பறிச் சீட்டு

கந்தவேலாசாரி...

தச்சுத் தொழிலில் கைதேர்ந்தவர் என்பதற்காக மட்டுமல்ல. பல்வேறு மற்ற காரணங்களுக்க்காகவும் மதிக்கப்படுபவர். சுற்றியிருக்கிற கிட்டத்தட்ட இருபது-முப்பது கிராமங்களில் நன்கறியப் பட்டவர். அந்தப் பகுதியில் கடந்த நாற்பது ஆண்டுகளில் கட்டப்பட்ட பெரும்பாலான வீடுகளில் எல்லாமே தன் வேலைதான் என்கிற மாதிரித்தான் பேசுவார். அதுதான் உண்மையும். யாரைப் பற்றிப் பேசினாலும் அந்தத் தெருவில் இந்த ஆண்டு இன்னின்ன வேலைகள் செய்தோமே என்பதோடு தொடர்பு படுத்தி - நினைவு படுத்தித்தான் பேசுவார். "அதாம்ப்பாமேலத்தெருவில் எம்பத்தி நாலில் மரப்படிக்கட்டு கட்டிக் குடுத்தோமே! அந்த மாடி வீடு... கெணத்துல இருந்து ஏழாவது வீடு... அந்த வீட்டுக்காரந்தான்!" என்கிற மாதிரி. ஆசாரிமார் தெருவிலேயே பெரிய வீடு இவருடையதுதான். தச்சுத்தொழில் பார்த்தும் இப்படியொரு வீடு கட்ட முடியும் என்று ஊருக்குக் காட்டியவர். செலவைக் குறைத்து சேமிப்பைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்கிற அவருடைய அடிப்படை விதியை மட்டும் இன்றுவரை யாரும் சரியாகப் புரிந்து கொண்டபாடில்லை. ஆனால் தெருவில் இருக்கிற ஒவ்வொரு ஆசாரியும் இவரை மாதிரி வரவேண்டும் என்கிற ஆசையும் கனவும் கொண்டிருக்கிறார். சின்ன வயதிலேயே தீவுக்குப் போய் வேலை பார்த்து விட்டு வந்தவர் என்பதால்காசு நிறைய மிஞ்சி விட்டது. வெற்றியின் மற்றொரு இரகசியம் இது.

விபரமான சிலர் இதையும் சொல்லிக்காட்டத்தான் செய்கிறார்கள் - "கந்தேலாசாரி மிச்சம் பிடிச்சு மிச்சம் பிடிச்சு மட்டும் சேத்ததில்லப்பா இந்தப் பணம். நம்மல்லாம் ஒழுங்காப் பிடிச்சு ஒன்னுக்கு அடிக்கக் கூடப் பழக முன்னாடியே தீவுக்குப் போயி அள்ளிட்டு வந்திட்டாரு. ஒரு அளவுக்கு மொதல்ல சேக்கணும்யா. அதுதான் கஷ்டம். அது அவருக்கு ஈசியாக் கெடச்சிருச்சு. அது முடிஞ்சிட்டா அதுக்கு மேல சேக்குறது ஒரு பெரிய வித்தையே இல்ல. அதுவே தானாச் சேரும்!".

தீவிர முருக பக்தர். ஒவ்வொரு மாதமும் மாதாந்திர வெள்ளியன்று திருசெந்தூரில் பார்க்கலாம் தலைவரை. தலை போகிற வேலையாக இருந்தாலும் கழற்றிக் கொடுத்து விட்டு அதிகாலை முதல் வண்டியைப் பிடித்து வந்து சேர்ந்து விடுவார். எப்போதிருந்து இந்தப் பழக்கம் ஆரம்பித்தது என்று இப்போதும் நினைவில் இருக்கும் போலத்தான் தெரிகிறது. "கடந்த முப்பத்தாறு வருசமா ஊர்ல இருந்தன்னாமாதாந்திர வெள்ளியன்னைக்குத் திருச்செந்தூர்ல இருப்பேன்!" என்று சரியான எண்ணைக் குறிப்பிட்டுச் சொல்லிக் குதூகலப்பட்டுக் கொள்வார் அடிக்கடி.

பெரிய அறிவாளியும் கூட. அவருடைய அறிவைச் சந்தேகிப்பவர்கள் தினமும் காலை ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் புளியமரத்துட் டீக்கடை அரசியல் கருத்தரங்கங்களை வந்து பார்த்தபின் முடிவு செய்து கொள்ளலாம். அவருடைய அரசியற் பேச்சைக் கேட்க ஆசாரிமார் தெருவுக்கு வெளியேயும் ஒரு பெரிய இரசிகர் கூட்டமே இருக்கிறது. கார்ல் மார்க்சில் ஆரம்பித்து விஜயகாந்தின் புதிய கட்சி வரை எல்லாத் தலைவர்களையும்கட்சிகளையும் பதினாறு திசைகளில் இருந்தும் அலசிக் காயப்போட்டு விடுவார். "ஒன்னாப்புதான் படிச்சிருக்கேன்!" என்று வேறு அடிக்கடிப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார். "இத்தனை சமாச்சாரமும் எங்கேதான் படிச்சாரோ பாவி மனிதர். படிச்சவுக பல பேருக்கு அவர் புத்தியில பாதிக் கூட இல்லையே!" என்று அவர் காதுக்குக் கேட்கும் படியாகவே அவ்வப்போது யாராவது சொல்லி விடுவார்கள். எட்டு மணிக்கு அவருடைய சொற்பொழிவு முடிந்ததும் அனைவரும் களைந்து அவரவர் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் ஆசாரிகளும் கொத்தனார்களுமே நிறைந்திருப்பார்கள். ஒரு சில வியாபாரிகளும் அரசாங்க வேலை பார்ப்போரும் கூட உண்டு.

இரண்டு பையன்கள். இருவரையுமே வெளியூரில் படிக்க வைக்கிறார். அவரைப் பொருத்தமட்டில், "பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைப்பது மாபெருந் தவறு". "ஒவ்வொருத்தரும் தன் பிள்ளைகளை ஒழுங்காப் படிக்க வைத்தாலே அதுவே பெரிய சொத்து!" என்பதே அவர் அடிக்கடிச் சொல்லும் தத்துவம். பீடிசிகரெட்புகையிலைகுடிகும்மாளம் (!)சூதாட்டம்பரிசுச் சீட்டு (லாட்டரி)... என எந்தப் பழக்கமும் இல்லாமல் போனதால்வாழ்க்கை மிக நிம்மதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இனிமேலாவது பழக வாய்ப்பிருக்கிறதா என்றால், "நல்லவர்" "நல்லவர்" என்று சொல்லியே கடிவாளம் போட்டு விட்டதே ஊர்!

அமாவாசையன்று ஆசாரிமார் தெரு கலகலப்பாக இருக்கும். யாரும் வேலைக்குப் போக மாட்டார்கள். இட்லிதோசைகறிகுடி... எல்லாம் நடைபெறுகிற நாள். இளவட்டங்கள் எல்லாம் ஒரு சில முதுவட்டங்களையும் சேர்த்துக் கொண்டு சீட்டாடுவார்கள். அப்போது கூடத் தலைவர் போனால் கூச்சப்பட்டுக் குறுகி மறைத்துக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆடுகிறவர்களைப் பற்றி அவருக்குத் தெரியும். அது பற்றி அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் மரியாதை நிமித்தமாக நடக்கிற அனிச்சைச் செயலிது.

வழக்கம் போல் மாதாந்திர வெள்ளிக்குத் திருச்செந்தூர் சென்றிருந்த போது இம்முறை ஒரு சிறிய மாற்றத்தைக் கவனித்தார். எப்போதுமே சுண்டல் விற்கும் சிறுவர்களின் தொல்லைதான் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த மாதம் பரிசுத் சீட்டு விற்கும் சிறுவர்கள் கணிசமாகத் தென்பட்டார்கள். சுண்டற்காரப் பொடியன்கள் குறைந்திருப்பது போலத் தெரிந்தது. அடிக்கடி வந்து போவதால், “வழக்கமான பேருந்து”, “வழக்கமான உணவகம்”, “வழக்கமான இளநீர் வியாபாரி”, “வழக்கமான சுண்டற் பையன்” என்றொரு “வழக்கமான...” பட்டியல் இருக்கிறது. “வழக்கமான சுண்டற் பையன்” முருகேசனும் வந்தான். அவரைப் பார்த்ததும் வேகமாக நேரே அவரிடமே வந்தான்.

“என்னடாபொடியா! எல்லாரும் இப்பிடிச் சொல்லி வச்ச மாதிரித் தொழில மாத்திட்டிங்க?!” என்றார் உரிமையாக.

“போன வாரம் எங்கம்மா ஒரு கல்யாணத்துக்குப் போய்ட்டு வந்துஎங்க மாமா மகன் ஒருத்தன் கன்னியாகுமரியில லாட்டரி யாவாரத்தில் நல்ல வருமானம் பாக்குறான்னு சொல்லிஎன்னையும் அதையே பண்ணச் சொல்லிட்டாவ. அப்படியே ஒன்னத் தொட்டு ஒன்னத் தொட்டு ஒரே வாரத்தில் எல்லாரும் அதையே ஆரம்பிச்சிட்டானுக. எல்லாருக்குமே நல்லாத்தான் ஓடுது!” என்றான் புதிய பொருளியல் கற்றுக் கொண்ட சிறுவன் புன்னகையோடு.

பார்த்தால் பாவப்பட வைக்கிற புன்னகை. அவனுடைய கள்ளங்கபடமற்ற புன்னகையும் முகமும் அவருக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவனைப் பார்க்கிற போதெல்லாம் ஏழ்மையை மிக அருகாமையில் பார்க்கிற துயரத்தையும் அப்பன் முருகனையே நேரில் பார்க்கிற மாதிரியான இன்பத்தையும் ஒருங்கே உணர்ந்தார். திருச்செந்தூருக்கு வரும்போதெல்லாம் இவனிடம் ஒரு சுண்டல் வாங்கித் தின்னாமல் ஊர் திரும்பியதில்லை. அவனைக் கூடவே கூட்டிச் சென்று வளர்த்துக் கொள்ளலாமா என்றுகூட அடிக்கடித் தோன்றும் அவருக்கு. ஆனால், ‘இவன் போலவே எத்தனையோ இலட்சம் சிறுவர்கள் இருக்கிறார்கள் இந்த தேசத்தில். அவர்களையெல்லாம் யார் தூக்கிச் சென்று வளர்ப்பார்கள்?’ என்று எண்ணிப் பின்வாங்கிக் கொள்வார். அதற்குப் பிராயச்சித்தமாக மாதாமாதம் அவனிடம் ஒரு சுண்டல் வாங்கித் தின்பதை நினைத்துக் கொள்வார். ஆனால் அவன் இந்தமுறை செய்து கொண்டிருப்பதோ அவர் இதுவரை வாங்கியிராத பரிசுச் சீட்டு வியாபாரம். தனக்குப் பிடிக்காத ஒரு தொழிலும் கூட. ஆனால் அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே அடிமனதில் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவரும் அதை மிக மென்மையாக உணரத்தான் செய்கிறார். பிடித்ததைப் பிடிக்காமல் போக வைப்பதும் பிடிக்காததைப் பிடித்துக் கொள்ள வைப்பதும் இந்த வாழ்க்கையில் முதல் முறையாகவா நிகழ்கிறது?! இம்மாற்றங்கள் சில நேரங்களில் இயல்பாகவேயும் சில நேரங்களில் பிடிவாதத்தை வென்று பிடிவாதமாகவும் நடந்து விடுகின்றன.

“முருகன் புண்ணியத்துல ஒங்களுக்கு ஒரு இலட்ச ரூவா கிடைக்கப் போகுதுஅண்ணாச்சி. நல்ல நம்பர். வாங்கிக்குங்க. ஒரே நாளில் எவ்வளவோ செலவழிக்கிறோம். பஸ்சுல ஏறிமீதிக்காசு வாங்காம எறங்கிர்றோம். சில நேரம் பக்கத்துல நிக்கிறவன் பையோட அடிச்சிட்டுப் போயிடர்றான். பெறந்ததுல இருந்து ஒழைச்சு ஒழைச்சு ஓடாத் தேஞ்சதுதான் மிச்சம். காசு ஏதாவது கையில் மிஞ்சியிருக்கா?! ஒரே ஒரு தடவ வாங்கிப் பாருங்க. தினசரி ஒருத்தரக் கோடீசுவரராக்குற முருக பகவான் நாளைக்கு ஒங்கள ஆக்கலாம். யாருக்குத் தெரியும்பக்தியோட பலன் எப்ப – எப்பிடிக் கெடைக்கும்னு?!” என்று கடகடவென ஒப்பித்தான்திருச்செந்தூர்க் கடற்கரைக்கெனப் பிரத்தியேகமாகத் தயார் செய்யப்பட்ட வசனங்களை.

சிறுவனின் பேச்சுத் திறமையைக் கண்டு வியப்பில் மூழ்கினார். ‘பையன் வெடிப்பானவந்தான். ஆனா போன தடவப் பாத்தவரை இந்த அளவுக்கு வெடிப்பில்லையே! இந்த மாதிரி வாயெல்லாம் மதுரைலதான் அதிகமா இருக்கும். தெக்கத்திக் பயகளும் இப்போ இப்பிடி ஆரம்பிச்சுட்டானுகளா?!’ என்று எண்ணிக் கொண்டே, “உன் வயசுல நானும் இப்பிடித்தானாம்டா. பயங்கரச் சவடாற் பேர்வழியாம். கண்டிப்பாப் பெரிய ஆளா வருவடா!” என்று தன்னையும் சேர்த்துப் பெருமைப் படுத்திக்  கொண்டே மெதுவாகச் சீட்டுக்கட்டை நோக்கிக் கண்ணைப் பறிகொடுத்தார். பையன் மீதான பாசம்முருகன் மீதான பக்தி போன்ற காரணங்களை முன்னிறுத்தி மனசுக்குள்ளிருந்த நப்பாசை எழும்பி வெளிக் கிளம்பியது. உள்ளுக்குள் இருந்து இன்னோர் எச்சரிக்கை ஒலியும் கேட்டது – “உழைக்காமல் சேர்க்கிற காசு ஒட்டாதுன்னு எத்தனை முறை வியாக்கியானம் பேசியிருப்பாய்?! அறுபது வருசமாய் இல்லாத பழக்கத்தை இப்போது பழகிச் சீரழியப் போகிறாயே!” என்றது அவ்வுள்ளொலி. ஆனாலும் இன்றைக்கு ஒரு சீட்டாவது வாங்கி விடுவது என்றது ஒற்றைக் காலில் நின்றது மனம். ‘இன்று மட்டுந்தானே!’ என்று ஒரு மனமும் ‘மாதத்தில் ஒரு முறைதானே’ என்று ஒரு மனமும் ஒரே மனம் இரட்டை வேடம் போட்டுக் கொன்றது.

“சரிடாத் தம்பி! அதையும் என்னன்னுதான் பாத்துப்புடுவமே! ஒரேயொரு சீட்டுக் குடு. முருகன் அருளால் என்ன நடக்குதுன்னு பாப்போம் இந்த மாசம்!” என்று இழுத்தார்.

பையன் புன்முறுவலோடு ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்தான். வியாபாரத்தின் பல்வேறு விதமான சூட்சுமங்களையும் கற்றுத் தேர்ந்து விட்டதை  அறிவிக்கும் புன்முறுவல் அது.

வாங்கிக் கொண்டு, “எம்புட்டுப்பா?” என்றார்.

“அஞ்சு ரூவாதான் அண்ணாச்சி!” என்று ஐந்து ரூபாயின் மதிப்பைக் குறைக்கிற மாதிரிச் சொன்னான் பையன்.

ஐந்து ரூபாய்த்தாள் ஒன்று கிழிக்கிற தருவாயில் இருந்தது. பழைய தாளைக் கொடுத்துப் புதுத் தாளை வாங்கிக் கொள்கிற பெருமிதத்தில் அதை எடுத்துக் கமுக்கமாக நீட்டினார். பையனும் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் தன் வழக்கமான புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டுவாங்கி அதை பரிசுச் சீட்டு விற்பவர்களுக்காகவே பிரத்தியேகமாகத் செய்தது போன்ற தன் சிறிய கைப்பைக்குள் பைக்கும் தாளுக்கும் வலிக்காத மாதிரி மெதுவாக வைத்துக் கொண்டான். கையில் இருந்த சீட்டையும் அதில் பல இடங்களில் அச்சிடப்பட்டிருந்த ஒரே எண்ணையும் மீண்டும் மீண்டும் இயந்திரத்தனமாகப் பார்த்துக் கொண்டார். எல்லா இடங்களிலும் ஒரே எண்தானா என்றும் சரி பார்த்துக் கொண்டார்.

“தம்பிநாளைக் குலுக்கல்தானடா?!” என்று அவசரமாக ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டார். அவன் கிளம்புவதற்குள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் அவசரமும் இருந்தது அவர் கேள்வியில்.

“அப்பச் சரிஅண்ணாச்சி! நான் ஒரு சுத்துச் சுத்திட்டு வந்துர்றேன்!” என்று கூறிப் பையன் வணக்கம் வைத்தான்.

பரிசுச் சீட்டின் மீதிருந்த ஆச்சரியத்தை அப்படியே அவன் மீது திருப்பி, “சரிடாஅடுத்த மாசம் வரும்போது பாக்குறேன். நாளைய குலுக்கல்ல ஏதாவது பரிசு விழுந்துட்டா ஒனக்கு என்ன வேணுன்னாலும் கேளுடா. வாங்கித் தர்றேன்!” என்று கூறி விட்டு அவரும் வணக்கம் வைத்தார்.

‘ஒரே மாதத்தில் தொழிலை மாற்றியதும் இந்தப் பையன் எம்புட்டு மாறிட்டான்?! எம்புட்டு முதிர்ச்சி – தேர்ச்சி! சுண்டல் யாவாரத்தில் கெடைக்காத வெவரமும் முதிர்ச்சியும் இந்தச் சீட்டு யாவாரத்தில் கெடைக்குதாஅப்பிடின்னாசெய்யுற தொழிலுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்றது சரிதானோ?! அப்பிடின்னாஆசாரியான நான் எப்பிடி இவளோ வெவரமானேன்?! இல்லஆசாரிகள் எல்லாருமே வெவரமான ஆளுகதானோ?!’ என்று பற்பல ஆராய்ச்சிக் கேள்விகள் மனதில் தோன்றி மறைந்தன. 'அறிவாளிகளை உருவாக்குகிற தொழிலா இந்தத் தொழில்அல்லது அறிவாளிகளையும் விழ வைக்க வேண்டுமென்பதால் இந்தத் தொழில் புரிபவர்கள் இப்படித் தயார் செய்யப்படுகிறார்களா?!' என்று சிந்தித்துக் கொண்டிருந்தவரைப் பொடி நடையாக தேவஸ்தானப் பிரசாதக் கடையின் பக்கம் அழைத்துச் சென்றன அவருடைய கால்கள்.

வழக்கமாக வந்து செல்பவர் என்பதாலும்வழக்கமாக வந்து போகிறவர்களை விடக் கொஞ்சம் அதிகம் பேசிப் பழகுபவர் என்பதாலும்அங்கேயும் அவருக்கொரு தனிக் கவனிப்புக் கிடைக்கும். பஞ்சாமிர்தம் (பெரிய டப்பா)திருநீறுகுங்குமம்கற்கண்டு - எல்லாமே மும்மூன்று. இதுதான் அவருடைய வழக்கமான சிட்டை. அவரைப் பார்த்தவுடனேயே கேட்காமலே எடுத்து நீட்டி விடுவார்கள். இதுதான் அவர் கட்டி வளர்த்திருக்கிற மரியாதை. ஒரு சில மாதங்களில் வேறு யாரையாவது கரெக்ட் பண்ணி ஊரிலிருந்து உடன் அழைத்து வருவார். இதையெல்லாம் பார்த்து உடன் வருகிற ஊர்க்காரன் பூரித்துப் போவான். ஊருக்குத் திரும்பியதும் திருச்செந்தூரில் கந்தவேலரின் பெருமைகள் பற்றிப் பரப்புவான். இந்த மகிழ்ச்சிக்காகவும் தன் அருமை பெருமையை ஊர்க்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தன் சொந்தச் செலவிலேயே யாராவது ஓர் எடுபிடியை (திருச்செந்தூர் மொழியில் சொன்னால் 'போட்டுக் கருப்பட்டி') அழைத்து வந்து விடுவார். பட்டெனச் சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்சீட்டு பத்திரமாக இருக்கிறதா என்று. 'பாவிககாசோட காசா இதையும் சேத்துச் சேப்படி அடிச்சிட்டுப் போயிட்டானுகன்னா?!' என்று எண்ணிக் கொண்டேஅதை எடுத்து உட்பைக்குள் செருகினார். பை நிறையப் பணம் இருந்தபோது கூட இவ்வளவு கவலைப் பட்டதில்லை அவர். பையில் ‘ஒரு இலட்ச ரூபாய்த் தாள்’ ஒன்று இருப்பது போலக் கவன உணர்வோடு நடந்து கொண்டார்.

அடுத்ததாக அப்படியே நாழிக் கிணற்றுப் பக்கம் நடக்க ஆரம்பித்தார். சில நேரங்களில் தூத்துக்குடிப் பேருந்து ஏதாவது இங்கேயே கிடைக்கும். இல்லையானால், பேருந்து நிலையம் போய், அங்கிருந்து மாறிப் போக வேண்டும். பையில் இருக்கும் சீட்டைப் பற்றிய உணர்வோடும் நினைவோடுமே பேருந்து நிறுத்தம் வந்து சேர்ந்தார். ஆசைப்பட்டது போலவே தூத்துக்குடிப் பேருந்து நின்றது. இங்கு வந்து சென்ற முப்பத்தியாறு ஆண்டுகளில் இதுவே வாழ்க்கையை மாற்றப் போகிற முதல் யாத்திரையாக இருக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டார்.

பேருந்தை நெருங்கிச் சென்று இறங்கும் வழி என்று தெளிவாகப் புதிதாக எழுதியிருந்த முன்வாசல் வழியாக ஏறினார். மனித வாடையே பிடிக்காதது போல ஒவ்வொரு இருக்கையிலும் ஒரேயோருத்தர் மட்டும் என்று உட்கார்ந்திருந்தனர். ஒரு சில இருக்கைகளில் மட்டும் குடும்ப வாழ்க்கையில் சிக்குப்பட்டுக் கொண்ட சீமான்கள் தத்தம் சீமாட்டிகளோடும் குழந்தைகளோடும் இருந்தனர். அவர்களும் அதை அனுபவித்து இருப்பது போலத் தெரியவில்லை. கடைசி வரிசைக்கு முன்னிருந்த ஒரேயோர் இருக்கை மட்டும் ஆளில்லாமல் காலியாக இருந்தது. பேசாமல் ஏறும் வழியிலேயே ஏறியிருக்கலாமோ என்று எண்ணிக் கொண்டு பின்னோக்கி முன்னேறினார். வந்து அமர்ந்ததும் பைக்குள் கையை விட்டு ஒரு சுரண்டு சுரண்டிப் பார்த்துக் கொண்டார். சுரண்டலின் நோக்கம்? அதுதான் உங்களுக்குத் தெரியுமே! அந்த ஒரு இலட்ச ரூபாய் மதிப்புள்ள சீட்டு பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளத்தான்! பல்வேறு உலக நிகழ்வுகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். அந்தப் பத்து நிமிடங்களில் பல விதமான பிச்சைக்காரர்கள் வந்து சென்றனர். ஊனமுற்றோர், பெண்கள், குழந்தைகள், பெரியோர், குசராத் பூகம்பத்தில் உயிர் பிழைத்த ஓடி வந்தோர், ஒரு பிரச்சனையும் இல்லாதோர், கடவுள் நம்பிக்கையில்லாத பொதுவுடைமையாளர்கள் (திருச்செந்தூர்க் கிளை)... என எல்லோருமே திருவோடு, உண்டியல், வெறுங்கை... என்று ஏதோவொன்றை ஏந்தி வந்தார்கள். கந்தவேலருக்குப் பிச்சை போடுவதே பிடிக்காது. கோயிலுக்கு வந்து போகிற பக்த கோடிகளில் சற்று வேறுபட்ட மனிதர். நாத்திகம் பிடிக்காதவர் ஆயினும், சிவப்புச் சட்டை அணிந்தோரின் கைகளில் இருக்கும் பொதுவுடைமை உண்டியல்களை மதிப்பவர். பக்தி மிகுந்தவர் ஆயினும், கோயிலில் இருக்கிற காவி உடை அணிந்த பிச்சைக்காரர்களின் கையில் இருக்கும் திருவோடுகளை வெறுப்பவர். ஆனால் இன்று உண்டியலிலும் போட்டார்; திருவோட்டிலும் போட்டார். ‘இலட்சாதிபதியாகப் போகிறோம்! நப்பித்தனமாக ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் கணக்குப் பார்ப்பதா?’ என்று எண்ணியிருக்க வேண்டும்.

ஆமையை விட வேகமாக நகர்ந்தது பேருந்து. கோபுரத்தைத் திரும்பிப் பார்த்து ஒரு கும்பிடு போட்டார். ‘வருகிறேன், அப்பனே! நாளை மறுநாளே குடும்பத்தோடு வருகிறேன். இலட்சாதிபதியாக வருகிறேன்!’ என்று சொல்லிக் கொண்டார்.

அவர் தலையை மட்டுமே ஆட்டிக் கொண்டதில் என்ன பின்னணி இருக்கக் கூடும் என்பதை அறிந்து கொள்ள விருப்பமில்லாதவராக, அவரை நடந்து கடந்தார் வண்டியின் நடத்துனர்.

‘பத்து இலட்ச ரூபாய் விழுந்தால் என்ன செய்யலாம்? என்னவெல்லாம் செய்யலாம்?’ என்பது பற்றி யோசிக்க ஆரம்பித்தார். ‘இன்னொரு புதுவீடு கட்டிவிடலாமா? கடைசிக் காலத்தில் பயன்படுகிற மாதிரி வங்கியில் போட்டுவிடலாமா? ஏன் ஒரே இடத்தில் போடவேண்டும்?! அதைப் பிரித்துப் பல முதலீடுகளும் செலவுகளும் செய்யலாமே?! காளியம்மன் கோயில் வேலைகளுக்கு ஒரு இலட்சம் கொடுக்கலாம். குட்டைப் (!) பள்ளிக்கூடக் கட்டட வேலைகளுக்கு ஒரு இலட்சம் கொடுக்கலாம். ஒன்னாப்புப் படிச்ச பள்ளிக்கூடம் அல்லவா? தாய்ப்பாசம்! கல்வெட்டில் வேறு பெயர் போடுவார்கள். ஒரு இலட்ச ரூபாய் எவன் குடுத்துருக்கான் இதுவரைக்கு... நம்ம ஊர்ல?! காடுகரை ஏதாவது வாங்கிப் போடலாம். ஆனால், விவசாயம் பார்த்துச் சம்பாதிக்கணும்னு ஆசைப்படுவதெல்லாம் பேராசை. அதுக்கு அருப்புக்கோட்டையிலோ சாத்தூரிலோ இடம் வாங்கிப் போடலாம். ரெண்டு மூணு வருசத்தில் ரெண்டு மடங்காயிரும்!’. கிட்டத்தட்டக் கையில் காசு கிடைத்து விட்டது போலவே எண்ணிக்கொண்டு பற்பல கற்பனைகள் செய்து கொண்டார்.

ஊர் வந்து சேர்ந்த பின்பும் அதே சிந்தனை. வெளியே சொன்னால் வெட்கக்கேடு. இதுவரைக்கும் இருக்கிற மரியாதையெல்லாம் போய் விடும். நாளைக்கே இளவட்டப் பயக எல்லாம் வந்து சிகரெட்டுக்குத் தீப்பெட்டி கேட்க ஆரம்பிச்சிடுவானுக. அமாவாசைக்குத் தண்ணியடிக்க – சீட்டாடக் கூப்புடுவானுக. மானம் கப்பலேறி மத்தியக் கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டியதாகிவிடும். ‘அப்படியானால், நான் செய்திருப்பது தவறா?! இதுவும் குடி, பீடி, சூது போலக் குற்றமா? இது வேற புதுப் பிரச்சனையாக இருக்கிறதே! அப்படியானால், வீட்டில் சொல்ல வேண்டாம். விழுந்தால் பார்க்கலாம். அதுதான் விழப் போகிறதே! அப்படியானால், விழுந்தாலும் மறைத்து விடுவதா? மனைவியிடம் மட்டும் சொல்லலாம். இதுவரை பொண்டாட்டியிடம் எதையுமே மறைத்ததில்லை. ஆனா மறைக்கிற மாதிரி இதுவரைக்கும் எதுவும் செய்யலையே! விழுந்தால் மகிழத்தான் செய்வாள். ஆனா வெளியே சொல்லாம இருப்பாளான்னு உறுதியாச் சொல்ல முடியாதே! அதனால் ஆகப்போகிற மரியாதைச் சேதம் பற்றியோ அதன் தீவிரம் பற்றியோ அவளுக்கென்ன புரியும்?! இரவும் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு, வானத்தைப் பார்த்துக் கொண்டு, பரிசுச் சீட்டைச் சுற்றிச் சுற்றியே வந்து யோசித்துக் கொண்டிருந்தார்.

“காலம் கேட்டுப் போச்சு. அந்தக் காலத்தைப் போல இப்பல்லாம் நீண்ட நாட்களுக்கு யாரும் பெரிய மனுசன்கிற மரியாதையோடு வாழ முடிவதில்லை. பெரிய மனுசங்களும் அவ்வளவு நல்ல பிள்ளையாக இருப்பதில்லை. ஏதாவது மானம் போகிற மாதிரிக் குண்டக்க மண்டக்க வேலை பண்ணிப் பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்கள். அப்படியே ரெம்பவும் நல்ல மனுசனாக வாழ்கிறவர்களையும் இப்போதுள்ள இளவட்டங்கள் கண்ணை மூடிக்  கொண்டு மதித்து விடுவதில்லை. அவனுக்குள் ஏதாவதொரு வேதாளம் இருக்குமோ என்கிற சந்தேகக் கண்ணோடே பார்த்துக் கொண்டும் காத்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஏதாவது எசகு பிசகாகப் பண்ணி மாட்டிக் கொண்டதும் மானத்தை மஞ்சள் பொடியாக்கி நுணுக்கிக் காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள். இதனாலேயே அறிவுரை கூறுகிற பெரிசுகளை அதிகப் படியாகவே வெறுக்க ஆரம்பித்து விட்டது புதிய தலைமுறை. இப்படியிருக்கையில், இவ்வளவு நாளாக நல்ல பிள்ளை போல வாழ்ந்து விட்டு, பரிசு விழுந்ததை வெளியே சொன்னால், என்ன நினைப்பார்கள்? பேசுவார்கள்? ‘இந்த ஆளும் நம்மைப் போல எல்லாத் தப்பும் செய்யுறவந்தான். என்ன வித்தியாசம்? இவன் நம்மள மாதிரி இல்லாமத் திருட்டுத்தனமாப் பண்ணியிருக்கான்!’ என்று எளிதாகப் பேசி விடுவார்களே! ஒரேயொரு சீட்டு வாங்கியதற்காக உலகக் குற்றங்கள் அனைத்தையும் கமுக்கமாகச் செய்து முடிக்கிறவன் என்று முத்திரை குத்தி விடுவார்களே! கெட்டபிள்ளை என்று பெயர் எடுப்பது கூட முதலில் வலிக்கும். பின்னர் பழகிப் போகும். நல்லபிள்ளை என்று பெயர் வாங்கிவிட்டால் அதைச் சாகிறவரை காப்பாற்ற வேண்டிய கட்டாயமாகி விடுகிறதே! எப்படா வழுக்கி விழுவானென்று விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பார்களே!” என்று அவருடைய மனம் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தது.

தன்னைப் பற்றி யோசிப்பதையும் பேசுவதையும் தவிர்த்து மற்றவர்களுக்குப் பல்வேறு மற்ற வேலைகளும் இருப்பதைப் பற்றி அப்போதைக்கு அவர் நினைக்கவில்லை. இந்த ஊரில் இருக்கிற ஒவ்வொரு மனிதனும் பச்சைக் குழந்தையும் பறவையும் பிராணியும் தன்னைத்தான் கேவலமாகப் பார்ப்பார்கள் என்ற கவலை அவரை வாட்டியது. அப்படியே தூங்கிப் போனார்.

காலை எழுந்ததும் வழக்கம் போல புளியமரத்தடிக் கூட்டத்துக்குச் சென்றார். வழக்கத்துக்கும் மாறாக, சிறிது அமைதி காத்தும், சிந்தனைக்கிடையே சிறிது பேச்சுமாக ஓடியது. மணி கடையில் போய், தினபூமி அல்லது அதிர்ஷ்டம் பத்திரிகை வாங்கிப் பார்த்தால் தெரிந்து விடும். எவ்வளவு விழுந்திருக்கிறது என்று (அப்போது கூட விழுந்திருக்குமா இராதா என்ற ஐயமே இல்லை. எவ்வளவு என்பதுதான் அவருக்குக் கவலையாக இருந்தது!). ஆனாலும் தயக்கம். ‘அவன் கடைக்கு தினமணி வாங்கவும் சர்பத் குடிக்கவோ மட்டுந்தானே போயிருக்கிறோம்! இந்த பரிசுச்சீட்டு வாங்கவோ, அது சம்பந்தமான நாளிதழ்கள் வாங்கவோ போனதில்லையே!’ என்று ஏதோ காதலைச் சொல்லப் போகிற இளைஞனைப் போலத் தயங்கினார்.

‘சரி, கழுதையை விடு. எதற்கு மானத்தைக் கெடுத்துக்கிட்டு...’ என்று எண்ணிக் கொண்டே பேருந்து நிலையம் நோக்கி நடையைக் கட்டினார். ‘வேலைக்குப் போகிற இடத்தில் யாருக்கும் தெரியாமல் விளாத்திகுளத்தில் பார்த்துக் கொள்ளலாம்!’ என்றெண்ணிக் கொண்டார்.

மீண்டும், ‘பத்து இலட்ச ரூபாய் விழுந்தால்???’ கனவுகளும் கற்பனைகளும் தொடர்ந்தன. சகாக்களுடன் பேருந்தேறி விளாத்திகுளம் வந்து சேர்ந்தார். எல்லோரையும் ஏதோ சொல்லி முன்னே போக வைத்து விட்டு சுற்றி நோட்டம் விட்டார். பீடி அடிக்கிற பத்தாப்புப் பையன் போல மனதுக்குள் தேவையில்லாத பயமும் நடுக்கமும் வாட்டியது. ‘ஊர்க்காரன் யாராவது பாத்துட்டா?’ என்று நடுக்கத்தை நியாயப் படுத்திக் கொண்டே எதிரே இருக்கிற சந்துக்குள் ஒரு பரிசுச் சீட்டுக் கடை இருப்பதைக் கண்டு கொண்டு விட்டார். தானே பத்திரிகை வாங்கிப் பார்த்துத் தெரிந்து கொள்ளுமளவுக்கு இந்தத் தொழிலில் (!) அவ்வளவு விவரமில்லை. கடைக்குத்தான் போக வேண்டும்.

‘சந்துக்குள் போய் கடையை வைத்திருக்கிறானே! தேடி வந்தா வாங்குவார்கள்?! விவரம் கெட்டவன்! ஒருவேளை நம்மள மாதிரி ஆளுகளும் வந்து பயன்பெற வசதியாக யோசித்து வைத்திருப்பானோ! ஆனா இந்தச் சீட்டுக்கு நம்மள மாதிரிப் பயப்படுற தொடைநடுங்கிப் பயகளும் இருக்கவா போறாங்க?!  பயமெல்லாம் நம்மள மாதிரிப் பஞ்சத்துக்குத் தப்புப் பண்றவனுக்குத்தானே! அன்றாடம் பண்றவனுக்கு என்ன பயம்?! பழகப் பழக நஞ்சும் பஞ்சாமிர்தந்தானே! சாராயக் கடையவே மெயின் ரோட்டுல வைக்கிறானுக. இதுக்குப் போயி எதுக்குப் பயப்படணும்?! அவனுக்கு என்ன கஷ்டமோ, பாவம்! வாடகை கொறைவா இருக்குன்னு கூட அப்படி வச்சிருப்பான். இதைப் போயி இம்புட்டு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு... கருமம்!’ என்று எண்ணிக் கொண்டே கடையை நெருங்கினார்.

எப்படிக் கேட்க வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. இயல்பாக எப்படி வருகிறதோ அப்படியே கேட்டு விட வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டு, “பரிசு விழுந்திருக்கான்னு பாக்கணும், தம்பி!” என்றார். “பரிசு விழுந்திருக்கான்னு பாக்கணுமா?!” என்று ஒரு மெல்லிய நக்கல் கலந்த தொனியில் அங்கிருந்த இளவட்டம் இரண்டு மூன்று பத்திரிகைகளை எடுத்துப் போட்டான். ‘இந்தக் காலத்து இளவட்டங்களுக்குக் கொழுப்பு கொஞ்சம் கூடத்தான்!’ என்று மனதுக்குள்ளேயே சபித்துக் கொண்டார். ஏதோ போன தலைமுறைக்குக் கொழுப்பே இல்லை என்பது போல. இதே இளவட்டமும் வயசாகித் தெம்பு குறைந்ததும் அன்றைய இளவட்டங்களை இப்படித்தான் வையப்போகிறான்.

‘ஆமா... இவன் ஏன் இப்பிடி நக்கலாக் கேட்டான்? ஒருவேளை வேற மாதிரிக் கேக்கணுமோ?! நம்பர் பாக்கணும்னு சொல்லியிருக்கணுமோ?! வின்னிங் பாக்கணும்னு சொல்லியிருக்கணுமோ?! ஒவ்வொரு நாட்டுக்கும் ஊருக்கும் ஒரு மொழி இருக்கிற மாதிரி ஒவ்வொரு தொழிலுக்கும் கடைக்கும் ஒரு மொழி இருக்குதே! அடுத்தவர்களுக்குப் புரியாத மாதிரி ஆசாரித் தொழிலில் எத்தனை கலைச் சொற்கள் வைத்திருக்கிறோம்? அடுத்த சீட்டு வாங்கும் முன் முதலில் இந்தத் தொழிலின் மொழியை – அதற்கே அதற்கான கலைச் சொற்களைக் கரைத்துக் குடித்து விட வேண்டும் (ஆக, அடுத்த சீட்டு வாங்கும் திட்டமும் உறுதியாகி விட்டது!). இதெல்லாம் யாரைப் போய்க் கேட்பது? கலைச் சொற்கள் கற்கப் போகிறேன் என்று கிளம்பினால், அடுத்து பீடிக்குத்  தீப்பெட்டியும் கேட்க ஆரம்பித்து விடுவார்களே!’ என்று பல குழப்பங்களில் மண்டை சுற்றியது.

மொத்தத்தில் தனக்கும் இந்தச் சீட்டுக்கும் இருந்த பூர்வ சென்மத் தொடர்பை முருக பகவான் புண்ணியத்தில் கண்டு பிடித்து விட்டதைப் போலவும் இன்னும் இருக்கிற எல்லாப் பிறவிகளிலும் தொடரப் போவது போலவும் சிந்திக்க ஆரம்பித்து விட்டார். நல்ல மாற்றந்தான்!

இளவட்டம் கோபப்பட்டு விடுவானோ என்று பயந்து கொண்டே, “தம்பி, எனக்குப் பாக்கத் தெரியாது. கொஞ்சம் பாத்துச் சொல்ல முடியுமா?” என்றார்.

‘அடப் பாவமே! ஒரு பரிசுச் சீட்டை வாங்கி விட்டு திருட்டு வழக்கில் மாட்டிக் கொண்டது போலல்லவா நடக்க வேண்டியுள்ளது? ச்ச! சீட்டு வாங்கினதா தப்பு? இவளோ நாட்களா அது பத்தின அறிவே இல்லாம இருந்ததுதானே தப்பு! பெரியவங்க சொல்ற மாதிரி களவும் கற்று மறந்திருந்திருக்கணும்! முதல் வேலையா இந்த அறிவை வளத்துக்கணும்!’ என்று முடிவு செய்து கொண்டார்.

இளவட்டம் ஏற இறங்கப் பார்த்தான். ‘பார்த்தால் பெரிய ஞானி மாதிரி இருக்கிறார். படிக்கத் தெரியாத கைநாட்டு போல!’ என்று பார்ப்பது போலத் தெரிந்தது.

“ஓ! படிக்கத் தெரியாதா?” என்றான் இன்னும் கொஞ்சம் நக்கல் தூக்கலாக!

‘நேரம்டா சாமி, இது என் நேரம். அதைத்தவிர வேறொன்றும் இல்லை! இளவட்டங்களிலும் நகரத்து இளவட்டங்களுக்குக் கொழுப்பு இன்னும் கொஞ்சம் கூட இருக்கும் போல. செம்மறி ஆடு மாதிரி!’ என்று எண்ணிக் கொண்டு மனப்பாடப் பகுதி ஒப்பிக்கத் தெரியாத மாணவன் போலச் சுருங்கி நின்றார். வாயில் புன்னகையை மட்டும் ஏந்தி மற்றதை எல்லாம் அடக்கிக் கொண்டார். காரியம் ஆக வேண்டுமே!

இளவட்டம் ‘அ’-வுக்கும் ‘ஆ’-வுக்கும் இடையிலான ஓர் ஓசையெழுப்பி ஆச்சரியமும் நக்கலும் கலந்த தொனியில், “பெர்சு, ஒங்க பாடு யோகந்தான் போங்க!” என்றான். கந்தவேலர் விருட்டென விசுவரூபம் எடுத்து மேகங்களை முட்டுகிற உயரம் வளர்ந்து விட்டது போல உணர்ந்தார். ஒளியினும் வேகமாகப் பாய்ந்து நிலை திரும்பியது சிந்தனை. கடற்கரையில் இருந்து கடைவீதி வந்தது வரை.

அப்படியானால், ‘பத்து இலட்ச ரூபாய் விழுந்தே விட்டதா?’ என்ற பேராசையில் “எவ்வளவு?!” என்றார் பதறி மலர்ந்த முகத்தோடு.

“ஐநூறு ரூபாய், பெரியவரே!” என்றான் பெரிதாய் ஏதும் மகிழ்ச்சியடையாது. மரியாதை மட்டும் கொஞ்சம் கூடியிருந்தது.

‘அடப்பாவி, ஐநூறு ரூபாய்க்கு அதிபதி ஆனதுக்கே ஒரு நிமிடம் முன்னால் பெர்சு என்றவன் பெரியவரே என்கிறானே?!’ என்றெண்ணிக் கொண்டு சீட்டைக் கையில் வாங்கித் திரும்ப ஒரு பார்வை பார்த்தார் அவனை. ஒரேயொரு ஐநூறு ரூபாய்த் தாளை விட்டுவிட்டு மிச்சமிருந்த இலட்சக் கணக்கான ரூபாய்களை யாரோ திருடிப் போய்விட்டது போன்ற கவலையில்.

சமீப காலத்துக்கு முன்பு வரை இந்தப் பரிசுச் சீட்டு வியாபாரத்தின் சூட்சுமங்களும் அதன் செயல்முறைகளும் தெரியாமற்தான் இருந்தார். திருச்செந்தூரில் வாங்கிய சீட்டுக்குப் பரிசு விழுந்தால், அதை வாங்கிக் கொள்ளவும் திருச்செந்தூர்தான் போக வேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தார் ஒரு காலத்தில். வாங்கிய ஆளிடமே - கடையிலேயே போய்க் கேட்டாற்தான் துட்டுக் கிடைக்கும் என்றெண்ணிக் கொண்டிருந்தவர், பரிசு விழுந்ததும் சீட்டைக் கடிதத்தில் அனுப்பி வைத்தால் கம்பெனியில் இருந்து காசோலை அனுப்பி வைப்பார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தார். பின்னொரு காலத்தில் வங்கிகளில் போய்ச் சீட்டைக் கொடுத்தால் பணம் கொடுப்பார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார். அத்தனை விபரங்களைக் கரைத்துக் குடித்தவர், தினமும் காலையில் புளியமரத்தடியில் கரைத்துக் குடித்த அத்தனையையும் அந்தக் கக்கு கக்குபவர், இதன் அடிப்படையைக் கூட அறியாமல் விட்டது ஆச்சரியந்தான். தான் தவறென்று நினைக்கக் கூடிய ஒரு செயலுடைய சூட்சுமங்களைத் தெரிந்து கொள்ளாதிருப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லைதான். அவரைப் பொருத்தமட்டில், ‘பீருக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டுமா? பீடி பற்ற வைக்கும் போது உறிஞ்ச வேண்டுமா?’ என்ற கேள்விகள் எழாதது போலவே இதுவும் அசட்டை செய்யப்பட்ட அறிவுப் பகுதிகள். அவ்வளவுதான். சமீப காலங்களில் அது பற்றிய சந்தேகங்கள் வந்தபோதே அவர் சுதாரித்திருக்க வேண்டும். அப்போதைக்கு அது வெறும் அறிவு தாகம் என்று மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தார். அது பணப்பசி என்பதை உணரவும் காலமாகும். அவர் காலமாகும் வரை அதை உணராமலே கூடப் போய்விடலாம்.

ஆகவே, இப்போது தொழிலின் நடைமுறைகள்-விதிமுறைகள் அறிந்திருந்தமையால், இளவட்டத்திடமே திரும்பவும் நீட்டி, “இருக்கா பணம்?” என்றார், ‘இப்படித்தான் கேட்கணுமா? வேறு மாதிரியா?!’ என்ற சந்தேகத்துடனேயே.

“பொறுங்க பாக்குறேன்!” என்று சொல்லிக் கொண்டே இளவட்டம் கையைக் கீழே விட்டு, ‘பரிசுச்சீட்டுக்காரர்களுக்கே உரிய’ அந்தப் பை ஒன்றை எடுத்து, அதன் உள்ளிருந்து நான்கு நூறு ரூபாய்த் தாட்களை உள்ளே வைத்தே எண்ணி, வெளியே எடுத்து நீட்டினான்.

“என்னப்பா! நாலுதான் இருக்கு?!” என்றார் கையில் வாங்கும் முன்பே சர்வசாக்கிரதையாக. வாங்கி விட்டால் இவ்வளவு பலமாகச் சொல்ல முடியாது. “நல்லாப் பாருங்க!” என்று அவன் பலமாகச் சொல்லக் கூடும். ‘அவன் கையில் இருக்கும் போதே சொல்லி விட்டோம். நல்லவேளை!’ என்றெண்ணிக் கொண்டார்.

“அப்பறம்?! அஞ்சு நோட்டையும் வாங்கிட்டுப் போயிட்டா அடுத்த தடவ இலட்சம் எப்பிடிக் கெடைக்கும்?!” என்றான் இளவட்டம் சிரிப்பும் செல்லமுமாக.

‘அடப்பாவிகளா, ஆசையைத் தூண்டிவிட்டே ஏமாத்துறதுக்கு ஒங்களுக்கெல்லாம் எங்கடா சாமி பயிற்சி குடுக்காங்க?!’ என்று எண்ணிக் கொண்டு, “தம்பி, அது ஏதோ கோயிலுக்குப் போன எடத்தில் வாங்கிப் போட்டது. என்னயப் பரம்பரை லாட்டரிப் பார்ட்டி ஆக்கிறாதப்பா! என்றார்.

எல்லாக் கேள்விகளுக்கும் அழகான பதில் ஒன்றை வைத்திருக்கிறார்கள் இந்தப் பரிசுச் சீட்டு வியாபாரம் செய்யும் பையன்கள். “இன்னைக்கு ஒலகத்துல இருக்கிற இலட்சாதிபதிகள் எல்லாம் முதல் சீட்டுலயே பரிசு விழுந்து படக்குன்னு மேல போனவங்க இல்ல. ஐநூறு, ஆயிரம், பத்தாயிரம்னு கொஞ்ச கொஞ்சமா அடிச்சு மேல வந்தவங்கதான்!” என்று என்னவோ இந்தச் சீட்டு வாங்கிப் பிழைக்கும் பிழைப்பை அரசாங்க உத்தியோகம் போலவும் உலகத்தில் இருக்கும் இலட்சாதிபதிகள் எல்லோருமே இது போலச் சீட்டு வாங்கித்தான் முன்னுக்கு வந்தவர்கள் போலவும் புரட்டிப் புளுகித் தள்ளினான். அவன் மேலே போனவங்க பற்றிப் பேசும் போது இவர் சீட்டு வாங்கிச் சீரழிந்து கீழே போனவர்களைப் பற்றி யோசிக்கவே இல்லை. ஆசை கண்ணை மறைத்தது. ஆனாலும் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு தன் பேரம் பேசும் அனுபவத்தின் முதல் உத்தியைக் கையில் எடுத்தார்.

“சரிப்பா, ஒனக்கும் வேண்டாம். எனக்கும் வேண்டாம். அம்பது ரூபாய் குடு!” என்று புன்முறுவலோடு கேட்டார். ‘இது என் பணம்!’ என்கிற அதிகாரத்தில் தோரணையோடு கேட்பதா அல்லது தன்னுடைய உழைப்பால் வராத – தான் கடனாகக் கொடுத்திராத பணத்தை இதுவரை யாரிடமும் அப்படிக் கேட்டதில்லை என்பதாலும் இந்தத் தொழிலின் நடைமுறைக் கொள்கைகள் அறிந்திராததாலும் பிச்சைக்காரனைப் போலக் கேட்பதா என்றொரு சிறிய குழப்பம்.

“என்ன... பெரியவரே!” என்று இழுத்து, “சரி, பாருங்க!” என்றான்.

‘மறக்காமல் ஐம்பது ரூபாயைக் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்!’ என்று மனதுக்குள் நினைவு படுத்திக் கொண்டே சீட்டுகளைப் பார்க்கத் தொடங்கினார். ‘பேருந்து நடத்துனர்கள் மட்டுமல்ல, வியாபாரிகளும் கெட்டுப் போய் விட்டார்கள் இப்போது. மறந்தால் திருப்பித் தருவதே இல்லை சில்லறைகளை. இவர்கள் இப்படியே போனால் பிச்சைக்காரர்களுக்கு எப்படிச் சில்லறை போட முடியும்?’ என்று சிந்தனை பரந்து விரிந்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு சிந்தனை உதித்தது. படக்கெனப் பரிசு விழுந்த சீட்டை எடுத்து எண்களைக் கூட்டிப் பார்த்தார். ‘கூட்டு எண் மூன்றுதான் வரும். அதுதானே நம் அதிர்ஷ்ட எண்!’ என்ற நம்பிக்கையோடு கூட்டக் கூட்ட மூன்று வரப்போகிற நம்பிக்கைத் துளிகள் விழுந்து கொண்டே வந்தன.  கூட்டி முடித்த போது வந்த எண் ஆறு. ‘ஆறு... நினைத்தேன்! அப்படியானால் இரட்டை யோகம்! என்று ஒரு தேற்றல் செய்து கொண்டு, ‘ஆகா, ஆறு என்பது அப்பன் முருகனுடைய எண் அல்லவா?! ஆறுமுகனே அனுப்பி வைத்த சீட்டா இது?!’ என்று புதியதொரு தொப்புட்கொடி கட்டினார். ‘இனிமேல் எப்போதுமே ஆறு வருகிற எண்தான் வாங்க வேண்டும்!’ என்று பரிசுச் சீட்டு வாங்கிச் சீரழிவோர் இயக்கத்தில் ஆயுட்கால உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டார். இப்போது ஒவ்வொரு சீட்டிலும் எண்களைக் கூட்டி ஆறுமுகனைத் தேடினார் முகத்தைச் சுருக்கி. சீட்டுகளை எடுத்துக் கொண்டு மறக்காமல் ஐம்பது ரூபாயையும் நினைவு படுத்தி வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினார். புதிய வாழ்க்கை... புதிய நடை...

பரிசு விழுந்தால் திருச்செந்தூர் வருவதாக ஆறுமுகனிடம் சொன்னது நினைவு வந்தது. ‘இன்றே சென்று வந்து விடலாமா? நாளை போகலாமாஇந்த வாரம் வெள்ளிக்கிழமை போகலாமா? அல்லது வேலை பாதிக்காமல் ஞாயிற்றுக்கிழமை போயிட்டு வந்துறலாமா? குழப்பம் குடைந்தது. எதிர்பார்த்தபடி இலட்சக்கணக்கில் விழுந்திருந்தால் இந்த நிமிடமே தூத்துக்குடி வண்டியேறி உட்கார்ந்திருக்கலாம். யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று அளந்துதான் போடுகிறான் ஆண்டியப்பன்! ஒருவேளை இது பின்னர் கிடைக்கப் போகிற பெரும் பரிசுக்கான முன்னோட்டமாக இருக்கலாம். வெற்றி வருகையில் எப்படி நடந்து கொள்கிறோம் என்று பார்ப்பதற்காகச் சோதித்துப் பார்க்கிறாயா அப்பனே?! சரி, எப்படியாயினும் முருகனிடமே கணக்குப் போடுவது சரியாகாது. இப்போதே போய் பயகளிடம் சொல்லிவிட்டு வண்டியேறி விடலாம்!’ என்று முடிவெடுத்தார்.

அடுத்த அரைமணி நேரத்தில் தூத்துக்குடி வண்டியில் தனக்குப் பிடித்த வாசலுக்கு அருகில் இருக்கிற இருக்கையில் இருந்தார். அடுத்த மூன்றரை மணி நேரத்தில் கந்தனின் அறுபடை வீடுகளில் ஒன்றும் தன் இருபடை வீடுகளில் ஒன்றுமான திருச்செந்தூரில் இருந்தார். நேரடியாக முருகனிடம் போய்த் தன்னை ஒப்படைத்தார்.

நடை சாத்தியிருந்தது. ‘இருக்கட்டும். அதனால் என்ன?!’. தரையில் விழுந்து, “முருகா! ஆறுமுகனே! உன் ஆறாம் நம்பர் விழுந்து விட்டது. இனி எப்போதுமே ஆறாம் நம்பர்ச் சீட்டுதான் வாங்குவேன். இது சத்தியம்!” என்று வாய்விட்டுச் சொன்னார்.

“கிடைத்ததில் பாதி உனக்குத்தான் அப்பனே!” என்று இருநூறு ரூபாயை உண்டியலில் போட்டார். நானூற்றி ஐம்பதில் ஐம்பது ரூபாய் தன் பேரம் பேசும் திறமைக்குக் கிடைத்தது என்பதாலும் அது பயணச் செலவுகளுக்குச் சரியாப் போகும் என்பதாலும் அதைக் கணக்கில் இருந்து விடுவித்து விட்டார்.

‘பத்து இலட்சம் விழுந்தால் பாதி கொடுப்பது சிரமந்தான். ஒரு இலட்சம் கண்டிப்பாக உண்டு. அதுக்கே வீட்டுக்காரியிடம் ஏகப்பட்ட பேரம் பேச வேண்டும். மதிப்புத் தெரியாமல் கீழே போடுகிறேன் என்பாள். சரி, அதெதுக்கு இப்பப் பேசிக்கிட்டு. முதல் முறை என்பதால் பாதியை உனக்கே தந்து விடுகிறேன் முருகா!’ என்று தன் பேரப்பிள்ளையை ஏமாற்றுவது போல ஊக்கத்தொகை கொடுத்தார். தன் அடுத்த கடவுள் ‘சீட்டு முருகேசனைத்’ தேடிக் கடற்கரை நோக்கி விரைந்தார். மணி இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. வெயில் குறைந்தபாடில்லை. கடற்கரையில் பெரிதாகக் கூட்டமில்லை. மெதுவாகக் கண்ணை மேயவிட்டார். நாழிக் கிணறு போகிற பாதையில் வழக்கம் போலப் பாய்ந்து பாய்ந்து நடந்து வந்து கொண்டிருந்தான். அவனை நோக்கி நடையைக் கட்டினார், அவனைப் போலவே பாய்ச்சலோடு.

‘ஒரு வாரத்துக்கு முன்பு இப்படி இவனைத் தேடி அலைந்து விரட்டிப் போவதை என்றாவது நினைத்துக் கூடப் பார்த்திருப்பேனா?!’ என்று நினைத்துப் பார்த்துக் கொண்டார்.

அவருடைய வேகத்தைப் பார்த்து விட்டுப் பையனும் சிறிது மிரண்டு போனான். ‘இவ்வளவு வேகமாக... கொஞ்சம் மகிழ்ச்சிக்களை வேறு தெரிகிறது முகத்தில்! என்னவாயிருக்கும்?! , பத்து இலட்சம் விழுந்து விட்டதா? என்ன வேணுன்னாலும் வாங்கித் தாரேன்னு சொல்லிட்டுப் போனாரே! முருகேசா! உன் வாழ்க்கையும் மாறப்போகிறதடா!’ என்று நகைத்துக் கொண்டான்.

‘பரிசு விழுந்தால் என்ன வேணுன்னாலும் வாங்கித் தாரேன்னு சொல்லிட்டுப் போனோமே! இப்ப என்ன செய்றது?! முருகனுக்குப் பாதி போல, முருகேசனுக்குப் பாதியக் குடுத்துட்டு நடையக் கட்டவா?! பாப்போம், பையன் என்ன கேட்கிறான் என்று! நானே ஏன் முந்திக்கிறணும்?!’

“டேய், தம்பி! கைராசிக்காரன்டா நீ! சொன்ன மாதிரியே பரிசு விழுந்திருச்சுல்ல...”

மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டு, “கைராசி எனக்கில்ல அண்ணாச்சி... ஒங்களுக்கு இருக்கு!” என்று பெரியாட்தனமாகச் சொன்னான். பெரியாட்களுக்கே பலருக்கு இன்னும் கைவராத உத்தி இது.

‘சுண்டல் விற்கிற காலத்தில் தன்னை யாராவது இப்படிப் பாராட்டியதுண்டா?! இது ஒரு கைராசியான தொழில்தான். இந்தத் தொழிலைக் கையிலெடுத்த பின் வாழ்க்கை எவ்வளவு மாறிவிட்டது?! வாழ்க்கைகளை மாற்றுகிற தொழில்தானே இது! அண்ணாச்சி மாதிரி எத்தனை பேருடைய வாழ்க்கையை மாற்றுகிற ஆற்றலை நமக்கு இந்தத் தொழில் கொடுத்திருக்கிறது!’ என்று எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டான். அண்ணாச்சி வாழ்க்கையை மாற்றத்தான் போகிறாய் அப்பனே மாற்றத்தான் போகிறாய்!

“ஐநூறு ரூபாதாண்டா விழுந்தது. ஆனாலும் அதுல ஆண்டவனோட அசரீரியே கேட்ருச்சு!” என்றார்.

‘அசரீரி என்றால் என்ன?!’ என்கிற ஐந்தாம் வகுப்புக் கேள்வியோடு விழித்தான் சிறுவன்.

“பாதியை முருகப் பெருமானுக்குப் போட்டுட்டேண்டா!” என்றார், அவன் இருநூற்றி ஐம்பது என்று புரிந்து கொள்ளும்படியாக.

“ஓ, ஐநூறுதானா?! நீங்க வர்ற வேகத்தப் பாத்துட்டுப் பத்து இலட்சந்தான் விழுந்திருச்சோன்னு நெனச்சேன், அண்ணாச்சி! எப்பிடியோ! பாத்திகளா அண்ணாச்சி? சொன்னபடி பரிசு விழுந்திருச்சு. ஒங்களுக்கு முருகன் அருள் நல்லா இருக்கு அண்ணாச்சி!’ என்று போட்டுத் தாக்கினான்.

‘உன்னோட அறிவு வளர்ச்சிக்கு அளவே இல்லாமப் போய்க்கிட்டு இருக்குடா!’ என்று எண்ணிக் கொண்டு, “தம்பி, ஒனக்கு என்ன வேணுன்னாலும் வாங்கித் தாரேன்னு சொன்னேன்ல. என்ன வேணுன்னு சொல்லுடா. முடிஞ்சா வாங்கிக் குடுத்துர்றேன். சொன்ன வார்த்தையைக் காப்பத்தணும்ல...” என்றார்.

“இருக்கட்டும், அண்ணாச்சி! பத்து இலட்சம் விழுந்திருந்தா நானே கேட்டு வாங்கியிருப்பேன். இந்தத் திருச்செந்தூரிலேயே சின்ன வயசில் இலட்சாதிபதியான பெரிய மனுசன் ஆகியிருப்பேன் (‘ஆகா! எப்படியும் ஒரு இலட்சம் கிடைக்கும் என்ற கனவில் இருந்திருப்பான் போலயே!’). நீங்களே ஐநூறு ரூபாய் கிடைத்து அதிலும் பாதியை முருகனுக்குப் போட்டுட்டு வந்து நிக்கிறிக. அடுத்து இலட்சம் விழுகைல பாக்கலாம் அண்ணாச்சி! கண்டிப்பா அதுவும் நடக்கும்!” என்றான் வழக்கம் போலவே பெரிய மனிதன் போல.

அவனை முதன் முதலில் பார்த்தபோது அவனுடைய அமைதிதான் அவனைப் பிடிக்க வைத்தது அவருக்கு. இப்போது அவன் பேசப் பேசக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. அவன் என்ன செய்தாலும் அழகுதான். அமைதியும் அழகு. பேச்சும் அழகு.

“இல்லடாத் தம்பி, நான் விட மாட்டேன். சொன்னது சொன்னபடி நடந்துக்கிறணும். இல்லைன்னா நாம நெனைக்கிறபடி நடக்காது வாழ்க்கை. இந்தக் கூத்தையெல்லாம் அவன் பாத்துக்கிட்டுத்தானே இருப்பான்!” என்று கோபுரத்தை நோக்கிக் கையைக் காட்டினார்.

“சரி, வா! ஒரு டீயாவது குடி!” என்று முந்திக் கொண்டு அவன் கையைப் பிடித்துக் கொண்டார். ‘அவன் பாட்டுக்கு நூறு-இருநூறுக்கு ஏதாவது கேட்டுவிட்டால் என்ன செய்வது?!’.

சிறுவன் சுதாரித்தான். “சரிண்ணாச்சி, ஒங்க திருப்திக்காக வேண்ணா அம்பது ரூபாய்க்குச் சீட்டு வாங்கிட்டுப் போங்க. முருகன் அருள் இந்த வாரமே திரும்ப ஒங்கள இங்க கூட்டிட்டு வருதான்னு பாப்போம்!” என்று போட்டான் ஒரு பெரும்போடு.

‘ஆகா, ஏற்கனவே ஒருத்தன் அம்பது ரூபாய் அடிச்சிட்டான். நீ வேறயா?!’ என்றெண்ணிக் கொண்டு, “ஐயோ, காலைலதாம்பா அம்பது ரூபாய்க்கு வாங்கினேன். சாத்திரத்துக்கு ஒன்னு வாங்கிக்கிறேன். குடு பாப்போம்!” என்று கையை நீட்டினார்.

‘ஆகா, முழுநேரச் சீட்டுக்காராகிட்டாரா?’ என்று எண்ணிக் கொண்டே, “அது எங்க அண்ணாச்சி வாங்குனிக?!” என்று ஆச்சரியக் கேள்வி கேட்டான்.

“ஐநூறு ரூபாய் பரிசு விழுந்ததுமே அம்பது ரூபாய் பிடிச்சிக்கிட்டுத்தானடா குடுத்தான்!” என்றார்.

“அண்ணாச்சி, நான் சொல்றதத் தப்பாப் புரிஞ்சிக்காதிக, இந்த யாவாரத்துல ஒரே எடத்துல வாங்குனாத்தான் கைராசின்னு சொல்லுவாக. மாசமாசம் இங்க வர்றப்போ வாங்கிட்டுப் போங்க. ஒங்களுக்குத் திருச்செந்தூர்தான் இராசி. இந்தத் தடவ போனத விடுங்க. இனிமேல் நம்மட்டயே வாங்கிக்கோங்க அண்ணாச்சி!” என்று புதியதொரு சட்டத்தைப் பற்றிச் சொன்னான்.

‘ஓ, இது வேறயா?! நல்லதுதான். இல்லன்னா கட்டுப்பாடு இல்லாம வாங்க ஆரம்பிச்சிருவேன். மாசம் ஒரு தடவதான்னு ஒரு கட்டுப்பாடு வச்சுக்கிறலாம்!’

“ஆமடாத் தம்பி, அப்பிடியே பண்ணலாம்! முருகன் – முருகேசன் – கந்தவேல்... பொருத்தம் பிரம்மாதமா இருக்கு!” எனப் புன்னகைத்தார்.

அதற்குள்ளாகவே கட்டுப்பாடு இல்லாமல் வாங்குவது பற்றியெல்லாம் பயப்பட ஆரம்பிக்கிற அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதா?! இது மாதிரி அளவுக்கு மிஞ்சி நல்லபிள்ளையாக இருக்கிற ஆளுக களத்துக்குள் இறங்கும் போதெல்லாம் வருகிற சிக்கல்தான் இது.

ஊர் கிளம்பியவர் திட்டமிட்டபடியே கட்டுப்பாடாக நடந்து கொண்டார். ஆனாலும் அதன்பின்பு பல மாதங்கள் ஆகியும் ஒருமுறை கூடப் பரிசு விழவேயில்லை. பின்னர் அவ்வப்போது ஏதாவது சிறிய தொகை விழும். அது ஒரு புது விதமான மகிழ்ச்சியையும் வெற்றியுணர்வையும் கொடுத்தது. சிறிது சிறிதாகக் கட்டுப்பாடுகளை மறந்தார். தனியாக இருக்கிறபோது ஏதாவது பரிசுச் சீட்டுக் கடையைப் பார்த்தால், முருகனை வேண்டிக் கொண்டு சில சீட்டுகளை வாங்கிக் கொள்ளும் பழக்கத்துக்கு வந்தார். அப்படியே பரிசுச் சீட்டு வாங்குவது தவறு என்று தான் காலமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்ததுதான் தவறு என்ற நிலைக்கு வந்தார். அதற்குப் பல காரணங்கள்.

முதலில், “அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்வது தவறென்பது தவறு. எல்லாத் தொழிலுமே அதிர்ஷ்டத்தை நம்பித்தான் இருக்கின்றன. உழைப்பை மட்டுமே நம்பித் தொழில் செய்கிறவன் தொழிலாளியாக மட்டுமே இருக்கிறான். முன்னுக்கு வந்தவன் எல்லாம் மூளைக்காரனும் யோகக்காரனுந்தானே! பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை விடவா பரிசுச் சீட்டு வாங்குவது முட்டாட்தனமானது? மோசடியானது? பணக்காரன் காஷ்மீர் போனால், ஏழை கொடைக்கானல் போகிறான். அவ்வளவுதான். எல்லாவற்றுக்கும் மேல், சரி-தவறுகளைத் தீர்மானிக்க அரசாங்கம் இருக்கிறது. அதன் சட்டத்தை மீறிச் செய்கிற வேலைகள்தாம் தவறு. சட்டம் கொலையைத் தவறு என்கிறது. நான் அது செய்வதில்லை. விபச்சாரம் தவறு என்கிறது. நான் அதில் ஈடுபடுவதில்லை. முன்பு குடியைத் தவறு என்றது. இப்போது வெளிநாடுகளைப் போன்று வாழ்க்கையைத் தர விரும்பி அதை ஏற்றுக் கொண்டு விட்டது. ஆனாலும் அதை நான் செய்வதில்லை. அதற்கும் மேலாக நான் யாரையும் தொல்லை செய்கிற மாதிரி எதுவும் செய்யவில்லை. நான் உழைத்துச் சம்பாதித்த பணத்தை எதில் முதலீடு செய்வது என்பதை முடிவு செய்கிற உரிமை எனக்கு இருக்கிறது. அதைப் பயன்படுத்துகிறேன். அவ்வளவுதான்!” என்று விளக்கம் கொடுத்துக் கொண்டு பரிசுத் சீட்டுகளில் நிறைய முதலீடுகள் செய்தார்.

ஆனாலும் அதை வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், ‘தாமே புளியமரத்தடியில் உட்கார்ந்து பலமுறை அதைப் பற்றிக் கேவலமாகப் பேசியிருக்கிறோம். இப்போது நாக்குப் புரண்டு பேசினால், காறி உமிழ்ந்து விடுவார்கள். ஒருவேளை  வெளியே தெரிந்து விட்டால், பின்னால் நியாய-அநியாயங்களை மாற்றிப் பேசிக் கொள்ளலாம். அரசாங்கம் அவ்வப்போது சரி-தவறுகளை மாற்றிக் கொண்டு சட்டங்களை அதற்கேற்ப மாற்றிக் கொள்வது போல, தனிமனிதனும் தன் வசதிக்கேற்ப அப்படி மாற்றிக் கொள்வதில் ஒன்றும் தவறில்லையே!’.

தன் பொண்டாட்டிக்குக் கூடத் தெரியாமல் ஒரு மனிதன் ஒரு காரியத்தை எவ்வளவு நாட்களுக்குச் செய்ய முடியும்? ஒருநாள், தலைவரின் புதுப் பழக்கத்தைப் பார்த்து ஓரளவு அதிர்ந்து போன தலைவி விளக்கம் கேட்க, முருகப் பெருமானைத் துணைக்கிழுத்துத் தன்னம்பிக்கையோடு பல கோணங்களில் அதன் நியாயத்தைப் பற்றித் தேவைக்கும் அதிகமான விளக்கங்கள் கொடுத்துத் தப்பித்தார்.

“எனக்குத் தெரிந்து இதுவரை நீங்கள் தவறாக எதுவும் செய்ததில்லை. அதனால் இதுவும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்!” என்கிற ரீதியில் சுருக்கமாகப் பேசிவிட்டு நாகரிகமாக விலகிக் கொண்டார் அறிவாளியின் மனைவி. அவர் மீதான மரியாதை, அவருக்கு இருக்க வேண்டிய சுயக்கட்டுப்பாடு, பணவரவுக்கு வாய்ப்பிருக்கிற பழக்கம் என்பதால் அதன் மீது வெறுப்பின்மை, அதன் போதைத்தன்மை மீதான தன் அறியாமை எல்லாம் வெளிப்படுகிற மாதிரியான ஒரு பதில். இந்தப் பழக்கத்தை அவர் தொடர்வதற்கான பச்சைக்கொடியும் காட்டுவது போலிருந்தது. இது தப்பென்றே தலைவி சொன்னாலும் அவர் தொடர்ந்துதான் இருப்பார். தப்பைத் தெரியாமல் செய்கிறவரைதானே பயப்பட வேண்டும்?! தெரிந்து விட்டால் அப்புறமென்ன பயம்?!

இப்போது முதலீடு சிறிது சிறிதாகக் கூடியது. வெளியிலும் மெது மெதுவாகத் தெரிய ஆரம்பித்தது. உள்ளூரில் மணி கடையிலேயே வாங்க ஆரம்பித்தார். அவ்வப்போது விழுகிற சிறு சிறு பரிசுகளால் மணி கடையும் கைராசியானதாக மாறியது. எல்லாவற்றுக்கும் மேலாக, பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அறிவார்த்தமாகப் பேச இன்னொரு விஷயம் கிடைத்தது. அவ்வப்போது தெரு ஆட்களையும் அங்கு சந்திக்க நேர்ந்தது. முதலில் சிறிது முகச் சுளிப்பைக் கொடுத்தாலும், அதுவும் பின்பு பழக்கப் பட்டது. அரசியல் பேசுகிற காலத்தில் கண்டு கொள்ளப் படாத பல புதிய மாநிலங்கள் பற்றியும் பேச முடிந்தது. விதியின் மீது நம்பிக்கை கூடியது. வாழ்க்கை மேலும் தத்துவார்த்தமானதாகியது. ஒரு கட்டத்தில், எவ்வளவு வேகமாக இந்தப் போதைக்கு அடிமையாகிவிட்டோம் என்பதை உணரக்கூட நேரமில்லாத வேகத்தில் அதன் அதலபாதாளத்திற்குள் விழுந்திருந்தார்.

மதுரையில் பரிசுச் சீட்டு விற்று வசதியாகப் பிழைத்த தவமணி ஆசாரி மகன் மூத்தவன் போன ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வந்திருந்த போது, நம்ம ஊரிலேயே கடை போட்டு உட்காரலாமெனத் திட்டமிட்டு வருவதாகச் சொன்னான். என்ன காரணமோ தெரியவில்லை. இவ்வளவு காலம் கழித்து, சொந்தக்காரப் பயலுக்கு மதுரை புளித்து, சொந்த ஊர் மேல் பாசம் தொற்றிக் கொண்டு விட்டது என்பதில் அவருக்கும் ஆனந்தம்.

“என்ன இருந்தாலும் நம்ம ஊரில் நம்ம சனங்களோட வாழ்ற வாழ்க்கை ஆகுமா? சீக்கிரம் வந்துரு. மெயின் ரோட்டில் நம்ம கருப்பசாமி நாடார் மகன் புதிதாகக் கடைகள் கட்டிக்கிட்டு இருக்கான். தச்சு வேல நம்மதான். ஒனக்கு ஒரு சின்ன எடம் ஒதுக்கச் சொல்லிப் பேசுறேன். சீட்டு வாங்குறதுல முக்காவாசி நம்ம தெருப் பயகதான். நானே தீவிர சீட்டுக் கிறுக்காயிட்டேன்னாப் பாத்துக்கோயேன்!” என்று ஊக்குவித்துப் பேசி அனுப்பினார்.

சொந்தக்காரன் உற்சாகமாக ஊர் திரும்பினான். அடுத்த வாரமே மூட்டையைக் கட்டிக் கொண்டு வந்து விட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ரோட்டுக்கடை வேலை வேகமாக நடந்து முடிந்தது. முதல் ஆளாக கடைக்கு முன்பணம் கொடுத்து புக் பண்ணியும் ஆகிவிட்டது. அடுத்ததாக, கடைத் திறப்பு. கந்தவேலர் சற்றும் எதிர்பார்த்திராதபடி, அவரையே கடையைத் திறந்து வைத்துக் கொடுக்குமாறு, மாபெரும் மரியாதை செய்தான் சொந்தக்காரன். புல்லரித்துப் புளகாங்கிதம் அடைந்து, அதைத் தன் மகனுடைய கடை போலவே பாவித்து, வேலை தவிர்த்த மற்ற நேரங்களில் எல்லாம் அங்கேயே பொழுதைக் கழித்தார். கடுமையான மார்கெட்டிங் வேலைகளும் செய்தார். கடைக்காரனும் மதுரையில் இருந்து தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்தான். பொழுது  சாய ஆரம்பித்து விட்டால் டேப் ரிக்கார்டரில் விளம்பர உரைகள் பட்டையைக் கிளப்பின. இந்தத் தொழிலை இவ்வளவு விமரிசையாகச் செய்ய முடியும் என்கிற விபரம் இப்போதுதான் ஊர்க்காரர்களுக்குப் புரிய ஆரம்பித்தது.

“சூதாட்டம் எல்லா மட்டங்களிலும் நடக்கத்தான் செய்கிறது. இந்தியப் பொருளியலில் முக்கிய அங்கம் பங்குச் சந்தை. கைநிறையப் பணம் வைத்திருப்பவன் அதில் முதலீடு செய்து ஆடுவதை கொஞ்சம் குறைவாகப் பணம் வைத்திருப்பவன் இங்கே முதலீடு செய்து ஆடுகிறான்!” என்று புதுப்புது விளக்க உரைகள் கொடுக்க ஆரம்பித்தார்.

“அப்படியென்ன சினிமாக் கிறுக்கு?” என்று வீட்டில் ஒருமுறை வியாக்கியானம் பேச ஆரம்பித்ததும், வினையாகிப் போய்விட்டது. “ஒவ்வொருத்தருக்கு ஒரு கிறுக்கு. உமக்குச் சீட்டுக் கிறுக்கு. எங்களுக்குச் சினிமாக் கிறுக்கு!” என்று பாய்ந்து வந்தது பதில். முன்னெப்போதும் இருந்திராதபடி, முதன்முறையாகத் தன்னையும் ஓர் ஆட்காட்டி விரல் சுட்டிப் பேசும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது விக்கல் வரவைத்தது. ஆனாலும் அது சோர்வைக் கொடுக்கவில்லை. ‘இதே சீட்டு மூலம் பெரிய பணக்காரனாகி அதன் அருமையைப் புரிய வைக்க வேண்டும் இவர்களுக்கெல்லாம்!’ என்கிற உந்துசக்தியையே உருவாக்கியது. மேலும் மேலும் பரிசுச் சீட்டுக் கடலுக்குள் மூழ்கி முத்துக்களைத் தொலைத்தார். சில நேரங்களில் வெறி பிடித்துப் போய் வாங்கினார். கண்ணு மூக்குத் தெரியாமல் காசை இழந்தார். அதன் அருமையை (!) உலகறிய வைக்கத் தன்னால் இயன்ற அளவுக்கு முயன்றார். “பரிசுச் சீட்டுகளைத் தடை செய்யவேண்டும்!” என்று தனக்குப் பிடித்த எதிக்கட்சித் தலைவர் சட்டசபையில் முழங்கியபோது கொதித்தெழுந்தார். அடுத்த முறையில் இருந்து காலங்காலமாகத் தான் வாக்களித்து வரும் சின்னத்தை மாற்றிவிடுவது என்று முடிவு கட்டினார். புளியமரத்தடி விவாதங்களில் தன் வழக்கமான அபிமானங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். ஐந்து ஆண்டுகட்கு முன்பு, “அவர் ஆகுமா?” என்று பேசிய தலைவரின் பத்து வருடங்களுக்கு முந்தைய குறைகளை எல்லாம் சாடினார்.

“ஆயிரமாயிரம் குடும்பங்களை வாழவைக்கும் தொழில். அவர்கள் வயிற்றில் அடித்தால் பாவம் சும்மா விடாது. செந்திலாண்டவன் பார்த்துக் கொண்டு விடுவானா?” என்று பொரிந்தார். இத்தனைக்குமிடையில், வேக வேகமாக – கொஞ்சங் கொஞ்சமாக அவருக்கே தெரியாமல் அவர் ஓட்டாண்டி ஆகிக் கொண்டிருந்தார். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு மனிதன் இவ்வளவு வேகமாக நாசமாக முடியுமா என்ற கேள்விக்குப் பதிலானார். சேமிப்புகள் கரைந்தன. தெருவிலேயே பெரிய வீடு என்றெண்ணிக் கொண்டிருந்த வீடு, சிறிது சிறிதாகச் சிறிதானது. அதன்பின்பு வெளியில் போய்ச் சம்பாதித்து விட்டவர்கள் புதுப்புது மாடலில் கட்டிய வீடுகள், கந்தவேலரின் இல்லத்தைக் கரைத்துக் காட்டின. பெயிண்ட் அடிக்காமல் பாழடைய ஆரம்பித்ததும் மேலும் சிறுமைப் பட்டது. பிள்ளைகளின் மீதான கட்டுப்பாடு விட்டுப் போக ஆரம்பித்தது. குடும்பத்தினுள் இருந்த மகிழ்ச்சியும் மங்க ஆரம்பித்தது. இந்தச் சீட்டுக்கு அவருக்குப் பல ஆண்டுகள் முன்னால் அடிமையானவர்கள் கூட இவர் அளவுக்கு இழந்து விடவில்லை. கட்டம் சரியில்லை என்று கோள்களை நொந்து கொண்டு, கையில் உள்ள கோடுகளை முறைத்தார்.

“நானும் ஒருநாள் பெரிய பணக்காரனாகி, காளியம்மன் கோயிலைப் பெரிதாகக் கட்டி, கும்பாபிசேகம் நடத்தி, இதே ஊரில் ஏசித் தியேட்டர் கட்டி, ரிலீஸ்ப் படம் போட்டு, பள்ளிக்கூடம் கட்டி, பாராட்டு விழா  நடத்தி... என்று ஓட்டிய ரீல்களுக்கு ஆரம்பத்தில் இருந்த ஓரளவு மவுசும் அடிபட்டுப் போனது. அவர் பேச ஆரம்பித்தாலே பிள்ளைகளுக்கும் பொண்டாட்டிக்கும் எரிச்சல் ஏற்பட ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் வீட்டையும் விற்க வேண்டுமென்று கிளம்பி விட்டார். பையன்களிடம் வாக்குவாதம் முற்றி, கனவில் கூட நினைத்துப் பார்த்திராத மாதிரி பெற்ற பிள்ளைகளே கை நீட்டுகிற அளவுக்கு நிலைமை மோசமானது. “எப்படியும் நாசமாப் போ!” என்று மூத்தவன் கோபித்துக் கொண்டு ஊரைக் காலிபண்ணி கோயம்புத்தூர் போய்விட்டான். அவருக்கும் தன்னை அறியாமலேயே தன்னம்பிக்கை குறைய ஆரம்பித்தது. தான் கதாநாயகனாகக் கவனிக்கப்பட்ட காலம் போய் காமெடியனாகக் காணப்படும் காலம் ஆரம்பித்து விட்டதை உணர்ந்தார். பேசும் போதே, இது காமெடியாகும் என்று உணரத் தொடங்கினார். பின்னர் காமெடிக்காகவே பேச ஆரம்பித்தார். மொத்தத்தில் முன்பிருந்ததைவிட முற்றிலும் வேறுபட்ட மனிதனாக வெளியுலகுக்கும் தனக்குமே கூடவும் தெரிய ஆரம்பித்தார்.

வீட்டை விற்கத் தயாராக இருந்தும் வாங்க யாரும் வரவில்லை. ஆர்வமிருப்பவர்கள் எல்லோருமே அடிமாட்டு விலைக்குத்தான் கேட்டார்கள். “வாழ்ந்து கெட்ட வீட்டில் குடியேறி வாழ, காசு கொடுத்தாலும் யாரும் வரமாட்டார்கள்!” என்று மூஞ்சியில் அடித்து விட்டுப் போனார்கள்.

“உலகத்தில் எல்லாருமே சொந்த வீட்டில் வாழணும்னு நெனச்சா முடியுமா?”, “நான் கட்டிய வீடு, என்னுடைய கஷ்ட காலத்தில் உதவாவிட்டால் அது இருந்துதான் என்ன பயன்?” என்று தினுசு தினுசாகப் பேசலானார்.

கடைசியில் தவமணி மகன் மூத்தவன் வந்து, மற்றவர்கள் சொன்னதை விடக் கொஞ்சம் கூடப் போட்டுக் கொடுப்பதாகச் சொன்னான். “இந்த வீட்டை இந்த விலைக்குக் கொடுக்கப் போகிறீர்களா?” என்று அதைவிடக் குறைந்த விலைக்குக் கேட்டோர் முதற்கொண்டு எல்லோரும் வந்து துக்கம் விசாரித்து விட்டுப் போய்விட்டார்கள். அந்த அருமையான வாழ்க்கையையே இந்த விலைக்குப் பறி கொடுத்தவர், வீட்டைக் கொடுக்கவா தயங்கப் போகிறார்?

இன்னும் என்னவெல்லாம் பறி கொடுக்கக் காத்திருக்கிறாரோ?!

காத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

(கதை முற்றும்! துன்பங்கள் தொடரும்!!)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்