கேரள வெள்ளம் இன்னும் மோசமாக மாறும்

 கேரள வெள்ளம் இன்னும் மோசமாக மாறும்

மனிதர்களின் செயற்கையான தலையீடுகள் அவலத்தின் அளவைப் பெரிதளவில் கூட்டிவிட்டன

கேரளம் பல பத்தாண்டுகளில் கண்டிராத அளவுக்குப் பெரும் வெள்ளத்தை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், 2010-இல் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ‘மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் வல்லுநர் குழு’ (மே.ம.சு.வ.கு.)-வின் தலைவர் சூழலியலாளர் மாதவ் காட்கில், சூழலிய உணர்மிகு (Ecologically Sensitive) பகுதிகளைக் கையாள்வதில் அரசின் வினைமை பற்றித் தீவிரக் கவலைகளை எழுப்பியுள்ளார்.


அரசு அமைத்த இந்த மே.ம.சு.வ.கு., அதன் 2011 அறிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கீழ் வரும் கேரளத்தின் பல பகுதிகளை சூழலிய உணர்மிகு பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.


“பா.ஜ.க. ஆளும் மாநிலங்களும் சரி, சி.பி.ஐ.எம். ஆளும் மாநிலங்களும் சரி, மற்ற எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாநில அரசும் எங்கள் அறிக்கையை எதிர்த்தது,” என்கிறார் Rediff.com-இன் சையத் ஃபிர்தவுஸ் அஷ்ரஃப்பிடம் பேசிய காட்கில்.


உங்களைப் பொருத்தமட்டில் கேரளத்தில் என்னதான் தப்பு நடந்தது?


ஏகப்பட்ட பிரச்சனைகள் (தப்பாக நடந்தவை).


எந்த ஒன்றையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.


பொதுவாக, ஒரு (நிலையான) சுற்றுச்சூழல் இழப்பும் மக்களாட்சி நடைமுறைக்கெதிரான ஓர் அடக்குமுறையும் இருந்துவருகிறது.


இந்தக் குறிப்பிட்ட விவரத்தை எங்கள் அறிக்கையில் கோடிட்டுக்காட்டியிருக்கிறோம்.


சமீபத்திய கேரள வெள்ளங்களைத் தடுத்திருக்க முடியுமா?


எங்களுடைய அறிக்கை, நம் சட்டத்தையும் மக்களுக்கு இறைமையளிக்கும் நம் அரசியலமைப்பையும் ஆதாரமாகக்கொண்டது.


மக்களாட்சி அதிகாரங்களை மக்களுக்கே உரிமைப்படுத்த வேண்டும் என்கிறது அரசியலமைப்பு.


இது, இன்று இருப்பது போல, சட்டத்தை அவமதிக்கும் - மக்களாட்சியை ஒடுக்கும் அமைப்பாக இல்லாமல், சட்டத்திற்குப் பணியும் - மக்களாட்சி சமூகத்தை வைத்திருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றியது.


கேரள அவலத்தில் எவ்வளவு மனிதனால் ஏற்படுத்தப்பட்டது?


மனிதர்களின் செயற்கையான தலையீடுகள் அவலத்தின் அளவைப் பெரிதும் கூட்டிவிட்டன.


கேரள சட்டமன்றம் சமீபத்தில் ‘நஞ்செய் நிலச் சட்டத்தைத்’ திருத்தியதன் விளைவாக, வயல்வெளிகள் போன்றவற்றை உட்கட்டுமானத் திட்டங்களுக்குக் கைப்பற்றுவது எளிதாகிவிட்டது. இதைச் சூழலியர்கள் கண்டித்துள்ளனர்.


முன்பு, நஞ்செய் நிலங்களில் கட்டுமானம் செய்வதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன.


ரியல் எஸ்டேட் லாபியிடம் அதிகாரம் இருப்பதால், நஞ்செய் நிலங்களில் அவர்களைக் கட்டுமானம் செய்துகொள்ள அனுமதிக்க முயற்சிக்கிறார்கள்.


அதன் பொருள் என்னவென்றால், வருங்காலங்களில் கேரளத்தில் இது போன்ற வெள்ளங்கள் இன்னும் மோசமாக மாறும்.


கேரள வெள்ளத்துக்குப் பின் உங்கள் அறிக்கை உரையாடலின் மையப்புள்ளியாகி இருக்கிறது. இது எப்படி நிகழ்ந்தது?


2010-இல், சூழலியல் மற்றும் வளர்ச்சி சார்ந்த எல்லாவிதமான பிரச்சனைகளையும் ஆராய்வதற்காக, சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம், ‘மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் வல்லுநர் குழுவை’ அமைத்தது.


இதில் குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம், தமிழ் நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் பகுதிகள் அடங்கும்.


வெவ்வேறு பகுதிகளில், சூழலியல் ரீதியாக, எந்தெந்தப் பகுதிகள் கூடுதல் உணர்வுடையவை என்றும் எந்தெந்தப் பகுதிகள் குறைவான உணர்வுடையவை என்றும் பரிந்துரைப்பதே இலக்கு.


பல்வேறு பகுதிகளுக்கு, எந்த மாதிரியான செயல்பாடுகள் பொருத்தமாக இருக்கும் என்றும் அவை எப்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் காண்பது.


ஆகஸ்ட் 2011-இல் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.


அரசு இந்த ஆய்வை ஏன் மேற்கொண்டது?


இந்த இடம் (மேற்குத் தொடர்ச்சி மலை) ஒரு சூழலிய உணர்மிகு பகுதி.


இது உலகிலேயே மிகச் செழிப்பான பல்லுயிர்க் களஞ்சியங்களில் ஒன்று. அங்கே முறையான திட்டமிடல் ஏதுமின்றி ஏகப்பட்ட வளர்ச்சிப் பணிகள் நடந்தேறிக்கொண்டிருந்தன.


இவை அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நிறைய அழுத்தம் இருந்தது.


எனவே, இந்த ஆய்வை மேற்கொண்டோம்.


இந்தச் சூழலிய உணர்மிகு பகுதிகளில் நடத்தப்படும் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படாவிட்டால் இப்படியான ஓர் அவலம் நிகழும் என்று அப்போதே கணித்தீர்களா?


நாங்கள் ஒன்றும் சோதிடர்கள் அல்ல, ஆனால் எங்கள் ஆய்வு, நிலச்சரிவுகளைக் கூட்டி, வெள்ளங்களை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சூழலிய உணர்மிகு பகுதிகளில் செய்யப்படும் வளர்ச்சிப் பணிகளை நிச்சயம் பார்வையிட்டது.


ஆகஸ்ட் 2018-இல் கேரளம் இது போன்று வெள்ளங்களால் துன்புறும் என்று அன்றே சொல்லும் அளவுக்கு நிச்சயம் எந்த வாய்ப்பும் இருக்கவில்லை.


அப்படியான விரிவான கணிப்பு எதுவும் நாங்கள் கொடுக்கவில்லை.


ஆனால், பொதுவாக, வெள்ளங்கள் உட்பட இது போன்ற சுற்றுச்சூழல் பிரச்சனைகள் வரும் என்று கணிக்கத்தான் செய்தோம்.


உங்கள் பரிந்துரைகள் மீது அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா?


எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


எங்கள் அறிக்கை மிகவும் வெளிப்படையானது. அரசு நிறுவனங்களால் சட்டங்கள் அவமதிக்கப்பட்டன என்றும் அவர்களின் ஊழல் பற்றியும் கூறியது.


எங்கள் அறிக்கை வெளிவந்தபின், அரசு நிறுவனங்கள் எங்கள் மீது மிகவும் கோபம் கொண்டிருந்தன.


நாங்கள் செயல்படுத்துமாறு பரிந்துரைத்த நடவடிக்கைகள், பல பொருளியல் நலன்களைக் காயப்படுத்தியிருக்கும் - சட்டத்துக்குப் புறம்பான கல்லுடைப்புத் தொழில் போன்றவற்றை.


எனவே, எங்கள் அறிக்கை உடனடியாக நிராகரிக்கப்பட்டது.


எங்கள் அறிக்கை அமுக்கிவைக்கப்பட்டது. தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தகவல் உரிமைச்சட்ட மனு ஒன்றுக்குப் பின் அரசு அதனை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டது.


நீதிமன்றம் அரசை எங்கள் அறிக்கையை வெளியிடுமாறு கூறியது.


ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் எங்கள் அறிக்கைக்கு எதிராக நின்றன, ஆனால் களத்தில் இருந்த மக்கள் எங்கள் அறிக்கையை ஆதரித்தனர்.


பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் சரி, சி.பி.ஐ.எம். ஆளும் மாநிலங்களிலும் சரி, மற்ற கட்சிகளும் சரி, ஒவ்வொரு மாநில அரசும் எங்கள் அறிக்கையை எதிர்த்தது.


உங்கள் குழுவின் அனுபவத்தை வைத்துப் பார்த்தால், ஒரு நாடாக, நாம் சூழலியல் உணர்வற்றவர்களாக இருக்கிறோமா?


இது ஒரு சமூகவியல் மற்றும் அரசியல் கேள்வி.


நீங்களே உங்கள் மதிப்பீட்டைச் செய்துகொள்ளுங்கள்.


தெளிவாக அரசு இயந்திரத்தில் இருக்கும் சுயநலன்களின் குழு ஒன்றுதான் இது போன்ற முடிவுகளை எடுக்க வைக்கின்றது என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.


உங்களுடையதைப் போன்ற அறிக்கைகளால் வேலைவாய்ப்பு உருவாக்குவதில் தடைகள் உருவாக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. எனவே, வளர்ச்சியைவிட சூழலியலுக்கு முன்னுரிமை கொடுக்கும் எந்த அறிக்கையையும் எந்த அரசும் செயல்படுத்த விரும்புவதில்லை.


இது முழு முட்டாள்தனம் - அபத்தம்.


‘லோட்டே வேதியல் வளாகம்’ 11,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கியது என்கிறது எங்கள் அறிக்கை.


இருப்பினும், அதன் கட்டுக்கடங்காத மாசுப்பாட்டின் காரணமாக, 20,000 மீனவர்களின் வேலைகளை அழித்திருக்கிறது.


இது எங்கள் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மீனவர்களும் போராடினார்கள் (வேதியல் வளாகத்துக்கு எதிராக).


280 நாட்கள் போராடினார்கள்.


ஒவ்வொரு முறையும் 144 பிரிவைப் பயன்படுத்தி காவல்துறை அவர்களின் போராட்டத்தை ஒடுக்கியது.


தொழிற்சாலைகளின் காரணமாக அவர்கள் கூடுதலான வேலைகளை இழந்திருக்கிறார்கள்.


நம் நாட்டின் உண்மையான வாழ்வாதாரமான - இயற்கை வளங்கள் சார்ந்த துறைகளில் உள்ள வேலைவாய்ப்பு பற்றி அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை.


குறிப்பிட்ட சில தொழில்களின் வளர்ச்சியில் மட்டுமே நம் அரசுகளுக்கு ஆர்வம் இருக்கிறதே ஒழிய, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் எல்லாம் இல்லை.


அதற்கான முழு ஆதாரமும் வெளியிடப்பட்ட எங்கள் அறிக்கையில் உள்ளது.


மூலம்: http://www.rediff.com/news/interview/floods-in-kerala-will-become-worse/20180822.htm


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்