தம்பி புருசோத்தமா!!!
தம்பி புருசோத்தமா, இன்னும் சில மணி நேரங்களில் நீ உடலால் இந்த
உலகத்தில் உள்ள எல்லோரையும் விட்டுப் பிரிந்து போயிருப்பாய். ஆனாலும் பலருடைய
மனதில் அவரவர் வாழ்வின் இறுதிவரை இடம் பெற்றிருப்பாய். இன்று இருக்கிற அளவு
வேதனையும் வலியும் அப்படியே இராது என்றாலும் எங்கள் எல்லோருக்குமே உன்னைப் பற்றிய
நினைவுகள் அடிக்கடியோ அவ்வப்போதோ வந்து கொண்டேதான் இருக்கும். ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு காரணம் இருக்கும். எனக்கும் ஒரு காரணம் இருக்கிறது. என்னைப்
பொருத்தமட்டில் என் வாழ்வில் நான் காணும் மிக நெருங்கிய அகால மரணம் இதுவே.
எல்லோருக்குமே பள்ளிப்பருவத்தில் அப்படியான ஓர் அனுபவம் கிடைத்திருக்கும். எனக்கு
அப்படி எதுவும் இருக்கவில்லை. நீ என் பால்யப் பருவத்து நண்பனல்ல; பள்ளி நண்பனல்ல;
கல்லூரி நண்பனல்ல; ஒன்றாக உண்டுறங்கிய திருமணத்துக்கு முந்தைய இளமைக் காலத்து
நண்பனுமல்ல. ஆனாலும் அப்படியான எத்தனையோ பேருக்குக் கொடுக்காத இடத்தை உனக்குக்
கொடுத்திருந்தேன். அதற்கான ஒரே காரணம் – உன் கபடமற்ற மனமும் ஏமாளித்தனமுமே!
அதனால்தான், அத்தனை நண்பர்கள் இருந்த சிங்கப்பூரில், குடும்பத்தை ஊரில்
விட்டுவிட்டு வந்தபின், ஊரைக் காலி செய்வதற்கு முந்தைய கடைசி ஓரிரு வாரங்கள்
உன்னோடு தங்கியிருக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அந்தச் சில நாட்கள்தாம் இப்போது
என்னை மேலும் பல மடங்கு உடைத்துப் போட்டிருக்கின்றன.
ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட விதமான மனிதர்களை மிகவும் பிடித்துவிடும்.
அப்படி எனக்கு மிகவும் பிடித்துவிடுகிற ஒரு விதம் ‘ஏமாளிகள்’. இந்த உலகத்தில் ஏமாளிகளைப்
பிடிக்காதவர்கள் குறைவுதான். ஆனாலும் எல்லோரும் அப்படிப்பட்டவர்களைத் தேடிப்போய்ப்
பிடித்துக் கொள்வதில்லை. நாம் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தோம் என்றாலும் வேலையால்
நாம் இணைய எந்த வாய்ப்பும் இருக்கவில்லை. உனக்கு அருகில் உட்காரக் கிடைத்த
இடந்தான் உன்னை முதலில் எனக்கு நெருக்கமாக்கியது. ஓராண்டு கூட நாம்
இணைந்திருக்கவில்லை என்றாலும் நாம் பிரிந்த பின்னும் நம் தொடர்பு விட்டுப்
போகாமல்தான் இருந்தது. ஒவ்வொரு முறையும் உன் வாழ்வில் நடக்கிற நல்ல விசயங்களையும் சிறு
சிறு சிக்கல்களையும் நான் எங்கிருந்தாலும் அழைத்து என்னிடம் நீ பகிர்ந்து கொண்டதும்,
அதற்கெல்லாம் நாம் மகிழ்ச்சிப் பட்டுக் கொண்டதும் மண்டையை உடைத்துக் கொண்டதும்
இப்போது அர்த்தமிழந்து கிடக்கிறதே!
நாம் பேசியதில் அதிகம் பேசியது, கொடூரமான இந்த உலகில் நல்லவனாக
இருப்பதன் நல்லது-கெட்டது பற்றித்தான். உன் மரணம் கூட அதற்கான விடை போலத்தான்
இருக்கிறது.
என் மகன் பிறந்திருந்த நேரம்... “இந்தக்
கொடுமையான உலகத்தில் – இதைவிட மேலும் கொடுமையாகப் போகிற உலகத்தில் – இன்னொரு
குழந்தையைப் பெற்றுப் போட்டுள்ளோனே!” என்று நான் சொல்லும் போதெல்லாம், “நாமெல்லாம்
வாழலையா பாஸ், அது போல அவங்களும் வாழப் பழகிக்குவாங்க பாஸ், விடுங்க பாஸ்!”
என்பாயே! அந்தச் சொற்களை மிதமிஞ்சிய பயம் வருகிற பொழுதுகளில் எல்லாம் இப்போது கூட
நினைத்துப் பார்த்துக் கொள்வேன். இன்று, என் மகனைப் பெற்றுக் கொண்டு வந்த அதே
மண்ணில் தம்பி ஒருவனை இழந்து நிற்கிற சோகம் கொன்றெடுக்கிறது.
நீ இறந்து விட்டாய் என்ற செய்தி வந்ததும் பலர் சொன்னது – கடவுள்
நல்லவர்களைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ளத்தான் விரும்புவார் என்று. கடவுளடனான என்
உறவு குழப்பம் நிறைந்தது. அவ்வளவு எளிதாகக் கடவுளின் எண்ணவோட்டங்களைப் புரிந்து
கொள்ளும் ஆற்றல் எனக்கில்லை. ஆனால் உன் மரணம் ஓரளவுக்கு அதை நம்ப வைக்கிற மாதிரி
இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை - ஆனால் எனக்கும் அகால
மரணங்களில் நல்லவர்களே நிறைய அடிபடுவது போலத்தான் படுகிறது. அது ஒருவேளை இந்த
உலகம் அவர்களை அதை விடப் படுத்தி விடும் என்பதாலோ என்னவோ தெரியவில்லை.
நீயும் என் மனைவியும் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதாலோ என்னவோ, வேலைக்கு
வந்த இடத்தில் உன்னில் அவளைப் பார்ப்பது போலவும், வீட்டுக்குப் போனால் அவளில்
உன்னைப் பார்ப்பது போலவும் அடிக்கடித் தோன்றும். உன்னிடம் கூட ஓரிரு முறை இது
பற்றிச் சொல்லியிருக்கிறேன். எல்லோரையும் நல்லவர்களாகவே எண்ணிக் கொண்டு செயல்படும்
அதே ஏமாளித்தனம் – பிற மனிதர்களைப் பற்றிய வாழ்வின் அடிப்படையான சூட்சுமங்களைக் கூடச்
சிந்திக்க மறுக்கும் சிறுபிள்ளைத்தனம், இது எந்த அளவுக்கு எரிச்சலூட்டுமோ அதே அளவு
வியக்கவும் வைக்கும்.
“எனக்கு எது பற்றியுமே அதிகம் யோசிக்கப் பிடிக்காது பாஸ்! நீங்கள்
என்னை நிறையக் கெடுக்கப் பார்க்கிறீர்கள்!!” என்று உனக்கே உரிய புன்னகையோடு நீ
சொல்லும் போதெல்லாம் நான் பெருமைதான் பட்டேன். அப்படி எதற்காகவும் மண்டையைப்
பிய்த்துக் கொள்ளாத உனக்கு எப்படி மூளைக்குச் செல்லும் நரம்பு வெடித்தது என்று
எண்ணி எண்ணி இன்னும் என்னால் ஒரு முடிவுக்கு வரவே முடியவில்லை.
வாழ்க்கை மாயை - நிரந்தரமற்றது என்றெல்லாம் எத்தனையோ முறை
கேள்விப்பட்டிருக்கிறோம் – படித்திருக்கிறோம் என்றாலும், இந்த அளவுக்குக் கடுமையாக
அதை உணர்த்தியது உன் மரணந்தான். நமக்கு மிக அருகில் நடந்தால்தானே எதுவுமே நமக்கு
நன்றாக உரைக்கும்! மரணத்துக்குப் பின் ஆன்மா எங்கே போகும் என்பது போன்ற கேள்விகள்
என்னைப் பெரிதும் துளைத்ததில்லை. ஓடுகிற இயந்திரம் ஒன்று நின்று போனால், அதன்
ஆன்மா எங்கு போகுமோ அங்குதான் போகும் என்றும் நாம் வெட்டிச் சாப்பிடும் கோழியின் –
ஆட்டின் ஆன்மா எங்கு போகுமோ அங்குதான் போகும் என்றுந்தான் எண்ணிக் கொள்வேன். ஆனால்
நீ உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாய் என்றும் மூளைச் சாவு ஆகி விட்டாய் என்றும்
கேள்விப்பட்டபோது உன் ஆன்மா என்ன செய்து கொண்டிருக்கும் என்ற சிந்தனை அடிக்கடி
வந்து துளைத்தது.
உன் மரணச்செய்தி கேட்டதும், ஒரு தம்பியை இழந்து விட்டது போன்ற
வலியும், காலமெல்லாம் உன்னோடு வாழக் கனவுகள் கட்டிக்கொண்டு வந்த உன் மனைவியைப்
பற்றி நினைத்தால் ஒரு தங்கையின் அண்ணனுக்கு வரும் வலியும் ஒரே நேரத்தில் வந்து
கொன்றது – இப்போதும் கொல்கிறது. இந்த நேரத்தில் நாங்களும் குடும்பத்தோடு சிங்கப்பூரில்
இருந்திருந்தால் சிறிதளவாவது மற்றவர்களோடு சேர்ந்து உன் பிரிவில் உடைந்து
போயிருக்கும் உன் குடும்பத்துக்கு ஏதாவது உதவியிருக்கலாமே என்றுதான் தோன்றுகிறது.
என்னை விட என் மனைவி உன் மனைவிக்குப் பெரும் உதவியாக இருந்திருப்பாள்.
நீ இறந்து விட்டாய் என்று முழுமையாக அறிவிக்கப்படுவதற்கு முந்தைய
இரவில் உன் பெற்றோரும் மனைவியும் கோவிலில் போய் மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள்
என்று கேள்விப் பட்டபோது, எப்போதும் தோன்றாத ஓர் எண்ணம் எனக்கு வந்தது – ‘இரவெல்லாம்
நானும் போய்ச் சாமியிடம் மன்றாடினால், நாளை காலை இவன் எழுந்து வருவானா???’ என்று.
அந்த அளவுக்கு வேண்டிக் கொள்ளாவிட்டாலும் உலகமெங்கும் உனக்காக எத்தனையோ பேர் ஒரு வாரமாக
வேண்டிக்கொண்டே இருந்தோம். அதற்கெல்லாம் சரியான விடை கிடைக்கவில்லை எங்களுக்கு.
இந்த நிமிடம் வரை சத்தமாகக் கதறி அழ முடியவில்லை. ஆனால் நீ மூளைச்சாவு
அடைந்து கிடந்த போதே முகநூலில் நண்பர்கள் சிலர் “RIP” என்று போட்டு விட்டார்கள். முதன்முறை
அதைப் பார்த்த அந்த நொடியில் குபுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது. அதன் பின்பு
ஒவ்வொரு முறை உன் படத்தைப் பார்க்கும் போதும் உன்னைப் பற்றியோ உனக்காகப் போராடிக்
கொண்டிருக்கும் உன் குடும்பத்தினரைப் பற்றியோ யாராவது ஏதாவது சொல்லக் கேட்கும்
போதும் அதே போல் குபுக் குபுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. பகலெல்லாம்
மற்ற வேலைகளுக்கு நடுவிலும் உன்னைப் பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது வந்து
செல்கின்றன. இரவெல்லாம் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை விழித்துப் பார்க்கிறேன். உன்
முகந்தான் கண்ணுக்குள் இருக்கிறது. எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கிற கண்ணீரைத்
துடைக்கக் கூட மனமில்லாமல் மீண்டும் தூங்க முயல்கிறேன். மீண்டும் எழுகிறேன்.
இப்படியே இரண்டு இரவுகள் கழிந்தன. உன் மரணம் உறுதி செய்யப் பட்டபின் அதுவும்
சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. நாளாக நாளாக இந்தக் கவலையும் நினைவுகளும் மேலும்
கரைந்து போய்விடும். அதனால்தான் இந்த நேரத்தில் தோன்றுவதை எழுதி வைத்துக்
கொள்ளவேண்டும் என்று தோன்றியது.
நீ மரணப்படுக்கையில் கிடந்தபோது உனக்காக ஓடியாடி உழைத்த – துடித்த - வேண்டிக்
கொண்ட மனிதர்களின் எண்ணிக்கைதான் நீ எவருக்கும் கேடு நினைக்காத நல்லவனாக
வாழ்ந்ததற்கான விடை. நான் கேள்விப்பட்டவரை, உன் உயிர் உனக்குப் பெரும் உடல் வலியைக்
கொடுக்காமல்தான் பிரிந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதுவும் நாம்
கேள்விப்பட்ட வாழ்க்கைத் தத்துவத்தின் படி, பிறருக்குக் கேடு நினைக்காத உன்
கபடமற்ற வாழ்க்கைக்கான விடைதான் என்றே எண்ணுகிறேன்.
நீ அடிக்கடிச் சொன்னது – வாழ்க்கையில் உன் பணத்தில் இருந்து ஒரேயோர் ஏழைக் குழந்தையையாவது படிக்க வைத்துவிட வேண்டும்
என்று. உன்னுடைய இந்த முகம் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.
ஆனாலும் இதை நீ உன் நெருங்கிய நண்பர்கள் – குடும்பத்தினர் சிலரிடமுமாவது
சொல்லியிருப்பாய் என நினைக்கிறேன். நண்பர்களின் வெட்டிச் செலவுகளுக்குக் கூட
கையில் இருந்ததையெல்லாம் கொடுத்து விட்டு, கையிலும் கழுத்திலும்
மாட்டியிருந்ததையும் அடகு வைக்கக் கழற்றிக் கொடுத்து விட்டு, உன்னுடைய அன்றாடச் செலவுக்குக்
கூடப் பணமில்லாமல் நீ விழித்த காட்சியைப் பார்த்திருக்கிறேன். அப்படியானவன் இந்த
உலகத்தில் வாழ முடியாமல் போனது, வாழ்க்கையின் தத்துவத்தை மேலும் புரியாததாக
ஆக்கித்தான் விட்டிருக்கிறது.
கடைசியாக, சிங்கப்பூரை விட்டுக் கிளம்பிய போது, விமான நிலையத்தில்
வழியனுப்பி விட்டுச் சென்றாய். உனக்கே உரிய பாணியில் கண்ணை விட்டு மறைகிறவரை
இடத்தை விட்டு நகலாது நின்று கையசைத்தாய். அடுத்து எங்கே சந்திக்கப் போகிறோமோ
என்று எண்ணிக் கொண்டே பிரிந்தேன். பெங்களூரில் சந்திப்போம், உன் திருமணத்தில்
சந்திப்போம் என்று போட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லை. பிற்காலத்தில் எப்போது
சிங்கப்பூர் போனாலும் அங்கே நமக்கென்று ஓராள் இருக்கிறான் என்று அடிக்கடி எண்ணிக்
கொள்வேன். அது அத்தனையும் இப்போது சுக்குநூறாகிக் கிடக்கிறது. என்னையும்
என்னைவிடப் பல மடங்கு மேலும் பலரையும் மனதளவில் உடைத்து நொறுக்கி விட்டுப் போய்
இருக்கிறாய். உன் மரணத்தால் நேரடியாகவும் மனதளவிலும் கடுமையாகப் பாதிக்கப்
பட்டிருக்கும் எல்லோரும் இதிலிருந்து மீண்டு வந்து நலம் பெற வேண்டும் என்று
வேண்டிக்கொள்கிறேன். இந்த உலகம் மேலும் நிறையப் புருசோத்தமன்களைப் பெற வேண்டும்! குறைந்த
பட்சம் என் வாழ்விலாவது மேலும் பல புருசோத்தமன்கள் வர வேண்டும்!! அவர்கள்
எல்லோரும் நீடித்து வாழ்ந்து இந்த உலகத்தை மென்மேலும் மேன்மைப்படுத்த வேண்டும்!!!
உனக்குத் தெரியாது. நான் இந்தக்
கவிதையை எழுத நீயும் ஒரு முக்கியக் காரணம் என்று... இந்த நாளில் என்னால் உனக்குச்
சமர்ப்பணம் செய்ய முடிவது இது ஒன்றே! போய் வா நண்பா!! சிங்கப்பூர் விமான
நிலையத்தில் நீ வழியனுப்பி வைத்த நண்பன் உன்னை இவ்வுலக விமான நிலையத்தில் நின்று
நீ கண்ணில் இருந்து மறையும் வரை காத்திருந்து கை காட்டுகிறேன். கண்டிப்பாக நாம்
மீண்டும் சந்திப்போம்! (#கண்ணீர்!!)
ஏமாந்து
அடிபட்டு
மிதிபட்டு
அவமானப் பட்டு
இதற்கு மேலும்
நல்லவனாயிருப்பது நல்லதற்கல்ல என்று
தன்பரிதாபத்தில்
தடம் தப்பப் போகையிலெல்லாம்
உன்னைப் போல்
ஒருத்தனோ ஒருத்தியோ
வந்து விடுகிறீர்கள்
இந்த உலகத்தில்
இன்னும் நல்லோர் பலர் உளர் என்றும்
சிறுமைகளின் போதெல்லாம்
நான் நினைத்து நினைத்துப்
பெருமைப் பட்டுக் கொள்ளுமளவுக்கு
நானொன்றும்
உங்களைக் காட்டிலும்
நல்லவனில்லை என்றும்
அடிபட்டு
மிதிபட்டு
அவமானப் பட்டு
இதற்கு மேலும்
நல்லவனாயிருப்பது நல்லதற்கல்ல என்று
தன்பரிதாபத்தில்
தடம் தப்பப் போகையிலெல்லாம்
உன்னைப் போல்
ஒருத்தனோ ஒருத்தியோ
வந்து விடுகிறீர்கள்
இந்த உலகத்தில்
இன்னும் நல்லோர் பலர் உளர் என்றும்
சிறுமைகளின் போதெல்லாம்
நான் நினைத்து நினைத்துப்
பெருமைப் பட்டுக் கொள்ளுமளவுக்கு
நானொன்றும்
உங்களைக் காட்டிலும்
நல்லவனில்லை என்றும்
உங்களுக்காகவாவது
இப்படியேவாவது
நான் இருந்து தொலைந்து விட வேண்டுமென்றும்
நினைவுபடுத்திக் கெடுத்து விடுகிறீர்கள்!
இப்படியேவாவது
நான் இருந்து தொலைந்து விட வேண்டுமென்றும்
நினைவுபடுத்திக் கெடுத்து விடுகிறீர்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக