முடிவிலா உருள் (Infinite Scroll)

‘முடிவிலா உருள்’ (Infinite Scroll) கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


ஆம்?


இல்லை?


அது என்ன தெரியுமா?


உங்களுக்குத் தெரியும். ஒன்று உங்களுக்கு அதைப் பற்றி நன்றாகத் தெரியும், அல்லது அது என்னவென்று தெரியும், ஆனால் அதைப் பற்றி ஒருபோதும் உணர்ந்திருக்க மாட்டீர்கள் அல்லது அதன் மீது கவனம் செலுத்தியிருக்க மாட்டீர்கள்.


ஆம். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற உங்களுக்குப் பிடித்த அனைத்துச் சமூக ஊடகத் தளங்களிலும் உங்களை முடிவில்லாமல் உருட்டிக்கொண்டே இருக்க வைப்பது எது தெரியுமா? அது ஒரு பெரும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு. வலைப்பக்கங்கள் உருவாக்கும் மென்பொருள் பொறியாளர்கள் பயன்படுத்தும் ஒரு வடிவமைப்பு நுட்பம் (design technique). 


நீங்கள் சமூக ஊடகங்களுக்கு முந்தைய காலத்தில் இணையத்தைப் பயன்படுத்தியவர் என்றால், அந்த நாட்களில் வலைத்தளங்கள் எப்படி இருந்தன என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள், அந்த வேறுபாடு உங்களுக்கே புரியும். அப்போது இணையத்தில் வலைத்தளங்கள் இருந்தன, அத்தகைய ஒவ்வொரு தளத்திற்குள்ளும் வலைப்பக்கங்கள் இருந்தன. முதல் பக்கத்தில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க, பக்கத்தின் கீழே உள்ள 'அடுத்து' என்னும் இணைப்பைச் சொடுக்குவீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளடக்கம் அதிகமாக இருந்தால், முழுப் பக்கத்தையும் படித்துவிட்டு அப்படியே அடுத்ததைச் சொடுக்கி அடுத்ததைச் சொடுக்கிப் போனால், கூடிய விரைவில் சோர்ந்து போய்விடுவீர்கள். வெறும் படங்களாகவோ சிறிது லேசான உள்ளடக்கமாகவோ இருந்தால் அல்லது வேகவேகமாக நுனிப்புல் மேய்ந்து சென்றால், இன்னும் கொஞ்சம் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் அளவுக்குத் தெம்பு இருக்கும். அதிலும் கூட அடுத்தடுத்து ‘அடுத்து’ பொத்தானைச் சொடுக்குவதிலேயே சற்று சோர்ந்து போவீர்கள். அதை அப்படியே இன்றுள்ள நிலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எத்தனை முறை ‘அடுத்து’ பொத்தானைத் தட்ட வேண்டியுள்ளது? நீங்கள் பயன்படுத்தும் தளங்களில் ‘அடுத்து’ என்னும் பொத்தானே இருப்பதில்லை. இல்லையா? ஆயிரக்கணக்கான கதைகள், படங்கள், பொருட்களைப் பார்த்துக்கொண்டே, விரல்களால் உருட்டிக்கொண்டே இருக்கிறீர்கள். பதிவுகளும் படங்களும் முடிவில்லாமல் வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும் சோர்வே அடைவதில்லை. இல்லையா?


அப்படியே நேரடியாக இதுவும் அதுவும் ஒன்றென ஒப்பிட முடியாது. ஆனாலும் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோமே. இதை அப்படியே தொலைக்காட்சியின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். ஒரு காலத்தில் ஒவ்வொரு முறையும் அலைத்தடத்தை (சேனல்) மாற்றுவதற்கு நீங்கள் எழுந்து தொலைக்காட்சியை நோக்கி நடந்து செல்ல வேண்டியிருந்தது அல்லவா? அதனாலேயே நீங்கள் அலைத்தடங்களை அதிகமாக மாற்றவும் இல்லை. அதனால் மொத்தத்தில் அலைத்தடங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. பின்னர் தொலைவியக்கி (ரிமோட் கண்ட்ரோல்) வந்ததும் அலைத்தடங்களை மாற்றுவது மிகவும் எளிதானது. இப்போதுதான் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குள் சிறைப்பட்ட ஒரு பெரும் கூட்டம் உருவானது. அலைத்தடங்களை மாற்றுவதற்கு, தொலைவியக்கியைக் கூடத் தேட வேண்டியதிராத - அதிலிருக்கும் பொத்தான்களை அழுத்த வேண்டியிராத - இதைவிட வசதியான இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஒன்று வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதுதான் இப்போது இணைய உலகில் நடந்துள்ளது. முடிவிலா உருள் என்னும் வடிவில். அதன் புண்ணியத்தில்தான் நாமெல்லாம் மீளவே முடியாத புதைகுழியில் விழுந்தது போல மாட்டிக்கொண்டுவிட்டோம்.


இது எப்போது தொடங்கியது தெரியுமா?


நீண்ட காலமெல்லாம் இல்லை. அசா ரஸ்கின் என்ற ஒருவர் 2006-ஆம் ஆண்டுதான் இந்த வலைத்தள வடிவமைப்பு முறையைக் கண்டுபிடித்தார். ஆம், சரியாகத்தான் வாசிக்கிறீர்கள். 2006-க்கு முன் இணையத்தில் முடிவிலா உருள் என்ற இந்த நுட்பம் இருக்கவே இல்லை.


அதைவிட முக்கியமாக, அசா ரஸ்கின் தனது கண்டுபிடிப்பைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?


“என்னுடைய இந்தக் கண்டுபிடிப்பு ஒரு நாளைக்கு சுமார் 2,00,000 மனித ஆயுட்காலங்களை வீணடிக்கக்கூடியது”. ஆம், திரும்பவும் படியுங்கள். 2,00,000 (இரண்டு இலட்சம்) ஆயுட்காலங்கள். மணிகள் அல்ல. நிமிடங்கள் அல்ல. 2,00,000 ஆயுட்காலங்கள் - அதுவும் ஒரு நாளில்.


முடிவிலா உருள் எனும் இந்தக் கண்டுபிடிப்பு, கணினிகளில் மட்டும் என்று இருந்திருந்தால் அது வேறு கதையாக இருந்திருக்கும். சொடுக்கி (மவுஸ்) அல்லது தொடுதளத்தைப் (டச்பேடு) பயன்படுத்தி உருட்டிக்கொண்டே இருப்பதில் கூட  நீங்கள் சோர்வடையத்தான் செய்வீர்கள். ஆனால் உங்கள் பெருவிரல் சாதாரணப்பட்டதில்லை. பேனா வாளை விட வலிமையானது என்று சொல்லிக்கொண்டு திரிந்தார்கள். இப்போது உங்கள் பெருவிரல் அவை எல்லாவற்றையும்விட வலிமையானது என்கிறார்கள். சிலருடைய - எல்லோருடையவும் அல்ல - விரல்கள்தாம் அவ்வளவு வலிமையுடையனவாக இருக்கின்றன. மற்றவர்கள் அவர்களின் வலிமைமிக்க படைப்புகளுக்கு அடிமைகளாகத்தான் இருக்கிறோம். வலிமைமிக்க படைப்புகளுக்கு அடிமைகளாக இருந்தால் கூடப் பரவாயில்லை. எந்தப் பயனுமில்லாமல் வந்து குவியும் குப்பைகளுக்கு அடிமைகளாக இருப்பவர்கள்தாம் பெரும்பான்மையாக இருக்கிறோம். குப்பைகளை உருவாக்கிக் கொட்டுபவர்கள்தாம் வலிமையான விரல்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.


இந்தக் கண்டுபிடிப்பு 2006-இல் நிகழ்கிறது. உடனடியாக இணையம் பயன்படுத்தும் எல்லோரையும் ஆட்கொள்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பின், இந்தச் சுழலில் சிக்கிக்கொண்டு சீரழியும் பேரழிவாளர்களுக்கு மெக்காஃபி (McAfee) நிறுவனம் புதியதொரு பெயரிடுகிறது. நடைபிண உருட்டிகள் (zombie scrollers). ஏன் செய்கிறோம் எதற்காகச் செய்கிறோம் என்று தெரியாமலே முடிவில்லாமல் உணர்வில்லாமல் உங்கள் விரல்களை உருட்டத் தொடங்கும் வேளையில் நீங்களும் நடைபிண உருட்டி ஆகிவிடுகிறீர்கள்.


நீங்கள் நடைபிண உருட்டியா?


ஆம்?


இல்லை?


நிச்சயமாக?


உறுதியாகத் தெரியவில்லையா?


“நான் ஒரு நடைபிண உருட்டியாகவே இருந்தாலும், அதில் என்ன தவறு? அதனால் சமுதாயத்திற்கு என்ன கேடு செய்துவிட்டேன்?”


பொதுவாகவே, தகவல் புரட்சிக்குப் (information revolution) பிந்தைய இக்காலத்தில் தகவல் மீச்சுமை (information overload) என்பது மனிதகுலத்துக்கே ஒரு பெரும் சாபக்கேடாக உள்ளது. இந்தக் கேடு, முடிவிலா உருள் மூலம் மேலும் பெருக்கப்பட்டுள்ளது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருத்தரை ஒரு செம்புத் தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றிவிடலாம் என்கிற சூழலில், கடலளவு உப்பு நீரைக் காட்டிக் குழப்பும் வேலையைத்தான் தகவல் மீச்சுமை செய்கிறது.


“எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் எக்கச்சக்கமாகப் படிப்பார். அதுவும் தகவல் மீச்சுமைதானே? அப்படியெல்லாம் மிதமிஞ்சிப் படிக்கும் போது அவருக்கும் தகவல் மீச்சுமையால் ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படுந்தானே?”


அவர் நிறையப் படிக்கும்போது நிறையக் கற்றுக்கொள்கிறார். அதுவே தகவல் மீச்சுமை ஆகுமா என்றால், இல்லை.


எப்படி?


கிட்டத்தட்ட ஆரோக்கியமான உணவை நிறைய உண்பதற்கும் நொறுக்குத் தீனிகளை நிறைய உண்பதற்குமான வேறுபாடு போலத்தான் இது. ஒருவர் நிறையப் படிக்கும்போது, ​​பெரும்பாலான நேரங்களில் அவர் என்ன படிக்கிறார் என்பதை அறிந்திருக்கிறார், அவர் அதை ஒரு நோக்கத்துடன் செய்கிறார். அந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட துறை தொடர்பாக ஓர் ஒழுங்கோடு அறிவை உட்கொள்கிறார். அதே வேளையில், நாம் ஒரு சமூக ஊடகத் தளத்தில் முடிவில்லாமல் உருட்டும் போது, நம் மூளையின் அனுமதியின்றியே அக்கு அக்காகத் தொடர்பில்லாத தேவையில்லாத தகவல்களை ஓர் இயந்திரத்தைப் போலச் சேகரிக்கிறோம். நம்மிடம் அளவில்லாத தகவல்கள் உள்ளன. ஆனால் அவை கந்தல் கந்தலாக இரைந்து கிடக்கின்றன. அவை அனைத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றும் நமக்குத் தெரிந்து தொலைய மாட்டேன் என்கிறது. அது மட்டுமில்லை. அவற்றை எதற்கேனும் பயன்படும் வகையில் ஒழுங்காக அடுக்கி வைக்கவும் கூட நமக்கு நேரம் இல்லை. உருட்டுவதில் அவ்வளவு மும்முரமாக இருக்கிறோம்.


ஓர் ஆர்வமுள்ள வாசகர் அவர் விரும்புவதைச் சேகரிக்கிறார். தங்கத்தைத் தேடினால் தங்கம் சேகரிக்கிறார், கற்களைத் தேடினால் கற்கள் சேர்க்கிறார், குப்பையைத் தேடினால் குப்பைகளை அடைகிறார். ஆனால் சமூக ஊடகங்களில் முடிவில்லாமல் உருட்டும் நாம் என்ன செய்கிறோம் பாருங்கள். நமக்கு என்ன வேண்டும் என்று தெரியவில்லை. தங்கம், கல், குப்பை என்று கைக்குக் கிடைப்பதை எல்லாம் அள்ளிக்கொள்கிறோம். அவற்றோடு சேர்த்து நமக்குத் தேவையே இல்லாத என்னென்னவோவும் வந்து சேர்ந்துவிடுகிறது. இவற்றை வைத்து என்ன செய்யப்போகிறோம்? நம்மிடம் இருக்கும் இடத்தையெல்லாம் தேவையானவற்றோடு சேர்த்து தேவையில்லாதவற்றையும் இரண்டறக் கலந்து அடைத்து வைத்து வீணாக்கியிருக்கிறோம். அதுதான் வேறுபாடு.


தகவல் மீச்சுமை மனித மூளைக்கு என்ன கேடு செய்கிறது? அமிர்தம் எப்படி நஞ்சாகிறது?


கணினியில் இருப்பதைப் போலவே, மனித மூளைக்கும் தற்காலிக நினைவகம் (working memory) ஒன்று உள்ளது. இது தகவல்களைப் பயன்படுத்தி ஏதேனும் சமைத்துக்கொண்டே இருக்கும் இடம். அதைத் தரவுகளால் நிறைக்கும் போது, அதன் ​​செயலாக்கத்திறன் படுத்துவிடும். சமையல் அறையில் எல்லாச் சாமான்களையும் கொட்டினால் அது சரக்கு அறை ஆகிவிடும். அப்புறம் சமையல் எப்படிச் செய்வது? இன்னும் துல்லியமாகச் சொல்வதாக இருந்தால், அஞ்சறைப்பெட்டியில் எல்லாவற்றையும் போட்டு அதைக் குப்பைத்தொட்டி ஆக்கினால் எப்படி இருக்கும்? அப்படி ஆகிவிடுகிறது.


தகவல் மீச்சுமை நம் முடிவெடுக்கும் திறனை நம்மிடம் இருந்து பறித்து  முடக்குகிறது. முடிவெடுக்க உதவும் ‘தகவலை’ விடக் குழப்பத்தைக் கூட்டும்  ‘தரவு’களைக் கண்ணில் காட்டி நம்மைக் குருடாக்கி முடிவெடுக்க விடாமல் செய்கிறது அல்லது எடுக்கும் முடிவு சரியானதாக இல்லாமல் செய்துவிடுகிறது. இதனால் தனிமனிதர்கள் குழப்பம், விரக்தி, மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். சமூகங்கள், தகவற்கொழுமை (infobesity), தகவற்பித்தம் (infoxication), தகவலுளைச்சல் (information anxiety) போன்ற சொல்லாடல்களை உருவாக்குகின்றன. தொலைநோக்கில் பார்த்தால், இது ‘தரத்தை’ (quality) விட ‘அளவு’க்கு (quantity) முக்கியத்துவம் கொடுக்கும் பண்பாட்டை நோக்கி மனிதர்களை நகர்த்துகிறது. மனித மூளையை மாற்றியமைக்கிறது. பயனற்ற குப்பைத் ‘தரவு’களுடன் வருபவர்கள், பொன்னான ‘தகவல்’களைக் கொண்டு வருபவரைவிட அதிகம் போற்றப்படுவார்கள். ஆம், இது எதில் போய் முடியும் என்று உணராமலேயே, தகவலைக் காட்டிலும் தரவை அதிகம் மதித்து, மனித இனத்தைப் பின்னோக்கி இட்டுச்செல்லும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம். .


தகவல் மீச்சுமை மட்டுமல்ல. முடிவிலா உருள் என்னும் இந்த நுட்பம் இன்னும் பல பிரச்சனைகளையும் இறக்கிவிட்டுள்ளது. முடிவிலா உருள் என்பது ஒரே நேரத்தில் பல்பணிசெய்தல் (multitasking) போன்றது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு என்று தொடர்பில்லாத இடம் - பொருளுக்குச் சூழல் மாற்றம் (context switching) செய்துகொண்டே இருப்பது. எழுத்திலிருந்து ஒலிக்கு, ஒலியிலிருந்து காணொளிக்கு, காணொளியிலிருந்து படங்களுக்கு என்று நொடிக்கு நொடிக்கு மாறிக்கொண்டே இருக்கச் செய்வது. அழுகையையும் அச்சத்தையும் சிரிப்பையும் சினத்தையும் அடுத்தடுத்த நொடிகளில் வரவைப்பது. ஓடுபொறியில் (treadmill) ஓடிக்கொண்டே, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே, இசை கேட்டுக்கொண்டே, புத்தகம் படித்தால் எப்படி இருக்கும்! அப்படியான வேலை. ஒரே நேரத்தில் பல்பணிசெய்தல் உற்பத்தித்திறனைக் கொல்லும் உத்தி என்று ஏற்கனவே பல ஆய்வாளர்கள் நிறுவிவிட்டார்கள். அப்படியானால், முடிவிலா உருளும் அதையேதானே செய்யும்! அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. எதிலும் ஆழ்ந்த அறிவில்லாமல், எந்த வேலையைச் செய்வதிலும் ஆர்வமில்லாமல் - ஆற்றல் இல்லாமல் ஆக்கிவிடுகிறது. அடுத்தடுத்த தலைமுறைகள் இதன் பாதிப்பை உணரும் போது அது சரி செய்ய முடியாத அளவுக்கு மிகத் தாமதமாகி இருக்கும்.


முடிவிலா உருள் நமக்கு வழங்கிக்கொண்டே இருப்பவற்றை உட்கொள்வதில் நாம் மும்முரமாக இருக்கும் வேளையில், அது நம்மை உட்கொண்டுவிடுகிறது. நமது முக்கியமான பணிகளிலிருந்தும் தூக்கத்திலிருந்தும் நம்மை விலக்கி வைத்துவிடுகிறது. மீண்டும் மீண்டும் எதிர்மறையான கருத்துகளைக் காட்டி நம்மை எதிர்மறையான மனிதர்களாக ஆக்கிவிடுகிறது. இதற்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். கேடுருள் (doomscrolling). கெட்ட செய்திகளைத் தேடி தேடி உருட்டிக்கொண்டிருப்பது. இதற்குச் சமீபத்திய உதாரணங்களில் ஒன்று கோவிட்-19 செய்திகள். உண்மையான பெருந்தொற்று ஒரு பக்கம் உலகைத் தாக்கிக்கொண்டிருந்த அதே வேளையில், கேடுருள் அதைவிடப் பெருந்தொற்றாக இறங்கி ஆடிக்கொண்டிருந்தது. எவ்வளவு கெட்ட செய்தியாக இருந்தாலும் அதைக் கேட்டுக்கொண்டு அதற்கடுத்த அதைவிடப் பெரிய கெட்ட செய்தியை எதிர்பார்த்து உருட்டிக்கொண்டே போவது. உளவியல் உலகில், அதிகரித்துவரும் மன அழுத்தம், பதட்டம், தற்கொலை உட்பட்ட அனைத்துவிதமான தற்கொடுமை நடத்தைகளுக்கும் முடிவிலா உருளுக்கும் இருக்கும் தொடர்பை உறுதிப்படுத்தும் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. எந்நேரமும் கெட்ட செய்தி தேடி உருட்டுவதால் மட்டுமல்ல அதன் பெயர் கேடுருள். உருட்டியே கெட்டழிவோம் என்பதற்காகவுந்தான் அப்பெயர்.


இது எப்படி நடக்கிறது?


இவை அனைத்துக்கும் டோபமைன் (dopamine) என்ற ஹார்மோன் காரணமாக இருக்கிறது. இன்பத்தை அனுபவிக்கும் போது டோபமைன் அளவு அதிகமாகவும், இன்பம் குறைவாக இருப்பதாக உணரும்போது குறைவாகவும் இருக்கும். நாம் முடிவிலா உருளில் இறங்கியதும், நமக்கு மகிழ்ச்சி தரும் பதிவுகளைப் பார்க்கும் போது டோபமைன் அளவு எகிறுகிறது. மேலும் மேலும் அது போலப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். கிடைக்கும் என்றும் நம்புகிறோம். ஆனால், ஒவ்வொரு பதிவும் நாம் விரும்புவது போல் மகிழ்ச்சியைத் தருவதில்லை. அது சாத்தியமும் இல்லை. நம் உருட்டு நம்பிக்கையோடு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. உருட்டுவதுதான் இப்போது சிரமமாகவும் இல்லையே! மனம் மேலும் மேலும் மேலும் எதிர்பார்க்கிறது. உருட்டுவதை நிறுத்தியவுடன் டோபமைன் அளவு குறைகிறது. மீண்டும் கைபேசியைக் கையில் எடுக்கிறோம். இந்த வட்டம் அப்படியே தொடர்கிறது. இது டோபமைன் கண்ணி (டோபமைன் லூப்) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கண்ணியை உடைக்க நாம் முழு உள்ளத்தெளிவோடு ஏதாவது செய்ய வேண்டும். அப்படி எளிதாக உடைத்துவிட முடியாத மாதிரியான வடிவமைப்பே முடிவிலா உருள்.


சரி, இவ்வளவு மோசமான இந்த வடிவமைப்பு நுட்பத்தை ஏன் சமூக ஊடக நிறுவனங்கள் பின்பற்றுகின்றன? விடை மிக எளியது. இது நமக்குத்தான் மோசமானது. அந்த நிறுவனங்களுக்கு அல்ல. அவர்களின் ஒரே குறிக்கோள், அவர்களின் தளத்தில் நம் செயல்பாட்டை அதிகரிப்பது, அப்படி நாம் அங்கேயே கிடந்து மாரடிக்கும் போது, அவர்களின் சில விளம்பரங்களைச் சொடுக்குவோம். அதன்  மூலம் அவர்கள் உங்களிடம் ஏதாவது விற்றுவிடுவார்கள். அதுதான் அவர்களின் வெற்றி.


“நான் அப்படி எதையும் வாங்குவதில்லை. இணையத்தை என் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்துகிறேன்” என்பீர்கள்.


மகிழ்ச்சி. அப்படியானால் உங்களைத் தங்கள் தளத்தில் செயல்பட வைப்பதன் மூலம் அந்த நிறுவனம் எதையும் பெறவில்லை, ஆனால் அவர்களின் பதிவுகளைப்  பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் மட்டும் நிறையப் பயன் பெறுகிறீர்கள். அதானே?


நீங்கள் ஒன்றுமே வாங்க வேண்டாம். அவர்களின் தளத்தில் உள்ள விளம்பரங்களைப் பார்த்தாலே போதும், விளம்பரங்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை வைத்தும் அவர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. அது மட்டுமில்லை. நம்மைப் போன்றவர்களின் இந்தச் செயல்பாட்டுப் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி அவர்கள் அதிகமான விளம்பரதாரர்களைத் தங்கள் தளத்தை நோக்கி ஈர்ப்பார்கள். 


அது மட்டுமில்லை. இப்படியும் இருக்கலாம். நீங்கள் என்னவெல்லாம் வாங்குகிறீர்கள் என்பதைக் கூட உணராமல் வாங்கிக் குவித்துக்கொண்டு இருப்பவராகவும் இருக்கலாம். 


அப்போதே வாங்க வைத்துவிட வேண்டும் என்பது மட்டும் அவர்களின் நோக்கம் இல்லை. என்றோ ஒரு நாள் வாங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு உங்கள் மனக்கூடையில் எடுத்துப் போட வைத்துவிட்டால் கூட அது அவர்களுக்கு வெற்றிதான். இன்று எதையும் வாங்கவில்லை என்றால், ஒருபோதும் வாங்க மாட்டீர்கள் என்று பொருள் இல்லையே! நம்மை முடிவில்லாமல் உருட்டிக்கொண்டே இருக்கவைப்பதன் மூலம், இன்றைக்கு வாங்குபவர்களை அடையாளம் கொள்ளவும் செய்கிறார்கள். நம்மை நாளைக்கு வாங்குபவராக மாற்றுவதற்கான விதையையும் விதைக்கிறார்கள்.


இதற்கெல்லாம் முடிவுதான் என்ன?


நிறுவனங்கள், ‘பெருநிறுவனச் சமூகப் பொறுப்பு’ (Corporate Social Responsibility) பற்றிப் பெரிது பெரிதாகப் பேசுகின்றன. இந்தச் சமூக ஊடக நிறுவனங்கள் தங்களின் பெருநிறுவனச் சமூகப் பொறுப்பாக எதைக் கூறுகின்றன? தம் பல்லாயிரங்கோடி இலாபத்தில் ஒரு சிறு துளியை சில தொண்டுப் பணிகளுக்காகப் பகிர்ந்துகொள்வதையா? அது போதாது. அதைவிடப் பல மடங்கு பொறுப்பாகச் செயல்பட முடியும். முடிவிலா உருளுக்குப் பதிலாக அதற்கு முந்தைய தொழில்நுட்பமான பக்கப்படுத்தல் (pagination) என்ற வடிவமைப்பு முறையைப் பயன்படுத்தினால், பல்லாயிரங்கோடி மனித மூளை விரயமாவது தடுக்கப்படும். அதெல்லாம் ஆகும் வேலையா என்றால், இரண்டுக்கும் நடுவில் ஓர் ஊடுபாதையும் இருக்கிறது. முடிவிலா உருளிலேயே ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு முறை, “ஏய், பிழைப்பற்றவனே! உன் வாழ்வின் மதிப்பு மிக்க இன்னும் 15 நிமிடங்களை வீணாக்கிவிட்டாய்!” என்று நினைவூட்டலாம். 


“அதில் அவர்களுக்கு என்ன இலாபம்?” என்பீர்கள்.


சரிதான். அதெல்லாம் செய்தால்தான் அதற்குப் பெயர் பெருநிறுவனச் சமூகப் பொறுப்பு. சிகரெட் பெட்டிகளிலும் மதுப் புட்டிகளிலும் போட முடிகிறதே! அதைவிடப் பல மடங்கு கொடூரமான இந்தப் போதைக்கும் அதைச் செய்ய முடியாதா என்ன? 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி