யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்

பெரும வரலாற்றாசிரியரும் (Macro Historian), பேராசிரியரும், ‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டேயஸ்’ஆகிய மிகச் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் நூல்களின் ஆசிரியரும், இந்த உலகின் மிகவும் புதுமையான மற்றும் கிளர்ச்சியூட்டும் சிந்தனையாளர்களில் ஒருவருமான யுவால் நோவா ஹராரி, தன் புத்தம்புதிய பணியான "21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்" நூல் பற்றி உரையாடுகிறார். 
இன்றைய மிக முக்கியமான பிரச்சனைகளின் வழியே “மிகவும் மனதை விரிவாக்கும்” ஒரு பயணமாகச் சொல்லப்படும் “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” நூல், நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் தலைசுற்றவைக்கும் - குழப்பமான மாற்றங்களுக்கு நடுவே நம் கூட்டு கவனத்தைப் பேணிக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவுறுத்துகிறது. 

நெறியாளர்: வில்சன் ஒயிட். 

நூல் வாங்க: https://goo.gl/CVDJzG 

யுவால் நோவா ஹராரியின் யூட்யூப் அலைவரிசை: https://www.youtube.com/user/YuvalNoahHarari 

யுவால் நோவா ஹராரி 
21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள் 
செப்டம்பர் 14, 2018 

வில்சன் ஒயிட்: அனைவருக்கும் மதிய வணக்கம், குறிப்பாக இங்கே கலிஃபோர்னியாவில் இருப்போருக்கு. என் பெயர் வில்சன் ஒயிட். நான் இங்கே கலிஃபோர்னியாவில் பொதுமக்கள் கொள்கை மற்றும் அரசுத் தொடர்பு (Public Policy and Government Relations) அணியில் இருக்கிறேன். கூகுள் உரையாடல்கள் வரிசையில் இன்று உங்களுக்காக ஒரு கிளர்ச்சியூட்டும் உரையாடல் ஏற்பாடு செய்திருக்கிறோம். மேலும் AI நெறிமுறைகள் (AI Ethics) மற்றும் தொழில்நுட்பவியல் நெறிமுறைகள் (Technology Ethics) பற்றியும் பொதுவான பல உரையாடல்களும் நடத்தி வருகிறோம். எனவே இன்று, பேராசிரியர் யுவால் நோவா ஹராரி நம்முடன் உரையாட இருக்கிறார் என்பதில் பெருமை கொள்கிறேன். யுவால் ஓர் இஸ்ரேலி வரலாற்றாசிரியர். ஜெருசலம் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிகிறார். அவர் ஓர் ஆற்றல்மிகு பேச்சாளர், சிந்தனையாளர், இப்போது உலகளவில் மிகச் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் நூலாசிரியர். அவர் மூன்று நூல்களின் ஆசிரியர். அவற்றுள் ஒவ்வொரு நூல் பற்றியும் இன்று பேசப் போகிறோம். 2014-இல் அவர் வெளியிட்ட முதல் நூல் “சேப்பியன்ஸ்”, மனிதர்களாகிய நம்முடைய வரலாற்றில் சிலவற்றை ஆய்வு செய்தது. 2016-இல் வெளிவந்த அவரின் இரண்டாவது நூல், மனிதர்களாகிய நம்முடைய எதிர்காலம் பற்றிய ஒரு சுவாரசியமான பார்வையை முன்வைத்தது. அது “ஹோமோ டேயஸ்”. அதன் பின்பு சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புதிய நூல் “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்”, இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் சில முக்கியமான பிரச்சனைகளோடு மல்லுக்கட்ட முயற்சிக்கிறது. எனவே நம் உரையாடலின் போது அவை ஒவ்வொரு நூலிலும் உள்ள இந்தச் சில பேசுபொருட்கள் பற்றிப் பேசுவோம். ஆனால் மொத்தத்தில், அவருடைய எழுத்துக்கள் தன்னிச்சை (free will), உணர்வு நிலை (consciousness), நுண்ணறிவு (intelligence) போன்ற மிகப் பெரிய கருத்துக்கள் பற்றி ஆராய்கின்றன. எனவே இன்று யுவாலுடன் சேர்ந்து ஆராய நமக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனவே இத்துடன் பேராசிரியர் யுவாலை கூகுளுக்கு வரவேற்பதில் என்னோடு உங்கள் அனைவரையும் இணைய வேண்டிக்கொள்கிறேன். 

[கைத்தட்டல்] 

யுவால் நோவா ஹராரி: வணக்கம். 

வில்சன் ஒயிட்: எங்களோடு இணைவதற்கு உங்களுக்கு எங்கள் நன்றி பேராசிரியரே. 

துவங்குவதற்கு முன், இதை நான் சொல்லியாக வேண்டும். இந்த உரையாடல் பற்றி கூகுள் முழுக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்ட போது, உலகெங்கிலும் உள்ள பல கூகுளர்களிடமிருந்து அவர்கள் எல்லோரும் உங்கள் நூல்களில் ஒன்றோ பலவோ படித்துவிட்டதாகவோ படித்துக்கொண்டிருப்பதாகவோ எனக்குப் பல மின்னஞ்சல்கள் வந்தன. எனவே (சிரித்துக்கொண்டே) ஒருவேளை ‘மறுமை’ (after life) பற்றி நான்காவது நூல் ஒன்று எழுதலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், அது பற்றி இந்த உரையாடலின் போது எதுவும் வெளியிட்டுவிடாதீர்கள். 

உங்களுடைய இப்போதைய நூல் “21 பாடங்கள்” மற்றும் “ஹோமோ டேயஸ்” ஆகிய இரண்டு நூல்களுமே பேசும் சில கருத்துக்களோடு தொடங்க விரும்புகிறேன். ஏனென்றால் இரண்டு சிறு குழந்தைகளின் தகப்பன் நான். ஐந்து வயதில் ஒரு மகளும் மூன்று வயதில் ஒரு மகளும் என எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். நீங்கள் “ஹோமோ டேயஸ்” நூலில் வரைந்திருக்கும் எதிர்காலம் சுவாரசியமானதாக இருக்கிறது. எனவே என் மகள்களுக்கு நான் என்ன கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 

யுவால் நோவா ஹராரி: இன்றைவிட மிகவும் வேறு மாதிரி இருக்கும் என்பதைத் தவிர்த்து 2050-இல் உலகம் எப்படியிருக்கும் என்பது யாருக்குமே தெரியாது. எனவே கல்வியில் கவனம் செலுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் எவை என்றால், உணர்வுசார் நுண்ணறிவு (emotional intelligence) மற்றும் மனத் திட்பம் (mental stability). ஏனென்றால் அவர்களுக்குக் கண்டிப்பாகத் தேவைப்படப்போகிற ஒன்று, அவர்களின் வாழ்க்கை முழுக்க மீண்டும் மீண்டும் தன்னைத்தானே மறுகண்டுபிடிப்பு செய்துகொள்கிற ஆற்றல். இளையவர்களுக்கு எந்தக் குறிப்பிட்ட திறமைகளைச் சொல்லிக்கொடுப்பது என்பதே தெரியாமல் விழிப்பது உண்மையிலேயே வரலாற்றில் இதுவே முதன்முறை. ஏனென்றால் எந்த மாதிரியான உலகத்தில் அவர்கள் வாழப் போகிறார்கள் என்பதே நமக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் தம்மை மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ள வேண்டியதிருக்கும் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. குறிப்பாக வேலைவாய்ப்புச் சந்தை பற்றி யோசித்தீர்கள் என்றால், அதில் அவர்கள் சந்திக்கப் போகிற மிகப்பெரும் பிரச்சனை உளவியல் ரீதியானதாக இருக்கலாம். ஏனென்றால் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தம்மை மறுகண்டுபிடிப்பு செய்துகொள்வது மிக மிகக் கடினம். எனவே நாம் தனித்துவமான அடையாளங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். என்ன சொல்ல வருகிறேன் என்றால், முன்பு, மிக ஆழமான அடித்தளமிட்டு கல்வீடுகள் போன்ற அடையாளங்கள் கட்டினோம் என்றால், இப்போது அப்படியே மடித்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் உள்ள கூடாரம் போன்ற அடையாளங்கள் கட்டுவதே புத்திசாலித்தனமாக இருக்கும். ஏனென்றால் எங்கே இடம்பெயர வேண்டியதிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இடம்பெயர வேண்டியதிருக்கும் என்பது மட்டும் தெரிகிறது. 

வில்சன் ஒயிட்: இடம்பெயர வேண்டியதிருக்கும். ம்ம்ம்… ஆக நான் இப்போது மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இவற்றையெல்லாம் முதலில் நான் படித்துக்கொண்டு வந்த பின்புதானே அடுத்த தலைமுறையினருக்குச் சொல்லிக்கொடுக்க முடியும். “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” நூலில் பல விஷயங்களைக் கையாளுகிறீர்கள். தொழில்நுட்பத்திலும் தொழில்நுட்பத்தைச் சமூகத்தில் களமிறக்குவதிலும் முன்னணி விளிம்பில் இருக்கும் நிறுவனமான கூகுளில் இருக்கும் நாங்களும் கூட இதே பிரச்சனைகள் சிலவற்றோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறோம். மக்களாட்சி என்ற அமைப்பு ஏன் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்பது பற்றி உங்கள் சிந்தனைகளைப் பற்றிச் சிறிது சொல்லுங்களேன். தற்போதைய நூலில் இது ஒரு கருத்தாக இருக்கிறது. அது பற்றிச் சிறிது ஆராய விரும்புகிறேன். தாராளவாத மக்களாட்சி (liberal democracy) என்று நாம் சொன்ன அமைப்பு இப்போது ஏன் நெருக்கடியில் இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்? 

யுவால் நோவா ஹராரி: ம்ம்ம், இந்த மொத்தத் தாராளவாத மக்களாட்சி அமைப்பும் நாம் 18-ஆம் நூற்றாண்டிலிருந்து வழிவழியாகப் பெற்றுவந்த மெய்யியல் கருத்தாக்கங்களின் மேல் கட்டப்பட்டது, குறிப்பாகத் தாராளவாத உலகப் பார்வையின் அடிப்படை மாதிரிகளின் அடிக்கிடையாய் இருக்கும் ‘தன்னிச்சை’ என்கிற கருத்தாக்கம். அதாவது, “வாக்காளனுக்கு எல்லாம் தெரியும்”, “வாடிக்கையாளர் சொல்வதுதான் எப்போதும் சரி”, “அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் இருக்கிறது”, “இதயம் சொல்வதைக் கடைப்பிடி”, “மனத்துக்குப் பிடித்தத்தைச் செய்” போன்றவை அனைத்தும் இதில் அடங்கும். இந்தத் தாராளவாத மாதிரிகள் அனைத்தும்தான் நம் அரசியல்-பொருளியல் அமைப்பின் அடித்தளம். தனிமனிதர்களின் தன்னிச்சையான தெரிவுகள்தான் இறுதி ஆணை என்று கருதிக்கொள்கிறார்கள். அதாவது, இருக்க வேண்டிய எல்லாவிதமான எல்லைகளும் கட்டுப்பாடுகளும் நிச்சயமாக இருக்கின்றனதான். ஆனால் உச்சகட்ட அழுத்ததுக்கு ஆளாகும் வேளையில், எடுத்துக்காட்டாக, பொருளியல் துறையில் எடுத்துக்கொண்டோமானால், நிறுவனங்கள் “இதுதான் வாடிக்கையாளருக்கு வேண்டுமாம்” என்ற இந்தக் கடைசித் பாதுகாப்புக் கோட்டுக்குப் பின்னால் வந்து ஒளிந்து கொள்கின்றன. “வாடிக்கையாளர் சொல்வதுதான் எப்போதும் சரி. வாடிக்கையாளர் அது வேண்டும் என்று சொன்னால் அது தவறாக இருக்க முடியாது. வாடிக்கையாளர் கேட்பது தவறென்று சொல்ல நீ யார்?” போன்ற கேள்விகளைக் கேட்டு முடித்துவிடுவார்கள். கண்டிப்பாகப் பல விதிவிலக்குகள் இருக்கின்றன. ஆனால் இதுதான் கட்டற்ற சந்தையின் (free market) அடிப்படைகளாக இருக்கிறது. இதுதான் நீங்கள் அங்கே கற்றுக்கொள்ளும் முதலும் கடைசியுமான பாடம். வாடிக்கையாளர் சொல்வதே எப்போதும் சரி. எனவே வாடிக்கையாளரின் ஆசைகள்தான் பொருளியல் துறையில் உச்சபட்ச அதிகாரமாக இருப்பவை. இது, ‘உண்மையிலேயே வாடிக்கையாளரின் ஆசைகளே பிரபஞ்சத்தின் உச்சபட்ச அதிகாரமாகக் கருதப்படும் மனிதர்களின் தன்னிச்சையை வெளிப்படுத்துகின்றன - பிரதிநிதித்துவப்படுத்துகின்றன’ என்ற தன்னிச்சை பற்றிய மெய்யியல் மற்றும் உளவியல் பார்வையின் அடிப்படையிலானது. எனவே அவற்றை நாம் பின்பற்ற வேண்டும். இதேதான் அரசியல் துறையில். வாக்காளருக்கு எல்லாரும் தெரியும். இதெல்லாம் கடந்த இரண்டு - மூன்று நூற்றாண்டுகளுக்குச் சரிதான். தன்னிச்சை என்பது எப்போதுமே கட்டுக்கதைதான் - அறிவியல்பூர்வமான மெய்மை இல்லை என்ற போதும், அதாவது அறிவியல் இயற்கையில் இரண்டே இரண்டு செயல்முறைகளை மட்டுமே அறியும். அதற்குத் ‘திட்டவட்டமான செயல்முறைகள்’ (deterministic processes) பற்றித் தெரியும். அதற்குத் ‘தொடர்பிலா செயல்முறைகள்’ (random processes) பற்றித் தெரியும். இவ்விரண்டின் சேர்க்கை ‘நிகழ்தகவியல் செயல்முறைகள்’ (probabilistic processes) என்பதில் முடிகிறது. ஆனால் தொடர்பின்மையும் நிகழ்தகவியலும் சுதந்திரம் (freedom) ஆகாது. அவற்றின் பொருள், தொடர்பின்மை இருப்பதால் உன் செயல்களை 100% துல்லியத்தோடு என்னால் கணிக்க முடியாது என்பதே. ஆனால் ஒரு தொடர்பிலா ரோபோ (random robot) சுதந்திரம் கொண்டதாகாது. ஒரு ரோபோவை ஒரு யுரேனியத் துண்டோடு இணைத்தால், அந்த ரோபோவின் முடிவுகள் யுரேனிய அணுக்களின் சிதைவின் தொடர்பிலா செயல்முறைகளால் நிர்ணயிக்கப்படும். எனவே இந்த ரோபோ என்ன செய்யப்போகின்றது என்பதைச் சரியாக உங்களால் கணிக்க முடியாது. அது சுதந்திரம் அல்ல. அது தொடர்பின்மை. அவ்வளவுதான். அறிவியல் நோக்கில் இது எப்போதுமே உண்மைதான். மனிதர்கள், கண்டிப்பாக அவர்களுக்கென்று உளவிருப்பம் இருக்கிறது. முடிவு எடுக்கிறார்கள். தெரிவுகள் செய்கிறார்கள். ஆனால் தன் உளவிருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பெற்றவர்கள் அல்லர். அவர்களின் தெரிவுகள் சார்பற்றவை அல்ல. அவர்கள் பல லட்சம் காரணிகளைச் சார்ந்து உள்ளவர்கள் - மரபணு, ஹார்மோன்கள், சமூகவியல், பண்பாடு என்று எத்தனையோ நாம் தெரிவு செய்ய முடியாத காரணிகள் உள்ளன. வரலாற்றில் இப்போது வரை மனிதர்கள் எவ்வளவோ சிக்கலானவர்களாக இருப்பதால், நடைமுறை நோக்கில் பார்த்தால் தன்னிச்சை என்பதை நம்புவதில் பொருள் இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் எவருமே உன்னைப் பற்றி நீ புரிந்து வைத்திருப்பதைவிடச் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் உனக்குள்ளே இருக்கிற ஆசைகளும் எண்ணங்களும் உணர்வுகளும் நிறைந்த அந்த உள் உலகத்துக்குள் உனக்கு மட்டுமே சிறப்புரிமை அனுமதி (previleged access) இருந்தது. 

வில்சன் ஒயிட்: ம்ம்ம், ஆனால் அது இன்று மாறிவிடவில்லையே! 

யுவால் நோவா ஹராரி: மாறியிருக்கிறது. அந்தச் சிறப்புரிமை அனுமதி இப்போது கூகுள் போன்ற நிறுவனங்களிடம் உள்ளது. என் உடலுக்கும் மூளைக்கும் உள்ளே நடக்கக் கூடியவை பற்றி - எனக்கே தெரியாதவற்றை - அவர்களால் அணுக முடிகிறது. யாரோ ஒருத்தர், ஒருத்தர் அல்ல பலர், இருக்கிறார்கள். அனைத்துவிதமான நிறுவனங்களும் அரசுகளும், இன்றைக்கு இல்லாமல் இருக்கலாம், ஐந்து ஆண்டுகளிலோ, 10 ஆண்டுகளிலோ, 20 ஆண்டுகளிலோ, அவர்களுக்கு எனக்குள்ளே நடப்பவற்றை அணுகும் சிறப்புரிமை அனுமதி கிடைக்கும். எனக்கிருக்கும் உரிமையைவிடக் கூடுதலான உரிமை அனுமதி. என் மூளையில் என்ன நடக்கிறது என்பதை என்னைவிடச் சிறப்பாக அவர்களால் புரிந்துகொள்ள முடியும். அதன் பொருள், அவர்கள் முற்றிலும் துல்லியமாக அறிந்து விடுவார்கள் என்பதல்ல. 

வில்சன் ஒயிட்: சரி, ஆனால் ஒரு சுதந்திரம் உள்ள மனிதன் என்ற முறையில் நீங்கள் அந்த அனுமதியையோ ஆற்றலையோ இந்த நிறுவனத்துக்கோ அந்த இயந்திரத்துக்கோ வேறு ஏதோவொன்றுக்கோ கொடுத்திருப்பீர்கள். 

யுவால் நோவா ஹராரி: இல்லை. அவர்களுக்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டியதில்லை. அதாவது, சில நாடுகளில் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அமெரிக்கா போன்ற ஒரு மக்களாட்சியில் கூட யாரோ ஒரு வெளியார் உங்களை ஊடுருவிவிட வழிவகை செய்யும் நிறையத் தகவல்கள், அவற்றை நீங்கள் கொடுக்க விரும்புகிறீர்களா இல்லையா என்று உங்களை யாருமே கேட்பதில்லை. இப்போதைக்கு மனிதர்களைப் பற்றித் திரட்டப்படும் பெரும்பாலான தரவுகள் இன்னும் தோலுக்கு வெளியே உள்ளவை பற்றித்தான் இருக்கின்றன. நாம் இன்னும் எதுவும் பார்க்கவில்லை. நாம் இப்போதும் இந்தப் புரட்சியின் முனையில்தான் இருக்கிறோம். ஏனென்றால் இப்போதைக்கு கூகுள், ஃபேஸ்புக், அமேசான், அரசுகள், அல்லது வேறு எதுவோ ஒன்று, எல்லோருமே நான் என்ன தேடுகிறேன், என்ன வாங்குகிறேன், எங்கே போகிறேன், யாரைச் சந்திக்கிறேன் என்பதை வைத்தே மனிதர்களைப் புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே புறவயமானவை. உண்மையான அந்தப் புரட்சி, அதுவும் மிக விரைவில் வந்துகொண்டிருக்கிறது. AI புரட்சி, பொறிக் கற்றல் (machine learning), இவையனைத்தும், அதாவது, தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் (infotech revolution) உயிரித் தொழில்நுட்பப் புரட்சியும் (biotech revolution) ஒன்றையொன்று சந்தித்துக் கூடும் வேளையில் தோலுக்கு உள்ளேயே செல்லும். உயிரியளவு உணர்கருவிகள் (biometric sensors) அல்லது புறக்கருவிகளும் கூட. இப்போது எடுத்துக்காட்டாக தனிமனிதர்களின் இரத்த அழுத்தத்தை வெறுமனே அவர்களைப் பார்த்தே கண்டறியும் ஆற்றலை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். ஒருத்தரின் மேல் ஓர் உணர்கருவியைக் கூடப் போட வேண்டியதில்லை. முகத்தை மட்டும் பார்த்து, அந்த மனிதரின் இரத்த அழுத்தம் எவ்வளவு என்று சொல்லிவிட முடியும். கண்களில் - வாயில் ஏற்படும் சின்னச்சின்ன அசைவுகளைப் பகுப்பாய்ந்து ஒருவரின் தற்போதைய மனநிலையில் இருந்து - அதாவது அவர் கோபமாக இருக்கிறாரா, சலிப்படைந்து போய் இருக்கிறாரா - அவரின் பால் நாட்டம் (sexual orientation) என்ன என்பது வரை சொல்லிவிடலாம். எனவே மனிதர்கள் இனியும் பிறரால் ஊடுருவிக் காண முடியாத கரும்பெட்டிகளாக இருக்க முடியாத உலகம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். இப்போது உள்ளே என்ன நடக்கிறது என்று யாருக்குமே புரிவதில்லை. எனவே, இதுதான் தன்னிச்சை என்று கூறிவிடுகிறோம். இல்லை, பெட்டி இப்போது திறந்துவிட்டது. பிறருக்குத் திறக்கப்பட்டிருக்கிறது. அதுவும் உங்களுக்குத் திறக்கப்பட்டிருப்பதைவிட அதிகமாக வேறு சிலருக்குத் திறக்கப்பட்டிருக்கிறது. உங்கள் மூளையில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கே புரியவில்லை. ஆனால் ஏதோவொரு நிறுவனமோ அரசோ அமைப்போ அதைப் புரிந்துகொள்கிறது. 

வில்சன் ஒயிட்: நீங்கள் “ஹோமோ டேயஸ்” நூலில் பெரிதும் ஆராய்கிற பொருட்களில் அதுவும் ஒன்று. 

யுவால் நோவா ஹராரி: “ஹோமோ டேயஸ்”, “21 பாடங்கள்” ஆகிய இரண்டிலுமே அவை உள்ளன. அதாவது, இதில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான கருத்து, இது உண்மையிலேயே நடந்துகொண்டிருக்கிறது என்பதே. இப்போதைக்குக் கிட்டத்தட்ட எல்லா கவனமும் AI மீதுதான் இருக்கிறது. இப்போது நூல் வெளியீட்டுக்காக இரண்டு வார அமெரிக்கப் பயணத்தில் இருக்கிறேன். எல்லோருமே AI பற்றித்தான் பேச விரும்புகிறார்கள். முந்தைய நூல், “ஹோமோ டேயஸ்” வெளிவந்த போது, AI பற்றி எவருமே கண்டுகொள்ளவில்லை. இரண்டே ஆண்டுகளில், எங்கு சென்றாலும் அது பற்றியே பேச்சு என்றாகி இருக்கிறது. 

வில்சன் ஒயிட்: அதுதான் இப்போதைய சூடான பேசுபொருள். 

யுவால் நோவா ஹராரி: ஆமாம். அது AI அல்ல என்பதையே நான் வலியுறுத்த முயல்கிறேன். உண்மையிலேயே முக்கியமானது அதன் இன்னொரு பக்கம் - உயிரித் தொழில்நுட்பம். இவ்விரண்டின் சேர்க்கை. இரண்டும் சேர்ந்துதான் - உயிரியலின் உதவியோடுதான் - AI உண்மையிலேயே புரட்சிகரமான ஒன்றாகும். ஒரு பரிசோதனைக்காக இதை யோசித்துப் பாருங்கள். உலகத்திலேயே சிறந்த - மிக வளர்ச்சி பெற்ற AI நம்மிடம் இருந்தது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் மனிதர்கள் விலங்குகள் அல்ல. நாம் உயிர்வேதியியல் படிமுறைகள் (biochemical algorithms) அல்ல. மனிதர்கள் தன்னிச்சையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கக்கூடிய எல்லாவற்றுக்கும் மேலான ஆன்மாக்களாக இருந்தார்கள். அத்தகைய உலகத்தில் AI-க்கு இடம் இருந்திருக்காது. ஏனென்றால், அத்தகைய உலகத்தில், AI என்பது, ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்களின் பணியைச் செய்திருக்க முடியாது. அந்த உலகத்தில் தானோட்டிக் கார்கள் (self-driving cars) கூட உருவாக்கியிருக்க முடியாது. ஏனென்றால், தானோட்டிக் கார் ஒன்றை சாலையில் விடுவதற்கு, கணிப்பொறிகள் மட்டும் போதாது, உயிரியலும் வேண்டும். மனிதர்களைப் புரிந்து கொண்டாக வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவர் சாலையை அணுகுகிறார் என்றால், அந்தக் கார் அவர் எட்டு வயதுச் சிறுவனா, 18 வயது இளைஞனா, 80 வயது முதியவரா என்று சொல்ல வேண்டும், மனிதக் குழந்தையின் - மனித இளைஞனின் - மனித முதியவரின் வெவ்வேறு விதமான நடத்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இது உயிரியல். அது போலவே, நல்ல பயனுள்ள தானோட்டி டாக்சிகள் வேண்டுமென்றால், அந்தக் கார் மனித உளவியல் பற்றிப் பல விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். வருகிற பயணியின் உளவியல், அவருக்கு என்ன வேண்டும் போன்றவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உயிரித் தொழில்நுட்பத்தை இந்தச் சமன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டால், AI மட்டும் தனியாக வெகுதொலைவு செல்லாது. 

வில்சன் ஒயிட்: ம்ம்ம், அங்குதான் உங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனென்றால், அந்த உலகம் எப்படி இருக்கும் என்பது பற்றிய பிறழுலகப் பார்வையை (dystopian view) அடைவது மிகவும் எளிது என நினைக்கிறேன். அதாவது, உயிரியல், AI, இயந்திரங்களின் அறிவாற்றல் என்று இவை அனைத்தும் சந்திக்கும் போது அது எப்படி முடியும் என்று… அல்லவா? அதை ஹாலிவுட்டில் பார்க்கிறோம். அந்த பிறழுலகப் பார்வை நன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நான் அவற்றின் கூட்டணியால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று உங்களோடு சேர்ந்து ஆராய விரும்புகிறேன். “ஹோமோ டேயஸ்” நூலில் ஆழமாக ஆராயப்பட்டிருப்பது போலன்றி, அது எப்படி ஒரு மாற்று உலகப் பார்வையை அடைய வழிவகை செய்யும் என்று ஆராய விரும்புகிறேன். 

யுவால் நோவா ஹராரி: ம்ம்ம், அதில் மகத்தான நன்மைகள் இருக்கின்றன என்பது வலியுறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், எந்த ஆர்வமும் இல்லாமல் போய்விடும். அதில் தீமை மட்டுமே இருக்கிறது என்றால் யாருமே அதன் பக்கம் போக மாட்டார்கள். கூகுள் அது பற்றி ஆராய்ச்சி செய்யாது. எவரும் அதில் முதலீடு செய்ய மாட்டார்கள். அத்தோடு, தொழில்நுட்பம் ஒருபோதும் திட்டவட்டமானதில்லை என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும். இந்தத் தொழில்நுட்பங்களை வைத்துக்கொண்டு நீங்கள் சொர்க்கமும் கட்டலாம், நரகமும் கட்டலாம். அவை ஒருவிதமான பயன்பாடு மட்டுமே கொண்டவை அல்ல. நான் ஒரு வரலாற்றாசிரியன் என்ற வகையிலும், சமூக விமர்சகன் என்ற முறையிலும், மெய்யியலாளன் என்ற முறையிலும் கூட, அபாயகரமான சாத்தியக்கூறுகள் மீதுதான் அதிக கவனம் செலுத்துவேன். அதற்கான காரணம், கண்கூடானதுதான். தொழில்முனைவோரும் நிறுவனங்களும் அறிவியலாளர்களும் பொறியாளர்களும் இந்தத் தொழில்நுட்பங்களை உருவாக்குகிறார்கள். இயல்பாகவே அவர்கள் நேர்மறையான சாத்தியக்கூறுகளில்தான் கவனம் செலுத்துவார்கள். அது செய்யக்கூடிய நல்லவை பற்றியே கவனம் செலுத்துவார்கள். ஆனால் ஆம், கண்டிப்பாக தொழில்நுட்பம், மனிதகுலத்துக்கு பிரம்மாண்டமான அளவில் நல்லது செய்ய முடியும்தான். தானோட்டிக் கார்களையே எடுத்துக்கொள்வோமே. இப்போதைக்கு, ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளில் மட்டும் 1.25 மில்லியன் பேர் கொல்லப்படுகிறார்கள். இவற்றுள் 90%-க்கும் மேலான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுபவை. இதில் மனிதர்களுக்குப் பதிலாக தானோட்டிக் கார்களைக் கொண்டுவரும் போது, விபத்துகளே இல்லாமல் போய்விடும் என்றில்லை. அதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் ஒருவேளை ஆண்டுக்கு ஒரு மில்லியன் உயிர்களைக் காக்க முடியலாம். இது மிகப்பெரிய விஷயம். அது போலவே, என் உடலுக்குள் நிகழ்வதைப் புரிந்துகொள்ள முடிகிற தொழில்நுட்பம் பற்றிப் பேசினோமே, அதையும் சேர்த்துவைத்துப் பார்த்தால், வரலாற்றில் இதுவரை இல்லாத மாதிரியான சிறந்த சுகாதார வசதிகளையும் மக்களுக்கு அளிக்க முடியும் என்ற நிலை வரும். எடுத்துக்காட்டாக, ஒருவர் தனக்கு ஏதோ கோளாறு இருக்கிறதே என்று உணர்வதற்குப் பல காலம் முன்பே நோய்களைக் கண்டுபிடித்துவிட முடியும். இப்போதைக்கு, சுகாதாரத்தில் மனித மனம் அல்லது மனித உணர்வு என்பது இன்னும் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறது. அதாவது, என் உடலுக்குள் ஏதேனும் நடக்கிறது என்றால் அது எனக்குத் தெரியாவிட்டால் நான் மருத்துவரிடம் போக மாட்டேன். எனவே புற்றுநோய் மாதிரி ஏதோவொன்று என் கல்லீரலில் பரவுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் என்னால் எதுவும் உணர முடிவதில்லை என்றால் நான் மருத்துவரிடம் போகவே போவதில்லை. அது பற்றி எனக்குத் தெரியவே தெரியாது. வலியும் வாந்தியும் விளக்கிச் சொல்ல முடியாத எல்லா விதமான அறிகுறிகளையும் உணரத் தொடங்குகிறேன் என்றால், சிறிது காலம் கழித்து மருத்துவரிடம் போவேன். அவர் வந்து எல்லாவிதமான சோதனைகளும் செய்வார். கடைசியில் அவர்கள், “ஓ, ஏதோ கோளாறு இருக்கிறது” என்று கண்டுபிடிப்பார்கள். பெரும்பாலான நேரங்களில், அதற்குள் பிரச்சனை அடுத்த கட்டத்துக்குப் போய்விடும். செலவும் வலியும் பல மடங்கு கூடிவிடும். சரிசெய்ய முடியாத அளவுக்கு மிகவும் தாமதித்துவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும், அதைக் கவனிப்பதற்கு ஆகும் செலவும் வலியும் கூடுதலாக ஆகிவிடலாம். என் உடலை AI மருத்துவர் ஒருவர், உயிரியளவு உணர்கருவிகளும் மற்ற பல கருவிகளும் வைத்துக்கொண்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதில் நான் உணர்வதற்குப் பல காலம் முன்பே எனக்கிருக்கும் பிரச்சனை கண்டுபிடிக்கப்பட்டுவிடும். அதுவும் மலிவாகவும் எளிதாகவும் வலியில்லாமலும் குணப்படுத்த முடியக்கூடிய கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிடும். எனவே இது அற்புதமான விஷயம். 

வில்சன் ஒயிட்: ஆனால் அந்த உலகத்தில், அது ஓர் AI மருத்துவராக இருக்கும், மனித மருத்துவர் அல்ல. மேலும் AI அல்லது இயந்திரங்கள் அல்லது இந்த உயிரியல் - AI கூட்டணியால் நிகழப்போகும் சாத்தியமுள்ள விளைவுகளில் ஒன்று என்று நீங்கள் எச்சரிப்பது, அவை மனிதர்கள் நம்மையே தேவையில்லாமல் செய்துவிடும் என்பது என நினைக்கிறேன். “வாழ்க்கையில் பொருள் இருக்க வேண்டும்” அல்லது “வாழ்வதற்கு ஒரு நோக்கம் என்பது இருக்க வேண்டும்” என்பதுதான் நம்மை மனிதர்கள் ஆக்குவது என்று எண்ண விரும்புகிறேன். இது மனிதர்களுக்கு மட்டுமே உரிய தனித்தன்மை எனலாம். அதை நாம் அப்படியே விட்டுக்கொடுத்து விடத் தயாராக இருக்கிறோம் என்று எண்ணவில்லை. இல்லையா? எனவே இந்தத் தொழில்நுட்பம் வளர்கிற, நாம் இதை வளர்த்தெடுக்கிற வேளையில், ‘வாழ்க்கையில் பொருளும் நோக்கமும் இருக்க வேண்டும்’ என்ற இந்தத் தேவையையும் அதனுள்ளே இருக்கும்படி அமைத்துக்கொள்ள முடியும். 

“21 பாடங்கள்” நூலில் “கடவுள் மரித்துவிட்டார்” அல்லது “கடவுள் திரும்ப வந்துவிட்டாரா?” என்கிற கருத்து பற்றிப் பேசுகிறீர்கள். மனிதர்களாக நாம் எப்படி முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்பதில் மதத்தின் பாத்திரம் என்னவாக இருக்கலாம் என்பது பற்றியும் பேசுகிறீர்கள். கடவுள் அல்லது மதம் என்ற அந்தக் கருத்து, ‘வாழ்க்கையில் பொருள்’ அல்லது ‘வாழ்க்கையில் நோக்கம்’ எனும் இந்தக் கருத்தைக் கைப்பற்றிப் பாதுகாக்க இடம் இருக்கிறதா? 

யுவால் நோவா ஹராரி: ம்ம்ம், எல்லாம் அவரவர் வரையறைகளைப் பொருத்தது. அதாவது, பலவிதமான கடவுள்கள் இருக்கின்றனர். மக்கள் மதம் என்ற சொல்லுக்குப் பல்வேறு பொருட்களைப் புரிந்துகொள்கிறார்கள். கடவுள் பற்றிச் சிந்தித்தோம் என்றால், கடவுள் என்ற சொல்லைச் சொல்லும் போது, வழக்கமாக மக்களுக்கு இரு முற்றிலும் வேறுபட்ட கடவுள்கள் மனதுக்கு வருகிறார்கள். 

இந்தப் பேரண்டத்தின் மர்மம் ஒரு கடவுள். “ஒன்றுமில்லாமல் இருப்பதற்குப் பதிலாக எதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது என்று புரியவில்லையே”, “பெருவெடிப்பு ஏன் நடந்தது?”, “மனித உணர்வுநிலை என்பது என்ன?” என்பது போன்று இந்த உலகத்தைப் பற்றி நாம் புரிந்துகொள்ள முடியாத நிறைய விஷயங்கள் இருக்கின்றன. சிலர் இந்த மர்மங்களைக் கடவுள் என்ற பெயர் கொண்டு அழைக்க விரும்புகிறார்கள். ஒன்றுமில்லாமல் இருப்பதற்குப் பதிலாக ஏதோவொன்று இருப்பதற்குக் கடவுள்தான் காரணம். மனித உணர்வுநிலைக்குப் பின்னால் கடவுள் இருக்கிறார். ஆனால் அந்தக் கடவுளின் முக்கியத் தனிச்சிறப்பு என்னவென்றால், அவரை - அதை - அவர்களைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. திண்ணமாக எதுவுமில்லை. அது ஒரு மர்மம். நடு இரவில், ஒரு பாலைவனத்தில் போய், தீயை மூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு, வாழ்க்கையின் பொருள் பற்றி எண்ணும் போது பேசுகிறோமே, அது இந்த மாதிரியான கடவுள்தான். அது ஒருவிதமான கடவுள். அந்தக் கடவுளோடு எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அது எனக்கு மிகவும் பிடிக்கும். 

[சிரிப்பு] 

அப்புறம் அற்பமான சட்டங்கள் போடும் இன்னொரு கடவுள் இருக்கிறார். அந்தக் கடவுளின் தலையாய பண்பு என்னவென்றால், அந்தக் கடவுள் பற்றி நிறையத் திண்ணமான விஷயங்கள் நமக்குத் தெரியும். பெண்களின் ஆடை நெறிமுறைகள் பற்றி அவர் என்ன நினைக்கிறார், பெண்கள் எம்மாதிரியான உடை அணிய வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று நமக்குத் தெரியும். பாலியல் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று நமக்குத் தெரியும். உணவு பற்றி, அரசியல் பற்றி, இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் பற்றியெல்லாம் அவர் என்ன நினைக்கிறார் என்று நமக்குத் தெரியும். ஒரு மதமறுப்பாளரை எரிக்கும் போது சுற்றி நிற்பவர்கள் இந்தக் கடவுள் பற்றித்தான் பேசுகிறார்கள். “இந்தக் கடவுளுக்குப் பிடிக்காத ஒன்றை நீ செய்வதால், இந்தக் கடவுளைப் பற்றி எங்களுக்கு எல்லாம் தெரியும் என்பதால், உன்னை நாங்கள் எரிப்போம்”. இது ஒரு மாயவித்தை போல இருக்கிறது. கடவுள் பற்றிப் பேசும் போது, கடவுள் இருக்கிறாரா போன்ற கேள்விகளை எழுப்பும் போது, “ம்ம்ம்… பெருவெடிப்பு, மனித உணர்வுநிலை, அறிவியல் ஆகியவற்றால் எல்லாம் இதை விளக்க முடியாது. அறிவியலால் இதை விளக்க முடியாது, அதை விளக்க முடியாது. இது உண்மை” என்பார்கள். அடுத்து மாயவித்தைக்காரன் ஒரு அட்டைக்குப் பதில் இன்னொரு அட்டையைக் கொண்டுவந்து காட்டுவது போல, ஷ்ஷ்ஷ்… மர்மக் கடவுளை எடுத்து அந்தப் பக்கம் வைத்துவிட்டு அற்பச் சட்டங்கள் போடும் கடவுளைக் கொண்டுவந்து வைப்பார்கள். நம்மால் அதை இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும் - ‘பெருவெடிப்பு நமக்குப் புரியாது என்பதால் பெண்கள் முழுக்கை உடைகள்தான் அணிய வேண்டும், ஆண்கள் ஆண்களுக்குள்ளேயே பாலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது’. அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? அதாவது, அதெப்படி இங்கிருந்து அங்கே சென்றீர்கள்? 

எனவே நான் இங்கு வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்த விரும்புகிறேன். மதம் பற்றிப் பேசினாலும் இதேதான். இந்தச் சொல்லை மனிதர்கள் வெவ்வேறு பொருளோடு புரிந்துகொள்கிறார்கள். நான் ஆன்மீகத்திலிருந்து மதங்களை வேறுபடுத்திப் பார்க்கிறேன். ஆன்மீகம் கேள்விகள் பற்றியது. மதம் பதில்கள் பற்றியது. வாழ்க்கை பற்றிய ஒரு பெரும் கேள்வி வருகிற போது ஆன்மீகம் வருகிறது. அதாவது, “மானுடம் என்பது என்ன?”, “நல்லது எது?”, “நான் யார்?” போன்ற கேள்விகள். 

வில்சன் ஒயிட்: “இந்த வாழ்க்கையில் நம் நோக்கம் என்ன?” அதாவது, “நாம் ஏன் இங்கு இருக்கிறோம்?” போன்ற கேள்விகள். 

யுவால் நோவா ஹராரி: அதே. “வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும்?” இந்தக் கேள்விகளுக்குள் ஆழமாக நோக்கும் போது ஏதோவொரு தேடலில் இறங்குவது போன்று இருக்கும். இந்தக் கேள்விகள் எங்கு அழைத்துச் செல்கின்றனவோ அங்கெல்லாம், இந்தக் கேள்விகளுக்கு அப்பாலும் செல்லத் தயாராக இருப்பீர்கள். 

வில்சன் ஒயிட்: கூகுள் பண்ணிக்கூடப் பார்க்கலாம். 

யுவால் நோவா ஹராரி: ஆமாம். ஒருவேளை எதிர்காலத்தில் நடக்கலாம். ஆனால் இப்போது வரை, சில கேள்விகளுக்கேனும், “வாழ்க்கையின் பொருள் என்ன?” போன்று ஏதேனும் தட்டச்சினால், 42* என்ற பதில் வரும். 
* “வாழ்க்கை, பிரபஞ்சம், எல்லாவற்றுக்குமான விடை 42-தான்” என்ற டக்லஸ் ஆடம்ஸின் வேடிக்கையான மேற்கோளை நினைவுகொள்க. 

அதுதான் கூகுள் தேடல் கொடுக்கும் நம்பர் ஒன் பதில். எனவே, நீங்கள் ஓர் ஆன்மீகத் தேடலில் இறங்குகிறீர்கள் என்றால், மதம் அதற்கு அப்படியே எதிரில் இருக்கிறது. யாரோ ஒருவர் வந்து, “இதுதான் விடை, அதைத்தான் நீங்கள் நம்ப வேண்டும், இந்த விடையை நீ நம்பாவிட்டால் மரணத்துக்குப் பின் நரகத்தில் போய் தீயில் வெந்து துடிப்பாய் அல்லது உன் மரணத்துக்கு முன்பே நாங்கள் உன்னை இங்கேயே போட்டு எரிப்போம்” என்று உங்களிடம் சொல்வதுதான் மதம். 

[சிரிப்பு]

அவை இரண்டும் உண்மையிலேயே எதிரெதிர் விஷயங்கள். வரலாற்றின் இந்தக் கட்டத்தில், இதற்கு முன் எப்போதையும் விட, ஆன்மீகம் மிகவும் முக்கியமோ என்று எண்ணுகிறேன் இப்போது. ஏனென்றால், நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இப்போது நாம் ஆன்மீகக் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம். 

வில்சன் ஒயிட்: அந்தக் கேள்விகளை எதிர்கொள்வதன் மூலம், தொழில்நுட்பத்தை நாம் எப்படி உருவாக்குகிறோம் - பயன்பாட்டுக்கு உள்ளாக்குகிறோம் என்பதற்கான வழிமுறைகளும் நமக்குக் கிடைக்கும் என்று எண்ணுகிறீர்களா? 

யுவால் நோவா ஹராரி: அதேதான். வாழ்க்கையின் பெரும் ஆன்மீக மற்றும் மெய்யியல் கேள்விகளைக் கொண்டிருந்த ஒரு சிறுபான்மை மக்கள் கூட்டம் வரலாறு நெடுகிலும் எப்போதும் இருந்திருக்கிறது. பெரும்பாலான மக்கள் அவர்களைக் கண்டு கொள்ளாமல், “இந்த நிலம் யாருக்குச் சொந்தம்?”, “இந்தக் கால்நடைகளை யார் மேய்ப்பது?”, “இது யாருக்குச் சொந்தம்”, “அது யாருக்குச் சொந்தம்?” போன்ற அவர்களுக்கே உரிய கேள்விகளில்தான் அவர்களின் வாழ்க்கையை ஓட்டினர். வரலாற்றில் இப்போது பொறியாளர்கள் ஆன்மீகக் கேள்விகளைக் கையாள வேண்டிய ஒரு தனித்தன்மையுடைய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். தானோட்டிக் கார் ஒன்றைக் கட்டுகிறீர்கள் என்றால், “‘தன்னிச்சை’ என்பது என்ன?” என்பது போன்ற கேள்விகளை எதிர்கொள்ளும் கட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறீர்கள். கட்டாயமாக, ஒவ்வொருவரும் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளை நீங்கள் கையாள வேண்டும். ஒரு தானோட்டிக் கார். இரண்டு குழந்தைகள் உள்ளே குதிக்கிறார்கள். பந்து ஒன்றை விரட்டிக்கொண்டு வரும் இரண்டு குழந்தைகள் திடீரென காருக்கு முன்னே குதிக்கிறார்கள். அந்த இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற ஒரே வழி, விருட்டென்று காரை ஒரு பக்கம் திருப்பி, ஓரத்தில் இருக்கும் கொடும் பாறையில் கீழே விழுந்து, பின் இருக்கையில் தூங்கிக்கொண்டிருக்கும் காரின் உரிமையாளரைக் கொல்வதுதான். இப்போது கார் என்ன செய்ய வேண்டும்? மனித வாழ்க்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் மெய்யியலாளர்கள் இந்தக் கேள்விகள் பற்றி பல்லாயிரம் ஆண்டுகளாக விவாதித்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால், பொறியாளர்கள், அவர்கள் மிகவும் பொறுமையற்றவர்கள். தானோட்டிக் காரை நாளையோ அடுத்த ஆண்டோ சாலையில் விட வேண்டும் என்றால் இப்படியான சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அதன் வழிமுறைகளுக்குச் சொல்லியாக வேண்டும். இப்போது இந்தக் கேள்வி பற்றிய அற்புதமான விஷயம் என்னவென்றால், நீங்கள் என்ன முடிவு செய்கிறீர்களோ அதுதான் உண்மை நிலையிலும் நடக்கும். இந்த இரண்டு குழந்தைகளைக் கொல்வதா என்னுடைய உயிரைத் தியாகம் செய்வதா என்னும் இந்தப் பிரச்சனை பற்றி காண்ட், ஷோப்பன்ஹோவர், மில் போன்றவர்கள் இதற்கு முன்பு ஏகப்பட்ட மெய்யியல் விவாதங்கள் நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் ஓர் உடன்பாட்டை எட்டியிருந்தாலும் அதனால் நம் உண்மையான நடவடிக்கையில் மிகக் குறைவான பாதிப்பே ஏற்பட்டிருக்கும். ஏனென்றால் நெருக்கடியான சூழ்நிலை ஒன்றில் செய்ய வேண்டியது இதுதான் என்று கோட்பாட்டளவில் அதை நாம் ஒத்துக்கொண்டாலும், மெய்யியலுக்குச் சிறிதே ஆற்றல் இருக்கிறது. அந்தக் கணம் உங்கள் உணர்ச்சி என்ன உத்தரவிடுகிறதோ அதைத்தான் செய்வீர்களேயன்றி உங்கள் மெய்யியல் கோட்பாடுகளின் அடிப்படையில் எல்லாம் செயல்பட்டுக்கொண்டிருக்க மாட்டீர்கள். ஆனால் தானோட்டிக் காரில் அந்தக் குழந்தைகளை விடுத்து அதன் உரிமையாளரைக் கொல்லுமாறு அதன் வழிமுறைக்குக் கட்டளை இயற்றினால், அப்படியே அதையேதான் அந்தக் கார் செய்யும் என்ற உத்திரவாதம் - கணித ரீதியான உத்திரவாதம் உங்களுக்கு இருக்கும். எனவே முன்னெப்போதையும் விட கவனமாகச் சிந்திக்க வேண்டும். சரியான விடை எது? எனவே, இந்த வகையில், மிகப் பழமையான ஆன்மீக மற்றும் மெய்யியல் கேள்விகள் இப்போது பொறியியலின் நடைமுறைக் கேள்விகள் ஆகியுள்ளன. இவற்றிலிருந்து நாம் விரும்பிய போது தப்பவே முடியாது. எடுத்துக்காட்டாக, ஒரு தானோட்டிக் காரை அவசரமாக சாலையில் விடுவதற்காக இந்தக் கேள்விகளிலிருந்து தப்பிவிட முடியாது. 

வில்சன் ஒயிட்: இந்த மதம் வேறு - ஆன்மீகம் வேறு என்பது பற்றிய கருத்தாக்கத்துக்கும் உங்கள் முதல் நூலான “சேப்பியன்ஸ்”-இல் அவற்றின் பாத்திரம் பற்றிப் பேசவும் திரும்பச் செல்ல விரும்புகிறேன். வாழ்க்கையில் நம்மை முன்னெடுத்துச் செல்லவும் நம் ஒருத்தருக்கொருத்தர் இடையிலான தொடர்புகளின் போது உதவும் வகையிலும் மனிதர்கள் நாம் உருவாக்கும் ‘மனிதப் புனைவுகள்’ அல்லது ‘கதைகள்’ என்கிற கருத்தாக்கம் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிற அந்தப் புனைவுகள், அந்தக் கதைகள், அவை நமக்கு நன்றாகவே உதவியிருக்கின்றன. அவற்றால் மனிதகுலத்துக்கு நிறைய நன்மைகள் விளைந்திருக்கின்றன. ஆனால் அவையே போர்களுக்கும் முரண்பாடுகளுக்கும் மனிதத் துன்பங்களுக்கும் மூலமாக இருந்திருக்கின்றன. நம் வாழ்வில் தொழில்நுட்பத்தை எப்படி ஒருங்கிணைப்பது என்பது பற்றி நாம் சிந்திக்கும் போது அதில் ஆன்மீகம் ஒரு முக்கியப் பங்காற்றும் இந்த வேளையில், அந்தப் புனைவுகளையும் கதைகளையும் எப்படிப் பொருத்த விரும்புகிறீர்கள்? 

யுவால் நோவா ஹராரி: யப்பப்பா. இது பெரிய கேள்வி. சரி, வரலாற்றில் இதுவரை, மனிதர்களைப் பெருமளவில் திரட்டுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் எப்போதுமே ஏதோ ஒரு கதை தேவைப்பட்டிருக்கிறது, மனிதர்களே கண்டுபிடித்த ஏதோ ஒரு புனைவு, ஆனால் எப்படி நடந்துகொள்வது என்று உடன்பட போதுமான மனிதர்கள் நம்பிய ஒரு புனைவு. மதம் மட்டுமல்ல. மதம் என்பது கண்கூடான ஓர் எடுத்துக்காட்டு. ஏன், ஒரேயொரு மதத்தைத் தவிர மற்ற எல்லா மதங்களும் புனைவுக்கதைகள் என்பதை மதவாதிகளே கூட ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள். 

[சிரிப்பு] 

ஆமாமா, என் மதம் தவிர, மற்ற மதங்கள் அனைத்தும் கதைகள்தானே! ஒரு யூதரைக் கேளுங்கள். அதைத்தான் அவர் சொல்வார். “யூத மதம் மட்டுமே உண்மை. அது நிச்சயமானது. ஆனால் இந்தக் கோடானு கோடிக் கிறித்தவர்களும் முகமதியர்களும் இந்துக்களும் புனைவுக்கதைகளை நம்புகிறவர்கள்” என்பார். அதாவது, இந்த இயேசு உயிர்த்தெழுவது பற்றிய கதை முதல் அவரே கடவுளின் குமாரன் என்பது வரை எல்லாமே பொய்ச் செய்திகள் என்பார். 

வில்சன் ஒயிட்: இருங்கள், இருங்கள், அப்படியானால் அது உண்மை இல்லையா? 

யுவால் நோவா ஹராரி: நீங்கள் ஒரு யூதரை - யூதகுருவைக் கேட்டால் அப்படித்தானே சொல்வார்! யூதகுருக்கள் நெருக்கிப் பிடித்தால் மழுப்புவதில் வல்லவர்கள் என்றாலும் கூட. 

[சிரிப்பு] 

எனவே, அது உண்மை இல்லாமலும் இருக்கலாம். அப்படியே கிறித்தவர்களிடம் போய்க் கேளுங்கள். “இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லவே இல்லை, இதுதான் உண்மை” என்பார்கள். ஆனால், “முகமதியர்கள், அவர்கள் பொய்ச் செய்திகளை நம்புகிறவர்கள்” என்பார்கள். முகமது தேவதூதர் கேபிரியலைச் சந்தித்தது, சொர்க்கத்திலிருந்து குரான் வருவது, இந்தக் கதைகள் எல்லாமே பொய்ச் செய்திகள் என்பார்கள். அப்படியே முகமதியர்களிடம் செல்லுங்கள். அவர்கள் இந்து மதத்தைப் பற்றி இதே மாதிரிச் சொல்வார்கள். எனவே, மதங்களும் இதில் மிகத் தெளிவாக இருக்கின்றன. 

பொருளியல் போன்ற ஒரு விஷயத்திலும் இதுதான் உண்மை என்பதே இதில் மிகச் சுவாரசியமான விஷயம். நிறுவனம்... கூகுள் போன்ற நிறுவனங்களும் டாலர் போன்ற பணமும் இல்லாமல் நவீனப் பொருளியலே இருக்க முடியாது. ஆனால் நிறுவனங்களும் நாணயங்களும் கூட நாம் கண்டுபிடித்த வெறும் கதைகளே. கூகுளுக்கு எந்த இயற்பியல் அல்லது உயிரியல் மெய்மையும் கிடையாது. நாம் வழக்கறிஞர்கள் என்று அழைக்கும் ஆற்றல் மிக்க மாந்திரீகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கதைதான் இது. 

[சிரிப்பு] 

“கூகுள் என்றால் என்ன?” என்று ஒரு வழக்கறிஞரைக் கேட்டுப்பாருங்கள். அதாவது, அவரைச் சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் தள்ளுங்கள். “அது ஒரு சட்டவியல் புனைவு” (legal fiction) என்பார்கள். இந்த நாற்காலி கூகுள் அல்ல. இது ‘கூகுளுடையது’ எனலாம். ஆனால் இதுவே கூகுள் அல்ல. அப்படியானால் கூகுளின் பணம்தான் கூகுள் எனலாமா? அதுவும் அல்ல. இங்குள்ள மேலாளரா? இல்லை. பணியாளர்களா? இல்லை. இது வழக்கறிஞர்களால் உருவாக்கப்பட்ட கதை. எடுத்துக்காட்டுக்கு, ஏதோவோர் இயற்கைப் பேரிடரில், ஒரு நிலநடுக்கம் வருகிறது என்று வைத்துக்கொள்வோமே, அதில் ‘கூகுள்ப்ளெக்ஸ்’ (கூகுள் தலைமையகம் இருக்கும் கட்டடத்தின் பெயர்) இடிந்து விழுந்து விடுகிறது என்றால், அப்போதும் கூகுள் இருக்கத்தான் செய்யும். இங்கிருக்கும் பல மேலாளர்களும் பணியாளர்களும் உயிரிழந்தாலும் கூட, கூகுள் அந்த இடங்களுக்குப் புதியவர்களைப் பணியில் எடுத்துக்கொள்ளும். 

[சிரிப்பு] 

அப்போதும் வங்கியில் பணம் இருக்கும். வங்கியில் பணம் இல்லை என்றாலும் கூட, ஒரு கடன் வாங்கிப் புதிய கட்டடங்கள் கட்டிக்கொள்ளலாம். புதிய பணியாளர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம். எல்லாமே சரியாகிவிடும். ஆனால் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் போன்ற ஓர் உச்சபட்ச அதிகாரம் படைத்த மாந்திரீகர் வந்து, “எனக்கு உங்கள் கதை பிடிக்கவில்லை. உங்கள் கதையைத் தனித்தனிச் சிறுகதைகளாகப் பிரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அத்தோடு முடிந்தது. 

வில்சன் ஒயிட்: அப்படியானால்… அப்படியானால் நீங்கள்… 

[சிரிப்பு] 

யப்பா… இதெல்லாம் அவிழ்த்துப் பிரிக்க எனக்கு நிறைய நேரம் வேண்டும். 

[சிரிப்பு] 

நாம் இப்போதிருக்கும் இந்தப் பொய்ச் செய்திகளின் யுகத்தில், உண்மைத்தன்மை என்றால் என்ன என்று உண்மையாகவும் தீவிரமாகவும் கேள்வி எழுப்புவதும், நீங்கள் உங்கள் கருத்துக்களில் முன்பு அடுக்கியது போன்று நாம் ஒருவரோடொருவர் இணைந்து பணியாற்றவும் எல்லைகளைக் கடந்து பணியாற்றவும் உதவிய அடிப்படையான அமைப்புகளை உண்மைத்தன்மை எப்படி பாதிக்கிறது என்பதும்… 

இந்த நிலையில், நாம் வைத்திருக்கும் இந்தக் கதைகள் மற்றும் புனைவுகள் பற்றிய கருத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? பொய்ச் செய்திகளின் இந்த யுகம், இது ஒரு நிதர்சனமா? எது உண்மை எது உண்மையல்ல என்று கேள்வி கேட்கும் இடத்தில்தான் நாம் இருக்க வேண்டுமா? 

யுவால் நோவா ஹராரி: ஒரு புறம், பொய்ச் செய்திகள் என்பதே பழைய செய்திதான். வரலாறெங்கும் அவற்றை நாம் கண்டிருக்கிறோம். பல நேரங்களில் இப்போது நாம் பார்ப்பதைவிட மோசமான வடிவத்தில் கண்டிருக்கிறோம். 

வில்சன் ஒயிட்: ஆனால் உண்மை என்று ஒன்று இருக்கிறதா? 

யுவால் நோவா ஹராரி: ஆம். கண்டிப்பாக இருக்கிறது. அதாவது, மெய்மை என்று ஒன்று இருக்கிறது. அதாவது, மெய்மை பற்றி எல்லோரும் சொல்லும் இந்தக் கதைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இறுதியாக மெய்மையும் இருக்கிறது. எனக்குத் தெரிந்த மெய்மை பற்றிய சிறந்த சோதனை என்பது ‘வேதனைச் சோதனை’ (suffering test) . வேதனைதான் இந்த உலகத்தின் தலைசிறந்த உண்மை. நீங்கள் ஒரு கதை உண்மையான ஒன்றைப் பற்றியதா புனைவான ஒன்றைப் பற்றியதா என்று தெரிந்துகொள்ள விரும்பினால், ‘அது உண்மையிலேயே வேதனை அனுபவிக்க முடியுமா?’ என்று கேட்டுப் பாருங்கள். கூகுள் வேதனை அனுபவிக்க முடியாது. பங்கு மதிப்பு குறைந்தாலும், நீதிபதி ஒருவர் வந்து, ‘இது ஓர் ஏகபோகம், இதைத் துண்டுதுண்டாக உடைக்க வேண்டும்’ என்றெல்லாம் சொன்னாலும் கூட, கூகுள் எந்த வேதனையும் அனுபவிக்காது. மனிதர்கள் வேதனை அனுபவிக்க முடியும். மேலாளர்கள், பங்குதாரர்கள், பணியாளர்கள் போன்றவர்கள் வேதனை அனுபவிக்க முடியும். 

வில்சன் ஒயிட்: என் மகள்கள். 

யுவால் நோவா ஹராரி: கண்டிப்பாக. அவர்கள் வேதனை அனுபவிக்க முடியும். ஆனால் நமக்குத் தெரியும், இந்த எளிய சோதனையின் மூலம், கூகுள் என்பது வெறும் கதைதான் என்றும் அதனால் வேதனை அனுபவிக்க முடியாது என்றும் மிக எளிதாகவே நாம் புரிந்துகொள்ள முடியும் என்று நமக்குத் தெரியும். நாடுகள் என்று வரும் போதும் சரி, நாணயங்கள் என்று வரும் போதும் சரி, இதுதான் கதை. டாலர் என்பது நாம் உருவாக்கிய ஒரு வெறும் புனைவு. அதன் மதிப்பு குறையும் போது டாலர் எந்த வேதனையும் அனுபவிப்பதில்லை. 

வில்சன் ஒயிட்: அந்த விஷயத்தில் உங்களை இன்னும் நெருக்க விரும்புகிறேன். பல நேரங்களில், இங்கே அமெரிக்காவில் போலவே, அமெரிக்காவில் நாம் அமைத்திருக்கும் முறைமை ஒரு பரிசோதனை (experiment) என்பார்கள். அதாவது, ‘குறுக்கிடு கட்டுப்பாடுகள்’ (checks and balances) கொண்ட ‘பரிசோதனை மக்களாட்சி’ (experiment democracy) என்பார்கள். ஒரு பார்வையில், அதுவும் அமெரிக்காவில் நாங்கள் உருவாக்கியிருக்கும் ஒருவிதமான கதை எனலாம், அல்லவா? உண்மையிலேயே நல்ல ஒரு கதையை உருவாக்கியிருக்கிறோம். ஆனால் அதை உடைத்துப் போட்டுவிட்டால், அது எந்த வேதனையும் அனுபவிக்காது. ஆனால் அந்தப் பரிசோதனை ஒரு பொருள் என்று வைத்துக்கொண்டால், அந்த நிறுவனங்களின் முறையான செயல்பாடும் அதற்கு உதவும் பிறவும் - அதுதான்… 

யுவால் நோவா ஹராரி: அது வேதனையைத் தணிக்கிறது என்பதால் அது ஒழுங்காக வேலை செய்கிறது என்று நமக்குத் தெரிகிறது. அது சுகாதாரம் அளிக்கிறது. பாதுகாப்பு அளிக்கிறது. அதெல்லாம் செய்யாவிட்டால் இந்தப் பரிசோதனை எடுபடவில்லை என்போம். இந்தப் பரிசோதனை… 

வில்சன் ஒயிட்: அப்படியானால் அந்தப் பரிசோதனை ஒரு புனைவு என்பீர்களா? அல்லது அந்தப் பரிசோதனை மெய்மைதானா? அது ஒரு பொருள்தானா? 

யுவால் நோவா ஹராரி: அந்தப் பரிசோதனை நாம் எல்லோரும் பகிர்ந்துகொண்டிருக்கும் ஒரு கதை. மனிதர்கள் நம்முடைய குறிப்பிட்ட தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் ஊழியம் செய்யும் பொருட்டு நாம் கண்டுபிடித்துள்ள - உருவாக்கியுள்ள கதைகள் இவை. அது ஓர் உருவாக்கப்பட்ட கதைதான். பொருட்டான மெய்மை அல்ல. ஆனாலும் இந்த உலகத்தின் ஆற்றல் மிக்க விசைகளில் (powerful forces) ஒன்று. ஒன்றை நான் புனைவு அல்லது கதை என்று சொல்லும் போது, அது தீயது அல்லது முக்கியமற்றது என்று குறிப்பிடும் பொருளில் சொல்லவில்லை. அப்படியல்ல. நாம் பகிர்ந்துகொண்டுள்ள இந்தப் புனைவுகள்தாம் இந்த உலகின் தலைசிறந்த பல விஷயங்களும் பேராற்றல் மிக்க பல விசைகளும். நாடுகளும் நிறுவனங்களும் வங்கிகளும் இன்ன பிறவும், இவை யாவும் நாம் உருவாக்கிய கதைகள். ஆனால் அவைதான் இன்றைய உலகின் தலைசிறந்த பேராற்றல் மிக்க விசைகள். எந்த மனிதனையும் அல்லது எந்த விலங்கையும் விடப் பல மடங்கு ஆற்றல் மிக்க விசைகள். அவை நன்மைக்கான பெருவிசையாகவும் இருக்க முடியும். நமக்கு உதவத்தான் அவற்றை நாம் உருவாக்கினோம், அவற்றுக்கு உதவ நாம் இங்கில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்பதே இதில் முக்கியம். “நாம் மெய், அவை மெய் அல்ல” என்ற எளிய மெய்மையை நம் பார்வையை விட்டு அகற்றும் போதுதான் சிக்கல் தொடங்குகிறது. வரலாறெங்கும், ஏன் இன்றும் கூட, பலர் இதைத் தலைகீழாக எடுத்துக்கொள்கிறார்கள். ‘என்னைவிட நாடு கூடுதல் மெய்மை’ என்று எண்ணுகிறார்கள். ‘அதற்காக உழைக்கவே நான் இங்கு இருக்கிறேன், எனக்காகவும் என் சக மனிதர்களுக்காகவும் உழைப்பதற்காக அது இல்லை’ என்று எண்ணுகிறார்கள். 

வில்சன் ஒயிட்: மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. அடுத்து இன்னும் சில நிமிடங்களில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குச் செல்லலாம் என நினைக்கிறேன். ஆனால் அதற்கு முன் எளிய வெற்றி ஒன்றைப் பெற விரும்புகிறேன். “21 பாடங்கள்” நூலில், இன்று நாம் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் உண்மையிலேயே பெரும் சவால்களையும் கேள்விகளையும் கையாள்கிறீர்கள். அந்தக் கேள்விகளில், மிக எளிதில் தீர்க்கப்படக்கூடியது எது என்று எண்ணுகிறீர்கள்? அதைத் தீர்ப்பதற்கு இறங்க நாம் என்ன செய்ய வேண்டும்? 

யுவால் நோவா ஹராரி: ஊஊஊ… அவற்றுள் மிக எளிதில் தீர்க்கப்படக்கூடியது எது? 

[பெருமூச்சுவிடுகிறார்] 

[சிரிப்பு] 

வில்சன் ஒயிட்: அவற்றுள் உடனடி வெற்றிகளாக இருக்கக்கூடியவற்றை மேலே கொண்டுவர முயல்கிறேன். 

யுவால் நோவா ஹராரி: சரி. இந்தப் பொய்ச் செய்திகள் பற்றிய கேள்வியை எடுத்துக்கொள்கிறேன். மிக எளிதில் தீர்க்க முடிவது என்றில்லை. கூகுளில் நீங்கள் செய்யும் வேலைக்கு மிகவும் தொடர்புடையது என்பதாலும் என்று வைத்துக்கொள்ளலாம். இந்தப் பொய்ச் செய்திகள் பிரச்சனையின் தற்போதைய அவதாரம் என்பது செய்தி மற்றும் தகவல் சந்தையின் வடிவம் சம்பந்தப்பட்டது. ‘நீங்கள் எங்களுக்கு உங்கள் கவனத்தை வழங்கினால் அதற்குப் பண்டமாற்றாக நாங்கள் உங்களுக்குப் பரபரப்பான செய்திகளை இலவசமாக வழங்குவோம்’ என்கிற ஒரு வடிவத்தை உருவாக்கி இருக்கிறோம். இது மிகவும் பிரச்சனைக்குரிய வடிவம். ஏனென்றால் இது மனித கவனத்தை பற்றாக்குறையான ஒரு வளமாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. இப்படியே மேலும் மேலும் பரபரப்பான செய்திகளைக் கொடுத்துக் கொடுத்து மனித கவனத்துக்கான போட்டி மேலும் மேலும் கூடிக்கொண்டிருக்கிறது. இந்த உலகின் தலைசிறந்த அறிவாளிகள் சிலர் நம் மூளையை எப்படிக் கிளர்ச்சிக்குள்ளாக்குவது - அடுத்த செய்தியை எப்படிச் சொடுக்க வைப்பது என்பதை அறிந்துகொண்டுவிட்டார்கள். இதில் உண்மை அப்படியே முழுமையாக ஓர் ஓரத்தில் தள்ளப்பட்டுவிடுகிறது. இந்தச் சமன்பாட்டில் உண்மைக்கு இடமேயில்லை. பரபரப்பும் கவனமும்தான் சமன்பாடு. மொத்தத்தில் இந்தப் பிரச்சனைக்கான தீர்வு என்பது செய்திச் சந்தையின் வடிவத்தை, ‘உங்கள் கவனத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்தி, மிக உயர்ந்த விலைக்கு மிகத் தரமான செய்திகள் கிடைக்கும்’ என்று மாற்றுவது. மனிதர்கள் தரமுயர்ந்த உணவுக்கும் தரமுயர்ந்த காருக்கும் நிறையப் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள், ஆனால் தரமுயர்ந்த செய்திக்கு அல்ல என்ற சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது மிகவும் விந்தையானது. இதற்கும் தகவல் சந்தையின் கட்டமைப்புக்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது. செய்திச் சந்தையின் வடிவத்தை மாற்றும் பணியில் சமூகத்துக்கு உதவுவதற்கு கூகுளில் இருக்கும் நீங்கள் எவ்வளவோ செய்ய முடியும். 

வில்சன் ஒயிட்: இது பற்றி மேலும் தொடர்ந்து ஆராய விரும்புகிறேன். அது பொருளியல் சார்ந்த பிளவு போல ஒரு பிளவை உருவாக்கி விடுமோ அல்லது இப்போதிருக்கும் பிளவை மேலும் அதிகப்படுத்திவிடுமோ என்றும் ஆராய விரும்புகிறேன். ஆனால் இப்போது பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் போகலாம் என நினைக்கிறேன். 

[பார்வையாளர்களை நோக்கி] ஓரத்தில் ஒலிபெருக்கி இருக்கிறது. 

[ஒருவரை நோக்கிக் கை காட்டி] உங்களில் இருந்து தொடங்குவோம். 

பார்வையாளர்: வணக்கம். உங்கள் நூல்களை எழுதியமைக்கு மிக்க நன்றி. அவை முழுமையான அற்புதமாக இருக்கின்றன. அவற்றைப் படிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் இங்கு ஆராய்ந்ததில் ஒன்று, நாம் சில உலகளாவியப் பிரச்சனைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்பது. வரலாற்றில் எப்போதும் நாம் இந்த உலகளாவிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பொறுப்பேற்கக் கூடிய - அதற்கான செயல்படுத்தும் திறன் கொண்ட உலகளாவிய நிறுவனங்களை நிறுவியதில்லை. அப்படியான நிறுவனங்களை நிறுவிய போதும், மாபெரும் சோகங்களுக்குப் பின்பே அவை வந்திருக்கின்றன. இதை எப்படிச் சாத்தியப்படுத்துவது? இதற்குப் பொறுப்பாளி என்று யாரோ ஒருவரைக் (ஒரு நிறுவனத்தை) கொண்டுவர முடியுமா? எப்படி அந்த நிறுவனங்களை இந்தத் தீர்வுகளைச் செயல்படுத்த வைப்பது? 

யுவால் நோவா ஹராரி: ம்ம்ம், அது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. ஆனால் பொது உரையாடல்களை மாற்றியமைத்து, உலகளாவிய பிரச்சனைகளில் கவனம் செலுத்த வைக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்று எண்ணுகிறேன். மனிதர்கள் உள்ளூர்ப் பிரச்சனைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தால், திறம்பட்ட உலகளாவிய கூட்டுறவுக்கான தேவையைப் பார்க்க மாட்டார்கள். எனவே, “இங்கே பார்... அணு ஆயுதப் போர், பருவநிலை மாற்றம், தொழில்நுட்பத் தகர்வு (technological disruption) ஆகிய மூன்றும்தான் இந்த கிரகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் சந்திக்கும் மூன்று மாபெரும் பிரச்சனைகள்” என்று மீண்டும் மீண்டும் மீண்டும் மக்களிடம் சொல்வதுதான் முதல் படி. நம்மால் அணு ஆயுதப் போரையும் பருவநிலை மாற்றத்தையும் தடுக்க முடிந்தால் கூட, AI-உம் உயிரித்தொழில்நுட்பமும் வேலைவாய்ப்புச் சந்தையையும் மனித உடலையும் கூட முழுமையாகத் தகர்க்கப் போகின்றன. இதை எப்படி ஒழுங்குபடுத்துவது என்றும் இத்தகைய பிறழுலக விளைவுகளை (dystopian consequences) எப்படித் தடுப்பது என்றும் கண்டுபிடித்து, நிறைய இலக்குலக விளைவுகளை (utopian consequences) மெய்யாக்குவதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கு நமக்கு உலகளாவிய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. எனவே, தேசிய அளவில் செயல்படுவதன் மூலம் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க முடியாது, தேசிய அளவில் AI-ஐ ஒழுங்குபடுத்த முடியாது என்பது எல்லோருக்கும் கண்கூடாகப் புரிபட வேண்டும். அமெரிக்கா என்ன ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றுகிறதோ, அவற்றை சீனர்கள் பின்பற்றாவிட்டால் அதனால் பெரும் பயன் இராது. எனவே இங்கு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அது அப்படியே நடைமுறை அரசியல் பிரச்சனைகளுக்குள் சென்றுவிடும். அதாவது, அமெரிக்காவில் உங்களுக்கு அடுத்து இடைக்காலத் தேர்தல் வருகிறது. ஒரு நகரத்துக்குப் போய் அங்குள்ள துடிப்பான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் சந்திக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். “உங்களை நான் தேர்ந்தெடுத்தால், பருவநிலை மாற்றத்தால் வரப்போகும் அபாயத்தைத் தடுக்க, அணு ஆயுதப் போரால் வரப்போகும் அபாயத்தைத் தடுக்க, AI மற்றும் உயிரித் தொழில்நுட்பத்துக்கான உலகளாவிய ஒழுங்குமுறை விதிகளுக்காக என்ன செய்யப்போகிறீர்கள்? உங்கள் திட்டம் என்ன?” என்று அவரைக் கேளுங்கள். “ஓ, அது பற்றியெல்லாம் நான் இன்னும் யோசிக்கவில்லையே” என்கிறார் என்றால், அவருக்கு வாக்களிக்காதீர்கள். 

[சிரிப்பு] 

வில்சன் ஒயிட்: கேள்வி. 

பார்வையாளர்: வணக்கம், யுவால். இன்று இங்கு வந்திருப்பதற்கு நன்றி. நம் இதயங்கள் தொழில்நுட்பத்தால் ஊடுருவப்படுவதைத் தவிர்ப்பதற்கு நம்மை நாமே நன்றாகத் தெரிந்துவைத்துக் கொள்வதில் முன்னேறி நிற்க வேண்டும் என்று உங்கள் உரை ஒன்றில் பரிந்துரைத்தீர்கள். நம்மை நாம் அறிந்து கொள்ளும் படிமுறைக்கு நிறைய நுண்ணறிவு தேவைப்படுகிறது என்று எனக்குப் படுகிறது. சில வகைகளில், அது இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு திறமையாகவே இருக்கிறது. அதாவது, பரிணாம வளர்ச்சியின்படி நாம் பெற்ற மற்ற உடைமைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் மனிதர்களாக நாம் கொண்டிருக்கும் நுண்ணறிவு பெருமளவில் புதிதாகவே இருக்கிறது. எனவே, எப்படி நாம் மேலும் சிறப்பாகச் சிந்திக்கக் கற்றுக்கொள்ளவும் நம் நுண்ணறிவைப் பயன்படுத்தவும் வேண்டும், அது மட்டுமன்றி அதையே மிகப்பெரிய அளவில் எப்படிச் செய்வது என்றும் பரிந்துரைக்கிறீர்கள்? ஏனென்றால் சிலர் மட்டும் தம்மை நன்றாக அறிந்துகொண்டு, தம்மைச் சுற்றியுள்ள கோடிக்கணக்கான மக்கள் அதைச் செய்யாமல் இருக்கும் போது எவ்வளவு தொலைவு நாம் சென்றுவிட முடியும்? 

யுவால் நோவா ஹராரி: இல்லை, நம்மை நாமே அறிதல் என்பது முழுக்கவும் நுண்ணறிவு தொடர்புடையது என்று நான் எண்ணவில்லை. கண்டிப்பாக நுண்ணறிவு என்று நாம் சொல்லும் குறுகிய பொருளில் இல்லை. ‘உணர்வுசார் நுண்ணறிவு’ போன்றவற்றையும் உள்ளடக்கினீர்கள் என்றால் அப்படிச் சொல்லலாம். ஆனால் IQ என்று சொல்லப்படும் குறுகிய பொருளில் பார்த்தால், இந்த உலகத்தில் இருக்கும் மிகவும் நுண்ணறிவு மிக்க மனிதர்கள் எவ்வளவோ பேர் தம்மைப் பற்றி எதுவுமே அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். இது ஒரு பேரபாயம் மிக்க இணைவு. சிலர் சிகிச்சை மூலம் தம்மை அறிந்துகொள்கிறார்கள். சிலர் தியானம் செய்கிறார்கள். சிலர் கலையைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் கவிதைகளைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் நீண்ட மலையேற்றம் சென்றும் ஒரு மாதம் அப்பலேச்சியன் சுவட்டுக்குச் சென்றும் போகும் வழியில் தம்மைப் பற்றி அறிய முயல்கிறார்கள். அதைச் செய்வதற்குப் பல வழிகள் இருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் நுண்ணறிவு என்பதில் வராமல் இருக்கலாம். இது மூளை அறிவியல் பற்றி கட்டுரைகள் படிப்பது போல அல்ல. அதுவும் சில வழிகளில் உதவத்தான் போகிறது. நாம் பேசுவது, நம்மை நாமே அறிந்துகொள்ளும் திறனை அல்லது ஆற்றலைப் பரப்புதல் பற்றி. நாம் எப்போதும் நம்மோடேதான் இருக்கிறோம். இதற்கென்று தனி ஆய்வு மையமோ எங்கும் கிடைக்காத - கோடிக்கணக்கான பணம் செலவழித்து வாங்க வேண்டிய ஏதோ இயந்திரங்களோ தேவையில்லை. இதைச் செய்ய நமக்குத் தேவைப்படுவதெல்லாம் நாம் மட்டுமே. 

பார்வையாளர்: ம்ம்ம், ஆனால் சிந்தித்தல் எனும் கலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

யுவால் நோவா ஹராரி: என்ன கலை? 

பார்வையாளர்: சிந்தித்தல் எனும் கலை. அதாவது, மனிதர்கள் மிகவும் அறிவாளிகளாக இருக்கிறார்கள். ஆனால் தம்மை அறிந்துகொள்வதற்கு அவர்கள் தம் நுண்ணறிவைப் பயன்படுத்துவதில்லையே. 

யுவால் நோவா ஹராரி: ம்ம்ம், அதற்கு எளிய வழி என்று ஒன்றில்லை. நம்மை நாமே அறிந்துகொள்வது அவ்வளவு எளிதானதாக இருந்திருந்தால், எல்லோருமே எப்போதோ செய்திருப்போம். இப்போது முற்றிலும் மாறுபட்ட ஓர் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்போம். 

வில்சன் ஒயிட்: இந்த உரையாடலில் உலகெங்கும் இருந்தும் நம்மோடு பலர் இணைந்திருக்கிறார்கள். எனவே அவர்களின் கேள்வி வங்கியிலிருந்து ஒரு கேள்வியையையும் பார்ப்போம். 

எந்த வெற்றிகரமான சமூகத்துக்கும் முக்கியமான அடிப்படை ஆதாரமாக இருப்பது பரிவுதான். ஆனாலும் தொழில்நுட்பம் புரிந்துணர்வுக்கான நம் கொள்திறனைக் குறைத்து வருகிறது என்று எண்ணுகிறேன். பரிவு என்பதையே இனியும் நாம் மதிப்பதாயில்லை என்றும் பரிவு என்பதையே ஒரு பலவீனமாகப் பார்க்கிறோம் என்றும் படுகிறது. உங்கள் பார்வையில், இந்தச் சமூகத்தின் உறுப்பினர்களை பரிவை வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்க பயனுள்ள வழிகள் எவை? 

யுவால் நோவா ஹராரி: இல்லை. தொழில்நுட்பம் இயல்பாகவே பரிவை அழிக்கிறது என்று நான் எண்ணவில்லை. அது இருபுறமும் செல்லலாம். தொடர்பியல் தொழில்நுட்பம் (Communication Technology) கண்டிப்பாக உலகின் பிற பகுதிகளில் இருக்கும் மக்களின் நிலைமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அப்படி ஒன்று இல்லாவிட்டால், குடும்பத்தினர், பக்கத்துவீட்டுக்காரர் போன்ற உங்களுக்கு உடனடியாக அடுத்து இருப்பவர்கள் மேல் நீங்கள் பரிவுடையவராக இருக்கலாம். ஆனால் உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்களைப் பற்றிக் கண்டுகொள்ளவே மாட்டீர்கள். எனவே தொழில்நுட்பத்துக்கும் பரிவுக்கும் இடையில் இயல்பான முரண்பாடு அல்லது மோதல் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் தொழில்நுட்பத்தை நாம் வடிவமைக்கிற விதம் நம்மைப் பரிவற்றவர்களாக ஆக்கவல்லது என்பது உண்மைதான். நாம் நம்மை வடிவமைக்கும் விதத்தைக் கூட அது பாதிக்கும். வரலாற்றில் பெரும்பாலும், மக்களை வடிவமைக்க முயற்சிக்கும் பொருளியல் மற்றும் அரசியல் முறைமைகள் இருந்தன. கடந்த காலத்தில், அதைக் கல்வியையும் பண்பாட்டையும் வைத்துச் செய்தார்கள். நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும், அதையே உயிரித் தொழில்நுட்பத்தை வைத்தும் மூளை-கணினி இடைமுகங்களைக் (brain computer interfaces) கொண்டும் மென்மேலும் செய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே நம்மை நாமே வேண்டியபடிக் கையாண்டுகொள்ளும் திறன் நமக்கு வளர்ந்துக்கொண்டு வருகிறது. ஆகவே, பரிவு என்பதும் முக்கியம் என்பதை மனதில் கொள்வது மிகவும் முக்கியம். இல்லையெனில், படைகளும் நிறுவனங்களும் பல இடங்களில் அரசாங்கங்களும் நுண்ணறிவு போல ஏதோ ஒன்றுதான் வேண்டும் எனும் அபாயம் இருக்கிறது. அவர்களுக்கு மேலும் மேலும் அறிவான பணியாளர்களும் படைவீரர்களும் வேண்டும். அவர்களுக்கு மேலும் மேலும் முடிவாற்றலுடைய (decisive) பணியாளர்கள் வேண்டும். அதாவது, “முடிவு எடுக்க ஒரு முழு நாளையும் எடுத்துக்கொள்ளாதே. அரைமணி நேரத்தில் நீ இது பற்றி முடிவு எடுக்க வேண்டும்” என்பார்கள். மனிதர்களை வேண்டியபடிக் கையாண்டுகொள்ளும் நம் திறன் - அதாவது, வேண்டியபடிக் கையாண்டுகொள்ளுதல் - வளர வளர உடலையும் மூளையையும் மறுபொறியமைத்தல் (re-engineer) - அதைக் கொண்டு நாம் பரிவை விலையாகக் கொடுத்து கூடுதலான முடிவாற்றலும் நுண்ணறிவும் கொண்ட மனிதர்களைப் பொறியமைக்கலாம். பல நிறுவனங்களும் படைகளும் அரசுகளும் பரிவு என்பதைத் தொடர்பற்றதாகவோ பிரச்சனைக்குரியதாகவோ கூடப் பார்க்கிறார்கள். ஏனென்றால், அது மனிதர்களைத் தயக்கம் நிறைந்தவர்களாகவும் முடிவு எடுப்பதில் கூடுதல் நேரம் எடுப்பவர்களாகவும் ஆக்கிவிடுகிறது. எனவே பரிவு என்பதன் பெரும் முக்கியத்துவத்தை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். திரும்பவும் இது ‘நம்மை நாமே அறிந்து கொள்ளுதல்’ என்ற கேள்விக்குத்தான் செல்கிறது. அதுதான் பரிவை வளர்த்துக்கொள்வதற்கு மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். நம்மை நாமே புரிந்துகொள்ளும் போதுதான், நம்மைத் துயரப்படுத்துவது மற்றவர்களையும் துயரப்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்வோம் என்பதால் மட்டுமல்ல. இது அதைவிடவும் பல மடங்கு ஆழமானது. உண்மையாகவே நம்மை நாம் அறியும் போது, நீங்கள் பிறரைக் கண்டுகொள்ளாத போதும் நீங்கள் பிறரைத் தவறாக நடத்தும் போதும் பல நேரங்களில் அது பிறருக்குத் தீங்கிழைக்கும் முன்பே உங்களுக்கு அதிகம் தீங்கிழைக்கிறது என்பதை உணர்வீர்கள். கோபமாக இருப்பது என்பது ஒரு மிக இன்னாத அனுபவம். உங்கள் கோபம் பிறருக்குத் தீங்கிழைக்கலாம், அல்லது இல்லாமலும் போகலாம். ஒருவேளை ஒருத்தர் மீது கோபத்தில் கொதிக்கிறீர்கள், ஆனால் அவர் உங்கள் முதலாளி அல்லது மேலாளர் என்பதால் எதுவும் செய்வதில்லை என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அவருக்குத் தீங்கிழைக்கவில்லை. ஆனால் உங்கள் கோபம் உங்களுக்குத் தீங்கிழைக்கிறது. எனவே உங்களை மென்மேலும் புரிந்துகொள்ளப் புரிந்துகொள்ள, உங்கள் கோபத்தையும் வெறுப்பையும் பயத்தையும் ஏதேனும் செய்து சரிப்படுத்த மென்மேலும் ஊக்கம் கிடைக்கும். மேலும் மேலும் பிறர் மீது பரிவை வளர்த்துக்கொள்ள வளர்த்துக்கொள்ள தமக்குள்ளேயும் பல மடங்கு கூடுதலான அமைதியை அனுபவிக்கிறோம் என்பதைப் பலர் கண்டுகொள்கிறார்கள். 

வில்சன் ஒயிட்: அருமை. இன்னொரு நேரலைக் கேள்வி. 

பார்வையாளர்: நன்றி. உங்கள் நூல்களைப் படித்தபின்பு, உங்கள் கருத்துக்களுக்கு அடித்தளமாக இருக்கும் பொருட்டு நீங்கள் பெரும்பாலும் உங்களை அகலத்தோடும் ஆழத்தோடும் என்று இருவிதத்திலும் கற்பித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குப் படுகிறது. எங்கள் மனதையும் அப்படியே வளர்த்தெடுக்க வேண்டும் என்று எங்களில் விரும்புகிறவர்களுக்கு, உங்கள் வாசிப்புப் பழக்கம் பற்றியும் வாசகனாக எதை உட்கொள்வது என்று எப்படித் தேர்வுசெய்வது என்பது பற்றியும் பகிர்ந்து கொள்ளமுடியுமா? 

யுவால் நோவா ஹராரி: என் வாசிப்புப் பழக்கம்… நான் பல்விரிகூறாக (eclectically) வாசிக்கிறேன். அதாவது, எந்த நூலும் என் நூற்பட்டியலுக்குள் வருவதிலிருந்து தடைசெய்யப்பட்டதில்லை. ஆனால் நான் எடுத்து வாசிக்கும் நூல்கள் பற்றி எனக்குப் பெரும் பொறுமையின்மை இருக்கிறது. பத்து நூல்கள் எடுத்தால் அதில் ஒன்பதை பத்துப் பக்கங்கள் தாண்டியதும் அப்படியே போட்டுவிடுவேன். அது எப்போதுமே புத்திசாலித்தனமான கொள்கை என்று சொல்ல முடியாது. ஆனால் இதுதான் என் கொள்கை. முதல் பத்துப் பக்கங்களில் ஒரு நூல் எனக்குப் புதிதாக எதுவுமே கற்றுக் கொடுக்கவில்லை - சுவாரசியமான உட்பார்வை எதுவும் கொண்டில்லை என்றால்... ஒருவேளை நூறாவது பக்கத்தில் இப்போது எனக்குத் தெரியாத ஏதோவொரு மனதைக் கொள்ளைகொள்ளும் கருத்து இருக்கலாம்தான், ஆனால் எவ்வளவோ நூல்கள் இருக்கின்றன, நானும் அடிக்கடி இது பற்றி எண்ணுவதுண்டு, நான் என்றுமே படிக்க முடியாமல் போய்விடக்கூடிய எவ்வளவோ நூல்கள் - அற்புதமான நூல்கள் இருக்கின்றன. அப்படியிருக்கையில், அவ்வளவு சிறப்பில்லாத நூல்களில் ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? எனவே, என்னைப் பிடித்து நிறுத்துகிற நூல் கிடைக்கும் வரை, ஓர் உயிரியல் நூலை எடுத்து வாசித்துப் பார்ப்பேன், அடுத்து பொருளியல், அடுத்து உளவியல், அடுத்து புனைவு, அது இது என்று ஒவ்வொன்றாக எடுத்து வேகவேகமாக வாசித்துப் பார்ப்பேன். 

வில்சன் ஒயிட்: இன்னொரு நேரலைக் கேள்வி. 

பார்வையாளர்: வணக்கம், திரு. ஹராரி. இங்கு வந்திருப்பதற்கு நன்றிகள். எப்போதும் போலவே, கிளர்ச்சியூட்டும் பேச்சு. நானும் சிறிது தியானம் செய்வேன். நீங்கள் தினமும் மணிக்கணக்காக நிறைய தியானம் செய்பவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியா? 

யுவால் நோவா ஹராரி: தினமும் இரண்டு மணி நேரம் தியானம் செய்ய முயல்கிறேன். மேலும் ஆண்டுக்கு ஒருமுறை 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு நீண்ட ஒதுக்கத்துக்குச் (retreat) சென்றுவிட முயல்கிறேன். 

பார்வையாளர்: அது எந்த வகையில் உங்கள் வாழ்க்கையிலும் உங்களிடம் உள்ள கருத்துக்களிலும் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்? 

யுவால் நோவா ஹராரி: ஓ, என் உள்மன அமைதிக்கும் சரி, ஓர் அறிவியலாளனாக நான் செய்யும் பணிக்கும் சரி, அது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இரு மிக முக்கியமான தாக்கங்கள் எனலாம். முதலில் எனக்குத் தெளிவையும் கவனத்தையும் கொடுத்தது. மொத்த வரலாறையும் 400 பக்கங்களில் எழுதுவது போன்று பெரும் பொருட்கள் பற்றி எழுதும் போது தேவைப்படுபவை இவை இரண்டு பண்புகளும். எனவே மிக மிகக் கவனக்குவிப்போடு கூடிய மனம் மிகவும் முக்கியம். ஏனென்றால் எல்லாமே உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும். அதுதான் பெரும் சிரமம். ரோமானியப் பேரரசு பற்றி எழுதத் தொடங்குவீர்கள். இது பற்றி விளக்க வேண்டும், அது பற்றி விளக்க வேண்டும், இது, அது, இது என்று 4,000 பக்கங்களில் வந்து நிற்கும். எது உண்மையிலேயே முக்கியம் - எதை வெளியே விட்டுவிடலாம் என்பதில் மிகத் தெளிவாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். இன்னொன்று என்னவென்றால், குறைந்த பட்சம் நான் கடைப்பிடிக்கும் ‘பிறவினை தியானத்தில்’ (passive meditation), நம் மனம் உருவாக்கிய புனைவுகள் மற்றும் கதைகளுக்கும் மெய்மைக்கும் உள்ள வேறுபாட்டை அறிதல் முக்கியம். ‘இப்போது - இந்தக் கணம் மெய்யாகவே என்ன நடக்கிறது?’ என்பது. நான் தியானம் செய்யும் போது தொடர்ந்து என்ன நடக்கும் என்றால், மனம் ஒரு தொழிற்சாலையைப் போல தொடர்ந்து என்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் கதைகளை உருவாக்கும். அவை மிகவும் கவர்ச்சிகரமானவை. அவற்றோடு என்னை அடையாளப்படுத்திக்கொள்வேன். இதில் தியானம் என்ன செய்யும் என்றால், “வேண்டாம். இது வெறும் கதை. அதை விட்டுவிடு. இப்போது மெய்யாகவே என்ன நடக்கிறதோ அத்தோடே இருக்க முயற்சி செய்” எனும். இதுதான் தியானத்தில் மையப் பயிற்சி. நான் வரலாறு படிக்கும் போதும் அல்லது உலகத்தில் என்ன நடக்கிறது என்று படிக்கும் போதும் இதுவே ஒரு வழிகாட்டும் கொள்கையாக இருக்கிறது. 

பார்வையாளர்: அருமை. நன்றி. 

வில்சன் ஒயிட்: இங்கிருந்து இன்னொரு கேள்வி. 

கடந்த சில பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் ஏற்றத்தாழ்வு பெருகியிருக்கிற போது, இந்தப் பிரச்சனையைத் தீர்த்து ஒப்புரவான ஓர் உலகை உருவாக்க தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதில் உங்கள் கண்ணோட்டம் என்ன? இதைச் சாதிக்க வேறு ஒரு பொருளியற் கருத்தியல் தேவைப்படுகிறதா? 

யுவால் நோவா ஹராரி: ஆம். அநேகமாக நமக்குப் புதியதொரு பொருளியற் கருத்தியல் தேவைப்படுகிறது. ஏனென்றால் இப்போது ஓர் அறியப்படாத பகுதிக்குள் நுழைந்துகொண்டிருக்கிறோம். குறிப்பாக, தன்னியக்கப் புரட்சி (automation revolution) காரணமாகவும் மேலும் மேலும் மனிதர்கள் வேலைவாய்ப்புச் சந்தைக்கு வெளியே தள்ளப்படலாம் என்கிற கூடிவரும் சாத்தியக்கூறு காரணமாகவும் அது தேவைப்படுகிறது. தேவையான அளவு வேலைவாய்ப்புகள் இருக்காது என்பதால் மட்டுமல்ல, வேலைவாய்ப்புச் சந்தையில் நிகழும் மாற்றத்தின் வேகம் கூடும் என்பதாலேயே அது தேவைப்படுகிறது. எனவே, தேவையான அளவு வேலைவாய்ப்புகள் இருந்தாலும், தம்மை மீண்டும் மீண்டும் தொடர்ந்து மறுபயிற்சி (retrain) செய்துகொள்ளவும் மறுதிறம் (reskill) செய்துகொள்ளவும் அல்லது மறுகண்டுபிடிப்பு (reinvent) செய்துகொள்ளவும் உளவியல் சமநிலையும் உள்ளுரமும் மக்களிடம் இராது. எனவே, உளவியல் பிரச்சனைதான் வேலைவாய்ப்புச் சந்தையில் இருக்கப் போகிற மிகப் பெரிய பிரச்சனை என்று எண்ணுகிறேன். அடுத்து மேலும் மேலும் மக்கள் கைவிடப்படும் போது என்ன செய்ய முடியும்? உலகலாவிய அடிப்படை வருமானம் (Universal Basic Income) போன்ற புதிய மாதிரிகளுக்கான தேடல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. தேடி ஆராய வேண்டியவைதான் அதெல்லாம். என்னிடம் அதற்கான விடைகள் இல்லை. உலகளாவிய அடிப்படை வருமானம் போன்ற சிந்தனைகள் கொண்ட எவரும் அதில் ‘உலகளாவிய’ என்ற சொல்லை மிக மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் - ‘தேசிய அடிப்படை வருமானம்’ என்ற நிலையில் நின்றுவிடக் கூடாது என்பேன். அவ்வளவுதான். நாம் சந்திக்கும் மிகப் பெரும் ஏற்றத்தாழ்வு என்பது, நாடுகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வே அன்றி, நாடுகளுக்கு உள்ளேயே இருக்கும் ஏற்றத்தாழ்வு அல்ல. தன்னியக்கப் புரட்சியால் சில நாடுகள் மிகப் பெரும் பணக்கார நாடுகளாக சாத்தியம் உள்ளது. கலிபோர்னியா கண்டிப்பாக அவற்றில் ஓர் இடம். மற்ற நாடுகள் எல்லாவற்றையும் இழக்கலாம். ஏனென்றால், அவர்களின் மொத்தப் பொருளியலும் பணம் அல்லது தொழிலாளர் போன்றவற்றைச் சார்ந்து இருக்கிறது. அந்த நாடுகளில் அவற்றின் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். தம்மைத் தொழில்நுட்ப மையங்களாக மாற்றிக்கொள்ளும் வளங்களும் கல்வி அமைப்பும் இந்த நாடுகளிடம் இல்லை. எனவே உண்மையிலேயே இன்றியமையாத கேள்வி என்பது, இண்டியானாவில் இருக்கும் அமெரிக்கர்கள் தம் வேலைகளை இழக்கும் போது என்ன செய்வது என்பதில்லை. உண்மையிலேயே முக்கியமான கேள்வி என்பது, குவாத்தமாலாவிலும் வங்கதேசத்திலும் தம் வேலையை இழக்கும் மக்களுக்கு என்ன செய்வது என்பதே. இதுதான் இந்த ஏற்றத்தாழ்வு பற்றிய கேள்வியின் கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். 

வில்சன் ஒயிட்: இன்னொரு நேரலைக் கேள்வி எடுப்போம். 

பார்வையாளர்: வணக்கம், திரு. ஹராரி. இந்தக் கேள்வி-பதிலில் கலந்துகொள்வதற்கு நன்றி. கூகுளில் இருக்கும் எங்களுக்கு, எங்கள் பங்குதாரர்களுக்கு மட்டுமின்றி எங்கள் இறுதிப்பயனருக்கும் நன்மை பயக்கும் வகையில் பொருட்களும் சேவைகளும் உருவாக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே மனிதர்களை ஊடுருவதில் குறைவான நேரத்தைச் செலவிட்டு, வேதனைகளைக் குறைப்பதில் கூடுதல் நேரத்தைச் செலவிட வேண்டுமானால், என்ன மாதிரியான எதிர்காலத்தைக் கட்ட வேண்டும் என்று நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே நான் உங்களிடம் என்ன கேட்க விரும்பினேன் என்றால், எதிர்காலத்தைப் பற்றிக் கணிப்புகள் செய்ய உங்கள் தனிப்பட்ட முறைமைகள் என்ன? எதிர்காலம் பற்றிய மேலும் சிறப்பான புரிதல் கொள்ள விரும்பும் கூகுளர்களுக்கு என்ன பரிந்துரைகள் செய்வீர்கள்? 

யுவால் நோவா ஹராரி: நான் துவக்கத்திலேயே சொன்ன மாதிரி, நம்மால் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அதன் மீது தாக்கம் செலுத்த முடியும். ஒரு வரலாற்றாசிரியனாக நான் செய்ய முயல்வது என்னவென்றால், எதிர்காலத்தைப் பற்றிப் பேசும் போதும் கூட, என்னை ஒரு வரலாற்றாசிரியனாகவே வரையறுக்கிறேன். ஏனென்றால் வரலாறு என்பது கடந்த காலத்தைப் படிப்பது அல்ல என்று நான் எண்ணுகிறேன். வரலாறு என்பது, மாற்றத்தைப் படிப்பது. மனித சமூகங்களும் அரசியல் அமைப்புகளும் பொருளியல்களும் எப்படி மாறியிருக்கின்றன என்று படிப்பது. நான் என்ன செய்ய முயல்கிறேன் என்றால், கணிப்புகள் எதுவும் செய்யாமல் வெவ்வேறு சாத்தியங்களை அடுக்கியமைக்கிறேன். 2050-இல் இதுதான் நடக்கும் என்றில்லாமல் நாம் ஒரு விரிந்த கண்ணோட்டம் வைத்துக்கொள்ள வேண்டும். நம்மிடம் ஒரு குறுகிய கண்ணோட்டம் இருக்கும் போது, அதாவது நாம் ஒரு தொழில்நுட்பம் உருவாக்குகிறோம் என்றால், அது இந்த விளைவை உண்டாக்கும் என்று முழுமையாக நம்புவதும் அதே தொழில்நுட்பத்தால் மிக வேறுபட்ட பல விளைவுகள் உண்டாகலாம் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் மிகப்பெரும் அபாயங்களில் ஒன்று. பின் நாம் சரியாகத் தயாராக மாட்டோம். திரும்பவும் நான் துவக்கத்திலேயே சொன்னது போல, அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு கேடு மிக்க விளைவுகளின் சாத்தியங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். எனவே எப்போதெல்லாம் எதிர்காலத்தைப் பற்றியும் ஒரு தொழில்நுட்பத்தின் எதிர்கால விளைவைப் பற்றியும் எண்ணுகிறீர்களோ உருவாக்குகிறீர்களோ அப்போதெல்லாம் வெவ்வேறு சாத்தியங்களைக் கொண்ட வரைபடத்தை உருவாக்கிப் பாருங்கள் என்பேன். ஒரேயொரு சாத்தியம் மட்டுமே காண்கிறீர்கள் என்றால், நீங்கள் அவ்வளவு விரிவாகப் பார்க்கவில்லை. இரண்டோ மூன்றோ காண்கிறீர்கள் என்றாலும் கூட அது அவ்வளவு விரிவான பார்வை அல்ல எனலாம். குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து சாத்தியங்கள் கொண்ட வரைபடம் வேண்டும். 

வில்சன் ஒயிட்: இன்னொரு நேரலைக் கேள்வி எடுப்போம். 

பார்வையாளர்: வணக்கம், திரு. ஹராரி. என் கேள்வி என்னவென்றால், முதலில் மிக விரிவாகத் தொடங்கி, பின்னர் கவனம் செலுத்த வசதியாக அதைக் குறுக்கிச் சொல்கிறேன். இந்தப் புனைவுக் கதைகளை மனித இயல்பையே வழிகாட்டும் அளவுக்கு இவ்வளவு ஆற்றல்மிக்கவையாக ஆக்கிய கூறுகள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று அறிய மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். அடுத்து, அதைக் குறுக்கினால், குறிப்பாக மனிதர்களின் இந்தத் தன்னழிப்பு நடத்தை பற்றி அறிய ஆர்வமாக இருக்கிறேன். சில மனிதர்களால் வழிநடத்தப்படும் இந்தப் புனைவுக் கதைகள் எப்படி மக்கள்திரளை அந்தப் புனைவுக் கதைக்காகக் கொல்லவும் சாகவும் செல்லும் அளவுக்கு நம்பச் செய்கின்றன? 

யுவால் நோவா ஹராரி: மூளையை ஊடுருவல் மற்றும் மனித விலங்கை ஊடுருவல் பற்றிப் பேசினோமே, திரும்பவும் அங்குதான் போக வேண்டும். வரலாறெங்கும் இது செய்யப்பட்டுள்ளது. முன்பெல்லாம் மூளை அறிவியலையும் நாம் இப்போது அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியையும் பற்றிய ஆழ்ந்த அறிவில்லாமலேயே பிழை திருத்தச் சுழற்சியாகத்தான் (trial and error) செய்துவந்தார்கள். ஓர் எடுத்துக்காட்டு கொடுக்க வேண்டுமானால், வேறொரு குழுவைச் சேர்ந்த மக்களைத் துன்புறுத்தவும் அழித்தொழிக்கவும் மக்களை நம்பவைக்க வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், மனித மூளையில் உள்ள அருவருப்புப் பொறிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும். பரிணாம வளர்ச்சி, ஹோமோ சேப்பியன்களை நோய்களுக்கு எதிராகவும் நோயை வரவைக்கக்கூடிய மற்ற எல்லாவிதமான தோற்றுவாய்களுக்கு எதிராகவும் காக்கும் பொருட்டு அவர்களின் மூளையில் மிகவும் ஆற்றல்மிக்க அருவருப்புப் பொறிமுறைகளோடு வடிவமைத்து இருக்கிறது. சார்புகளின், பாரபட்சங்களின், இனப்படுகொலைகளின் வரலாற்றைப் பார்த்தால், திரும்பத் திரும்ப வரும் கருப்பொருள் எதுவென்றால், அது மீண்டும் மீண்டும் இந்த அருவருப்புப் பொறிமுறைகளைக் கைக்கொள்வதுதான். பெண்கள் தூய்மையற்றவர்கள், அல்லது இந்த மனிதர்கள் வேறு - இவர்கள் நாற்றம் பிடித்தவர்கள், இவர்கள் நோய்களைக் கொண்டுவருபவர்கள் என்பது போன்றவற்றைக் காண்பீர்கள். மீண்டும் மீண்டும் அடிக்கடி அருவருப்புதான் மையத்தில் வந்து நிற்கிறது. எனவே ஒரு குறிப்பிட்ட விதமான மனிதர்களுக்கும் எலிகளுக்கும் அல்லது கரப்பான் பூச்சிகளுக்கும் அல்லது எல்லாவிதமான மற்ற அருவருப்பானவற்றுக்கும் இடையே ஓர் ஒப்பீட்டை அடிக்கடி காண்பீர்கள். எனவே நீங்கள் ஓர் இனப்படுகொலையைத் தூண்டிவிட விரும்பினீர்கள் என்றால், மனித மூளையில் உள்ள இந்த அருவருப்புப் பொறிமுறைகளை ஊடுருவுவதின் மூலம் அதைத் தொடங்குங்கள். இது மிக மிக ஆழமானது. இதைச் சிறு வயதிலேயே செய்யத் தொடங்கிவிட்டால் பின்னர் மிக மிகக் கடினம். மனிதர்களால் முடியும் - இந்த மனிதர்கள் அருவருப்பானவர்கள் அல்லது அவர்கள் நாற்றம் பிடித்தவர்கள் என்று சொல்வது தவறு என்பது அறிவார்த்தமாக அவர்களுக்குத் தெரியும். அறிவார்த்தமாக அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களை மூளை ஆய்வுக்கருவி போன்ற ஒன்றில் இருத்தினால் அவர்களால் அதை மறைக்க முடியாது. அவ்வாறு அவர்கள் வளர்க்கப்பட்டிருந்தால்… அதாவது, ஆனாலும் நீங்கள் அதைச் சரிசெய்ய முயலலாம். அதை வீழ்த்தலாம். ஆனால் அது மூளையின் மையத்துக்கே போய்விடுகிறது என்பதால் அது மிகவும் கடினம். 

வில்சன் ஒயிட்: நிறைவாக ஒரு கேள்வியோடு நான் முடித்துக்கொள்கிறேன். ஏனென்றால், நேரம் ஆகிவிட்டது. லேரியும் செர்கேயும் கூகுள் நிறுவனத்தை நிறுவிய போது, உலகெங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கைகளை முன்னேற்றுவதில் இருக்கும் தொழில்நுட்பத்தின் திறன் மீது இருந்த இந்த ஆழ்ந்த நம்பிக்கையோடுதான் அதைச் செய்தார்கள். எனவே உங்களிடம் ஒரு மந்திரக்கோல் இருந்து, அடுத்த பெரும் பணித்திட்டத்தை கூகுளுக்குக் கொடுத்து அதில் நாங்கள் பணிபுரிய முடியும் என்றால், 30 வினாடிகளில் அல்லது அதற்குள், எங்களுக்குப் பணியாக என்ன கொடுப்பீர்கள்? 

யுவால் நோவா ஹராரி: என்னிடம் பொருட்களை விற்கவோ விளம்பரங்களில் என்னைச் சொடுக்க வைக்கவோ அது மாதிரியான காரணங்களுக்காகவோ அல்லாமல் என்னைப் பாதுகாப்பதற்காக என்னை அறிந்துகொள்கிற ஓர் AI அமைப்பு. 

வில்சன் ஒயிட்: சரி. குறிக்கோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

[சிரிப்பு] 

நன்றி நண்பர்களே. 

[கைதட்டல்] 

https://www.youtube.com/watch?v=Bw9P_ZXWDJU 

*மே 2019 கணையாழி இதழில் வெளியானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்