மனிதனுக்கு அஞ்சலி


“நினைத்த போதெல்லாம் வருவதல்ல கவிதை; மனம் கனத்த போது வருவதுதான் கவிதை” என்ற மிகச் சிறிய வயதிலேயே படித்துப் பதிந்த வரி ஒன்று இன்று பயன்பாட்டுக்கு வருகிறது. அப்படியொன்றும் கவிதை கொட்டவில்லை இப்போது. ஆனாலும் ஞாநியின் மரணம் பற்றிக் கேள்விப்பட்ட காலை முதல் மனம் கனத்துப் போய்க் கிடக்கிறது. அவ்வப்போது முகநூல் வரவைக் குறைத்துக் கொள்ள முயன்று மீண்டும் மீண்டும் தோற்கும் பாவப்பட்ட பிறவிகளில் ஒருவன்தான் நானும். இப்படி ஏதாவது ஒன்று நடந்து விடுகிற போது நோன்பு கலைந்து குதித்து விட நேரிடுகிறது.

கல்லூரிக் காலங்களில் வாராவாரம் விடாமல் தினமணிக் கதிர் படிக்கிற பழக்கம் இருந்தது. கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கேலிச்சித்திரம் என்று ஒவ்வொன்றும் ஒரு வகையில் மனதைப் பிழியும். அதில் மனிதன் பதில்கள் என்றொரு கேள்வி-பதில் பகுதியும் உண்டு. அது மனதுக்கு மிகப் பிடித்த பகுதி. கேள்வி-பதில்கள் என்று வண்டி வண்டியாகக் குப்பைகளைக் கொட்டிக் கொண்டிருந்த இதழ்களுக்கு நடுவில் இப்படியும் நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரிப் பதில் சொல்ல முடியுமா என்று பெரும் வியப்பாக இருக்கும். இப்படியும் ஒரு மனிதன் இருக்கிறானா என்று திகைப்பாக இருக்கும். அப்படியான புல்லரிப்புக்கு என் இயல்பான சார்பும் ஒரு காரணமாக இருக்கலாம். எல்லோருக்குமே அப்படித்தானே! நாம் பிறந்ததிலிருந்து நமக்கு ஊட்டப்பட்டதுதான் உண்மை, நியாயம், தர்மம் எல்லாம். சோறு ஊட்டப்பட்டுப் பழகியவனுக்குச் சோறுதான் உலகத்திலேயே சிறந்த உணவு. சப்பாத்தி ஊட்டப்பட்டுப் பழகியவனுக்குச் சப்பாத்திதான் உலகத்திலேயே சிறந்த உணவு. சோற்றை விட சப்பாத்தி சிறந்த உணவு என்று சொல்வதற்கு சோறு சாப்பிடுகிற ஒருவனால் சொல்ல முடிகிறது என்றால், அதற்கு அவன் மற்ற சராசரி மனிதர்களைப் போல் அல்லாமல் வேறுபட்ட ஏதோவோர் அனுபவத்தை அடைந்திருக்க வேண்டும்; அதற்கும் மேலாக அதைத் துணிந்து சொல்ல ஒரு நேர்மை வேண்டும். அந்த அனுபவமும் நேர்மையும் ஞாநிக்கு இருந்தது என்று இன்றும் நம்புகிறேன். பொதுவாக எந்தச் சமூகப் பிரச்சனையானாலும் அவரது நிலைப்பாடு எதுவோ அதுவே இயல்பாகவே நம்முடையதாகவும் இருப்பதும், மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முறையும் குறி தப்பாமல் அவர் அடிப்பது கண்டும் பெரும் வியப்பாகத்தான் இருக்கும். சில நேரங்களில் குழப்பமாக இருக்கும் போது அவர் என்ன சொல்கிறார் என்று பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என்று காத்திருந்து அவரின் கருத்தைக் கேட்டபின் தெளிவான முடிவு எடுக்க முடிந்துள்ள கதைகளும் உண்டு. நம் மனக் கிணற்றின் அடியாழத்தில் புதைந்து கிடக்கும் கருத்துக்களை அதற்குக் கச்சிதமான சொல்வடிவம் கொடுத்து வெளியில் எடுத்து வந்து போடுகிற ஒருவராகத்தான் அவர் எப்போதும் இருந்தார். இப்படி அவர் மீதான பிரமிப்பு நீங்காமல் அவரைத் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் ‘மனிதன் பதில்கள்’ எழுதுவதும் அவர்தான் என்று தெரிய வந்த போது, இனி இந்த மனிதனை விடக்கூடாது என்று வெறிகொண்டு பின்தொடரத் தொடங்கினேன்.

பின்னர் விகடனிலும் குமுதத்திலும் அவர் எழுதிய ‘ஓ பக்கங்கள்’ பட்டையைக் கிளப்பின. ஜல்லிக்கட்டு பற்றிய குழப்பம் இப்போதும் இருக்கிறது. அந்தக் குழப்பம் அப்படியே இருப்பதற்கு ஞாநியும் ஒரு காரணம். அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பிடிவாதமான கருத்துக் கொண்டிருந்தார். ஜல்லிக்கட்டுக்கு எதிரான கட்டுரை ஒன்றை “ஓ பக்கங்கள்” பகுதியில் அனுமதிக்காததால்தான் விகடனுக்கு வணக்கம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் என்று அறிந்த போது அவர் பிடிவாதத்தின் மீதான மரியாதை கூடத்தான் செய்தது. அடுத்து குமுதத்தோடும் அதே போன்றதொரு சிக்கல் வந்த போது அவர்களுக்கும் அதே போன்றதொரு கும்பிடைப் போட்டுவிட்டு விலகிவிட்டார் என்று கேள்விப்பட்ட போது அந்த மனிதன் மீதான வியப்பு மேலும் கூடியது. ஆளும் திமுகவோடு அடங்கிப் போக வேண்டும் என்ற குமுதத்தின் கட்டளையை ஏற்க மறுத்து வெளியேறினார் என்று மட்டுந்தான் அப்போது கேள்விப்பட்டிருந்தோம். இன்றுதான் தெரிகிறது – அது சவுக்கு சங்கருக்குப் பரிந்து எழுதிய போது வந்த முரண்பாட்டால் எழுந்த பிரச்சனை என்று. வெகுஜனப் பத்திரிகைகளோடு ஞாநி முட்டிக்கொண்ட கதைகள் கேள்விப்பட்ட காலம் என்பது, அப்படியான பத்திரிகைகளும் அவர் போன்ற பத்திரிகையாளர்களும் மொத்தமொத்தமாக விலை போகத் தொடங்கிய காலம். எல்லோரையும் அடித்துச் செல்லும் வெள்ளத்தில் தானும் சேர்ந்து மிதந்து செல்பவன் எப்படிச் சிறந்த கருத்துருவாக்கியாக இருக்க முடியும்? வெள்ளத்துக்கு எதிராக மூர்க்கமாக எட்டு வைக்க முடிகிறவன்தானே சுயசிந்தனை உடையவனாக இருக்க முடியும்!

தனியார் தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின்பு எப்படி வெள்ளித்திரை நாயகர்களின் பிம்பம் மெதுமெதுவாக உடைக்கப் பட்டதோ அது போலவே இணையப் பயன்பாடு கூடிய பின்பு கிட்டத்தட்ட நாம் தொலைவில் இருந்து தரிசித்த கருத்துக் கந்தசாமிகள் எல்லோருமே அம்பலப்பட்டு முண்டமாகிக் கொண்டிருந்தார்கள். யார் பேசுவதையாவது கேட்க வேண்டும் என்று காது அரிக்கும் பல இரவுகளில் ஒன்றை ஞாநியின் பேச்சுகளை முழுக்கக் கேட்டு முடித்துவிட வேண்டும் என்று அர்ப்பணித்து அவருடைய உரைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு எழுத்தாளனும் பேச்சாளனும் தனக்கென்று ஓர் ஓட்டை ரெக்கார்ட் வைத்திருப்பான். ஒரு மனநோயாளியைப் போலத் தன்னையும் அறியாமல் அல்லது அறிந்தே தன் ஒவ்வொரு உரையிலும் கட்டுரையிலும் கதையிலும் அதைக் கசிய விடுவான். அது ஒரு தனிமனித வழிபாடோ வெறுப்போ, தான் படித்த அல்லது கேள்விப்பட்ட ஒரு துணுக்குச் செய்தியோ, ஒரு குறிப்பிட்ட இன-மொழி-சாதி-மத-குழுச் சார்போ பற்றியதாக இருக்கும். அப்படி ஞாநியின் உரைகள் அனைத்திலும் திரும்பத் திரும்ப வந்தது நேர்மை பற்றி அவர் கொண்டிருந்த பிடிவாதமான கருத்துகள்.

இந்தியன் எக்ஸ்பிரசில் பணி புரிந்த போது, தான் சரியென்று ஒத்துக்கொள்ள முடியாததைச் செய்ய நேர்ந்த போது அந்தப் பணியைத் தூக்கி வீசிவிட்டு வந்து பல மாதங்கள் சாப்பாட்டுக்குத் திண்டாடியது பற்றியும், அந்தக் கஷ்டங்களுக்கு இடையிலும் அவருடைய தாயும் பெரியம்மாவோ அல்லது அத்தையோவும் அவருடைய முடிவை மதித்து ஒன்றும் சொல்லாமல் அவருக்குத் துணை நின்றது பற்றியும் பேசினார் ஓர் உரையில்.

இளைஞர்களுக்கு மத்தியில் பேசும் இன்னோர் உரையில், இவ்வளவு கல்வியும் சம்பாத்தியமும் மினிமினுப்பும் கூடிவிட்ட போதும் இந்தத் தலைமுறை இளைஞர்களின் தனிமனித அறம் எப்படி வீழ்ந்து நாசமாகிக் கிடக்கிறது என்று இரு சம்பவங்களை எடுத்துக்காட்டிப் பேசினார். இரண்டுமே தன் விருப்பத்துக்கு மாறாகப் பிறந்த தன் சொந்தக் குழந்தைகளைக் கொன்றழித்த இரு படித்த அரக்கர்களைப் பற்றிய கதைகள். ஒருவன் தன் பிள்ளையைச் சுவற்றில் அடித்துக் கொல்கிறான். இன்னொருவன் கிணற்றில் தூக்கி வீசி விடுகிறான்.

இன்னோர் உரை, சாரு நிவேதிதா அழைத்திருந்த விழா ஒன்றுக்குச் சென்று அவரையே விமர்சித்து விட்டு வருவது. “எழுத்துத் திறமை மட்டுமே ஒருவனை இலக்கியவாதி ஆக்கி விடாது. அதை வைத்துக் கொண்டு அவன் என்ன சாதிக்கிறான், யாருக்காகப் பேசுகிறான் என்பது முக்கியம். அவன் வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இருக்கும் தொடர்பு முக்கியம். திறமையை மட்டும் வைத்துப் பார்த்தால் சுஜாதாவும் இலக்கியவாதி ஆகிவிடுவார்” என்பது போல ஏதோ சொல்லி சுஜாதாவையும் போட்டு வறுத்து விட்டுப் போனார்.

அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தைப் பார்த்துப் புல்லரித்துக் கிடந்த காலத்தில், விஜய் தொலைக்காட்சியின் ‘நாயா நானா’ நிகழ்ச்சியில் ஒரு நாள், இந்த ஆண்டு வந்த படங்களிலேயே தனக்குப் பிடிக்காத இரண்டு படங்கள், ‘சிவாஜி’யும் ‘பருத்தி வீரனும்’ என்றார். அப்போதுதான் அவருடைய கோணம் புரிபட்டது. நம் ஊரையும் வாழ்வையும் அப்படியே அச்சு அசலாகக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாரே என்று கண்டு புளகாங்கிதம் அடைந்த நமக்கு அந்தப் படத்தில் பிடித்தது வேறு. அந்த வாழ்க்கையைப் பழக்கப்பட்டிராத, ஆனால் அந்தப் படத்தால் தமிழ்ச் சமூகத்தில் நேரப்போகிற அறவீழ்ச்சி பற்றி யோசிக்கிற அவருக்கு அந்தப் படத்தில் பிடிக்காமல் போனது வேறு. இதன் பின்பு இவரும் அமீரும் கலந்து கொண்ட இன்னொரு விழாவில், ‘நல்ல படம்’, ‘கெட்ட படம்’ பற்றி இருவரும் கருத்து மோதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

பொதுவாக எப்போதுமே எவரையுமே விமர்சிப்பதை விரும்பி அனுபவித்துச் செய்தவராகப் பட்டார் அவர். கருத்து மோதல்களால் எந்த அசௌகரியத்தையும் உணராதவராகப் பட்டார். சமரசமற்ற விமர்சனத்தால்தான் பல குழுக்களின் தீவிர வெறுப்புக்கு உள்ளானார். இந்துத்துவர்கள், திராவிட இயக்கத்தவர்கள், தமிழ் தேசியர்கள், திமுகவினர், அதிமுகவினர் என்று எல்லோருமே அவரை வெறித்தனமாக வெறுத்தார்கள். விமர்சனங்களை மீறி ஓரளவு அவர் ஏற்றுக் கொண்டது இடதுசாரிகளையும் தலித் இயக்கங்களையும் என்று பட்டது. விடுதலைச் சிறுத்தைகளோடு நெருங்கிய உறவு வைத்திருந்தார் போலத் தெரிகிறது. ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பொது வேட்பாளாராக நிறுத்தக் கூடப் பேச்சு வார்த்தைகள் நடந்தன என்று கேள்விப்பட்டேன். அது போலவே பழைய திமுகவோடும் திராவிட இயக்கத்தினரோடும் நெருங்கிய உறவு வைத்திருந்திருக்கிறார். அதுவே பின்னர் அவரைத் தீவிர திமுக விமர்சகராகவும் மாற்றியது. அதிமுகவையும் ஜெயலலிதாவையும் கூடக் கடுமையாக விமர்சிக்கத்தான் செய்தார். ஆனால் அவ்வளவு கடுமையாக இல்லை என்று சொல்வோரும் இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், ஈவிகேஎஸ் இளங்கோவனைத் தவிர இங்கே எவருமே திமுகவையும் அதிமுகவையும் ஒரே மாதிரித் திட்டியவர்கள் இல்லை. திமுகவை அதிகம் திட்டுகிற ஒரு கூட்டம் அந்தக் கட்சி மீதான கூடுதல் எதிர்பார்ப்பின் காரணமாகவும் திட்டுகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இன்னொரு புறம், சர்க்கஸ் கூடாரம் போல நடத்தப்படுகிற ஒரு கட்சியையும் அதன் தலைமையையும் விமர்சித்துத்தான் என்ன பயன் என்கிற விரக்தியும் கூட உண்டு. அதனாலேயே அவர்களைக் கண்டு கொள்ளாமல் போய் விடுவதும் உண்டு. சிலர் சொல்வது போல, அதற்குள் வேறு உள்நோக்கங்கள் இருந்தது போலவெல்லாம் எனக்குப் படவில்லை.

வட இந்திய ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின்பு தமிழகம் சார்ந்த பல பஞ்சாயத்துகளுக்கு அவரை அணுகினர். பெரும்பாலும் அவருடைய கருத்துகள் நமக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் இருந்தன. அவற்றில் முக்கியமானது, அவர் இந்தித் திணிப்புக்கு எதிராகப் பேசியதுதான். ஆங்கிலத் தொலைக்காட்சியின் கூடத்தில் வந்து நின்று கொண்டு ஓர் அம்மா நான் இந்தியில்தான் பேசுவேன் என்று பேச, இவரும் வீம்புக்குத் தமிழில் பேசினார். மறுநாள் நாடு முழுக்க அது பேசப்பட்டது. அது அவ்வளவு பேசப்பட்டதற்கு ஒரே காரணம், அந்தச் சம்பவத்தில் இருந்த மசாலாத்தனம் மட்டுமே. அந்த நிகழ்ச்சியில் ஞாநி பற்றிய இன்னொரு முக்கியமான தகவல் வெளிவந்தது. அதை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. “எதையும் விமர்சித்துக் கொண்டே இருப்பது எளிது. கடைப்பிடிப்பதுதான் கடினம். இவ்வளவு பேசும் நீங்கள் என்ன உங்கள் பிள்ளைகளைத் தமிழ் வழியிலா படிக்க வைத்திருப்பீர்கள்! ஆங்கில வழியில்தான் படிக்க வைத்திருப்பீர்கள்! அப்புறம் என்ன தாய்மொழி முழக்கம் வேண்டிக் கிடக்கிறது?!” என்று சொன்ன போது, தன் மகனை முழுக்கவும் தமிழ் வழியில்தான் படிக்க வைத்ததாகச் சொன்னார். எதையும் விமர்சித்துக் கொண்டே இருக்கும் இடத்தில் இருக்கும் போது இது போன்ற கேள்விகளுக்கும் சரியான பதில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவராகவும் அதன்படி நடந்தவராகவும் அதில் பளிச்சென்று வெளிப்பட்டார். அதுவே அவர் மீதான பல கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டது நமக்கு.

வலைப்பூவில் வெறிகொண்டு எழுதிய காலத்தில் சக வலைப்பதிவர் ஒருவரின் தளத்தில் ஞாநியின் கருத்தும் இருந்தது. என்ன எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம் என்று போய்ப் பார்த்தால், பதிவர் செய்திருந்த மிகச் சிறிய தகவல் பிழை ஒன்றுக்கு மிகக் கடுமையாகக் கருத்து வைத்துவிட்டுச் சென்றிருந்தார். உண்மையில் அந்தக் கட்டுரை மிக நன்றாக இருந்தது. ‘இளம் எழுத்தாளன் ஒருவனுடைய அந்த அழகான கட்டுரை பற்றி ஒரு வரி கூடப் பாராட்டாமல் - ஊக்குவிக்காமல், அதில் இருந்த ஒரு சிறிய குறையை மட்டும் எடுத்து விமர்சித்து விட்டுப் போயிருக்கிறாரே, என்ன மாதிரியான மனிதன் இவர்!’ என்றுதான் அப்போது தோன்றியது. பின்னர் உட்கார்ந்து யோசிக்கையில், அது அவருடைய வேலை என்று அவர் நினைக்கவில்லை, தன் கடன் குறை சொல்லித் திரிவதே என்று வாழும் ஒருவரிடம் போய் பாராட்டும் ஊக்குவிப்பும் எதிர்பார்ப்பது நம்முடைய குறையே ஒழிய அவருடையதன்று என்று புரிந்தது. அப்படிக் குறை சொல்லித் திரிவது ஒன்றும் இழிவானதென்றும் சொல்வதற்கில்லை. அதுவும் ஆயிரமாயிரம் ஆக்கபூர்வமான மாற்றங்களை நடத்தத்தான் செய்திருக்கும் அவர் வாழ்ந்த சமூகத்தில். பாராட்டும் – ஊக்குவிக்கும் வேலையைச் செய்ய வேண்டியவன், அதைச் செய்யாமல் குறை சொல்லித் திரிவதுதான் பிரச்சனையே ஒழிய, எப்போதும் குறை சொல்லித் திரிபவன் குறை சொல்வது தன் பணியைச் செய்ததாகவே கருதப்படும் என்று அவருடைய நோக்கத்தில் புரிந்து கொண்டேன். அதைவிட முக்கியமாக, தன்னையும் ஒரு சக எழுத்தாளனாக மதித்து முழுக் கட்டுரையையும் படித்து முடித்து அதில் ஒரு குறை கண்டு அவர் சொன்னதை, மோதிரக்கையில் குட்டு வாங்கியதாக அந்தப் பதிவரே பெருமைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடும், நாம் ஏன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேற்றிக் கொண்டேன்.

இன்னொரு முறை, ‘நீயா நானா’-வில் ஜோதிடம் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ஜோதிடத்தை முழுக்க நிராகரித்தார். தனக்கு ஜோதிடம் தெரியும் என்று சொன்ன ஒரு பெண்ணை அழைத்து ராக்கிங்கே செய்தார். “என் கையைப் பார்த்து என்னைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார். அந்தப் பெண், அவருடைய கையைப் பார்த்துவிட்டுச் சில கணிப்புகளைக் கூறினார். அதில் ஒன்று, “நீங்கள் கூடிய விரைவில் ஒரு பெரிய பயணம் செல்வீர்கள்” என்பது. அதை முழுக்கவும் நொறுக்கிப் போட்டார். “நீங்கள் சொன்ன எல்லாமே பொதுவானவை. நான் ஓர் எழுத்தாளன். அதனால் அடிக்கடி பயணம் செய்வது என் தொழிலின் ஒரு பகுதி” என்றார். ஒரு கட்டத்தில் நம் அறிவுக்கு அது விதண்டாவாதம் போல் பட்டது. அந்தப் பெண், “இல்ல, சார். பெரிய பயணம்!” என்று சொல்லி முடித்து ஒதுங்கிக் கொண்டார். இது நடந்து ஒரே ஆண்டுக்குள் என்று நினைக்கிறேன். அவர் அமெரிக்கப் பயணம் சென்றார். அப்போது இந்த உரையாடலை நினைத்துப் பார்த்தாரா என்று தெரியவில்லை. நினைத்துப் பார்த்திருந்தாலும் அது ஒரு தற்செயல் என்று எண்ணிக் கொண்டிருந்திருப்பார். அவரைச் சந்திந்து உரையாட என்றாவது வாய்ப்புக் கிடைத்தால் இதை நினைவுபடுத்திக் கேட்க வேண்டும் என்று எண்ணி வைத்திருந்தேன். அதற்கு இனி வேலையில்லை.

ஒரு சிந்தனையாளனுக்கு இருக்க வேண்டிய ‘கணீர்’ சிந்தனை அவரிடம் இருந்தது. ஆனால், ஒரு பேச்சாளனுக்கு இருக்க வேண்டிய ‘கணீர்’ குரல் இல்லை. அவருடைய செறிவான பல கருத்துக்களும் உரைகளும் ஏற்படுத்தத் தவறிய தாக்கத்துக்கு அவரின் தொண்டைக் கட்டியது போன்ற குரல் கண்டிப்பாக ஒரு காரணம்தான். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் என்று தோன்றும். அவர் ஒரு நல்ல பேச்சாளராக உருப் பெற்றிருந்தால் ஊர் ஊராக – மேடை மேடையாக அழைத்துப் பேச விட்டே கொன்றிருப்பார்கள். இவ்வளவு வலுவான எழுத்துக்களைக் கொடுத்திருக்க முடியாமல் போயிருக்கும். அவரிடம் இருந்த சரக்குக்கு இதுவே அளவில் குறைவு என்றுதான் படுகிறது. இதுவும் முடியாமல் போயிருந்தால் இழப்பு நமக்குத்தானே!

பெரும்பாலும் கோட்டுக்கு வெளியே நின்று கூச்சல் போட்டே பழகிப் போனவர்களால், உள்ளே தள்ளி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்றொரு கருத்து நம்மிடம் உண்டு. அவரும் அதை நம்பியவராகத்தான் இருக்க வேண்டும். ஆனாலும் தன் முப்பதாண்டு காலப் பொது வாழ்வில் இரண்டு முறை அரசியலுக்கு உள்ளே இழுக்கப்பட்டதாக – ஈர்க்கப்பட்டதாக ஒரு முறை சொன்னார். அதில் ஒன்று, இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக் கொடுமைக்குப் பின்பு அவருக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டது. அடுத்தது, அவருடைய மகன் காலத்து போபர்ஸ் ஊழல் வெடித்துப் பெரிதான போது, மொத்த நாடும் வி.பி.சிங் பின்னால் அணி வகுத்து நின்ற போது, தானும் அதில் பங்கெடுக்க விரும்பி, திமுகவோடு நெருங்கி, முரசொலியில் பணி புரிந்த கதை. தேர்தல் முடிந்ததுமே வெளியேறி விட்டாராம். பின்னர் மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சிக்குள் இழுக்கப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியின் தோற்றம் அந்த நேரத்தில் நம்மில் பலருக்கும் பெரும் நம்பிக்கையூட்டுவதாகவே இருந்தது. அந்த வகையில் அவரும் நம்மில் ஒருவர் போலச் சிந்தித்துத்தான் இறங்கியிருக்கிறார். நமக்குப் புளிக்கும் முன்பே அவருக்குப் புளித்து வெளியேறியும் விட்டார். தேர்தலில் நின்று தோற்றதால் வெளியேறினார் என்று எளிதில் மூடிவிடக்கூடிய வழக்கல்ல அது. முழுமையாக நம்பிக்கையளித்ததால் இறங்கினார்; சீக்கிரமே நம்பிக்கை சிதறியதால் வெளியேறினார் என்றுதான் கொள்ள வேண்டும். இதையும் பிரஷாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் போன்றவர்கள் வெளியேறியதையும் அல்லது வெளியேற்றப் பட்டதையும் சேர்த்தே புரிந்து கொண்டால் அது ஆம் ஆத்மி கட்சியின் உருமாற்றங்களை எளிதில் விளக்கும். ஞாநியின் குழப்பங்களை மட்டும் அல்ல. இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான மாற்றங்கள் வரப் போவது போலத் தோன்றிய போதெல்லாம் அதில் பங்கெடுக்க விரும்பி நுழைந்து, அது ஒத்து வராது என்று உணர்ந்த போதெல்லாம் விலகி ஓடி வந்திருக்கிறார்.

பொதுவாகவே தமிழக அரசியலில் பெரும்பாலானவர்களை இரு சார்பாகப் பிரித்து விடலாம். ஒன்று - இடதுசாரி, தலித்திய, பெரியாரிய, தமிழ்தேசிய, ஈழ ஆதரவு நிலைப்பாடு கொண்டோர். எதிர்மறையாகச் சொன்னால், வர்க்கவாத, பிரிவினைவாத, இனவாத, மொழிவாதக் குழுக்களை ஆதரிப்போர். இவர்களுக்குள் கிடக்கும் எண்பத்தி நான்கு குழுச் சண்டைகள் வேறு லெவல். அதை இப்போதைக்கு விட்டுவிடலாம். இன்னொன்று – வலதுசாரி, இந்துத்துவ, ‘அம்மா’யிய நிலைப்பாடு கொண்டோர். நேர்மறையாகச் சொன்னால், தமிழன் – திராவிடன் போன்ற அடையாளங்களை விட ஒன்று பட்ட இந்தியன் என்ற அடையாளத்தில் கூடுதல் சௌகரியம் உணர்பவர்கள். அங்கிருக்கும் சிலர் இங்கும் இங்கிருக்கும் சிலர் அங்கும் தேர்தல் அரசியலில் சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் வைத்துக் கொண்ட கதையெல்லாம் இந்த உரையாடலுக்கு அப்பாற்பட்டது. அதற்கு வெளியே, கொள்கை ரீதியாக இப்படித்தான் மேலோட்டமாக அரசியல் சார்புகளைப் பிரிக்கலாம். இதில் சோ இராமசாமி இரண்டாம் பிரிவில் வருவார். ஞாநி சங்கரன் முதல் பிரிவில் வருவார். திரும்பவும் சொல்கிறேன் – ‘மேலோட்டமாக’. கிட்டத்தட்ட முதல் பிரிவினர் என்ன சொன்னாலும் அதை முழுக்க நிராகரிப்பார் சோ. அதிமுகவை ஒரு திராவிடக் கட்சியாகவே கருதாதவர். அது போலவே இரண்டாம் குழுவினர் என்ன சொன்னாலும் அதை முழுக்க நிராகரிப்பவர் ஞாநி. ஒரு குறிப்பிட்ட காலம் வரை அல்லது பெரும்பாலானவர்கள் (அரசியல் கட்சிகளையும் அக்கட்சிகளில் உறுப்பினராக இருந்து கொண்டு கட்சி செய்யும் எல்லாத்தையும் முட்டுக்கொடுத்தே அழிவோரையும் விட்டு விடுங்கள்; நாம் பேசுவது அதற்கு வெளியே நின்று சார்பு நிலைப்பாடு எடுப்பவர்கள் பற்றி), முதல் பிரிவினர் அனைவரும் ஈழ ஆதரவு நிலைப்பாடு எடுத்தவர்கள் என்றும் இரண்டாம் பிரிவினர் அனைவரும் அதற்கு எதிரானவர்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம். இதில் கொள்கை ரீதியான மற்ற எல்லாக் கருத்துகளிலும் ஒத்துப் போகிற, ஆனால், விடுதலைப்புலிகளையும் தனி ஈழத்தையும் தமிழ் தேசியத்தையும் முழுமையாக நிராகரித்தவர் ஞாநி. இதனால்தான் முதல் பிரிவைச் சார்ந்தோர் பலர் அவரை எப்போதும் ஒரு சந்தேகக் கண்ணோடே பார்த்தனர். ஆனால் கூடங்குளம் அணு உலைப் பிரச்சனையில் தொடக்கம் முதல் கடைசிவரை அவருடைய நிலைப்பாடு அங்குலம் கூட அசையாததாக இருந்தது. அணு உலை வேண்டுமா கூடாதா என்பதில் என்ன நிலைப்பாடு என்பதைவிட சுப. உதயகுமாரன் பற்றிய குற்றச்சாட்டுகள் நம்பத் தக்கவையா என்ற குழப்பம் வந்த போது, ஞாநியின் நிலைப்பாடும், “அணு உலையை ஆதரிக்கிறேன்; ஆனால் உதயகுமாரன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சதிப் பின்னணி கொண்டவை” என்று சொன்ன இன்னொருவரின் கருத்தும்தான் அதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தைக் கொடுத்தது எனக்கு. “ஞாநி சொன்னால்தான் நம்புவாய் என்றால் கோளாறு உன்னிடந்தானே ஒழிய உதயகுமாரனிடம் இல்லை” என்று சிலர் சொல்லலாம். அதை அப்படிப் பார்க்க வேண்டியதில்லை. ஈழப் பிரச்சனை போன்ற ஒன்றில் உறுதியான எதிர் நிலைப்பாடு எடுக்கிற ஞாநியே கிட்டத்தட்ட ஈழ ஆதரவு முகாமில் இருக்கிற எல்லோருமே எதிர்க்கிற அணு உலையை அவர்களோடு சேர்ந்து ஒரே மேடையில் நின்று எதிர்க்கிறார் என்றால், அது சுப. உதயகுமாரனுக்கும் அவர் நடத்திய இயக்கத்துக்கும் கிடைத்த சான்றிதழ்தானே! இவரோடு பெரும்பாலும் ஒத்துப் போகும் இடதுசாரிகள் இதில் வாய் திறக்கவில்லை என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். ரஷ்யா கொடுக்கும் அணு உலை மட்டும் வெடிக்காது என்ற நியாயம் நமக்குப் புரிபடவில்லை.

ஆங்கிலம் பேசுகிற – எழுதுகிற – ஆங்கிலப் பத்திரிகையில் வேலை பார்த்த ஞாநி ஏன் தாய்மொழிவழிக் கல்வியை அவ்வளவு ஆதரிக்கிறார் என்ற கேள்விதான் சின்ன வயதிலேயே தாய்மொழிவழிக் கல்வியின் நியாயத்தை யோசிக்கத் தொடங்கி வைத்தது. “தாய்மொழிவழிக் கல்வி என்பது பிற்போக்குத்தனம்” என்று சொல்வது எவ்வளவு பெரிய அடிமைத்தனம் என்பதே நமக்குப் புரியவில்லை இன்னும். மொழி வெறி, மொழிப் பற்று, மொழிவழி இன வெறி ஆகியவற்றைத் தாய்மொழிவழிக் கல்வியோடு நிறையப் பேர் குழப்பிக் கொள்கிறோம். தமிழ் வெறி, கன்னட வெறி, இந்தி வெறி என்று பிடித்தலைவது பிற்போக்குத்தனமாக இருக்கலாம். நீங்கள் மொழியை வெறும் ஒரு கருவியாகக் கூட நினைப்பவராக இருக்கலாம். அதற்கும் தாய்மொழிவழிக் கல்வியை ஆதரிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழால் பிழைப்பு நடத்தியவர்களைத் திட்ட நினைத்து அதற்குப் பதில் தமிழைத் திட்டி நிறையப் பேர் தன்னையே ஏமாற்றிக் கொண்டு விட்டார்கள். அதுவும் கூடப் போகட்டும். நீங்கள் உங்கள் மொழியைத் தாயென்று நினைத்தாலும் சரி, நோயென்று நினைத்தாலும் சரி, உங்கள் தாய்மொழி தமிழாக இருந்தாலும் சரி, வேறு ஏதோவொன்றாக இருந்தாலும் சரி, தாய்மொழிவழிக் கல்வி என்பது எந்த மொழி பேசுபவருக்கும் அடிப்படை உரிமை. பிற மொழி அறிவு பெரும் செல்வம். அதை வைத்துத் திரவியம் தேடுதல் ஞானம். ஆனால் தாய்மொழிவழிக் கல்வி ஒன்றே எந்த மொழியினருக்கும் முழுமையான விடுதலை கொடுக்க முடியும். இந்த அடிப்படையை உணரக் கூடிய ஓர் அறிஞர் கூட்டம் இந்தியாவில் வேறெங்கையும் விட இங்கே கூடுதல் எண்ணிக்கையில் உள்ளது. அதில் ஞாநியும் ஒருவர். முக்கியமானவர்.

மார்க்ஸ் பற்றி மன்மோகன் சிங் ஒரு முறை சொன்னார் – “நான் மார்க்சை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பொருளியல் படிக்கும் எவரும் மார்க்சைப் படிக்காமல் தன் படிப்பை முடித்து விட்டதாகச் சொல்ல முடியாது.” அது போலவே, தமிழகத்தின் சமூகப் பிரச்சனைகளில் அக்கறை மிக்க ஒருவராக என்னைவிட உங்களுக்கு ஞாநி மீது கூடுதல் விமர்சனங்களும் கோபங்களும் இருக்கலாம். அல்லது என் அளவுக்கு உங்களுக்கு அவரைப் பெரிதாகப் படாமல் போயிருந்திருக்கலாம். நுனிப்புல் மேய்பவர்களுக்கும் கிண்டிக் கிழங்கெடுப்பவர்களுக்கும் எல்லாமே ஒரே மாதிரித் தெரிய வேண்டியதில்லையே. ஆனால் தமிழ்ச் சமூகத்தில் அப்படி நுனிப்புல் மேய்பவர்களை கிண்டிக் கிழங்கெடுப்பவர்களாக மாற்றும் பணியைச் செய்தவர்களில் அவர் முக்கியமானவர் என்று நினைக்கிறேன். நாளை நானும் கிண்டிக் கிழங்கெடுக்கும் ஓர் ஆய்வாளானாக - அறிஞனாக மாறும் போது, நானும் அவரின் குற்றங்களை – குறைபாடுகளை எளிதில் புரிந்து கொள்ளும் வல்லமை பெறலாம். அதுவரையும் அதற்குப் பின்பும், ஒரு காலத்தில் என் பசிக்கேற்ற தீனி போட்டவர் என்ற வகையில் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் நன்றியும் அப்படியே இருக்கும்.

பின் குறிப்பு:
முகநூலில் அவர் தனக்கு சிறுநீரகப் பிரச்சனை என்றும் டயாலிசிஸ் தொடங்கி விட்டதாகவும் புகைப்படத்துடன் எழுதிய போது, மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. இருபது கிலோவுக்கும் மேல் எடை குறைந்திருந்தார். அதே காலகட்டத்தில்தான் என் மனைவியும் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு இந்தக் கொடுமைகளுக்குள் நுழைந்தாள். அவளுக்கும் டயாலிசிஸ் தொடங்கியதும் முதல் வேலையாக எடையைத்தான் குறைத்தார்கள். “வெறும் நீர்தான் குறையும். டயாலிசிஸ் போடும் போது இது சாதாரணம்தான்” என்று அவர் சொன்னது போலவே மருத்துவமனையிலும் சொன்னார்கள். “என் கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கங்களுக்குத் தண்டனையாக இப்போது பத்தியச் சாப்பாடு சாப்பிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்” என்றும் “வரிசைப்படி நகர்ந்து எவரோ ஒருவரின் சிறுநீரகம் கிடைத்து மாற்று அறுவை சிகிச்சை செய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும். அதுவரைதான் இந்தச் சிரமம் எல்லாம்” என்றும் விசாரிப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக எழுதியிருந்தார். இவருக்கு ஏன் குடும்பத்தில் யாரும் சிறுநீரகம் கொடுக்க முன்வரவில்லையா அல்லது இவரே வேண்டாமென்று மறுத்துவிட்டாரா என்று தோன்றியது. கேரளாவில் ஓரிடத்தில் நாட்டு மருந்து வாங்கிக் குடித்து டயாலிசிஸ் போடுவதையே நிறுத்தி விட்டதாக ஊரில் ஒருவர் சொல்லக் கேள்விப்பட்டு நானும் பல மாதங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அங்கு சென்று என் மனைவிக்கு இந்த மருந்து வாங்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது இதை ஞாநிக்கும் கூடச் சொல்லலாமா என்று தோன்றியது. சொன்னால் என்ன ஆகியிருக்கும்! ஜோதிடம் சொன்ன பெண்ணைப் பார்த்துச் சிரித்தது போலச் சிரித்து ஒதுக்கியிருப்பார். ஆனால் அந்த மருந்து பெரிதாக என் மனைவிக்கு உதவவில்லை. உதவியிருந்தால் உலகத்துக்கே தம்பட்டம் அடித்துச் சொல்லியிருப்போம். அவருக்கும் சொல்லியிருப்போம். அப்படித்தான் திட்டம் போட்டிருந்தோம். எல்லாம் எல்லோருக்கும் வேலை செய்துவிடுவதில்லையே!

என் மனைவியின் சிறுநீரகப் பிரச்சனையின் போது பெற்ற அனுபவங்களையும் கற்ற பாடங்களையும் எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளும் வகையில் நீளமாக எழுத வேண்டும் என்ற திட்டம் ஒன்று நீண்ட நாட்களாகத் திட்டமாகவே இருக்கிறது. ஆனாலும் சுருக்கமாகச் சொல்ல வேண்டிய சில கருத்துகள் இருக்கின்றன. சிறுநீரகக் கோளாறு என்பதோ டயாலிசிஸ் போட்டுக் கொள்வதோ உயிர் போகும் அளவுக்குப் பெரும் பிரச்சனை அல்ல. ஒவ்வொரு நாளும் எத்தனையோ மில்லியன் பேர் உலகெங்கும் டயாலிசிஸ் போட்டுக் கொள்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூடச் சொல்கிறார்கள். பெரும்பாலும் சமாளிக்க முடியாமல் உருக்கிக் கொள்கிற மற்ற பல நோய்களை விட சிறுநீரகக் கோளாறு என்பது தீர்வு இருக்கிற சமாளிக்க முடிகிற ஒரு நோய்தான். நாங்கள் சென்ற மருத்துவமனையில் கூட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக டயாலிசிஸ் போடுகிற ஒருவர் வந்து கொண்டிருந்தார். தினமும் அலுவலகம் செல்வது போல இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தனி ஆளாக வந்து டயாலிசிஸ் போட்டுக் கொண்டு எழுந்து சென்று விடுவார். ஆனாலும் டயாலிசிஸ் எல்லோர் உடம்புக்கும் ஒத்துக் கொள்வதில்லை. அப்படி ஒத்துக் கொள்ளாத உடம்பில் ஒன்றுதான் என் மனைவிக்கும். கிட்டத்தட்ட ஓராண்டு காலம் நரகம் போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து மீண்டோம். அப்படி ஒருவரின் உடம்பு ஒத்துக் கொள்ளாத போது, சிறுநீரகம் செயலிழந்தவுடன் அதன் விளைவாக கல்லீரல், இதயம், நரம்புகள், மன பலம் என்று எல்லாமே செயலிழக்கத் தொடங்கும். என் மனைவிக்கும் கூட இரண்டு முறை மாரடைப்பு வந்தது. ஞாநிக்கு இதுதான் நேர்ந்திருக்குமோ என்று தோன்றுகிறது. இரண்டு முறை வலிப்பு போல ஏதோ வந்தது. சில முறைகள் சர்க்கரை அளவு குண்டக்க மண்டக்கக் குறைந்தது. இரத்த அழுத்தம் அளவுக்கு மீறிக் கூடவும் குறையவும் செய்தது. உள்ளது போதாதென்று காசநோய் வந்து மாற்று அறுவை சிகிச்சையை ஆறு மாதங்களுக்கும் மேல் தள்ளிப் போட வேண்டியதாயிற்று. பல முறை மரணத்தின் அருகில் சென்று பார்த்து விட்டுப் பார்த்து விட்டுத் திரும்பினாள். கடைசியில் என் மாமியார்தான் தன் சிறுநீரகம் ஒன்றைக் கொடுத்துத் தன் மகளையும் அவள் குடும்பத்தையும் காப்பாற்றினார். எல்லாம் சுபமாக முடிந்தது.

இதில் நாங்கள் பட்டுப் படித்த முக்கியமான பாடங்கள் இரண்டு:
1. மாற்று அறுவை சிகிச்சையிலும் சில சிக்கல்கள் உள்ளன என்றாலும் அதுவே நிரந்தரத் தீர்வு. டயாலிசிஸ் போடாமலே கூடச் சிலர் முன்னெச்சரிக்கையாக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இதைச் சில மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் அவ்வளவு அழுத்தமாகச் சொல்ல மாட்டார்கள். அல்லது நமக்கு அந்த வேளையில் அது மண்டையில் சரியாக ஏறாது.

2. மாற்று அறுவை சிகிச்சையிலும் கூடிய விரைவில் குடும்ப உறுப்பினரே கொடுக்க ஏற்பாடு செய்வதுதான் நல்லது. நோயாளியின் உடம்பும் எளிதில் ஏற்றுக் கொள்ளும். வரிசைப்படி வந்து மூளைச்சாவு அடைந்த யாரோ ஒருவரின் சிறுநீரகத்துக்குக் காத்திருந்து செய்வதில் உள்ள சிக்கல், அதற்குப் பல ஆண்டுகள் ஆகும். அதற்குள் ‘எதுவும்’ நடக்கலாம். அப்படி இல்லாமல், எல்லாம் நல்லபடி நடந்து அறுவை சிகிச்சை முடிந்தாலும், யாரோ ஒருவரின் சிறுநீரகத்தை ஏற்றுக் கொள்வது உடம்புக்கு அவ்வளவு எளிதாக இராது. இதில் முக்கியமான இன்னொன்று, சிறுநீரகம் கொடுப்பவருக்கு அதனால் எந்தப் பிரச்சனையும் வராது. இது பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. அதைப் பெறும் போது பல நேரங்களில் காலம் கடந்து விடும். எனவே சிறுநீரகத்தில் பிரச்சனை என்று தெரிந்தவுடன் செய்ய வேண்டிய முதல் வேலை, குடும்பத்துக்குள்ளேயே யாரோ ஒருவர் கொடுப்பதற்கான வேலைகளைத் தொடங்கி விடுவது. அதற்கே சட்ட ரீதியான வேலைகளை முடிக்கப் பல மாதங்கள் ஆகும். இவை அனைத்தையும் மனதில் வைத்துத் துரிதமாகச் செயல்பட்டால் உயிரைக் காப்பது மட்டுமல்ல; தாங்க முடியாத வலியில் இருந்தும் தேவையில்லாத மன உளைச்சல்களில் இருந்தும் கூடத் தப்பிக் கொள்ளலாம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 4/6