விவசாயம் - பொங்கற் கவிதை
1996-இல் கல்லூரி-விடுதியில் நடந்த பொங்கல் விழாவுக்குக் கவிதை எழுதி, வாசித்து, முதற் பரிசு பெற்றதற்குப் பின், சரியாக இருபதாண்டுகள் கழித்து மீண்டும் அப்படியான ஒரு வாய்ப்பை வழங்கியது காலம். உடன் பணிபுரியும் - பணிபுரிந்த - பணிபுரியப் போகும் நண்பர்கள் எல்லாம் கூடி, பெங்களூரில் பொங்கல் விழாக் கொண்டாடினோம் போன வாரம். எனக்குள் இருந்து தொலைந்து போன ஒரு பாரதியை மீட்டெடுக்கப் பெரும் உதவியாக அமைந்தது இக்கொண்டாட்டம். இதிலும் ஒரு கவிதைப் போட்டி இருந்தது. கடந்த இருபதாண்டுகளில் தமிழில் கவிதையின் தரம் எங்கோ போய்விட்டது என்ற போதும், ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக, விரலுக்கேத்த வீக்கமாக, ஒன்றுமே எழுதாமல் கிடந்ததற்கு ஏதோவொன்றைக் கிறுக்கித் தொலைதல் மேல் என்கிற கணக்குப் படி, நானும் கவிதை என்று ஒன்றை எழுதி அனுப்பி வைத்தேன். ஒருவேளை முதற் பரிசு கிடைத்தால், மேடையிலேயே வாசித்துக் கைத்தட்டல் வாங்கிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் இருந்தேன். நண்பர்கள் வேலைப்பளு காரணமாக இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. அவர்களுக்கு முடிகிற போது அறிவிக்கட்டும். இந்தத் தை புது வழிகளைப் பிறப்பிக்கட்டும் என்ற பேராசையில் இந்தக் கவிதையைப் போட்டுத் தொடங்குகிறேன். பார்க்கலாம், அடுத்த தைக்குள் எங்கே கொண்டு போய்விடுகிறது வாழ்க்கை என்று!
வெகுமக்கட்காக மேடையில் வாசிப்பதை மனதில் கொண்டு எழுதியதால் நவீன புதுக்கவிதை பாணியில் வாசிக்காமல், மேடையில் வாசிக்கிற பழைய பாணியிலேயே ஏற்ற-இறக்கங்களோடு வாசியுங்கள். ஓரளவுக்குப் பரவாயில்லாமல் இருக்கலாம்!
வெகுமக்கட்காக மேடையில் வாசிப்பதை மனதில் கொண்டு எழுதியதால் நவீன புதுக்கவிதை பாணியில் வாசிக்காமல், மேடையில் வாசிக்கிற பழைய பாணியிலேயே ஏற்ற-இறக்கங்களோடு வாசியுங்கள். ஓரளவுக்குப் பரவாயில்லாமல் இருக்கலாம்!
*** விவசாயம் ***
விலங்கிலிருந்து பிறந்து
விலங்கையே பச்சையாய் உண்டு
வீடின்றி நாடின்றி
விலங்காகவே வாழ்ந்த
வேட்டை மனிதனின்
வெறி கொண்ட காடோடி மலையோடி வாழ்க்கைக்கு
விடை கொடுத்து
வீட்டைக் கொடுத்து
நாட்டைக் கொடுத்து
கற்காலம் முற்காலம் கடந்து
பொற்கால வாழ்வைக் கொடுத்து
அன்றைய ஆதி மனிதனை
இன்றைய தேதி மனிதனாக்கியதுதான்
விவசாயம்
அம்மனிதன் கண்ட தொழில்நுட்பம்
அவனை அவனாக்கிய விவசாயத்தை
ஒருபுறம் மேலாக்கியது
மறுபுறம் பாழாக்கியது
பாவிகள் நாங்கள்
பாழாக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள்
மேலாக்குவதும்
பாழாக்குவதும்
மேதை மனிதனின்
மேலான தொழில்நுட்பம் மட்டுமல்ல
பேதை மனிதனின்
பேராசையும்
அடங்கா மனிதனின்
அரசியலுந்தான்!
பேராசை...
விபரமறியா விவசாயியின்
விளைநிலங்களில்
வீடுகளைக் கட்டி அழித்தது
அவனிடம் கைநாட்டு வாங்கிக் கொண்டு
வெளிநாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு
விரிவான பெரிதான
விண்முட்டும் கட்டடங்களைக் கட்டிக் கொடுத்து
அழித்தது
அரசியல்...
மனிதரில் பகுதியை
விலங்குகளாகவே இருக்கவிட்டு
வேடிக்கை பார்த்து அழித்தது
அரசியல்...
விளைவித்தவனுக்கு
விபரம் தெரிந்து விடாமல்
விளைச்சலுக்கு
விலை கிடைத்து விடாமல் அழித்தது
எங்கள் நாட்டுக் கணக்குப்படி
வளர்ந்த நாட்டுக்கும்
வளரும் நாட்டுக்கும்
வேறுபாடு காண்பதெப்படி தெரியுமா?
வளர்ந்த நாட்டில்
விவசாயமோ விவசாயியோ
அல்லது இரண்டுமோ
ஏற்கனவே குறைந்திருப்பர்
அல்லது இல்லாது அழிந்திருப்பர்
வளரும் நாட்டில்
விவசாயமோ விவசாயியோ
அல்லது இரண்டுமோ
விரைந்து குறைந்து கொண்டிருப்பர்
அல்லது வேகமாக அழிந்து கொண்டிருப்பர்
இப்போது சொல்லுங்கள்!
நாம்
வளர்ந்த நாடா?
வளரும் நாடா?
எல்லா நாடும்
வளர்ந்த நாடாகி விட்டால்
சோற்றுக்கு என் செய்வது?
அதெப்படி விடுவோம்?
அதற்குத்தானே
அரசியல் இருக்கிறது?!
தனியொருவனுக்கு உணவில்லையேல்
வளர்ந்த நாடொன்றில்...
தனியொருவனுக்கு உணவில்லையேல்
மூன்றாம் உலகத்தில்
ஆதி மனிதனின் மீதியைப் பயன்படுத்தி
அவனை மீண்டும் மிருகமாக்கி
உள்நாட்டுப் போர் வரவைத்தாவது
உம் சகத்தினை அழித்திடுவோம்!
எம் உணவுக்காக...
உம் சகத்தினை அழித்திடுவோம்!! – என்ற
உலக அரசியலை
உணர்த்தவும் பயன்படட்டும் இத்திருநாள்!
உழைத்தே ஓய்ந்த எம் விவசாயியிக்கு
உணர்த்தவும் பயன்படட்டும் இத்திருநாள்!!
வணக்கம்.
கருத்துகள்
கருத்துரையிடுக