதற்காக அவருக்கு யாரும் கரிசனம் காட்டுவதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் போராளியாக வாழ்ந்திருக்கிறார்.
எல்லாப் புரட்சியாளர்களையும் போலவே அவரும் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுவிட்டு வந்தவர்தான். கட்டிய மனைவியையும் பெற்ற பிள்ளைகளையும் விட்டுவிட்டுச் செல்லும் அளவுக்கு ஏதோவொன்று அவர்களைப் புரட்சியின்பால் இழுக்கிறது. அதுதான் புரட்சியாளர்களை நம்மைப் போன்ற சராசரி மனிதர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது.
கியூபப் புரட்சிக்கு முக்கியக் காரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் இருக்கிறது. அமெரிக்காவை எதிர்த்தால் எப்படியெல்லாம் சீரழிய வேண்டிவரும் என்பதைக் கியூபாவிலும் பொலிவியாவிலும் வேறுபல தென்னமெரிக்க நாடுகளிலும் அமெரிக்கா மீண்டும் மீண்டும் அப்போதே காட்டியிருக்கிறது. சாம-தான-பேத-தண்டம் என்று அத்தனையையும் பயன்படுத்தி எதிரிகளை வழிப்படுத்துவதில் அமெரிக்கா எப்போதும் வல்லமை பெற்றிருந்திருக்கிறது. அவற்றுள் முக்கியமான ஒன்று, எதிரிகளைப் பற்றிப் பொய்யும் புரட்டும் எழுதியும் எழுத வைத்தும் தன் அரசியலை முன்னகர்த்தும் வித்தையை அமெரிக்காதான் முதன்முதலில் உலகுக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் போலத் தெரிகிறது (அதைத்தான் நம்ம ஊர் மைனர்க் குஞ்சுகள் இப்போது செய்து பழகிக் கொண்டிருக்கிறார்கள் போல!). முக்கியமாக சே தலைமறைவாக இருந்த காலத்தில், ஃபிடலுக்கும் சேவுக்கும் பிரச்சனை என்பது போன்றெல்லாம் கட்டிவிட்ட கதைகள் இன்றைய நம் பத்திரிகைகளில் செய்யப்படும் ‘இழுத்துவிடும்’ வேலைகளை நினைவுபடுத்துகின்றன. அமெரிக்காவின் எல்லாவிதமான நெருக்கடிகளையும் மீறித்தான் புரட்சியாளர்கள் தம் வேலையைக் காட்டியிருக்கிறார்கள். அப்படி மிக இக்கட்டான ஒரு சூழலில்தான் சோவியத் யூனியன் கியூபாவின் நண்பனாகி இருக்கிறது. அதுவே அமெரிக்காவை மேலும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியும் விடுகிறது.
சேவுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. அதிலிருந்து நிறையத் தகவல்கள் கிடைத்திருக்கிறது. மருத்துவர் படிப்புப் படித்து முடித்து, “ஏழைகளுக்குச் சேவை செய்வதே!” என் பிறப்பின் நோக்கம் என்று பேட்டி கொடுத்துவிட்டு, ஒழுங்காக ஒரு மருத்துவமனையில் போய் வேலையைப் பார்க்காமல், தென்னமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தின்போது ஏழை மக்கள் படும் பாட்டைப் பார்த்துத்தான் புரட்சியாளனாகும் பாதையை வகுக்கிறார். தன்னைவிடக் கொடுமையான வாழ்க்கை வாழ்வோரைப் பார்க்கும்போது மனிதர்களுக்கு இரண்டுவிதமான எண்ணங்கள் வருகின்றன. ஒன்று, தாம் எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள் என்று புளகாங்கிதம் அடைந்து, தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கைக்காகக் கடவுளுக்கு உரிய நன்றி செலுத்தி நகரும் நம்மைப் போன்றவர்களின் எண்ணம். இன்னொன்று, அவர்களின் வாழ்க்கையை தம்முடையதைப் போல வளமாக்க தான் என்ன செய்யவேண்டும் என்று கேள்வி கேட்டு, அதற்கான விடை தேடிக் களத்தில் குதிக்கும் சே போன்றவர்களின் எண்ணம்.
சேவின் கதை நமக்குச் சொல்லும் இன்னொரு பாடம் – பேசாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்துவிட்டால் உலகின் இன்பதுன்பம் எதுவும் நமக்குப் பெரிதாகத் தெரியப் போவதில்லை; என்றைக்கு வெளியுலகில் என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்கப் புறப்படுகிறோமோ அன்றைக்கே இது போன்று மனிதர்கள், ‘தடம் மாறிச்’ சீரழிய வாய்ப்பு உருவாகிவிடுகிறது. இதனால்தான் நம் பெற்றோர்கள் நம்மை வீட்டுக்குள் வைத்து நைக்கப் பார்க்கிறார்களோ என்றும் தோன்றுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு இப்படியொரு பயணம் (அது தனிப்பட்ட முறையில் தொழில்ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பயணம் என்றாலும்) போன காந்தியார்தான் பின்னாளில் இனவெறிக்கு எதிராகக் களம் இறங்குகிறார். ஆகவே, இந்த நூலின் முதலும் முடிவுமாக நான் எடுத்துக் கொண்டது, நமக்கு வெளியே அருகாமையிலோ – தொலைவிலோ, நாம் கண்டிருப்பதை விட – கேள்விப்பட்டிருப்பதைவிடக் கொடுமையான ஓர் உலகம் இருக்கிறது. அதைப் பார்க்க விரும்புவதும் விரும்பாமல் விலகிச் செல்வதும் முற்றிலும் நாமே எடுத்துக்கொள்ள முடிகிற முடிவு. ஆனால், நாம் இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்பகரமான வாழ்க்கை, தனக்கு எது பாதுகாப்பானது என்பதை மட்டும் பற்றி யோசித்து முடிவெடுத்தவர்களால் நமக்குக் கிடைத்திருப்பதில்லை; தன் ஓர் உயிர் தன்னைத் தவிர்த்து இன்னும் ஓர் உயிருக்காவது பயன்பட வேண்டும் என்று எண்ணி அதை அர்ப்பணித்தவர்களாலேயே நிகழ்ந்திருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக