அறவழி

மணி பத்தாகியும் ஒருவரும் கல்லூரிக்குச் சென்றபாடில்லை. கல்லூரியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் அனைவரும் மறியலில் ஈடுபட்டிருந்தார்கள். சாலையின் நடுவில் இருந்து எழுந்த - இந்த தேசத்தின் எதிர்காலத்தின் விசில் சத்தம் காற்றோடு கலவரம் நடத்தியது. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அவர்கள் தீர்வு வேண்டி வருவது இந்த நெடுஞ்சாலைக்குத்தான். இங்கே, "விலைவாசி உயர்வைக் கண்டித்து...", "வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்து..." என்று பல்வேறு காரணங்களுக்காகப் பேருந்துகள் நொறுக்கப் பட்டிருக்கின்றன.

எப்போதும் போலவே இன்றும் பல பேருந்துகள் நொறுக்கப் பட்டுக் கொண்டிருந்தன. கண்ணுக்குத் தெரிந்த அளவில் எந்த வண்டியிலும் கண்ணாடி விட்டு வைக்கப் படவில்லை. அந்தப் பரபரப்பான சூழ்நிலையிலும் சாலையின் நடுவில் ஒரு கூட்டம் கானா, நடனம், கச்சேரி என்று கலக்கிக் கொண்டிருந்தது. கல்லூரிக்குள் நடக்கும் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளாதவர்கள் இத்தனை பேர் இத்தனை திறமைகளை யார் கண்ணும் பட்டு விடாமல் ஒளித்து வைத்திருந்ததன் காரணந்தான் புரிபடவில்லை.

இதற்கிடையிலும் ஒரு சிறுபான்மைக் கூட்டம், "வீண்டாம், வண்டிகளை நொறுக்காதீர்கள்! தயவுசெய்து கல்லைக் கீழே போடுங்கள்!" என்று கெஞ்சிக் கொண்டு அலைந்தது.

அது மோகனுடைய கூட்டம்.

மோகன்???

மாணவர் பேரவைத் தேர்தலில் நின்று படுதோல்வி அடைந்தவன். விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் பேரன். அவனுடைய தாத்தா காந்தியவாதி என்பதால் மட்டுமல்ல. அது ஒரு மறைமுகக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அவனுக்கும் இயல்பாகவே அதுதான் பிடித்தது. இவனும் போராட்டங்களை ஆதரிப்பவனே. ஆனால் இவனுடைய வழி வேறுவிதமானது. இப்போது இருக்கிற மாணவர் பேரவைத் தலைவனுக்கும் இவனுக்கும் அடிக்கடித் தகராறுகள் வரும்.

எப்போதும் போலவே பத்தரை மணிக்குக் காவற் துறை வந்தது. ஆனால் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்குக் கோபத்தோடு இருந்தார்கள். காரணம், இன்றைய மறியலே அவர்களுக்கு எதிராக நடத்தப்படுவது. காலை பேருந்து நிலையத்தில் காக்கிக்காரர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நடந்த தகராறில் இரண்டு மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு, பதிலுக்கு காவற்துறை ஆள் ஒருவரும் தாக்கப்பட்டதால், பிரச்னை தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து விட்டது.

மறியலுக்கு மத்தியில் மாணவர்கள் சிலர் காவற்துறையினரிடம் வீண் வம்பு செய்து கொண்டு இருந்தார்கள். காவற்துறையினரில் சிலர் கோபத்தை அடக்கிக் கொண்டு, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, எதற்காகவோ காத்திருப்பது போல இருந்தனர். சிலர் கோபத்தைச் சிறிது  கூடக் காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்தோடு பேசிக் கொண்டிருந்தார்கள். சிரிப்பைத் தவறாகப் படித்த முட்டாள் மாணவன் ஒருவன், "மாமா, பீடி வேணுமா?" என்றான். இலத்திக் கைக்கு கோபம் பொறுக்க முடியவில்லை. அடக்கத்தான் முயன்றார். அப்படியெல்லாம் அடக்கிப் பழக்கம் இல்லாதவர் போலும். ஆத்திரத்தோடு தூக்கி, திரும்பிக் கீழே இறங்கும் போது கையின் வேகத்தைக் குறைத்து ஓர் அடி போட்டார். கூச்சல் கூடியது. கலவரமானது. சற்று நேரத்தில் இலத்திகள் ஆத்திரத்தை மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் விளையாட ஆரம்பித்தன. கூட்டம் சிதறித் தெறித்து ஓடியது.

கிட்டத்தட்ட ஐம்பது மாணவர்கள் தடியடியில் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாணவர் பேரவைத் தலைவன் உட்படப் பத்துப் பேரைக் கைது செய்து அடித்து இழுத்துச் சென்றனர் காவற் துறையினர். உச்சி வெயிலில் கல்லூரியை நோக்கி ஓடி வந்தது கூட்டம். எல்லோரும் கனத்த மனதோடு மதியச் சாப்பாட்டை முடித்தார்கள். அவர்களுக்குள் கூடிக் கூடிப் பேசினார்கள். அடிபட்ட அச்சமும் ஆத்திரமும் அவர்களை வாட்டி எடுத்தது. அடி பட்டதற்குச் சரியான பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என்ற ஆவேசம் அவர்களைத் தூண்டி விட்டது. ஆனால் போராட்டங்கள் மூலம் விடுமுறைகளையும் மகிழ்ச்சியையும் மட்டுமே பெற்றுப் பழகிப் போன அவர்களுக்கு இது ஒரு வேறுபட்ட அனுபவமாக இருந்தது. இது போல் இன்னொரு முறை போராடவோ அடி படவோ அவர்களுக்குத் தைரியம் இல்லை. இப்போது அவர்களுக்குத் தேவைப்படுவது அவர்களின் ஆத்திரத்துக்கு மருந்தளிக்கக் கூடிய - தைரியத்தைத் தரக்கூடிய ஒரு புதிய வழிகாட்டி.

மாலை, கல்லூரி காலவரையின்றி மூடப் பட்டதாக அறிவிப்பு வெளியானது. பேரவைத் தேர்தலில் கேவலமாகத் தோல்வியடைந்த மோகன் அப்போது மாணவர்களைக் கூட்டினான். எப்போதும் தலைவன் நின்று பேசுகிற இடத்தில் இன்று அந்தப் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற அவன் நின்று பேசினான். "நண்பர்களே!" - அவன் ஆரம்பித்த போது கூட்டத்திலும் சலசலப்பு ஆரம்பித்தது. கல்வீசி மட்டுமே பழக்கப்பட்டுப் போன பலருக்கு அவன் பேசப்போவது கசப்பை உண்டாக்கியது. ஒரு நேரத்தில் இவன் என்ன பேசினாலும் எடுபடாது. இவன் பேசுவது எல்லாமே பெரும்பான்மையானவர்களுக்கு முரண்பாடாகவே இருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கும். என்ன செய்ய? இது அவனுக்கான காலம். இப்போதைக்கு அவன் வழிதான்...

"நண்பர்களே! கல்லைக் கீழே போடுங்கள். கல்லைக் கீழே போடுங்கள் கீழே போடுங்கள் என்று நான் கெஞ்சிய போதெல்லாம் நீங்கள் போட்டதில்லை. இப்போது நான் எடுக்கச் சொன்னாலும் நீங்கள் எடுக்கத் தயாரில்லை. இதனால் நீங்கள் எல்லோரும் என் பாதைக்கு வந்து விட்டதாக நான் சொல்லவில்லை. அப்படி நினைக்கவும் இல்லை. உங்களுக்குப் பயம் வந்துவிட்டது என்று மட்டுந்தான் சொல்கிறேன். அந்தப் பயத்தைப் பயன்படுத்தித்தான் உங்களை என் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இது காலத்தின் கோலம். உங்கள் ஆசைகளை நிறைவேற்றி வைக்கிற தகுதி எனக்கில்லை என்று எண்ணித்தான் என்னை மாணவர் பேரவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்தீர்கள். இப்பவும் சொல்கிறேன். உங்கள் ஆசைகளையெல்லாம் நிறைவேற்றித் தருகிற தகுதியோ திறமையோ எனக்கு இல்லை. ஏனென்றால் என் பாதையே வேறு. என் பாதையில் நீங்கள் வந்திருந்தால் இப்படியோர் அனுபவம் கிடைத்திருக்காது. வன்முறையின் கொடுமை உங்களுக்குப் புரிந்திருக்காது. இப்போது கூட வன்முறையின் கொடுமையை நீங்கள் முழுமையாக உணர்ந்து விட்டீர்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், வன்முறை தாகம் உங்கள் இரத்தத்தோடு ஊறி உயிரோடு கலந்து விட்ட ஒன்றாகி விட்டது. ஒவ்வொரு முறையும் பேருந்துகளை உடைத்து அதைப் பார்த்து ஆனந்தப் பட்டுப் பழகி விட்டீர்கள். ஆரம்பத்திலேயே நாம் உண்ணாவிரதமோ வேறு ஏதோவொரு அறவழியிலோ போராடிப் பழகியிருந்தால் இப்போது இவ்வளவு நடந்திருக்காது. நான் என்னவோ வன்முறையை விட அரவழிதான் நல்லது என்று நினைக்கிறேன். நீங்களும் அப்படியொரு பாதைக்கு வர வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். நான் பேசியது அவசியம் இல்லாததாகவோ ஏதோ மகாத்மா மாதிரிப் பேசுவதாகவோ நினைத்தால், மன்னித்து விடுங்கள். மனதில் கிடந்ததைப் புலம்பித் தீர்த்து விட்டேன். அவ்வளவுதான். நடக்கப் போவதைப் பற்றிப் பேசுவோம். நாளை காலை நம்மில் பத்துப் பேர் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனுக் கொடுப்போம். கைது செய்த பத்துப் பேரை விடுவிக்க வேண்டும், அடிபட்ட அனைவருக்கும் நீதி வழங்க வேண்டும், இதற்கு ஒரு தனி நீதிமன்றம் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். சரியான பதில் இல்லையென்றால் உண்ணாவிரதம் இருப்போம். அதுவும் இல்லையென்றால் கையில் கல் இல்லாமல் சாலைக்கு வருவோம். மேலே எதற்கும் தயாராக இருப்போம். நீதியின் பக்கம் இருக்கிறோம். அதனால் வெற்றி நமதே! கடைசியாக ஒன்றைச் சொல்லி விடுகிறேன் - அறவழி என்பது பயந்தவர்களின் பாதை அல்ல!" என்று பேசி முடித்தான்.

மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சென்றார்கள். மனுக் கொடுத்தார்கள். தனி நீதி மன்றம் அமைக்கப் பட்டது. நீதி விசாரணை நடந்து கொண்டே இருக்கிறது. நிச்சயம் நீதி கிடைக்கும். ஏனென்றால், இப்போது அவர்கள் போகும் பாதை முறையானது. இனிமேலும் கையில் கல்லெடுக்க யாரும் விரும்பவில்லை என்றே தெரிகிறது. "அன்று மோகன் ஆற்றிய உரையைப் பதிந்து வைக்கவில்லையே" என்று இன்றும் ஏங்குகிறார்கள் சிலர்.

* கல்லூரியில் காந்தியச் சிந்தனை மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு எழுதிய - இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை.

பயங்கரப் பிரச்சார நெடி... இருந்தாலும் எப்படியிருந்த நாம் எப்படியாகி இருக்கிறோம் என்று பின்னாளில் எடை போடப் பயன்படலாம். அதனால் பதிந்து வைத்துக்கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி