தீவாளிச் சுடிதார்

இந்த ஆண்டும் மழை சரியாகப் பெய்த பாடில்லை. சம்சாரிகள் பாடு வருசத்துக்கு வருசம் மேலும் மேலும் அச்சமூட்டுவதாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. மழை பெய்யாதது சம்சாரிகளுக்கு மட்டுமான கவலையா என்ன! வியாபாரிகளுக்கும் அதே கவலைதான். தீவாளிக்கு முன்பு ரெண்டு ஊத்து ஊத்துனாத்தான் விவசாயிகள் கடைத்தெருவுக்குள் கால் வைப்பார்கள். அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பது நெல் பயிரிட்ட விவசாயிகளைப் பற்றியது மட்டுமோ அரிசியில் சோறு பொங்கிச் சாப்பிடுபவர்கள் பற்றியது மட்டுமோவா! வானம் பொய்த்த போது விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த சம்சாரிகள் மட்டுமா ஊரைக் காலி செய்து எடுபிடி வேலைகள் செய்யப் போனார்கள்! அவர்களை நம்பி வாழ்ந்துகொண்டிருந்த நகரங்களுந்தானே நொடித்துப் போயின!

“இனிமே வெவசாயஞ் செஞ்சு பெழப்பு நடத்துறதெல்லாம் லேசுப்பட்ட காரியமில்லப்பா. யாவாரந்தான். எதாவது டவுன் பக்கம் போயி தொழில் செஞ்சு பெழைக்கிற வழியப் பாக்குறதுதான் புத்திசாலித்தனம். நம்ம பிள்ளைக காலத்துல எல்லாம் வெவசாயத்துக்கு மருவாதியே இராது. அம்புட்டுத்தேன். மண்ணு மலடாப் போச்சு. இன்னமும் மழ தண்ணிய எதிர்பாத்துக்கிட்டு இங்கயே ஒக்காந்துக்கிட்டு இருந்தா, யாருக்கு நட்டம்!’’

இது மாதிரி அப்பா பேசுவதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது கருப்பாயிக்கு. அதுவும் நாலாரம்-புதூர் போய்விட்டுத் திரும்புகிற நாட்களில், ரெம்பவே இந்த மாதிரிப் புலம்பும்.

“டவுனுகள்ல இருக்குற பிள்ளைக, வேணுங்கிறப்பத் துணிமணி எடுத்து உடுத்திக்கிறுதுக. எப்பப் போனாலும் பஸ் ஸ்டாண்டு முன்னால இருக்கிற மொதலியாரு சவுளிக்கடையில கூட்டமான கூட்டமாத்தான் இருக்கு. நம்ம தான் நம்ம பிள்ளைகளுக்குத் தீவாளிக்குக் கூட எதுவும் எடுத்துக் குடுக்க ஏலாமச் சீரழிஞ்சி கெடக்கோம்!’’ என்று சொன்னபோது, கருப்பாயிக்குக் கொஞ்சம் கவலையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அப்பாவின் இயலாமை கவலையையும், அதே வேளையில் அப்பா தன்னைப் பற்றியும் நினைத்துக்  கவலைப்படுகிறதே என்கிற நினைப்பு ஒரு சிறிய மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளித்தது. அவளும் ஒன்றும் நேரடியாகக் கேட்கவில்லை. அப்பாதான் அவளை வைத்துக்கொண்டே அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தது.

"வெலவாசி எக்குத்தப்பா ஏறிப்போயிருச்சு. போன வாரம் நம்ம மொதலியார் கடையில ஒரு பாவடை தாவணி செட்டுக்கு வெலக் கேக்கேன். மனுசன் மனச்சாட்சியே இல்லாம நூத்துக் கணக்குல சொல்றாரு. என்ன மொதலியாரே! வெல பாவடை தாவணிக்கா ஒங்க கடைக்கான்னு கேட்டுப்புட்டு வந்துட்டேன். எங்கப்பன் காலத்துல இந்தக் காசு இருந்தா, ஆகா ஓகோன்னு ஒரு கல்யாணத்தையே முடுச்சுப்புடலாம். இன்னைக்கு இப்பிடி ஆயிக் கெடக்கு நாடு. என்ன செய்ய, எல்லாம் காலக்கொடுமை!"

இந்த மாதிரி “அந்தக் காலம்..." "நாங்க சின்ன வயசுல...’’ என்று ஆரம்பித்தாலே கருப்பாயிக்குக் கடுகடுவென வரும். அடக்கிக்கொள்வாள்.

எட்டாப்பு முடிக்கிற வரை பிரச்சனையில்லை. உள்ளுர்லயே இருந்ததால பிரச்சனையில்லை. ஒம்பதாப்புக்குப் போனதும்தான் கொஞ்சம் கொஞ்சமா அவளுக்குள்ளும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. தினமும் பஸ் ஏறி, ஊர் விட்டு ஊர் வந்து பெரிய பள்ளிக்கூடத்தில் - நூத்துக்கணக்கான பிள்ளைகளோடு படிக்கத் தொடங்கிய போது தான், அவள் தன்னைப் பற்றியும் தன் நடை, உடை, பாவனைகள் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினாள். ஊருக்குள்ளேயே கிடக்கிற காலத்தில், பெரிதாய்க் கனவுகளில்லை; ஆசைகளில்லை. எதார்த்தம்தான் வாழ்க்கை. அரசாங்கம் கொடுத்த இலவசச் சீருடையே போதுமானதாக இருந்தது. இரவு, பகல், ஞாயிறு, திங்கள்... எப்பவுமே அந்த வெள்ளச் சட்டையும் நீல நிறப் பாவாடையும்தான்.

“எதோ உள்ளூர்ப் பள்ளிக்கொடத்துல எட்டுப் படுச்சு முடிச்சதும், சொந்தத்துல இருக்கிற அத்தை மக்கள் மாமா மக்கள்ல ஒருத்தனப் பொறுப்புள்ளவனாப் பிடுச்சுக் கட்டி வச்சுட்டா அவ பாடு கவலையில்லாம ஓடும். அடுத்து ஒரு பிள்ளை ஆம்பளைப் பிள்ளை. கவலையில்லை. அதுக்கப்புறம் எப்படியாவது ஓட்டிக்கிரலாம்!’’ என்று அம்மா அடிக்கடிச் சொல்லி மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது அவளுக்கு.

அப்படி இப்படி அந்த எட்டாப்புப் பரிச்சையும் எழுதி முடிச்சாச்சு. அதுவரை வந்ததே பெரிய சாதனையாகப் பட்டது. மூச்சு வாங்கியது.

“இன்னும் பள்ளிக்கொடம் போய்க்கிட்டிருக்காளா? சடங்கான பிள்ளையைப் பள்ளிக்கொடத்துக்கு அனுப்பிக்கிட்டிருக்கியே, அறிவு இருக்கா ஒனக்கு?” என்று போன ஆடிக்கு வந்த அத்தைக்காரி போட்ட போடுல ஆடிப்போய்க் கிடந்தாள் அம்மா. அடுத்த ஆறு மாசங்களுக்கு.

“நல்லா வீட்டுல வச்சு, பிள்ளயத் தயார் படுத்துறீ. போற எடத்துல - புகுந்த வீட்டுல புருசங்காரன் மூஞ்சில துப்பப் போறான்”-ன்னுட்டு அவ பாட்டுல போய்ட்டா. அம்மாவும் அதைப் பெருசாக் காதுல போட்டுக்கல. ஆனாலும் வயிறு கலக்குன கலக்கு எப்போவ்! 'நல்ல வேலை இவளுக்கு ஆம்பளைப் பிள்ளை இல்ல!'.

எட்டாப்பு முடிஞ்சு, பாசாகியாச்சுன்னு நல்ல முடிவு வந்திருச்சு. புதுசா வந்த எட்மாஸ்டர் புண்ணியம். ரெம்ப நல்ல மனுசரு. தூத்துக்குடிப் பக்கம் ஊரு. எட்டாப்பு வரைக்கும் இருக்குற பள்ளிக் கொடத்த ஐஸ்கூலாக்க ரெம்பப் பெரயாசப் பட்டாருன்னு வாத்திமாருக மத்தியில பேச்சு. கிறுக்கு வாத்தியாரக் கூட்டிக்கிட்டு, தூத்துக்குடி போய்க் கலெக்டரையெல்லாம் பாத்துட்டு வந்தாரு. ஒண்ணும் ஆகல. கிறுக்கு வாத்தியார்தான் அவருக்கு உற்ற நண்பன். ஆனால் புத்திசாலி. மழைய எதிர்பாத்தாப் பெழப்புக் கெட்டுப்போகும்னு யாவாரத்துல எறங்கிட்ட வடக்குத் தெரு ஆளுக மாதிரி, ‘இது இல்லன்னா அது’ன்னு எதுலயும் டக்கு டக்குன்னு சூட்டிக்கா எறங்கிருவாரு.

ஐஸ்கூலாக்குற முயற்சி இப்போதைக்கு நடைமுறைக்கு வராதுன்னு தெரிஞ்சதும், வீடு வீடாப் போயி எல்லாப் பிள்ளைகளோட அப்பா அம்மாவையும் பார்த்து, சரிக்கட்டி கூடவே இருந்து நாகலாபுரத்து ஐஸ்கூலில் ஒன்பதாப்புச் சீட்டு வாங்கித் தந்துட்டார். பன்னிரண்டு பேர்ல மொத்தம் மூணுதான் பொம்பளப் பிள்ளைக. பத்துப் பேரு இப்ப தினமும் பஸ்ல போயிட்டு வர்றோம். பயலுகள்ல மாரிச்சாமி வீட்டுல மட்டுந்தான் அனுமதி கிடைக்கல. பால் வியாபாரத்துக்கு வேணுமாம். மீதி எட்டுப் பேரும் வந்துட்டாங்க. பொண்ணுங்கள்ல மூணுமே மலச்சுக்கிட்டு இருந்தது. வேலம்மா ஒருத்திக்கு ரிசல்ட் வரும் முன்னாலேயே கல்யாணத்த முடிச்சு வச்சுட்டாக. உள்ளூர்லத்தான் இருக்கா. ஏழாப்பு வாத்தியார் மகள் விமலா தொடர்ந்து படிப்பது உறுதியென்பதால், அவளைக் காட்டி, ஒரு பெரிய போராட்டத்துக்குப் பின்னால் கருப்பாயி வீட்டிலும் சம்மதிக்க வைத்துவிட்டார், கில்லாடி எட்மாஸ்டர்.

முதல் நாள் வாத்தியார் வருகைப் பதிவு எடுத்த போது, ‘கருப்பாயி’ என்று பெயரைச் சொன்னதும், மொத்தக் கூட்டத்திலும் ஒரு சின்னச் சலசலப்பு. அன்று தான் முதன் முறையாக ஒரு கூட்டத்தையே தன் பக்கம் திருப்பியதாக உணர்ந்தாள். வெட்கித் தவித்தாள். பிறந்ததிலிருந்து அதே பெயரைக் கேட்டுக் கேட்டுப் பழகிப் போனதால், பெயரைப் பற்றிய அவாவில் ஈடுபட வேண்டிய கட்டாயம்-அவசியம் ஒருபோதும் நேரவில்லை. ஆனால் அன்று அப்பா மேல் கோபம் கோபமாய் வந்தது. 'ஒருவேளை நம்ம தாத்தன் செஞ்ச கொடுமையா இருக்குமோ?!' என்றும் தனக்குத்தானே புலம்பிக்கொண்டாள்.

'ஸ்ரீதேவி, ராஜஸ்ரீ, உஷா, ஆஷா'-ன்னு எத்தனை அழகழகான பேருக இருக்குறப்ப, இந்தச் சனங்க மட்டும் ஏந்தான் இன்னமும் கருப்பாயி, காத்தம்மாள்-னு பேரு வச்சுக் கேவலப்படுத்துதுகளோ?!' என்று தன் சமூகப் பின்னணியையே சாடுகிற மாதிரியான கோபம் கொண்டாள்.

‘முட்டாச் சென்மங்க... வடமொழி எழுத்து ஒண்ணும் வாய்ல நொழையாது. நல்ல வேலை, அப்படி ஏதாவது பேரு வச்சிருந்தாலும் நாறிப்போயிருக்கும். சிரிதேவி, ராசசிரி, உச்சா, ஆச்சா-ன்னு கூப்புட்டு, பேரையே கொலை செஞ்சு கொடுமைப் படுத்தியிருக்குங்க!' என்று அஃறிணை யில் அழைக்கத் தொடங்கிவிட்டாள்.

நாட்கள் நகர நகர, இலவசச் சீருடை மீது ஓர் ஏளனமான பார்வை ஏற்பட்டது. சனிக்கிழமை ஸ்பெசல் கிளாசுக்குக் கூட அதையே உடுத்திக்கிட்டுப் போறதுக்கு ரெம்பவே அவமானமாகப் பட்டது. விமலா பட்டிக்காட்டிக் காரியா இருந்தாலும் துணி மணியெல்லாம் ஆடம்பரமா உடுத்துவா. வாத்தியார் பிள்ளை. இந்தத் தீவாளிக்காவது சுடிதார் வாங்கிறணும்னு ஆசையைத் தேக்கி வச்சிருந்தாள் கருப்பாயி. தானாப் போயி அப்பாகிட்டக் கேக்குறதுக்குக் கூச்சப்பட்டாள். குடும்ப நெலமை புரிஞ்ச ஒரு பொறுப்பான பிள்ளைன்னு பேரெடுத்துப்புட்டு, இப்படியெல்லாம் நடந்துக் கிட்டா நல்லாருக்காதுன்னு நெனச்சா.

அப்பாவே அம்மாவிடம் சொன்னார், “நாளைக்கு நாலாரம் போறப்ப, கருப்பாயிக்குத் துணிமணி எடுத்துட்டு வந்துரு. அவள்ட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டுப்போ. இல்லன்னா, அவளையே கூட்டிட்டிப் போயி வாங்கிக் குடுத்துரு!” என்று ஆரம்பித்தார்.

அம்மா கேட்டாள், “என்னடி, வாரியா நாளைக்கு? இல்ல திங்கக்கெழம நீயே பாத்து எடுத்துக்கிறியா?”.

அவசரம் பொறுக்க முடியவில்லை.

“மொதலியார் கடையில போன வாரம் ஒரு சுடிதார் பாத்தேன். பச்சக் கலரு. நல்லாயிருந்தது. அதையே எடுத்துட்டு வந்துரும்மா!" என்றாள் கருப்பாயி.

சொல்லும் போதே ஒரு மாதிரியான பூரிப்பும், சங்கடமான உணர்வும் அவளுக்கு. “பொம்பளப் பிள்ள பாவாடை தாவணின்னு போட்டா, அது எப்படி இருக்கும்... அழகா!” என்று எங்கே அம்மா வியாக்கியானம் ஆரம்பிச்சிருவாளோன்னு நெனைச்சுக்கிட்டேதான் சொன்னாள். எதிர் பார்த்த மாதிரியாக எதுவும் வரவில்லை அம்மா வாயிலிருந்து.

“அது என்னமோ சொல்லுதுகளே சுடிதாரு, அதுதான் இப்ப எல்லாப் பிள்ளைகளும் உடுத்துதுக. கருப்பாயியும் ஆசைப்படுறா. அது வெல ரெம்பக் கூடயோ?” என்று அப்பாவிடம் விளக்கம் கேட்டாள். “என்ன பெருசா வித்தேசம் இருக்கப் போகுது. அஞ்சு பத்துக் கூடப் போட்டாலும், படிக்கிற பிள்ளை ஆசைப்பட்ருச்சு. வாங்கிக் குடுத்துற வேண்டியதுதான்!” என்றார் அப்பா.

மிகுந்த மகிழ்ச்சி கருப்பாயிக்கு. 'இந்தத் தீவாளிய ஆசைப்பட்ட மாதிரி பச்சக் கலர்ச் சுடிதாரோட கொண்டாடலாம்!” என்று எண்ணி எண்ணி உவகை அடைந்தாள். எதிர் பார்த்த அளவுக்கு எதிர்ப்பு எதுவும் இல்லாம முடிஞ்சு போனதில், இரட்டை மகிழ்ச்சி. மறுநாள் - ஞாயிற்றுக்கிழமை, காலையிலேயே எழுந்து ஒன்பதரை வண்டிக்கு அம்மா நாகலாபுரம் கிளம்பிவிட்டாள். கருப்பாயியும் அம்மாவை மூஞ்சிய மூஞ்சியப் பார்த்துக்கிட்டே வழியனுப்பி வைத்தாள். சாயங்காலமே பச்சக் கலருச் சுடிதாரப் போட்டுப் பாத்துரலாம்கிற பூரிப்பில் முகமெல்லாம் பூப்பூத்த மாதிரிச் சந்தோசத்திலிருந்தாள்.

பத்தரை மணிக்கு நாகலாபுரம் வந்து இறங்கினதும், மாரியப்பச் செட்டியார் மளிகைக் கடை, கருப்பசாமி நாடார் காய்கறிக்கடை, வேலுப்பிள்ளை ஷாப் கடை என்று வரிசையாக தீவாளிச் சரக்குகளை வாங்கிக் குவித்து விட்டு, இரண்டு கைகளிலும் இரண்டு பெரிய பைகளை வைத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தாள் கருப்பாயியின் தாய். ரெண்டரை வண்டி வர்றதுக்கு முன்னால, மொதலியார் கடையில போயி மகளுக்குச் சுடிதார் வாங்கி விட வேண்டுமென்ற வேகத்தில் வெடுக்கு வெடுக்கென வேகமாக நடந்தாள். கூட வந்த ஆவுடையம்மாவுக்கு ஈடு குடுக்க முடியல.

“என்னக்கா அவசரம்?! மெதுவா நட. ரெண்டரைக்குத் தானே நம்ம ஊருக் காரு?! அதுவும் ரெண்டரைக்கு வருதோ, நாலு மணிக்கு வருதோ?!” என்றாள்.

“இல்லடி, கறுப்பிக்கு எதாவது துணிமணி எடுத்துட்டுப் போகணும். அதேன்!”. பேசிக்கிட்டே கடைக்குள்ளே நுழைந்தார்கள். மொதலியார் பல்லைப் பசப்பி வரவேற்றார்.

“வாங்க... வாங்க... வாங்கம்மா... வாங்க... என்னம்மா வேணும்?!"

“எதோ சுடிதாரா மிடிதாரா? படிக்கிற பிள்ளைகள்லாம் போடுதுகள்ல, அது ரெண்டு எடுத்துப் போடுங்க பாக்கலாம்!”

பட்டென்று ஆவுடையம்மா மறித்தாள். “அதென்ன சுடிதாரு-கிடிதாருன்னுக்கிட்டு! என்ன இருந்தாலும் சடங்கான பிள்ளைக்குத் தாவணி-பாவாடை மாதிரி வருமா? சும்மா இருத்தா. பாவாடை-தாவணி எடுத்துப் போடுங்க மொதலியாரே! நல்ல துணியாக் கொறைஞ்ச விலைக்கு டக்குட் டக்குன்னு எடுத்துப் போடுங்க பார்ப்போம். பளிச்சின்னு இருக்கணும்!” என்று படபடவெனப் பேசினாள்.

இந்த இடத்தில் ஒரு சிறு ஆட்டம் கண்டாள் கருப்பாயியின் அம்மாக்காரி. பிள்ள ஆசையாக் கேட்டுச்சென்ற சிந்தனை ஒருபுறம். ஊர்ப் பேச்சுக்கு மீறிப் பண்றது தப்பாயிருமோன்ற பயம் ஒருபுறம். ஆவுடையம்மாதான் இப்போதைக்கு ஊரு!

“ரெண்டும் எடுத்துக்குடுங்க. பாக்குறதுல என்ன இருக்கு, காசா பணமா? எல்லாத்தையும் எடுத்துக் காட்டி வாடிக்கையாளர்களத் திருப்திப்படுத்துறதுதான எங்களோட வேலை! எனக்கென்ன எடுத்துப்போட - மடிச்சு வைக்க மேலா வலிக்கப் போகுது?! ஏய், இன்னம் ரெண்டு கலர் எடுத்துப்போடுப்பா!” என்று வியாபாரத் தோரணையில் உதிர்த்தார் மொதலியார்.

‘தீவாளி யாவாரம் வருசத்துக்கு வருசம் கீழ போய்க்கிட்டே இருக்கு. மொதலியார் காலைல இருந்து ஒரு ஆள் கூட வராம, ஈ வெரட்டிக்கிட்டிருக்காரு. வந்த ஆள அவ்வளவு சாதாரணமா விட்ருவாரா, என்ன?’ என்று நினைத்துக்கொண்டான் வேலை இல்லாமல் ஓரத்தில் ஒக்காந்து ஈ ஓட்டிக் கொண்டிருந்த தையக்காரன்.

“காலம் மாறிப் போச்சும்மா. பாவாடை, தாவணி, பட்டுச்சேலையெல்லாம் மலையேறிறிச்சு. நம்மள மாதிரி வீடு உண்டு, வேலை உண்டுன்னு இருக்கிற தலை முறையில்ல இது. நாலு எடத்துக்குப் போயி வர்ற பிள்ளைக, நல்லா நாலு பேரப் போல நாகரியமா ட்ரெஸ் பண்ணனும்னு ஆசைப்படுற வயசு. இப்ப எல்லாம் சுடிதாருதாம்மா. பாருங்க... எல்லாம் நல்ல-நயமான துணியில தச்ச சுடிதாருக. நல்ல நல்ல கலருக. வெலயும் நீங்க நெனக்கிற மாதிரி ரெம்பக் கூட இல்ல. நீங்க தாவணி-பாவாடைக்குக் குடுக்குற காச விட அஞ்சு பத்து கொறைவாத்தான் வரும். இப்பல்லாம் யாரும்மா துணி எடுத்து, டெய்லர்களப் பிடிச்சுத் தைக்கப் போட்டு, அவங்களுக்கு நூத்துக் கணக்குல படி அளந்து, தச்சு உடுத்திக்கிட்டிருக்காக?! எல்லாம் ரெடிமேட்தான். இந்த ரெடிமேட் துணிகள் யாவாரம் அதிகமானதுக்குக் காரணமே, இந்த டெய்லர்மாருக அநியாயந் தாங்க முடியாமத்தான். என்னப்பா?!” என்று டெய்லர் பக்கம் திரும்பி நக்கற் சிரிப்பு சிரித்தார்.

'யாவாரமே இல்லாட்டாலும் மண்டக்கனம் இன்னமும் கொறையல மொதலியாருக்கு. ரெடிமேட் துணின்னாக் கூடக் கொஞ்சம் லாவம் கெடைக்குங்கிறதுக்காக இப்பிடியெல்லாம் டெயிலர்மாரு பொழப்பக் கெடுக்குறீரய்யா?’ என்று மனசுக்குள்ளயே புலம்பிக்கொண்டான் டெய்லர்.

மொதலியார் வாயை ஆவுடையம்மாள் பட்டென்று அடைத்தாள். “எக்கா, அவுக யாவாரம் நடக்கணுங்கிறதுக்காக என்ன வேண்ணாலும் பேசுவாக. நம்மதான் கவனமா இருக்கணும். கூட அம்பது ரூவா ஆனாலும் பரவால்ல. பாவாடை-தாவணி போட்டது மாதிரி வராது. அதுவும் தீவாளியன்னைக்குமா... எதோ நாடகக்காரி மாதிரி ஒரு உடுப்பு உடுத்திக்கிட்டு... நல்லாவாயிருக்கும்?”

வாய்ப்பைப் பயன்படுத்தி, டெய்லர் ஒரு போடு போட்டான்.

“அதெல்லாம் வாத்திமார் பிள்ளைக, மொதலியார் மாதிரி மொதலாளிமாரு பிள்ளைக போடுற ட்ரெஸ்ஸு. நம்மள மாதிரி சம்சாரி வீட்டுப் பிள்ளைக தாவணி போடறதுதான் நாகரியம். என்னக்கா நான் சொல்றது?!” என்று ஆவுடையம்மாள் பக்கம் திரும்பினான்.

சொல்லிவிட்டு ஏதோ ஒரு அம்பது ரூவாத் தொழில் உறுதியாகி விட்ட மாதிரி உணர்ந்தான். வேலையே இல்லாம ஒக்காந்துக்கிட்டிருக்க வேண்டிய நிலைமையை நினைத்தால் அவனுக்கும் வேதனையாகத்தான் இருந்தது.

“இப்பத் துணியெடுத்துப் போட்டிங்கன்னா, நாளைக்குப் பாப்பா பள்ளிக்கொடம் வர்றப்ப வந்து தச்சத வாங்கிக்கிறலாங்க்கா. ஒடனக்கி ஒடனே வேலை முடிச்சுக் குடுத்துருவேன். மத்த டெய்லருக மாதிரிக் கெடையாது!” - டெய்லர் இன்னும் ஓங்கி ஓரடி போட்டான்.

“டெயிலரண்ணே, எத்தன மீட்டர்த் துணி எடுக்கணும்னு சொல்லுங்க, தாவணி, பாவாடை, சட்ட... எல்லாத்துக்கும் சேர்த்து!” என்றாள் ஆவுடையம்மாள்.

டெய்லர் குஷியானான். “நால்ற மீட்டர் போடுங்கக்கா, சரியாப் போகும்!” என்றான் தெம்பாக, மொதலியாரைச் செயித்துவிட்ட மாதிரியான பெருமிதத்தில்.

“மொதலியாரே, அந்தப் பச்சக் கலர்ப் பூப்போட்ட பாலிஸ்டர் துணியில நால்ற மீட்டர் கிழிங்க, வெலயெல்லாம் பாத்துப் போடுங்க. நாளப்பின்ன கடைப்பக்கம் வர்ற மாதிரி வெலப் போடுங்க!” என்றாள் ஆவுடையம்மாள் அழுத்தமாக.

“எக்கா, அதுல ஒரு அம்பது குறைச்சிட்டு மொதலியார்கிட்டப் பணத்தக் குடு. பஸ்சுக்கு நேரமாகுது. டக்குன்னு கெளம்பு!” என்றாள்.

முதல் அடி மொதலியாருக்கு. மூஞ்சி சுருங்கியது. சிரித்து மழுப்பி, ‘சுடிதார் வித்திருந்தா பாதிக்குப்பாதி இலாபம் கிடைத்திருக்குமே!’ என்ற கோபத்தை அடக்கி, “சுடிதார் வாங்கியிருந்திங்கன்னா, இன்னும் நிறையக் கொறைச்சுக் கொடுத்திருக்கலாம். எல்லாம் ஒண்ணுதான். இந்த பச்சக் கலர்ப் பூவு, பாவாடை தாவணிக்கு எடுப்பா-அருமையா இருக்கும்!" என்று கூறி மஞ்சப்பையில் துணிகளைப் போட்டுக் கொடுத்து, கை கூப்பினார்.

துணி அளவு சொன்ன டெய்லர், மூஞ்சியை மூஞ்சியைப் பார்த்தான். “என்னக்கா? இத எங்க தைக்கப் போடுவீங்க?”

அடுத்த அடி அவனுக்குத்தான்.

“எங்க ஊர்ல அக்கா மகன் ஒரு பய இருக்கான். ரெண்டு வருசம் மதுரைல இருந்துட்டு வந்தவன். நல்லாத் தைப்பாம்ப்பா. காசும் ரெம்பக் கொறவாத்தான் வாங்குவான். தொழில்ல கெட்டிக்காரன்!” என்றாள் ஆவுடையம்மாள்.

டெய்லர் மூஞ்சியும் இஞ்சி தின்ன குரங்கு போலானது. மொதலியாருக்கு இப்போது கொஞ்சம் ஆறுதல்.

“பஸ்சு வந்துருச்சுக்கா. பைகளத் தூக்கிக்கிட்டு வேகமா வா. கூட்டமா இருக்கு. சீட்டுப் பிடிக்கிறது கஸ்டந்தான் போலத் தெரியுது!” - பட பட வெனப் பொரிந்து விட்டுப் புறப்பட்டாள் ஆவுடையம்மாள்.

தாவணி பாவாடைக்கு எடுத்த பச்சைப் பூப்போட்ட பாலிஸ்டர் துணி கொண்ட மஞ்சப்பை உட்பட மூணு பைகளைச் சுமந்து கொண்டு, எதுவுமே அறியாத குழந்தை போல் பஸ்சை நோக்கி ஓடினாள், வாழ்க்கையில் முதன் முறையாக சுடிதார் உடுத்தப்போகும் பூரிப்போடு காத்துக்கிடக்கிற குழந்தை கருப்பாயியின் தாய் காளியம்மாள்.

(முற்றும்)

எழுதியது: இருபதாம் நூற்றாண்டில்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்