தலைமை அடிமை

ஓர் அடிமை தேசத்தில் அவர்களுக்கேற்ற தலைவன் ஒருவன் இருந்தான். தேசத்தின் அடிமைப் புத்திக்குத் தலைவனே காரணம் என்றும் அந்தத் தலைவனுக்குப் பின் தேசமெங்கும் அடிமைத்தனம் ஒழிந்து விடும் என்றும் கனவு கண்டு கொண்டே காலங்காலமாகக் காத்திருந்தது ஓர் அறிவாளிக் கூட்டம். தலைவன் மறைந்ததும் அறிவாளிகள் எல்லோரும் குதூகலித்தனர். அத்தோடு அடிமைத்தனம் ஒழிந்து விட்டது என்று கொண்டாடிக் களித்தனர். மறுநாள் விடிந்ததும், மறைந்த தலைவனின் தலைமை அடிமை முடிசூட்டப் பட்டிருந்தார். 'தலைமை அடிமை' எனும் பதவி தலைமைப் பண்பைப் பார்த்துத் தரப்பட்டதில்லை; தலைசிறந்த அடிமைத்தனத்துக்காகத் தரப்பட்டது என்பது கூட மறந்து போயிருந்தது தேசத்தின் அறிவாளிகளுக்கும் குடிமக்களுக்கும். தலைமை அடிமையின் தலைமையைப் பார்த்துப் பூரித்தவர்கள், அவர்தான் அடிமைத்தனத்தை ஒழிக்க அடிமை வடிவாகவே வந்த தூதர் என்று கருத்துருவாக்கவும் கடுமையாக முயன்றனர். தம்மில் ஒருத்தர் தலைவன் ஆனதைக் கண்டு அடிமைகளும் அவரை ஆதரித்து வலுவூட்டுவர் என்று பெரு நம்பிக்கை கொண்டனர் அறிவாளிகள். அவர்கள் அறிவாளிகள். அறிவாளிகளின் உளவியல் நன்கறிந்தவர்கள். ஆனால் அடிமைகளின் உளவியல் அவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் புரிபடவில்லை. எல்லா அடிமைகளும் எப்போதும் அடிமைகளாக இருப்பதே அடிமைகள் தமக்கு நல்லதென்ற முடிவோடு அவர்களில் ஒரு சாரார் தலைமையேற்றிருந்த தலைமை அடிமையைக் கவிழ்க்கும் வேலைகளில் இறங்கினர்; இன்னொரு சாரார் அடிமை மேய்ப்பதில் அனுபவமுள்ள தலைமை ஒன்றை ஏற்பாடு செய்வதில் வேகம் காட்டினர். தலைமையேற்றிருந்த தலைமை அடிமைக்கு நாற்காலி பிடித்திருந்தது. அவர் நாற்காலியில் நன்றாக ஒட்டிக் கொள்ள ஆதரவு தருவதாகப் பல பெரிய இடத்துப் புள்ளிகள் எல்லாம் தெம்பு கொடுத்தன. நான்கைந்து நாட்கள் போன பின், அடிமைகள் தேசத்தில் தனக்கென்று அடிமைகள் இல்லாத தன்னால் தலைவனாகத் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற பயம் உள்ளூர வரத்தொடங்கியது. தெம்பு கொடுத்தவர்களும் ஏனோ வம்புக்குப் பயந்து ஒதுங்கிக் கொண்டது போலத் தெரிந்தது. தெம்பும் குறைந்தது. தமக்குத் தெரிந்தது அடிமைத் தொழில். அதிலும் தேர்ந்தது தலைமை அடிமைப் பொறுப்பு. அதைக் காப்பாற்றிக் கொள்வதே அறிவாளித்தனம் என்று எண்ணித் துணிந்தார் - மன்னிக்கவும், குனிந்தார். எல்லாம் இப்போதைக்கு சுபம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்