நல்ல வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறது

சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜீவ கரிகாலன் என்ற காளிதாசனும் நானும் ஒருவரை ஒருவர் கண்டெடுத்தோம். ஆனால் எங்கள் உறவு கிட்டத்தட்ட எண்பதாண்டுப் பழமை (!) வாய்ந்தது. ஒவ்வொருத்தருக்கு ஒரு கிறுக்கு. சாதி, மதம், மொழி, இனம், நாடு, ஊர் என்று ஏதோவொன்றின் மீது ஏற்படும் கிறுக்கில் இருந்து நம் எவருமே தப்பியதில்லை என்றே நினைக்கிறேன். அப்படியான ஒரு கிறுக்கு சொல்லி வைத்தாற்போல் எங்கள் ஊர்க்காரர்கள் எல்லோருக்குமே எங்கள் ஊரின் மீது உண்டு. அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்திக் கொண்டே வருகிறோம். எங்கள் ஊர்க்காரர்கள் எல்லோருமே இணையத்தில் தேடிய முதற் சில சொற்களில் ஒன்று எங்கள் ஊரின் பெயராகத்தான் இருக்கும். நானும் இன்றுவரை அதைப் பல முறை செய்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏதோவொன்று புதிதாய்க் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அப்படியான ஓர் ஊர் அது. அப்படியான ஒரு தேடலின் போது நான் எங்கள் ஊரைப் பற்றி எழுதியிருந்த கட்டுரை ஒன்றைக் கண்டு தொடர்பு எல்லைக்குள் வந்தார் காளிதாசன். காளிதாசன் மட்டுமல்ல, அது போலப் பல பழைய உறவுகளை மீட்டுக் கொடுத்த கட்டுரை அது. அப்போது நான் சிங்கப்பூரில் இருந்தேன். இருவருக்குமே அம்புட்டு மகிழ்ச்சி. அந்த நாள் முழுக்கப் பெரும் மகிழ்ச்சியோடே கழிந்தது. இன்று காலை எழுந்த போது, சரியாக இன்றோடு ஐந்தாண்டுகள் ஆகிறது என்று முகநூல் நினைவுபடுத்தியது. இது பற்றிய உணர்வே இல்லாமல்தான் இன்றைய நாள் முழுக்கவும் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கே செலவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு நேற்றிரவு தூங்கச் சென்றேன். ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டுமே பேசும் நாங்கள் நேற்றுப் பேசியதும் கூட அப்படியே நடந்திருந்தது. ஏதோ பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருக்கிறது இப்போது.

சென்ற வாரத்தில் ஒரு நாள் திடீரென்று அழைத்து நான் ஏதோவொரு கேள்வி கேட்க (அதுவொரு முக்கியமான கேள்வி என்பதைப் பின்பொரு நாளில் பேசுவோம்), அதற்குப் பதிலாக இந்த நூலைப் படிக்குமாறு அது பற்றிய இணைப்பு ஒன்றை அனுப்பினார். உடனடியாக அந்த நூலை வாங்கி மூன்றே நாட்களில் தூக்கம் கெடுத்துப் படித்து முடித்து விட்டேன். அந்த அனுபவம் பற்றிய கட்டுரையே ஐந்தாம் ஆண்டு விழாக் கொண்டாடும் இந்த ‘எண்பதாண்டுப் பழைய’ நட்புக்குப் படையல்.

அவர் படிக்கச் சொன்ன நூலின் பெயர் – “Everybody loves a good drought” by P.Sainath. தமிழில் “நல்ல வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறது” என்று வைத்துக் கொள்ளலாம். அதென்ன நல்ல வறட்சி? அதே கேள்விதான் எனக்கும். நூல் வீடு வந்து சேர்வதற்கு முன்பே – நூலைப் பற்றிய அறிமுகம் படித்த போதே - ஒருவிதக் கிறக்கம் ஏற்பட்டது. அதெப்படி ஒருவனிடம் முதல் முறையாக ஒரு நூலைப் படிக்கச் சொல்லும் போதே இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விட்டான் இந்தக் காளிதாசன் என்று மண்டை சுற்றியது. இதை விடச் சிறந்த வேறொரு நூலை எனக்குப் பரிந்துரைத்திருக்க முடியுமா என்றே தெரியவில்லை. அதற்கு முக்கியமான காரணம் இந்த நூலின் களம், எங்கள் ஊரும் ஊர் சார்ந்த பகுதிகளும் போல இந்தியாவெங்கும் இருக்கும் எட்டு மாவட்டங்கள். அதில் ஒன்று இராமநாதபுரம் மாவட்டம் என்பது கூடுதல் ஈர்ப்பு. எங்கள் ஊர் இருப்பதென்னவோ தூத்துக்குடி மாவட்டம் என்றாலும் பண்பாட்டில், பழக்கவழக்கத்தில், மொழியில் இராமநாதபுரம் மாவட்டத்துக்கே பக்கம். அது மட்டுமில்லை. அதுவும் குறிப்பாக எங்கள் முன்னோர்கள் அனைவரும் பல தலைமுறைகள் முன்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்து இங்கே குடியேறியவர்கள் என்பது எங்கள் வீடுகளில் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் கதை என்பதாலும், இந்த நூல் அதைப் பற்றியே மிக நுட்பமாகப் பேசுகிறது என்பதாலும், இந்த வாசிப்பு இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக என்று சொல்லும் அளவுக்கு முற்றிலும் மாறுபட்ட ஓர் அனுபவம்.

2005 என்று நினைக்கிறேன். ஏதோவொரு கட்டுரையில் தமிழ்நாட்டின் மிகவும் முன்னேறிய மற்றும் பின்தங்கிய மாவட்டங்கள் மற்றும் வட்டங்கள் பற்றி ஒரு தகவலைப் படித்து விட்டு அதை உடனடியாக யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. தகவல் – தமிழ்நாட்டின் மிக முன்னேறிய மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம், வட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சி வட்டம்; தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம், வட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் முதுகுளத்தூர் வட்டம். அந்தத் தகவலுக்குள் நம்மைப் பற்றி ஏதோ இருப்பது போலவும் அதை உடனடியாக நம்மவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது. இப்போது போல் முகநூல் அவ்வளவு பிரபலம் இல்லை அப்போது. இப்போது முகநூல் போல அப்போது மின்னஞ்சல். நகைச்சுவைகள், துணுக்குகள்,  பிரச்சாரங்கள்... எல்லாமே மின்னஞ்சலிலேயே பகிரப்படும் (ஆனாலும் இந்த அளவுக்கு இல்லையப்பா! கூலிக்கு மாரடிப்பவர்கள், குண்டக்க மண்டக்கப் பொய் சொல்பவர்கள் எல்லாம் ரெம்பவே கூடி விட்டனர் இப்போது!). உடனடியாக என் கல்லூரி நண்பர்கள் மட்டும் இருக்கும் யாஹூ மின்னஞ்சல் குழுவுக்கு அதை அனுப்பி வைக்கிறேன். அதுவொரு தவறான அவையில் பகிரப்பட்ட பயனற்ற தகவல் என்பதை உடனடியாக உணர்கிறேன். காரணம், என் கல்லூரி நண்பர்கள் எவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தவரோ இராமநாதபுரம் மாவட்டத்தவரோ பொள்ளாச்சி வட்டத்தவரோ முதுகுளத்தூர் வட்டத்தவரோ அல்லர். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், எங்கள் இனக்குழுவின் தாய்க்கிராமம் முதுகுளத்தூர் வட்டத்தில்தான் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்; என் தாய்வழி குலதெய்வம் கூட முதுகுளத்தூர் வட்டத்தில்தான் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் போது, அங்கே வெயிலில் சுருண்டு கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து, ‘இந்த வெயிலில் சுருண்டு கொண்டிருந்திருக்க வேண்டியவர்கள்தாம் நாமும்; அன்று ஒரேயொரு மனிதனோ குடும்பமோ இங்கிருந்து வெளியேறி நம் எல்லோருக்கும் முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கையை வழங்கி விட்டார்கள்’ என்று எண்ணிக் கொள்வோம். அதனால் அந்தத் தகவல் எனக்கு முக்கியமாகப் பட்டது. எனக்கு முக்கியமெனப் படுகிற தகவல் எல்லாம் என்னைச் சுற்றியிருக்கிற எல்லோருக்கும் முக்கியமாகப் பட வேண்டியதில்லை என்பதை மீண்டும் ஒரு முறை புரிந்து கொண்டு, அந்தத் தகவலை மட்டும் மனதில் ஏற்றி வைத்துக் கொள்கிறேன். அது இன்று வரை அவ்வப்போது மனக் கண்மாயில் கரையொதுங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

பெங்களூர் வந்த புதிதில் அடிக்கடி இது பற்றிச் சிந்திப்பேன். நம்மைச் சுற்றியிருக்கும் தமிழ் நண்பர்களை ஒரு பார்வை பார்த்தால், எல்லோருமே கொங்கு நாட்டு – சோழ நாட்டு – பல்லவ நாட்டு மைந்தர்கள்தான் இருப்பர். மருந்துக்குக் கூட ஒரு மதுரைக்காரனோ திருநெல்வேலிக்காரனோ இருக்க மாட்டான். இதனால்தான் அந்தப் பகுதி மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியோ என்று எண்ணிக் கொள்வேன். இப்போது நிறையப் பேரைப் பார்க்க முடிகிறது என்பது வேறு கதை. காவிரி ஓடும் கொங்கு மண்டலமும் சோழ மண்டலமும் வளம் கொழிக்கும் பூமி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் வட மாவட்டங்களில் பயணிக்கும் போதெல்லாம் அவை இராமநாதபுரத்தை விடவும் பின்தங்கி இருப்பது போலவே படும். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருக்கும் நிலையைவிட இராமநாதபுரம் பரவாயில்லையே என்றுதான் தோன்றும். ஆனால் வட மாவட்டங்களில் உள்ளவர்கள் பஞ்சம் பிழைக்க சென்னைக்கோ பெங்களூருக்கோ வந்து அமைத்துக் கொள்கிற மாதிரியான வாழ்க்கையை இராமநாதபுரத்துக்காரர்கள் மதுரையில் வந்து அமைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை. மதுரையே ஒரு பெரிய இராமநாதபுரம்தானே. ஆக, வெளியேறி வந்து விட்ட அந்த மண்ணின் மைந்தர்கள் வேறு, எஞ்சியிருக்கும் மண் வேறு என்ற கோணத்திலும் பார்க்க வேண்டியுள்ளது. சரி போகட்டும். கதைக்கு வருவோம்.

நூலாசிரியர் பி.சாய்நாத் மும்பைக்காரர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்தவர் (இப்போதே இதைப் படிப்பதை நிறுத்தி விட நினைப்பவர்கள் நிறுத்தி விடலாம்!). டைம்ஸ் ஆஃப் இண்டியா இதழின் உதவித்தொகை பெற்று, இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய எட்டு மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, இரண்டாண்டுகளாக அவை ஒவ்வொன்றுக்கும் போய், அங்குள்ள மக்களைச் சந்தித்து, அவர்களோடே பல நாட்கள் இருந்து, இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார். இது எளிய பணி அல்ல. இன்று நடக்கிற பல ஆய்வுகள், கூகுளில் தேடித் பார்த்துத் தெரிந்து கொண்டு, தனக்கேற்றபடி தொகுத்து வழங்கப் படும் தகவல்களுக்கு வெளியே போவதில்லை. குறிப்பாக பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்குள் போய்ச் செய்ய வேண்டிய ஆய்வுகளை, எளிதில் அடைய முடிகிற – நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கிற சில ஊர்களில் மட்டும் நாலு பேரைச் சந்தித்து முடித்துக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். தான் ஓர் ஆங்கிலப் பத்திரிகையாளர் என்ற போதும், இந்திய மொழி இதழ்களை விட ஆங்கில மொழி இதழ்களின் தரம் பல வகைகளில் மேலானதாக இருக்கின்றது என்று நம்பினாலும், இது போன்ற ஆய்வுகளில் ஆங்கில இதழ்கள் கள நிலவரத்தை விட்டு நெடுந்தொலைவு தள்ளி நின்றே கருத்துச் சொல்கின்றன, அதனாலேயே உண்மைக்குப் புறம்பாகவும் நிறையப் பேசி விடுகின்றன என்பதையும், உள்ளூர் மொழி இதழ்களே உண்மைக்கு அருகில் இருப்பதாகவும் ஒத்துக் கொள்கிறார்.

இப்படியான தன் ஆய்வைக் கட்டுரைகளாக டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் முதலில் வெளியிட்டிருக்கிறார். சில கட்டுரைகள், ஒரு பத்திரிகையாளரோ அவர் எழுதும் கட்டுரைகளோ என்ன சாதித்து விட முடியும் என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அதிகாரத்தின் நாற்காலிகளை உடைத்திருக்கின்றன. நாம் வில்லன்களாகவே கேள்விப்பட்டுப் பழகிவிட்ட சில தலைவர்கள் கூட எப்படிச் சில வேளைகளில் சிறப்பாகச் செயல்பட்டார்கள் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. சில பிரச்சனைகளை அவர்கள் அரசியல் நோக்கோடு அணுகி எப்படிக் கேடு செய்கிறார்கள் என்பதும் வருகிறது. எப்போதும் மக்களோடு நிற்கிற நாயகர்கள் எவரும் அரசியல் அதிகாரத்துக்கு அருகில்கூடச் செல்வதில்லை என்பதும், அப்படித் தப்பித் தவறி அதிகாரத்தைச் சுவைத்து விடுகிற சிலர், பின்னர் எப்படி அதிகாரம் ஒன்றையே வாழ்வின் நோக்கமாக்கி மாறத் தொடங்கி விடுகிறார்கள் என்பதும் கூட ஒரு சில இடங்களில் வருகிறது.

பின்னர் இந்தக் கட்டுரைகளையெல்லாம் தொகுத்து நூலாக வெளியிட்ட போது, பெருமளவில் வரவேற்பையும் பல விருதுகளையும் பெற்றுத் தந்திருக்கின்றன. இதெல்லாம் நடந்து இருபது ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த ஆய்வு, இந்தியப் பொருளியல் தரை தட்டிய தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நடத்தப்பட்டது. இந்தியாவில் தாராளமயக் கதவுகள் திறந்து விடப் பட்ட காலத்தோடு உடன் பயணிக்கிறது. அதனால் பல பிரச்சனைகள் இன்று எந்த நிலையில் இருக்கின்றன என்று தெரியவில்லை. மேலும் மோசமடைந்தும் இருக்கலாம். நாம் நம்ப விரும்புவது போல ஒரு வேளை தாராளமயம் அவற்றையெல்லாம் சரியும் செய்திருக்கலாம். கடந்த இருபது ஆண்டுகளில் உங்களுக்கும் எனக்கும் வாழ்க்கை நிறையவே மாறியிருக்கிறது. அது எல்லோருக்கும் நடந்திருக்கிறதா என்றால், அது தெரியவில்லை. நீங்களும் நானும் மட்டும்தான் இந்தியா என்றுதான் நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம் என்று குற்றஞ்சாட்டுபவர்களுக்குச் சரியான பதில் சொல்லும் பொருட்டாவது மீள் பார்வைக்கு உட்படுத்தப் பட வேண்டிய முக்கியமானதோர் ஆய்வு இது. அதுவே தாராளமயத்தின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் இருக்கும். உங்களுக்கும் எனக்கும் போலவே இந்த எட்டு மாவட்டத்து மக்களுக்கும் பசியும் பட்டினியும் வறட்சியும் நீங்கியிருந்தால் அது தாராளமயத்தின் வெற்றியின்றி வேறில்லை. ஒரு வேளை அவர்களுடைய வாழ்க்கை மேலும் சீரழிந்து போயிருந்தால், அவர்களுடைய உணவைப் பிடுங்கித் தின்ற பாவம் நம்மைச் சும்மா விடாது என்ற மன உளைச்சலோடே நமக்கான தேடல்களைத் தொடர வேண்டியதுதான்.

முதலில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய எட்டு மாவட்டங்கள் எவை என்ற பட்டியலைப் பார்த்தாலே அதில் நிறையப் பேச இருக்கின்றன. காலம் காலமாகவே இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்கள் என்றால் BIMARU என்று ஒரு பட்டியலை நீட்டுவார்கள். பீகார், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களே அவை. இவர் என்னவென்றால் பீகாரில் இரண்டு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்கள் என்று தொடங்கி ஒரிசாவில் இரண்டு மாவட்டங்கள் (அதில் ஒன்று ஆந்திரப் பிரதேச எல்லையில் இருப்பதால் ஆந்திரப் பிரதேச மாவட்டம் ஒன்றும் துணை நடிகராக உள்ளே வருகிறது), தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்கள் என்று நம்மைக் குழப்பி விட்டிருக்கிறார். அப்படியானால் இராஜஸ்தானும் உத்திரப் பிரதேசமும் முன்னேறி விட்டனவா? எல்லோரும் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்று என்று சொல்வது டுபுக்கா? இப்படிப் பல கேள்விகள் வரலாம். அதற்கான விடை சிறிதளவு உற்றுக் கவனித்தாலே புரிந்து விடும். BIMARU என்கிற பட்டியல் மாநிலங்களுக்கானது. இந்த நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் மாவட்ட வாரியானது. இராஜஸ்தானும் உத்திரப் பிரதேசமும் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் மட்டும் என்றில்லாது மொத்த மாநிலமும் சீரான சீரழிவைக் கொண்டிருப்பதால் இந்தப் பட்டியலில் இருந்து தப்பியிருக்கலாம். அது போலவே, இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றான - மொத்தத் தென்னிந்தியாவுக்கும் முன்னணி மாநிலமான - தமிழ்நாடு, சில மாவட்டங்களில் மட்டும் பின்தங்கியிருக்கலாம். இருப்பினும், இவ்வளவு முன்னேறியிருக்கும் ஒரு மாநிலம், இப்படி மொத்த நாட்டிலும் பின்தங்கிய எட்டு மாவட்டங்களின் பட்டியலில் தன்னுடைய இரண்டு மாவட்டங்களும் இடம் பெற்றிருப்பதைப் பெரும் அவமானமாகக் கருத வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. தென்னிந்தியாவின் வேறு எந்த மாநிலமும் இந்தப் பட்டியலில் இல்லை என்பது அதை மேலும் சிக்கலாக்குகிறது. அதற்கான உரிய பணிகளை உடனடியாகச் செய்து சரி செய்ய வேண்டும். ஏற்கனவே இது சரியாகியும் இருக்கலாம். தொண்ணூறுகளின் துவக்கத்தில் எழுதிய கட்டுரைகளை தொண்ணூறுகளின் நடுவில் நூலாக வெளியிடும் போதே “இதே எட்டு மாவட்டங்கள்தாம் இப்போதும் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய கடைசி எட்டு மாவட்டங்கள் என்று சொல்ல முடியாது” என்றிருக்கிறார் ஆசிரியர். இரண்டு – மூன்று ஆண்டுகளிலேயே அவ்வளவு மாறியிருக்கலாம் என்றால், இருபது ஆண்டுகளில் எவ்வளவோ மாறியிருக்கலாம். சில மாறாமலும் இருக்கலாம். பஞ்சத்து ஆண்டியும் இருக்கிறார்கள்; பரம்பரை ஆண்டியும் இருக்கிறார்கள் அல்லவா? யார் யார் எது எது என்றுதான் தெரியவில்லை.

சரி, அப்படித் தமிழ்நாட்டின் மானத்தைக் கொடி கட்டிப் பறக்க விடும் அந்த இரு மாவட்டங்கள்தாம் எவை?

பக்கத்துப் பக்கத்தில் இருக்கும் பாண்டிய நாட்டு இராமநாதபுரமும் புதுக்கோட்டையுமே அவை. இதில் கொடுமை என்னவென்றால் புதுக்கோட்டையை ஒட்டியிருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் மாநிலத்தின் வளமான மாவட்டங்களில் ஒன்று. அண்ணாந்து பார்க்கின்ற மாளிகையும் அருகினில் ஓலைக் குடிசையும் எப்போதுமே பிரிக்க முடியாதவையா என்ன?

“இராமநாதபுரம் சரி, புதுக்கோட்டையுமா???” என்ற அதே வியப்புதான் எனக்கும். இதில் வேறு பல காரணிகளையும் சேர்த்துப் பார்த்தால் இது இன்னும் நன்றாகப் புரியும். இந்த எட்டு மாவட்டங்களுக்கும் என்று சில பொதுத் தன்மைகள் இருக்கின்றன. வறட்சிக்கும் நீருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதே வேளையில் இந்த எட்டு மாவட்டங்களுமே இந்தியாவிலேயே குறைவான மழைப் பொழிவு அல்லது நீர்வரத்து கொண்ட மாவட்டங்களா என்றால் இல்லை. இந்தியாவிலேயே குறைவான மழைப் பொழிவு கொண்ட மாவட்டங்களாக இருக்கின்றன தமிழ்நாட்டின் இவ்விரு மாவட்டங்களும். இயற்கையே நமக்கு எதிராக இருக்கிறது. அதையும் மீறி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இம்மாவட்டங்களில் அற்புதமான நீர் மேலாண்மைப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதையும் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். எடுத்துக்காட்டுக்கு, இராமநாதபுரம் பெரிய கண்மாய் எப்போது கட்டப்பட்டது என்ற தகவலே கிடைக்கவில்லை; அவ்வளவு பழைமையானது; குறைந்த பட்சம் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதாக இருக்கும் என்கிறார். அது போல எண்ணிலடங்காத கண்மாய்கள் இருக்கின்றன இம்மாவட்டம் முழுவதும். ஆனால் மற்ற ஆறு மாவட்டங்களில் அதுவல்ல பிரச்சனை. நல்ல மழைப் பொழிவு இருந்தும், நீர் வரத்து இருந்தும் கூட முறையற்ற நீர் மேலாண்மையும் வேறு பல பிரச்சனைகளும் சேர்ந்து அங்கிருக்கும் எளிய மக்களைக் கொல்கின்றன. அதற்கு இயற்கை பொறுப்பல்ல. முழுக்க முழுக்க மனிதப் பேராசையும் சுரண்டலும் பொறுப்பின்மையும் விழிப்புணர்வின்மையும் மேலும் பல குறைபாடுகளுமே அவர்களை நாசம் செய்கின்றன. இயற்கை அல்ல. அது மட்டுமில்லை. வறட்சியின் போது மற்ற ஆறு மாவட்டங்களில் படும் அளவுக்கு இவ்விரு மாவட்டங்களில் உள்ள மக்கள் துன்பப் படுவதில்லை; உயிரிழப்பில்லை. அவர்களை விட எளிதில் சமாளித்து விடுகிறார்கள். அதற்குக் காரணம் இங்குள்ள மக்களின் கல்வியறிவு, விழிப்புணர்வு, அரசாங்கத்தின் பொறுப்புணர்ச்சி என்று சொல்கிறார். இது நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தவே செய்கிறது. தமிழ்நாடு எப்போதுமே அரசியல் ரீதியாகவும் கல்வியறிவிலும் விழிப்புணர்விலும் முன்னணியில்தான் உள்ளது. இதில் புரட்டிப் பேசும் வேலை எப்போது தொடங்குகிறது என்றால், தமிழ் தேசியம், திராவிடம், இந்துத்துவம் என்று ஏதோவொரு தன் அரசியல் விருப்பத்தை விற்க வேண்டிய நிலை வரும் போதுதான், கண்மூடித்தனமாக “ஐயையோ, தமிழ்நாடு இவர்களால் நாசமாப் போச்சே! அவர்களால் நாசமாப் போச்சே!!” என்று கூக்குரல் எழுப்ப வேண்டியதாகிறது. அதை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால், நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள் (யாராக வேண்டுமானாலும்), ‘இது என் நிலம்; இங்கு நடந்த வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் நானும் என் முன்னோரும் பொறுப்பு’ என்ற புள்ளியில் நின்று பார்த்தீர்களானால், இதில் இரு வேறு விதமான கருத்துகள் இருக்கவே முடியாது - தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னணியில்தான் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமில்லை. தென்னிந்தியாவே நூறாண்டுகள் வட இந்தியாவை விட முன்னால்தான் இருக்கிறது. பொருளியல் வளர்ச்சியானாலும் சரி, மற்ற எந்த வளர்ச்சியானாலும் சரி, “இன்றைய இந்தியா இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பா போலத்தான் இருக்கிறது” என்று சொல்லும் எவரிடமும், “தென்னிந்தியா?” என்று கேட்டால், “ஒரு நூற்றாண்டு” என்று இறங்கி வந்து விடுகிறார்கள். இன்று பொருளியல் – சமூகவியல் பேசும் எவருமே சொல்வது இதுதான் – “தென்னிந்தியாவையோ, தமிழ்நாட்டையோ, கேரளத்தையோ தனியாக எடுத்துப் பார்த்தால், அவற்றின் வளர்ச்சி கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருக்கின்றன” என்பதுதான். இதை நாம் ஒவ்வொருவரும் நம் பிரச்சாரத்துக்கு எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது முற்றிலும் வேறுபட்ட பிரச்சனை. இதன் பொருள் இங்கே ஆண்டவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்பதோ இதைவிட நல்லாட்சி கொடுத்துவிடவே முடியாது என்பதோவும் அல்ல. இதைவிட யோக்கியர்களோ இதைவிட நல்லாட்சியோ கிடைத்திருந்தால் நாம் இதைவிட வளர்ந்திருக்கலாம். ஒரு வேளை ஒட்டுமொத்த ஐரோப்பாவுடனோ மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனோ ஒப்பிடும் அளவுக்கு நல்வாழ்வு வாழ்ந்திருக்கலாமோ என்னவோ. இந்த நூலும் அதை உறுதி செய்கிறது. வட இந்திய மாவட்டங்கள் தென்னிந்தியாவைவிட நூறாண்டுகள் பின்தங்கி இருப்பதாக ஆசிரியர் வெளிப்படையாகவே சொல்கிறார்.

பிரச்சனைகளை மட்டும் பட்டியல் போட்டுவிட்டுப் போகும் சராசரிப் பத்திரிகையாளராக இல்லாமல், சில பிரச்சனைகள் அவர் கண் முன்பே எப்படிச் சிறப்பாகக் கையாளப் பட்டன என்றும் வேறு என்ன விதமான தீர்வுகளை அணுகலாம் என்றும் கூட நூலின் பிற்பகுதியில் விளக்குகிறார். அதில் முக்கியமாக வருவது, தமிழகத்தில் அறிவொளி இயக்கம் இங்கு எத்தகைய ஒரு பெரும் புரட்சியைச் செய்தது என்பது. வறட்சிக்கும் நீருக்கும் எப்படித் தொடர்பு இருக்கிறதோ அது போலவே வறட்சிக்கும் கல்விக்கும் கூடத் தொடர்பு இருக்கிறது. தமிழகத்தின் சமூக மாற்றத்துக்கு மிக முக்கியமான காரணம் நம் மக்கள் கல்விக்குக் கொடுத்த முக்கியத்துவம். இதைக் கண் முன்னால் கண்ட தலைமுறை நாம். முக்கியமாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவொளி இயக்கம் நிகழ்த்திய சமூக மாற்றமும், வேறு சில பணிகளும் இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லப் பட்டால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் சாத்தியப்பட்ட இது போன்ற மாற்றங்கள் மற்ற மாநிலங்களில் முயன்றே பார்க்கப்படாமல் போனதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? இதைத்தான் நாம் சிந்தித்து நமக்கேற்ற படி முடிவு செய்து கொள்ள வேண்டும்! நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டிருக்கும் தகவல்களின் படி (ஆய்வுக்கு முந்தைய – அறிவொளி இயக்கத்துக்கு முந்தைய தகவல் படியே), தமிழ்நாட்டின் இவ்விரு மாவட்டங்களும் கல்வியறிவில் மற்ற ஆறு மாவட்டங்களோடு ஒப்பிடக் கூட முடியாத அளவு முன்னணியிலேயே இருந்தன. அறிவொளி இயக்கத்துக்குப் பின் புதுக்கோட்டை மாவட்டம்தான் கேரளத்துக்கு வெளியே நூறு விழுக்காடு எழுத்தறிவு அடைந்த முதல் இந்திய மாவட்டம் என்பதும் கூடுதல் தகவல். அப்படியான ஒரு மாவட்டம் இந்தியாவிலேயே பின்தங்கிய எட்டு மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது என்பதுதான் பெருங்கோடுமையே.

பள்ளிக் காலத்தில் சீலா ராணி சுன்கத் என்றொரு பெயர் அடிக்கடி செய்திகளில் அடிபடும். அந்தப் பெயர் இந்த நூலிலும் அடிக்கடி அடிபடுகிறது. அவர் பெயர் அவ்வளவு அடிபட்டதன் காரணம் என்ன என்பதும் இப்போது தெரிய வருகிறது. அவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த போதுதான் பெரும் சமூக மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அவரும் அறிவொளி இயக்கமும் இணைந்து நடத்திய புதுமையான ‘பெண்களைச் சைக்கிள் ஓட்ட வைக்கும்’ இயக்கம் எவ்வளவு பெரிய சமூக மாற்றத்தை நடத்தியது என்பதை வேறொருவர் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டி வந்தது வேதனையாகத்தான் இருக்கிறது. மாவட்டம் முழுக்க பெண்கள் சைக்கிள் ஓட்டிப் பழகுவதை ஊக்குவித்து, அதை ஒரு பெண் விடுதலைக்கான அடையாளமாக முன்வைத்து, அதைச் சாதித்தும் காட்டிய கதை கண்டிப்பாக ஆசிரியர் சொல்வது போல நாடு முழுக்கவும் எடுத்துச் செல்லப் பட வேண்டியது. சைக்கிள் ஓட்டுவது வெறும் அடையாளம் மட்டுமல்ல. அது சைக்கிள் ஓட்டுவதோடு நின்று விடுவதில்லை. புது விதத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. ஆண்கள் மீதான சார்பைக் குறைத்தது. எல்லாவற்றிலும்.

தனியார் கொள்ளைக்காரர்கள் நடத்திய கல்குவாரிகளை, ஒரு குவாரிக்கு இருபது பெண்கள் என்ற வீதத்தில் படிப்பறிவு கூட இல்லாத பட்டியல் இனப் பெண்களுக்குப் பிரித்துக் கொடுத்ததில் பெற்ற வெற்றி அதற்கடுத்த படி. இப்பெண்கள் நடத்திய குவாரிகளில் இவர்களின் கணவர்கள் சம்பளத்துக்குப் பணி புரிந்தது மொத்த சமூகத்தின் சமன்பாட்டையே புரட்டிப் போட்டு விடுகிறது. ஆண்கள் நிர்வகித்த குடும்பத்தில் பெரும் பங்கு செலவு சாராயத்துக்குப் போகிறது; அதுவே பெண்கள் நிர்வாகத்துக்குள் வரும்போது முழுக்கவும் குடும்பச் செலவுக்குப் போகிறது. குழந்தைகளின் உணவும் கல்வியும் உத்திரவாதம் பெறுகிறது. அடுத்த கட்டமாக இப்பெண்கள் சாராயத்துக்கு எதிராகப் போராடி வெல்கிறார்கள். அறிவொளி இயக்கமும் சைக்கிள் ஓட்டுவதும் கலந்து அவர்களுக்குக் கல்வியறிவையும் தற்சார்பையும் கூடுதல் பணத்தையும் நிர்வாகத் திறமையையும் மட்டும் கொடுக்கவில்லை; அரசாங்கத்துக்கே கூடுதல் வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. அதைத் தோல்வியுறச் செய்வதில் அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களும் எப்படியெல்லாம் நெருக்கடி கொடுத்தார்கள் என்பதும் இந்தியா முழுக்க எடுத்துச் செல்லப்பட வேண்டியதே. அங்கும் அப்படி நடந்து விடாமல் பார்த்துக் கொள்ள. படிப்பறிவில்லாத – வெளி உலகம் அறியாத பெண்கள் வந்து பெரும் அரசியற் பொறுப்புகளை ஏற்கும் போது ஏற்படும் பின்னடைவுகள் பற்றியும் மற்ற மாநிலக் கதைகளில் சொல்லப்படுகிறது. கல்குவாரி நடத்துவது வேறு; உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்களின் கைப்பாவையாக இருந்து செயல்படுவது வேறு அல்லவா?

சுன்கத்துக்கு அடுத்து வந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் நல்லவராக அமைந்து விட்டதால் புதுக்கோட்டைக்கு உண்மையாகவே நல்ல காலம் பிறந்து விட்டது என்றே எல்லோரும் நம்பினார்கள் என்றாலும், அடுத்து வரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அப்படி இல்லாமல் போனால் கண் மூடி முழிக்கும் முன் எல்லாமே பழையபடி சரிந்து விழுந்து விடும் என்கிற பயம் பற்றியும் சொல்கிறார். அங்குதான் தனிமனித சாகசங்களை மட்டும் நம்பி நடத்தப்படும் மாற்றங்கள் காலம் கடந்து நிற்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய நிலை வருகிறது. நூல் முழுக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல சாகசங்கள் நிகழ்த்தும் நாயகர்கள் பற்றிப் பேசப்படுகிறது. இப்படியான சூழல்களில் எதுவுமே நம்பிக்கையளிக்கும் படி இல்லாத போதும் ஒரே நம்பிக்கைக் கீற்றாக இந்த நாயகர்கள்தான் இருக்கிறார்கள். இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் – அச்சுறுத்தல்கள் பற்றியும், இவர்கள் மீது திருப்பப்படும் மிதமிஞ்சிய கவனம் எப்படிப் பல நேரங்களில் பிரச்சனையின் மீது காட்டப்பட வேண்டிய கவனத்தைத் திருப்பி விடுகிறது என்றும் சொல்கிறார். எண்பதுகளில் பத்திரிகையாளர்கள் செய்த சில அரும் பணிகளைப் பற்றிப் பேசுவது போலவே, பல நேரங்களில் அவர்கள் எப்படிப் பேச வேண்டிய பிரச்சனையை விடுத்துத் தேவையற்ற தனிமனிதக் கதைத்தல்களில் விரயமானார்கள் என்றும் சொல்கிறார்.

வட இந்திய மாவட்டங்களில் குழந்தைகளைப் பள்ளிக்குக் வரவைப்பதே எவ்வளவு பெரிய சவால் என்பதும், அதை எப்படித் தமிழ்நாடு சத்துணவுத் திட்டத்தின் மூலம் முறியடித்தது என்பதும், அது போல அங்கும் வந்தால் நன்றாக இருக்கும் என்று அங்குள்ளவர்கள் பேசிக்கொண்டது பற்றியும் கேள்விப்படும்போது நமக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டின் இரு மாவட்டங்களைத் தவிர்த்துப் பார்த்தால் பேசப்படும் மற்ற ஆறு வட மாநில மாவட்டங்களுமே மலைப் பகுதிகள். பழங்குடியினர் நிறைந்த பகுதிகள். பழங்குடியினர் முன்னேற்றம் என்பது அவ்வளவு எளிதானதில்லை. மற்ற மனிதர்களைப் போல அல்லாமல், அவர்கள் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறை, பண்பாடு, பழக்கவழக்கங்கள், நல்லது-கெட்டது கொண்டவர்கள். நாம் முன்னேற்றம் என்பதை அவர்களுக்கும் முன்னேற்றம் என்று சொல்லித் திணிப்பது வளர்ச்சி ஆகாது; அதற்குப் பெயர் வேறு. ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு – சில பழங்குடியின மக்களுக்குள் கடுமையான வன்முறையும் அடிதடிகளும் நடக்கின்றன; ஆனால் அவர்கள் வெளி மக்களிடம் அதைக் காட்டிக் கொள்வதே இல்லை; அவர்களுக்குள்ளேயே நடத்திக் கொள்கின்றனர்; ஒரு போதும் திருடுவதோ, பொய் சொல்வதோ இல்லை; வன்முறை சார்ந்த ஏதோவொரு குற்றத்துக்காக அவர்களைச் சிறையில் அடைத்தால், திரும்பி வரும்போது பொய் சொல்லப் பழகிக் கொண்டு வந்து விடுகிறார்கள்; இது அவ்வினக்குழுவின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கிறது. இந்தப் புள்ளியில்தான் எது வளர்ச்சி என்ற கேள்வி வருகிறது. “இப்படி ஒரு வளர்ச்சி இம்மக்களுக்குத் தேவையா?” என்கிறார் அங்கொருவர்.

பழங்குடியினருக்கு எதிராக நிகழ்த்தப்படும் பெரும் அநீதி அவர்களை அவர்களின் நிலங்களை விட்டு விரட்டுவது. அணை கட்டுவதற்காக விரட்டியது, தொழிற்சாலை கட்டுவதற்காக விரட்டியது, இராணுவத்தளம் அமைப்பதற்காக விரட்டியது என்று பல காரணங்களுக்காக இம்மக்கள் விரட்டப்பட்டிருக்கிறார்கள். ஒரு நாள் இரவு நம் படுக்கையறையைப் பயன்படுத்த முடியாமல் செய்து விட்டால் மண்டை காய்ந்து விடுகிற நம்மால், நாட்டின் வளர்ச்சிக்காக இதையெல்லாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். ஒரு இராணுவத்தளத்தில் பயிற்சி என்று அறிவிக்கப்படும் போதெல்லாம் அங்கிருக்கும் கிராமங்களில் இருக்கும் மக்கள் எல்லாம் காலி செய்து வெளியேறி விட வேண்டுமாம். பயிற்சி முடிந்ததும் திரும்ப வீட்டுக்கு வந்து கொள்ளலாமாம். இப்படி வெளியேறுவதற்கு ஆள் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை ரூபாய் கொடுப்பார்களாம். இது போன்ற ஒரு வேலையை மும்பை நகரத்தில் உள்ள ஒரு பகுதியில் செய்ய முடியுமா என்று கேட்கிறார் ஒருவர். இது விதண்டாவாதம் போலத்தான் படும் நமக்கு. நம்மைப் போன்றவர்கள் வாழும் மும்பை வேறு, பழங்குடியினர் வாழும் அந்தக் கிராமங்கள் வேறு என்பதற்கு இருக்கும் முக்கியமான வேறுபாடு, நம்மைப் போன்றவர்களிடம் அப்படி ஆட்டம் காட்டினால் அந்த அரசாங்கத்தையே ஆட்டம் காண வைக்கும் கூட்டு சக்தி நம் ஓட்டுக்கு இருக்கிறது; அது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற படிக்காத பழங்குடி மக்களுக்கு இல்லை. அவர்களில் பலருக்கு ஓட்டே இல்லை என்பது வேறொரு கிளைக் கதை. இதெல்லாம் மக்களாட்சி முறையின் கரிய பக்கங்கள். “அதனால்தான் மக்களாட்சியே தோற்றுப் போய்விட்டது என்கிறோம்; எங்கள் தலைவரை நிரந்தர சர்வாதிகாரி ஆக்கி விட்டால் எல்லாம் சரியாகி விடும்” என்கிறீர்களா? நல்லது! அப்படியே ஆகட்டும்.

இன்னோர் ஊரின் கதை அதை விடக் கொடுமை. ஓர் ஊரிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள், இன்னோர் இடத்தில் அது போலவே ஓர் ஊரை உருவாக்கி அதே பெயரையும் இடுகிறார்கள். கொஞ்ச காலம் கழித்து அந்த ஊரையும் காலி செய்யச் சொல்கிறார்கள். இப்போது மூன்றாமிடத்தில் மீண்டும் ஓர் ஊர் கட்டுகிறார்கள். இப்போது அதையும் காலி செய்யச் சொல்கிறார்கள். நாட்டு நலனுக்காகக் காலி செய்வது முக்கியம். சரி. அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியது நாட்டின் கடமை இல்லையா? அதை நாடு செய்வதில்லை. அதற்கு வரும் பணத்தை முழுங்கி ஏப்பம் விடுவதையே தன் முழுநேரத் தொழிலாகக் கொண்டு ஒரு கூட்டம் அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக இது போன்ற இடப்பெயர்ச்சிகளின் போது இழக்க நேரிடும் உறவுகள் வேறு இவர்களின் பலத்தைப் பிடுங்கி விடுகிறது.

இடம் மாறுவதில் இடம் மாறுவது மட்டும் பிரச்சனையில்லை. அப்படி இடம் மாறும் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக தான் வாழ்ந்த இடத்தில் இருந்த குறிப்பிட்ட செடி-கொடி-மரங்களை மட்டுமே சார்ந்து தம் உணவு முறைகளையும் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்கிறார்கள். அதனால்தான் அவை வாழ்வாதாரம் எனப்படுகின்றன. அந்த இடத்தை விட்டு வேறோர் இடத்துக்குப் போகும் போது புதிய இடத்தில் இவர்களுடையே செடி-கொடி-மரம் இருப்பதில்லை. அப்போது அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பிடுங்கப் படுகிறது. அரை மணி நேரம் வை-ஃபை பிடுங்கப் பட்டால் தாங்க முடியாத - ஒரு வாரம் வெளியூரில் போய் நம்மூர்ச் சாப்பாடு இல்லாமல் வாழ முடியாத நம்மால் அதற்கும் விளக்கம் கொடுக்க முடியும். வலுவுள்ளதே வாழும் என்று. நான்கு நாட்கள் அரசாங்கமும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நாம் உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கும் அமைப்புகளும் இயங்காவிட்டால் வலு என்பதன் பொருளே மாறிவிடும். அவர்களின் வலுவுக்கும் வாழ்வுக்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் இரையாகி விடுவோம் என்பதைக் கூட உணர முடியாதவர்களா நாம்? அப்படியெல்லாம் எதுவும் நடந்து விடாது என்று ஒரு நம்பிக்கைதான். இல்லையா?!

பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள இன்னொரு விதமான கொடுமையும் இருக்கிறது. “இடமெல்லாம் மாற வேண்டாம். நீ இருக்கிற இடத்தில் இருந்து கொள். ஆனால் உன்னைச் சுற்றியிருக்கிற எதுவும் உன்னுடையதில்லை. நிலம் உட்பட அதில் வளரும் மரம்-செடி-கொடி வரை எல்லாம் அரசுக்குச் சொந்தம்” என்று சொல்லி விடுவது. இதுவும் அவர்களை இடப்பெயர்ச்சி செய்யச் சொல்வது போலத்தான். வாழ்வாதாரத்தை மட்டும் பறித்துக் கொள்வது கொல்வதைப் போலத்தானே. பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் வளர்த்துப் பாதுகாத்த நிலத்தையும் அதன் உற்பத்தியையும் அவர்களுக்குச் சொந்தமில்லை என்று சொல்ல நாம் யார் என்ற மனச்சாட்சியே நமக்கு நிறையப் பேருக்கு வேலை செய்வதில்லை. பாதி இயற்கை; பாதி அவர்கள் பேணியது. தன் வாழ்க்கையில் அனைத்தையுமே மூங்கிலைச் சுற்றியே அமைத்துக் கொண்ட ஓர் இனத்தைத் திடீரென ஒரு நாளில் அந்த மூங்கிலை நீங்கள் தொடவே கூடாது என்று சொல்கிற கதை ஒன்று வருகிறது. வனத்தைப் பாதுகாப்பதற்காகவே அமைக்கப்பட்ட வனத்துறையினரின் கொள்ளையிலும் கடத்திலிலும் இருந்து வனத்தைக் காக்க பழங்குடி மக்கள் படும் பாடு பற்றிய கதை ஒன்றும் வருகிறது. என்னவொரு வேடிக்கை.

இதையெல்லாம் பார்க்கும் போது பெரும்பாலும் சமவெளியாக இருப்பதும் குறைவான பழங்குடியினர் எண்ணிக்கையும் கூட தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு ஒரு முக்கியமான காரணமோ என்று படுகிறது.

இந்த மாவட்டங்கள் அனைத்திலுமே பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பழங்குடியினத்தவராகவோ பட்டியல் இன மக்களாகவோதான் இருக்கிறார்கள். அதுவே எப்போதும் அவர்களுக்கான நீதியைக் கிடைக்கவிடாமல் செய்து விடுகிறது. அவர்களே அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்குத் தம்மைத் தயார் படுத்திக் கொண்டால்தான் உண்டு என்று சொல்லிவிடுகிற அளவுக்கு அது அவ்வளவு எளிதில்லை. இது ஒரு கொடுமையான சுழற்சி. ஒவ்வொரு நாளும் அன்றைக்கான சாப்பாட்டுக்கான போராட்டமே அவர்களுக்குப் பெரும் பிரச்சனையாக மாறி இருக்கும் போது அதிலிருந்து வெளியேறி அவர்கள் தம் மற்ற உரிமைகளுக்காகவும் வளர்ச்சிக்காகவும் போராடுவதெல்லாம் வாய்ப்பே இல்லாத மாதிரித்தான் படுகிறது. அதற்கு முன் நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது.

கடனும் கந்து வட்டியும் கொடுப்பவர்கள், இந்த எட்டு மாவட்டங்களை அப்படியே வைத்திருப்பதில் முக்கியப் பங்காற்றுபவர்கள். நிலமுடையவர்களை வளைத்து நிலத்தைப் பிடுங்குகிறார்கள்; அதுவுமற்றவர்களை வளைத்து அவர்களைக் கொத்தடிமை ஆக்கிக் கொள்கிறார்கள்; வேறு சில இடங்களில் அதுவே விபச்சாரம் முதலான பெருங் கொடுமைகளுக்கும் வித்திடுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்ட நிலச் சீர்திருத்தம் இதற்கொரு முக்கியத் தீர்வாக இருக்க முடியும் என்கிறார். அதெல்லாம் நடக்கிற காரியமா? போங்க பாஸ்! ஒன்றைக் குறித்துக் கொள்ளுங்கள் – நிலச் சீர்திருத்தம் செய்த நான்கு மாநிலங்களில் இருந்து ஒரு மாவட்டம் கூட இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை!

வறுமைக்கோடு என்பது எப்படி வரையறுக்கப்பட்டது என்கிற கதை வியப்பூட்டுகிறது. நாளொன்றுக்கு இத்தனை கலோரி சாப்பிட முடிந்தவர்கள் மேலே, முடியாதவர்கள் கீழே என்று எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்; கல்வி, சுகாதாரம், பிற வசதிகள் எதைப் பற்றியும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அது ஏன் என்று வியந்து முடிவதற்குள் அதற்கான நியாயமும் சொல்லப்படுகிறது. அன்று வரையறுக்கும் குழுவில் இருந்தவர்கள் எல்லோரும் நேர்மையும் நல்லெண்ணமும் நிறைந்தவர்கள். கொடுக்கப்பட்ட பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டுப் போபவர்கள் அல்லர். அதனால் அவர்கள் கல்வியும் சுகாதாரமும் மற்ற வசதிகளும் அரசாங்கத்தால் எல்லோருக்கும் முறையாக அளிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு உணவை மட்டும் அடிப்படையாக வைத்து இப்படி வரையறுத்தார்கள். அதனால் இப்போது வரையறையை மாற்ற வேண்டியதாகியுள்ளது. இப்படி நாற்பது ஆண்டுகள் கழித்தும் கல்வியும் சுகாதாரமும் அடிப்படை வசதிகளும் மக்களுக்குச் சென்று சேர்ந்திராது என்று தெரிந்திருந்தால் அப்போதே முறையாக வரையறுத்திருப்பார்கள் என்கிறார். ஓரளவு சரியாகத்தான் படுகிறது. அத்தோடு வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிற மக்களின் எண்ணிக்கை பாதியாகிவிட்டது - கால்வாசியாகிவிட்டது என்று உள்ளூரில் ஒரு பொய் சொல்லிக் கொண்டு, அதுவே பல மடங்காகக் கூடி விட்டது என்று போய் ஐ.நா. சபையிலும் உலக வங்கியிடமும் காசுக்காக வேறொரு பொய் சொல்ல முடிகிற மனச் சாட்சி – நேர்மை நம் அரசாங்கங்களுக்கு இருந்திருக்கிறது.

இந்த நாட்டை ‘உண்மையாக’ நேசிக்கிறவர்கள் (நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள், ‘உண்மையாக’... சும்மா வெற்றுக் கூச்சல்களையும் அடையாளங்கள் மீதான பித்துக்களையும் தேசபக்தி என்று கூறித் தன்னையும் பிறரையும் ஏய்ப்பவர்கள் அல்லர்), தாம் நேசிக்கும் இந்த நாட்டில் என்னவெல்லாம் நடக்கிறது, அது எப்படியெல்லாம் இங்குள்ள எளிய மக்களைச் சீரழிக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த நூலில் புதையல் போல விதவிதமான கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு தனி மனிதனாக என்னால் புரிந்து கொள்ளப்பட முடிந்தவை சில. அவற்றின் தொகுப்பே இந்தக் கட்டுரை. நீங்கள் படித்தால் உங்களுக்கு எவ்வளவோ கிடைக்கலாம்.

நூலைப் பற்றிய சில மதிப்புரைகளைப் படிக்கும் போது நிறையப் பேர், “இந்த நூல் என் கண்ணைத் திறந்துவிட்டது; நான் வாழும் இதே நாட்டில் இப்படி ஒரு வேலைச் சோற்றுக்குக் கூடப் போராடும் மக்களும் வாழ்கிறார்களா?; நொறுங்கிப் போய்விட்டேன்; இன்னும் மீளவில்லை” என்று பலவிதமான வியப்புகளை விளக்கியிருந்தார்கள். அதற்குக் காரணம் அவர்கள் வாழும் சொகுசான வாழ்க்கையாக இருக்கலாம். அதுவே பலருக்கு இவற்றின் மீது நம்பிக்கை வரவிடாமலும் கூடச் செய்யலாம். இதை நம்ப முடியவில்லை என்று ஒரு சாரார் சொல்ல முடிகிறதென்றால் அதுவே இங்கிருக்கும் இடைவெளிக்கான பெரும் சாட்சி. ஆனால் எனக்கு இந்த நூல் வேறு விதமான அனுபவத்தைக் கொடுத்தது. நூலில் வரும் பல மாந்தர்கள் என் வாழ்வில் சிறு வயதில் ஒவ்வொரு நாளும் நான் பார்த்து வளர்ந்தவர்கள். அன்றோ இன்றோ நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு குறைச்சலும் இல்லை என்பதற்காக, நம் கண் முன் கண்டவற்றைக் கூட மறந்துவிட வேண்டும் என்று கட்டாயமில்லையே!


இரவு சாப்பாடு பற்றிக் கேட்டபோது, “மதியமே சாப்பிட்டு விட்டோம்; அதனால் நாளைதான் அடுத்து சாப்பாடு!” என்று சொன்ன நண்பர்கள் எனக்கிருந்திருக்கிரார்கள். அதனால் என்னால் இவற்றை எளிதில் கடந்து விட முடியாது. கள்ளச்சாராயம் காய்ச்சிய மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்; பக்கத்து நகரத்தில் சில்லறைக்குப் பத்து ரூபாய்க்கு வாங்கும் பொருளை, மொத்த விலைக்கு என்று வரும்போது இரண்டு-மூன்று ரூபாய்க்கு சிரிப்பு மாறாமல் கேட்கும் இடைத்தரகர்களைப் பார்த்திருக்கிறேன்; இதற்கெதற்கு இம்மக்கள் இப்படிச் சண்டைக்காரனிடம் பேசுவது போல வெறி கொண்டு பேசுகிறார்கள் என்று பருத்தி-மிளகாய்-அவுரி விளைவித்த விவசாயிகளைப் பார்த்து வியந்திருக்கிறேன்; அரசுப் பணியில் இருந்து கொண்டு தனியார் மருத்துவமனை நடத்திய மருத்துவர்களைப் பார்த்திருக்கிறேன்; கந்துவட்டி வசூலிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்; வாங்கியதை விடப் பல மடங்கு கட்டியபின்னும் கடன்காரனாகவே இருந்து அடியாட்களிடம் அடிபட்டவர்களைப் பார்த்திருக்கிறேன்; அதிலேயே வீட்டையும் சொத்தையும் இழந்தவர்களைப் பார்த்திருக்கிறேன்; தனக்கான நீதிக்காகவும் தன் பக்கம் அரசாங்கத்தின் கவனத்தைத் திருப்பவும் உண்மையை மிகப் படுத்திப் பேசும் மக்களைப் பார்த்திருக்கிறேன்; பஞ்ச காலத்தில் பல மைல் தொலைவு தண்ணீருக்கு அலைந்த மக்களைப் பார்த்திருக்கிறேன்; நூலில் வரும் இராமநாதபுரத்து மாந்தரில் ஒருவர் (சுரண்டுபவரோ சுரண்டப் படுபவரோ) என் இரத்த உறவினராகக் கூட இருக்கலாம்; ஒரு காரணமும் இல்லாமல் மக்களுக்கு உழைத்துத் தேய்வதையே மனநோய் போலக் கொண்டு உழைத்து அழிந்த சில உன்னதமான மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அதனால் இந்த நூல் என்னைப் பற்றியது; என்னைச் சுற்றியிருந்த மனிதர்களைப் பற்றியது. என்னைப் போலவே நீங்களும் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களும் கூட இதில் இருக்கலாம். படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்