தீவாளிச் சுடிதார்
இந்த ஆண்டும் மழை சரியாகப் பெய்த பாடில்லை. சம்சாரிகள் பாடு வருசத்துக்கு வருசம் மேலும் மேலும் அச்சமூட்டுவதாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. மழை பெய்யாதது சம்சாரிகளுக்கு மட்டுமான கவலையா என்ன! வியாபாரிகளுக்கும் அதே கவலைதான். தீவாளிக்கு முன்பு ரெண்டு ஊத்து ஊத்துனாத்தான் விவசாயிகள் கடைத்தெருவுக்குள் கால் வைப்பார்கள். அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பது நெல் பயிரிட்ட விவசாயிகளைப் பற்றியது மட்டுமோ அரிசியில் சோறு பொங்கிச் சாப்பிடுபவர்கள் பற்றியது மட்டுமோவா! வானம் பொய்த்த போது விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த சம்சாரிகள் மட்டுமா ஊரைக் காலி செய்து எடுபிடி வேலைகள் செய்யப் போனார்கள்! அவர்களை நம்பி வாழ்ந்துகொண்டிருந்த நகரங்களுந்தானே நொடித்துப் போயின! “இனிமே வெவசாயஞ் செஞ்சு பெழப்பு நடத்துறதெல்லாம் லேசுப்பட்ட காரியமில்லப்பா. யாவாரந்தான். எதாவது டவுன் பக்கம் போயி தொழில் செஞ்சு பெழைக்கிற வழியப் பாக்குறதுதான் புத்திசாலித்தனம். நம்ம பிள்ளைக காலத்துல எல்லாம் வெவசாயத்துக்கு மருவாதியே இராது. அம்புட்டுத்தேன். மண்ணு மலடாப் போச்சு. ...