ஆரிய-திராவிடம்: போரா? அக்கப்போரா??


சக ஆங்கிலப் பதிவர் ஒருவர் ஆரிய-திராவிடப் பிரச்சனையில் என்னுடைய கருத்துகள் பற்றிக் கேட்டிருந்தார். கடந்த சில நாட்களில் அவர் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கோர் இடுகையின் பெயரைச் சொல்லிப் படிக்கச் சொன்னேன். உன் கேள்விக்கான பதில் அதில் இருக்கிறதென்று. எல்லாக் கேள்விகளுக்கும் கிடைக்கும் ஒரே மாதிரியான இந்த இயந்திரத்தனமான பதிலில் கடுப்பாகி விட்டார் போல்த்தேரிகிறது. இம்முறை வித்தியாசமாக நான் இதுவரை பதிவுலகில் வாய் திறந்து பேசியிராத புதியதொரு விஷயம் பற்றிக் கேட்டார். அத்தகைய கேள்விகளுக்கும் என்னிடம் இயந்திரத்தனமான பதில் ஒன்று இருக்கிறது என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாகப்பட்டது - "ம்ம்ம்... நீண்ட நாட்களாகவே இதைப் பற்றி ஓர் இடுகை எழுதலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறேன்!" என்பேன் அல்லது "ம்ம்ம்... அது ஏற்கனவே என் லிஸ்ட்டில் இருக்கிறது!" என்பேன். எனவே, அவருக்கும் அந்த இரண்டில் ஒன்றைத்தான் பதிலாகக் கொடுத்தேன். இத்தோடு என்னிடம் கேள்வி கேட்பதையே நிறுத்தி விடுவார் என நினைக்கிறேன். :)

சரி. மேட்டருக்குள் போவோம். ஆரிய-திராவிடப் பிரச்சனை பற்றி என்ன நினைக்கிறேன்? என்னைப் பற்றி நன்றாக அறிந்தவர்களுக்கு ஏற்கனவே இது தெரிந்திருக்கும். எல்லாப் பிரச்சனையிலும் எனக்கென்று ஒரு கருத்து இருக்க வேண்டும் என்பதில்லை. கருத்துருவாக்கம் இன்னும் கருத்தரித்துக் கொண்டிருக்கிறது என்கிற மாதிரியும் பல நிலைப்பாடுகள் உள்ளன. அதில் எந்தத் தவறும் இல்லை என்றே நினைக்கிறேன். அடித்துக் கொள்ளும் இரு சாராரில் ஒருவரைக் கூமுட்டைகள் என்று அழைக்காத காரணத்தால் இரு சாராராலுமே நான் கூமுட்டை என்று அழைக்கப் படுவேன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இன்னும் நான் கற்றுக்குட்டியாகவே இருப்பதாகக் கருதுகிறேன். அதனால் இருவரில் யார் புத்திசாலி என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை. அவ்வளவுதான். ஆரிய-திராவிடப் பிரச்சனையிலும் எனக்கு அழுத்தமான நிலைப்பாடுகள் இல்லை. அப்படியே தலைகீழான இருவேறு கருத்துக்களை இரு சாரார், அதே அளவு இரைச்சலோடு வாதிடும்போது, இரண்டுக்கும் நடுவில் இருக்கும் ஒரு பாதையைப் பிடித்துப் போவது அல்லது அந்த இடத்திலேயே நின்று விடுவது கொஞ்சம் புத்திசாலித் தனமான முடிவாகப் படுகிறது. அதில்தான் வேலை கெடாமல் - நேரம் வீணாகாமல் இருக்கிறது. இல்லையா?

எந்தப் பிரச்சனையிலுமே ஒருவரின் பின்னணியை வைத்து அவருடைய நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளலாம். எது புத்திசாலித்தனமாக இருக்கிறது என்பதை விட எது நமக்கு நல்லதாக இருக்கும் என்று கணக்குப் போட்டுத்தான் நம் நிலைப்பாடுகளை முடிவு செய்கிறோம். தொலைநோக்கில் நமக்கும் நம் சமூகத்துக்கும் எது நல்லதாக இருக்கும் என்று மின்னல் வேகத்தில் கணக்குப் போட்டுச் சொல்லும் மூளையின் சில பகுதிகள்தாம் நாம் எந்தப் பக்கம் என்பதை முடிவு செய்கின்றன. நம்முடைய கருத்துக்களை முடிவு செய்யும் இன்னொரு காரணி - நம் சுற்றுப் புறம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் இதைப் பார்க்க வேண்டும் என்கிற மாதிரியான சூழ்நிலை இருக்கிறது. ஏனென்றால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த எல்லோருமே இப்படித்தான் இதைப் பார்க்கிறார்கள். எடுத்துக்காட்டாக, "நீ இது. இந்த மண் காலம் காலமாக உனக்குச் சொந்தம்!" என்று ஒரு கருத்து வைக்கப் பட்டால் கேட்பவர் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். அதையே, "நீ இது. நீ இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு பிழைக்க வந்தவன். வந்தேறி!" என்றால் அதைப் பொய்ப்பிப்பதற்கான வழிகளைத்தான் அவர் தேடுவார். ஏன்? ஏனென்றால், அது அவர்களுடைய அடிப்படை உரிமையிலேயே கை வைப்பதாக இருக்கிறது. எனவே, அது போன்ற உள் நோக்கங்களோடு வைக்கப்படும் கருத்துகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு கருத்து அவ்வளவு உண்மையானால் எதிர்த் தரப்பில் இருப்போரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த மாதிரியான ஒரு கருத்தொற்றுமை இந்தப் பிரச்சனையில் இல்லை. இதுவே இந்தப் பிரச்சனையில் எனக்கென்று ஒரு நிலைப்பாடு கொள்தல் மேலும் சிரமமானதற்குக் காரணம்.

எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் தனிமைப்படுத்த முயற்சிக்கும் அல்லது வந்தேறி என்று பட்டமளிக்க முயற்சிக்கும் எந்தக் கொள்கையும் என்னை ஈர்ப்பதில்லை. இன, மொழி, மத, சாதி, பிறப்பிட ரீதியிலான இரண்டாம் பட்ச நடத்துதலை எந்த சமூகத்தின் மீதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. திராவிடர் ஆரியரை வந்தேறிகள் என்பதும் சரி, இந்துக்கள் முகமதியரை வந்தேறிகள் என்பதும் சரி, தமிழகத்தில் உள்ள தமிழர்கள் இங்குள்ள தெலுங்கர்களை வந்தேறிகள் என்பதும் சரி, கர்நாடகத்துக் கன்னடர்கள் தமிழர்களை வந்தேறிகள் என்பதும் சரி... எதையுமே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு போய் விட்ட ஒரே காரணத்துக்காக ஒருவர் மனிதனாக நடத்தப் படக் கூடாது என்றில்லை. அவர்களும் சக மனிதனாகவே நடத்தப் பட வேண்டும்; தேவையில்லாமல் ஒவ்வொரு நாளும் அவர்களுடைய பிறப்பிடம் அல்லது பூர்வீகம் பற்றி நினைவு படுத்திக் கொண்டே இருக்கக் கூடாது. அதே வேளையில், வந்தேறியவர்கள் காலம் காலமாக அந்த மண்ணில் இருந்து வந்த அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஏதாவது செய்தால் அவை பிரச்சனையாவது இயற்கையே.

எனவே, அதில் என் கருத்து என்ன என்பதற்கு முன்பாக, முதலில் பிரச்சனை என்னவென்று பார்ப்போம். பிரச்சனை என்ன? ஐயோ... அது பற்றி யோசித்தாலே மண்டை சுற்றுகிறது. அது பற்றி ஒவ்வொருத்தரும் ஒரு கருத்து சொல்கிறார். தமிழனாகப் பிறந்து விட்டதால், பிறந்தது முதல் இன்று வரை எத்தனையோ விதமான கதைகளைக் கேட்டு விட்டேன் - படித்து விட்டேன். அவற்றுள் சில கதைகள் நீங்கள் கேள்வியே பட்டிருக்க மாட்டீர்கள். இந்த இடுகையில், என்னுடைய கருத்தைச் சொல்வதை விட, இந்தப் பிரச்சனையில் எத்தனை விதமான கருத்துகள் இருக்கின்றனவோ அத்தனை விதமான கருத்துகளையும் உங்கள் முன் கொண்டு வந்து போட முயலலாம் என்றெண்ணுகிறேன். நேரடியாகச் சொல்ல வேண்டுமானால், இந்தப் பிரச்சனையில் நான் குழம்பித்தான் கிடக்கிறேன். அதற்காகப் பெரிதும் வருந்தவும் இல்லை. எனக்கென்று ஒரு கருத்தும் இல்லை - கொள்கையும் இல்லை. ஆனால், அதுவே நாம் இது பற்றிப் பேசவே கூடாது என்று தடையாக இருக்க வேண்டியதில்லை.

நான் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது போல, எழுதுபவன் (நல்லாப் பாத்துக்குங்க - எழுத்தாளன் என்றோ எழுத்தை ஆள்பவன் என்றோவெல்லாம் சொல்லவில்லை. எழுதுபவன் என்று மட்டுமே சொல்கிறேன். இதை வைத்து யாரும் சண்டைக்கு வர வேண்டாம்!) எப்போதும் வாசிப்போரின் குழப்பங்களைத் தீர்ப்பவனாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. தன் எழுத்தைப் படித்து விட்டு ஒருவர் வாசிக்க ஆரம்பித்த போது இருந்ததை விட இன்னும் கொஞ்சம் குழம்பிய நிலைக்குப் போவார் என்றால் அதற்காகவும் எழுதுபவன் திருப்திப் பட்டுக் கொள்ளலாம். ஏனென்றால், அந்த இடத்தில்தான் வாசகனின் கூடுதல்த் தேடலுக்கு விதை போடப் படுகிறது. ஒத்துக் கொள்கிறீர்களா? அல்லது, குழப்பி விட்டேனா? :)

கருத்து 1 என்ன சொல்கிறதென்றால்... அது மிகவும் எளிதான - குழப்பம் இல்லாத கருத்து. தென்னிந்தியர் அனைவரும் திராவிடர்; வட இந்தியர் அனைவரும் ஆரியர்; எங்கோ இருந்து வந்த ஆரியர்கள் திராவிடர்களைத் தெற்கு நோக்கி அடித்து விரட்டினார்கள். இந்தக் கருத்துப் படி, திராவிட மொழி பேசுவோர் அனைவரும் திராவிடர்; மற்றோர் அனைவரும் ஆரியர். திராவிட மொழிகள் என்பவை யாவை? தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகியவையும் இன்னும் சில பெயர் தெரியாத சிறு சிறு மொழிகளும்! அதில் தென்னிந்திய பிராமணர்களும் அடக்கம். ஏனென்றால், அவர்களும் இம்மொழிகளில் ஒன்றைத்தானே வீட்டில் பேசுகிறார்கள். வடமொழி அல்லவே. ஒரு விதத்தில் இதிலும் அர்த்தம் இருக்கிறது. காலம் காலமாகவே ஒரு இனத்தை அடையாளம் காண மொழி ஒரு முக்கியக் காரணியாக இருந்திருக்கிறது. மனிதன் தோன்றிய காலம் முதல் என்று சொல்ல முடியாது எனினும் மொழி தோன்றிய நாள் முதல் என்று சொல்லலாம். இப்போது அவர்கள் வீட்டில் தமிழோ கன்னடமோ பேசுகிறார்கள் என்றால் சில பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய மூதாதையர் வேறொரு மொழி பேசுவோராக இருந்திருக்க முடியாது. சரிதானே! ஆனால், இந்தக் கருத்தைச் சொல்லி அடித்துக் கொள்வோர் ஊருக்குள் நிறையப் பேர் இல்லை.

கருத்து 2 தான் நம்மையெல்லாம் கடந்த நாற்பதைம்பது வருடங்களாகப் போட்டு வாட்டி எடுப்பது. அது சொல்வது என்னவென்றால், இன்று இந்தியா என்று அழைக்கப் படும் நிலப்பரப்பு முழுமையுமே திராவிடர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது; இமயம் முதல் குமரி வரை திராவிடரே நிறைந்திருந்தனர்; சிந்து சமவெளி நாகரிகம் கூட திராவிடருடையதே; மத்திய ஆசியாவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த ஆரியர், திராவிடர் அனைவரையும் அடித்துத் தெற்கே அனுப்பி வைத்து விட்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளைப் பிடித்துக் கொண்டார்கள். திராவிடர்கள் கிழக்குப் பக்கமும் அடித்து விரட்டப் பட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். இந்தக் கருத்தின் படி, பிராமணர் அனைவரும் ஆரியர்; மற்றவர் அனைவரும் திராவிடர். அப்படியானால், தென்னிந்திய பிராமணர் ஒருவர் ஆரியர் என்றும் வட இந்திய மற்றவர் ஒருவர் திராவிடர் என்றும் ஆகுமா? ஆம் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், தன்னை திராவிடராக அடையாளம் காட்டிக் கொள்ளும் வட இந்திய மற்றவர் ஒருவரை இன்று வரை நான் சந்திக்க வில்லை. தென்னிந்திய மற்றவர்கள் மட்டுமே தம்மைப் பெருமையோடு திராவிடர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தென்னிந்திய மற்றவர்கள் மட்டுமே இது பற்றி அதிகம் பேசவும் செய்கிறார்கள்.

இதெல்லாம் நடந்து நீண்ட காலம் ஆகி விட்டதால் - ஏகப்பட்ட கலப்புகளும் நடந்து விட்டதால், யார் ஆரியர் யார் திராவிடர் என்றெல்லாம் இப்போது தெளிவாகப் பிரித்துக் கண்டு பிடிக்க முடியாது என்றும் சிலர் சொல்கிறார்கள். அதற்கொருவர் விளக்கம் கொடுக்கிறார் - "நீ எந்த ஊர்க்காரன் என்பதையெல்லாம் விட்டு விடு. சிவப்பாக இருந்தால் நீ ஆரியன்; கறுப்பாக இருந்தால் நீ திராவிடன்!". இது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் அதிலும் ஓர் அர்த்தம் இருப்பது போல்த் தெரிகிறது. பிராமணர்கள் ஆரியர் - மற்றவர்கள் திராவிடர் என்கிற கருத்துப் படி பார்த்தால் - பிற்காலத்தில் ஏகப் பட்ட கலப்புகள் நிகழ்ந்து விட்டன என்பதை ஏற்றுக் கொண்டு பார்த்தால், இது சரியென்று தான் படுகிறது. சராசரியாக பிராமணர்கள் மற்றவர்களை விட நிறம் கூடுதலாகத்தானே இருக்கிறார்கள். ஆனால், ஒரு பிராமணக் குடும்பம் பல தலைமுறைகளாகக் காட்டு வேலை பார்த்தால் ஓரிரு தலைமுறைகளுக்கு அடுத்து அவர்களுடைய சந்ததியர் கறுப்பாகி விடுவார்கள். அதுபோலவே, மற்றவர் குடும்பம் ஒன்று பல தலைமுறைகளாக வீட்டுக்குள்ளேயே இருந்து பார்க்கும் வேலை பார்த்தால் ஓரிரு தலைமுறைகளுக்குப் பின் அவர்கள் சந்ததியர் நிறம் கூடி விடுவார்கள். ஆனால், இவையெல்லாம் விதிவிலக்குகள். பொதுவாகப் பார்த்தால், ஒரு சராசரி பிராமணர் சராசரி மற்றவரை விடக் கூடுதல் நிறம் கொண்டிருக்கிறார். எனவே, இதை நாம் அரை மனதோடாவது ஏற்றுக் கொள்ளலாம்.

இந்தக் கருத்து சொல்லும் இன்னொரு கருத்து - திராவிடர்கள் ஆரியர்கள் போலத் திறமை படைத்தவர்களாக இருக்க வில்லை. அதனால்தான் வந்தவர்களிடம் நாட்டை இழந்து விட்டு அவர்களாலேயே ஆளப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆரியர் வருகைக்கு முன் இம்மண்ணில் மதம் என்று ஒன்றே இருக்க வில்லை; அப்போது பேசப்பட்ட மொழியின் பெயர் திராவிடம்; அவர்கள்தாம் இந்து மதத்தையும் வடமொழியையும் கொண்டு வந்தார்கள்; அவர்கள்தாம் காலா காலத்துக்கும் அவர்களுடைய மேன்மையைத் தக்க வைத்துக் கொள்ள சாதி என்ற அமைப்பை அறிமுகப் படுத்தினார்கள் என்றும் சொல்கிறார்கள்.

இந்தக் கருத்தை முன்வைத்து வாதிடுவோருக்கு என்னுடைய ஒரே கேள்வி - அவர்கள் அவ்வளவு பலம் பொருந்தியவர்கள் என்றால், அவர்களுடைய மொழியையும் திராவிடர் மீது திணித்திருக்கலாமே? பின் ஏன் திராவிடரின் மொழியை அவர்கள் தம்முடையதாக ஏற்றுக் கொண்டார்கள்? பொதுவாக, இடத்தை மாற்றுவோர் நிறைய உண்டு; மதத்தை மாற்றிக் கொள்வோர் நிறைய உண்டு; தாய்மொழியை மாற்றிக் கொண்டோர் நிறைய இல்லை. எனவே, பிராமணர்கள் தம் தாய்மொழியை வட மொழியில் இருந்து தமிழுக்கோ கன்னடத்துக்கோ மற்றெந்த திராவிட மொழிக்கோ மாற்றியிருக்க முடியாது என்றும் கொள்ளலாம் அல்லவா?

அதே வேளையில், இங்கும் விதிவிலக்குகள் இருப்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். படையெடுத்து வருவோர் எல்லோருமே மொழி தவிர்த்து எல்லாத்தையுமே தாக்குவார்கள். கெய்ரோவில் இருந்து வந்ததாகச் சொல்லும் முகமதியர்கள் நம்ம ஊரில் தமிழ்தான் பேசுகிறார்கள். போர்ச்சுகீசில் இருந்து வந்ததாகச் சொல்லும் கிறித்தவர்கள் கேரளத்தில் மலையாளம்தான் பேசுகிறார்கள். அப்படியானால், வேறொரு மொழியைப் பேசிக்கொண்டு வந்த பிராமணர்கள் தம் தாய்மொழியை உள்ளூர் மொழிக்கு மாற்றிக் கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது எனலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது என்று நாம் நம்புவதற்கு இடம் கொடுக்கும் இன்னொரு விஷயம் - விபரம் குறைந்தவர்களைத் தம் மொழியைக் கற்கச் சொல்வதை விடுத்து விபரமானவர்கள்தாம் எளிய மக்களின் மொழியை எளிதாகப் புரிந்து கொள்வார்கள். அதன்படி பார்த்தால் ஆரியர்கள் திராவிட மொழிகளைக் கற்றுக் கொண்டதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

இந்தக் கருத்துக்கான இன்னோர் ஆதரவு வாதம் - ஐரோப்பிய மொழிகளில் நிறைய வடமொழித் தாக்கம் இருக்கிறது என்பது. அப்படியானால்? வடமொழி மத்திய ஆசியாவில் இருந்து வந்தது. சரி. மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தது. பின் ஏன் இந்தியாவில் மட்டும் அது உயிரோடிருக்கிறது; ஐரோப்பாவிலோ மத்திய ஆசியாவிலோ அடையாளமே இல்லாமல் அழிந்து போயிருக்கிறது? அப்படியானால், ஆரியர்கள் எல்லோருமே தம் இருப்பிடங்களைக் காலி செய்து கொண்டு மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து விட்டார்களா? இது எளிதில் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை. ஆனால், ஏற்றுக் கொள்ள முடியாத எத்தனையோ கதைகளை உள்வாங்கிக் கொண்டிருப்பதுதான் வரலாறு என்பதையும் நான் அறிவேன். எனவே, என்னால் சொல்ல முடிந்ததெல்லாம் - என்னால் இதில் ஒரு தீர்ப்புச் சொல்ல முடியாது என்பதே.

இன்னொரு தொடர்புடைய கேள்வி - ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியா வந்தார்கள் என்றால், அவர்களுடைய பண்பாடு ஏன் இந்தியாவில் மட்டும் உயிரோடிருக்கிறது; மத்திய ஆசியாவிலோ ஐரோப்பாவிலோ இல்லவே இல்லை? அதற்கும் பொருள் எல்லா ஆரியருமே காலி செய்து ஓடி வந்தார்கள் என்பதா? யூதர்களுக்கு நிகழ்ந்தது போல - இலங்கைத் தமிழர்களுக்கு நிகழ்ந்தது போல (இரண்டும் வெவ்வேறு என்பதையும் நான் அறிவேன்!), இன ஒழிப்பு நிகழ்ந்திருந்தால் அதுவும் சாத்தியம்தான். ஆனால், அப்படியோர் இன ஒழிப்பு ஆரியருக்கு எதிராக நடந்ததாக நான் ஏதும் கேள்விப் பட்டதில்லை. அதிலும் ஒரு கேள்வி இருக்கிறது - வந்தேறிய நாட்டைக் கைப்பற்றும் அளவுக்கு ஆற்றல் மிக்கவர்கள், அதற்கு முன் இருந்த தம் சொந்த நாட்டில் மற்றவர்களை எப்படிக் கையாள முடியாமல் போயிருப்பார்கள்? ஆக, இதில் ஏதோ ஒரு புரியாத குளறுபடி இருக்கிறது.

கருத்து 3 சொல்வது என்ன தெரியுமா? ஆரம்பத்தில் இப்படியொரு பிரச்சனையே இருக்க வில்லை; பிரித்தாளும் சூழ்ச்சியைப் பெரிதளவில் நடைமுறைப் படுத்தி வெற்றி கண்ட வெள்ளைக்காரன்தான் இதையும் அறிமுகப் படுத்தியது. அதுவும் சரியாகத்தான் படுகிறது. அவர்களும் அதைப் பல விதங்களில் செய்து பார்த்தார்கள். இந்து-முஸ்லிம் பிரச்சனையையும் அவர்கள்தாம் பெரிதாக்கி விட்டுப் போனார்கள். கொடுமை என்னவென்றால், இனத்தைச் சொல்லி எம்மைப் பிரித்ததாக வெள்ளையர் மீது கோபப்படும் அதே ஆட்கள் மதப் பிரச்சனையில் மட்டும் வெள்ளையர் மீது கோபப்படாமல் பிரச்சனையை மேலும் ஊதிப் பெரிதாக்கவே பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் வந்தேறிகள் என்று நிரூபிக்கத் துடிக்கிறார்கள். திராவிடக் கோட்பாடு கொண்ட சிலர் இப்படியும் சொல்கிறார்கள் - ஆரிய-திராவிடப் பிரச்சனை நினைவுக்கு வந்து விடாமல் பார்த்துக் கொள்வதற்காகவே ஆரியர்கள் எப்போதும் இந்து-முஸ்லிம் பிரச்சனையைப் பெரிதாக்குகிறார்கள். இதிலும் அர்த்தம் இருப்பது போல்த்தேரிகிறது.

எங்கோ இருந்து வந்த வெள்ளையன் கொளுத்திப் போட முடிந்ததென்றால் ஏற்கனேவே இங்கு ஏதோ புகைந்து கொண்டு இருந்ததாகத்தானே பொருள்? எந்த இரு குழுக்களாயினும் சரி. ஒருவரில் இருந்து ஏதோ ஒன்று மற்றவரைப் பிரித்துக் காட்டியிருக்கிறது. பண்பாடோ... நம்பிக்கையோ... வேறு ஏதோ. அப்படியானால், அவர்கள் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் அல்லவா? உறுதியாகச் சொல்ல முடியாதுதான் என்றாலும்!

எடுத்துக்காட்டாக, ஆரியர் என்றழைக்கப் படுவோர் அனைவரும் சைவம் சாப்பிடுவோர்; ஆனால், திராவிடரில் பெரும்பாலானோர் அசைவர்கள். அப்படியானால், அவர்கள் வெவ்வேறு பகுதியினராக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், திராவிடரிலும் சைவ இனங்கள் இருக்கின்றனவே. அவர்கள் இதைத் தவறேன்றல்லவா நிரூபிக்கிறார்கள்! அவர்களை யாரும் ஆரியர் என்பதில்லையே. எனவே, இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால், ஆரியருக்கும் மத்திய ஆசியருக்கும் இருப்பதை விட ஆரியருக்கும் திராவிடருக்கும் தான் அதிக ஒற்றுமைகள் இருக்கின்றன. அப்படியானால், அதில் என்ன நிரூபிக்கப் படுகிறது?

இன்னொன்று - இந்தப் பிரிவினையைப் பெரிதாக்கி ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டவரே (மேக்ஸ் முல்லர்) பின்னாளில் பின் வாங்கி விட்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அப்புறம், நாம் எங்கிட்டுப் போய் இதை நிரூபிப்பது?

கருத்து 4 தான் என்னை அதிகம் ஆச்சர்யப் படுத்துவது. சமீப காலங்களில் அதிகம் கேள்விப் படுவது. நவீன திராவிடக் கோட்பாட்டாளர்கள் எனலாம் அவர்களை. இவர்கள் சொல்வது என்னவென்றால், ஆரியர் மற்றும் திராவிடர் ஆகிய இரு சொற்களுமே ஒரே இனத்தை - அதாவது, பிராமணர்களைக் குறிப்பவை. அவர்கள் சொல்வது - வட இந்திய பிராமணர்கள் ஆரியர்... தென்னிந்திய பிராமணர்கள் திராவிடர்; இந்தப் பெயர்கள் அனைத்தும் அவர்களுக்குள் பகுதி வாரியாக வேறுபடுத்திக் கொள்ள வைத்துக் கொண்டது. கூடவே ஒரு கேள்வியும் கேட்கிறார்கள் - "அப்புறம் ஏன் தென்னிந்திய பிராமணரான ராகுல் திராவிட் வைத்திருக்கும் திராவிட் என்ற பின்பெயரை தென்னிந்திய மற்றவர் யாரும் வைத்துக் கொண்டில்லை?". இவர்கள் யாரை வந்தேறியதாகச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆரியர்-திராவிடர் இருவருமே வந்தேறினார்களா அல்லது யாருமே எங்கிருந்துமே வரவில்லை என்கிறார்களா என்பது ஒன்றும் இப்போதைக்குப் புரியவில்லை. :)

சரி. இதெல்லாம் கருத்துகள். விட்டுத் தள்ளுங்கள். இவற்றை வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்தினார்கள்? (அதைப் பிழைப்புக்கும் சிலர் பின்னர் பயன்படுத்தினார்கள் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது!)

பெரியாரின் திராவிடர் கழகத்தில் ஆரம்பித்தது. அவருடைய அரசியல் பெரும்பாலும் தமிழகத்திலேயே நிகழ்ந்தது. டெல்லியை எதிர் பார்த்துக் கை நீட்டி நிற்கும் வரை நாம் தேற மாட்டோம் என்றார். இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்தார். அதன் ஆதிக்கம் தமிழை அழிக்கும் - நம்மவர்களைக் கீழே தள்ளி விடும் என்றார். அப்படியானால், தமிழர் கழகம் என்றே பெயரிட்டிருக்கலாமே. அதை ஏன் செய்யவில்லை அவர்? ஏதோ காரணத்துக்காக பிராமணர்கள் மீது தாளாத வெறுப்புக் கொண்டிருந்தார். பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மக்கள் அனைவருடைய பிரச்சனைகளுக்கும் பிராமணர்கள் அறிமுகப் படுத்திய சாதி அமைப்பே அடிப்படைக் காரணம்; அதை அப்படியே உயிர்ப்பித்து வைத்திருக்க அவர்கள் எதுவும் செய்வார்கள்;  அவர்களையும் தன்னோடு வைத்துக் கொண்டிருந்தால் சமூக நீதியை வென்றெடுக்கவே முடியாது; சமூக நீதியை அடைவதற்கான ஒரே வழி - அவர்களுடைய ஆதிக்கத்தை வீழ்த்துவதே என்று நம்பினார். எனவே, அவருடைய கட்சி பிராமணர் அல்லாதோர் மட்டும் நிறைந்த தமிழர்களின் கட்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். பிராமணர் அல்லாதோர் அனைவரும் திராவிடர் என்றொரு கருத்து ஏற்கனவே இருந்ததால், தன் கட்சிக்கு திராவிடர் கழகம் என்றே பெயரிட்டார். தி.க.வின் பிள்ளையும் பேரப்பிள்ளையுமாய் இருக்கிற கட்சிகள்தாம் இன்றைய நம் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும். இன்று தி.மு.க. பெரிதாகப் பிராமணர் எதிர்ப்பு அரசியல் செய்வதில்லை. அ.தி.மு.க. சுத்தமாகச் செய்வதில்லை. அதற்கும் ஒரு படி மேலே போய், பெரியாரின் திராவிடக் கொள்கை எதையுமே ஏற்றுக் கொள்ளாத ஒரு பிராமணப் பெண்மணிதான் அ.தி.மு.க.வின் தலைவியாக இருக்கிறார் இன்று.

இதையெல்லாம் பற்றிப் பேசுவதால் பிரயோசனம் ஏதாவது உண்டா? கண்டிப்பாக இல்லை. பிரிவினை அரசியல் எதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. திரும்பவும் சொல்கிறேன் - எதிலும்! எதிலும் என்றால்... சாதி, மொழி, பிராந்தியம், மதம், இனம், பிறப்பு, நாடு... எதிலும்! அவர்களுடைய கோணத்தையும் புரிந்து கொள்வதற்காகக் கவனிக்கலாம். ஆனால், கடைப்பிடிக்க வேண்டியதில்லை.

ஆனால், இது போன்ற ஒவ்வொரு பிரிவினை முடிவுக்கும் பழைய வரலாற்று முக்கியத்துவத்தை விட தற்போதைய சூழலுக்கேற்ற ஒரு சமூக முக்கியத்துவம் இருக்கும். எனக்குத் தெரிந்தவரை இந்த மொத்த இயக்கமும் அரசியலிலும் மற்ற முக்கியத் துறைகளிலும் இருந்த பிராமண ஆதிக்கத்துக்கு எதிர்ப்பாகக் கிளம்பிய ஒன்றே. அது தமிழ்நாட்டில் திராவிட அரசியல் என்று பெயர் பெற்றது ஒரு தற்செயல் நிகழ்வு போலத்தான் தெரிகிறது. அதுவே பின்னர் மேக்ஸ் முல்லரின் மறக்கப்பட்ட ஆரிய-திராவிடக் கோட்பாடுகள் மீதான ஆய்வுகளை நோக்கி நம் மொத்த மாநிலமும் ஓடக் காரணமாகி விட்டதோ என்று தோன்றுகிறது. மற்றபடி, கர்நாடகத்தின் கவுடா அரசியல், ஆந்திரத்தின் ரெட்டி/நாயுடு அரசியல், உ.பி. மற்றும் பிகாரின் யாதவர்/தலித் அரசியல் போன்றவை போன்ற ஒன்றே இதுவும். இப்போது ஓரிரு தலைமுறைகளாக அரசியல் அதிகாரம் முழுக்க பிராமணர்களிடம் இருந்து பெரும்பான்மை சாதிக்காரர்களிடம் கை மாறி விட்டது. ஆனால், இப்போது மேற்சொன்ன எல்லா மாநிலங்களிலுமே பிராமண எதிர்ப்புக் கொள்கைகளோடு உள்ளே வந்த எல்லோருமே குண்டக்க மண்டக்கச் சொதப்பி விட்டார்கள். அது எவ்வளவு உன்னதமான போர் என்பதைப் புரிய வைக்கும் ஒரே கொள்கையை மட்டும் நம்பியிராமல் ஒழுங்காகத் திறமையையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்களைக் காலம் தள்ளியிருக்கிறது இப்போது. அப்படியானால், அவை உன்னதமான போர்கள் என்றுதான் நான் நம்புகிறேனா? அது இன்னொரு சர்ச்சைக்குரிய சங்கதி - திறமையா சமூக நீதியா என்பது. திறமைக்கு எதிரானதா நீதி? ஏதோ கோளாறு இருப்பது போல் அல்லவா உள்ளது இந்தக் கோட்பாடு? ஆம். அப்படித்தான் தெரிகிறது. ஆனால், அதற்கும் காரணங்கள் இருக்கின்றன. அதற்குள் இப்போது போக வேண்டாம். அது இன்னும் பத்துப் பதினைந்து பத்திகளில் போய்த்தான் முடியும். இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்வோம் அதை.

முடிவு: ஒருவருக்கு வாக்களிக்கும் முன்போ அவரோடு இணைந்து வேலை செய்யவோ அவருடைய வரலாற்றைப் போய்ப் படிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அந்த ஒருவர், கை சுத்தமானவராக இருக்க வேண்டும் - பொது வாழ்க்கையில் நேர்மை காப்பவராக இருக்கக வேண்டும் - நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு உழைப்பவராக இருக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி, செயல்பாட்டுக்கும் தரத்துக்கும் பதிலாக வரலாறும் பின்னணியும் ஒருபோதும் என் கண்ணை மறைக்க - குருடாக்க அனுமதிக்கக் கூடாது. அது போன்ற குருட்டுத் தனங்களால் ஏற்கனவே ஏகப்பட்ட இழப்புகளைப் பார்த்து விட்டோம்.

பின் குறிப்பு: "பாரதீயின் பதிவுச்சுடர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு எல்லாச் சுடரையும் நுனிப் புல்லிலேயே ஏற்றுகிறாயே! இது பற்றி முழுமையாக ஆய்வேதும் செய்தாயா?" என்று கேட்போருக்கு ஒன்று சொல்லி விடுகிறேன். அப்படியெல்லாம் ஏதும் செய்ய வில்லை. மாற்றுக் கருத்துகள் இருப்பின் வாருங்கள் வாதிடலாம். அதன் முடிவில் என் கருத்துகள் மாறவும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், நாம் அமரும் இடத்துக்கு இருபுறமும் சாக்கடை இருக்கிறது. சாக்கடையில் விழாமல் சண்டை போடலாம். வாருங்கள்.

கருத்துகள்

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இன்று இந்தியா என்று அழைக்கப் படும் நிலப்பரப்பு முழுமையுமே திராவிடர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது; இமயம் முதல் குமரி வரை திராவிடரே நிறைந்திருந்தனர்; சிந்து சமவெளி நாகரிகம் கூட திராவிடருடையதே; மத்திய ஆசியாவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த ஆரியர், திராவிடர் அனைவரையும் அடித்துத் தெற்கே அனுப்பி வைத்து விட்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளைப் பிடித்துக் கொண்டார்கள்.


    கல் தோன்றா மண் தோன்றா காலத்திற்க்கு முன் தோன்றிய மூத்த குடி! அவர்களின் வீரம், விவேகம் கலாசாரம் , மொழி, அந்த மொழியின் உள்ள இலக்கியம், அடடடடடா! அவர்களுக்கு நிகரானவர் இந்த உலகத்தில் யார் உள்ளனர்?

    அப்படி பட்ட ஒரு இனத்தை , பாரதம் முழுதும் நிறைந்திருந்த ஒரு இனத்தை , கேவலம் , ஆடு மாடு மேய்த்து வந்த ஒரு நாடோடி இனம் , அடித்து விரட்டி, தன் வேதம் , அந்த வேதத்தில் சொல்ல பட்ட தெய்வங்கள், சடங்குகள் , வர்ணாச்ர தர்மம் இப்படி பல விசயங்களை அவர்களிடம் திணித்து , அவர்களை அடிமையாகி , ஆட்சி செய்து, ..............

    நல்ல கதை! உலகத்தில் கதை திரைகதை வசனம் எழுதுவதில் ஆங்கிலேயனுக்கு நிகரானவன் எவனும் இல்லை.

    நாட்டை அடிமைபடுத்தி, அந்த நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்து., தன் மதத்தை அந்த நாட்டின் மக்களிடம் பரப்ப வந்த வந்தேறி ஆங்கிலேயன் ,

    அந்த நாட்டின் சரித்திரம் இதுதான் என்று,கதை அளந்துள்ளான்! அதுதான் உண்மை என்று இன்று வரை நம்பி கொண்டிருக்கும் முட்டாள் இந்தியர்கள்!

    தன் அரசியல் வாழ்வுக்காக , இன்னும் இந்த கட்டு கதையை தாங்கி பிடித்திருக்கும், திராவிட இயக்கத்து இன , மொழி வெறியர்கள், செத்து போன கம்யுனிஸ்ட் கொள்கையை முழக்கமிடும் முட்டாள்கள், மதம் பரப்ப ஆள் பொறுக்கும் வெள்ளை அங்கி குள்ள நரிகள், இந்தியாவை டாருள் இஸ்லாமாக துடிக்கும் தீவிரவாதிகள் .......

    இப்படிப்பட்ட , அயோக்கியர்கள்தான் , இந்த ஆரிய படையெடுப்பு என்ற அருமையான புனை கதையை , பொய் என அறிந்தும் , இன்னும் , இந்த நிமிடம் வரை விடாமல் , பிடித்து கொண்டு , ஊளையிட்டுகொண்டிருகிரார்கள் !

    இந்த புரட்டு கதையை மறுக்கும் எத்தனையோ, கட்டுரைகள், நான் படித்துவிட்டேன்.அனைத்தும் மிகுந்த ஆதாரபூர்வமானது !

    இதை பற்றி இங்கே அதிகம் பேசுவதைவிட, உங்களுக்கு அருமையான ஒரு தளம் அறிமுக செய்கிறேன். நீங்களே படித்து கொள்ளுங்கள் ! நன்றி.


    http://thamizhan-thiravidana.blogspot.com/2010/11/blog-post.html

    பதிலளிநீக்கு
  3. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி கம்பதாசன் அவர்களே. ஆவேசமான கருத்துரை. நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் நிச்சயம் வாசிக்கிறேன். அதன் பின்பு தேவைப்பட்டால் உரையாடுவோம். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. "எல்லாச் சுடரையும் நுனிப் புல்லிலேயே ஏற்றுகிறாயே! இது பற்றி முழுமையாக ஆய்வேதும் செய்தாயா?" என்று
    கேட்போருக்கு ஒன்று சொல்லி விடுகிறேன். அப்படியெல்லாம் ஏதும் செய்ய வில்லை. மாற்றுக் கருத்துகள் இருப்பின்
    வாருங்கள் வாதிடலாம்"

    நுனிப் புல்லில் ஏற்றிய சுடருக்கு, மாற்றுக் கருத்துக்களை எதிர்பார்ப்பது என்ன நியாயம் ஐயா ? நுனிப்புல் வஸ்துக்கள்
    எல்லாம் அனுபவிக்க வேண்டியவை - ஆராய்ச்சி கூடாது :) பரவாயில்லை, சங்கதிக்கு வருவாம்.

    நீங்கள் எடுத்து வைத்துள்ள நான்கு கருத்துக்களும், அடிப்படையில் இரண்டு வகையான ஆராய்ச்சியாளர்களால் எடுத்து வைக்கப்படுவது. ஒன்று, இரண்டாம் கருத்தை மும்மொழியும் "திராவிட" சார்புள்ளவர்கள், மற்றொன்று, அதற்கு மாற்று கருத்து கொண்டிருப்பவர்கள். அதாவது, திராவிட இயக்கத்திற்கு ஆதராகவும் மாற்றாகவும் கருத்து உடையவர்கள். ஆழமாக படித்தால், இரண்டாம் கருத்தை மறுதலிக்கும் விதமாகவே ஏனைய மூன்றும் அமைந்திருக்குமே அன்றி விளக்கம் சொல்வதாக இல்லை.

    இன்றைய சாதி பேதங்களுக்கு ஊற்றுக்கண்ணான வருண பாகுபாடு, குணம் மற்றும் தொழில் அடையாளமாக சொல்லப்பட்ட புணித நூல், சாதி அடையாளமாக அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு, இன்றளவும் கோயில்களில் திணிக்கப்படும் வடமொழி (பிராமணர்கள் வீட்டில் தமிழில் பேசுவதால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட்டார்களாம்! டக்கரா கீதுப்பா, நீங்க சொல்றது!!!) இவற்றில் தொடங்கி, அதன் பரிணாம வளர்ச்சியாக இன்றைக்கு சமச்சீர் கல்விக்கும், கல்வி உரிமை சட்டத்திற்கும் எழுப்பியிருக்கும் எதிர்ப்பு வரை (இட ஒதுக்கீட்டு விஷயத்தில பயன்பட்ட பொருளாதார அடிப்படை என்னும் கருவி, கல்விக் கொள்(ளை)கையில் காணாமல் போன மர்மம் அந்த நாராயணனுக்கே வெளிச்சம்) நடைபெற்ற, நடைபெறுபவற்றை ஆழ்ந்து நோக்கினால், நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களில் உள்ள தருக்கங்களுக்கிடையான வேற்றுமை விளங்கும்.

    பிகு : எனக்கும் இந்த விஷயத்தில் பெரிய ஞானம் இல்லை என்றாலும், தருக்கத்தின்பால் இதனை அணுகுவதால், மேல் சொன்ன சிந்தனைகளை தவிர்க்க இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  5. நன்றி நைஸ்கை. பெயருக்கேற்ற மாதிரி நல்ல கருத்துகள். விவாதத்துக்கு அழைப்பதன் ஒரே நோக்கம், இன்னும் ஓர் அங்குலம் அடியில் செல்ல முடியுமா என்று பார்ப்பதற்காகத்தான். :)

    ஒரு சின்ன விஷயம் - தமிழ்நாட்டில் மட்டும்தான் இது திராவிட இயக்கங்கள் சார்ந்த (அந்த ஆதரவுணர்வோடு அல்லது எதிர்ப்புணர்வோடு) ஆராய்ச்சியாகவே இருக்கிறது. மற்றபடி, எந்த சார்பும் இல்லாமல் மற்றவர்களும் இது பற்றிப் பேசுகிறார்கள் - ஆராய்கிறார்கள். அப்படிப் பேசும்போது கொஞ்சம் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குறைவாக இருக்கிறது.

    அடுத்து, கோயில்களில் திணிக்கப்படும் வடமொழி பற்றி... பள்ளிவாசலில் அரபு மொழியில்தான் இறைவனை அழைக்கிறார்கள். அது ஒரு பழக்க வழக்கமாக வந்ததே ஒழிய, தம் தாய்மொழி என்று திணிக்கப் படுவதில்லை என்றே நான் கருதுகிறேன். வடமொழியில் அவ்வளவு வளம் இருப்பதால் அதை அவர்கள் காலம் காலமாக அறிந்து வைத்திருப்பதால் அதன் மீது மரியாதை கொண்டிருப்பது இயல்பான ஒன்றாகவே படுகிறது. திராவிட இயக்கத்தார் பலர் செய்த திருட்டுத்தனங்களால் மொத்த இயக்கமே முடங்கும் நிலை வந்துவிட்டது போல, இந்த விஷயத்திலும் அவர்களுடைய படைப்பில் இருந்த சில பல பெரும் கோளாறுகள் அம்மொழியின் வளத்தையும் நிராகரிக்கும் அளவுக்கு நம்மை வெறுப்பேற்றி விட்டனவோ என்றுதான் தோன்றுகிறது.

    அடுத்து, சமச்சீர்க் கல்விக்கு எல்லோரும் ஒன்னு கூடித் தெரிவிக்கும் எதிர்ப்பு எனக்கும் கண்ணை உறுத்துகிறது. அதுபற்றி சமீபத்தில் ஓர் இடுகை கூட இட்டிருந்தேன். நேரம் இருந்தால் படியுங்கள் - http://bharatheechudar.blogspot.com/2011/07/blog-post_10.html. நீங்கள் எதிர் பார்க்கும் அளவுக்குக் காரம் இராது. ஆனால், எனக்குப் பட்டவற்றை எழுதியிருக்கிறேன். கல்வி உரிமைச்ச்சட்டத்தையும் எதிர்த்தார்கள் என்று முதல் முறையாக இன்றுதான் கேள்விப்படுகிறேன். அது பற்றியும் தேடித் பார்க்க வேண்டும். 'சமம்' என்ற சொல் பலருக்கும் பிடிக்காமல் இருப்பதை நானும் உணர்கிறேன். பொருளாதார அடிப்படை என்பது திசை திருப்பும் நோக்கம் என்பது மட்டுமே என்று எனக்கும் ஆரம்பத்திலேயே புரிபட்டது.

    உரையாடலை ஆரம்பித்து வைத்தமைக்கு நன்றி. :)

    பதிலளிநீக்கு
  6. ஆராய்ச்சிகள் எவ்விதம் இருந்தாலும் அவற்றை பகுப்பாய்வு செய்து, சீர் தூக்கி பார்த்து உண்மையை தேடுவது கற்றோர் கடமை.

    உழவுத் தொழிலே இன்றைய மனித நாகரிகத்தின் தொடக்கம். அந்த உழவுத் தொழிலை அடிப்படையாக கொண்ட தமிழர்களின் பண்டிகைகளை நீர்த்து போகச்செய்து, புராண இதிகாச அடிப்படையிலான பண்டிகைகள் ,முக்கியத்துவம் பெற்றது எப்படி என்கிற கேள்விக்கு திராவிட சார்பற்றவர்கள் இன்றளவும் ஒரு பதிலை கூற முடியவில்லையே! அது ஏன் ?! (வருண பாகுபாட்டினை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை)

    நாற்று நடுவதற்கு ஏற்ற காலமான ஆடி மாதத்தில், அந்த வேலை செய்ய வேண்டிய பெண்களுக்கு ஏதுவாக விசேஷங்களை தவிர்த்த தமிழர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாத பிராமணர்களை (அவர்கள் ஆடி மாதத்தில் திருமணம் செய்து கொள்ள தயங்குவது இல்லை) தமிழர்கள் என்று எப்படி அழைப்பது ?

    மற்றபடி, அரபு மொழி மற்றும் இஸ்லாத்தின ஒப்பீடு மூலம், “இந்து” மதத்தை நிறுவுவதற்காக நடைபெற்றதுதான் ஆரிய படையெடுப்பு என்ற உண்மையை ஓங்கி உணர்த்தியதற்கு நன்றி

    பிகு: சமச்சீர் கல்வி பற்றிய தங்களது பதிவினை கண்டிப்பாக படித்து, கருத்து ஏதும் இருக்குமாயின் நிச்சயம் தெரிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. முதல் வரி முத்தாய்ப்பான வரி. உண்மைதான். பிரச்சினையின் வேருக்குச் செல்வது நம் போன்றோருக்கு இயலாத ஒன்று. அதற்கென்று ஆள் இருக்கிறார்கள். அதை அவர்களிடமே விட்டு விடுவோம். ஆனால், நம்மால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு பேசிப் பார்ப்போம்.

    ஆடி மாதம் பற்றி நான் வேறொரு கதையும் கேள்விப் பட்டிருக்கிறேன். மற்றவர்கள் எதுவும் செய்யாத மாதம் என்பதால், சடங்குகள் செய்யும் தமக்கு வேலைகளே இராது. அந்த நேரத்தில் நம் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அப்படிச் செய்கிறார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

    அடுத்து, என் ஒப்பீடு மூலம் நான் எதையும் உணர்த்த முயலவில்லை. மற்ற மதங்களைப் போலல்லாமல் இந்து மதத்தில் ஒரு மிகக் குறுகிய அளவிலானோர் மட்டுமே மதத்தைத் தூக்கிப் பிடிக்கும் வேலையைச் செய்கிறார்கள். அதுவும் அவர்களே அதைச் செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மதம் முக்கியமாக இருக்கிறது. இந்த இடத்தில் எனக்கொரு குழப்பம். இரண்டாவது கருத்துப்படி திராவிடர் என்று கருதப்படும் மக்களுக்கென்று மதம் என்று ஒன்றே முதலில் இருக்க வில்லையா? அல்லது, இன்று செய்யப் படும் சிறு தெய்வ வழிபாடு தான் அவர்களின் மதமா? சைவ மதம் யாருடையது? ஒடுக்கப் பட்ட மக்கள் முதல் ஒடுக்கும் வேலையை முறையாகச் செய்து வரும் பிற்படுத்தப் பட்டோர் வரை எல்லோருமே வைத்திருக்கும் நம்பிக்கைகள் இந்து மதத்தில் இருக்கும் நம்பிக்கைகளுக்கு அருகிலேயே இருக்கின்றன. வேறெந்த மதத்தையும் சிறிது கூடப் பிரதிபலிக்க வில்லை.

    அல்லது, நாத்திகம் தான் நம் மண்ணின் மதமா? நாத்திகம் பற்றியும் எழுதியிருக்கிறேன். "நாத்திகம் - இன்னொரு மதம்" என்ற தலைப்பில். முடிந்தால் படியுங்கள். இணைப்பு இதோ - http://bharatheechudar.blogspot.com/2011/06/blog-post_09.html. பெரிய வியாபாரியாக இருக்கிறேன் அல்லவா? :)

    மற்ற எல்லா மதங்களும் அவற்றுக்கென ஒரு மூல இடம் கொண்டிருக்கின்றன. இன்னமும் அவ்விடங்களிலோ அவற்றைச் சுற்றியோ அம்மதங்கள் உயிரோடிருக்கின்றன. இந்து மதத்துக்கான மூலம் மத்திய ஆசியாவாக இருந்தால் அங்கே அதற்கான சுவடே இல்லையே! அது எப்படி? அத்தனை வழிபாட்டுத் தளங்களும் இமயமலை முதல் குமரி வரையிலான நிலப்பரப்பிலேயே தானே இருக்கின்றன! அப்படியானால், இங்கே வந்தபின்தான் மதத்தைத் தோற்றுவித்தார்களா?

    ஆக, இதிலிருக்கும் என் குழப்பமே இதுதான். என் அண்ணனோ தம்பியோ என்னைத் தரக் குறைவாக நிகழ்த்தியதால் நான் அவனை வெளியாள் என்று அழைக்கிறேனா? வெளியேற்ற முயற்சிப்பது கூட ஒருவிதத்தில் நியாயமாகலாம். வெளியாள் என்று சொல்வது ஏதோவோர் அடிப்படையோடு இருக்க வேண்டும். அவன் மீதான வெறுப்பை என்னால் மறுக்க முடியாது. அதே வேளையில், அவன் பிறப்பிடம் பற்றிய கேள்விகளை நிரூபிக்கவும் முடியவில்லை.

    இன்னொன்று - படையெடுப்பு நிகழவில்லை என்று சொல்வோரில் ஒரு சாரார் அன்னியர் குடியேற்றம் என்று ஒன்று நிகழ்ந்திருக்கலாம். அவர்கள் ஆரியர்தானா - அதைப் படையெடுப்பு என்று அழைக்க முடியுமா என்று சொல்ல முடியாது என்றும் சொல்கிறார்கள். இதில் உங்கள் கருத்து என்னவென்றும் சொல்லுங்கள்.

    நாகரிகமான உரையாடலுக்கு மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பதிவில் பல விஷயங்களை எடுத்துக்கொண்டு மாற்றுக் கருத்து சொல்லலாம்.
    ஓரிடத்தில், ஆரியர்கள் சைவம் திராவிடர் அசைவம் என்று சொல்லி இருக்கிறீர்கள்.
    இந்த விஷயத்தில் நான் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தது, ஓரளவு சரி போலத் தோன்றுவதால் நினைவில் வைக்கப் பட்ட ஒன்று :
    ஆரியர்கள் முன்பு சைவம் இல்லை; சில யாகங்களில் மாமிசம் கூட படைப்பது உண்டு; புத்தர் மிருக பலியை எதிர்த்து தான் புத்த மதத்தை பரப்ப முடிந்தது; ஆரியர்கள் தம் மதத்தை பரப்பும் பொருட்டு தெற்கில் ஈடுபட்ட விவாதங்களில் தெற்கில் இருந்த சைவம் சிறந்த எண்ணம் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள
    வேண்டி இருந்ததனால் சைவத்துக்கு மாறினார்கள். தம் "உயர்ந்த நிலையை" பேணுவதற்காக சைவத்தை கடைப் பிடிக்க தொடங்கினார்கள். வடக்கிலும் சைவர்களும், அசைவர்களும் உண்டு;
    ஜைனர்களும், புத்தர்களும், தமிழகத்தில் பலப்பல விவாதங்களுக்குப் பின் தம் கருத்துக்களை நிலை நாட்டினார்கள்; திருநாவுக்கரசர்/ திலகவதி, நாலடியார், சீவக சிந்தாமணி போன்ற ஜைனக் காப்பியங்கள் தமிழில் வந்தது, வள்ளுவரே ஜைனரா, புத்தரா, இந்துவா என்று சர்ச்சைகள் பல உண்டு. ஆகவே தமிழ் நாட்டிலும் ஆரியக் கருத்துக்கள் இந்த அளவுக்கு வேர் கொண்டன என்றால் அவற்றில் சில கருத்துக்கள் மறுக்க முடியாதவையாக இருந்து இருக்க வேண்டும். எனக்கென்னமோ, கணிதத்தில் அல்லது/மற்றும் வான இயலில் தம் அறிவை காட்டி அவர்கள் வேறு பகுதிகளில் தம் "மேல்" நிலையை நிறுவிக்கொண்டார்கள் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  9. பதிவில் பல விஷயங்களை எடுத்துக்கொண்டு மாற்றுக் கருத்து சொல்லலாம்.
    ஓரிடத்தில், ஆரியர்கள் சைவம் திராவிடர் அசைவம் என்று சொல்லி இருக்கிறீர்கள்.
    இந்த விஷயத்தில் நான் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தது, ஓரளவு சரி போலத் தோன்றுவதால் நினைவில் வைக்கப் பட்ட ஒன்று :
    ஆரியர்கள் முன்பு சைவம் இல்லை; சில யாகங்களில் மாமிசம் கூட படைப்பது உண்டு; புத்தர் மிருக பலியை எதிர்த்து தான் புத்த மதத்தை பரப்ப முடிந்தது; ஆரியர்கள் தம் மதத்தை பரப்பும் பொருட்டு தெற்கில் ஈடுபட்ட விவாதங்களில் தெற்கில் இருந்த சைவம் சிறந்த எண்ணம் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள
    வேண்டி இருந்ததனால் சைவத்துக்கு மாறினார்கள். தம் "உயர்ந்த நிலையை" பேணுவதற்காக சைவத்தை கடைப் பிடிக்க தொடங்கினார்கள். வடக்கிலும் சைவர்களும், அசைவர்களும் உண்டு;
    ஜைனர்களும், புத்தர்களும், தமிழகத்தில் பலப்பல விவாதங்களுக்குப் பின் தம் கருத்துக்களை நிலை நாட்டினார்கள்; திருநாவுக்கரசர்/ திலகவதி, நாலடியார், சீவக சிந்தாமணி போன்ற ஜைனக் காப்பியங்கள் தமிழில் வந்தது, வள்ளுவரே ஜைனரா, புத்தரா, இந்துவா என்று சர்ச்சைகள் பல உண்டு. ஆகவே தமிழ் நாட்டிலும் ஆரியக் கருத்துக்கள் இந்த அளவுக்கு வேர் கொண்டன என்றால் அவற்றில் சில கருத்துக்கள் மறுக்க முடியாதவையாக இருந்து இருக்க வேண்டும். எனக்கென்னமோ, கணிதத்தில் அல்லது/மற்றும் வான இயலில் தம் அறிவை காட்டி அவர்கள் வேறு பகுதிகளில் தம் "மேல்" நிலையை நிறுவிக்கொண்டார்கள் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  10. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நெற்குப்பைத் தும்பி அவர்களே. இந்த சமண மத விவாதங்கள் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். திராவிடரின் மதம் சமணம் என்று கூட ஒருவர் எழுதியிருந்தது மாதிரி நினைவு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்