சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

தமிழில் எழுதியவர்களிலேயே தலைசிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்தான் என்று சொல்லப்படுவதைப் போல இதுவரை தமிழில் எழுதப்பட்ட புதினங்களிலேயே சிறந்த புதினம் இதுதான் என்றும் சொல்லப்படுவதுண்டு. தீவிர வாசிப்புக்குள் சென்றுவிட்டவர்கள் இதை மறுக்கக் கூடும். தீவிர வாசிப்பின் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்குத்தான் ஜெயகாந்தன் எனக் கூடும். அந்த நிலையில்தான் தமிழர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதால் ஜெயகாந்தன்தான் சிறந்த எழுத்தாளர் என்பதும் மக்கள்மயமான (democratic) ஒரு கருத்துதான். சுஜாதாதான் அது என்பவர்களை அதற்கும் முந்தைய கட்டம் என்பது போல், ஜெயகாந்தன்தான் அது என்பவர்களையும் படிநிலையில் கீழே வைத்துப் பேசுபவர்கள் உண்டு. வணிக எழுத்துக்கு அடுத்தபடியாகத் தமிழில் நிறையப் பேரை வாசிக்க வைத்த பெருமை சுஜாதாவுக்கே சேரும். அது போலத்தான் ஜெயகாந்தனும். ஒரு தலைமுறையையே இலக்கியத்தின் பக்கம் இழுத்து வந்த பெருமை அவரையே சேரும். கிட்டத்தட்ட அவருக்கு அடுத்த தலைமுறையில் எழுத வந்தவர்கள் எல்லோருமே அவரால் ஊக்கம் பெற்றவர்களே. அதனால்தான் தமிழில் இதுவரை ஞான பீடம் பெற்ற இரண்டே இருவரில் அவரும் ஒருவர். ஞான பீடம் ஒன்றே தரத்தின் குறியீடாகுமா என்று வேறு கேட்பீர்கள்! இல்லைதான். ஆனால் அதுவும் ஒரு குறியீடுதானே!

அவர் எழுதத் தொடங்கிய காலத்தில் தமிழகம் முழுக்கவும் அவரைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்; சினிமா நடிகர்களுக்கு இருந்தது போன்ற ஒரு ரசிகர் கூட்டம் முதன்முறையாக ஓர் எழுத்தாளருக்கு உருவானது அவருக்குத்தான் என்பார்கள். இன்று அவர் எழுதியவற்றைப் படித்துவிட்டு, "இதென்ன பிரமாதம்!" என்பது வேறு. இவற்றையெல்லாம் அன்று அவர் சொன்ன காலம் எப்படி இருந்தது என்பதையும் அதற்கு முன்பு எழுதியவர்கள் என்னென்ன எழுதியிருந்தார்கள் என்பதையும் புரிந்துகொண்டு பேசுவது வேறு. அவர் எழுதியவற்றுள் இப்போதே நமக்கு நம்ப முடியாதவையாக எவ்வளவோ இருக்கின்றன. அப்படியானால் அப்போது இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்! அதனால்தான் அவ்வளவு சர்ச்சைகளும் கவனமும்!

அறுபதுகளில் 'அக்கினிப் பரீட்சை' என்றொரு சிறுகதை எழுதுகிறார். "தமிழில் நான் படித்த சிறுகதையிலேயே சிறந்த கதை அதுதான்" என்று சொல்கிறவர்கள் உண்டு. அதைப் படித்துவிட்டுத் தமிழ் நாடே பொங்கு பொங்கென்று பொங்குகிறது. "இதென்ன அநியாயம்!", "இப்படியும் நடக்குமா!", "இதையெல்லாம் படித்துவிட்டு இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிப் போக மாட்டார்களா!" என்று எங்கும் அது பற்றியே பேச்சு. ஒரு சிறுகதையின் முடிவு வாசகனின் மனதில் புதிய தொடக்கத்தைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிற இலக்கணத்தின்படி பார்த்தால் இந்தக் கதை அதைச் செய்துவிடுகிறது. இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக அதை விரித்துக்கொண்டு போகையில், முடிவைச் சிறிது மாற்றி அல்லது அதை ஒட்டி இந்தக் கதைக்குப் பிந்தைய நிகழ்வுகள் எப்படி இருந்தன என்று ஜெயகாந்தனே ஒரு பெருங்கதையை உருவாக்குகிறார். அதுதான் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. இதைத் தொடர்ந்து 'கங்கை எங்கே போகிறாள்?' என்றொரு புதினமும் எழுதினார். 

கெட்ட பின்பும் ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை என்று சொன்ன சிறுகதைக்கு எதிர்ப்புகள் வரவே, "சரி, உங்கள் ஆசைப்படியே அவள் வாழ்க்கையை நாசமாக்கிக் காட்டுகிறேன்!" என்று சொல்லி 'சில நேரங்களில் சில மனிதர்கள்' எழுதினார். அதன் முடிவே கங்காவின் வாழ்வே ஒரு பெரும் அழிவுக் கதை என்கிற மாதிரி முடியும். அதற்குப் பிறகு எப்படியெல்லாம் அழிவிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள முயன்றாள் அல்லது அழிவிற்கான பாதை எப்படியிருந்தது என்பது பற்றி அடுத்த புதினமான 'கங்கை எங்கே போகிறாள்?' பேசுகிறதோ என்னவோ!

பெயரை வைத்துப் பார்த்தால் இந்தப் புதினம் வேறொன்றையும் சொல்கிறது - மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பவர்கள். இருபது ஆண்டுகள் கழித்து ஊருக்குப் போகும் போது சிறு வயதில் டவுசரில் உச்சாப் போய்க்கொண்டேயிருந்த நம் அப்பாவி நண்பன் ஒருவன் கொலை செய்துவிட்டு சிறைக்குப் போய்விட்டான் என்று கேள்விப்படுவதும் சிறு வயதில் பெரியவர்கள் கூடக் கண்டால் மிரள்கிற அளவுக்கு போக்கிரித்தனம் செய்த நண்பன் திடீரென்று பொறுப்பு வந்து படிப்பில் கொடி நாட்டி வாழ்க்கை வேறு விதமாக மாறிப் போய்விட்டது என்று கேள்விப்படுவதும் நம் எல்லோருக்கும் கிடைக்கும் அனுபவந்தான். கிடைத்த இந்த ஒற்றை வாழ்க்கையில் எல்லோருமே எல்லாமுமாக மாறிக் காட்டிவிடத்தான் செய்கிறார்கள் - செய்கிறோம். அப்படி நாம் பெரிய மனிதர் என்று மதிக்கிற மனிதர்களுக்குள்ளும் இருக்கும் சிறுமைகள் பற்றியும் பொறுக்கி என்று ஒதுக்கிவிடுகிற மனிதர்களுக்குள்ளும் இருக்கும் குழந்தைத்தனம் அல்லது தராதரம் பற்றியும் பேசுவதும் இந்தப் புதினத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

மனம் ஏற்றுக்கொள்ளும்படியான முடிவுகளைக் கொடுக்கும் கதைகளே சிலருக்குப் பிடிக்கும். வாழ்க்கையில் படுகிற பாடுகள் போதாதென்று இது போன்ற கதைகளைப் படிப்பதிலும் மன நிம்மதி இழந்து பட்டுத் தொலைய வேண்டுமா என்கிற கவலையின் காரணமாக வரும் எதிர்பார்ப்பு அது. கவலையளிக்கும் முடிவுகளே பிடிக்காது எனும் போது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகளை வைத்துக் கவலையைக் கொடுத்தால் என்ன செய்வார்கள் பாவம் மனிதர்கள்! அப்படியானவர்கள் இந்தப் புதினம் முடிவுக்கு வந்த பின்பு ஜெயகாந்தனுக்குத் தினம் தினம் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொல்கிறார்கள் - "என்ன சார், இப்படிப் பண்ணிட்டீங்களே!".

அதற்குப் பதிலாகத் தன் முன்னுரையில் அவர் இப்படிச் சொல்கிறார்:
"நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? ரொம்ப நல்லது. அதற்காகத் தான் அந்த முடிவு! அந்த வருத்தத்தின் ஊடே வாழ்வின் போக்கைப் புரிந்துகொண்டால் வருத்தம் என்கிற உணர்ச்சி குறைந்து வாழ்வில் அப்படிப்பட்டவர்களை, அந்த நிகழ்ச்சிகளைச் சந்திக்கும்போது மனம் விசாலமுறும்."

ஒரு மழை நாளில், மாலை நேரத்தில், கல்லூரிக்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் அப்பாவிப் பிராமணப் பெண் ஒருத்தியை முன் பின் அறிமுகமில்லாத பொறுக்கி ஒருத்தன் காரில் அழைத்துப் போய்க் கெடுத்துவிடுகிறான். அவளுடைய எதிர்ப்பை மீறிச் செய்தான் என்றும் சொல்ல முடியாது; அவளின் சம்மதத்தோடு செய்தான் என்றும் சொல்ல முடியாது. அப்படியான சம்பவம். வீடு திரும்பியவள் தன் தாயிடம் இதைச் சொல்கிறாள். அந்தத் தாய் படுகிற கவலையைப் பட்டுவிட்டு, இதைப் பெரிதாக்குவதில் பயனொன்றும் இல்லை - பிரச்சனைதான் அதிகம் என்ற தெளிந்த மனதோடு மகளுக்குத் தலையில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றிவிட்டு, "எல்லாம் சரி ஆயிடுச்சு, போ; இது பற்றி யாரிடமும் பேசாதே!" என்று சொல்லிவிடுகிறாள். இதுதான் 'அக்கினிப் பரீட்சை' சிறுகதை. இதுதான் தமிழ் நாட்டை மண்டை காய வைத்த கதை.

"அதெப்படி அந்தத் தாய் இப்படிச் செய்யலாம்?" என்று பொங்கியவர்களுக்காகத்தான் பின்னர் இந்தப் புதினத்தை எழுதுகிறார். "சரிப்பா, நீ சொல்றபடியே வச்சுக்குவோம். அந்தப் பெண் வீடு திரும்பித் தன் தாயிடம் சொன்னதை அந்தத் தாய் ஊர் முழுக்கச் சொன்னால் என்ன ஆகும்?" என்கிற கேள்விதான் இந்தப் பெருங்கதை. அவளுடைய வாழ்க்கை அத்தோடு இருள் சூழ்ந்துவிடுகிறது. அப்படியே அடங்கி ஒடுங்கிவிடுகிறாள். "இவள் அல்லவோ அடக்கத்துக்கு இலக்கணம்!" என்று ஒரு சாராரும் (நடந்த சம்பவம் பற்றி அறியாதவர்கள்), "எவனிடமோ போய்ப் படுத்துவிட்டு வந்தவள்!" என்று இன்னொரு சாராரும் (சம்பவம் பற்றி அறிந்த வீட்டாரும் சுற்றுப்புறத்தாரும்) இரு வேறுபட்ட அடைப்புகளுக்குள் அவளை அடைத்துவிடுகிறார்கள். 

இவளின் தாய் நடந்ததை வெளியில் சொன்ன நிமிடம் முதல் அவளின் அண்ணனும் அண்ணியும் தம் கொடுமைகளைத் தொடங்கிவிடுகிறார்கள். மகளையும் தாயையும் வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுகிறார்கள். இருவரும் மழையோடு மழையாகத் திண்ணையிலேயே கிடக்கிறார்கள். தாயின் ஒன்றுவிட்ட அண்ணன் ஒருத்தர் திருச்சியில் இருக்கிறார். தாய்க்கென்று இருக்கும் ஒரே உறவு அவர்தான். அவர் வந்து தாயையும் மகளையும் தன்னோடு அழைத்துச் சென்று அவர்களுக்கு ஆதரவாக இருந்து, மருமகளின் படிப்புக்கு உதவி, படிப்பு முடிந்த பின் சென்னை திரும்பி, அவளுக்கு வேலையும் கிடைத்து, வேறொரு பகுதியில் வீடெடுத்துக் குடி வைத்து, அதன் பின்பும் அவ்வப்போது வந்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்.

மகள் தவறு செய்துவிட்டு வந்து நிற்கும் நாளில் மகனுக்கும் மருமகளுக்கும் ஊருக்கும் பயந்து மகளைப் போட்டு அடிக்கிறார். அதே வேளையில் மகளுக்காகவும் அழுகிறார். அவளுக்கு ஆதரவாகப் பேசினால் மற்றவர்கள் வாயில் விழ வேண்டியதிருக்கிறது, முழுமையாக மகளை ஒதுக்கிவிடுவதிலும் விருப்பம் இல்லை. இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அந்தப் பெத்த மனம் படும் பாடு அருமையாகச் சொல்லப்படுகிறது. பெண்களின் உளவியலை இவ்வளவு துல்லியமாகப் படித்து வைத்திருக்கிறாரே என்று வியக்கும் அளவுக்கு அவர்கள் பேசுவதாக வரும் வரிகளும் செய்வதாக வரும் செயல்களும் இருக்கின்றன. அதனால்தான் பெண்களுக்கும் இந்தப் புதினம் அவ்வளவு பிடித்திருக்க வேண்டும். 

"ஒரு பக்கம் பரிதாபப் பட்டுண்டு இன்னொரு பக்கம் அவாளுக்குள்ளே கேவலமா பேசிச் சிரிக்கறா" என்று சுற்றியுள்ள மனிதர்களை நினைத்துத் தனக்குள்ளேயே அந்தத் தாய் நொந்துகொள்வது அதற்கோர் எடுத்துக்காட்டு.

இந்தப் புதினத்தில், 'அக்கினிப் பரீட்சை' போன்ற சிறுகதை ஒன்று ஒரு வார இதழில் வருகிறது. கதையின் நாயகி கங்கா அதைப் படித்துவிட்டுத் தன் தாயும் இப்படிச் செய்திருக்கலாமே என்கிற வெறுப்பில் அதைப் போய்த் தன் தாயிடம் கொடுத்துப் படிக்கச் சொல்கிறாள். அதைப் படித்துவிட்டு அந்தத் தாய்க்குத் தன் மீதே வெறுப்பு வருகிறது. தான்தானே இதைச் சரியாகக் கையாளத் தெரியாமல் வெளியில் போட்டு உடைத்துத் தன் மகளின் வாழ்க்கையை இப்படிக் கெடுத்துவிட்டோமே என்று எண்ணி எண்ணி அழுகிறாள்.

"அன்னிக்கு அவள் பதினேழு வயசுக் கொழந்தை; நான் முப்பத்தேழு வயசுக் கொழந்தை..." என்கிறார் அந்தத் தாய்.

இப்படிக் குழம்பிக் கிடக்கும் தாயை அடுத்த முறை வீட்டுக்கு வரும் வெங்கு மாமா (அதுதான் அவரின் ஒன்றுவிட்ட அண்ணனின் பெயர்) அவருக்குரிய பாணியில் சரிக்கட்ட முயல்கிறார். அதற்கு முன், இவர் எப்படிப்பட்டவர் என்று பார்க்க வேண்டுமே! தன் ஒன்றுவிட்ட தங்கையையும் அவள் பெற்ற மகளையும் பெற்ற மகனே - அண்ணனே வீட்டைவிட்டு வெளியேற்றிய பின் இவர்தான் அழைத்துச் சென்று ஆதரிக்கிறார். அன்று இவர் இல்லாவிட்டால் தாய்க்கும் மகளுக்கும் நாதியே இருந்திராது. இது அவருடைய நல்ல பக்கம். இவருக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது.

"வக்கீல் வாதத்திலே வெங்கு மாமா ஒரு புலின்னு எல்லாருமே சொல்லுவா."

இது அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் அந்தத் தொழிலில் அவர் கைதேர்ந்தவர் என்றும் மட்டும் சொல்வதில்லை. 'புலி' என்பது வேடிக்கையான முறையில் பொறுக்கித்தனம் செய்வோருக்கான பெயராகவும் நூல் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக கங்கா இவரை அடிக்கடி 'புலி' என்கிறாள்.

"புலியைப் பழக்கறது மட்டும் சர்க்கஸ் இல்லே; புலியோட பழகறதும் ஒரு சர்க்கஸ்" என்பாள் கங்கா.

அவர் தன் மனைவியை அடித்துத் துன்புறுத்துபவராக இருக்கிறார். இவர் ஒரு 'புலி' என்பதை அவர் மனைவியும் அறிந்திருக்கிறார். இந்த மனிதன் கங்கா மீதும் கை வைத்துவிடக் கூடாதே என்று பயந்து கிடப்பார். பெரியவரும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கங்காவைத் தொடுவதும் தடவுவதுமாக இருக்கிறார். இப்படியான யோக்கியர் கங்காவிடம் பேசும் போது அவளுக்கேற்ற மாதிரிப் பேசுகிறார். ஆனால் அவளுடைய தாயிடம் பேசும் போது ஒழுக்க விதிகளில் பிடிவாதமானவர் போலப் பேசுகிறார்.

கதை முழுக்கவுமே கங்காவின் பார்வையிலேயே சொல்லப்பட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது. கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரத்தைப் பற்றியும் கங்கா கொண்டிருக்கும் கருத்துகள் சுவையானவை.

"அவர் இரைஞ்சு பேசினால் கோபம்னு அர்த்தமில்லே. அவருக்குக் கோபம் வந்தால் சத்தமே வெளியே வராது" என்று வெங்கு மாமாவைப் பற்றி ஒரு விளக்கம்!

"அந்த ஊர்ப்பக்கத்திலே எல்லாம் கோபம் வந்துட்டா 'கை வேற கால் வேறயா வெட்டுடா... வெங்கட் ராமையர் இருக்கவே இருக்கார், பார்த்துக்கலாம்’னு தேவன்மார்கள் பேசறதை நான் என் காதாலே கேட்டிருக்கேன். அவருக்கு இருக்கிற வாதத் திறமையாலே கொலைகாரனை நிரபராதி ஆக்கிடுவார்: நிரபராதியைக் கொலை காரனா ஆக்கிடுவார்" என்று தன் அண்ணன் பற்றிப் பெருமை பேசுகிறார் கங்காவின் தாய். அந்தத் திறமையைத்தான் கங்கா விவகாரத்திலும் அவர் பயன்படுத்துவார்.

சிறு வயதில் இப்படியான பேச்சுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பதால் இது பிடித்திருந்தது. இதைப் படித்த போது இவர்கள் தஞ்சாவூர் அய்யர் இல்லை, திருநெல்வேலி அய்யர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது! ஜெயகாந்தன் மதுரையிலும் சிறிது காலம் வாழ்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதுண்டு. அது உண்மையா என்று தெரியவில்லை. அந்தக் காலத்தில் இதெல்லாம் கேள்விப்பட்டிருப்பாரோ என்னவோ! இந்தக் கூற்று திறமையான வழக்கறிஞர் என்பவர் யார் என்பது பற்றிய நம் வரையறை பற்றிய நினைவூட்டலும் கூட.

"இந்தப் புலிக்கு இரையாகாம இதுகிட்ட பழகக் கத்துக்கணும்னு எனக்குத் தோணித்து. சிக்கிக்கவும் வேணும், ஏமாறவும்படாது. இந்தப் புலி நல்ல புலி. தட்டிக் குடுத்து பழக்கி, பழகி, ஏறி உக்காந்து சவாரி பண்ணிடணும். பலியாயிடக் கூடாது. சில நேரங்கள்லே இந்த மாமா புலியாவார். அப்ப கூண்டுக்குள்ளே விட்டுக் கதவை மூடிடணும். சில நேரங்களிலே சில மனுஷா அப்படித்தான் இருப்பா. அவா அப்படி ஆயிடறதுக்கு அவாளா ஒரு நியாயம் வச்சிருக்கா. அதே மாதிரி நாமும் ஒரு நியாயத்தை வெச்சிண்டு அவா மாதிரியே ஒரு வேஷத்தைப் போட்டுண்டு, அந்த நேரங்களிலே அந்த மனுஷாகிட்டேயிருந்து தப்பிச்சுக்கணும். இந்தப் பன்னண்டு வருஷமா இந்த மாமா புலிகிட்டே இருந்தது நான் அப்படித்தான் தப்பிச்சிண்டு வரேன்."

திரைப்படங்களில் கமலஹாசன் எல்லா ஊர்ப் பேச்சையும் அப்படியே பேசுவது போல எழுத்தில் ஜெயகாந்தன். சென்னைப் பேச்சும் அப்படியே பேசுவார். அய்யர் வீட்டுப் பேச்சும் அப்படியே பேசுவார். இவ்வளவு அச்சு பிசகாமல் எப்படி அந்த மொழியை உள்வாங்கினார் என்று படு வியப்பாக இருக்கிறது. ஒரு வகையில் இது போன்ற பேச்சு வழக்குகளைப் பேசப் பழகுவதைவிட எழுத முடிவது கடினம். ஓர் எழுத்து கூடப் பிசகக் கூடாது. அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

"சாகப்போற இந்த வயசிலே உன் மேலே எனக்கு ஆசை வரும்னு உனக்குத் தோண்றதே, அந்த வயசிலே அவனுக்கு அது தோணி இருக்கப்படாதா? உன்னையே எனக்குப் பிடிக்க வைக்க முடியும்னு நீ நம்பறதனாலே அவனையும் எனக்குப் பிடிச்சு இருந்திருக்கும்னு நீ நினைக்கறே... அவனைப் பிடிச்சு இருந்தாக்கூட உன்னைப் பிடிக்காது. கிழட்டுப் பிசாசே...! எடுடா கையை’ன்னெல்லாம் 'நறுக்' 'நறுக்'னு கேக்கணும் போல ஆங்காரம் வரது" என்று கங்கா சொல்வதாக வருகிறது.

அதாவது, இவ்வளவு பெரிய மனுச முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் தன் மாமாவே ஒரு 'புலி' என்பதால், தன் வாழ்வையே நாசமாக்கியவன் செய்தது கூட நியாயம் என்று சிந்திக்கிற நிலைக்குப் போய்விடுகிறாள் கங்கா.

"சில சமயத்திலே மாமா உபதேசம் பண்ணுவார். நம்ப சாஸ்திரங்களும், நம்ப வாழ்க்கையோட தர்மங்களும் பெண் மக்களுடைய ஒழுக்கத்தையே அடிப்படையாகக் கொண்டதுன்னு சொல்லுவார். இயற்கையிலேயே அந்த விஷயத்திலே ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடிப்படையான வித்தியாசம் உண்டாம்...! ஆண்கள் ஏக பத்தினி விரதனாக இருக்கறதும், பலரைக் கல்யாணம் பண்ணிக்கறதும் அவன் அவனோட மனோதர்மத்தைப் பொறுத்ததாம்... ஆனால், பெண்கள் ஒருத்தனையே கைப் பிடிச்சு அவனுக்கே உண்மையாக இருக்கணும்கறதைத் தவிர இயற்கையிலேயே வேறே வழி கிடையாதாம். இதுக்கு அர்த்தம் ஆண்களைவிடப் பெண்கள் தாழ்ந்தவாங்கறது இல்லையாம். அவாளுக்கு உயர்ந்த அந்தஸ்து இருக்கிறதனாலேயே அவர் அப்படி இருக்கணுமாம். இப்படியெல்லாம் சொல்றபோது அவர் மனுதர்ம சாஸ்திரத்திலேருந்தும் மகாபாரதத்திலேருந்தும் கூட ஆதாரங்கள் எடுத்துக் காட்டுவார்."

“பெண்கள் ஒருத்தனுக்கே உண்மையா இருக்கணும்னு சொல்றேளே? மகாபாரதத்திலே திரெளபதி அஞ்சு பேருக்கு மனைவியா இருந்தாளே? அதை எப்படி நம்ப சாஸ்திரம் ஒத்துண்டது?” என்று கேட்டால், "நம்ப சாஸ்திரம் அதை ஒத்துக்காததுனாலே தான் அது மாறிப் போயிடுத்து..." என்று சொல்லித் தப்பிக்கொள்வார்.

"'இதிகாசங்களிலிருந்து சாரங்களைத்தான் எடுத்துக்கணுமே தவிர, சம்பவங்களை எடுத்துக்கப்படாது!' இதுமாதிரி விஷயங்களிலே மாமா பேச ஆரம்பிச்சார்னா ஏண்டா இவரைக் கேள்வி கேட்டோம்னு ஆயிடும். அதனாலேயே நான் அவரைக் கேள்வி கேக்கறதில்லே.

இதிகாச பூர்வமாக விளக்கறது மட்டுமில்லாமல் விஞ்ஞான பூர்வமாகவும் விளக்க ஆரம்பிச்சுடுவார் மாமா. மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் எல்லாம் அவர் வாதத்தை நிலைநாட்டறதுக்கு முட்டுக் கொடுத்துண்டு வந்து நிக்கும். பத்துப் பெட்டைக் கோழிகள் இருக்கிற இடத்திலே ஒரு சேவல் போறும்பார். அவரைப் பொறுத்தவரைக்கும் ஒளிவு மறைவில்லாமல் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதிங்கறது ரொம்ப நியாயம்னு வாதம் பண்ணுவார். 

சில சமயங்களிலே எனக்கு நிறைய புத்திமதிகள் சொல்லுவார். கொஞ்சம்கூட இங்கிதமோ இரக்கமோ இல்லாமல் 'உன்னைப் போல கெட்டுப்போன பொண்களுக்கு'னு ஆரம்பிப்பார்."

இப்படியே பேசிப் பேசி, சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக கங்காவின் மனதைக் கெடுக்கிற ஒரு வேலையைச் செய்துவிடுகிறார் இந்த வெங்கு மாமா. இந்தப் பேச்சுதான் கதையைத் திசை மாற்றும்.

"அவனையே தேடிக் கண்டுபிடிக்கிறோம்னு வெச்சுக்கோ. இந்த நியாயத்தைச் செய்யறதுக்கு அவனுக்கு என்ன நியாயம் இருக்கு? அவன் உன்னை நம்பமாட்டான். காரை நிறுத்திக் கையைப் பிடிச்சு இழுத்தவனோடெல்லாம் போறவளாத்தானே உன்னை அவன் நினைப்பான்? அப்படி அவன் நெனைக்கறது நியாயம் இல்லேன்னு சொல்ல உனக்கோ எனக்கோ என்ன நியாயம் இருக்கு, சொல்லு பார்ப்போம்."

இந்த நிமிடத்தில் அவனைத் தேடித் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கிறாள்.

“நீ யாருக்காவது வைப்பாட்டியா இருக்கலாம்; ஆனா எவனுக்கும் பெண்டாட்டியா இருக்க முடியாது” என்பதை ரொம்ப நாசூக்கா இங்கிலீஷ்லே சொல்றார்: “யூ கேன் பி எ கான்குபைன் டு ஸம் ஒன்; பட் நாட் எ வய்ஃப் டு எனி ஒன்." அதுவும் அவள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. ஆனால் அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்பதன் உள்நோக்கம் அவளுக்குப் புரிகிறது. அதுக்கு அர்த்தம்: 'ஒய் நாட் யூ பீ மை கான்குபைன்?' ('என்னோட வைப்பாட்டியா ஏன் நீ இருக்கக் கூடாது?') என்பதுதான் என்கிறாள்.

"மாமா ரொம்ப நல்லவர். இதுவரைக்கும் என்னை நேரடியாக அவர் அப்படிக் கேட்டுடலே. கேட்டு இருந்தால் நான் மாட்டேன்'னு சொல்லுவேனாங்கறது சந்தேகம். சொல்றது நியாயமில்லையோன்னோ? இந்த நிமிஷம் வரைக்கும் ஒவ்வொரு நிமிஷமும் எந்த நிமிஷத்திலே இப்படி ஒரு கேள்வியை அவர் கேட்டுடுவாரோன்னு நான் நடுங்கிண்டே இருக்கேன். அப்படியெல்லாம் ஒண்ணும் கேட்காமலேயே - அந்த அளவு மரியாதைகூட எனக்குக் குடுக்காமலே என்னைப் பலாத்காரமா பலியாக்கிண்டுடுவாரோ...? மாமா செய்யக் கூடியவர்தான். இந்தப் புலிக்கு அப்படி ஒரு பசியும் அப்படிப்பட்ட ருசியும் உண்டு."

இதில், "கேட்டு இருந்தால் நான் மாட்டேன்'னு சொல்லுவேனாங்கறது சந்தேகம்" என்கிற வரி கதை முழுக்கவும் காட்டப்படும் கங்காவுக்குப் பொருந்தவே இல்லை. இதில் ஏதோ கோளாறு இருக்கிறது அல்லது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு முறை மாமா வரம்பு மீறிப் போகிறார். அப்போது, மகாத்மா காந்தியின் கீழ்வரும் வாசகத்தை ஒரு தாளில் எழுதி ஒவ்வொரு வரியையும் சிவப்பு மையில் அடிக்கோடிட்டு அவருடைய மேசையில் வைத்துவிட்டு வந்துவிடுகிறாள்:
'நான் பெண்களுக்குச் சொல்வது இதுதான்: உன்னை ஒருவன் பலாத்காரமாகக் கற்பழிக்க முயலும்பொழுது உனக்கு நான் அஹிம்சையை உபதேசிக்கமாட்டேன். நீ எந்த ஆயுதத்தையும் பிரயோகிக்கலாம். நீ நிராயுதபாணியாக இருந்தால், இயற்கை உனக்குத் தந்த பல்லும் நகமும் எங்கே போயிற்று? இந்த நிலைமையில் நீ செய்கிற கொலையோ, அது முடியாதபோது நீ செய்து கொள்கிற தற்கொலையோ பாபமாகாது.'

இதை எழுதி வைத்துவிட்டு வந்த பின்பு நீண்ட காலம் புலி வாலைச் சுருட்டிக்கொண்டு ஒழுங்காக இருக்கிறது, அதாவது, மாமா மரியாதையாக நடந்துகொண்டிருக்கிறார். 

இப்போது கங்கா தன்னைக் கெடுத்தவனைக் கண்டுபிடிக்கும் வேண்டாத வேலையில் இறங்குகிறாள். அந்தப் பயணத்தில், தான் படித்த சிறுகதை தன் கதையைப் போன்றே யாரோ ஒருவர் எழுதிய கதை அல்ல, தன் கதையையேதான் தன்னை அறிந்த ஒருவர் எழுதியிருக்கிறார் என்று கண்டடைகிறாள். எழுதியவர் ஆர்.கே.வி. இவள் படித்த கல்லூரியில் நூலகராக வேலை பார்ப்பவர். எழுத்தாளர் என்பது அவரது இன்னொரு முகம். இவரைப் பிடித்தால் அவனையும் பிடித்துவிடலாம் என்று தோன்றுகிறது. அவரை அவர் வீட்டிலேயே சந்திக்கப் போகிறாள். அவரைச் சந்திக்கும் முன் மனதில் இப்படியும் அடித்துக்கொள்கிறது:
"கதை வேற, வாழ்க்கை வேற. கதையிலே அப்படி ஒரு பாத்திரத்துக்குக் கிடைக்கிற அனுதாபத்தை வாழ்க்கையிலே அந்தக் கதையை எழுதினவனாலேகூடக் காட்ட முடியுமாங்கறது சந்தேகம்தான்."

இது நாம் பார்க்காததா? கலையும் கதையும் விற்கும் என்று தெரிந்தால் என்ன புரட்சி வேண்டுமானாலும் பேசுவ. ஆனால் படைப்பாளர்கள் அதைத் தன் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். பெரிய வீட்டுப் பெண் சேரிப் பையனைக் காதலிக்கும் கதையையே அரைத்து அரைத்து விற்கிற பெரிய நடிகர்களும் இயக்குனர்களும் கூடத் தன் மகள் காதலிப்பதைத் தாங்க முடியாமல் ஆடித்தான் போகிறார்கள். கதை எழுதுபவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா!

'நம்பிடாதே. உன்னை முடிஞ்சவரைக்கும் மறைச்சு வச்சுக்கோ. இல்லேன்னா உன் அம்மா, அண்ணா, மாமா எல்லாரையும் போல உலகமே உன்னை இளப்பமா நெனைக்கும்...' என்றொரு குரல் அவளுக்குள் எழுந்து அவளை எச்சரிக்கிறது. எனவே தன்னைப் பற்றி முழுதும் வெளிக்காட்டிக் கொள்ளாமலே ஒரு வாசகியாகச் சந்திக்கிறாள். கதையைப் பற்றிப் பேசுகிறாள்.

இந்த இடத்தில் நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. ஜெயகாந்தன் உண்மையிலேயே இப்படி ஏதோவொன்று நடந்ததைப் பார்த்துத்தான் இதை எழுதினாரோ! அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக நூலில் வரையப்பட்டிருக்கும் படங்களில் ஆர்.கே.வி. இடத்தில் ஜெயகாந்தனைப் போன்ற ஓர் உருவமே இருக்கிறது. இதைப் படமாக எடுக்கும் போது ஏனோ இந்தப் பாத்திரத்துக்கு மீசை கூட இல்லாத நாகேஷைப் போட்டுவிட்டார்கள். அவர் சிறந்த நடிகர்தான் என்றாலும், சிங்கம் போல இருக்கும் ஜெயகாந்தன் போன்ற ஒருவரின் இடத்தில் ஒரு நகைச்சுவை நடிகரை வைத்துப் பார்க்க நமக்குச் சிரமமாக இருக்கிறது. அந்தப் பாத்திரத்தையே சிறிது நகைச்சுவையானதாகத்தான் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் ஜெயகாந்தனும் பணிபுரிந்தார். அவருமே அதற்கு ஒத்துக்கொண்டிருந்தார் என்பது இன்னும் வியப்பு.

ஆர்.கே.வி.யைச்சந்திக்கச் சென்ற போது, அங்கிருக்கும் பெண்களைப் பார்த்து, "ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிண்டு, ஒரு அஞ்சாறு கொழந்தையைப் பெத்துண்டு, உலகத்தையே ஒரு 'அவர்'லே அடக்கிண்டு, அந்த 'அவ’ருக்குப் பயந்த மாதிரி காட்டிண்டு, சமயத்திலே 'அவ’ரைப் பயமுறுத்திண்டு... பெண் ஜென்மங்களுக்கு வாழ்க்கை வேற என்ன பெரிசா அமைஞ்சுடப் போறது இங்கே?" என்று தோன்றுகிறது கங்காவுக்கு. அவர்கள் வாழ்க்கையைவிடத் தன் வாழ்க்கை மேல் என்ற சிந்தனை வந்தால் ஒழிய இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா என்று தெரியவில்லை.

கு.ப.ரா.வோ அவர் காலத்து எழுத்தாளர் எவரோ சொன்னதாக ஒரு நினைவு. "பெண் ஆணுக்கு அடிமையாக இருத்தல் என்பது அவளே ஏற்றுக்கொண்ட ஒரு முடிவு. இப்போது அவளுக்கே அது வெறுத்துவிட்டது, அதனால் அதை உடைக்க விரும்புகிறாள். இனி ஆண்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்வது நல்லது" என்பது போல இருக்கும் அது. இதைப் படித்த போது அதுதான் நினைவுக்கு வந்தது. இப்போது யாரும் அப்படியொன்றும் பயந்துகொண்டெல்லாம் இல்லை. இருக்கிற ஒரு சிலரும் அப்படி இருப்பது போலக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதை உண்மை என்று நம்பி ஏமாந்து போய்விடுகிறார்கள் பாவம் ஆண்கள்!

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஆர்.கே.வி.யின் அம்மா வந்து இவளிடம் சொல்கிறார்: "உன்னை மாதிரி இருக்கிறவா தான் ஒரேயடியாய்ப் புகழறேள். இவன் என்ன எழுதறான்? எல்லாத்துக்கும் ஒரு கோணக்கட்சி பேசுவான். நேக்கு ஒண்ணும் பிடிக்கறதில்லேடி அம்மா. ஆனால் அவனோட யாரும் பேசி ஜெயிச்சுட முடியாது. நியாயத்தை அநியாயம்பான்; அநியாயத்தை நியாயம்பான். நேக்கு வக்கு இல்லே. இருந்திருந்தா வக்கீலுக்குப் படிக்க வெச்சிருப்பேன். யார் கண்டா? அவா அப்பா வக்கீல் குமாஸ்தாவா இருந்தாரோல்லியோ? அந்த வாசனையோ என்னமோ! அவரும் இப்படித்தான். எல்லாத்துக்கும் ஒரு எதிர்க்கட்சி ஆடிண்டு நிப்பர்.”

இப்படியே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆர்.கே.வி. இவளிடம் சொல்கிறார்: "என்னைப் பெத்தவளும் ஒரு பொண்தான்; நீங்களும் ஒரு பொண்தான். அதை மறந்துட்டுச் சொல்றேன். பொதுவா இந்தப் பொம்மனாட்டிங்கறவா ஒண்ணும் அவ்வளவு நல்லவா இல்லே. அதுக்கு அவாளே காரணமா இல்லாமல் இருக்கலாம். அது வேற விஷயம்." இதற்கு அவர் தன் கல்லூரியில் காணும் மோசமான பெண்களை நினைவு கூர்கிறார். அதே வேளையில் தன் கதையில் சொல்லப்பட்ட பெண் அப்படிப்பட்டவன் இல்லை என்றும் அவளிடம் சொல்கிறார். அவளிடம்தான் தற்போது பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல். பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளில் அவ்வளவா ஒரு பெண்ணின் தோற்றம் மாறிவிடும்! இதைப் படத்தில் பார்க்கும் போது நிறையவே உறுத்தும்.

"எங்க மாமா கேக்கறார்: அந்தப் பொண்ணு அப்படி ஒரு காரியம் செஞ்சுட்டு வந்தப்போ அந்தப் பெத்தவள் அதை மறைச்சு வைக்கணும்னா அவள் எவ்வளவு மோசமானவளா இருந்திருக்கணும்? அவள் அப்படி மறைச்சு மறைச்சுப் பழக்கப் பட்டவளா இருக்கணுமாம். அப்பத்தான் முடியுமாம்” என்று கங்கா சொல்லும் போது, ஆர்.கே.வி. சிரித்துக்கொண்டே கேட்பார்: “உங்க மாமாவுக்கு பொண் இருக்கா?” அதற்கு அவள் “இல்லை” என்றதும் “அவர் அப்படித்தான் சொல்லுவார்” என்பார். இதுவும் நாம் பார்ப்பதுதான். பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள், பெண் குழந்தைகளோடு பிறந்தவர்கள் சிலவற்றுக்கு அதிகம் பயப்படுவது போல மற்றவர்கள் பயப்படுவதில்லை; அது போல அவர்கள் புரிந்துகொள்வது போல மற்றவர்கள் புரிந்துகொள்வதும் இல்லை.

ஆர்கேவியின் வீட்டிலிருந்து எடுத்து வரும் ஏதோவொரு பள்ளி விழா மலரை வைத்து அடுத்து கங்கா அவனையும் தேடிக் கண்டுபிடித்துவிடுவாள். அடுத்து அவனுடனான சந்திப்பு. சந்தித்த உடனேயே அவ்வளவு நாட்களாக 'அவனாக' இருந்தவன் 'அவராக' மாறிவிடுகிறான். அவர் பெயர் பிரபு. அவர் இப்போது சமூகத்தில் மதிக்கத்தக்க நிலையில் இருக்கும் ஒரு பெரிய மனிதர் கூட. நாம் சற்றும் எதிர்பார்த்திராத விதத்தில் அவர் ஒரு குழந்தை மனம் கொண்டவராகவும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்ததால் பொறுப்பில்லாமல் வளர்ந்த ஓர் ஊதாரிப் பிள்ளையாகவும் இருக்கிறார். அவ்வளவுதான். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திறமையானவராகத் தெரிந்தவர் இப்போது அசடாகத் தெரிகிறார். "பன்னெண்டு வருஷம் யாரையும் எதுவும் ஆக்கும்போல் இருக்கு" என்று வியந்துகொள்கிறாள். அதற்கு அசடாக இருந்த இவள் உலகத்தைப் பார்த்துவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாமே!

"இவர்கிட்டே இருக்கிற பணத்தை மைனஸ் பண்ணிப் பார்த்தா இந்த ஆளுக்கு மதிப்பு என்ன இருக்குன்னு நினைக்கறப்போ எனக்கு ரொம்பப் பாவமா இருக்கு. இந்த உடம்பாலெல்லாம் உழைக்கக்கூட முடியாது. இருக்கற சொத்துக்கூட இவராச் சேர்த்ததா இருக்காது. தன் லைஃப்லே இவர் கெடுத்த முதல் பெண்ணே நான்தான்னு சொன்னாரே... வாட் எபெளட் ஹிஸ் ஒய்ஃப்? தாலி கட்டிண்டதுனாலே அவளைக் கெடுத்ததா இவர் நினைக்கலே போல இருக்கு."

இது போல நாமும் நிறையப் பேரைப் பார்க்கத்தானே செய்கிறோம். அவர்களிடம் உள்ள பணந்தான் அவர்களின் போதாமைகளையெல்லாம் திரை போட்டு மூடி மறைத்துக்கொண்டிருக்கும். பணம் கைவிட்டுப் போய்விட்டால் அடுத்த நிமிடமே 'சீ' பட்டுப் போவார்கள். அது அப்பன் சேர்த்த பணத்தில் வாழ்கிறவர்களுக்குத்தான் என்றில்லை; பணம் சேர்க்கிற அறிவு மட்டும் அல்லது சூழ்நிலையை மட்டும் வைத்துக்கொண்டு வேறு எதற்குமே ஒப்பேறாத பிறவிகளும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்!

"இப்போ கார் பீச் ரோடிலே போயிண்டிருக்கு. கல்யாண ஊர்கோலம் மாதிரி மெதுவாப் போறது. இவர் ஊதற சிகரெட் புகை காத்திலே என்னைத் தழுவிண்டு போறச்சே அந்த வாசனை நன்னா இருக்கு - சீ! இதை நன்னா இருக்குன்னு யாராவது நினைப்பாளோ? முகத்தைச் சுளிச்சுண்டு, 'நாத்தம் வயத்தைக் குமட்டறது’னு சொல்லிக்கறதுதானே பொண்களுக்கு அழகு! இந்த சிகரெட் நாத்தம் நன்னா இருக்கறதாவது? இது நன்னா இருக்கணும்னா. அந்தப் பொண்ணோட மனசு எந்த அளவுக்குக் கெட்டுப் போயிருக்கணும்கறதைப் பத்தி எங்க மாமாவைக் கேக்கணும். ஒரு பெரிய 'தீஸிஸ்’ஸே படிச்சுடுவார்!" என்று தான் செய்யும் ஒவ்வொரு வேலையையும் மாமா எப்படி எடை போடுவார் என்ற நினைப்போடே இருக்கிறாள் கங்கா. இதன் வழியாக ஆசிரியரும் நம்மோடு உரையாடுகிறார். பெண்கள் எதை விரும்ப வேண்டும் - எதை வெறுக்க வேண்டும் என்பதைக் கூட சமூகம்தான் தீர்மானிக்கிறது. அது அவர்களின் விருப்பையோ வெறுப்பையோ மாற்றிவிடப் போவதில்லை. அது பற்றி அவர்கள் வெளியே சொல்லும் கருத்துதான் மாறும்.

“அவளுக்கு என்கிட்டே புருஷன்கிற மரியாதையோ 'லவ்’வோ கிடையாது. ஆனால் குடிகாரன்கிற பயம் உண்டு. நான் குடிச்சுட்டுப் போனால் நடுங்குவா. அவளை நடுங்க வைக்கறதுக்காகவே நான் குடிக்கறேன்; குடிக்காத நேரமெல்லாம் அவள் கத்திக்கிட்டிருப்பாள்; குடிச்சுட்டால் நான் கத்துவேன்; அவள் பயப்படுவாள்; பேசாம இருப்பாள். ஸோ ஐ ஃபெல்ட் திஸ் இஸ் பெட்டர் தன் தட்” - இது பிரபுவின் உரை. பிரபுவின் பக்கக் கதை மட்டுமே. ஒன்றுக்கும் லாயக்கில்லாத தன் மகனைக் கட்டித் தன் வாழ்க்கையையே வீணாக்கிக்கொண்டு நிற்கிற மருமகளிடம் முழுப் பொறுப்பையும் விட்டு அவளைச் சார்ந்து இவன் வாழ்கிற மாதிரி ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விடுகிறார் இவன் தந்தை. அதுதான் அவனுக்கும் நல்லது என்று எண்ணிச் செய்துவிட்டுப் போவது. அப்படியும் சிறிது காலம் அவன் வழியிலேயே போய்த்தான் பார்க்கிறாள் அவன் மனைவி. அது எல்லோரையும் தெருவில் கொண்டுவந்துவிட்டுவிடும் என்று உணர்கிற நாளில்தான் முழுக் கடிவாளத்தையும் தன் கையில் எடுக்கிறாள்.

அந்தத் தந்தை பற்றிய பிரபுவின் நினைவு இது: "யாரையாவது வாழ்க்கையிலேயே உருப்படாமல் குட்டிச்சுவரா அடிக்கணுமா? கொஞ்ச நாளைக்கு அவன் கேக்கும் போதெல்லாம் பணத்தெக் குடுத்துக் கிட்டே இருந்தாப் போதும். நல்லாத் தாராளமா அள்ளி அள்ளிக் குடுக்கணும்; செலவழிக்கச் செலவழிக்கக் குடுக்கணும். அப்பறம் 'டக்'னு நிறுத்திடணும். உன் 'எனிமி’யை அழிக்கறதுக்குக்கூட இதைவிட மோசமான ஆயுதம் கிடையாது. அப்படித்தான் எங்க அப்பனே என்னை அழிச்சுட்டான்.”

“உங்களை யாருமே காதலிக்கலேன்னு இவ்வளவு குறைப்பட்டுக்கறேளே, நீங்க யாரையாவது காதலிச்சிருக்கேளோ? உங்க ஒய்ஃப் உட்பட யாரையாவது? உங்களுக்குப் பணம் இருக்கு, படாடோபம் இருக்கு, கார் இருக்கு, பங்களா இருக்கு - நன்னா டிரஸ் பண்ணிக்கறேள். செண்ட் போட்டுக்கறேள்ங்கறதுக்காகத் தெருவிலே போறவாள்ளாம் உங்களை லவ் பண்ணணும்னு நினைக்கிறேள். இல்லே? அதுக்காகவே சில பேர் லவ் பண்றதா சொல்லிண்டு உங்ககிட்டே வரலாம். அது உங்களை லவ் பண்றதா ஆகுமா?” என்கிறாள் அவனிடம்.

"இவர் சொன்னாரே ஒரு வார்த்தை, 'நான் செய்யற எந்தக் காரியத்துக்கும் நான் பொறுப்பு ஏத்துக்க முடியாது!'ன்னு. ஹவ் டேஞ்சரஸ் இட் இஸ்! இவர்கிட்டே பழகறவாளுக்கு மட்டும் இல்லே; இவருக்கே இவர் எவ்வளவு ஆபத்தானவர்!" - இப்படித் தன் கணவனைப் போலவே அல்லது கணவனாகப் போகிறவரைப் போலவே அவர் அவர் என்று அதே சிந்தனையாக இருக்கிறாள். குழந்தை மாதிரி முதிர்ச்சியற்ற கணவன்களைப் பெற்ற புது மனைவிகளைப் போலவே அவர் ஏதோ புரிந்துகொண்டுவிட, "மனுஷர் லேசுப்பட்டவர் இல்லே" என்று பெருமைப்பட்டுக்கொள்வாள்!

எழுத்தாளர் ஆர்.கே.வி. பற்றிப் பிரபு சொல்கிறார்: “சில பேர் வாயிலே வெள்ளி ஸ்பூனோட பிறக்கறாங்க; சிலர் தங்க நாக்கோட பிறக்கறாங்க." இது ஜெயகாந்தன் தன்னைப் பற்றியே சொல்லிக்கொண்டது அல்லது எண்ணிக்கொண்டது என்றும் வைத்துக்கொள்ளலாம்!

அந்த ஜெண்டில்மேனைத் தான் சந்திக்க விரும்புவதாகச் சொல்கிறார் மாமா. "மாமாவுக்கு இவரைச் சந்திக்கணும்னு தோண்றதே, அது கூட எனக்கு ஆச்சரியமாப்படலே. ஆனால் இவர் 'ஜென்ட்டில்மே’னாமே! சிரிப்பு வரது" என்று எண்ணிக்கொள்கிறாள்.

பிரபுவுக்கு வைப்பாட்டியாகிக் கொள்ளலாம் அல்லது வெளியுலகத்துக்காகவேனும் அப்படியொரு பிம்பத்தை உருவாக்கிக்கொள்ளலாம் என்ற ஆசையில் அவனைச் சந்திக்கச் செல்கிறாள். ஆனால் அவனோ தன்னால் வாழ்க்கையையே அழித்துக்கொண்டவள் என்று புரிந்ததும் அதற்காகப் பெரிதும் வருந்துகிறான். அதனால் இவளோடு மிகவும் நாகரிகமான உறவையே பேணுகிறான். இதிலும் அவளுக்கொரு சிக்கல். 

"இவருக்கு என் மேலே ஆசை வராதான்னு நான் ஏங்கறேனா? அப்படி வந்தால் ஒப்புத்துக்குவேனா? இவருக்கு என் மேலேயோ, எனக்கு இவர் மேலேயோ ஆசை வந்தாத் தேவலையே! ஆனால் அப்படிப்பட்ட ஆசை எனக்கும் இவர் மேல வராது: இவருக்கு என் மேலே வராது போல இருக்கே. இவருக்கு அந்த மாதிரி ஆசை ஏற்பட்டிருக்கும். அப்படி ஒரு ஆசையோடதானே இவர் என்னைப் பார்க்க வந்தார்! நான்தான் அதை வழிமாத்தி விட்டுட்டேன். அதனாலே இனிமே இவருக்கு அப்படியெல்லாம் எண்ணமே வராது. இவருக்கு என்ன? 'பால் சரஸமா கெடைக்கறபோது நான் மனதுக்கு ஒரு மாட்டை வாங்கணும்?'னு இங்கிலீஷ்லே ஒரு ஸேயிங் இருக்கே. (வென் தி மில்க் இஸ் ஸோ சீப், வய் ஷுட் ஐ பை எ கௌ?) அது இவருக்குப் பொருந்தும். எனக்கு...? இவர் மேலயும் ஆசை வராது; வேற எவன் மேலயும் வராது போல இருக்கே. ஆனால் நிச்சயமா ஒண்ணு மட்டும் எனக்குத் தோண்றது. என்னை யாராவது பலவந்தப்படுத்தினால் நான் யாருக்கு வேணுமானாலும் இணங்கிடுவேன் போல இருக்கு. என்னை யாராவது பலவந்தமா இணங்க வெச்சுட்டாத் தேவலை போலே இருக்கு. இவரைத் தவிர வேற யாரும் என்னைப் பலவந்தப்படுத்தக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன் போல இருக்கு. அப்படி ஒரு பலவந்தத்துக்கு இணங்கறதனால் அது இவரோட பலவந்தமாகவே இருக்கணும்னு நான் ஆசைப்படறேன் போல இருக்கு. அதனாலேதான் நான் இவர் பக்கத்திலே வந்து ஒண்டி நின்னுண்டேன் போல இருக்கு. வேற ஆம்பளைங்களோட பலவந்தத்திலேருந்து என்னைக் காப்பாத்திக்கறதுக்கு மட்டுமில்லே; அப்படி ஒரு பலவந்தத்துக்கு கட்டுப்பட்டுப் போயிடற என்னோட பலவீனத்திலிருந்து என்னைக் காப்பாத்திக்கறதுக்கும் நான் இவர் பகத்திலே வந்து நின்னுண்டேன் போல இருக்கு. இனிமே என்னோட காரியம் எதுக்கும் நான் பொறுப்பில்லேன்னு நானும் ஒதுங்கிக்கலாமோன்னோ! ஓ! ஹவ் டேஞ்சரஸ் இட் இஸ்!"

இன்னொரு புறம் அவளுடைய தாய் இந்த மாற்றங்களைக் கண்டு நொந்து போகிறார். "காதோரத்திலே எங்க ஊர் தேவன்மார் கிருதா மாதிரி முடியை இழுத்து விட்டுக்கறா" என்று அலுத்துக்கொள்கிறார். இந்தம்மா கண்டிப்பாத் திருநெல்வேலிதான். தஞ்சாவூர் இல்லை. அடுத்து, பிரபுவை வீட்டுக்கே அழைத்து வருகிறாள். அப்படி அவர் வீட்டுக்கு வந்திருக்கும் போது அவருக்குக் காபி கொடுக்க வரும் போது, "மனசுக்குள்ளே என்னை யாரோ பெண் பார்க்க வந்திருக்கற மாதிரி விசித்தரமா நினைச்சுண்டு நானே சிரிச்சுக்கறேன்" என்று அநியாயம் பண்ணுகிறாள். இதையெல்லாம் பார்த்துத் தாங்க முடியுமா அவளுடைய தாயால்! வெடித்துவிடுகிறார். மாமாவை வரவழைத்துப் பஞ்சாயத்துப் பேசுகிறார்கள். அவர் அம்மாவை அண்ணன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவளைத் தனியாக இருக்க ஏற்பாடு செய்கிறார். இது கூட மாமா தன் சேட்டைகளைச் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்று திட்டமிட்டுச் செய்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது அவளுக்கு.

"அம்மா மட்டும் என்ன, அம்மாவாவே பொறந்தாளா? அவளும் ஒரு பொண் இல்லையா? ஒரு பொண்ணோட நிலைமை, அவள் குறை, அவள் தேவை - இதெல்லாம் அம்மாவுக்குப் புரியாதா? இதெயெல்லாம் பேசிப் புரியவைக்க முடியுமா? பேசத்தான் முடியுமா? அதுவும் அம்மாகிட்டே ஒரு பொண்ணு பேசாமலே புரிஞ்சுண்டாத்தானே அந்த அம்மா, ஒரு அம்மா!" என்று அம்மாவை நினைத்து வருந்திக்கொள்கிறாள்.

இப்போது குழந்தை பற்றிய சிந்தனைகள் வருகிறது. பிரபுவோடு சேராமல் குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ள முடிந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறாள். காலம் போகிற போக்கில் அறிவியலின் புண்ணியத்தில் எல்லாமே சாத்தியமாகலாம் என்றும் எண்ணிக்கொள்கிறாள்.

எதிர்பார்த்தது போலவே, அம்மா அண்ணன் வீட்டுக்குப் போன அடுத்த வாரமே மாமா வருகிறார். மாமா வரும் போதே ஆண்களின் மனநிலையை நன்கு புரிந்துகொள்கிற பெண் போல, "மாமா ரொம்பக் குதூகலமா வரார்" என்கிறாள் கங்கா. மாமா வந்துவிட்டால் தான் அந்த வீட்டில் தனியாக இருக்க முடியாது என்று புரிந்து அப்போதே போய் அண்ணன் வீட்டிலிருந்து அம்மாவை அழைத்து வந்துவிடுகிறாள். அது ஏற்கனவே அம்மாவிடம் செய்துகொண்ட ஒப்பந்தம்தான். திரும்ப அழைத்து வரும் போது, "அம்மா மொகத்திலே ஒரு கர்வம். தான் இல்லாம நடக்காதாம்! இருக்கட்டுமே."

"இந்த உறவு ஒண்ணுதான் டைவர்ஸ் பண்ணிக்கவும் மறுபடியும் ஏற்படுத்திக்கவும் முடியற உறவு. அப்படீன்னா இது ரொம்ப அவசியமான, ஆதாரமான உறவுன்னு ஆறது. மத்த உறவுகள் எல்லாம் ஏதோ ஏற்பட்டுடற உறவு. நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்டுடற உறவு. அந்த உறவுகள் எல்லாம், ஏற்பட்டுட்டதனாலே தேவையாப் போன உறவுகள். இது மட்டும்தான் தேவைக்குன்னு ஏற்படற உறவு" என்று கணவன் - மனைவி உறவு பற்றி எண்ணுகிறாள்.

இரவுச் சாப்பாட்டுக்கு முன் மொட்டை மாடிக்கு அழைத்துக்கொண்டு போய் மாமா இவளிடம் ஏதோதோ பேசுகிறார். அவ்வப்போது அவளிடம் புலி தன் வேலையைக் காட்ட முயல்கிறது. இவளும் முடிந்த அளவு நாகரிகமாக நழுவப் பார்க்கிறாள். ஆனால் அவர் விடுவதாயில்லை. திட்டியே விடுகிறாள். ஆனாலும் மனதுக்கு வலிக்கிறது. அவர் தனக்குச் செய்த உதவிகளையெல்லாம் நினைக்கிறாள். 'இதுவும் சேர்ந்ததுதானே மாமா' என்று வருந்துகிறாள். இதற்கெல்லாம் இடம் கொடாமல் இவர் நல்லபடியாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. அவர் நிறுத்துவதாயில்லை. மேலும் தொடுகிறார். "மாமா! என்னைத் தொடாமல் பேசுங்கோ" என்கிறாள். "ஏன்? நான் உன்னைத் தொடப்படாதா?" என்று மெதுவாகக் கேட்டுக்கொண்டு மீண்டும் தொடப் போகிறார். இப்போது அவரைப் பார்த்து அவளுக்கு அருவறுப்பாக இருக்கிறது. அவர் செய்த எல்லா உதவிகளையும் அப்படியே திருப்பிக் கொடுக்க முடிஞ்சுட்டாத் தேவலையே என்று தோன்றுகிறது. பிரபுவோடு தன்னை ஒப்பிட்டுக்கொண்டு ஏதோ பேசுகிறார். "வாயை மூடுங்கோ, அவரோட கால் தூசு பெறமாட்டேன் நீங்க” என்று சொல்லி மேலும் ஏதேதோ திட்டிவிட்டு மாடியைவிட்டுக் கீழ் இறங்குகிறாள். திரும்பவும் விட்டேனா பார் என்று அவரை அழைத்துக்கொண்டு போய், "என்னைக் கிழவன்னு நினைச் சுண்டுதானே நீ வெறுக்கறே?” என்று கேட்கிறார். "நீ தொடப்படாதுன்னு அதிகாரம் பண்றயேடி குட்டி! உன்னை அடிக்கக்கூட எனக்கு அதிகாரம் உண்டு தெரியுமோ?” என்று சொல்லிக்கொண்டே பெல்டைக் கழற்றி வீசும் போது பிடித்துக்கொள்கிறாள். இப்போது அம்மா வந்து சாப்பிடக் கூப்பிட்டுக் காப்பாற்றிவிடுகிறாள். இத்தோடு அவர் தொல்லை முடிந்தது. இனி வர மாட்டார்.

கங்காவுக்கு வெளியில் நடமாடும் போது ஓர் ஆணின் உடனிருத்தல் கொடுக்கும் பாதுகாப்புணர்வும் அது கொடுக்கும் மரியாதையும் பிடித்திருக்கிறது. பிரபு இவள் மீது கோபித்துக்கொண்டால் அதை ரசிக்கிறாள். இன்னொரு புறம் அப்படியே கங்காவின் வருகைக்குப் பின் பிரபுவின் வாழ்வில் எவ்வளவோ நல்ல மாற்றங்கள். தினமும் க்ளப்புக்குப் போவது குறைகிறது. இவளே அவன் வீட்டுக்குப் போய் உட்கார்ந்திருப்பாள். அவள் முன் இரவு வரை குடிப்பான். எங்கோ போய்க் குடித்துவிட்டு வருவதைவிட வீட்டிலேயே இருந்து குடிப்பது பரவாயில்லை என்று அவன் மனைவியும் அதைக் கண்டுகொள்வதில்லை. முதலில் கங்காவுடன் சாதாரணமாகப் பேசிக்கொள்பவள் பின்னர் அறையைவிட்டு வெளியே வருவதே இல்லை. அதன் பிறகு தினமும் கங்காவின் வீட்டுக்கு வந்து குடித்துவிட்டுப் போகிறான். அவன் குடிப்பதற்கு வசதியாக இவள் விதவிதமாகப் பலகாரங்கள் செய்து கொடுக்கிறாள்.

இடையில், 'சூதாட்டத்தில் இழக்கக் கொண்டு செல்லும் பணம் பற்றி வீட்டில் உள்ளர்வர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் வென்று வரும் பணம் பற்றி அவர்களுக்குத் தெரிவதே இல்லை. ஏனென்றால், வென்ற பணம் வீடு வருவதே இல்லை. இந்த மில்லியனர்ஸ் எல்லோருமே ஒரு காம்ப்ளெக்ஸ் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் பணத்துக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லை. அந்தப் பணம் மட்டும் இல்லாவிட்டால் அவர்கள் எச்சில் இலை பொறுக்கக் கூட லாயக்கில்லாதவர்கள் என்று அவர்களுக்கே தெரியும்' என்பன போன்று சூதாட்டம் மற்றும் சூதாடிகள் பற்றிக் கொஞ்சம் அறிமுகங்கள்.

பிரபு கங்காவிடம் நாகரிகமாக நடந்துகொள்வதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. அது, கல்லூரி செல்லும் வயதில் இருக்கும் அவனுடைய மகள் மஞ்சு. அவளும் கங்கா சென்ற கல்லூரிக்குத்தான் செல்கிறாள். தான் செய்த பாவம் தன் மகளை வந்து தாக்கிவிடுமோ என்று அஞ்சுகிறான். தந்தை என்கிற சுயநலம், தான் கெடுத்த பெண்ணைத் தன் மகள் போலப் பார்க்க வைக்கிறது. அவளும் கங்காவும் நல்ல நண்பர்கள் ஆகிறார்கள். அதையும் பிரபுவின் மனைவி அனுமதிக்கத்தான் செய்கிறாள். அந்த மஞ்சுவுக்கும் ஒரு காதல் இருப்பது போன்ற ஒரு சந்தேகம் வருகிறது. ஆனால் அவள் அந்த வயதில் கங்கா இருந்ததைவிட முதிர்ச்சியோடு இருக்கிறாள். இது காலம் மாறியிருப்பதன் விளைவா அல்லது ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி என்பதாலா என்று தெரியவில்லை. 

அவளுக்கொரு நல்ல பையனைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று முயற்சி செய்கிற போது, பிரபுவும் அதற்கு ஒத்துழைத்து ஒதுங்கிக்கொள்ள முயல்வார். இது பற்றிப் பேசுவதற்கு கங்காவின் அண்ணன் பிரபுவைச் சந்திக்கப் போகும் காட்சி சிறப்பாக இருக்கும். தங்கையிடம் சீறுகிறவனாக இருந்தாலும், தன் தங்கையைக் கெடுத்த பிரபு என்கிற பணக்காரனைச் சந்திக்கப் போகும் போது வரும் கீழ் நடுத்தர வர்க்கத்துப் பயமும் தயக்கமும் அவனுக்காக நம்மைப் பரிதாபப்பட வைக்கும். சற்றும் எதிர்பாராத வகையில் பிரபு படு நாகரிகமாக நடந்துகொள்வார். தானே அவளுக்கொரு நல்ல பையனைப் பார்த்துக் கட்டி வைக்க விரும்பியதைப் பற்றியெல்லாம் சொல்வார். வீட்டுக்குத் திரும்பி அவர் புகழ் பாடுவதிலேயே அடுத்த சில நாட்களை ஓட்டுவான்.

ஒரு கட்டத்தில், பிரபுவைத் தொலைபேசியில் அழைத்து, தன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக் கேட்பாள். அவர் நல்ல மனிதனாக, "ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்" என்பார். வாழ்க்கை ஒரு முழு வட்டமடித்து முடிக்கிற இடம் அது. 

எல்லோருமே தன் திட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்கிற விரக்தியில் ஒரு குடிகாரியாக முடிவதில் முடியும் கதை. திரைப்படத்தில் இதைச் சிறிது நாகரிகமாக முடித்திருப்பார்கள்.

அந்த நேரத்தில் ஜெயகாந்தனின் நாயகிகளுக்கு லட்சுமியைவிடச் சிறந்த நடிகை இருந்திருக்க வாய்ப்பில்லை போலும். அவரும் மிகச் சிறப்பாகச் செய்திருப்பார். அவரே ஜெயகாந்தனின் ஒரு தீவிர வாசகி என்று கூடக் கேள்விப்பட்டதுண்டு. அப்படி இல்லாமல் இப்படியொரு வேடத்தை இவ்வளவு சிறப்பாகச் செய்திருக்க முடியாது. 

கதைக்குப் பின், 'தினமணிக் கதிரில் எழுதிய முன்னுரையில் இருந்து' என்று சில பக்கங்கள். அவற்றிலிருந்து சில முத்துக்கள்:

"எத்தனையோ மாயைகள் நமது அறிவையும், மனசையும், ஆத்மாவையும் மறைக்கிறபோது நமக்குப் பிடிக்காதவைகூடப் பிடித்தவை போன்றும், பிடித்தவைகூடப் பிடிக்காதவை போன்றும், பிடிபடாதவை போன்றும் மயக்கங்கள் ஏற்படும். இவைதாம் அனுபவங்கள். பிடித்தவையும் பிடிக்காதவையும், பிடித்தது என்று நாம் முதலில் நினைத்துப் பின்னர் பிடிக்காமற் போனவையும், பிடிக்காதவை என்று நாம் ஒதுக்கியவை பின்னர் பிடித்தவையாகி நம்மை வந்து சிக்கெனப் பிடிப்பதும் - எல்லாமே அனுபவங்களாகும். அனுபவத்தால் அறிந்ததைப் பிறரும் அனுபவிக்கும்படி அறியச் சொல்லி, அதன் விளைவை அனுபவித்து அறிந்து கொள்வதே இலக்கியமும் இலக்கியத்தின் பயனும் ஆகும்."

"பிடித்தவை, பிடிக்காதவை என்பதும் விவாதத்துக்கு இலக்காவது, ஆகாதது என்பதும் காலத் தொடர்பு கொண்ட வார்த்தைப் பிரயோகங்களாகும் என்பதுதானே...? இன்று பல சர்ச்சைகளுக்கு இடமாகி, நாளை ஏற்றுக் கொள்ளத்தக்க பல கதைகளை நான் சமீபகாலமாய் எழுதி வருகிறேன்."

"ஒவ்வொருவரும் தத்தம் மனசுக்குச் சரி என்று படுகிற காரியத்தைச் செய்ய 'ஜனநாயக தர்மம்' மறுக்கிறது. எது எல்லாருக்கும் சரியோ - எது எல்லாருக்கும் ஓரளவு சரியோ-எது பெரும்பான்மையோருக்குச் சரியோ - அது தவறே எனினும், அதனை அனுமதித்து அடிபணிவது ஜனநாயக தர்மம். அந்தப் பெரும்பான்மையினர் தவறுக்கு மனமறிந்து மண்டியிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளையும் அநியாயமாக அனுபவிக்க வேண்டும் என்பது சிறுபான்மையினர் தலையில் இட்ட விதி! இந்த மாதிரி சமூக விதிகளை மறுப்பதும் மாற்றுவதும் அதன் அநியாயமான தீர்ப்புகளைக் காலத்தின் முன்னே மறு பரிசீலனைக்கு வைப்பதும் இலக்கியத்தின் பணியாகிறது. எனவேதான் இலக்கியத்தில் ஜனநாயக தர்மம் அனுமதிக்கப் படுவதில்லை. முரண்படுவதற்குச் சம்மதமளிக்கிற பண்புதான் இலக்கியப் பண்பாகும். எந்தச் சமூகம் இலக்கியத்திலும் இந்தப் பண்பை அனுமதிக்காதோ அது அழிந்துபடும். அது அறிவுலகப் பிரஜைகளின் நரகமாயிருக்கும். இந்தச் சமூக அநீதிகளுக்கு நிகழ்கால விருப்பு - வெறுப்புகளுக்கும் பெரும்பான்மையினருக்கும் வளைந்து செயல் படும்படி இலக்கிய ஆசிரியனை நிர்ப்பந்திப்பது காலத்துக்கும் சரித்திரத்துக்கும் இழைக்கிற அநீதியாகும்."

"ஒரு பக்கம் எல்லோருக்கும் பிடிக்கிற விதமாகவும், இன்னொரு பக்கம் இலக்கிய ரசிகர்களுக்கும் (இவர்களின் சிறுபான்மையினர்) பிடித்த விதமாயும் இருக்க வேண்டும் என்கிற பத்திரிகைக்காரர்களின் நல்ல ஆசைதான் என்னை ஜனரஞ்சகமான பத்திரிகை உலகில் நுழைய அனுமதித்தது என்று சொல்ல வேண்டும்."

"கதை வேண்டுவோர்க்கு இருளும் ஒளியும் வேண்டும். இறுதியில் என்ன மிஞ்சுகிறது என்று காட்ட எல்லாமே வேண்டும். தர்மம் வெல்லும் என்று காட்ட அதர்மம் வேண்டும். ஒழுக்கத்தின் சிறப்பைப் பேச ஒழுக்கக்கேட்டின் விளைவையும் சொல்ல வேண்டும். இவை யாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி