ஜே டி வான்ஸின் 'ஹில்பிலி எலஜி' ('Hillbilly Elegy' by J D Vance) - மலையக ஒப்பாரி: நூல் அறிமுகம்

நம்மூரில் இவர்கள் இப்படித்தான் என்று சாதி, மத, மொழி மற்றும் இன்னபிற காரணிகளின் அடிப்படையில் அவர்களைப் பொதுமைப்படுத்துவது போல, அமெரிக்காவில் வெள்ளையர்கள் என்றால் மேலான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது போலவும் கறுப்பர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள் கீழான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது போலவும் ஒரு பொது எண்ணம் இருக்கும் அல்லவா! மேலானவர்கள் - கீழானவர்கள் என்றில்லை, அவர்களுடைய வாழ்க்கையே மேலானதாகவோ கீழானதாகவோ இருக்கும் என்று எண்ணுவது. அது இயல்புதானே! அது முற்றிலும் உண்மையல்ல என்கிற ஒரு நூல் இது. அது மட்டுமே அல்ல. இன்னும் நிறைய இருக்கிறது.

'ஹில்பிலி' என்பது அமெரிக்காவில் உள்ள உழைக்கும் வெள்ளையர் இனத்தவருக்கான பட்டப்பெயர். அதாவது நாம் 'காட்டான்' என்கிறோமே, அது மாதிரியான ஒரு பெயர். கேரளாவில் நம்மை 'பாண்டி' என்கிறார்களே, பம்பாயில் இந்திக்காரர்களை 'பையா' என்கிறார்களே, அந்த மாதிரியும் சொல்லலாம். அதாவது, படிப்பறிவில்லாத, முரட்டு - முட்டாள் என்பது போன்ற எண்ணத்தில் உயர் வர்க்க வெள்ளையர்களால் இழிவாகச் சொல்லப்படும் விளிச்சொல். இவர்கள் எல்லோருமே பெரும்பாலும் ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்து அமெரிக்காவில் மலைவாசிகளாகக் குடியேறியவர்கள். அதுவும் குறிப்பாக அப்பலேசியன் மலைப்பகுதிகளில் குடியேறியவர்கள்.

இந்தச் சூழலில் பிறந்து வளர்ந்த ஒரு சிறுவன், அவனுடைய இளமைக்கால வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகளைச் சந்தித்தான், அவற்றை மீறி எப்படித் தன் வாழ்க்கையில் வெற்றி பெற்றான், அதன் பிறகு அவன் பார்த்த வெளி உலகம் அவனுக்கு என்னென்ன வியப்புகளையும் அதிர்ச்சிகளையும் கொடுத்தது, அந்தச் சமூகமே உலகமெங்கும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களால் தமக்கு உண்டான அழுத்தங்களை எப்படிச் சமாளித்தது - சமாளிக்கப் போராடிக்கொண்டிருக்கிறது என்ற கதைதான் இந்த நூல். நூலின் ஆசிரியர் ஜே டி வான்ஸ் தன்னையும் தன்னைச் சுற்றி நடந்தவற்றையும் தன் தனிப்பட்ட குறிப்புகளாக எழுதியிருப்பதுதான் இந்த நூல். 'நெருக்கடியில் இருக்கும் ஒரு குடும்பம் மற்றும் பண்பாட்டின் பதிவுக்குறிப்புகள்' ('A Memoir of a Family and Culture in Crisis') என்பதுதான் நூலின் தலைப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் துணைத் தலைப்பு.

இது நம்மைப் போன்ற மூன்றாம் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பையும் உண்டாக்கும் நூலாக இருக்க முடியாது எனினும் அமெரிக்கர்களைப் பொருத்தமட்டில் பெரிதும் பேசப்பட்ட ஒரு நூல். உலகமயமாக்கலில் சிக்கிச் சின்னாபின்னப்பட்டு எப்படித் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்ற சூத்திரத்தையே புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் ஓர் உழைக்கும் வர்க்கக் கூட்டத்தின் சோகக்கதைதான் இது. ஆக, உலகமயமாக்கல் என்பது நம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் மட்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே உழைக்கும் வெள்ளைக்கார மக்களிடமும் பெரும் தாக்கத்தையும் உள உளைச்சலையும் ஏறுபடுத்தியிருக்கிறது. அப்படியானால் இதில் யார்தான் பயன் பெற்றார்கள் என்ற கேள்வியும் எழுகிறதுதானே! பயன் பெற்றவர்களிலும் எல்லோரும் இருக்கிறோம். பெருமுதலாளிகள் பயன் பெற்றிருக்கிறார்கள். அவர்களின் வளர்ச்சிக்குத் துணையாக நிற்க முயன்றவர்கள் பயன் பெற்றிருக்கிறோம். இந்த அதிவேக மாற்றத்தில் எவ்வளவோ பேருடைய வேலைவாய்ப்புகள் பறிபோயிருக்கின்றன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. அதில் பெரிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் இவர்களும் ஒரு கூட்டம்.

இந்த நூல் அமெரிக்காவின் அரசியல் மாற்றம் பற்றிப் பேசும் நோக்கத்தில் எழுதப்பட்டது இல்லை என்றாலும், சிறிய அளவில் அதைக் கோடிட்டுக் காட்டுகிறது. அது வெளிவந்த காலம் (2016) அமெரிக்கத் தேர்தல் காலத்தோடு ஒத்துப் போய்விட்டதால் தேர்தலோடும் அதன் முடிவுகளோடும் முடிச்சுப் போடப்பட்டு விரிவாக அலசப்பட்டது. அதற்குக் காரணம், இந்த நூல் எந்த மக்கள் பற்றிப் பேசுகிறதோ அந்த மக்களின் நிலைமாற்றம் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது ("ரஷ்யாவும் புடினும் வகித்த பங்கைவிடப் பெரிய பங்கா?" என்கிறீர்களா?!). அதனாலேயே இந்த நூல் எதிர்பார்த்ததைவிட அதிகமாக விற்பனையானது என்கிறார்கள். சுருக்கமாக, இந்த அரசியல் சார்ந்த பார்வையைப் பற்றிப் பேசிவிட்டு நூலுக்குள் சென்றுவிடுவோம்.

பொதுவாக உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்ற மக்களாட்சிக் கட்சிக்குத்தான் இந்த நூல் பேசும் மக்களின் மத்தியிலும் காலங்காலமாக வரவேற்பு இருந்திருக்கிறது. அது அப்படியே எப்படி இன்று ஆட்சியிலிருக்கும் குடியரசுக் கட்சியின் பக்கம் திரும்பியது என்பது பற்றியும் சுருக்கமாகப் பேசுகிறது நூல். அமெரிக்காவின் உயர் வர்க்கத்தினரால்தான் தாம் நசுக்கப்படுகிறோம் என்ற நம்பிக்கை மாறி, அவர்கள் மீதான கோபம் குறைந்து, 'வேகமாக நிகழ்ந்து வரும் மாற்றங்களுக்கும் அவற்றால் தமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கும் ஒபாமா தலைமையிலான மக்களாட்சிக் கட்சியின் அரசும் அவர்களின் கொள்கையுமே பொறுப்பு, இங்கேயே உற்பத்தி செய்தவற்றையெல்லாம் இறக்குமதி செய்யத் தொடங்கியதும் (மக்கள் உட்பட!), ஒவ்வொரு நாளும் வெளியில் இருந்து வந்து குடியேறிக்கொண்டிருப்பவர்களும் நம் வேலைவாய்ப்பைப் பறிக்கிறார்கள் - அவர்கள்தாம் நம் எதிரிகள்' என்று நம்பத் தொடங்கிய வேளையில் அந்த மாற்றம் எளிதாகிவிட்டது. தம்முடைய இந்தத் துன்பங்கள் அனைத்துக்கும் இதுவரை தம்மை ஆண்ட 'அறிவாளிகள்' (அல்லது அப்படித் தம்மை நம்பவைத்தவர்கள்) எல்லோரும்தான் காரணம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதை நூல் சொல்கிறது. அப்படி நம்பிய வேளையில்தான், பேச்சிலும் நடை உடை பாவனையிலும் அறிவாளி போல இல்லாத - அவர்களைப் போலவே கரடுமுரடாகப் பேசுகிற - முற்றிலும் மாறுபட்ட ஒரு முகம், "உன் வாழ்க்கையைப் பறிக்கிறவர்கள் வண்டி வண்டியாக வந்து இறங்கிக்கொண்டிருக்கிறார்கள், பார். உங்களுக்காக இதையெல்லாம் கேள்வி கேட்க நாதியில்லை, பார். இதோ நான் வந்துவிட்டேன் - உங்களைக் காக்கவும் இதற்கெல்லாம் காரணமானவர்களைத் தூக்கிவீசவும். கவலைப்படாதீர்கள்!" என்று சொல்லிக்கொண்டு வந்து இறங்குகிறது, அப்படித்தான் அமெரிக்காவின் அரசியல் மாற்றம் சாத்தியமாயிற்று என்பதை நாமே புரிந்துகொள்ள வேண்டும்.

வெள்ளையர் எல்லோருமே ஏறி மேய்கிற வேலைகள் மட்டுமே செய்கிறவர்கள் இல்லை; அவர்களுக்குள்ளும் உழைக்கும் வர்க்கம் ஒன்று இருக்கிறது; அவர்கள் வாழ்க்கை முறையும் அடித்தட்டு மக்களுக்கே உரிய அன்றாடப் பிரச்சனைகளைக் கொண்டதுதான் என்ற அறிமுகத்தோடுதான் நூல் தொடங்குகிறது.

நம் பழைய இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பஞ்சம் பிழைக்க அருகிலிருந்த தஞ்சைக்கும் மதுரைக்கும் நெல்லைச் சீமைக்கும் போனவர்கள் போல, கெண்டக்கி மாநிலத்தில் உள்ள அப்பலேசியன் மலைப்பகுதிகளில் வாழ வழியில்லாமல் பஞ்சம் பிழைக்க அருகிலிருக்கும் ஒஹாயோ மாநிலத்துக்குப் போகிறார்கள் ஜேடியின் தாத்தாவும் பாட்டியும். அங்கும் அவர்களின் வாழ்க்கை ஆகா ஓகோவென்று இருக்கவில்லை என்றாலும் பழைய இராமநாதபுரத்து வாழ்க்கை போல் இல்லாமல் ஓரளவு வசதி வாய்ப்புகளோடு வாழ முடிகிறது. ஆனாலும் அவர்களின் மகள் (ஜேடியின் தாய்), தன் 'கூட்டத்துக்கே' உரிய பண்புகளோடே வளர்கிறாள். போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகவும், அடுத்தடுத்துக் கணவர்களை மாற்றிக் கொள்பவராகவும் இருக்கிறாள். அப்படி வருகிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனிதராக இருப்பது ஜேடியை எப்படிப் பாதிக்கிறது என்பதும் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் நாய்களைப் போல அடித்துக் குதறிக்கொள்ளும் தாய்-தந்தைக்கு (!) நடுவில் வாழும் ஒரு சிறுவன், மனதளவில் எவ்வளவு பாதிக்கப்படுகிறான், அது தன்னைப் பின்னாளில் முன்னேறிய சமூகத்தில் ஒருவனாகக் கலக்க முயலும் போது எப்படியெல்லாம் துன்புறுத்துகிறது என்பது பற்றி எழுதியுள்ளத்தைப் படிக்கும் போது இது ஹில்பிலிகளுக்கு மட்டும் புரிபடுகிற கதை என்று சுருக்கிவிட முடியாது என்பது புரிபடுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழ் நாட்டில் இருக்கிற தருமபுரி அல்லது இராமநாதபுரம் மாவட்டத்துக் கிராமம் ஒன்றிலிருந்தோ வட இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் இருந்தோ புறப்பட்டு வெளியேறிப் படித்து முன்னேறிய முதல் தலைமுறை வெற்றியாளன் ஒருவன் பெங்களூரிலோ பம்பாயிலோ வந்து படும் பாட்டுக்கும் இதற்கும் இடையில் எத்தனையோ ஒற்றுமைகள் இருக்கலாம். ஆனால், ஒன்று உறுதியாகப் படுகிறது. பல்வேறு விதமான போதைப் பொருட்களின் வருகையாலோ அல்லது இயல்பாகவே இந்த மனிதர்களுக்குள் இருக்கும் வன்முறையோ என்னவோ இவர்கள் நம்மைவிடப் பல மடங்கு கொடுமையானவர்களாக இருக்கிறார்கள். இதற்கு முன்பு நம்மவர்களின் வன்முறையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

இந்தக் கதையின் முக்கியமான இடங்களில் ஒன்றாக நினைவில் இருப்பது - அப்படி ஒவ்வொரு நாளும் அடித்துக் குதறிக்கொள்ளும் தாய்-தந்தையரின் சண்டையைப் பார்த்துப் பார்த்துக் குலை நடுங்கும் சிறுவன், திடீரென்று ஒரு நாளில் அதை ரசிப்பவனாக மாறுகிறான். அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் பூட்டியிருக்கும் கதவுக்கருகில் போய்க் காதை வைத்து அவர்களின் சண்டையை ரசிக்கத் தொடங்குகிறான். இது, அவர்கள் வளர்ந்த பின்னர் தான் வாழும் சமூகத்திலோ குறைந்த பட்சம் குடும்பத்திலோ அமைதியை அதன் எந்த உருவிலும் விரும்பாத சமூக விரோதிகளாக (அல்லது குடும்ப விரோதிகளாக) உருவெடுக்கும் சிறுவர்களின் உளவியலை அறைந்து சொல்லும் தருணம். ஒரு வகையில் வாசிக்கும் நமக்கு இது ஒரு பெருமூச்சைத் தருகிறது. ஒரு சிறுவனின் வதை இத்தோடு முடிவுக்கு வந்துவிட்டதே என்று. அப்படி முடிகிற கதையும் அல்ல அது. தாயும் தந்தையும் அவர்களுக்குள் சண்டை போட்டு உருளும் போதுதானே அதை ரசிக்க முடியும், குடித்துவிட்டு வந்து தன்னையே வதைக்கும் போது அதை எப்படி ரசிக்க முடியும்! ஒவ்வொரு முறையும் நிலைமை கைமீறிப் போகும் போதும் எல்லாம் முடிந்தபின் அவனுடைய தாய் வந்து மன்னிப்புக் கேட்பாள். அதுதான் கடைசி முறை என்பாள். அவனும் நம்ப முடியாமல் நம்பித் தலையசைப்பான். ஆனால் நாடகங்கள் மட்டும் அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் தொடர்ந்துகொண்டே இருக்கும். போதைக்கு அடிமைப்பட்டவர்களின் வாக்கு அவ்வளவுதான். விடிஞ்சாப் போச்சு!

இத்தனை களேபரத்துக்கும் நடுவில் சிறுவனுக்கென்று இருந்த ஆறுதல் அவனுடைய பாட்டி. அவர் அவனுடைய தாயைப் போலில்லாமல் ஓரளவு நாகரிகமான வாழ்க்கை வாழ்பவராக இருக்கிறார். அதுவே பின்னாளில் ஜேடி அடையும் வெற்றிகளுக்கு முக்கியமான காரணியாகவும் இருக்கிறது. பாட்டியும் அப்படியே இருந்துவிடுகிற அல்லது இப்படியான பாட்டி இல்லாத சிறுவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்! அவர்களைப் பற்றியும் யோசிக்க வைப்பதுதான் இந்த நூலின் வேலை.

இதில் கொடுமை என்னவென்றால், இவள் பெற்ற தாய் அல்ல. வளர்ப்புத் தாய். இப்படியொரு கொடுமையில் வளர்கிற சிறுவன், பின்னாளில் தன் பெற்ற தாய்-தந்தையைப் பார்க்கும் வாய்ப்பையும் பெறுகிறான். அவர்களும் அவர்களின் மற்ற பிள்ளைகளும் குடும்பமும் இவனைப் போல நாடகங்களும் கூப்பாடுகளும் இல்லாமல் வாழ்வதைப் பார்க்கும் போது இவனுக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது. அப்போதும் இங்கிருந்து தப்பி அவர்களோடு போய்க் கலந்து விட வேண்டும் என்று இவனுக்குத் தோன்றவில்லை. என்ன ஆனாலும் தன் தாய், சகோதரி, தாத்தா, பாட்டி எல்லாம் இவ்வளவு காலமும் தன்னோடு வாழ்ந்த இவர்கள்தான் என்றுதான் எண்ணிக்கொள்கிறான். நம்மூரிலும் தத்தெடுப்பது, கொடுப்பது எல்லாம் இருக்கிறது என்றாலும் அது இங்கே வேறு மாதிரியாக இருக்கிறது. நம்மைப் போன்றவர்களுக்கு அதன் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது கடினம்.

சிறுவனாக இருக்கும் போதே மூஞ்சி-மொகரையை உடைத்துக்கொண்டு வரும் அளவுக்கு வன்முறை தனக்குள்ளும் தன்னைச் சுற்றியிருந்த மற்ற சிறுவர்களுக்குள்ளும் எவ்வளவு ஊறியிருந்தது என்பதையும் தொடக்கத்திலேயே சொல்கிறார்.

அது போல, சிறு வயதில் ஒரு முறை தன் தாயுடன் காரில் செல்லும் போது, போதையில் அவர் தாறுமாறாக ஓட்டி இவரைக் கொல்ல முயன்றது பற்றிச் சொல்கிறார். அதிலிருந்து தப்பி, சாலையோரம் இருந்த ஒரு வீட்டுக்குள் தஞ்சம் புகுந்து, அங்கிருந்த ஒருவரின் உதவியோடு காவல் துறையினரிடம் புகார் செய்து, அவர்கள் வந்து இவரை மீட்டு, பின்னர் நீதி மன்றம் சென்ற அனுபவம் புதிதாக இருக்கிறது. அங்கிருக்கிற நாகரிக மனிதர்களும் அவர்கள் பேசும் தொலைக்காட்சி உச்சரிப்பும் இவருக்குப் புதியவையாக இருக்கின்றன. அவர்கள் ஒரு புறம் என்றால், அதே வளாகத்துக்குள் தன் குடும்பத்தைப் போன்றே அழுக்கும் அடாவடியுமாக இருக்கும் பல குடும்பங்கள் இருப்பதையும் காண்கிறார். இவர்கள் ஏன் அவர்கள் போலில்லை அல்லது அவர்கள் ஏன் இவர்கள் போலில்லை என்ற கேள்வி அவரைத் துளைக்கிறது.

பின்னர் இராணுவத்தில் சேர்ந்து இராக்கில் போய்ப் பணி புரிகிறார். நான்கு ஆண்டுகள் கொடுமையான போர்க்கள வாழ்க்கை. அங்கும் நிறையக் கற்றுக்கொள்கிறார்.

இராணுவத்தில் இருந்து திரும்பியபின் தன்னைப் போன்ற ஒருவர் கனவிலும் நினைத்துப் பார்த்திர முடியாத மாதிரி, யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார். இதுதான் அவரை வேறொரு தளத்துக்கு அழைத்துச் செல்லும் மாற்றம். அங்கே தன்னைப் போன்ற ஒருவர் கூட இல்லாததும் அப்படியான தோழர்களுக்கு நடுவில் இருப்பதும் அவருக்குப் புதிய அனுபவமாக இருக்கிறது. பெரிய கடைகளுக்குச் செல்வதும் முதன்முறையாக 'மினுமினுக்கும் நீர்' (sparkling water) குடிக்க நேர்வதும் அவர் புதிதாகச் செல்லும் உணவகங்களில் காக்கப்படும் அமைதியும் அவருக்கு வியப்பாக இருக்கின்றன. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒருவருக்கே இவை அவ்வளவு பெரிய வியப்புகளாக இருக்க முடியும் என்பது நமக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது.

இதற்கிடையில் அங்கே உஷா என்றோர் இந்தியப் பெண்ணைச் சந்திக்கிறார். நூலில் எங்கும் அவரை இந்தியர் என்று அடையாளப்படுத்திச் சொல்லவே இல்லை. இவ்வளவு அறிவான ஒரு பெண்ணா என்று வியக்கவைக்கும் அறிவாளியாக இருக்கிறார் அவர் (இருக்க மாட்டாரா பின்னே! நம் பிள்ளை அல்லவா!). அவர்களுடைய குடும்பத்தில் சென்று பார்த்தால் அவர்கள் இன்னும் நாகரிகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பத்தில் சுத்தமாக எந்த நாடகமும் நாய்ச்சண்டையும் இல்லாமல் அவர்கள் வாழ்வது இவருக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது. யேல் பல்கலைக் கழகத்தில் படித்த வேறு எவராக இருந்தாலும் அவருக்கு இது ஒரு வியப்பாக இருந்திருக்காதுதான். ஆனால் ஜேடிக்கு அப்படி இருக்கக் காரணம், அவருடைய இளமைக் காலம். குடும்பம் என்றாலே அப்படித்தான் தினம் தினம் அடித்துக்கொண்டு சாக வேண்டும் என்று மனதில் பதிந்துவிட்ட பிள்ளை, பாவம். இதில் நமக்கு முக்கியமான கருத்து ஒன்று இருக்கிறது. அமெரிக்க வெள்ளைக்காரர்களைவிடத் தரமான வாழ்க்கை வாழும் இந்தியர்களும் இருக்கிறோம் என்பது அவ்வளவு எளிதான ஒன்றா என்ன!

உஷா மீதான காதல் கூடக் கூட அவளைப் போட்டுக் கொடுமைப்படுத்தும் விலங்காக மாறுகிறார். அவருக்குத் தெரிந்த - அவர் பார்த்த அன்பின் வெளிப்பாடு என்பது அதுதான். தன்னைச் சுற்றியிருப்பவர்களை வதைப்பது. இந்தப் படித்த - வெள்ளைக்கார 'புதிய பாதை' பார்த்திபனை உஷா எப்படியெல்லாம் கையாண்டு வழிக்குக் கொண்டுவருகிறார் - இன்னும் முயன்றுகொண்டிருக்கிறார் என்பதும் சொல்லப்படுகிறது.

அரசுகள் இம்மக்களுக்குச் செய்து கொடுக்கும் வசதிகளையும் கேள்விக்குள்ளாக்குகிறார். எல்லா வசதிகளையும் எல்லோரும் சரியாகப் பயன்படுத்துவதில்லை; இவ்வசதிகளே அவர்களைச் சீரழித்துவிடுகின்றன என்கிற ஒரு வலுவான கருத்தும் வைக்கப்படுகிறது. தம்முடைய அழிவுக்குத் தாமே காரணம் என்கிற தொனியிலும் சொல்கிறார். எதற்கெடுத்தாலும் புறச் சூழலையும் அரசையும் குறை கூறும் மக்களாக இருக்கிறார்கள் என்கிறார். இவையெல்லாம் சர்ச்சைக்குரியவையாக மாறியுள்ளன. வேலைவாய்ப்புகள் குறைந்துகொண்டே செல்வதற்கு எப்படி அவர்களோ அவர்களின் பண்பாடோ காரணமாக முடியும் என்கிற கேள்வியும் வேலைவாய்ப்பை நோக்கி அவர்கள் நகர்ந்திருக்க வேண்டும் என்ற பதிலும் மோதிக்கொள்கின்றன.

ஹில்பிலிகளில் சிலர், "அப்படியே என் வாழ்க்கையைச் சொன்ன மாதிரி இருக்கிறது" என்றும், வேறு சிலர், "இப்படியெல்லாம் நாலு பேர் நம்மைப் பார்த்துச் சிரிக்கிற மாதிரி நம் வாழ்வைக் கொச்சைப்படுத்திவிட்டாரே" என்றும் நூலைப் பற்றி இரு வேறு கருத்துக்களும் வந்துள்ளன.

எல்லா ஊரிலும் அதற்கான ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. தம்மில் ஒரு கூட்டம் கொடுமையான வாழ்க்கை வாழ்வது பற்றி ஒரு துளி கூட வருந்த மாட்டேன், ஆனால் அவர்கள் தன் வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லிவிட்டால், அதனால் ஏற்படும் அவமானம் எனக்குப் பெரிய வலியைக் கொடுக்கிறது என்பது எவ்வளவு கேடு கேட்ட சிந்தனை!

இந்த நூலில் ஒளிந்திருக்கும் அரசியல் முடிவுரைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, இப்படியான வாழ்க்கைகள் ஆவணப்படுத்தப்படும் போது அதனால் ஏற்படும் நுண்-பயன்கள் எவை என்று பார்த்தால் அவை இவ்விரண்டுந்தான்:
1. ஒரு வட்டத்துக்குள் அல்லது சுழலுக்குள் சிக்கி, கொடிய வாழ்க்கையை வாழ்கிற மனிதர்கள், அவர்களுக்கு வெளியே இருக்கும் அற்புதமான உலகம் பற்றிச் சொல்லப்படும் போதெல்லாம், "இதெல்லாம் நடக்கிற காரியமாப்பா!" என்று, அது ஏதோ கட்டுக்கதை போல எண்ணிக் கடந்துவிடுவார்கள். அதையே அவர்களில் ஒருவர் வந்து வெளியேறிப் பார்த்து - தானும் வாழ்ந்து பார்த்துவிட்டுப் போய்ச் சொல்லும் போது, தாமும் தம் பிள்ளைகளும் கூட அப்படி வாழ்ந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் வரும். இப்படியான சமூக மாற்றந்தான் நம்மூரிலும் நடந்திருக்கிறது - வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.
2. இப்படியான வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது எனும் அறிமுகமே இல்லாதவர்கள், இந்த உலகங்களில் இருந்து வருபவர்களைப் பார்க்கும் போது, அவர்களை வெறுத்து ஒதுக்காமல், நிராகரிக்காமல், அவர்கள் மீது தம் அன்பைச் செலுத்தி, அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதில் தமக்கும் பங்கிருக்கிறது என்று உணர்ந்து செயல்படுவார்கள். எல்லோரும் ஒரே நாளில் அப்படி ஆகிவிடப் போவதில்லை. அதற்கான தொடக்கத்தை இது போன்ற நூல்கள் ஏற்படுத்தும்.

நிறைவாக, ஒரு கொசுறுச் செய்தி - எல்லாப் புகழ்பெற்ற நூல்களையும் போலவே இந்த நூலும் திரைப்படமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அம்புட்டுத்தேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்