ஹிட்லர் யார்?

அமேசானில் இலவசமாகப் படிக்கக் கிடைக்கும் நூல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டாவது நூல் ஹிட்லர் பற்றியது. இது போன்றே ஒரு மணி நேரத்துக்குள் படித்து முடிக்க முடிகிற மாதிரியான பல நூல்கள் இருக்கின்றன. எத்தனையோ மகான்களையும் அறிஞர்களையும் கொட்டிக் கிடக்கிற நூல்களுக்கு நடுவில் இருந்திருந்தும் இதைப் போயா படிக்க என்றுதான் முதலில் தோன்றியது. வரலாறு எல்லோரையுந்தானே பதிந்து வைத்திருக்கிறது. மனித குலத்துக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எல்லோருக்குமே வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் தாக்கம் நேர்மறையானதா எதிர்மறையானதா என்பது இரண்டாம் பட்சந்தானே.

ஹிட்லர் பற்றி நாம் மீண்டும் மீண்டும் கேள்விப்பட்ட, கேள்விப்பட்டு மறந்த பல கருத்துக்களைப் பற்றிய தொகுப்புதான் இதுவும்.

ஹிட்லரின் இளமைக் காலம் கொடுமையானதாக இருந்திருக்கிறது. குடிகார – கொடுமைக்காரத் தந்தை. அவன் இரண்டு மணங்கள் புரிந்து அதன் மூலம் பெற்றெடுத்த பிள்ளைகள் ஒவ்வொன்றாக ஏதோவொரு பிரச்சனையில் சிறு வயதிலேயே இறக்கிறார்கள். தாய் சொல்ல முடியத் துன்பங்களுக்கு உட்படுத்தப் படுகிறாள். பின்பொருநாள் தாயும் இறந்து போகிறாள். இளமைப் பருவத்தில் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஹிட்லர் ஓர் உடன்பிறப்பின் சாவுக்குப் பின் மிகவும் ஒரு மாதிரி ஆகி விடுகிறான். அதன் பின்பு அவனுடைய பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுகிறது. இதுதான் பிற்காலத்தில் அவன் ஒரு கொடூரமான மனிதனாக உருவெடுக்கப் போடப்பட்ட அடிப்படை.

ஹிட்லர் ஓர் ஒழுக்கசீலன். பாலியல் சார்ந்த பேச்சுகளை அவன் எப்போதும் சுவைத்ததில்லை. அதற்காகவே அவனுடைய நண்பர்களால் கேலிகுள்ளாக்கப் பட்டிருக்கிறான். இராணுவத்தில் பணிபுரியும் போது கூட புகைப் பிடித்தல் போன்ற பழக்கங்கள் இல்லாமல் இருந்திருக்கிறான்.

முதன்முதலில் இராணுவத்தில் பணிபுரிய விரும்பி ஆர்வமாகப் போனவனை மிகவும் பலவீனமாக இருப்பதாகச் சொல்லி நிராகரித்து விட்டார்கள். அதே ஆள் பின்னர் இராணுவத்தில் சேர்ந்து பல அரிய விருதுகளையும் மரியாதைகளையும் பெறுகிறான். கொடுக்கப்படும் பதவி உயர்வை வேண்டாம் என்று மறுக்கிறான். பின்னர் அவனே தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தன்னைச் சுற்றி இருப்பவர்களையே – அவனுக்காகவே வாழ்ந்தவர்களை ஆயிரக் கணக்கில் கொல்கிறான். அதையும் தேச நலன் கருதிச் செய்வதாக நம்புகிறான் அல்லது நம்ப வைக்கிறான். பின்னர் ஒரு கட்டத்தில் அவனை எதிர்த்த – ஆதரிக்க வில்லையோ என்று சந்தேகிக்கப்பட்ட ஒவ்வொரு உயிரையும் ஈவிரக்கமில்லாமல் பறிக்கிறான். தன் கட்சி தவிர அனைத்துக் கட்சிகளையும் தடை செய்கிறான். சட்டமியற்றுவதில் முழு அதிகாரமும் தனக்கு மட்டுமே இருக்கிற மாதிரியாக, பிரதமரும் குடியரசுத் தலைவரும் தானே என்று சட்ட மாற்றங்கள் செய்கிறான்.

அவன் தேச பக்தன் – தேச வெறியன். உலக வரலாற்றிலேயே அவனைப் போல் அவனுடைய தேசத்தையும் இனத்தையும் நேசித்தவர்கள் இருந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவனுடைய தேச பக்தி இன வெறியை அடிப்படையாகக் கொண்டது. வெறுப்பின் மேல் கட்டி எழுப்பப் பட்டது. அப்படியான தேச பக்தி எதில் முடியும் என்பதற்கு அவனை விடச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த உலகத்துக்குக் கிடைக்கவே கிடைக்காது. கிடைக்கவும் கூடாது. தேச நலனுக்காகத் தேசத்தையே பலி கொடுக்கவும் தயங்கக் கூடாது என்கிற முரட்டு பக்தி.

அவன் ஓர் இன வெறியன். தான் சார்ந்த இனமே உலகத்தில் மேலானது; மற்ற இனங்கள் (குறிப்பாக யூதர்கள், ஆனால் யூதர்கள் மட்டுமில்லை) கீழானவை; எனவே அவர்கள் இவர்களுக்கு அடிபணிந்து சேவகம் செய்வதே இயற்கையின் நியதி என்று அழுத்தமாக நம்புகிறான். முதலாளித்துவம், பொதுவுடைமை – இரண்டுமே யூதர்களின் சதி என்று நம்புகிறான்.

அவன் ஒரு சிறந்த பேச்சாளன். அவன் அந்த இடத்துக்கு வந்ததுக்கு அவனுடைய பேச்சாற்றல் பெரும் காரணம். வேறொருவர் நாட்டின் தலைவராக இருக்கிறார். அவருடைய பேச்சைக் கேட்கக் கூடியிருக்கிற கூட்டத்தின் போது, தன்னுடைய ஆட்களோடு போய், அவரைச் சிறைப்பிடித்து ஒதுக்கி விட்டு, மக்கள் முன்பு நின்று பேசத் தொடங்குகிறான். முதல் இரண்டு - மூன்று வரிகளிலேயே கூட்டம் ஆர்ப்பரித்து அதன் ஆதரவைத் தெரிவிக்கிறது. மக்களின் ஆதரவோடு மேலே வந்து பின் மக்களாட்சியைத் தூக்கி வீசி விட்டு, சர்வாதிகாரத்தை நிலைநாட்டுகிறான். முக்கியமாக கீழ்நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள்

திருமணமான அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்டு சாகிறான்.

உலகம் கண்ட இன்னொரு மாபெரும் சர்வாதிகாரி என்று அறியப்படும் ஸ்டாலினின் இரஷ்யப் படைகள்தான் ஹிட்லரையும் ஜெர்மனியையும் வீழ்த்தின. வெற்றி பெற வேண்டும் என்பதை விட, தன் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதை விட, ஒரு கட்டத்தில் எல்லோரையுமே எதிரியாக்கி விடுகிறான். அதற்காக எதையும் செய்யத் தயாராகி விடுகிறான். அதற்கான விதை வெறுப்பால் போடப் பட்டது. தன் நலம் விரும்பிகளே மாற்றுக் கருத்துகள் சொன்ன போது அவர்களை முடித்து விடுகிறான். ஆலோசனை சொல்லவே ஆளில்லாமல் செய்துவிட்டு, தான் செய்வதையெல்லாம் கொண்டாடுபவர்களையே உடன் வைத்துக் கொள்கிறான்; உயிரோடு இருக்க விடுகிறான்.


ஒட்டுமொத்த உலக வரலாற்றிலேயே அதிகபட்ச உயிர்களைக் குடித்த தனி மனிதன் என்ற பெருமை அவனையே சாரும். அவன் போகும் பாதை மனித குலத்துக்கே பெரும் அபாயமாக முடியலாம் என்று சந்தேகிக்கும் வாய்ப்புகள் இருந்தும் அதைத் தவற விட்டு விடுகிறார்கள் அவன் காலத்து ஆட்சியாளர்கள். அவர்கள் கொடுக்கத் தவறிய தண்டனைகளே பின்னர் மனித குலம் கண்ட மாபெரும் அழிவுக்குக் காரணமாகி விட்டன. அதற்குக் காரணம் அதற்கு முன்பு உலகம் அப்போடியோர் அழிவாளனைக் கண்டதில்லை. அவனைப் பார்த்த பின்புதான் அப்படிப் பட்டவர்களைச் சரியான நேரத்தில் அடையாளம் கண்டு அழித்து விடுதல் எவ்வளவு முக்கியம் என்பது உலக நாடுகளுக்குப் புரிந்தது. இப்படியொரு பிறவி இந்த உலகத்தில் பிறந்து விடக் கூடாது. அப்படிப் பிறந்தாலும் சரியான நேரத்தில் அடையாளம் கண்டு அழிக்கப்பட்டு விட வேண்டும். அதற்கு உலகத்தோர் எல்லோரும் அவன் வரலாற்றைப் படிக்க வேண்டும். படித்து அவர்களால் ஆன சிற்றுதவியை அவர்களுக்குத் தெரிந்த வகையில் மனித குலத்துக்குச் செய்ய வேண்டும்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 4/6