ரிச்சர்ட் டாக்கின்ஸ் - நேர்காணல்

 https://www.pbs.org/faithandreason/transcript/dawk-body.html

ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவியல் பொதுப் புரிதல் (Public Understanding of Science ) பேராசிரியராக உள்ளார். சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களான "The Selfish Gene" (சுயநல மரபணு), "The Blind Watchmaker" (குருட்டுக் கடிகாரஞ்செய்பவர்), "Climbing Mount Improbable" (சாத்தியமின்மை மலை ஏறுதல்) உட்படப் பல புத்தகங்களை எழுதியவர்.


கேள்வி: பேராசிரியர் டாக்கின்ஸ் அவர்களே, மனிதர்கள் வெறும் "மரபணு இயந்திரங்கள்" (Gene Machines) என்ற உங்கள் நம்பிக்கையை விளக்க முடியுமா?


திரு. டாக்கின்ஸ்: மனிதர்கள் வெறும் மரபணு இயந்திரங்கள் என்று நான் கூறும்போது, ​​"வெறும்" (just) என்ற சொல்லுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. ஒரு மரபணு இயந்திரமாக இருப்பதில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது, உண்மையில் மரபணு இயந்திரமாக இருப்பது ஓர் அழகு. அதன் பொருள் என்னவென்றால், இயற்கைத் தேர்வு, டார்வினிய இயற்கைத் தேர்வு, அனைத்து உயிரினங்களையும் அவை இன்றிருக்கும் நிலைக்குக் கொண்டு வந்த வழிமுறையான இயற்கைத் தேர்வு, மரபணுவின் மட்டத்தில் காணப்படும் போதுதான் சிறப்பாகக் காணப்படுகிறது, மரபணுக்களிடையேயான வகையீட்டு உய்வு வழிமுறையாகச் (differential survival process) சிறப்பாகக் காணப்படுகிறது, அதனால்தான் உயிரினங்களும் அவற்றின் உடல்களும் மரபணுக்களைப் பரப்புவதற்காக அதே மரபணுக்களால் நிரலமைக்கப்பட்ட இயந்திரங்களாகக் காணப்பட வேண்டும். அந்த வகையில்தான் நாம் மரபணு இயந்திரங்கள் ஆகிறோம். ஆனால், அதை ஒருபோதும் கொச்சைப்படுத்துவதாகவோ சிறுமைப்படுத்துவதாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது.

கேள்வி: இப்போது, ​​நாம் மரபணு இயந்திரங்கள் என்றால், நம் நடத்தையும் மரபணுக்களால் நிரலமைக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம் -- அப்படித்தானே நீங்கள் வாதிடுகிறீர்கள். ஆனால், தன்னிச்சை (free will) என்று ஒன்று இருக்கிறது, அதுதான் நாம் எதைச் செய்ய வேண்டும் அல்லது கூடாது எனும் தெரிவை நமக்கு அளிக்கிறது, அந்தத் தன்னிச்சைதான் நாம் உயிரியலையும் மீறிச் செல்ல அனுமதிக்கிறது என்பார்கள் கிறிஸ்தவர்கள். ஓர் அறிவியலாளராக இதற்கு உங்கள் பதில் என்ன?

திரு. டாக்கின்ஸ்: தன்னிச்சையை வைத்து உயிரியலை மீறிச் செல்லலாம் என்ற கருத்தில் எனக்கு மிகவும் வசதிதான். உண்மையில், அதைச் செய்யுங்கள் என்றுதான் நான் எப்போதும் மக்களை ஊக்குவிக்கிறேன். என்னுடைய முதல் புத்தகமான "The Selfish Gene" (சுயநல மரபணு) சொல்லும் செய்தியின் பெரும்பகுதி இதுதான், மரபணு இயந்திரமாக இருப்பதென்றால் என்ன, மரபணுக்களால் நிரல்படுத்தப்படுவதென்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும், அதன் மூலம் இன்னும் கூடுதலாக எதிலிருந்தும் தப்பிக்கத் தயாரானவர்களாக இருப்போம், நம் பெரும் மூளைகளைப் பயன்படுத்தவும், நமது மனச்சாட்சி நுண்ணறிவைப் (conscience intelligence) பயன்படுத்தவும், சுயநல மரபணுக்களின் கட்டளைகளிலிருந்து விலகி, நமக்கான ஒரு புதிய வகையான வாழ்க்கையை உருவாக்கவும் சிறப்பாக ஆயத்தமாக இருப்போம் என்பதே. என்னைப் பொறுத்தமட்டில் அந்த வாழ்க்கை எவ்வளவு அல்-டார்வினியமாக (un-Darwinian) இருக்கிறதோ அவ்வளவு நல்லது என்பேன். ஏனென்றால் நம் முன்னோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட டார்வினிய உலகம் மிகவும் விரும்பத்தகாத உலகம். இயற்கை என்பது உண்மையில் பல்லும் நகமும் சிவந்தது. நம்  சமூகத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை வாதிடுவதற்கும், விவாதித்து முடிவு செய்வதற்கும் நாம் ஒன்று கூடி உட்காரும் போது, நாம் நம் சமூகங்களை எப்படி ஒழுங்கமைக்கக் கூடாது என்பதற்கான ஒரு மோசமான எச்சரிக்கையாகவே டார்வினியம் இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

கேள்வி: அப்படியானால் நம் மரபணு நிரலாக்கம் (genetic programming) என்பது முழுமையாக முன்வரையறுக்கப்பட்டது (deterministic) என்று நீங்கள் கூறவில்லையா?

திரு. டாக்கின்ஸ்: நம் வாழ்க்கைகளின் மரபணு நிரலாக்கம், முழுமையாக முன்வரையறுக்கப்பட்டது அல்ல என்பதை நாம் உணர வேண்டியது ஒரு முக்கியமான கூறு. இது புள்ளிவிவரமானது (statistical) -- எந்த விலங்கில் எடுத்துக்கொண்டாலும் இது வெறும் புள்ளிவிவரமானதுதான் -- முன்வரையறுக்கப்பட்டது அல்ல. நீங்கள் ஏதோ ஒரு வகையில் முன்வரையறையியலாளராக (determinist) இருந்தால் கூட -- தத்துவ ரீதியாகப் பேசும் போது நம்மில் பலர் அப்படியே இருக்கலாம் -- அதற்காக நாம் முன்வரையறையியலாளர் போலவே நடந்து கொள்ள வேண்டும் என்றில்லை. ஏனென்றால் நாம் முன்வரையறுக்கப்படாதவர் போல் நடந்து கொள்ளுமளவுக்கு, நாம் முன்வரையறுக்கப்படாதவர் போல் உணர்கிற அளவுக்கு, இந்த உலகம் மிகவும் சிக்கலானது, குறிப்பாக மனித மூளைகள் மிகவும் சிக்கலானவை -- அவ்வளவுதான் முக்கியம். எப்படி இருந்தாலும், "மரபணு" என்ற சொல்லை முன்வரையறுக்கப்பட்டதோடு சேர்ப்பதால் மட்டும் அதை மேலும் முன்வரையறுக்கப்பட்டதாக மாற்றாது. நீங்கள் ஒரு தத்துவ முன்வரையறையியலாளர் என்றால், "மரபணு" என்ற ஒரு சொல்லைச் சேர்ப்பது அதன் தாக்கத்தை அதிகரிக்காது.

கேள்வி: நீங்கள் கூறியது போல், நம் மரபணுக்களில் நாம் சுயநலமாக இருக்க வேண்டும் என்ற போக்கு இருந்தால், இந்த உள்ளார்ந்த சுயநலத்தை மீறுவதற்கு நம்மை ஊக்குவிக்க மதம் போன்ற நிறுவனங்கள் தேவை என்று பரிந்துரைக்கலாமா?

திரு. டாக்கின்ஸ்: "சுயநல மரபணு" என்ற சொற்றொடரின் பொருள் மரபணுக்கள் சுயநலம் உடையவை என்பது மட்டுமே. தனிப்பட்ட உயிரினங்கள் சுயநலமானவை என்று பொருள் இல்லை. மாறாக, சுயநல மரபணுவின் முக்கிய செய்திகளில் ஒன்று, சுயநல மரபணுக்கள் உயிரினங்களில் பொதுநல நடத்தையை நிரலமைக்கலாம் என்பதே. உயிரினங்கள் மற்ற உயிரினங்களிடம் சுயநலமற்ற முறையில் நடந்து கொள்ளலாம் -- தங்கள் சுயநல மரபணுக்களின் பரவலை முன்னெடுக்க அதுவே சிறந்தது. மற்ற மரபணுக்களின் நன்மைக்காக தன்னைத் தியாகம் செய்யும் ஒரு மரபணு உங்களிடம் இருக்க முடியாதது. மற்ற சுயநல மரபணுக்களின் பேச்சைக் கேட்டு, ஓர் உயிரை மற்ற உயிர்களுக்காகத் தம்மைத் தியாகம் செய்ய வைக்கும் ஒரு மரபணு உங்களுக்குள் இருக்க முடியும்.

அறநெறியான நடத்தையை ஊக்குவிக்கும் சமூக நிறுவனங்களில் இருந்து நிச்சயமாகப் பயனடைகிறோம் என்றே நான் நினைக்கிறேன். சட்டம் இருப்பது மிகவும் முக்கியம். அறநெறிக் கல்வி பெறுவது மிகவும் முக்கியம். "உனக்கு என்ன செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறாயோ அதையே நீயும் செய்" என்பது போன்ற அறநெறி விதிகளைக் குழந்தைகளிடம் புகுத்த முயற்சி செய்வது மிகவும் முக்கியம். அறநெறித் தத்துவத்தை உருவாக்குவது, நாம் வாழ விரும்பும் கொள்கைகளை உருவாக்க முயற்சிப்பது மிகவும் முக்கியம். ஆனால் அதற்குள் நீங்கள் மதக் கொள்கைகளைக் கொண்டு வரும் போது, அந்த இடத்தில் நான் உங்களைப் பிரிந்து சென்றுவிடுவேன் என்று நினைக்கிறேன். அக்கொள்கைகள் மதம் சார்ந்தவையாக இருக்க வேண்டும் என்பதற்கான எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை. ஆனால் அக்கொள்கைகள் சமூகத்தால் உருவாக்கப்பட வேண்டுமே ஒழிய, உயிரியல் கட்டளைகளைப் பின்பற்றி இருக்க வேண்டியதில்லை என்றே நிச்சயமாக எண்ணுகிறேன்.

கேள்வி: ஒட்டுமொத்தப் பரிணாம அமைப்புக்கே கடவுள்தான் வடிவமைப்பாளர் என்று கிறிஸ்தவர்கள் சிலர் முன்வைக்கும் பார்வைக்கு உங்கள் பதில் என்ன?


திரு. டாக்கின்ஸ்: 19-ஆம் நூற்றாண்டில், கடவுள் மீதான அவர்களின் நம்பிக்கைக்குக் குழிபறித்ததால் மக்கள் பரிணாமக் கோட்பாட்டை ஏற்க மறுத்தார்கள். இப்போதோ, பரிணாமம் உண்மைதான் போல் தெரிகிறது என்று சொல்வதன் மூலமும் கடவுளை மீண்டும் நிலைநிறுத்த முயற்சிக்கும் ஒரு புதிய வழி உள்ளது. மூடனோ முட்டாளோ அல்லாத எவரும் பரிணாமம் உண்மை என்பதைக் காண முடியும். ஆகவே, கடவுள்தான் பரிணாமம் நிகழக்கூடிய சூழலை அமைத்துத் தந்தார் என்று பரிந்துரைப்பதன் மூலம் கடவுளை மீண்டும் திணிக்கிறோம். நான் இதை ஒரு பரிதாபகரமான வாதமாகவே கருதுகிறேன். ஒன்று, நான் ஒரு மனிதனை உருவாக்க விரும்பும் கடவுளாக இருந்தால், அதைப் பரிணாமத்தின் வழியில் எல்லாம் போய்ச் செய்யாமல் நேரடியான வழியிலேயே செய்துவிடுவேன். கடவுள் இல்லாதது போல் தோற்றமளிக்க வைக்கக்கூடிய ஒரு வகையில் ஏன் வேண்டுமென்றே அதை அமைக்க வேண்டும்? பெரும்பாடு பட்டுச் சுற்றி வளைத்தெல்லாம் பேச வேண்டியதில்லை, இது ஒரு கண்கட்டு வித்தை போல இருக்கிறதே என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்.

ஆனால் இதில் இருக்கும் இன்னொரு கூறு இதுதான், இது அப்படிக் கொடுக்கப்படும் விளக்கத்தின் மிதமிஞ்சிய பகுதி. உயிர் பற்றிய டார்வினிய விளக்கத்தின் மொத்த அழகே அது தன்னிறைவானது என்பதுதான் -- அதுதான் அடிப்படையே. அடிப்படையில் எதுவுமே இல்லாமல் தொடங்குவது -- பூமியின் தோற்றம் போன்ற மிக மிக எளிமையான ஒன்றிலிருந்து தொடங்குவது. அதிலிருந்து, மெதுவான படிப்படியான பாகைகளில், "Climbing Mount Improbable" (சாத்தியமின்மை மலை ஏறுதல்) என்று நான் சொன்னது போல் -- மெதுவாக படிப்படியான பாகைகளில் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய எளிய தொடக்கங்களிலும் எளிய தேவைகளிலுமிருந்து தொடங்கி, நம்மையும் கங்காருகளையும் போன்ற சிக்கலான முடிவுகள் வரை கட்டிச் செல்லலாம்.

இப்போது, அது எடுபடுகிறது என்பதே அதன் அழகு. ஒவ்வொரு நிலையும் விளக்கப்படுகிறது, ஒவ்வொரு நிலையும் புரிந்து கொள்ளப்படுகிறது. கூடுதலாக எதுவும் இல்லை, புறம்பான எதுவும் புகுத்தப்ப்பட வேண்டியதில்லை. இது எல்லாமே எடுபடுகிறது, இது எல்லாமே -- இது ஒரு திருப்திகரமான விளக்கமாக இருக்கிறது. இப்போது, ​​எல்லாவற்றையும் முதலில் அமைத்துக் கொடுக்கிற, அல்லது எல்லா நுணுக்கங்களையும் கண்காணிக்கும் கடவுளைக் கொண்டு வந்து புகுத்துவது என்பது, நாம் விளக்க முயற்சிக்கும் அதே வகையிலான ஓர் உருவைக் கொண்டு வந்து திணிப்பதே ஆகும் -- அதாவது, சிக்கலானதும் அழகாக வடிவமைக்கப்பட்டதுமான உயர் நுண்ணறிவு ஒன்று. அதைத்தான் நாம் விளக்க முயன்று கொண்டிருக்கிறோம். அதற்கு நம்மிடமே நல்ல விளக்கம் உள்ளது. அப்படியிருக்க தேவையில்லாத மீமிகையான சேர்ப்பு ஒன்றை ஏன் கொண்டுவந்து புகுத்த வேண்டும்? அது நாம் கொடுத்துக்கொண்டிருக்கும் விளக்கத்துக்குக் கூடுதலாக எதையும் தரவில்லை.

கேள்வி: “டிஎன்ஏ (DNA) போன்ற தற்பிரதி எடுக்கும் (self-replicating) அமைப்பு ஒன்று இருக்கும் போது, பரிணாம வளர்ச்சிதான் இயக்கமுறை என்பதெல்லாம் சரிதான் -- ஆனால் அந்தச் சிக்கலான கட்டமைப்பை முதலில் எப்படிப் பெற்றீர்கள்? ஒருவேளை டிஎன்ஏ என்பதே கடவுளின் செயலா?” என்று இப்போது சிலர் எழுப்பும் வாதத்திற்கு என்ன சொல்கிறீர்கள்?

திரு. டாக்கின்ஸ்: இந்த முழு வழிமுறையும் எப்படித் தொடங்கியது என்று சொல்வது வேறு வாதம் - உயிரின் மூலத் தோற்றத்திலிருந்து எப்படித் தொடங்குவது? உயிரின் மூலத் தோற்றம் -- தற்பிரதி எடுக்கும் மூலக்கூறு ஒன்றின் எழுச்சியே உயிரின் மூலத் தோற்றத்தின் முக்கிய வழிமுறை. அந்த எழுச்சி எதை உருவாக்கி இருக்கிறதோ அதோடு ஒப்பிடுகையில் இது மிகவும் எளிமையாக நடந்த ஒன்றுதான். வாழ்க்கையின் நேர்த்தியான சிக்கலான தன்மையை உருவாக்கும் பணிகளில் பெரும்பாலானவை உயிரின் மூலத் தோற்றத்திற்குப் பிறகு, பரிணாம வளர்ச்சியின் போது செய்யப்பட்டதே. முதன்முதல் படி என்று ஒன்று இன்னும் உள்ளது -- அடுத்தடுத்த பல படிகளை விட இது ஒரு பெரிய படியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் அது ஒரு படி. மேலும் இது நமக்கு முழுமையாகப் புரியாத ஒரு படி -- முக்கியமாக, இது அவ்வளவு காலத்திற்கு முன்பு நடந்தது என்பதாலும் பூமி மிகவும் வேறுவிதமாக இருந்த சூழ்நிலையில் நடந்தது என்பதாலும் இது அப்படி முழுமையாகப் புரியாத படியாக இருக்கிறது. எனவே உயிர்களின் மூலத் தோற்றத்தின் போதைய வேதியியல் சூழல்களை மீண்டும் போலமைத்தல் (simulate) சாத்தியமுமில்லை. இது எப்படி நடந்திருக்கலாம் என்பதற்குப் பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. அவற்றில் எதுவுமே இன்னும் முழுமையாக நம்பவைக்கத்தக்கதாக இல்லை. அக்கோட்பாடுகளில் எதுவுமே எப்போதுமே நம்மை நம்ப வைக்க முடியாமலும் போகலாம், ஏனென்றால் அந்தச் சூழல்கள் என்ன என்பதை நாம் ஒருபோதும் முழுமையாக அறியப் போவதில்லையோ என்னவோ. ஆனால் நான் அதை ஓர் ஆழமான புதிர்ப் படியாகக் காணவே இல்லை.

கேள்வி: நீங்கள் மதத்தை ஒரு வைரஸ் என்று அழைத்திருக்கிறீர்கள். அதை என்ன பொருளில் சொன்னீர்கள்?

திரு. டாக்கின்ஸ்: "வைரஸ்" என்ற சொல் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலப் பொருளில் பயன்படுத்துவதே சரியானது -- அதாவது, உயிரணுவுக்குள் நுழைந்து தனக்கு வேண்டிய வகையில் நிரலமைத்துக் கொள்கிற டிஎன்ஏ-வின் ஒரு துண்டுதான் வைரஸ் -- இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் அல்லது தட்டம்மை வைரஸ் போன்ற வைரஸ்கள். கணினி வைரஸ்கள் ஓர் ஒப்புமை -- இது ஒரு நல்ல ஒப்புமை. ஏனென்றால் கணினி வைரஸ் என்பது கணினி மொழியில் எழுதப்பட்ட கணினிக் குறியீட்டின் ஒரு பகுதி. இந்த வைரஸ், "என்னை நகலெடுத்துக்கொள், சுற்றிலும் என்னைப் பரப்பு, போகிற போக்கில் சில குறும்புகளும் செய்துகொள்" என்று கூறுகிறது, அப்படியே நடக்கவும் செய்கிறது. கணினி மொழியில் எழுதப்பட்ட வழிமுறைகளுக்குக் கணினிகள் கீழ்ப்படிவதால் இது அப்படியே நடக்கிறது. "என்னை நகலெடுத்துக்கொள், சுற்றிலும் என்னைப் பரப்பு" என்று ஒரு நிரலை நீங்கள் எழுதினால், அது மென்தட்டுகளின் (floppy disk) வழியாகப் பரவும், அப்படியே தொடரும்.

இப்போது, கணினி வைரஸ்களால் கணினிகள் பாதிக்கப்படுவது போலவே ​​டிஎன்ஏ வைரஸ்களால் உயிரணு பாதிக்கப்படும் அதே வகையில் மனித மூளையும் ஒட்டுண்ணித்தனம் பெற்று தாக்குதலுக்குள்ளாகும் நிலையை அடையலாம். சங்கிலிக் கடிதங்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு பார்ப்போம் -- "என்னை 10 நகல்கள் எடுத்து 10 நண்பர்களுக்கு அனுப்பிவையுங்கள்" என்று அஞ்சல் வழி வரும் கடிதங்கள் இருக்கின்றனவே, அவை. கணினி செய்வதைப் போல, எல்லோருமே அதற்கு அப்படியே அடிமையைப் போலக் கீழ்ப்படிந்தால், இந்த உலகம் கண்ணை மூடி விழிப்பதற்குள் காகிதங்களால் நிறைந்துவிடும். ஏனென்றால் காகிதத் துண்டுகள் மிக விரைவாக - அந்த அளவுக்கு அதிவேகத்தில் குவிந்துவிடும். மனிதர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்லர். ஆனால், "இதை நம்பாமல் கடந்து சென்றால் நீங்கள் இறக்கும் போது நரகத்திற்குச் செல்வீர்கள்" போன்ற சில வகையான தூண்டுதல்களைச் செய்தால், அதில் விழும் அளவுக்கு முட்டாள்கள்தாம். அது ஓர் அச்சுறுத்தல். அந்தச் சங்கிலிக் கடிதத்தை - செய்தியை, இறை நற்செய்தியை, என்ன வேண்டுமானாலும் இருக்கட்டுமே, அதற்குச் சமமான ஒன்றை அனுப்பிவைக்க ஏற்றுக் கொள்வதற்கு, அதை நம்புவதற்கு, போதுமான எண்ணிக்கையிலான மனிதர்கள் ஒத்துக்கொள்வது ஓர் அச்சுறுத்தல்தான்.

கூடுதல் தூண்டுதல் ஒன்று உள்ளது, கூடுதல் உண்மை ஒன்று. அது என்னவென்றால், குழந்தைகளின் மூளை, ஏறக்குறைய நல்ல டார்வினியக் காரணங்களுக்காக என்று எண்ணுகிறேன், குறிப்பாக நல்ல காரணங்களுக்காக எளிதில் மசியக்கூடியது. ஒரு குழந்தை, ஓர் இளம் குழந்தை, அதன் பண்பாட்டிலிருந்து -- அதன் சமூகப் பெரியவர்களிடமிருந்து, அதன் பெற்றோரிடமிருந்து, ஒரு மொழியை மட்டுமல்ல, நிறைய மற்ற பல விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படியானால், குழந்தைகள், ஒரு குறிப்பிட்ட மென்மையான - எளிதில் பாதிக்கப்படக்கூடிய வயதில் அவர்களுக்கு என்ன சொல்லப்பட்டாலும் அதை நம்புவதற்கு ஏற்றபடி முன்-நிரலமைக்கப்படுவார்கள். நான் "எளிதில் பாதிக்கப்படக்கூடிய" என்ற சொல்லை ஏன் பயன்படுத்துகிறேன் என்றால், கணினியைப் போலவே தானாகவே, அவர்களுக்கு வழங்கப்படும் வேறு எந்த வகையான தகவலாலும் அவர்கள் ஒட்டுண்ணிமயமாக்கலுக்கு ஆளாக நேரிடும், அந்தத் தகவல் நல்ல தகவலாகக் கூட இல்லாமல் இருக்கலாம். எனவே, "தீயில் கை வைக்காதீர்கள், உங்கள் கை எரிந்துவிடும்" என்றோ "மஞ்சளும் கருப்புமான பட்டைகள் கொண்ட பாம்புகளை மிதிக்காதீர்கள், கடிபடுவீர்கள்" என்றோ சொல்வது நல்ல தகவல்.

குழந்தைக்கு எது நல்ல தகவல் என்பதை அறிய வழியே இல்லை. எனவே வேறு ஒரு தகவல் "X" -- அது என்னவாக இருந்தாலும் பரவாயில்லை -- அது முற்றிலும் முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட இளமையான வயதில், நீங்கள் வளரும்போது அதே X-ஐ உங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று குழந்தைக்குச் சொல்லப்பட்டால், அந்த X என்னவாக இருந்தாலும் கவலையில்லை, அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும். இதிலிருந்து நீங்கள் கணிப்பது போலவே, உலகின் ஒரு பகுதியில் மக்கள் நம்புவது, மற்றொரு பகுதியில் உள்ள மக்கள் நம்புவதை விட கண்டபடிக்கு வேறுபட்டதாக இருக்கும் -- இதற்கும் உண்மையில் இருக்கும் வேறுபாடு என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ரோமன் கத்தோலிக்க நாடுகளோ மறுப்புரைக் கிறித்தவ (protestant) நாடுகளோ இஸ்லாமிய நாடுகளோ, எங்கிருந்தாலும் பேரண்டம் பற்றிய உண்மையில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனாலும், இஸ்லாமிய நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு ஒன்றும், கத்தோலிக்க நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு இன்னொன்றும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது, அவர்கள் அனைவரும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்படுவதை அப்படியே நம்புகிறார்கள். குறைந்த பட்சம் கொஞ்ச காலமாக அவர்களில் சிலரால் அதைப் பிற்காலத்தில் அசைத்துப் பார்க்க முடிகிறது - ஆனால் பலர் அவ்வாறு செய்வதில்லை, எனவே அந்தத் தகவல் முடிவில்லாமல் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது - மதத்தின் இருப்பை விளக்கும் பலவற்றில் இது ஒன்று என்று எண்ணுகிறேன்.

கேள்வி: உயிர் வேதியியலாளராகவும் இருந்து கொண்டு ஆங்கிலிக்கத் திருச்சபை பாதிரியாராகவும் இருக்கும் உங்கள் ஆக்ஸ்ஃபோர்ட் பணித் தோழர் ஆர்தர் பீகாக் போன்றவர்கள் கொண்டுள்ள மிகை தாராளவாத மதக் கருத்துக்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன?

திரு. டாக்கின்ஸ்: இன்னும் விவரமான இறையியல் பார்வைகள், ஆர்தர் பீகாக், ஜான் போல்கிங்ஹார்ன் போன்றவர்கள் - எந்த எளிய வகையிலும் கண்டிப்பாக அவர்கள் படைப்புவாதிகள் அல்லர் - அவர்கள் அடிப்படைவாதிகள் அல்லர், முட்டாள்கள் அல்லர். அப்படியானால் நான் அவர்களைக் கூடுதலாக மதிக்கிறேனா? ம்ம்ம், ஒரு வகையில் நிச்சயமாக அவர்களைக் கூடுதலாக மதிக்கிறேன்தான், ஏனென்றால் அவர்களுடன் என்னால் ஓர் அறிவார்த்தமான உரையாடல் நிகழ்த்த முடியும் -- அவர்கள் அறிவிலிகள் அல்லர். அதே வேளையில், அவர்கள் எதற்காக இதைச் செய்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அதாவது, இந்தக் கூடுதல் விளக்கத்தைக் கொண்டு வருவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையிலோ அல்லது மனிதகுல ஞானத்தின் களஞ்சியத்திலோ என்ன சேர்க்கப்படுகிறது என்பது எனக்குப் புரியவில்லை. நம்மிடம் அறிவியல் இருக்கிறது. அறிவியல் எந்த வகையிலும் முழுமையானதில்லை -- அதில் நமக்குத் தெரியாத பலவும் உள்ளன - ஆனால் நாம் அதைக் கண்டுபிடிக்க முயன்றுவருகிறோம். அக்கனவான்கள் இருவருமே அறிவியலாளர்கள், அதன் பொருள் என்னவென்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அதைப் புரிந்துகொள்கிறார்கள், மதிக்கிறார்கள். பேரண்டத்தின் முழுமையான படத்தை உருவாக்கத்தான் பணியாற்றி வருகிறோம், அது வெற்றி பெற்றுவிட்டால் பேரண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் பற்றிய முழுமையான புரிதல் கிடைத்துவிடும். ஆகவே, மனிதகுல ஞானத்தின் களஞ்சியத்தில் புதிதாக எதையும் சேர்க்காத இது போன்றவற்றில் ஏன் அவர்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை, அது நடக்க வாய்ப்புள்ளதாகவும் எனக்குத் தோன்றவில்லை.

கேள்வி: ஒரு மந்திரக்கோலை அசைத்து, நீங்கள் நினைக்கும் விதத்தில் உலகத்தை அமைக்க முடிந்தால், இன்று அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையில் இருக்கும் சரியான உறவாக இருப்பதாக எதைப் பார்ப்பீர்கள்?

திரு. டாக்கின்ஸ்: மதத்திற்குப் பங்கு இருக்கிறதா, மந்திரக்கோலை அசைத்து மதத்தைத் துடைத்து வீச விரும்புவேனா என்று கேட்டால், அது அவ்வளவு நேரடியானதல்ல என்பேன். இப்போது நான் மதத்தைத் தூக்கிப் பிடிப்பது போலத் தோன்றலாம், ஆனால் ஒரு மந்திரக்கோலால் மதத்தைத் துடைத்து வீசுவதால் ஏற்படும் விளைவுகள் -- சமூக, உளவியல் விளைவுகள், கடுமையானதாக இருக்கலாம் என்று படுகிறது. அதாவது, அதை நம்பி இறங்கி விட்டவர்களும் இருக்கிறார்கள். ஊன்றுகோல் போல அதை நம்பி வாழ்பவர்களும் உண்டு. அதைத் துடைத்துப் போடுவது என்பது, தங்கள் வாழ்நாள் முழுவதும் மருந்துப்போலி மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழும் ஒருவரை, திடீரென்று, "மன்னிக்கவும், இனி நீங்கள் இந்த மாத்திரைகளைச் சாப்பிட முடியாது" என்று சொல்வது போலாகும். அதனால் அதைத் துடைத்துப்போட விரும்புகிறேன் என்று சொல்லும் அளவுக்குக் கொடியவனாக இருக்க விரும்பவில்லை.

ஆனால் தீவிர அறிவார்ந்த உரையாடல்களைப் பொருத்தவரை, உண்மையில் மனிதகுலத்தின் நலனுக்காக உலகத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் பணியில், ஆம், மதத்தை வைத்துக்கொண்டு நம் நேரத்தை வீணடிக்கிறோம் என்றுதான் நினைக்கிறேன். இதை நான் முன்பே சொல்லியிருக்க வேண்டும் - இறையியலாளர்கள் எல்லோருமே தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. அதாவது, பல சமயங்களில் உண்மையில் இறையியலாளர்கள் செய்வதெல்லாம் நான் இறையியல் என்று எதைச் சொல்கிறேனோ அதை அல்ல -- அவர்கள் செய்வது விவிலிய வரலாறு அல்லது பண்டைய ஹீப்ரு பனுவல் மீதான இலக்கிய விமர்சனம் எனலாம், அவை களிப்பூட்டுபவை, அவை செய்யப்பட வேண்டும், ஆங்கில வரலாற்று நூல்கள் மீது செய்யப்படும் விமர்சனம் போன்றவையே அவையும். நான் அதை முழுதும் ஆதரிக்கிறேன். எனக்கு வரலாறு பிடிக்கும், இலக்கியம் பிடிக்கும், விவிலிய வரலாறும் விவிலிய இலக்கியங்களும் பிடிக்கும், எனவே அது ஒரு முறையான புலமையின் கிளையாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்பதில் நானும் மிக ஆர்வமாக உள்ளேன்.

ஆனால் விவிலிய வரலாறு, இலக்கியம் என்றில்லாமல் இறையியல் என்று சொல்லிக்கொண்டு -- மும்மையின் (trinity) உண்மையான உள் அர்த்தம் அல்லது திருவுருமாற்றம் (transubstantiation) பற்றி வாதிடும்போது, ​​சில குறியீட்டுப் பொருள்களைக் கொண்டு வர முயற்சிக்கும் போது -- அது மொத்த நேரத்தையும் வீணடிப்பதாக நினைக்கிறேன். அதாவது, என்றோ ஒரு நாள் டிஎன்ஏ இரட்டைச் சுருளி (DNA Double Helix) தவறானது என்றும், அதையெல்லாம் நாம் தவறாகப் புரிந்துகொண்டோம் என்றும், டிஎன்ஏ இரட்டைச் சுருளியே அல்ல என்றும் அறிவியல் கண்டுபிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அப்படியான கிண்டலுக்கு இணையானது இது. இப்போது, அறிவியலாளர்கள் என்ன சொல்வார்கள், "சரி, பாவந்தான், அப்படியானால் உண்மையில் என்னதான் அது என்று கண்டுபிடிக்கும் வேலையைத் தொடங்குவோம்." அப்படி இறையியலைப் பற்றிய என் கிண்டல் இதுதான்: "ஆகா, ஆனால் வேறொரு வகையில் டிஎன்ஏ இரட்டைச் சுருளி நிச்சயமாக நமக்கொரு பொருளைத் தருகிறது. டிஎன்ஏ இரட்டைச் சுருளி இன்று உலகில் நமக்கு என்ன சொல்ல முயற்சிக்கிறது?" டிஎன்ஏவின் இரண்டு இழைகளின் முறுக்குதல் மனிதர்கள் அனைவரையும் ஒருவரோடு ஒருவரை இணைப்பதற்கு சில முக்கியத்துவங்களைக் கொண்டிருக்கக்கூடும் -- இது உண்மையா இல்லையா என்ற கேட்டுக்கேட்டு அலுத்துப்போன - மேலோட்டமான, எளிய - பிரச்சினையை ஒதுக்கி விடுவோம் - நாம் இங்கு உண்மை எதுவென்று எளிமையுணர்வோடு பேசவில்லை -- நமக்கு உள்ளிருக்கும் குறியீட்டு உண்மையைக் கண்டறிய வேண்டும். உள்ளிருக்கும் அடையாள உண்மை என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை. ஒன்று அது உண்மை அல்லது உண்மையில்லை.

தற்சமயம் டிஎன்ஏ உண்மையில் ஓர் இரட்டைச் சுருளி என்று நினைக்கிறோம். எப்போதாவது அது தவறு என்று கண்டறியப்பட்டால், அதைச் சாளரத்துக்கு வெளியே வீசி எறிந்துவிட்டு, மீண்டும் தொடங்குவோம், அதற்குள் இருக்கும் உள்ளார்ந்த குறியீட்டுப் பொருளை எல்லாம் மீண்டும் கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டு இருக்க மாட்டோம், இதைத்தான் ஆதியாகம நூல் போன்றவற்றை வைத்துக்கொண்டு செய்ய முயற்சிக்கிறார்கள். அதை ஒரு வரலாற்று உண்மை என்று வெளியே தூக்கிப் போட்டனர், அப்படித்தான் அது எப்போதுமே கருதப்பட்டது, அதன் ஆசிரியர்கள் பலரும் அப்படிக் கருதப்படுவதையே விரும்பினர் - இப்போது அதை குறியீடான பொருள் ஒன்று உள்ளது என்று மாற்றியுள்ளனர்: ஆதியாகம நூலின் உண்மையான பொருள் என்பது இது, அது அல்லது இன்னொன்று. நான் எது மாதிரியான ஒன்றைப் பற்றிப் பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். அது ஒரு நேர விரயம் என்று நினைக்கிறேன். இது முட்டாள்தனம் என்றும் நினைக்கிறேன்.

கேள்வி: இந்த அறிவியல் யுகத்தில், மேற்கிலும், குறிப்பாக அமெரிக்காவிலும் கூட, இன்னும் ஏன் பலர் மதத்தைத் தொடர்ந்து நம்புகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

திரு. டாக்கின்ஸ்: அறிவியலில் அதிநவீனமடைந்துவிட்ட பலர் கூட இன்னும் ஏன் கடவுளை நம்புகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. புரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றுதான் ஆசைப்படுகிறேன். நீங்கள் அவர்களிடம்தான் இதைக் கேட்க வேண்டும். சில சமயங்களில் அவர்கள் கடவுள் என்று சொல்வது அவர்கள் அன்றாடம் பழகும் சாதாரண மனிதர்கள் கடவுள் என்று நினைப்பதிலிருந்து வேறுபட்டது என்றும் எனக்குத் தெரியும். இயற்பியல் விதிகளின் தோற்றம், இயற்பியலின் அடிப்படை மாறிலிகள் -- பேரண்டத்தின் மகத்துவம், தோற்றங்களின் மர்மம் ஆகியவற்றால் என்னைப் போலவே மிகவும் பிரமிப்புக்குள்ளான இயற்பியலாளர்கள் இருக்கிறார்கள், கிட்டத்தட்ட கடவுளைப் போன்ற, மிகவும் மர்மமான ஏதோ ஒன்று என்று எண்ணி, அதற்குக் கடவுள் உருவகத்தைப் பயன்படுத்தலாம். இந்தச் சமன்பாடுகளில் கடவுள் இருக்கிறார். இந்த அடிப்படை மாறிலிகளில் கடவுள் இருக்கிறார். அது பரவாயில்லை. அதாவது, இது இந்தப் பேரண்டத்தின் அடிப்படையில் நாம் மர்மமானதாகக் காணுபவற்றைப் பற்றிய மறுவரையறை மட்டுமே.

ஆனால் மற்றவர்கள் அதைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு கடவுள் பாவங்களை மன்னிப்பவர், ஒயினைத் திருவுருமாற்றம் செய்பவர், நான் இறந்த பிறகும் என்னை வாழ வைப்பவர் - அது முற்றிலும் வேறுபட்ட ஒன்று. இன்னும் தவறாகப் புரிந்துகொள்வதுதான் எளிதில் எட்டும் கனியாக இருக்கிறது. ஆழமான மாறிலிகள், ஆழமான சிக்கல்கள், இயற்பியலின் ஆழமான கோட்பாடுகளுக்கு கடவுளை இந்த வகையான உருவகமாகப் பயன்படுத்தி, அந்த விதத்தில் நான் கடவுளை நம்புகிறேன் என்று கூறும் அதிநவீன இயற்பியலாளர்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்வார்கள். அடுத்து அப்படியே திரும்பி, "ஓ, இந்தப் பெரிய இயற்பியலாளரே கடவுளை நம்புகிறார் - அப்படியானால் நான் மும்மையையும் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டத்தையும் அவரின் மறுபிறவியையும் -- அது போன்ற எல்லாவற்றையும் நம்பலாம்” என்பார்கள். ஆனால் இது எதற்கும் அந்த இயற்பியலாளர்கள் பேசிய இயற்பியலின் அடிப்படை மாறிலிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.

கேள்வி: திரும்பவும் வைரஸ்கள் பற்றிப் பேசலாம் என நினைக்கிறேன், ஒரு சமயம் இறையியலாளர் ஒருவர் என்னிடம் கூறினார், "மதம் ஒரு வைரஸ் என்றால், அறிவியலும் ஒரு வைரஸாக இருக்கலாம் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்." அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

திரு. டாக்கின்ஸ்: மதம் ஒரு வைரஸ் என்றால், அறிவியல் மட்டும் ஏன் வைரஸ் அல்ல என்று அடிக்கடி கேட்கப்படுகிறது. கணினி வைரஸ்களின் உருவகத்திற்கே மீண்டும் வருவோம், ​​எந்தவொரு கணினி நிரலையும் நீங்கள் ஒரு வைரஸ் என்று கூறலாம், எல்லோரும் தேவைக்காக வாங்கும் ஒரு நல்ல சொற்செயலி (word processor) கூட வைரஸ்தான் எனலாம். சொற்செயலி எல்லோருக்கும் வேண்டியதிருப்பதால் பரவுகிறது. வேறுபாடு என்னவென்றால், கணினி வைரஸ் பரவுவது அப்படி எல்லோருக்கும் வேண்டியதிருப்பதால் அல்ல, அதன் அறிவுறுத்தல்களிலேயே "என்னைப் பரப்பு" என்று கூறுவதால்தான் அது அப்படிப் பரவுகிறது. இது ஒரு எளிமையான, பொருளற்ற வேறுபாடு. சொற்செயலி நிரல் பரவுவது அது ஒரு நல்ல நிரல் என்பதால், அது அதிநவீனமானது என்பதால், அது பயனளிக்கிறது என்பதை மனிதர்கள் கண்டுகொள்வதால், அது அவர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதால் -- இப்படி அது பரவுவதற்கு அனைத்து வகையான சிக்கலான காரணங்களும் இருக்கின்றன.

இப்போது, ​​​​சில யானைகள் ஏன் மற்ற யானைகளை விடச் சிறப்பாக உயிர் வாழ்கின்றன அல்லது சில கங்காருக்கள் ஏன் மற்ற கங்காருக்களை விடச் சிறப்பாக உயிர் வாழ்கின்றன என்பதற்கு ஒப்பானது இது. அடிப்படையில் மரபணு மட்டத்தில் யானைகள் வைரஸ்களின் பிரம்மாண்டமான காலனிகளைப் போலவே இருக்கின்றன. இந்த வைரஸ்கள், முதலில் ஒரு யானையை உருவாக்கும் மறைமுக வழிமுறையின் வழியாக அந்த யானையை அதிகமான டிஎன்ஏவை உருவாக்கும் படி நிரலமைக்கின்றன. ஆனால் அப்படியே நடப்பதில்லை, ஏனென்றால் யானை அம்மாம் பெரிய சிக்கலான உயிரினம், எம்மாம் பெரிய சிக்கலான உயிரினம் என்றால், நாம் கவனித்துப் பார்த்தாலே தெரியும், அதே வேலையை அது வேறு வழியில் செய்துகொள்கிறது. மேலும் ஒரு யானை இன்னொரு யானையை விடச் சிறப்பாக உயிர் வாழ்வதற்கான காரணம், அது மேலான தும்பிக்கை கொண்டிருப்பதோ சிறந்த உணவளிக்கும் வழக்கம் கொண்டிருப்பதோ கூர்மையான தந்தங்களைக் கொண்டிருப்பதோ இருக்கலாம். ஒரு யானை அதன் டிஎன்ஏ-வை மற்றொரு யானையை விடச் சிறப்பாகக் கடத்துவதற்கு எல்லாவிதமான சிக்கலான, நேர்த்தியான அழகான காரணங்கள் உள்ளன. ஆனால் வைரஸ் - தட்டம்மை வைரஸோ சாதாரண சளி வைரஸோ, அப்படி இல்லை. இது மிகவும் எளிமையானது. "என்னை நகலெடுக்கவும்", "என்னை நகலெடுக்கவும்" என்று வைரஸ் கூறுகிறது. எனவே மொத்தத் தொகுதியும் அதைக் கடைப்பிடிக்கின்றன.

இப்போது, ​​அறிவியல் நேர்த்தியான அந்தச் சொற்செயலி போன்றது என்று எனக்குத் தோன்றுகிறது. ஓர் அறிவியல் கருத்தை எடுத்துக்கொள்வோம் -- அதிலும் சில இறக்கின்றன, சில வாழ்கின்றன -- அறிவியல் கருத்துக்களின் டார்வினியம் போன்று ஒன்றுள்ளது. பாப்பஸ் போன்ற தத்துவவாதிகள் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளனர். ஆனால் அவை பரவுவதற்குக் காரணம், அவற்றுள் சில இறக்கும் போது சில வாழ்வதற்குக் காரணம், அவை சோதிக்கப்படுகின்றன, அவை நல்ல கருத்துக்களாக இருக்கின்றன, அவை மக்களுக்கு எழுச்சியூட்டுகின்றன. ஆய்வுகளின் சோதனைகளைத் தாக்குப்பிடித்து நிற்கின்றன. அவற்றிலிருந்து கட்டமைக்கப்பட்ட மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கணிப்புகளுக்கு இட்டுச் செல்கின்றன -- யானை பற்றிப் பேசினோமே, அது போன்ற சிக்கலான, அதிநவீன காரியம். அதேசமயம், "இதை நீங்கள் நம்பவில்லை என்றால், நரகத்திற்குச் செல்வீர்கள்" போன்ற மதக் கருத்துக்கள், கணினி வைரஸைப் போலவே, கொடிய வகையில் சுயசேவை செய்துகொள்பவை என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு முழு தேவாலயத்தை எடுத்துக்கொள்வோம், ஒரு முழு ரஷ்ய ஆச்சார தேவாலயம் அல்லது ஒரு முழு ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம், அதுவும் இது போன்ற வைரஸ்களால் ஆன  போதுமான அளவு சிக்கலான காலனியாக இருப்பதால் யானையைப் போலவே தோற்றமளிக்கத் தொடங்குகிறது, அதனால்தான் அவை தாக்குப்பிடித்து நிற்கின்றன என்று எண்ணுகிறேன். அந்த ஒப்புமையுடன் விளக்குவதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் ஒரு யானைக்கு வைரஸ் போன்ற தரக்குறைவான சொல்லைப் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்காது என்று நினைக்கிறேன், அறிவியலுக்கும்  "வைரஸ்" போன்ற ஒரு  தரக்குறைவான சொல்லைப் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

கேள்வி: மரபணுக்கள் பற்றிய கருத்துக்கே மீண்டும் செல்வோம் - மனித நடத்தை எந்த அளவிற்கு மரபணு ரீதியாகத் தீர்மானிக்கப்படுவது என்று நினைக்கிறீர்கள்?

திரு. டாக்கின்ஸ்: எனது பெரும்பாலான படைப்புகள் விலங்குகளின் நடத்தை பற்றியவை, எனது எழுத்துக்களின் பெரும்பகுதி விலங்குகளின் நடத்தை பற்றியதே, எனவே முழு உயிரினத்தையும் ஒரு மரபணு இயந்திரம் என்று நான் நினைத்தாலும், அவற்றின் முக்கியமான - மிகவும் சுவாரசியமான வெளிப்பாடுகளில் ஒன்றாக அவற்றின் நடத்தையில் நான் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். மேலும் என் எழுத்துக்களில் பெரும்பாலானவை, ஒரு விலங்கு ஒரு குறிப்பிட்ட விதத்தில் நடந்துகொள்வதற்குக் காரணமாக இருக்கும் அதன் நரம்பு மண்டலத்தையே கட்டியெழுப்பிய அவ்விலங்கின் மரபணுக்களின் நலன்களை அவ்விலங்கின் இந்த நடத்தையோ அந்த நடத்தையோ எப்படி முன்னெடுத்துச் செல்கிறது என்பதைப் பற்றியதுதான்.

இப்போது, ஒரு கேள்வி எழும்: மனிதர்களுக்கும் அதையே செய்வோமா, அல்லது மனிதர்களுக்கும் அதையே செய்ய வேண்டுமா? நல்லது, மனிதர்களும் விலங்குகள்தாம் -- நாம் குரங்குகள்தாமே -- ஆப்பிரிக்கக் குரங்குகள். மேலோட்டமாகப் பார்த்தால் ஏன் செய்யக்கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஆனால் எந்த ஒரு விலங்கிற்கும் இம்மாதிரியான ஒரு கேள்வியை ஒரு அதிநவீன முறையில் கேட்க வேண்டும். ஒன்று, எந்த விலங்கும் அதன் முன்னோர்கள் வாழ்ந்த சூழலில் இருந்தும், அதன் மரபணுக்கள் இயற்கைத் தேர்வு செய்துகொண்ட சூழலிலிருந்தும் வேறுபட்ட சூழலில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கலாம். எனவே நீங்கள் பார்க்கும் நடத்தை, அதை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டால், அந்தப் பழைய இயற்கைச் சூழலில் அம்மரபணுக்களுக்கு ஏதேனும் நல்லது செய்வதாக இருக்கும், ஆனால் இப்போதோ மறைமுகமான - அதிநவீனமான ஏதோவொரு வகையில் மட்டுமே அம்மரபணுக்களுக்கு நல்லது செய்யும் வேறு ஒன்றைச் செய்துகொண்டிருக்கும்.

மனிதர்களைப் பொறுத்தமட்டில் பாலியல் ஆசை எப்படி டார்வினிய உய்வு மதிப்பைக் கொண்டுள்ளது என்பதைக் கண்டு கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை எவரும் கண்டு கொள்ளலாம். எனவே இதைப் பொதுமைப்படுத்துவதில் நமக்குச் சிறிதே சிக்கல் உள்ளது. நம் முன்னோர்கள் செய்ததைப் போல, நாமும் இப்போது கட்டையைக் கையில் வைத்துக்கொண்டு அலைவதில்லை, அதைக்கொண்டு பெண்ணின் தலையில் அடிப்பதில்லை. அதே வேலையைச் செய்து முடிக்க இப்போது அதிநவீன - புதிய வழிமுறைகளைப் பயன்படுத்துகிறோம். எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரைக் கவர்வதற்காக, திறன்மிகு பந்தயக் கார்களை வாங்குவதற்கென்று மரபணுக்கள் உள்ளன என்று அர்த்தமில்லை. அந்த உள்நோக்கத்திற்கான மரபணுக்கள் உள்ளன -- எதிர் பாலினத்தைக் கவரத் தேவையான அனைத்தையும் செய்வதற்கு, நீங்கள் எந்தச் சூழலில் இருக்கிறீர்களோ அதற்கேற்றபடி அதைச் செய்வதற்கு என்று உள்ளன. சூழல் மாறுவதால் வழிமுறைகள் மாறுகின்றன. இப்போது, ஒப்பீட்டளவில் இன்னும் எளிமையான அல்லது மேலோட்டமான ஓர் எடுத்துக்காட்டு -- இது சிலரைப் புண்படுத்தக் கூட வாய்ப்புள்ளது, அதற்கெல்லாம் நான் கவலையும் பட்டுக்கொண்டிருக்க முடியாது.

வெளிப்படையாகத் தெரியாத பிற வகையான மரபணுக்கள் இருக்கும் -- வணிக உலகில் உள்ள மேலாளர்கள் பொறுப்பில் மென்மேலும் உயரும் போது ஏன் தம் மேசைகளோ கம்பளங்களோ வேறு ஏதோவொன்றோ பெரிதாக வேண்டும் - இன்னும் பெரியதாக வேண்டும் என்று கேட்கிறார்கள் என்று சிலர் எண்ணலாம். நவீன காலச் சூழலில் பெரிய மேசை எனப் படுவது, ஆப்பிரிக்க ப்ளைஸ்டசீனில் இயற்கைத் தேர்வு நடந்து கொண்டிருந்த காலத்தில் இருந்த வேறொன்றுக்குச் சமமானதாக இருக்கும் என்பது போன்ற வேடிக்கையான விளக்கங்களைக் கொண்டு வரலாம். நம் மரபணுக்கள் இயற்கைத் தேர்வு செய்துகொண்டவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையான மேசைகளும் அலுவலகக் கட்டங்களும் தொலைபேசிகளும் இன்ன பிற பொருள்களும் நிறைந்த உலகில் வாழ்கிறோம், அதனால் நம்மிடம் இருக்கும் பெரிய மூளையைக் கொண்டு இப்போது அதை ஒரு பெரிய மேசையாக மாற்றியிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நுணுக்கத்துக்கும் டார்வினிய விளக்கம் கொடுக்கவும் முயற்சித்துக் கொண்டும் இருக்கக்கூடாது.

இப்போது முற்றிலும் மாறுபட்ட இன்னொரு கருத்து - மூளைகள் போதுமான அளவு பெரியவையாக மாறியபோது, ​​​​அவை மற்ற திசைகளிலும் புறப்பட்டன, இதற்கு மரபணு உய்வோடு எந்த உண்மையான தொடர்பும் இப்போது இல்லை. படம் வரைவது அல்லது நூல் எழுதுவது போன்ற இலக்குகளை அடைய நம்மை நாமே உந்துகிறோம், இது நேரடியாக நம் உய்வுக்கோ நம் மரபணுக்களின் உய்வுக்கோ பயனளிக்கும் என்று கற்பனையின் எந்த நீளத்துக்குச் சென்றாலும் கூற முடியாது. ஓர் இலக்கை நோக்கித் தன்னைத்தானே உந்தித் செல்லும் போக்கு டார்வினிய உய்வு மதிப்பைக் கொண்டுள்ளது என்று வேண்டுமானால் கூறலாம். ஓர் இலக்கை அமைத்துக்கொண்டு, அதை அடைய எல்லா வழிகளிலும் செயல்படும் போக்கு -- ஒருவேளை அது டார்வினிய உய்வு மதிப்பைக் கொண்டிருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் நாம் அமைக்கும் இலக்குகள் ஒரு புத்தகத்தை முடிப்பது போன்றவைதான், அதே சமயம் நம் மூளையில் இருக்கும் இலக்கு அமைக்கும் இயந்திரம், ஓர் எருமையைப் பிடிப்பது அல்லது ஒரு தண்ணீர் ஊற்றைக் கண்டுபிடிப்பது போன்ற வேறு நோக்கத்திற்காக முதலில் அமைக்கப்பட்டதுதான். எனவே அந்த இயங்கமைப்பு ஒரு நோக்கத்திற்காக அங்கு வைக்கப்பட்டது, ஆனால் இப்போது நமது மூளை போதுமான அளவு பெரியதாகிவிட்டதால் அந்த இயங்கமைப்பு வேறு திசைகளுக்குச் சென்றுள்ளது. இது, தன்னிச்சை (free will) பற்றியும், மரபணுக்கள் இயற்கையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இயற்கைத் தேர்வின் உலகத்திலிருந்து நம்மை விடுவித்து நமக்கென்று ஒரு புதிய உலகத்தை - அது ஓர் எதிர்-டார்வினிய உலகமாக இருக்கும் - உருவாக்குவதற்கான முடிவை நாம் வேண்டுமென்றே எடுக்கலாம் என்பது பற்றியும் நான் முன்பு கூறிய இடத்துக்கே கொண்டுவந்துவிடுகிறது. 

கேள்வி: டார்வினிய உலகில் இருந்து நாம் எந்த வகையில் நம்மை விடுவித்துக் கொள்ளலாம்? இது ஓர் அறிவியற் பிரச்சனை அல்லாது ஒரு தத்துவப் பிரச்சினை என்றால், அதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

திரு. டாக்கின்ஸ்: டார்வினிய உலகத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டுமென்று வேண்டுமென்றே முடிவெடுக்க முடியும் என்ற உணர்வால் சிலர் குழம்பிப்போய்விடுகிறார்கள். ம்ம்ம், குழம்பிப் போகிறோம் என்பது நமக்குத் தெரியும், ஏனென்றால் ஏற்றுக்கொள்ள முடியாதது போல் இருக்கும் ஒவ்வொரு முறையும் நாம் டார்வினியத்திற்கு எதிரான ஒன்றைச் செய்கிறோம். என்ன நடக்கிறது என்றால், தெளிவான நல்ல டார்வினியக் காரணங்களுக்காகவே டார்வினிய இயற்கைத் தேர்வு நமக்குள் பாலியல் ஆசையை உருவாக்கியுள்ளது. இயற்கையில், கருத்தடை சாதனங்கள் இல்லாத இயற்கையில், பாலியல் ஆசை உங்களைப் புணர்ச்சிக்கு இட்டுச் செல்லும். புணர்ச்சி குழந்தைகளுக்கு வழிவகுக்கும். மரபணுக்களின் தேவை அவ்வளவுதான். நவீன உலகில் கருத்தடை சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, எனவே அதனால் பின்விளைவு இல்லாமல், குழந்தைகளைப் பெறாமல், புணர்ச்சியை அனுபவிக்க முடிகிறது. அப்படியே செய்கிறோம். நம்மில் பலர் எப்போதும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். இது வெளிப்படையாகவும் உண்மையாகவும் டார்வினியத்திற்கு எதிரானது -- எதிர்-டார்வினியம், தன்னல மரபணுக்களின் கட்டளைகளுக்கு எதிரானது. உடலுறவை அனுபவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மூளை நமக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான இன்பங்களை அனுபவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட மூளைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ளன. சில சமயங்களில் நிறையக் குழந்தைகளைப் பெற்றுப் போடுவது - எந்நேரமும் அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டியதிருக்குமே - இன்பக் களியாட்டங்களுக்கோ இன்ன பிற பயனுள்ள பொழுதுபோக்குகளுக்கோ ஒத்துவராது என்பதை நன்கு உணர்ந்து புரிந்துகொண்டுவிட்டோம். எனவே, உடலுறவு - குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டியதிருப்பதால் உடலுறவுக்குப் போட்டியாக இருக்கும் மற்றவை ஆகிய இரண்டையும் அனுபவிக்க வேண்டும் என்று அறிந்து உணர்ந்து முடிவெடுப்பதன் மூலம் இரு உலகங்களிலும் சிறந்ததைப் பெறுகிறோம். நம் மூளையின் கண்ணோட்டத்தில் இரு உலகங்களிலும் சிறந்ததை அடைந்துவிட்டோம், ஆனால் மரபணுவின் கண்ணோட்டத்தில் நிச்சயமாக இல்லை.

கேள்வி: மதம் அதனளவில் மனித உய்வை மேம்படுத்தும் ஒன்றாகக் கருதப்படலாமா?

திரு. டாக்கின்ஸ்: மதம் ஒரு வழக்கமான டார்வினிய உய்வு மதிப்பைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை நான் குறிப்பிட்டிருக்க வேண்டும். மதத்தை ஒரு வைரஸ் என்று சொல்லியிருக்கிறேன், இது மரபணுவை விட போன்மி (meme) மட்டத்தில் உய்வு மதிப்பு உடையது, இங்கு போன்மி என்பது பண்பாட்டிடை மரபுப்பேறு (intercultural inheritance). ஆனால் இது நிச்சயமாக வழக்கமான மரபணு மட்டத்திலும் உய்வு மதிப்பைக் கொண்டிருக்கக்கூடும். மதம், மதம் சார்ந்த மனிதர்களின் உய்வை மேம்படுத்தலாம். அல்லது சிலர் ஒருவிதமான குழுத்தேர்வை நம்புகிறார்கள் -- அது ஒரு குழுவின் உய்வை மேம்படுத்தலாம். இதில், ஒரு குழு, ஒரு பழங்குடியினரின் - போர்த்தனமான கடவுளைக் கொண்டுள்ள, அந்தப் பழங்குடியினரின் நன்மைக்காகத் தங்களையே தியாகம் செய்யும்படி - தற்கொலை வெறியோடும் துணிச்சலோடும் போரிடும் தனது இளைஞர்களை அறிவுறுத்தும் பழங்குடியினரின் - நன்மைகளைப் பார்ப்பது கடினம் அல்ல. சிலுவைப்போர்களில் இது நிச்சயமாக வேலை செய்தது. ஜப்பானிய காமக்காஸி போராளிகளுக்கு இது நிச்சயமாக வேலை செய்தது. இஸ்லாமியத் தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு இது நிச்சயமாக வேலை செய்கிறது. அத்தகைய பழங்குடி, அத்தகைய குழு, போரில் பெரும் வெற்றியைப் பெற முடியும், அதன் மூலம் தன்னைப் பரப்பி, தன் குழுவின் மரபணுக்களைப் பரப்பி, நிச்சயமாக குழுவின் போன்மிகளைப் பரப்பி, குழுவின் கருத்துக்களைப் பரப்பலாம்.

ஆனால் தனிமனித உய்வுக்கு? மதம் தனிமனித உய்வை மேம்படுத்துவதும் சாத்தியமே. சராசரியாக நம் சமூகத்தில் உள்ள மதவாதிகள் மதம் சாராதவர்களை விடச் சற்று ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதற்கு சில மருத்துவச் சான்றுகள் கூட உள்ளன -- ஒருவேளை அவர்கள் மன அழுத்தம் தொடர்பான நோய்களால் குறைவாகப் பாதிக்கப்படலாம். மன அழுத்தம் நோயை உண்டாக்கும் என்பது தெரிந்ததே. பல நோய்கள், குறிப்பாக மன அழுத்தம் தொடர்பான நோய்கள், மருந்துப்போலி (placebos) மூலம் குணப்படுத்த முடியும் என்பதும் நாம் அறிந்ததே  -- மருந்துப் போலி என்பது, மருந்துப்பலன் இல்லாத மாத்திரைகள், ஆனால் மக்கள் அவை வேலை செய்கின்றன என்று நம்புவதால் வேலை செய்பவை.

மதம் ஆரோக்கியத்தையும் அதனால் உய்வையும் மேம்படுத்தும், எனவே மதத்திற்கு ஆதரவாக உண்மையில் டார்வினிய உய்வு மதிப்பும் டார்வினியத் தேர்வும் இருக்கக்கூடும் என்று என்னால் நம்ப முடிகிறது. ஆனால் அது எதுவுமே மதங்கள் கொண்டாடும் உரிமைக் கோரிக்கைகளின் உண்மை மதிப்பை நிச்சயமாகத் தாங்கிப் பிடிக்கவே பிடிக்காது.

கேள்வி: நீங்கள் தன்னிச்சை என்பதை மத ரீதியாக விளக்கவில்லை என்றால், தன்னிச்சை என்ற ஒன்று எப்படி வந்தது என்பதை - அதன் மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சியை (Ontology) எப்படி விளக்குவீர்கள்? 

திரு. டாக்கின்ஸ்: தன்னிச்சை பற்றிய கேள்வி ஒரு ஆழமான தத்துவப் பிரச்சனை. மேலும், நான் முன்பு கூறியது போல், "மரபணுக்கள்" என்ற சொல்லைச் சேர்ப்பதன் மூலமே எதுவும் மாறாது. எனவே, மதமற்ற முறையில் தன்னிச்சையை எப்படி விளக்குவது என்பது பற்றி நீங்கள் கேள்வி கேட்கலாம் -- ஒரு டார்வினியருக்கு, அல்லது நாம் எல்லோரும் மரபணு இயந்திரங்கள் என்று நம்பும் ஒருவருக்கு என்று மட்டுமல்ல, தத்துவ ரீதியாக நிர்ணயமான நிலைப்பாட்டை எடுக்கும் எவருக்கும்.

எனவே மரபணுக்களைப் பற்றிய அனைத்தையும் மறந்துவிட்டு, முன்வரையறையியல் தத்துவத்தைப் பற்றி முழுவதுமாக சிந்தியுங்கள். இப்போது, தன்னை ஒரு முன்வரையறையியலாளர்  என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும், தனக்குத் தன்னிச்சை உணர்வு என்று ஒன்று இருப்பதை அகவயமாக அறிவார்கள். சுதந்திரமாக இருப்பது எப்படி இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அடிப்படையிலேயே நாம் முன்வரையறையோடு இருக்கிறோமா என்பது மட்டுமே வாதம். அது ஒரு நிலைப்பாடு, அதை எடுப்பதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அந்த நிலைப்பாட்டில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. நான் ஒரு முடிவெடுத்து விட்டேன் என்று எண்ணும் போது -- என் சொந்த விருப்பத்துடன் (அதாவது, தன்னிச்சையோடு), நான் ஒரு சுதந்திரமான தேர்வை மேற்கொண்டதாக உணரும் போது, ​​ஒன்றைச் செய்யாமல் மற்றொன்றைச் செய்ய முடிவு செய்தேன் எனும் போது -- 'வேறொரு நாட்டுக்குக் குடியேற முடிவு செய்துள்ளேன் அல்லது குடியேற வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்’, அல்லது ‘அந்த வீட்டை விட இந்த வீட்டை வாங்கலாம் என முடிவு செய்துள்ளேன்’ எனும் போது -- அதுதான் தன்னிச்சை என்று உணர்கிறேன். ஆனால் புலம்பெயர்வது அல்லது புலம்பெயராமல் இருப்பது எனும் எனது முடிவு உண்மையில் என் மூளையில் நடந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட மற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டதாக இருக்க முழுக்கவும் வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் அடிப்படையில் ஒரு திட்டவட்டமான இயற்பியல் காரணத்தைக் கொண்டுள்ளன.

ஆனால் அது முக்கியமில்லை. நான் சொல்லும் இந்த வகையான அடிப்படையில் மாயையான தன்னிச்சை இருந்தால், அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளில் (உண்மையில் அது என்ன விதமானது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை) நாம் உண்மையிலேயே தன்னிச்சை கொண்டிருந்தால், நாம் தன்னிச்சை கொண்டிருப்பதாக உணரும் விதத்தில் எந்த வேறுபாடும் இல்லை. அதில் எந்த விதமான வேறுபாட்டையும் உணர முடியாது. சுயநல மரபணுக்களின் கட்டளைகளில் இருந்து விலகி, கருத்தடை போன்ற டார்வினியத்திற்கு எதிரான சில நடைமுறைகளைப் பயிற்சி செய்ய நாம் சுதந்திரமாக உள்ளோமா என்று கேட்கும்போது, சுயநல மரபணு பற்றி நாம் செய்து கொண்டிருக்கும் எந்த வாதங்களையும் அது நிச்சயமாகப் பாதிக்காது. புலம்பெயர்வதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதை விட இதைக் கற்பனை செய்வது கடினம் அல்ல என்பது தெளிவாகத் தெரியும். நாம் அத்தகைய முடிவுகளை எடுக்கிறோம் என்பதே உண்மை. உண்மை என்னவென்றால், கருத்தடை முறையைப் பயன்படுத்துவதற்கான முடிவை எடுக்கிறோம். மேலும், கருத்தடை என்பது கருத்தடையின் வெறும் இருப்பு -- அல்லது ஒருவர் புலம்பெயரலாமா என்று முடிவெடுக்க முடியும் என்ற உண்மையின் இருப்பு -- அது போன்ற சர்வ சாதாரணமான ஒன்று - காலமெல்லாம் உள்ள பெரிய தத்துவப் பிரச்சனைகளில் ஒன்றைத் தீர்க்கப் போவதில்லை. அது எப்படியும் இருந்து கொண்டேதான் இருக்கப் போகிறது. அது உண்மையில் நாம் எப்படி உணர்கிறோம் அல்லது என்ன செய்கிறோம் என்பதைப் பாதிக்காது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்