ஆசிரியர் தினம்
எல்லோரும் முதல் வகுப்பு முதலான தம்
ஆசிரியர்களின் பெயர்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துகிறார்கள். நாமும்
முயன்று பார்க்கலாம் என்ற ஆசையின் விளைவு இதோ...
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
பூதலப்புரம்
முதல் வகுப்பு: புதூர் டீச்சர் மற்றும் சத்துணவுட் டீச்சர்
இரண்டாம் வகுப்பு: கருத்த வாத்தியார் (கூடுதலாக மொத்தக் கிராமத்துக்கும் வைத்தியமும்
பார்ப்பவர்!)
(மூவரின் பெயரும் அவர்களைத் தவிர
யாருக்கும் தெரியாது என்றே இன்று வரை எண்ணிக் கொண்டிருக்கிறேன்!)
அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் எங்கள் சென்னம்பட்டிப் பெரியப்பா (சின்னத்தம்பி என்ற அவர் பெயருமே கூட யாரும் அறியாததே!).
ச.கோ.கொ. இந்து உயர்நிலைப் பள்ளி,
நாகலாபுரம்
மூன்றாம் வகுப்பு: பிச்சம்மா டீச்சர் (அவர்களுடைய கணவர் சுப்பிரமணியம் சார், அருமையான ட்யூஷன் எடுத்தது மட்டுமின்றி, "நீ IAS
அதிகாரி ஆக வேண்டிய ஆள்!" என்று பார்க்கும் போதெல்லாம் அன்பைச்
செலுத்தியவர்!)
நான்காம் வகுப்பு: பத்மா டீச்சர்
ஐந்தாம் வகுப்பு: சர்க்கரைத்தாய் டீச்சர் (அவர்களுடைய கணவர் - ஓய்வு பெற்றிருந்த
ஆசிரியர் ஆறுமுகம் சார்தான் முறையாக ஆங்கிலம் வாசிக்கக் கற்றுக் கொடுத்தவர்.
அவரிடம் தனியார் ட்யூஷன் போயிராவிட்டால் கடைசிவரை அது சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே!) மற்றும் வீட்டுக்குப் பின்னால் குடியிருந்த பாலசுப்ரமணியன் சார் (இவர் எங்கள் வகுப்புக்கு ஓரிரு முறைகள்தாம் வந்திருக்கிறார் என்றாலும் எளிதில் பற்றிக் கொள்கிற மாதிரியான ஈர்ப்பு இவருடைய பாடம் நடத்தும் மற்றும் கதை சொல்லும் விதத்தில் இவரிடம் இருந்தது; இவருடைய வகுப்பில் படித்ததில்லையே என்ற ஏக்கம் எப்போதும் உண்டு!)
ஆறாம் வகுப்பு: தலைமையாசிரியர் பாண்டி முனியாண்டி சாரின் இரண்டாவது மகள் (பெயர்
நினைவு வர மறுக்கிற ஒரு சிலரில் இவரும் ஒருவர்; “புரிந்து படிக்க வேண்டும்!” என்று மற்ற மாணவர்களிடம் நான் விட்ட சீனை
ஆதரித்து மேலும் ஏற்றி விட்டவர்!)
ஏழாம் வகுப்பு: ஸ்ரீரங்க நாச்சியார் டீச்சர் (துணைப் பாடத்தில் வந்த கதையை நாடகமாக
மாற்றி எழுதியபோது, தான் பெற்ற பிள்ளையைப் பற்றிப்
பெருமைப் படுவது போல, எல்லா வகுப்பு ஆசிரியர்களிடமும் போய்ச்
சொல்லிப் பெருமைப் பட்டு, எழுதும் ஆர்வத்தை வெறியாக மாற்றியவர்)
மற்றும் இராமசாமி சார் (கணக்கை இவ்வளவு எளிமையாகச் சொல்லிக் கொடுக்க முடியுமா
என்று வியக்க வைத்தவர். கணக்குப் பாடத்தில் ஆர்வம் வர முக்கியக்காரணம்!)
எட்டாம் வகுப்பு: இராணி டீச்சர் (ஒரே தெரு என்பதால் உறவினர் போலப் பழகியக் குடும்பம்;
புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய காலம் வந்த போது முந்தைய ஆண்டு தன்
மகள் படித்த புத்தகங்களை எல்லாம் எனக்குக் கொடுத்து உதவியவர்!), தமிழ் டீச்சர் (தமிழ் ஆர்வம் பொங்கி வெள்ளமாக உதவிய பள்ளிப்
பேராசிரியர்!) மற்றும் சுசீலா டீச்சர்
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள்: தமிழ் டீச்சர், தலைமையாசிரியர் பாண்டி முனியாண்டி சார்
(புத்தகம் இல்லாமல், கதை சொல்வது போல ஆங்கிலப் பாடம்
நடத்தும் ஆற்றலைக் கண்டு வியப்பான வியப்பாக இருக்கும். எளிமையாகக் கணக்கு
நடத்துவதில் புலி இவரும்!), பிரபா டீச்சர் மற்றும் சுசீலா டீச்சர்
எட்டு, ஒன்பது
மற்றும் பத்தாம் வகுப்புகளில் படிக்கும் போது, பள்ளிக்கு
வெளியே தனியார் ட்யூஷன் சொல்லிக் கொடுத்த இரவி அண்ணன் (இப்போது பள்ளியில்
பணிபுரிவதால் சார் ஆகி இருப்பார்!) ஆங்கில இலக்கணம் மற்றும் கணக்குக் கற்றுக்
கொடுத்த விதம் என்றும் நன்றிக்கு உரியது. அதுதான் பின்னர் வெளியில் வந்து எளிதில்
ஆங்கிலம் பேச உதவியது. பத்தாம் வகுப்பில் அப்படியொரு மதிப்பெண் கிடைக்க இவர் ஒரு
முக்கியக் காரணம்!
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது, எந்தப் போட்டியிலும் நான் வென்றதில்லை என்றபோதும், என் நண்பர்களோடு நான் இருப்பதற்காகவும் என்னோடு அவர்கள் இருப்பதற்காகவும், எனக்கு மேலாளர் பட்டம் கொடுத்து, எல்லாப் போட்டிகளுக்கும் என்னையும் காசு போட்டு அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர் அமல்ராஜ் சாரும் இந்தப் பட்டியலில் முக்கியமானவர்.
எஸ்.பி.கே. மேனிலைப் பள்ளி, அருப்புகோட்டை
பதினொன்று மற்றும் பன்னிரண்டாம்
வகுப்புகள்: இரத்தினசபாபதி ஐயா (தமிழ்), ஆங்கில டீச்சர், சுருளி சார் (கணக்கு), கே.பாலசுப்ரமணியம் சார் (இயற்பியல்), ஜெரால்ட்
சார் (எப்போதும் இருபது வயது இளைஞன் போலவே இருப்பார். இப்போதும் அப்படித்தான்
இருப்பார் என்று எண்ணுகிறேன். தோற்றத்துக்காக மட்டுமின்றி அவருடைய திறமைக்காகவும்
மாணவர் மத்தியில் அவர் ஒரு நாயகன்!) மற்றும் ஆனந்தராஜ் சார் (வேதியியல்), விலங்கியல் சார் மற்றும் தாவரவியல் டீச்சர்
விடுதியில் சிவஞானம் சார் மற்றும்
ரமேஷ் சார்
ஆதித்தனார் கல்லூரி, திருசெந்தூர்
கல்லூரி:
சேதுராமலிங்கம் சார் (இவர் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை; அவ்வளவு திறமையாளர்!),
வைரவராஜ் சார் (அவர் விடுதியில் இருந்த காலத்தில் விடுதியே சூப்பராக
இருந்தது), மகேந்திரன் சார் (அவருடைய கண்டிப்புதான்
துறையின் ஒழுக்கத்துக்கு முக்கியக் காரணம்!) மற்றும் வேலாயுதம் சார் (இப்போதும்
தொடர்பில் இருப்பவர்; அருமையான மனிதர்!)
படித்த கணிப்பொறியியற் துறையை விட
என்னை அதிக அளவில் கொண்டாடிய தமிழ்த் துறையில் இருந்த மறைந்த மதிப்பிற்குரிய
அப்துல் ரசாக் சார் (என்னுடைய கவிதை ஒன்றை ஒரு பெரும் கூட்டத்தின் முன்பு மேடையில்
வாசித்து, அவருக்கு மிகவும் பிடித்த அந்தக்
கவிஞர் கூட்டத்துக்குள் உட்கார்ந்திருக்கிறார் என்று சொல்லி, எழுந்திருக்கச் சொல்லி, மொத்தக்
கூட்டத்தின் பார்வையையும் என் பக்கம் திருப்பிப் போதை ஊட்டியவர்; நான் கண்ட தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர்!), பாஸ்கர
பால்பாண்டியன் சார் (பேய்க்கதைகள் சொல்லுவதில் வல்லவர்; பட்டிமன்ற
மேடையில் ஏறி விட்டால் ஆளே வேறு மாதிரி ஆகிவிடுவார்!), சுயம்பு
சார் (கெழட்டுப் பய போலயே பேசுறயே! எப்பிடிடே?! என்று
சொல்லிச் சொல்லி ஏற்றி விட்டவர்!) மற்றும்
கண்ணன் சார் (மூன்றாமாண்டு முடிவை நெருங்கிக் கொண்டிருந்த போது,
"இப்போது கூட நான் ஒரு கடிதம் கொடுத்தால்
மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்குத் தினத்தந்தியில் ஒரு வேலை போட்டுக் கொடுப்பார்கள்
உனக்கு!" என்று எல்லோர் முன்பும் சொல்லிப் புல்லரிக்க வைத்தவர்!).
ஆங்கிலத் துறையில் தணிகாசலம் சார்
மற்றும் சேவியர் சார் (இவர்கள் இருவருமே பாடப்புத்தகங்களுக்கு வெளியே தாறுமாறாக
அறிவுத் தீனி போட்டவர்கள்!).
இதற்கெல்லாம் மேலாக, இவர்கள் எல்லோருமே என் வாழ்க்கையில் வரக் காரணமாக இருந்தவர் எங்கள்
ஊர் ஆங்கிலப் பேராசிரியர் - எங்கள் மாமாவின் குடும்ப நண்பர் திரு. பால்பாண்டியன்
அண்ணன் அவர்கள் (அவர் எங்கள் வகுப்புக்கும் வந்ததில்லை என்பதால் கடைசிவரை சார்
ஆகாமல் அண்ணனாகவே இருந்து விட்டார்!).
இதில் பல பகுதி நேர ஆசிரியர்களின்
பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அது மட்டுமின்றி, பள்ளிகளுக்கும்
கல்லூரிகளுக்கும் வெளியேயும் எத்தனை எத்தனையோ ஆசிரியர்கள் இன்றும் ஏதோவொன்றைப்
புதிது புதிதாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோருக்குமே
நன்றிகளும் வாழ்த்துக்களும்!!
கருத்துகள்
கருத்துரையிடுக