கலைஞர் கருணாநிதி - நல்லவை மட்டும்

கலைஞர் கருணாநிதி - நல்லவை மட்டும்

கடந்த ஜூன் மாத இதழைக் கலைஞர் சிறப்பிதழாகக் கொண்டு வந்த இதழ் ஒன்றுக்கு அவரைப் பற்றிய நல்லவைகளைப் பற்றி மட்டுமே எழுதுமாறு ஒரு கோரிக்கை வந்தது. அது நமக்கு அவ்வளவு எளிதில்லை. மூச்சுப் பிடித்து முக்கித் தக்கி எழுதி அனுப்பியதையும், "இதுதான் ஒங்க ஊர்ல நல்லபடியா எழுதுறதா?" என்று கேட்டு ஒதுக்கிவைத்துவிட்டார்கள். இயல்பிலேயே திராவிட அரசியல் மீது பெரிதாக ஈர்ப்பு இல்லை என்றபோதும், கண்ணை மூடிக்கொண்டு அவர்களை நிராகரிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எல்லோருக்கும் தன் பக்க நியாயத்தை எடுத்துவைக்க சட்டம் இடம் கொடுப்பது போல், அரசியலிலுமே கூட அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் இன்று போன்ற ஒரு நாளில்.

*
கருணாநிதி என்றால் இப்படித்தான் என்று நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிம்பம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் அது பெரும்பாலும் மிகவும் எதிர்மறையானதாகவே இருக்கிறது. அவர்கள் பார்த்ததை வைத்து அவர்கள் சில முடிவுகளுக்கு வந்திருக்கிறார்கள். அதில் தவறும் இல்லை. ஈழப் போரின் போது அவரின் செயல்பாடுகள், ஒவ்வொருவராகக் குடும்ப உறுப்பினர்களை உள்ளே கொண்டுவந்து கட்சியை முழுக்க முழுக்கத் தன் குடும்பத்தின் சொத்தாக்க முயன்றது, மத்திய அரசில் வளம் கொழிக்கும் துறைகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் போட்ட நாடகங்கள், ஏதோவொரு குழுவை வைத்து மாதம் ஒரு பாராட்டுவிழா நடத்த வைத்து அதில் திளைத்தது, பத்திரிகையாளர்கள் கேட்கும் மிக முக்கியமான கேள்விகளுக்குக் கூட வார்த்தை வித்தை காட்டுவது என்று எல்லாமே அவராலும் அவரின் ஆட்சியாலும் நேரடிப் பயன்பெற்றவர்களைத் தவிர இந்தத் தலைமுறையைச் சேர்ந்த மற்ற இளைஞர்களுக்குப் பார்க்கவே அருவருப்பாக இருக்கும் அனுபவங்களே. அதற்கு முந்தைய இரு தலைமுறைகளும் கூட அவரை வில்லனாக வைத்து நடைபெற்ற அரசியலையே பார்த்தவை. ஆனாலும் இந்தத் தலைமுறையைவிட அவரை நாயகனாகவும் பார்க்கக் கூடுதல் வாய்ப்புப் பெற்றவர்கள் முந்தைய இரண்டு தலைமுறையினர். அவர் தன் வாழ்வின் முக்கியமான கட்டத்தில் இருக்கும் இந்த வேளையில், மற்றவர்களைவிடத் திட்டமிட்டே குறிவைத்து வில்லனாக்கப்பட்ட அவர் வாழ்விலிருந்து அவர் நாயகனாகப் பிரகாசித்த சில தருணங்களை நினைவுகூர்ந்து உரையாடுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்றும் “திராவிடத்தால் வாழ்ந்தோம்” அல்லது “எழுந்தோம்” என்றும் இரு வேறு விதமான முற்றிலும் எதிரெதிர்க் கருத்தும் நோக்கமும்  கொண்ட முழக்கங்கள் தமிழகமெங்கும் ஒலிக்கத் தொடங்கியுள்ள இந்தக் காலத்தில், அரசியல் இயக்கங்கள் - கட்சிகளின் எழுச்சிக்கும் பிழைப்புக்கும் இது போன்று ஒரு கருத்தியலை முழுமையாகத் தூக்கிப்பிடிக்கும் அல்லது மறுதலிக்கும் முழக்கங்கள் மிகவும் முக்கியம் என்ற போதும், பொது மக்கள் நமக்கு இரு சாராரின் அரசியலையும் விருப்பு-வெறுப்பின்றி சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய கடமை இருக்கிறது. எல்லா இயக்கங்களின் வரலாற்றிலும் சில தனிமனிதர்களின் சாகசங்களே பெரும்பாலான பக்கங்களை நிரப்புகின்றன என்ற வழக்கத்தில் இருந்து திராவிட இயக்க வரலாறும் தப்ப முடியாது. இன்னும் சொல்லப் போனால், மனிதர்களுக்கான இயக்கம் - மனிதர்களால் நிரம்பியிருக்கிற இயக்கம் ஒன்றில் மனிதர்களின் உளவியலைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி சில தனிமனிதர்களைப் பிரதானமாக முன்னிறுத்தியும் அவர்களின் தனிமனிதக் கவர்ச்சியைப் பயன்படுத்தியும் மேலெழுந்த இயக்கம் திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தின் தலைசிறந்த மூன்று தலைவர்கள் பெரியார் - அண்ணா - கருணாநிதி. நம் வசதிக்கேற்றபடி சில அளவுகோல்களை வளைத்துக் கொண்டால், திராவிட அரசியலில் இவர்கள் மூவரையும்விடப் பெரிதளவில் வெற்றி பெற்றவர்கள், எம்ஜியாரும் ஜெயலலிதாவும் என்றும் சொல்லலாம். இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு திராவிட அரசியலின் வரலாற்றை எழுத முடியாது என்ற போதும், பெரியார் - அண்ணா - கருணாநிதி ஆகிய மூவரையும் ஏற்றுக்கொள்ளாத அல்லது வெறுக்கும் பலருடைய மனதையே வென்றவர்கள் இவர்கள் இருவரும் என்ற போதும், அதைத் திராவிட இயக்கத்தின் வெற்றியாகக் கொண்டாட முடியாது. திராவிட இயக்கத்தை வெளியிலிருந்து போட்டியிட்டு வெல்ல முடியாது என்ற நிலையில் உள்ளிருந்தே நீர்த்துப் போக வைக்கப் பயன்பட்டவர்கள்தாம் இவர்கள் இருவரும் என்கிற உண்மை புரிபடுகிற கட்டத்தில், அவர்களையும் சேர்த்து எழுதப்படும் திராவிட இயக்கத்தின் வரலாறு வேறுவிதமானதாகிவிடும் என்பது நமக்கு எளிதில் புரிந்துவிடும்.

திராவிட இயக்கத்தின் பலமான அடித்தளம் பெரியாரால் போடப்பட்டது. அதன் ஆழம் - அகலம் இரண்டுக்கும் அவரே காரணம். அவரே நினைத்துப் பார்த்திராத விதத்தில் அதை அப்படியே அலேக்காகப் பெயர்த்துக்கொண்டு போய், அதன் மேல் ஒரு வீட்டைக் கட்டியது அண்ணாவின் சாதனை. தேர்தல் அரசியலையே வெறுத்த பெரியாரின் பிள்ளைகள் ஏன் அவர் போட்ட அடித்தளத்தைப் பயன்படுத்தியே அதற்குள் நுழைந்தார்கள் என்ற கேள்விக்கான பதில், “அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒன்றே நம் மக்களுக்கு வேண்டியதையெல்லாம் பெற்றுக் கொடுக்க எளிய வழி என்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள்” என்று சொல்ல விரும்பினால் அப்படியே சொல்லிக்கொள்ளுங்கள், “அதெல்லாமில்லை, அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒன்றே நமக்கு வேண்டியதையெல்லாம் பெற்றுக்கொள்ள ஒரே வழி என்று அவர்கள் உணர்ந்த போது சுதாரித்துக்கொண்டார்கள்” என்று சொல்ல விரும்பினால் அப்படியும் சொல்லிக்கொள்ளுங்கள். எப்படியிருப்பினும் அதன் விளைவாக இரண்டும் நிகழ்ந்திருப்பதை மறுக்கவே முடியாது. பெற்றுக்கொள்ளவும் செய்தார்கள், பெற்றுக் கொடுக்கவும் செய்தார்கள். எத்தனையோ பேர் தம் வாழ்க்கையை வளப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எந்த மக்களின் முன்னேற்றத்திற்காகத் தாம் அரசியல் செய்வதாகச் சொன்னார்களோ அவர்களில் ஒரு சாராருக்கேனும் அந்த முன்னேற்றத்தைப் பெற்றும் கொடுத்திருக்கிறார்கள். இதற்கான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதால் அண்ணா இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் இயக்கத்துக்கும் என்று ஒரு பண்பாடு இருக்கும். அப்படி ஓர் அரசியல் இயக்கத்தைக் குடும்பம் போல நடத்தும் பண்பாட்டைத் திராவிட இயக்கத்துக்குள் கொண்டு வந்தவர் அண்ணா. அது மட்டுமில்லாமல், பெரியாரின் பாதையில் பயணிக்கமாட்டேன் என்று வெளியே வந்தவர், பெரியாரை விமர்சிப்பதில் தன் நேரத்தை வீணாக்காமல், என்றென்றைக்கும் அவர்தான் தன் தலைவர் என்று சொல்லிக்கொண்டே அவருக்குப் பிடிக்காத தேர்தல் அரசியலில் முழுவீச்சாக இறங்கியதும், வென்று ஆட்சியைப் பிடித்த பின்பும் கூட அதே நிலைப்பாட்டைப் பேணியதும் அண்ணா தமிழக அரசியலுக்குக் கற்றுக் கொடுத்த புதிய பாடங்கள். அண்ணாவின் ஆட்சி ஒன்றரை ஆண்டுகள்தாம் நடந்தது. தன் உழைப்பால் பெற்ற அதிகாரத்தின் முழுப் பலனையும் அனுபவிக்கும் முன்பே அவர் மறைந்துவிட்டார். அப்படிப் பெரிதாக அனுபவிக்க வேண்டும் என்று திட்டங்கள் ஏதும் அவருக்கு இருந்தனவா என்றும் தெரியவில்லை.

அண்ணாவின் மறைவுக்குப் பின், “அண்ணாவுக்குப் பின் யார் என்ற கேள்வி வரவேயில்லை, அது நெடுஞ்செழியன் என்றுதான் எல்லோருமே எண்ணிக்கொண்டிருந்தார்கள், அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் கட்சியை முழுக்கவும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர்தான் இந்தக் கருணாநிதி” என்பதுதான் நாம் மீண்டும் மீண்டும் கேள்விப்பட்டுக்கொண்டிருக்கும் வரலாறு. அதை மறுப்பவர்களும் உண்டு. “நெடுஞ்செழியனுக்கு இருந்த தலைமைப்பண்பு பற்றாது. அதனால்தான் கட்சி அவர் பின்னால் போகவில்லை. அவர் பின்னால் போயிருந்தால் அவரால் கட்சியை இவ்வளவு காலம் காப்பாற்றியிருக்க முடியாது” என்று பலவிதமான கருத்துக்கள் சொல்லும் திராவிட இயக்கத்தவரும் உண்டு. அதை நெடுஞ்செழியனின் பிற்கால அரசியல் உறுதிப்படுத்துவதாகத்தான் இருக்கிறது. மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெறும் 500 வாக்குகள் மட்டும் பெற்றுப் படுதோல்வி அடைந்த நெடுஞ்செழியனைவிட, தி.மு.க.-வின் முதல் தேர்தல் முதல் இன்றுவரை, தன்  வாழ்நாளில் எந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் ஒரு முறை கூடத் தோல்வியடையாமல் தொடர்ந்து 13 முறை தமிழகத்தின் வெவ்வேறு தொகுதிகளில் நின்று வென்றிருக்கிற கருணாநிதி ஏதோவொரு வகையில் திறமையானவராகத்தானே இருக்க வேண்டும்!

“ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு தேர்தல் வரும். அதில் நம் கட்சி வெல்லும். நாம் ஆட்சி அமைப்போம்” என்று தமக்குக் கிடைத்துக்கொண்டிருந்த வெற்றியை அதற்காகப் பெரிதும் எந்த உழைப்பையும் போடாமல் அனுபவித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பியது இந்த மெத்தனம்தான். “மக்கள் தொண்டு யார் செய்ய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்யட்டும். நான்தான் அதற்குத் தகுதியானவன் என்று நான் நினைக்கிறேன். மக்களும் அப்படியே நினைக்கிறார்கள். அதனால் இயல்பாகவே அவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பதற்றப்படுவதற்கு - வியூகம் வகுப்பதற்கு - வேலை செய்வதற்கு தேவை என்ன இருக்கிறது?” என்று சொல்லிக்கொண்டு களநிலவரம் புரியாமல் இருந்தார்கள். அந்த நேரத்தில், குடும்பம் போன்ற ஓர் அமைப்பைக் கட்டியெழுப்பி, அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒன்றையே தம் ஒற்றைக் குறிக்கோளாக முன்வைத்து, அதை நோக்கி ஓர் அணியாக இணைந்து உழைத்து, ஆட்சியைப் பறித்துக் கொண்டு போனது தி.மு.க. அதே தி.மு.க.-வுக்குள் இருந்த நெடுஞ்செழியனும் காங்கிரஸ் கட்சி போலத்தான் இருந்திருக்க வேண்டும். அதுவும் ஒரு குடும்பம் போல இருந்த ஓர் அமைப்பு என்பதால் கூடுதல் மெத்தனம் இருந்திருக்க வேண்டும்.

“பெரிய அண்ணன் இறந்துவிட்டார், வரிசைப்படி அடுத்த இடத்தில் இருக்கும் அண்ணன் நான்தானே!” என்று அவர் அயர்ந்து இருந்த வேளையில், குடும்பத்தில் முக்கியமான இன்னொருவர் களத்துக்குள் வந்து, குடும்பத்தின் மற்ற முக்கிய உறுப்பினர்கள் அனைவரையும் ஒவ்வொருவராகச் சந்தித்து, “நம் பெரிய அண்ணன் இறந்துவிட்டார். நம் குடும்பம் ஓர் இக்கட்டான சூழலில் இருக்கிறது இப்போது. அதற்கடுத்த இடத்தில் இருக்கும் அண்ணன் நல்ல மனிதன்தான். ஆனால் அவருக்கு சாமர்த்தியம் போதாது. உனக்கே தெரியும், நம் குடும்பம் வாழ்வாங்கு வாழ - மென்மேலும் தழைத்தோங்க அவரிடம் நல்ல திட்டங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதோ, என்னிடம் இன்னின்ன திட்டங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் செய்தால் மொத்தக் குடும்பமும் இப்போதைவிடப் பல மடங்கு நல்வாழ்வு வாழும். அதில் உனக்கு இந்த இடம், எனக்கு இந்த இடம், அவருக்கு அந்த இடம். இரவெல்லாம் தூங்காமல் யோசித்து எல்லாம் தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருக்கிறேன். உங்களுக்கெல்லாம் தலைவனாக வேண்டும் என்பதல்ல என் நோக்கம், உங்களில் ஒருவன் நான். பெயருக்குத்தான் நான் தலைமைப் பொறுப்பில் இருப்பேனே ஒழிய, இந்தக் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த நீங்கள் ஒவ்வொருவரும் தலைவர் போல நடத்தப்படுவீர்கள். இவ்வளவு நாட்களும் நீயும் நானும் ஊண் - உறக்கமில்லாமல் கட்டி வளர்த்த இயக்கம் அழிந்து போய்விடாமல், உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டியதை உறுதி செய்யவே இந்தப் பொறுப்பில் நான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். எனவே வாருங்கள், எல்லோரும் சேர்ந்து உழைக்கத் தொடங்குவோம், அது ஒன்றே நம் மறைந்த அண்ணனுக்கு நாம் செய்யும் மரியாதை” என்று வளைத்துப் போடுகிறார். எது தலைமைப்பண்பு என்று தினுசு தினுசாக விளக்கங்கள் வைத்திருக்கும் - எல்லாவிதமான தலைவர்களையும் அவர்களின் பண்புகளையும் பார்த்துவிட்ட நம் தலைமுறைக்கே களத்தில் இறங்கி வேலை செய்யும் இரண்டாமவரின் அணுகுமுறைதானே பிடித்திருக்கிறது! அதுவும் நம் நல்வாழ்வுக்கும் சேர்த்துத் திட்டங்கள் வைத்திருக்கிறவராக வேறு இருக்கிறார்! அப்படியிருக்கையில், தலைவன் என்றாலே தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்தே பழகிப் போயிருந்த தலைமுறைக்கு அது முற்றிலும் புதிய அணுகுமுறையாக இருந்திருக்கும்தானே! அங்குதான் அவரின் ஆட்டம் ஆரம்பிக்கிறது. எல்லா நிறுவனங்களிலும் இயக்கங்களிலும் அமைப்புகளிலும் இருக்கிற எல்லோருமே மனிதர்கள்தாம். இவை எல்லாவற்றிலும் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே கேள்வி அல்லது முதல் கேள்வி, “இதில் எனக்கு என்ன இருக்கிறது?” என்பதே. அந்த உளவியலைப் புரிந்து கொண்டு அதைத் தனக்கும் தன் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது தலைவனின் சாமர்த்தியம். இதில் பெரும் வெற்றி பெறுகிறார் அண்ணாவின் தம்பி கருணாநிதி. இதுதான் இன்றுவரை “உனக்கும் வெற்றி - எனக்கும் வெற்றி” என்ற தி.மு.க.வின் வெற்றிச் சூத்திரமாக இருக்கிறது. அதனால்தான் என்ன செய்தாலும் அதைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய விசுவாசம் மிக்க ஒரு தொண்டர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் கட்சியாக தி.மு.க. இருக்கிறது. பெரியார் போட்டு வைத்திருந்த அடித்தளத்தில் அவருக்கே பிடிக்காத வீட்டைக் கட்டிப் போட்டுப் போனவர் அண்ணா என்றால், அதைப் பெரும் மாடமாளிகையாக மாற்றி, அதைச் சுற்றிப் பூங்காக்களையும் தோட்டங்களையும் நிறுவிவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருப்பவர் கருணாநிதி. அண்ணா எப்படிப் பெரியாரைக் கடைசிவரை கைவிடவில்லையோ, அது போலவே கருணாநிதி கடைசிவரை அண்ணாவைக் கைவிடவே இல்லை. ஜெயலலிதா போல, எங்கும் என் பெயர் எதிலும் என் பெயர் என்று திராவிட இயக்கம் என்றாலே நான்தான் என்றொரு வரலாற்றை உருவாக்கியிருக்க முடியும். உயிரோடு இருக்கும் ஒருவருக்குச் சிலை என்றால் அது தமிழ் நாட்டில் முதன்முதலில் கருணாநிதிக்குத்தான் வைக்கப்பட்டது என்பார்கள் (அதையும் எம்ஜியார் இறந்த நாளில் உடைத்துப் போட்டுவிட்டார்கள்). அப்படிப்பட்டவர், ஊர் ஊருக்கு இருக்கும் பெரியார் சாலை, அண்ணா சாலை, பெரியார் நிலையம், அண்ணா நிலையம், பெரியார் நகர், அண்ணா நகர் என்று அனைத்தையும் தன் பெயருக்கு வைத்துக்கொள்ளாமல் தம் முன்னோரை முன்னிறுத்தியது முக்கியமானது. தாம் விரும்பிய தேர்தல் அரசியலையே விரும்பாத ஒருவரையும், ஒன்றரை ஆண்டுகள் மட்டும் ஆண்டுவிட்டுப் போன ஒருவரையும் எதற்கு வரலாறு மறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கலாமே!

“அரசியலுக்கும் இலக்கியத்துக்கும் என்ன தொடர்பு? அரசியலுக்கும் திரைப்படத்துக்கும் என்ன தொடர்பு? ஏன் தமிழ் நாட்டில் மட்டும் எப்போதும் இந்த இரு துறையினரே மீண்டும் மீண்டும் அரசியலுக்குள் வருகிறார்கள்?” போன்ற கேள்விகள் இங்கே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டிருக்கின்றன. இது தமிழ் நாட்டின் தனித்தன்மை அல்லது கோளாறு என்று எளிதில் முடித்துவிடக் கூடிய விவாதம் அல்ல. ஒரு வகையில் நாம் இதில் முன்னோடி என்றும் கொள்ளலாம். நாளை இதையே மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம். அப்படித்தான் எத்தனையோ இங்கிருந்து போயிருக்கின்றன. அவை பற்றியெல்லாம் நாம் அதிகம் பேசுவதில்லை. திராவிடக் கட்சிகள் இதைச் செய்து கெடுத்தன - அதைச் செய்து கெடுத்தன - மக்களைச் சோம்பேறிகளாக்கின என்று பேசுபவர்கள்தாம் அதையே பல பத்தாண்டுகள் கழித்து அவர்களுக்குப் பிடித்த வெளியூர்க் கட்சிகளும் கட்சிக்காரர்களும் செய்யும் போது சாணக்கியம் - சாமர்த்தியம் என்று கூச்சநாச்சமில்லாமல் பேசிப் புளகாங்கிதம் அடைந்துகொள்கிறார்கள். அரசியல்வாதி மக்களுக்காகச் செயல்படுவது மட்டுமின்றி தொடர்ந்து மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறவனாகவும் இருக்க வேண்டியுள்ளது. எனவே அவனுக்குப் பேச்சாற்றல் தேவைப்படுகிறது. இங்கே இருப்பவர்கள் எல்லாம் வாயிலேயே வடை சுடும் மனிதர்களை அடையாளம் காணத் தெரியாத மக்கள் என்றோ மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் எல்லாம் பேச்சைப் பார்த்து ஏமாறாமல் செயலைப் பார்த்து முடிவு செய்பவர்கள் என்றோ முடிவு கட்ட வேண்டியதில்லை. எளிய மனிதர்களையும் உரையாடலில் உள்ளடக்கிச் செய்யப்படும் அரசியல் நடப்பதால் இங்கே பேச்சாற்றல் தேவைப்படுகிறது. அதைவிட முக்கியமாக உரையாடல் என்ற ஒன்றே இங்கேதான் தொடங்கியிருக்கிறது. ஓரளவு வாசிக்கும் பழக்கம் உள்ள மக்கள் இருப்பதால் எழுத்தாற்றல் தேவைப்படுகிறது. அதனால்தான் இங்கே இந்தத் திறமைகளைப் பயன்படுத்தும் - எப்போதும் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும் இரு பெரும் துறைகளான கலையும் இலக்கியமும் தொடர்ந்து அரசியலுக்கு ஆள் அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. மக்களாட்சிக்கே நாம் தகுதியற்றவர்கள் என்றாகிவிட்டால் அது வேறு. மக்களாட்சிதான் நம் முறைமை என்றால், எல்லா மக்களையும் அதற்குள் கொண்டுவருவதுதானே முறை. அதைத்தான் திராவிட இயக்கம் இங்கே சாதித்திருக்கிறது. அண்ணாவும் கருணாநிதியும் எளிய மக்களுக்காக எழுதிக் குவித்த இலக்கியங்களும் கதை-வசனங்களும் சாதித்திருக்கின்றன. திரைப்படத்துறையின் கவர்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு இந்த மக்களுக்குத் தலைவனாகிவிட முடியும் என்பது ஒருபுறம் என்றால், அவர்களுக்குப் புரிகிற முகங்களைக் காட்டி அவர்களை அரசியலுக்குள் அழைத்து வந்ததில் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. அந்த வகையில், தன் கதைகள் வழியாகவும் திரைப்பட வசனங்களின் வழியாகவும் தொடர்ந்து மக்களோடு உரையாடிக்கொண்டிருந்த கருணாநிதி, அந்தத் தொடர்பைத் தன் அரசியல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், தன் எழுத்துக்கள் வழியாக இது எதற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் கிடக்கும் கடைக்கோடிக் குடிமகனையும் அரசியலுக்குள் இழுத்தும் வருகிறார். இது அவர் காலம் முழுக்கவும் தொடர்கிறது. கடைசிவரை முரசொலி மூலம் அவரது தோழர்களோடும் தம்பிகளோடும் உரையாடிக்கொண்டே இருக்கிறார். இப்படியான உரையாடல் மரபுதான் இந்தியத் துணைக்கண்டத்தில் வேறெங்கும் பேசப்படாத அளவு இங்கே சமூக நீதி பேசப்படுவதற்கான காரணம். “திராவிட இயக்க எழுச்சியின் பயனாக அவர்களுடைய கலையும் எழுத்தும் மட்டுமே தூக்கிப் பிடிக்கப்பட்டன, மற்றவர்களின் தரமான படைப்புகளும் இலக்கியமும் மட்டம் தட்டப்பட்டன” என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறது. அது அப்படியே இருந்தாலும், கலையும் இலக்கியமும் எளிய மக்களுக்குமாக எடுத்துச் செல்லப்பட்டது இவர்களின் காலத்தில்தான்.

கருணாநிதியின் இளமைக்கால அரசியல் வாழ்விலும் அதற்கு வெளியே செய்த இன்னபிற சாகசங்களிலும் பங்கெடுத்து உடன் பயணித்த கண்ணதாசன், தன் நூல்களில் தனிப்பட்ட முறையில் அவரைத் தாறுமாறாக விமர்சிக்கிறார். ஆனால் அவரின் திறமைகளை அங்கீகரிக்கவும் செய்கிறார். தன் ‘வனவாசம்’ நூலில் கல்லக்குடி தொடர்வண்டி மறியல் போராட்டம் பற்றி விவரிக்கையில், அவரின் ஒருங்கிணைக்கும் திறமைகள் பற்றிப் புகழ்ந்து பேசுகிறார். முதலில் நேருவுக்கு இடதுசாரிகள் பெரும் தலைவலியாக இருக்கிறார்கள். அது நாடு முழுக்க இருந்த பிரச்சனை. அதன் பின்பு டெல்லிக்குப் பெரும் தலைவலியாக உருவெடுப்பது தமிழகத்தின் திராவிட இயக்க எழுச்சிதான். ‘அரசாங்கம் அல்லது ஆளுங்கட்சி என்பது, அதன் கடமையை அல்லது அது தன் கடமை என்று நினைப்பதை அதன் போக்கில் செய்து கொண்டிருக்கும், பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எதிர்த்து உரையாற்றுவதோடு எதிர்க்கட்சிகளின் கடமை முடிந்துவிட்டது’ என்று எல்லோரும் எண்ணிக்கொண்டிருந்த காலத்தில், இங்கிருந்துதான் எதிர்ப்பு அரசியல் என்றால் எந்த எல்லைவரை செல்லலாம் என்று மொத்த இந்தியாவுக்கும் பாடம் எடுக்கப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போரின் போது எங்கள் தெருக்களில் பீரங்கிகள் வந்தாலும் பின்வாங்க மாட்டோம் என்று பேசிய தைரியசாலிக் கருணாநிதியை இந்தத் தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தனக்குச் சரியெனப் பட்ட எதையும் தடாலடியாகச் செய்த ஜெயலலிதாவுக்கு முன், அதனாலேயே என்னவோ, எல்லோரையும் சரிக்கட்டிப் போகிற -  எல்லாத்திலும் வாக்குக் கணக்குப் பார்த்து நிதானமாகச் செயல்படுகிற கருணாநிதி வில்லனாகவே பட்டார். இதில் ஜெயலலிதா என்ன செய்தாலும் அதை நியாயப்படுத்துவது கூட அல்ல, அதற்கும் மேலாக ஓரடி போய், “அதுதான் சரியான அணுகுமுறை - அதுதான் தலைமைப்பண்பு - நிர்வாகத்திறன்” என்று வாதிடுகிற - பிரச்சாரம் செய்கிற ஒரு கூட்டம், அவருக்கு முக்கியமான இடங்களில் வாய்த்திருந்தது. அது கருணாநிதிக்குக் கட்சிக்குள் மட்டுமே இருந்தது.

வில்லன் பாத்திரம் அவருக்குப் புதிதல்ல. எம்ஜியார் நாயகன் என்பதால் அவர் இருக்கும்வரை அவரை எதிர்த்த இவர் வில்லனாகவேதான் இருந்தார். எம்ஜியார் அளவுக்கு இவர் மக்கள் மனத்தைக் கவரவில்லை. அதற்கு எம்ஜியாரின் திரைப்பட முகம் உதவியது என்பது ஒருபுறம் சரி என்றாலும், அவருடைய அரசியல் பாணியும் ஆட்சி முறையுமே மக்களைக் கவர்வதாகவே இருந்தது. எப்போதும் மக்களைக் கவர்ந்து கொண்டே இருப்பதே தன் வாழ்நாளின் ஆகப்பெரும் பணியாகச் செய்தவர் அவர். எம்ஜியாரின் ஆட்சியிலும் ஊழல்கள் இருந்தன என்றாலும் அவர் இவரைவிடப் பெரிய ஊழல்வாதியாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் எம்ஜியார் ஒருபோதும் கொள்கைசார் அரசியலோ வளர்ச்சிசார் அரசியலோ செய்யவில்லை. தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எதுவெல்லாம் செய்ய வேண்டுமோ அது அனைத்தையும் செய்தார். யாரையெல்லாம் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டுமோ அவர்களையெல்லாம் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார். டெல்லிக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாடுகள் எடுத்ததில்லை. இவருக்கோ அப்படியல்ல. என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் கட்டிப் போட்டது போல மயங்கிக் கிடக்க இவர் ஒரு திரைப்பட நடிகர் அல்லர். அரசியல்ரீதியாக ஏதாவது செய்துகொண்டே இருந்தால்தான் மக்களின் மனதில் நிலைத்து நிற்க முடியும். பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமலேயே கட்சியைக் கட்டிக்காத்தது அப்படித்தான். தோற்கவே தோற்காத தலைவர் எம்ஜியார் என்பது நடந்த கதை. மூன்று தேர்தல்களில் தொடர்ந்து தோற்றிருந்தால் என்ன ஆகியிருப்பார் என்ற கேள்வி ஒன்று இருக்கிறதே. அதற்கான பதில் என்ன? கருணாநிதியைப் போல களத்தில் நின்று கட்சியைக் காப்பாற்றியிருப்பாரா? ஜெயலலிதா போல அடுத்த தேர்தல் வரும்வரை கொடநாடு போன்று ஏதோவோர் இடத்தில் போய் ஓய்வெடுக்கப் போயிருப்பாரா?

அதிலும் முக்கியமாக கருணாநிதியின் கொள்கைசார் அரசியல் என்பது குறிப்பிட்ட ஒரு குழுவுக்கு எதிரான வெறுப்பு அரசியல். அதுவும் பெருமளவு அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த ஒரு குழுவுக்கு எதிரானது. அதுதான் அவரை மேலேற்றியது. அதனால் அது கொடுக்கும் சிக்கல்களையும் அவர்தானே சமாளித்தாக வேண்டும். மத்திய அரசிலும் சரி, மாநில அரசினுள்ளும் சரி, பத்திரிகை உலகிலும் சரி, இவருக்கு எதிரான சக்திகள் எப்போதும் இவரது தோல்விகளையும் குறைபாடுகளையும் ஊதிப் பெரிதாக்கிக்கொண்டேதான் இருந்தன. அவர் ஊழலற்ற ஆட்சி கொடுத்தாரா இல்லையா என்பதல்ல இப்போதைய வாதம். ஊழலற்ற ஆட்சி என்பதே பெரும் பித்தலாட்டம். சுதந்தர இந்தியாவில் இடதுசாரிகளைத் தவிர்த்து எந்தக் கட்சியுமே ஊழலற்ற ஆட்சி கொடுத்ததில்லை. “அவர்கள்தான் ஆட்சியே நடத்தவில்லை, ஆட்சி நடத்தினால்தானே ஊழல் செய்ய முடியும்!” என்று ஒரு கேள்வி வேறு  இருக்கிறது. அது போகட்டும், அப்படி இருக்கையில், ஒரு கட்சி அல்லது தலைவனின் வெற்றி-தோல்வியை ஊழல் என்ற ஒற்றைக் கூறு கொண்டு அளவிடுவது பெரும் தவறு. ஊழலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, தனக்கும் தன் குடும்பத்துக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் தன் வருங்காலத் தலைமுறைகளுக்கும் பணம் சேர்ப்பது. இது பெரும்பாலான கட்சிகளும் தலைவர்களும் செய்கிற ஊழல்தான். ஆனாலும் இதிலும் சிலர் செய்வது மட்டும் பெரிதாகப் பேசப்படுவதும் சிலர் செய்வதைப் பேசாமலே விட்டுவிடுவதும்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய அரசியல். இன்னொன்று, ஒருபுறம் தான் ஊழலுக்கு எதிரானவன் - ஊழலற்ற ஆட்சியாளன் என்றொரு பிம்பத்தைக் கட்டியெழுப்பிக்கொண்டு, மற்றொரு புறம் தன்னை அரசியலில் தக்கவைத்துக் கொள்வதற்கு வசதியாக தனியார் நிறுவனங்களோடும் அதிகார மையங்களோடும் திரைமறைவு உறவுகள் வைத்துக்கொள்வது - தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவர்களுக்கு நியாயமற்ற - சட்டத்துக்குப் புறம்பான உதவிகள் செய்வது. இதில் தலைவரின் வங்கிக் கணக்குக்கோ அவரது குடும்பத்துக்கோ பணம் போகாது. கட்சிக் கணக்குக்கோ அல்லது தேர்தல் நேரத்தில் வேறொரு வகையிலோ பணம் இறைக்கப்படும். இதுவும் ஊழல்தான். இது ஊழல் இல்லை அல்லது இதைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை என்பது போல நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. இதில்தான் கருணாநிதி கடுமையாக வழுக்குகிறார். சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கையாகட்டும், சமீபத்திய அலைக்கற்றை ஊழல் ஆகட்டும், எப்போதுமே அவருடைய ஊழல் முதல் வகையைச் சேர்ந்தது என்று மக்களுக்கு முழுமையாகச் சென்று சேர்ப்பிக்கப்படுகிறது. அதற்கு எதிரான அவரின் விளக்கங்கள் ஒருபோதும் எடுபடவேயில்லை.

“வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற அண்ணாவின் வசனமே அர்த்தமிழந்து போய்க் கிடக்கிறது இன்று. “வடக்கு வாடுகிறது, தெற்கு தேறுகிறது” என்று வேண்டுமானால் சொல்லலாம். சமூக நீதி என்று மட்டும் இல்லை, எந்தவிதமான அடிப்படை வசதிகளும் எளிய மக்களுக்குச் சென்றுசேரவில்லை அங்கே. அவர்களின் அரசியல் கட்சிகள், அவர்கள் சிறிதும் சிந்தித்துவிடாதபடி, நாகரீக வாழ்வுக்குச் சற்றும் தொடர்பில்லாத பிரச்சனைகளை எழுப்பி அவர்களை மேலும் மேலும் முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைப் புரிந்துகொள்ள மனித வளர்ச்சிக் குறியீட்டு ஆய்வுகளையும் புள்ளிவிவரங்களையும் புரட்ட வேண்டுமென்றில்லை. இந்தி பேசும் வடமாநிலம் ஒன்றுக்கு ஓரிரு நாட்கள் பயணம் செய்துவிட்டு வந்தால் போதும். அல்லது அங்கிருந்து இங்கே வேலை செய்ய வந்திருக்கும் நம் அலுவலகத் தோழர்களிடம் நாலு வார்த்தை பேசினால் போதும். இந்த வளர்ச்சிக்கு எது காரணம்? இயல்பாகவே நம் மக்களிடம் இருந்த அறிவாற்றலும் வளர்ச்சி தாகமும் தவிர்த்து, இடையில் இருபது ஆண்டுகள் ஏதோதோ நாடகங்கள் போட்டு மத்திய ஆட்சியில் வளமான துறைகளைப் பிடுங்கிய சாமர்த்தியமும் இதற்கு ஒரு காரணம்தான். அப்படிப் பெறப்பட்ட வளமான துறைகளின் மூலம், கட்சியும் வளமடைந்தது - அமைச்சர்களும் வளமடைந்தனர் - தமிழகமும் வளமடைந்தது. நம்மை வளமாக வைத்துக்கொள்ள ஒரே வழி, நம்மைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கும் வளத்தின் சுவையைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற பண்பாடு தி.மு.க.-வின் பண்பாடு. கருணாநிதி தி.மு.க.-வினருக்குக் கற்றுக் கொடுத்த பண்பாடு. அதுதான் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகத்தை வைத்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு போன்று ஜெயலலிதாவின்  ஆட்சிக்கென்று எப்படிச் சில நற்கூறுகள் உள்ளனவோ, அது போலவே கருணாநிதியின் ஆட்சிக்கென்று சில சிறப்புக் கூறுகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் எப்போதும் ஏதோவொரு வளர்ச்சிப்பணி செய்துகொண்டிருப்பது. சாலைகள், பாலங்கள், பேருந்து நிலையங்கள், தொழிற்பூங்காக்கள், சமத்துவபுரம், உழவர் சந்தை, காப்பீட்டுத் திட்டம் என்று எத்தனை எத்தனையோ பணிகள் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இங்கே செய்யப்பட்டிருக்கின்றன. அதை எல்லாம் அப்படியே மறந்துவிட்டு, “திராவிடக் கட்சிகள் தமிழகத்தைப் பாழாக்கிவிட்டன” என்று குருட்டடியாக ஏதாவது சொல்வது, மற்ற மாநிலங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் பேசுவது.

இதற்கெல்லாம் மேலாக அவர் தமிழக அரசியலுக்குச் செய்த பெரும் பணி ஒன்றிருக்கிறது. எப்படி, உயிருள்ள போதே சென்னை மாநகரில் தன் சிலையையும் தன் பெயரில் ‘கலைஞர் கருணாநிதி நகரும்’ கண்டு மகிழ்ந்த கருணாநிதி, ஜெயலலிதாவைப் பார்த்தபின், ‘நான் இவர் போல் பெயர்ப்பித்து பிடித்தவன் இல்லை - மனிதர்களை மதியாதவன் இல்லை’ என்று நிரூபிப்பதற்காகவே தன்னை மென்மேலும் முதிர்ச்சியான ஒரு தலைவராகக் காட்டிக்கொண்டாரோ, அது போலவே, தன் அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் டமால் டுமீல் என்று இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எவருமே செய்திராத - பார்த்திராத கொடுமைகளையெல்லாம் கூச்சமில்லாமல் செய்த ஜெயலலிதா, அதையும் ஆகா ஓகோவென்று புகழ்ந்து திரிந்த தன் ரசிகர் கூட்டத்தின் உற்சாகத்தையும் மீறி, அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்த போது, தன்னை மேலும் முதிர்ச்சியுடைய ஒரு தலைவராகக் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டார். அதற்குக் காரணம் அவருக்கு எதிராக அரசியல் செய்துகொண்டிருந்த கருணாநிதி தனக்கென்று தெளிவான சரக்கு வைத்துக்கொண்டிருந்தார். அவரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமென்றால் அதற்குத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது இவருக்கு. அதனால்தான், “நான் பாப்பாத்தி” என்று சட்டமன்றத்தில் சொன்னவரால், அதன் பின்பு 69% இட ஒதுக்கீடு மற்றும் சங்கராச்சாரியார் வழக்கு போன்ற பிரச்சனைகளில், “கருணாநிதி கூட இதைச் செய்திருக்கமாட்டார்” என்று சொல்லும் வகையில் நடந்துகொள்ள முடிந்தது. “பிரபாகரனைக் கொண்டுவந்து தூக்கிலிடுவேன்” என்று சொன்னவரை, “தனி ஈழம்தான் தீர்வு என்றால் அதையும் கோரத் தயங்கமாட்டோம்” என்று சொல்ல வைத்தது. அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் விரட்டி விரட்டி அடித்தவரை, “அம்மா உணவகம்” போன்று மக்கள்நலத் திட்டங்களின் பக்கம் இழுத்து வந்தது. காமராஜர் கொடுத்த நல்லாட்சியை மறக்கடிக்கும் அளவுக்கு கருணாநிதி நல்லாட்சி கொடுக்கவில்லை என்றாலும், அப்படியான தோற்றத்தை இவரால் மக்களுக்குக் கொடுக்க முடிந்திருக்கிறது. அந்த அளவுக்கு யாரும் காற்றில் வீடு கட்ட முடியாது. அப்படியானால் ஏதோ ஒன்று மக்களுக்குக் கிடைத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறது. அதுதான் அவர் சாதனை.

நிறைவாக, இப்போது ஏதோ இந்து மதம் பெரும் எழுச்சி பெற்றுக்கொண்டிருப்பதாக ஒருசாரார் நம்புகிறார்கள் அல்லது நம்பவைக்க முயற்சிக்கிறார்கள். ஒரேயோர் ஆட்சி மாற்றத்தால் நிகழ்ந்திருக்கிற அரசியல் எழுச்சி என்பது அத்தனை ஆயிரம் ஆண்டு வயதுடைய ஒரு மதத்தின் எழுச்சியாக முடியுமா (அப்படிச் சொல்வதே சரியா என்று கூடத் தெரியவில்லை) அல்லது எல்லா ஆட்சியதிகாரம் சார்ந்த அரசியல் எழுச்சிகளைப் போலவே இதுவும்  ஐந்தாண்டுகளைத் தாண்டி நீடிக்கும் ஆற்றல் கூட இல்லாமல் போகுமா என்பதற்கான விடை காலத்திடம்தான் இருக்கிறது. மன்மோகன் சிங் கொண்டுவந்த வளர்ச்சி எல்லோருக்குமானதா என்ற கேள்வி  போலவே, இந்து மதத்தின் இந்த எழுச்சி இந்து என்று சொல்லப்படுகிற எல்லோருக்குமானதா என்றொரு கேள்வியும் ஒருசாராரால் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மதத்துக்கு உள்ளே இருக்கும் கோளாறுகளைக் கேள்வி கேட்டுவிடாதபடிப் பார்த்துக்கொள்ளத்தான் வெளியே எதிரிகளை உருவாக்கி இந்த எழுச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள். இது எதில் போய் முடியுமோ தெரியவில்லை. உலக மதங்களிலேயே ஒப்பற்ற மதம் இந்து மதம்தான் என்று சொல்பவர்கள் ஒருபுறம் என்றால், அதே இந்து மதத்தில் பிறந்து தான் இந்து என்று நம்பவைக்கப்பட்டதே பித்தலாட்டம் என்று சத்தம் போட்டுச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். எல்லா மதவாதிகளையும் போலவே குறைபாடே அற்ற மதம் எங்கள் மதம் என்று சொல்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் எல்லா விளக்கங்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் பலர் கூட ஏற்றுக்கொள்ளாத ஒரு கோளாறு இங்கே இருக்கிறது. அது, சாதி அடிப்படையிலான உயர்வு தாழ்வைக் கட்டிக் காக்க வேண்டியதன் நியாயம். கலவரம் செய்வதற்கும் அதிகாரத்தைக் கைப்பற்றவும் தேவைப்படும் கீழ்சாதிக்காரன், அடுத்து அதிகாரத்தில் பங்கு கேட்டே தீருவான். அதையும் ஓரளவுக்குக் கொடுத்து அவனைத் திருப்திப்படுத்திவிடலாம். அடுத்து, “நாம் எல்லோரும் சமம்தானே!” என்றொரு கேள்வியையும் கேட்டே தீருவான். முதலில் காரியம் ஆகும்வரை, “ஆமாம்” “ஆமாம்” என்று சொன்னாலும், என்றோ ஒரு நாள், “அப்படியெல்லாம் இல்லை, நீ வேறு, நான் வேறு, உனக்கும் எனக்கும் வெவ்வேறு பணிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. உனக்கு வேண்டியதெல்லாம் எடுத்துக்கொள். ஆனால் இந்தப் பணியை நான் மட்டும்தான் செய்ய வேண்டும்” என்று எல்லாக் குரல்களும் இல்லாவிட்டாலும், ஒருசில குரல்களாவது பொறுக்க முடியாமல் சொல்லத்தான் செய்யும். அன்று கலகம் வரத்தான் செய்யும். அதற்கான விதையைப் போட்டது பெரியார். அதற்கு அரசியல் வடிவம் கொடுத்து அதை அரசாணையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய முதல் முதலமைச்சர் கருணாநிதி. சாதி தமிழகத்தின் பிரச்சனை மட்டும் அல்ல. மொத்த இந்தியாவின் பிரச்சனை. அதைப் பற்றிப் பெரிதளவில் பேசிய அம்பேத்கரின் மாநிலத்தில் கூட இவ்வளவு சாதிக்கப்படவில்லை. தமிழ்நாடு சாதித்திருக்கிறது. மனிதன் நாகரீகம் அடைய அடைய இது மீண்டும் மீண்டும் மேலே வரப்போகும் பிரச்சனை. இப்போதுதான் கேரளாவில் வந்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் இதெல்லாம் நடக்க இன்னும் ஐம்பதாண்டுகள் கூட ஆகலாம். ஆனால் வந்தே தீரும். அப்படி வரும் போதெல்லாம் கருணாநிதி பேசப்படுவார்.

கருத்துகள்

  1. ஆழமான கட்டுரை. எல்லோரும் பற்பல முனைகளில் ஆயுதங்களில் இவரை தாக்கும் போது இவர் மட்டும் அகிம்சாவாதியாக நடக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்ப்பது மிக அதிசயம். முக்கியமாக உயர் மக்களாக கருதுபவர்கள் செய்த அநீதிகள் அளவே இல்லாதது. எவ்வளவோ தவறு செய்தாலும் ஊழல் செய்தாலும் மற்றவர்கள் எளிதில் அதை கடந்து போக முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் மாற்றுக் கருத்தே இல்லை. இவருக்கு மட்டும் தனி அளவுகோல் வைத்துக்கொண்டிருந்ததுதான் இவர் மீதான விமர்சனங்களுக்கெல்லாம் முதல் விடை. வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி