யாதும் ஊரே: அமேரிக்கா 3

முதல் பாகத்தில் அமேரிக்கா பற்றியும் இரண்டாம் பாகத்தில் கலிஃபோர்னியா மாநிலம் பற்றியும் பார்த்தோம். அதிலேயே நாங்கள் வந்திறங்கியிருக்கும் நகரமான லாஸ் ஏஞ்சலஸ் பற்றியும் ஓரளவு பார்த்தோம் எனினும், இந்தப் பாகத்தில் அது பற்றி இன்னும் விரிவாகப் பார்த்துவிடுவோம்.

ஆங்கிலப் பெயர்களைத் தமிழில் வேறு மாதிரி எழுதும் பழக்கம் இருப்பது இதற்கும் பொருந்தும். தமிழில் எழுதுகிற எல்லோருமே இந்த நகரத்தை 'லாஸ் ஏஞ்சல்ஸ்' என்றுதான் எழுதுகிறோம். சொல்வதும் கூட அப்படியே. அது 'ஏஞ்சல்ஸ்' அல்ல, 'ஏஞ்சலஸ்'. 'ல்' அல்ல, 'ல'. இங்கே உள்ள எல்லா மாநிலங்களுக்குமே இரண்டெழுத்தில் ஒரு சுருக்கப் பெயர் இருக்கும். 'நியூ யார்க்' என்றால் 'NY'. 'நியூ ஜெர்சி' என்றால் 'NJ'. 'கலிஃபோர்னியா' என்றால் 'CA'. இப்படி ஐம்பது மாநிலங்களுக்கும் ஒவ்வொரு சுருக்கப் பெயர் உண்டு. நம்மூரில் வாகனப் பதிவு எண்ணுக்கு முன்னே TN, KA, KL என்று இருப்பது போல். ஆனால் இங்கே அஞ்சல் துறை உட்பட எல்லோராலும் முழுமையாக இந்த இரண்டெழுத்துச் சுருக்கப் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் 'LA' என்பது மட்டும் ஒரு குழப்படி நிறைந்த சுருக்கம். 'லூயிசியானா' என்றொரு மாநிலம் இருக்கிறது. அதுதான் 'LA' என்றால், லாஸ் ஏஞ்சலசையும் அப்படித்தான் சொல்கிறார்கள். பொதுவாக மக்களின் பேச்சு வழக்கில் பெரும்பாலும் லாஸ் ஏஞ்சலஸ் நகரமே 'LA' என்றழைக்கப்படுகிறது. அஞ்சல் துறையும் அரசு அலுவலகங்களும் மட்டுமே 'லூயிசியானா'வுக்கு அதை வைத்துக்கொண்டுள்ளன எனலாம்.

அமேரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய நகரம் லாஸ் ஏஞ்சலஸே. கலிஃபோர்னியாவின் மிகப் பெரிய நகரம் இதுவே. அப்படியானால் கலிஃபோர்னியாவின் தலைநகரம் இதுதானா? அதுதான் இல்லை. இங்கே உள்ள ஐம்பது மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களுக்கு அந்த மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் அதன் தலைநகரம் இல்லை. இது உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள ஒரு வழக்கத்துக்கு மாறானது. இல்லையா? இந்தியாவில் கூட அப்படியில்லைதான். ஆனால் டெல்லி மூன்றாவது மிகப்பெரிய நகரம். இப்போது கல்கத்தாவைவிடப் பெரியதாகி இரண்டாவது பெரிய நகரமாக ஆகிவிட்டதாகவும் சொல்வோர் உண்டு. இங்கே பல மாநிலங்களில் அப்படிக்கூட இருப்பதில்லை. பல மாநிலங்களில் ஏதோவொரு சின்ன ஊர்தான் தலைநகரமாக இருக்கிறது. பெரும்பாலும் அதற்கான அடிப்படை, மாநிலத்தின் மையத்தில் இருக்க வேண்டும் என்பதுதான். இந்த அடிப்படையில்தான் தமிழ் நாட்டுக்குத் திருச்சியைத் தலைநகராக்க வேண்டும் என்ற பேச்சுக் கூட வந்தது. இல்லையா? அந்த அடிப்படையில்தான் மும்பையைவிட, கல்கத்தாவைவிட டெல்லி பொருத்தமான இடமாக இருக்கிறது. நட்டநடுவில் இல்லை என்ற போதும் ஓரளவுக்கு நடுவில் வருகிறது அல்லவா? இங்கே சில இடங்களில் தலைநகரம் முடிவு செய்யப்பட்ட போது அதுதான் மிகப்பெரிய நகரமாக இருந்திருக்கும், ஆனால் அதன்பின் நிகழ்ந்த பல மாற்றங்களால் வேறொரு நகரம் புதுப் பணக்காரன் போலத் திடீரென வளர்ந்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் கலிஃபோர்னியாவின் தலைநகரமாக இருப்பது 'சாக்ரமெண்ட்டோ' எனும் ஒரு சிறிய நகரம்தான். லாஸ் ஏஞ்சலஸும் இல்லை. அதற்கடுத்த பெரிய நகரமான சான் ஃபிரான்சிஸ்கோவும் இல்லை.

முன்பே சொன்னது போல, ஹாலிவுட் லாஸ் ஏஞ்சலஸில்தான் இருக்கிறது. ஆனால் கோடம்பாக்கம் போல் ஊருக்குள் இல்லை. ஒதுக்குப்புறமாகத்தான் இருக்கிறது. அதுவும் ஒரு மலைப்பகுதி. கோடம்பாக்கமும் தொடங்கும் போது ஒதுக்குப்புறமாக இருந்ததுதான். பின்னர் சென்னையின் அதிபயங்கர வளர்ச்சி அதையும் விழுங்கி அதற்கப்பால் இருக்கும் பல ஊர்களையும் விழுங்கிவிட்டது. அதனால் லாஸ் ஏஞ்சலஸ் கலைஞர்கள் நிறைந்திருக்கும் ஊராக இருக்கிறது. உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் கனவுகளோடு வந்திறங்கிய பலதரப்பட்ட மக்களின் பண்பாட்டுச் சங்கமமாக இருக்கும் ஊர் இது. பசிபிக் பெருங்கடலின் கரையில் இருக்கும் கடற்கரை நகரம். ஒரு புறம் கடல் என்றால், அப்படியே மற்றொரு பக்கம் அடிக்கடி காட்டுத்தீ வரும் மலைகள். சுற்றிலும் கடலும் மலையும் சந்தித்துக்கொள்ளும் அழகழகான இடங்களும் இருக்கின்றன.

'லாஸ் ஏஞ்சலஸ்' என்பதில் வரும் 'லாஸ்', 'சான் ஃபிரான்சிஸ்கோ'வில் வரும் 'சான்' - இவையெல்லாமே ஸ்பானியச் சொற்கள். 'லாஸ்' என்றால் ஆங்கிலத்தில் வரும் 'த' (the) என்பது போன்ற சொல். அவ்வளவுதான். ஆக, 'த ஏஞ்செல்ஸ்' என்பதுதான் 'லாஸ் ஏஞ்சலஸ்'. தமிழில் சொல்வதானால் வெறுமனே 'தேவதைகள்'. அப்படியெல்லாம் மொட்டையாகப் பெயர் வைக்கும் பழக்கம் நமக்கு இல்லாததால் 'தேவிப் பட்டணம்' என்று வைத்துக்கொள்ளலாம். 'சான்' என்றால் ஆங்கிலத்தின் 'செயிண்ட்' போன்றதொரு சொல். அதாவது, 'புனித'. 'புனித ஃபிரான்சிஸ்கோ'தான் 'சான் ஃபிரான்சிஸ்கோ'. இன்னும் தமிழ்ப் படுத்தினால் 'திரு' போன்று வைத்துக்கொள்ளலாம். 'திருப்பதி', 'திருச்சிராப்பள்ளி', 'திருநெல்வேலி' போன்ற கோவில் நகரங்களைப் போன்ற ஒரு புனிதப் பெயர்.

எனவே இப்படி 'லாஸ்', 'சான்' போன்று தொடங்கும் பெயர் கொண்ட ஊர் எதுவானாலும் அது மெக்சிகோவிடமிருந்து அடித்துப் பிடுங்கப்பட்டது என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்காக நேற்றோ முந்தா நேற்றோ நடந்தது என்றில்லை. 19-ஆம் நூற்றாண்டிலேயே நடந்து முடிந்துவிட்ட பழைய கதை இது. எனவே பழசைக் கிளறி யாரையும் சங்கடப்படுத்தக் கூடாது, இல்லையா? ஆனால் அது அடித்துப் பிடுங்குதல் உலக நியதியாக இருந்த காலமா என்று தெரியவில்லை. ஏனென்றால் மக்களாட்சி வந்துவிட்ட பின்புதான் இதெல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் ஐ. நா. சபை வருவதற்கு முன்பே என்பதால் ஓரளவு மன்னிக்கத்தக்கதுதான். மன்னர்கள்தான் பேராசை பிடித்தவர்கள் என்பதுதானே இவ்வளவு நாட்களாக நாம் கேள்விப்பட்ட கதை. மக்களின் தலைவர்களும் அதற்கெல்லாம் குறைந்தவர்கள் இல்லை என்பதை நினைவுபடுத்தத்தான் இந்தக் கதை. மன்னராட்சியில் கூடக் கெட்ட மக்களுக்குத் தப்பித் தவறி ஒரு நல்ல மன்னர் அமைந்துவிட வாய்ப்பு இருக்கிறது. மக்களாட்சியில் அப்படி எதுவும் தப்பித் தவறி நடந்துவிட்டால் கூட அவரைச் சோலியை முடித்து வீட்டுக்கு அனுப்பி விடுவோம். இல்லையா? 'மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே' என்பது மன்னராட்சியின் கொள்கை. ஆனால் மக்களாட்சியில் மக்கள் எவ்வழியோ அவ்வழிதானே அவர்களின் தலைவர்களுடையதாகவும் இருக்க முடியும்! பிடுங்கித் தின்னும் தலைவன் இருக்குமிடமெல்லாம் பிடுங்கித் தின்னும் மக்களின் இடமென்று சொல்ல முடியாது என்றாலும், பிடுங்கித் தின்பதைக் குற்றமாக எண்ணாத மக்கள் இல்லாமல் அப்படியான தலைவர்கள் உருவாக முடியாதுதானே! இவ்விடத்தில், நாம் இப்போது இந்தியாவையோ தமிழ் நாட்டையோ பற்றிப் பேசவில்லை என்பதை ஒரு நிமிடம் நினைவுறுத்த விரும்புகிறேன். பிடுங்கித் தின்பதிலும் முரட்டுத்தனமாகச் செய்தல், முட்டாள்தனமாகச் செய்தல், நாகரீகமாகச் செய்தல், 'நான் உனக்கு உதவுகிறேன்' என்று சொல்லிக்கொண்டே செய்தல் போன்று பல்வேறு வகைப்பாடுகள் இருக்கின்றனதானே! எல்லாத்தையும் அப்படிப் பொதுமைப் படுத்திவிட முடியுமா என்ன?

கிழக்குக் கடற்கரைப் பக்கமும் பிற அமேரிக்கப் பகுதிகளிலும் எப்படி இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் செவ்விந்தியர்களை அழித்து அவர்களின் நிலங்களைப் பிடித்தார்களோ அது போலவே ஸ்பானியர்கள் வந்து அம்மண்ணின் மைந்தர்களை ஒழித்தோ அடக்கியோ கைப்பற்றிய நிலந்தான் மெக்சிகோவும் பல தென்னமேரிக்க நாடுகளும். ஆனால் அமேரிக்காவைப் போலன்றி மெக்சிகோவில் பெருமளவில் இனக்கலப்பு நடந்துவிட்டது. எனவே அங்கே இந்தப் பிரிவினைக்கு இடம் குறைவே.

மொத்த அமேரிக்காவிலுமே பொது மக்களுக்கான போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவே. எல்லோருமே கார்தான் பயன்படுத்துகிறார்கள். ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்குப் போகப் பேருந்து என்ற வசதியே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மோசம். அதற்குக் காரணம் நாடு அவ்வளவு பெரியது. அதனால் அப்படியே பேருந்து விட்டாலும் அதைப் பயன்படுத்த ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். எனவே மக்கள் கூடிவாழும் பெருநகரங்களில் மட்டுமே பேருந்து போன்ற போக்குவரத்து வசதிகள் உண்டு. அந்த வகையில் இங்கும் பேருந்து வசதி இருக்கிறது. ஆனால் உலகத்தரம் என்று சொல்ல முடியாது. வண்டிகள் தரமாகத்தான் இருக்கும். ஆனால் அடிக்கடி வராது, நேரத்துக்கு வராது, நிறையப் பேர் பயன்படுத்துவதில்லை போன்ற பிரச்சனைகள் உள்ளன. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் துல்லியமாகச் சொன்ன நேரத்துக்கு வந்து நிற்கும். இரண்டு நிமிடத் தாமதத்துக்குக் கூட நிறைய மன்னிப்புக் கேட்பார்கள். மிகவும் தாமதமாகிவிட்டால் பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடுவார்கள். அப்படியெல்லாம் இங்கு இருப்பது போலத் தெரியவில்லை. அமேரிக்காவிலேயே வேறு சில நகரங்களில் அப்படியெல்லாம் உண்டு என்கிறார்கள். அந்த வகையில் இங்கிருக்கும் போக்குவரத்து வசதி மிகவும் கொடுமையானதே. பல நேரங்களில் உரிய நேரத்தைவிட அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கூடக் காத்திருக்க வேண்டியதிருந்திருக்கிறது. போக்குவரத்து விஷயத்தில் இப்படியான ஒரு தரக் குறைபாடு என்பது, மற்ற எல்லாச் சேவைகளும் மிக மிகத் தரமாகக் கிடைக்கிற ஒரு நாட்டில் பெரும் வியப்புக்குரியதாகவே இருக்கிறது.

கார் வாங்குவதற்கு முன்பு இந்தப் பேருந்துகளை நம்பி ஓரிரு மாதங்கள் பட்ட பாடு பெரும் பாடு. இதில் பாதுகாப்பு பற்றிய பயம் வேறு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் போதும் சரி, பயணம் செய்யும் போதும் சரி, எப்போதும் பயந்தபடியே இருக்க வேண்டும். தேவையில்லாமல் பயப்படுவது பயப்படுபவனின் கோளாறாகவும் இருக்கலாம். ஆனால் அப்படியான பயத்தை எத்தனையோ நாடுகளில் நாம் அனுபவிப்பதே இல்லை. பல நிறுத்தங்களில் பல நிமிடங்கள் நாம் ஒரேயொருவராகத் தனியாக நின்றுகொண்டிருப்போம். திடீர் திடீரென யாரோ ஒருவர் வந்து சில்லறை கேட்பார். பைக்குள் கையைவிட்டு எடுத்துக் கொடுக்கவும் பயமாக இருக்கும். இல்லை என்று சொல்லவும் பயமாக இருக்கும். அதற்குக் காரணம் உலகில் வேறு எந்த நாட்டைக் காட்டிலும் இங்கு கூடுதலாக இருக்கும் 'மார்க்கமான' மனிதர்களின் எண்ணிக்கைதான்.

வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 'பயமுறுத்தும்' பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடு இது. 'பிச்சைக்காரர்' என்ற சொல் மட்டும் இல்லை. 'வீடற்றோர்' (homeless) என்று நாகரீகமாகச் சொல்கிறார்கள். பொருள் அளவில் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது, வீடற்றோர் எல்லோருமே பிச்சையெடுக்கிறார்கள் என்று சொல்ல முடியாது என்பதையெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் அவர்களைப் பற்றி பொதுமக்களிடம் எப்போதும் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கிறது. நம்மூரிலும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தெளிவான மனநிலையிலேயே இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் சாமியார் வேடம் தரித்து வேறு இருப்பார்கள். அதற்கெல்லாம் மேல், பெரும்பாலும் கூட்டத்திலேயே வாழ்கிற நமக்கு அவர்களையும் கூட்டத்திலேயே சந்திப்பதால் பெரும் பயம் இருப்பதில்லை. இங்கே அப்படியில்லை. கிட்டத்தட்ட வீடற்றோர் எல்லோருமே போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் போலோ மனநிலை தவறியவர்கள் போலோதான் இருக்கிறார்கள். அதுதான் பயமுறுத்துகிறது. திரும்பவும் தெளிவுபடுத்திவிடுகிறேன் - வீடுள்ளவர்களிலும் போதைக்கு அடிமையானவர்களும் மனநிலை தவறியவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அது பற்றி நாம் இப்போது பேசவில்லை.

'ஒரு நாடு உலகத்திலுள்ள மற்ற நாடுகளையெல்லாம் விடப் பணக்கார நாடாக இருப்பது மட்டுமா அந்த நாட்டை வல்லரசாக்கும்? தன்னைவிடப் பல மடங்கு ஏழ்மையில் உள்ள ஒரு நாட்டில் இருந்து வருபவனிடம் கூடக் கையை நீட்டி வாழும் இலட்சோப இலட்சம் வீடற்றோரை வைத்திருப்பது அவர்களுக்கு இழிவில்லையா?' என்றெல்லாம் கூட எண்ணத் தோன்றும். மொத்த வருமானமும் சராசரி வருமானமும் சொல்ல முடியாத பல கோளாறுகளை உள்ளடக்கியவைதானா நம் பொருளியல் புள்ளிவிவரங்கள்? ஜப்பானிலும் சிங்கப்பூரிலும் இப்படியான மனிதர்களைக் காணவே முடியாது என்பார்கள். இதில் சிங்கப்பூரில் நான் சிறிது காலம் வசித்திருக்கிறேன். அங்கே பிச்சைக்காரர்களைப் பார்த்த நினைவே இல்லை. இதுதானே உண்மையான வளர்ச்சி! எல்லோருக்குமான வளர்ச்சி!

மற்ற ஊர்களில் எப்படியோ தெரியவில்லை. இங்கே பல பேருந்து நிறுத்தங்களில் கூரை கூட இருப்பதில்லை (பல இடங்களில் இருக்கவும் செய்கிறது). உட்கார இருக்கைகள் மட்டும் இருக்கும். அந்த இருக்கைகளை வைத்துத்தான் அது பேருந்து நிறுத்தம் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். கண்ணுக்குத் தெரியாத சிறிய பலகைதான் வைத்திருக்கிறார்கள். அது ஆட்கள் அதிகமாக வருவதில்லை என்பதாலா அல்லது கலிஃபோர்னியாவில் அதிகம் குளிர் இருப்பதில்லை என்பதாலா என்று தெரியவில்லை.

பேருந்துகள் வடிவமைப்பில் தரமாக இருக்கின்றன. ஓட்டுனர்கள் மிகவும் கனிவாக நடந்துகொள்கிறார்கள். வயதானவர்கள் வரும் போது இருக்கையைவிட்டு எழுந்து இறங்கி வந்து உதவுகிறார்கள். முதியவர்கள், ஊனமுற்றவர்கள் வரும் போது பேருந்தின் தளத்தையே கீழே இறக்கி, அவர்கள் ஏறியதும் அல்லது இறங்கியதும் மீண்டும் மேலே ஏற்றிக்கொள்கிற அளவுக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பெரும்பாலான பேருந்துகளில் முதியவர்களே அதிகம் பயணிக்கிறார்கள். நடக்கத் தெம்பு இருக்கும் எல்லோருமே கார் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதனால் பேருந்துகளும் ஓட்டுனர்களும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டிருக்கின்றன - பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இது போக, நம்மைப் போலப் புதிதாக வந்திருப்பவர்களும் வீடற்றோரும் கூட அதிகமாகப் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் அடிக்கடி சில்லறை இல்லை என்று சொல்லிக்கொண்டு ஒருவர் வந்து ஏறுவதும் வழக்கமாக நடந்தேறுகிறது. பெரும்பாலும் ஓட்டுனர்கள், "சரி போ" என்று விட்டுவிடுகிறார்கள். நிறுத்தத்தில் ஏறுபவர்கள் எல்லோருமே பாதுகாப்பாக இடம் பிடித்து அமரும்வரை காத்திருந்துதான் வண்டியை எடுக்கிறார்கள். பெரும்பாலும் ஏறும் போது எல்லோருக்குமே வணக்கம் (ஹாய்) சொல்லுகிறார்கள். சிலர் மட்டும் சொல்வதில்லை. அப்படிச் சொல்லும் ஓட்டுனருக்கும் பெரும்பாலும் எல்லோரும் பதிலுக்கு வணக்கம் சொல்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் உர்ரென்று ஏறி உர்ரென்றே இறங்கிப் போய்விடுகிறார்கள். பெரும்பாலானவர்கள் இறங்கும் போது 'நன்றி' சொல்லிக்கொண்டேதான் இறங்குகிறார்கள்.

பேருந்துக்கு முன்னால் மிதிவண்டிகளை மாட்டிவைத்துக்கொள்ள வசதியாக ஒரு சில கம்பிகள் இருக்கின்றன. வீட்டிலிருந்து மிதிவண்டியில் வந்து அதைப் பேருந்தின் முன்னால் கட்டிவிட்டு வண்டியேறுகிறவர்கள், இறங்கும் போது அதையும் கழற்றிக்கொண்டு போய்விடுகிறார்கள். அங்கிருந்துபணியிடம் வரை அதில் செல்வார்கள். இது நன்றாக இருக்கிறது. அதிகபட்சம் ஐந்தாறு வண்டிகள் கட்டிக்கொள்ளலாம் போல் இருக்கிறது. நம்மூரில் இது ஒத்து வராது. அப்படி வந்தால் இருபது - முப்பது வண்டிகளுக்காவது இடம் வேண்டியதிருக்குமே!

பெரிய - அகலமான சாலைகளை 'புலவர்ட்' (Boulevard) என்கிறார்கள். இந்தச் சொல்லை இங்கிலாந்தில் கேள்விப்படவே முடியாது. இங்கே நாடு முழுக்கவும் புலவர்டுகள் இருக்கின்றன. நம்மூரில் 'நெடுஞ்சாலை' போல. ஆனால் ஊருக்குள் இருக்கும் நெடுஞ்சாலைகள். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சாலைகள் அனைத்தும் இங்கே மிக மிக அகலமானவை. பல இடங்களில் சாதாரணமாக ஒரு பக்கம் மட்டும் ஐந்து முதல் ஏழு தடங்கள் இருக்கின்றன. அதற்குக் காரணம் இங்கிருக்கும் கார்களின் எண்ணிக்கை. இவ்வளவு கார்கள் தொல்லையில்லாமல் ஓடியாட வேண்டும் என்றால் இவ்வளவு பெரிய சாலைகள் இருந்தால்தான் முடியும். அதையும் மீறி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் உருவாகிவிடத்தான் செய்கிறது. அதுவும் நாங்கள் இருக்கும் இந்த ஊரில் அடிக்கடிக்கடி. இங்கேயும் அடிக்கடி ஒரு மணி நேரத் தாமதம் - இரண்டு மணி நேரத் தாமதம் பற்றியெல்லாம் கேட்க முடிகிறது. ஆனாலும் பெரும்பாலான மக்கள் சாலைவிதிகளை மீறி நடந்துகொள்வதில்லை. அதிலும் அவ்வப்போது ஏதாவது குண்டக்கமண்டக்க முயன்று பார்க்கிற சில மண்டையர்கள் வந்துவிடத்தான் செய்கிறார்கள். ஆனால் அப்படிப் பழக்கப்பட்டு விடுகிறவர்கள் பெரும்பாலும் அடிக்கடி காவல்துறையிடம் மாட்டுவதிலும் பழக்கப்பட்டு விட்டவர்களாகவே இருப்பார்கள். அப்படி மாட்டும் போதெல்லாம் அவர்கள் பெரும் தொகையைச் சாத்திவிடுவார்கள். அதனால் பெரும்பாலானவர்கள் சட்டத்துக்குப் பயந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதெல்லாம் சில பெருநகரங்களில் மட்டும் உள்ள கதை. மற்ற ஊர்களில் எல்லாம் சிக்கல் இல்லாமல் ஓடிவிடும். நாடெங்கும் மக்கள் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். ஆங்காங்கேதான் பெருநகரங்கள் இருக்கின்றன. அப்படியான பெருநகரங்களில் வாழும் வாழ்க்கைக்கும் ஆள் நடமாட்டம் இல்லாத ஊரகங்களில் வாழும் வாழ்க்கைக்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. நம்மூரில் போலவே.

எங்கு காணினும் பெரும் பெரும் நிலங்கள் இருக்கின்றன. நிலத்துக்குப் பஞ்சமில்லாமல் இருப்பதால்தான் அவர்களால் பெரும் பெரும் வீடுகள் கட்டி வாழ முடிகிறது (இதற்கு நிலவளம் மட்டும் காரணமல்ல. அது பற்றி அடுத்துப் பேசுவோம்). பரந்து விரிந்து வசிக்க முடிகிறது. ஆள் நடமாட்டமே இல்லாத அத்துவானக் காட்டுக்குள் எல்லாம் தன்னந்தனியாகப் பேய்வீடு மாதிரிக் கட்டிக்கொண்டு வாழ முடிகிறது. அதனால்தான் ஆளுக்கொரு துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. கையில் துப்பாக்கி இருப்பதால்தான் கோபம் வரும் போதும் மண்டைக்குள் அரிக்கும் போதும் சுற்றியிருப்பவர்களைப் போட்டுத்தள்ள நேர்கிறது. அப்படியானவர்களுக்குத் துப்பாக்கி செய்து விற்பது ஓர் ஆதாயமிக்க - அதுவும் பேராதாயம் மிக்க தொழிலாக இருப்பதால்தான், அந்தத் தொழில் செய்யும் முதலாளிகள் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லமை மிக்க தலைவர்களையும் கூடக் கைக்குள் போட்டுக்கொண்டு அதற்குத் தடையே வராமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. உலகத்திலேயே மண்டைக்குள் அரிக்கும் போது தன்னைச் சுற்றியிருப்போரை எல்லாம் டுமீல் டுமீல் என்று சுட்டு வீழ்த்தக்கூடிய ஆற்றலை - வசதியை, ஏழை - பணக்காரன் வேறுபாடில்லாமல் தன் மக்கள் எல்லோருக்கும் அளித்திருக்கும் ஒரே நாடு இதுதான். இப்படித்தான் உலகிலேயே மிக நாகரீகம் அடைந்த சமூகம் இருக்குமா - இருக்க வேண்டுமா அல்லது இதற்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லையா?

இங்குள்ளவர்கள் பெரும் பெரும் வீடுகள் கட்டி வாழ்வது பற்றிப் பேசினோம் அல்லவா? அதற்கு, தேவைக்கு மேலான நிலம் இருப்பது மட்டுமின்றி எல்லா வளங்களுமே இங்கே நிறைந்திருக்கின்றன என்பதே காரணம். நம்மூரில் ஒரு பெரும் பணக்காரன் வாழும் மாதிரியான வீட்டில் இங்கே நம்மைப் போன்ற மாதச் சம்பளக்காரர்கள் வாழ முடியும். நம்மூரில் நாம் கனவு கூடக் காண முடியாத மாதிரியான கார்களை நம் போன்றவர்கள் வாங்கி ஓட்ட முடியும். அது போலவே இன்ன பிற வசதிகளும். அதற்குக் காரணம், ஒருத்தனுக்குத் திருப்பிக் கட்டும் ஆற்றல் இருக்கிறது என்று தெரிந்துவிட்டால் கடனை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் வருமானம், செலவுகள், திருப்பிக்கட்டும் ஆற்றல் போன்றவற்றின் அடிப்படையில் 'கடன் மதிப்பீடு' (credit score) என்று ஓர் எண் கொடுக்கப்படுகிறது. அது அதிகமாக அதிகமாக கடன் கொடுக்க முன்வருபவர்களின் (வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்கள்) எண்ணிக்கையும் கூடும். நம் கடனின் அளவும் கூடும். இதனால் கடன் வாங்குவது பற்றி இங்குள்ளவர்களுக்கு எந்த மனக்கூச்சமும் இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் வாழ்க்கையில் எல்லாத்தையுமே 'கடனுக்குத்தான்' திட்டமிடுகிறார்கள். வாழும் வரை எல்லாத்தையும் கடனிலேயே வாழ்ந்து அனுபவித்துவிட்டு அப்படியே செத்துப் போய்விடுவதால் யாருக்கும் எந்தத் தொல்லையும் நேர்வதில்லை. மிச்சமிருப்பவை கொடுத்தவர்களுக்குப் போய்விடும். பிள்ளைகளை வந்து எவரும் தொல்லை செய்ய மாட்டார்கள். அப்புறம் என்ன? நம்மைப் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் இதற்குப் பழக்கப்பட்டுவிட்டுத்தான் பின்னர் வேறு காரணங்களுக்காக ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் வரும் போது முன்னுக்கும் போக முடியாமல் பின்னுக்கும் போக முடியாமல் மாட்டிக்கொண்டு திண்டாடுவது.

(பயணம் தொடரும்)

கருத்துகள்

  1. அழகழகான இடங்களை அழகாக எழுதுவது சிறப்பு. தொடருங்கள் !!

    பதிலளிநீக்கு
  2. தெளிவாக சொல்லி செல்லும் விதம் மிக அருமை பாராட்டுக்கள் பதிவு சற்று நீளமாக இருக்கிறது இரு பதிவிற்கான தகவல்கள் ஒரே பதிவில் வந்துவிடுகிறது முடிந்தால் இனிவரும் பதிவுகளை இரண்டாக பிரித்து எழுதலாம் இது என் கருத்து மட்டுமே.....


    அடுத்தாக பாலோவர் இணைப்பை இணைத்து விடுங்கள் அதன் பின் உங்கள் தலத்தை தொடர்வது மிக எளிதாக இருக்கும்


    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீளத்தைப் பொருட்படுத்தாமல் வாசித்து முடித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. நீளமாக எழுதுவது பற்றி ஏற்கனவே நிறையப் பேர் சொல்லியிருக்கிறார்கள். இது போன்று ஒரே இழுப்பில் நீளமாக எழுத முடிவதைச் சில எழுத்தாள நண்பர்கள் பாராட்டியதும் இன்னும் மாறாமலே இருப்பதற்கு ஒரு காரணம். இருப்பினும், இந்தத் தொடரை இதே அளவுப் பதிவுகளோடு முடித்துவிட்டு அடுத்ததில் இருந்து சுருக்கிவிடலாம் என நினைக்கிறேன். நீண்ட காலமாகக் குழம்பிக்கொண்டே இருந்த ஒரு விசயம் பற்றி மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தியதற்கு நன்றி.

      பின்தொடர்வோர் பட்டி முதற்கொண்டு முன்பு எல்லாம் இருந்தது. பின்னர் வலைப்பதிவுகள் வாசிக்கும் பழக்கம் நம் மக்களிடம் குறையத் தொடங்கியதும், லே-அவுட்டை அப்படியே மாற்றிவிட்டு கமுக்கமாக நேரம் கிடைக்கும் போது எழுதிவைத்துக்கொள்ளும் நாட்குறிப்பு போலவும் இதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். அதில்தான் அவையெல்லாம் போய்விட்டன. மீண்டும் இப்போது பழைய லே-அவுட்டுக்கு மாற்றிவிட்டேன். எப்படி இருக்கிறது என்று பார்த்துச் சொல்லுங்கள். மீண்டும் நன்றி.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்