யாதும் ஊரே: அமேரிக்கா 2

சென்ற பாகத்தில் அமேரிக்கா பற்றிய அறிமுகத்தையே முடிக்கவில்லை. அதை முடித்துவிட்டுத்தானே அமேரிக்காவில் எங்கே வந்து இறங்கினோம் என்பதைப் பற்றிப் பேச முடியும்!

அமேரிக்கா என்றாலே நமக்கு முதலில் கண்ணில் வருவது அந்தச் சுதந்திர தேவி சிலையும் அங்கே தென்படும் குளிருக்கான பல அறிகுறிகளுமே, இல்லையா? பனி சொட்டும் மரங்கள், குளிருக்கு உடலை முழுக்க மறைத்து உடையணிந்து நடமாடும் மனிதர்கள், அவர்களின் தலைகளில் இருக்கும் குல்லா ஆகியவைதானே! ஆனால் அது மட்டும் அமேரிக்கா இல்லை. அமேரிக்கா என்பது ஒரு பரந்து விரிந்த பெரும் நிலப்பரப்பு. இந்தியாவை எப்படித் துணைக்கண்டம் என்கிறோமோ அது போலவே இதுவும் ஒரு துணைக்கண்டம்தான். நிலப்பரப்பில் இந்தியாவைவிடப் பல மடங்கு பெரிய நாடு. பருவநிலைகளும் நில அமைப்பும் கூட இந்தியாவைவிடப் பல மடங்கு விதவிதமானது. ஆனால் இந்தியா போல் பரந்த பண்பாடுகளைக் கொண்ட நாடு என்று சொல்ல முடியாது. அதனால் அமேரிக்கா ஒரு துணைக்கண்டம் என்று சொல்வதைத் தாங்கிக்கொள்ள முடியாது போகலாம் உங்களுக்கு. இங்கேயும் உலகெங்கும் இருந்து வந்து வாழும் பல்வேறு இனக்குழுவினர் - மொழியினர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நம்மைப் போல் 'வந்தேறிகள்'. அதுதான் பிரச்சனை. "அமேரிக்கா என் நாடு" என்று நெஞ்சு புடைக்கத் துடிப்பவர்களே கூட வேறெங்கோ இருந்து இங்கு வந்தவர்கள்தாம்.

இந்த நிலம் செவ்விந்தியர்களுடையது. செவ்விந்தியர்கள் என்றால்? இந்தியர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்களா? அப்படியும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதனால் அவர்களுக்கு அந்தப் பெயர் வரவில்லை. அதுவே ஒரு பெரிய பஞ்சாயத்து இங்கே. இங்கே காலம் காலமாக அவர்களை 'செவ்விந்தியர்கள்' என்றும் 'இந்தியர்கள்' என்றும் அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி அழைப்பதற்கான காரணம் மிக எளிமையானது. "இந்தியாவைக் கண்டுபிடிக்கப் போகிறேன்," என்று சட்டையைப் போட்டுக்கொண்டு புறப்பட்ட கொலம்பஸ் தப்பாக வந்து இறங்கிய இடம்தான் அமேரிக்கா. 'அதனால் என்ன மோசம் போய்விட்டது! நான் வந்து இறங்கிய இடம் எதுவோ அதுவே இந்தியா. அங்கிருப்போரே இந்தியர்கள்!' என்று அவர் அழைத்ததால் அவருடைய சந்ததிகள் எல்லோரும் அப்படியே அழைக்கத் தொடங்கிவிட்டனர். தவறாக ஏதேனும் செய்துவிட்டு அதையே சரியென்று மாற்றிப் பேசும் நமக்கெல்லாம் அப்பன் ஒருத்தன் அப்போதே இருந்திருக்கிறான், பாருங்கள்!

நிலத்துக்கு 'அமேரிக்கா' என்று பெயரிட்டவர்கள் அங்கிருந்தவர்களை மட்டும் சமீப காலம் வரை 'இந்தியர்கள்' என்றும் 'செவ்விந்தியர்கள்' என்றும் அழைத்திருக்கிறார்கள். அது மண்ணின் மைந்தர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், "'இந்தியர்கள்', 'செவ்விந்தியர்கள்' என்று எங்களை இழிவாய் அழைப்பதை நாங்கள் விரும்பவில்லை. அமேரிக்காவின் பூர்வகுடியான எங்களை 'பூர்வகுடி அமேரிக்கர்கள்' (Native Americans) என்றே அழையுங்கள்" என்கிறார்கள். 'இந்தியர்கள் என்று சொல்வதில் அப்படி என்னடா இழிவு உங்களுக்கு? நாங்கள் எம்மாம் பெரிய அப்பாட்டக்கர் தெரியுமா?' என்று நமக்கு வருகிற கோபம் நியாயமானதுதான். ஆனால் அவர்கள் அதை இழிவு என்று சொல்வது அந்தப் பொருளில் இல்லை. ஒரு குழுவினரை இழிவாகவே நடத்தி வரும்போது, அவர்களை அடையாளப்படுத்தும் சொற்களையும் கூட பாதிக்கப்பட்டவர்கள் அழித்தொழிக்க விரும்புவது இயற்கைதானே! அப்படியான வகையில்தான் அவர்கள் அப்படி அழைக்கப்படுவதை இழிவு என்று எண்ணுகிறார்கள். 'பழைய நினைவுகளோடு சேர்ந்து பழைய பெயர்களும் போய்த் தொலையட்டும்' என்கிற முடிவு. அவர்களே அவர்களை அப்படி அழைத்துக்கொள்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. மற்றவர்கள் அப்படி அழைப்பதுதான் தவறு. இது எல்லாக் குழுக்களுக்கும் உள்ளதுதானே! அவர்களைப் 'பூர்வகுடி அமேரிக்கர்கள்' என்று அழைப்பதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், வந்தேறியவர்களுக்கு, "அப்ப நாங்க யாரு? குத்திக் காட்டுறியா?" என்ற கேள்வி வரும்தானே! அதுதான் பிரச்சனை.

"நீங்கள் இந்தியரா?" என்று கேட்கப்படும் கேள்விக்கு நாமும் "ஆம்" என்போம் (நம்மில் "இல்லை" என்போரும் உளர் என்பது வேறொரு பஞ்சாயத்து). அவர்களும் "ஆம்" என்றுதான் சொல்வார்கள். அந்த வகையில் அமேரிக்காவுக்குள் இருக்கும் வரை இது ஒரு குழப்பம் மிக்க கேள்விதான். சொல்லாடல்தான். அதைத் தெளிவுபடுத்தும் வகையில், பூர்வகுடி அமேரிக்கர்களான செவ்விந்தியர்களை 'அமேரிக்க இந்தியர்' (American Indian) என்றும் இந்தியாவிலிருந்து வந்தேறிக் குடியுரிமை பெற்றவர்களை 'இந்திய அமேரிக்கர்' (Indian American) என்றும் வெவ்வேறு விதமாக அழைக்கிறார்கள். இது குழப்பத்தை எளிதாக்குகிற மாதிரியா இருக்கிறது?!

அமேரிக்கா பெரிய நிலப்பரப்பு என்றேன் அல்லவா? அது எவ்வளவு பெரிய நிலப்பரப்பு என்றால், இந்தக் கடைசியில் இருந்து அந்தக் கடைசிவரை பயணம் செய்தீர்கள் என்றால், எல்லாவிதமான பருவநிலைகளையும் காண முடியும். குளிர், வெயில், காற்று, மழை என்று எல்லாம். எல்லாவிதமான நிலங்களையும் காண முடியும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று அனைத்தும். ஒவ்வொன்றும் பெரும் பெரும் அளவில் உள்ளவை. உள்ளே போய்ச் சிக்கிக் கொண்டால் வெளியே வரமுடியாத மாதிரியான மலைகளும் காடுகளும் நீர்நிலைகளும் பாலைவனங்களும் இருக்கின்றன. அது மட்டுமில்லை. இங்கிருக்கும் ஒவ்வொரு மாநிலமும் ஏதோவொரு இயற்கைச் சீற்றத்தில் சிக்கிச் சீரழியும் படி சபிக்கப்பட்டது. ஒன்றில் நிலநடுக்கம், இன்னொன்றில் வெள்ளம், இன்னொன்றில் காட்டுத்தீ என்று எல்லா இடத்திலும் ஏதோவொரு பிரச்சனை. பல இடங்களில் ஒன்றுக்கும் மேலான பிரச்சனை. ஒருபுறம் அட்லாண்டிக் பெருங்கடல். இன்னொரு புறம் பசிபிக் பெருங்கடல். பல நாட்கள் தொடர்ந்து வண்டி ஓட்டினால்தான் மொத்த நிலப்பரப்பையும் கடக்க முடியும். இருபுறங்களிலும் இருக்கும் பெருங்கடல்களுக்கு உள்ளேயும் பல பெரிதும் சிறிதுமான தீவுகளும் நிறைய அமேரிக்காவின் எல்லைக்குள் வரும். மொத்தம் ஒன்பது கால வலையங்கள் (time zones) கடைப்பிடிக்கும் நாடு இது. அதாவது, ஒரே நாட்டின் ஒரு கோடியில் காலையாகவும் இன்னொரு கோடியில் மாலையாகவும் இருக்கும். இப்படியான ஒரு நாடு, இன்றுவரை ஒரே நாடாக இருப்பதே பெரும் சாதனைதான். இல்லையா? நம்மூரில் சொல்வது போலத்தான்!

பெரும்பாலும் ஆங்கிலம்தான். பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் மட்டுமின்றி ஐரோப்பாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து குடியேறியவர்களும் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்களும் கூட நாளடைவில் ஆங்கிலத்தையே ஏற்றுக்கொண்டுவிட்டதால் அதில் பெரிதாகப் பிரச்சனை இல்லை. ஓர் ஏழெட்டு மாநிலங்கள் முழுமையாகவோ பெரிதளவிலோ சிறிதளவிலோ மெக்சிகோவிடமிருந்து அடித்துப் பிடுங்கப்பட்டவை என்கிறார்கள். அந்த மாநிலங்கள் அனைத்திலும் ஸ்பானிய மொழி இரண்டாம் மொழி என்ற மரியாதையோடு அமர்ந்திருக்கிறது. வெளியில் எல்லோருமே எப்போதும் ஆங்கிலமே பேசினாலும் பெரும்பாலான இடங்களில் ஸ்பானிய மொழி பேசிச் சமாளிக்க முடியும்தான். அப்படியான ஒரு மாநிலம்தான் நாங்கள் வந்திறங்கியிருக்கும் மாநிலமான கலிஃபோர்னியா. அதனால் இங்கேயும் பல இடங்களில் ஸ்பானிய வாடை இருப்பதை நன்றாக உணர முடியும். மெக்சிகர்கள் முழுமையாக வெள்ளைக்காரர்கள் போலும் இல்லாமலும் வேறு மாதிரியாகவும் இல்லாமலும் இருப்பவர்கள். சிறிது காலம் இருந்துவிட்டால் இந்த வேறுபாடு எளிதில் புரிந்துவிடும். இப்போது சிறிது கலிஃபோர்னியா பற்றிப் பேசிவிடுவோம்.

இந்தியாவில் எப்படி வட இந்தியா - தென் இந்தியா என்று இரண்டாகப் பிரிக்கிறோமோ அது போல இங்கே எல்லாமே கிழக்குக் கடற்கரை - மேற்குக் கடற்கரை என்று பிரிக்கப்படுகிறது. நம்மூரில் வடகிழக்கு மாநிலங்கள் போல, இங்கேயும் இடையிலும் சில பகுதிகள் இருக்கின்றன. கிழக்குக் கடற்கரைதான் உறைய வைக்கும் குளிர் நிறைந்த நியூ யார்க், நியூ ஜெர்சி போன்ற ஊர்கள் உடைய பகுதி. பெரும் வணிக மையங்களின் பகுதி. நாங்கள் இருக்கும் கலிஃபோர்னியா மேற்குக் கடற்கரையில் இருக்கிறது. இங்கே அவ்வளவு குளிர் கிடையாது. கோடையில் நல்ல வெயிலும் குளிர் காலத்தில் பெங்களூர் போன்று மிதமான குளிரும் கொண்ட மாநிலம். அதனாலேயே அமெரிக்காவிலேயே அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலமாகவும் இருக்கிறது. ஆக, தட்பவெப்பம்தான் ஓரிடத்தை மனிதர்களின் வாழ்வுக்கு உகந்த இடமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

இந்த நிமிடம், இலண்டனில் இருந்த போது, இந்தியா சென்று திரும்பிய வெள்ளைக்கார டாக்சி ஓட்டுநர் ஒருத்தர், "இந்தியா எப்போதும் பளிச் என்று சொர்க்கம் போல் இருக்கிறது. அங்கிருந்து எதற்காக மக்கள் இங்கே வர ஆசைப்படுகிறார்கள் என்று எனக்குப் புரியவேயில்லை" என்றது நினைவுக்கு வருகிறது. அந்தப் பளிச்சுக்காகவும்தானே அவருடைய முன்னோர்கள் வந்து நம்மை ஏறி மேய்ந்தார்கள். அவரைப் பொருத்தமட்டில் பளிச் என்று சூரியன் சுட்டால் அது சொர்க்கம். நமக்கு? சோறு கண்ட இடமே சொர்க்கம் என்பதை அவருக்குச் சொல்லிப் புரியவைக்க வேண்டுமென்றால் அதற்குச் சோறு எவ்வளவு அரிதானது என்பதைப் புரிய வைக்க வேண்டும். அவர் வெள்ளைக்காரனாகப் பிறந்திருப்பதால் அதுவும் அவ்வளவு எளிதில்லை.

அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலம் மட்டுமல்ல, அமேரிக்காவின் மிகப் பணக்கார மாநிலமும் கலிஃபோர்னியாவே. அமேரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே வணிகத் தலைநகரம் என்று கூடச் சொல்லப்படும் நியூ யார்க் நகரம் இருக்கும் நியூ யார்க் மாநிலத்தைவிடப் பணக்கார மாநிலம் கலிஃபோர்னியா. கலிஃபோர்னியா ஒரு தனி நாடானால் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் அவர்களுடையதாக இருக்கும் என்கிறார்கள். "எங்கு போனாலும் இந்தத் தனி நாட்டுக் கதையை மட்டும் விட மாட்டீர்களாடா, பாவிகளா?" என்போருக்கு ஒரு கொசுறுச் செய்தி: ட்ரம்ப் வெற்றி பெற்றதும் பெரும் ஏமாற்றமும் வெறுப்பும் அடைந்த மாநிலம் கலிஃபோர்னியா. அப்போது ஓரளவுக்கு (ஓரளவுக்குத்தான்) இங்கேயும் ஆங்காங்கே இந்தத் தனி நாட்டுப் பேச்சு எழுந்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்களாட்சிக் கட்சியின் (Democratic Party) கோட்டை இந்த மாநிலம். அதற்குக் காரணம் இங்கிருக்கும் மெக்சிகன் மற்றும் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை. பெருமளவில் திறந்த மனம் கொண்ட - இனவெறி, நிறவெறி போன்ற குறுகிய சிந்தனைகள் இல்லாத மக்கள் நிறைந்திருக்கும் மாநிலம்.

கலிஃபோர்னியாவின் இந்தப் பொருளாதாரத்துக்குக் காரணம் இங்கே இரண்டு பெரும் துறைகள் இருக்கின்றன. ஒன்று, உலகுக்கே தொழில்நுட்பத் தலைநகரம் என்றால் அது சான் பிரான்சிஸ்கோ. இந்தியாவுக்கு நம் பெங்களூர் போல. அது இங்கேதான் இருக்கிறது. முதன்முதலில் கணிப்பொறியும் இணையமும் இங்குதான் பிறந்தன. தொழில்நுட்பத் துறையினரால் அங்கே பெங்களூர் எப்படி அதன் தட்பவெப்பத்துக்காகவே விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டதோ அது போலவே இங்கே சான் பிரான்சிஸ்கோவும் அதற்காகத்தான் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் சான் பிரான்சிஸ்கோவைப் பார்த்துத்தான் பெங்களூரையும் அப்படித் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். இரண்டாவது, ஹாலிவுட். உலகுக்கே திரைத் துறையின் தலைநகரம் இதுதான் என்பது உங்களுக்குத் தெரியாதது இல்லை. இந்தியாவில் வணிகத் தலைநகரம் மும்பை என்பது போல, இங்கே நியூ யார்க். ஆனால் அங்கே பாலிவுட்டும் மும்பையில்தான் இருக்கிறது. இங்கே ஹாலிவுட் இருப்பது, கலிஃபோர்னியாவில் இருக்கும் லாஸ் ஏஞ்சலஸ் நகரில். இதுவும் இந்த ஊரின் தட்பவெப்பத்துக்குக் கிடைத்த பரிசுதான். எந்த நேரமும் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கும் ஓர் ஊரில் உருப்படியாகப் படப்பிடிப்பு எப்படி நடத்த முடியும்! அப்படியான லாஸ் ஏஞ்சலசில்தான் நாங்கள் வந்து இறங்கியிருக்கிறோம். கோலிவுட் எனப்படும் கோடம்பாக்கம் போல, ஹாலிவுட்டும் நெருக்கடியான ஓர் இடமாக இருக்கும் போல என்று எண்ணிக்கொண்டு அங்கு போய்ப் பார்த்தால்தான் புரிகிறது, அது ஒரு மலை என்று.

இந்த மாநிலம் சபிக்கப்பட்டிருப்பது ஒரேயோர் இயற்கைப் பேரிடரால் மட்டும் அல்ல. பலவற்றால். காட்டுத்தீ, வறட்சி, நிலநடுக்கம் என்று மூன்று முக்கியமான அச்சுறுத்தல்கள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன. காட்டுத்தீ அருகில் இருக்கும் மலைத்தொடர் ஒன்றில் அடிக்கடி வருகிறது. வரும் போது நாம் ஊரில் பார்ப்பது போல சாதாரணப்பட்ட தீயாக வருவதில்லை. பல மைல் தொலைவு காட்டையே அழித்துவிட்டுப் போய்விடுகிறது. அதன் பின்பு பல நாட்களுக்கு அந்தப் பகுதிகளில் மனிதர்கள் நடமாட முடியாத அளவு புகை மூட்டம் இருக்கிறது. நீருக்கு எப்போதும் பஞ்சம் இருக்கிறது. அதை ஏதோதோ திட்டங்கள் போட்டுச் சமாளிக்கிறார்கள். பக்கத்து மாநிலத்திலிருந்து செயற்கையான ஓர் ஆறு அல்லது ஓடை போன்று ஏதோவொன்றைக் கட்டி நீர்ப் பஞ்சத்தைச் சமாளிக்கிறார்கள். நிலநடுக்கம்தான் இதில் ஆகப்பெரும் அச்சுறுத்தல். நூறு ஆண்டுகளுக்கு முன்பு சான் பிரான்சிஸ்கோ நகரில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கம் ஒன்றின் காரணமாகத்தான் மக்களின் கவனம் அங்கிருந்து லாஸ் ஏஞ்சலசின் பக்கம் திரும்பியதாம். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக மூன்று நாட்கள் எரிந்துகொண்டே இருந்ததாம் நகரம். இவ்விரு நகரங்களுக்கும் இடையிலான தொலைவு கிட்டத்தட்ட நானூறு மைல்கள். சாலை வழியில் ஐந்தாறு மணி நேரத்தில் அடைந்துவிடலாம். லாஸ் ஏஞ்சலசுக்கு அந்தப் பக்கம் தொடங்கி சான் பிரான்சிஸ்கோவுக்கு அந்தப் பக்கம் வரை நீளும் ஒரு நீண்ட கோடு உலகின் மிகப்பெரிய நிலநடுக்க அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளில் ஒன்று. அது போலப் பல சிறிய சிறிய கோடுகளும் இருக்கின்றன. எந்த நேரமும் நமக்குக் கீழே சிறிய சிறிய நிலநடுக்கங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன என்கிறார்கள். நமக்குத்தான் பெரிதாக உணர முடிவதில்லை. உணர முடிகிற மாதிரியும் அவ்வப்போது வருமாம். கூடிய விரைவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று வரப்போகிறது என்று மொத்த மாநிலமும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது. அப்படி ஒன்று வரும் போது அதன் பாதிப்பு எவ்வளவு கொடுமையானதாக இருக்கும் என்பதில் இரு முற்றிலும் வேறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஒன்று, பெருநகரங்கள் மட்டுமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்; சிறிய வீடுகள் உள்ள பகுதிகளில் அவ்வளவு பாதிப்பு இராது என்பது. இன்னொன்று, பெருநகரங்களிலும் கட்டடங்கள் ஒன்றும் அப்படியே இடிந்து விழுந்துவிடாது என்கிற மெத்தனமான கருத்து. இது பெரும்பாலும் அந்தப் பெரும் பெரும் கட்டடங்களைக் கட்டிய நிறுவனங்களின் கருத்து போலத் தெரிகிறது. இம்மாம் பெரிய அபாயத்துக்கு இவ்வளவு அருகில் இருந்துகொண்டிருந்த போதும் இது பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல்தான் எல்லோருமே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வளரும் - ஏழை நாடுகளில் போன்றில்லாமல் எவ்வளவோ பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடுதான் வாழ்கிறார்கள். ஆனாலும் இயற்கை அதன் வேகத்தில் அடிக்கும் போது என்ன பெரிதாகத் தப்பிவிட முடியும் என்றுதான் நமக்குப் படுகிறது.

இது போக, கடலோரத்தில் இருப்பதால் சுனாமி வரலாமாம். வெள்ளம் வரலாமாம். பயங்கரமான காற்று அடிக்குமாம். சில இடங்களில் நிலச் சரிவு ஏற்படுமாம். இதெற்கெல்லாம் மேலாக சில இடங்களில் எரிமலை கூட இருக்கிறதாம். இதையெல்லாம் கேட்கும் போது, "போங்கடாங்..." என்று ஆகிவிடுகிறது. உண்மையிலேயே சொர்க்கம்தான் போல நம்மூர். இதிலும் இன்னொரு பார்வை இருக்கிறது. யாரும் போய் குற்றம் நடந்ததைப் புகார் அளிப்பதில்லை என்பதால் குற்றமே நடப்பதில்லை என்று சொல்வது போல, இவர்களைப் போல அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி எல்லாவற்றையும் அளப்பதும் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவதும் கூடுதல் பீதியைக் கொடுத்துவிடுகிறது. எது பற்றியும் கவலைப் படாமல் ஒரு பேரிடர் நடக்கும் போது மட்டும் அது பற்றிப் பேசுவதும் உடனடியாக மறந்துவிடுவதும் நம் பிறவிப் பிரச்சனையாக இருப்பதால் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாதது போல இருப்பதும் கண்ணை மூடிக்கொள்கிற பூனைக் கதைதான் என்பதும் சரியாகத்தான் படுகிறது.

(பயணம் தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்