இசை - எனக்குத் தெரிந்த கற்பூர வாசனை


இசைக்கும் எனக்குமான உறவு அமாவாசைக்கும் அப்துல் காதருக்குமான உறவு போல. அப்துல் காதர், அமாவாசையை வைத்து அடுத்த மூன்று நாட்களில் பிறை வரும் என்பதைக் கணக்குப் போட முடியும் என்பது போல், எனக்கும் இசைக்கும் இருக்கும் உறவையும் ஓரளவு பெரிதாக்கிக் காட்ட முடியும், வலுக்கட்டாயமாக முயன்றால். ஆனால், உண்மையில் எங்களிடையான உறவு எப்படி என்றால், வருடத்தில் ஓரிரு முறைகள் பார்க்கும் படங்களில் வரும் பாடல்களைப் பார்ப்பேன்; பேருந்தில் பயணம் செய்யும் நேரங்களில் வேறு வழியில்லாமல் கேட்க நேரும் பாடல்களைக் கேட்பேன். வீட்டில் எந்நேரமும் யாருக்கோவென்று ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியில் ஓடும் பாடல்களையும் அவ்வப்போது கேட்டுக் கொள்வேன். மற்றபடி, பாடல் கேட்க வேண்டும் என்று முயன்று முன் சென்று போட்டு விட்டுக் கேட்டதெல்லாம் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறைதான். முறையான இசை என்று பார்த்தால் அதில் என் அறிவு அமாவாசை வெளிச்சத்தின் அளவு என்று சொல்லலாம் (அய்யோ... இந்த அமாவாசை ஏன்தான் இப்படித் திரும்பத் திரும்ப வந்து லொள்ளுப் பண்ணுகிறதோ இன்னைக்கு!)

சிங்கப்பூர் வந்து ஆரம்பித்திருக்கும் இன்னொரு பழக்கம் - ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் பாட்டுக் கேட்பது. எந்த வண்டியில் ஏறினாலும் எல்லோருமே காதில் இரண்டை மாட்டிக் கொண்டு தன் மொபைல் போனுக்குள் மூழ்கிக் கிடப்பதைத்தான் பார்க்க முடியும். சரி, ஊரோடு ஒத்துப் போவோம் என்று நானும் அதே மாதிரி ஆரம்பித்து விட்டேன். நான்கைந்து நாட்கள் பாட்டுக் கேட்டதிலேயே மனதில் இசை பற்றிய எத்தனையோ கருத்துகள் உதிக்கின்றன. சினிமா பற்றியும் இசை பற்றியும் லயித்து லயித்துப் பேசும் கூட்டங்களில் மாட்டிக் கொள்ளும் போது வேற்றுக் கிரகத்து வாசி போல விழிக்கும் பிரச்சனை இனி இராது போலத் தெரிகிறது. பத்துக் கருத்துச் சொல்பவர்களுக்கு மத்தியில் நாமும் ஒரு கருத்தோ இரண்டு கருத்தோ சொன்னால் கூடப் போதுமே. மற்றவர்கள் நம்மை மதிக்கிறார்களோ இல்லையோ நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம், 'நானும் ஒரு கருத்துச் சொல்லிட்டேன்ல!' என்று.

அப்படி உதித்த முதல் கருத்து - 'இளையராஜாவின் இசையில் ஒரு குறிப்பிட்ட தினுசு (PATTERN) இருக்கிறது!'. அதாகப் பட்டது, அவருடைய பல பாடல்கள் ஆரம்பத்தில் பிரமாதமாக இல்லாமல் நடுவில்தான் உச்சகட்ட சூடு பிடிக்கின்றன. பொறுமையில்லாதவர்கள் முதல் இரண்டு வரிகளிலேயே தாவி ஓட வாய்ப்பிருக்கிறது. பாதியாவது தாண்டாமல் அவருடைய பாடல்களைப் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியாது. இன்னொன்று, அவருடைய இசையில் வயலின் மிக அதிகமான அளவில் பயன் படுத்தப் படுகிறது. ஒவ்வொருத்தருக்கும் பிடித்தவை சில இருக்கும் பிடிக்காதவை சில இருக்கும். அந்த வகையில் நீண்ட நாட்களாக இசையில் இரு குறிப்பிட்ட விதமான சத்தம் மட்டும் பிடிக்காமலே இருந்தது. அது என்னவென்று தெரியாமல் இருந்தேன். இப்போது அதுதான் வயலின் என்று புரிந்துள்ளது. அந்தச் சத்தமே ஒருவித இரைச்சல் போல இருக்கிறது. பல பெண்கள் கூடிக் குழுவாக "லலலா... லலலா..." போடுவதும் இளையராஜா பாடல்களில் மட்டுமே அடிக்கடி வருகிறது.

இதெல்லாம் சொல்வதால், பண்ணைபுரம் என்ற பட்டிக்காட்டில் இருந்து கிளம்பி பரம்பரை பரம்பரையாக இசையைப் பழமாகத் தின்று கொட்டை போட்டவர்களை எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் செய்த அவருடைய வெற்றியைச் சகித்துக் கொள்ள முடியாதவன் என்றோ ஏற்றுக் கொள்ள முடியாதவன் என்றோ சொல்லிச் சுருக்கி விட வேண்டாம். நான்கு நாட்கள் பாட்டுக் கேட்ட ஒருத்தனின் கருத்து எந்த வகையிலும் அந்தக் கருவிக்கோ அதைப் படைத்த கலைஞனுக்கோ இழுக்காக இருக்க முடியாது. "கழுதைக்குத் தெரியுமா...?" என்ற பழமொழியைச் சொல்லி விட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம். ஆனாலும், என்னுடைய சுவை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பதால், இவற்றையெல்லாம் அஞ்சாமல் வெளியே சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது.

இரண்டாவது கருத்து - கண்ணதாசனின் பாடல்கள் பற்றியது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் அவருடைய வரிகளைச் சொல்லி வாதாடும் போதெல்லாம் இருக்கிற வசீகரம்... சில இரவுகளில் கேட்டால் கிறக்கிப் போடும் அவருடைய சில தத்துவப் பாடல்கள், காலையில் அலுவலகம் செல்லும் போதோ மாலை அல்லது இரவு வீடு திரும்பும் போதோ கேட்டால்... முடியல... என்னத்தச் சொல்ல... 'அததுக்கு ஒரு நேரம்-காலம் இருக்கிறது!' என்கிற தத்துவம்தான் உதிக்கிறது. துரித உணவுக் காலத்தில் இலை போட்டுத் திகட்டத் திகட்டச் சாப்பிடுவதெல்லாம் எல்லா நேரத்திலும் ஒத்து வராதது என்பதும் புரிகிறது.

எல்லாவற்றுக்கும் மேல், ஒன்று மட்டும் மீண்டும் மீண்டும் உறுதியாகிறது. திருவிழாக் கொட்டு மேளங்களின் மூலமும் தெம்மாங்குப் பாடல்களின் மூலமும் இசையைப் புரிந்து கொள்ள ஆரம்பித்த நம்மைப் போன்ற பட்டிக்காட்டான்களுக்கு, தொடக்கம் முதல் முடிவு வரை காது கிழிகிற மாதிரி அடிக்கும் டண்டணக்கா இசைதான் எக்காலத்திலும் பிடித்ததாக இருக்கிறது. மெல்லிசையிலும் கூட இந்த வல்லிசைச் சாயல் இருந்தால்தான் அதைச் சுவைக்க முடிகிறது. அப்படியான பாடல்களும் நிறைய இருக்கத்தான் செய்கின்றன. குறைந்த பட்சம் ஐந்துக்கு ஒரு பாடல் நமக்கான பாடலாக இருக்கிறது. நம் இனம் இருக்கும் வரை நமக்கான இந்த இட ஒதுக்கீடும் இருந்து கொண்டேதான் இருக்கும் போலத் தெரிகிறது.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்